Monday, September 27, 2010

படைப்புக் 'களவாணி'கள்

'தமிழர்களே, தமிழர்களே, என்னைக் கடலில் தூக்கிப் போட்டு விடாதீர்கள்' என்றொருவர் புலம்பும் (என்ன எழவு அர்த்தம் இதுக்கு) தொலைக்காட்சியில் ஞாயிறு காலைகளில் ஒளிபரப்பாகும் 'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சி பற்றி இந்தப் பதிவில் சமயங்களில் எழுதியிருக்கிறேன். இயன்ற போதெல்லாம் இந்நிகழ்ச்சியைப் பார்த்துவிடுவது வழக்கம். தற்சமயத்தில் இது அறிமுகச் சுற்று நிலையில் இருப்பதால் பல ஆர்வக்கோளாறான குறும்படங்களை அசெளகரியத்துடன் பார்க்க வேண்டியதிருக்கும்.

'விஷூவல் மீடியம்' என்பதின் அடிப்படையையே புரிந்து கொள்ளாமல் நிகழ்த்திக் காட்ட வேண்டியதையெல்லாம் உரையாடலிலேயே நகர்த்திச் செல்வதை இளைய தலைமுறை கூட இன்னும் கைவிடாத சோகத்தை விழுங்க வேண்டியதாயிருக்கிறது. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. நம் 'ஆஸ்கர்' கனவு இயக்குநர்கள் கூட நாலு மூலைகளிலும் ஆட்களை நிறுத்தி அவர்கள் மானாவாரியாக பேசிக் கொண்டிருப்பதை கண்ணாடி பிம்பத்திலும் காட்டிக் கொண்டிருக்கும் போது இவர்களை எப்படிக் குற்றம் சொல்ல முடியும்? இரண்டு பேர் உரையாடிக் கொண்டிருக்கும் போது ஒருவர் நகர்ந்து கேமிராவின் பக்கம் திரும்பி பேசும் அபத்தமெல்லாம் இன்னும் நடக்கிறது. யதார்த்த வாழ்க்கையில் நாம் யாரிடமாவது முதுகைக் காண்பித்து உரையாடுகிறோமா என்பதைப் பற்றிக் கூட யோசிப்பதில்லை.

சரி. இந்த நிகழ்ச்சிக்கு திரும்புவோம். இதில் நிகழ்ச்சி தொகுப்பாள பெண்மணி ஓர் எரிச்சலென்றால், நடுவர் பிரதாப் போத்தன் மகா எரிச்சல். இவர் வழாவழாகொழகொழாவென்று தம் கருத்தைத் தெரிவிப்பதற்குள் அடுத்த எபிஸோட் வந்துவிடுகிறது. மதன் பரவாயில்லை. அதீத ஆர்வக்காரர்களை அதிகம் கடுமை காட்டாமல் மிதமாக ஆனால் அழுத்தமாக தாம் சொல்ல நினைப்பதை தெரிவித்து விடுகிறார். ஏதோ ஒரு வாரத்தில் மற்ற இயக்குநர்களோடு ஒப்பிடும் போது ஒரு பெண் இயக்குநர் எடுத்த அபத்தமான குறும்படத்தை சிறந்ததாக தேர்ந்தெடுத்தார்கள். இதிலுமா இட ஒதுக்கீடு?.

26.09.2010 அன்று ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை இடையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். திகில் பட முயற்சி மாதிரி ஒரு குறும்படம் ஓடிக் கொண்டிருந்தது. சில காட்சிகளை பார்த்ததுமே, இதை எழுத்தில் எங்கோ வாசித்திருககிறோமே என்ற ஞாபகம் வந்தது. ஆமாம். ஏ.எச்.கோரி (?) என்பவர் எழுதிய 'ஹெலமெட்' என்கிற சிறுகதை அது. ஏதோ ஒரு வணிக வாரஇதழில் சில ஆண்டுகளுக்கு முன் வாசித்திருக்கிறேன். அந்தக் கதை அப்போதே என்னைக் கவர்ந்திருந்ததால் கத்தரித்து எடுத்து வைத்த ஞாபகம் கூட இருக்கிறது.


ஆவிகளுடன் பேசுவதற்கான ஆர்வமும் சற்று பயிற்சியும் உள்ள ஒருவன், அதை முயற்சித்துப் பார்ப்பதற்காக தம் நண்பர்களின் அறைக்குச் செல்வான். உரையாடலின் இடையில்தான் அன்று மாலை அவர்கள் செல்லவிருக்கிற திரைப்படத்திற்கான அனுமதிச் சீட்டுக்களை வீட்டிலேயே மறதியாக வைத்து வந்து விட்டிருப்பதை உணர்வான். ஆவிகளின் பேசக்கூடிய மீடியமான Ouija board-ஐ அங்கேயே வைத்து விட்டு 'அதைத் தொடாதீர்கள்' என்று நண்பர்களிடம் எச்சரித்து விட்டுச் செல்வான்.

ஆர்வ மிகுதியான நண்பர்கள் அதை வைத்து ஆவிகளுடன் பேச முயற்சிப்பார்கள். இரண்டு, மூன்று பிரபலமான ஆவிகளுடன் பேசிய பிறகு இன்னொரு ஆவியுடன் பேச முயற்சிக்கும் போது அது அவர்களுக்கு அது மிக நெருக்கமான நண்பன் என்கிற உணர்வைத் தரும். அனுமதிச் சீட்டு எடுக்கச் சென்ற நண்பன் தன் ஹெல்மெட்டை அங்கேயே வைத்து விட்டுச் சென்றிருப்பதை அப்போதுதான் கவனிப்பார்கள். 





.. இப்படியாகச் செல்லும் அந்தச் சிறுகதையை அப்படியே சற்று சுமாரான விஷூவல் டேஸ்டில் படமாக்கியிருந்தார் அந்த இயக்குநர். (ரவிராஜ் (?)) குறும்படத்தின் முடிவில் டைட்டில் கார்டில் நிச்சயம் ஒரிஜனல் எழுத்தாளரது பெயர் வரும் என்று ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தேன். வீட்டில் இருந்தவர்களிடம் இதைப் பற்றிச் சொல்லி என் ஞாபக சக்தியை நானே சுயபெருமையாக சிலாகித்தும் கொண்டிருந்தேன். ஆனால் டைட்டில் கார்டில் 'எழுத்து - இயக்கம்' என்று இயக்குநர் பேரே போட்டிருந்தது. இவர்தான் அன்றைய எபிஸோடின் சிறந்த படத்திற்கான விருதையும் வாங்கின ஞாபகம்.

படக்காட்சிகள், திரைக்கதை, கதை போன்றவைகளின் நகல்களுக்காகவும் திருட்டுக்காகவும்  நாம் மிகப் பெரிய இயக்குநர்கள் முதல் திட்டிக் கொண்டிருக்கிறோம். பெரும்பாலான உதவி இயக்குநர்களின் முக்கியப் பணியே இதுதான். வெளிநாட்டுப் படங்களிலிருந்தும் பழைய தமிழ்ப்படங்களிலிருந்தும் சிறந்த கதைகளை, காட்சிகளை, நகைச்சுவைகளை தம்முடைய அப்போதைய திரைப்படங்களுக்காக உருவுவது. இதில் புத்திசாலியான சில உதவி இயக்குநர்கள், தம்முடைய 'வருங்கால' இயக்குநர் படங்களுக்காக சில காட்சிகளை இயக்குநருக்கு தெரிவிக்காமல் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதும் உண்டு.

நம்மைச் சுற்றியுள்ள நிகழ்வுகளை, சமகால பிரச்சினைகளை கூர்ந்து கவனித்தாலே ஆயிரம் கதைகளை உருவாக்க முடியும். பல நல்ல தமிழ் புதினங்களை, இலக்கியங்களை திரைப்படமாக்க முடியும். ஆனால் சுயமாக சிந்திக்கத் திராணியில்லாத, நம்முடைய கலாசாரத்தை, சமூக அலவங்களை திரையில் பிரதிபலிக்க வேண்டும் என்கிற கலைஉணர்வும் பொறுப்பும் இல்லாத, வெகுஜன மக்களுக்கான போதை மாத்திரைகளையே உருவாக்குவதில் முனைப்பாயுள்ள பெரும்பாலான இயக்குநர்களும், அவர்களையொட்டி வரும் உதவி இயக்குநர்களும் டிவிடிகளையும் நூல்களையும் பிய்த்துப் பிய்த்துப் கச்சாப் பொருளாக உருவாக்கும் போது எவ்வாறு நாம் நல்ல சினிமாவை எதிர்பார்க்க முடியும்?

இந்த நிலையில் கோடம்பாக்கத்திற்குச் செல்லப் போகும்  'நாளைய இயக்குநர்'களும் ஆரம்ப நிலையிலேயே படைப்பாளிகளுக்கான உரிய மரியாதையைத் தராமல் 'யார் கவனிக்கப் போகிறார்கள்' என்று அலட்சியத்துடன் திருடத்துவங்கினால் இவர்களிடமிருந்து எந்த மாதிரியான சினிமாக்களை நாம் எதிர்பார்க்க முடியும்?

முதல் கோணல் முற்றிலும் கோணல். 

suresh kannan

18 comments:

☼ வெயிலான் said...

குறும்பட இயக்குநரின் பெயர் ரவிக்குமார். திருப்பூரைச் சேர்ந்தவர் தான்.

இது விசயமாய் அவரது கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் சு.க.

வால்பையன் said...

ஆரம்பமே இப்படியா!
:(

எஸ்.கே said...

அந்த படம் நல்லாருக்கேன்னு நினைச்சேன். பார்த்தா இப்படியா!

Anonymous said...

//இரண்டு பேர் உரையாடிக் கொண்டிருக்கும் போது ஒருவர் நகர்ந்து கேமிராவின் பக்கம் திரும்பி பேசும் அபத்தமெல்லாம் இன்னும் நடக்கிறது. யதார்த்த வாழ்க்கையில் நாம் யாரிடமாவது முதுகைக் காண்பித்து உரையாடுகிறோமா என்பதைப் பற்றிக் கூட யோசிப்பதில்லை//

நேற்று கூட ஒரு மலையாளப்படத்தில் மோகன்லால் மற்றும் மீராஜாஸ்மின் சம்பந்தப்பட் காட்சியில் மீராஜாஸ்மின் அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப்பட்டு கண்களில் நீர்தளும்ப நம்மைப்பார்த்து பேசிக்கொண்டிருப்பார். ஆனால் இவரது முகபாவனைகளும் பேச்சும் மோகன்லாலைப்பார்த்தே இருக்க வேண்டும். இதை நான் எங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் சொன்னபோது என்னை ஒருமாதிரியாக பார்த்தார்கள். ஆனால் தங்களின் மேற்சொன்ன வரிகளை கடந்தபோதுதான் நான் யதார்த்தமானவன் என்பதை புரிந்து கொண்டேன்.
தங்களின் வலைப்பூவின் மூலம் மஜித் மஜிதி அவர்களின் சினிமாக்களை காண நேர்ந்தது. யதார்த்த சினிமா என்றால் என்ன என்பதும் அது நம்மவர்களுக்கு எப்போது கைகூடும் என்பதும் எனக்குள் தோன்றிய கேள்வி. சன்னில் ஒரே கூச்சல். எப்போது பார்த்தாலும் ’எந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்திரன்’ என்று ஒரே கூச்சல். என் காதுகளில் இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. வெளியே வந்தேன். எதிர்வீட்டு மாமா சோகமாக வெளியே அமர்ந்திருந்தார். என்னைப்பார்த்து ‘வை ப்ளட்’ என்று கேட்டவர் என் பதிலை எதிர்பார்க்காதவராக அவரே ‘ஸேம் ப்ளட்’ என்று தம் காதுகளில் வழிந்த இரத்த துளிகளை துடைத்துக்கொண்டார்.

அன்பேசிவம் said...

வணக்கம் சுரேஷ் கண்ணன்,
முதல் ஸ்லைடிலேயே கோரிக்கு நன்றி மற்றும் இது அவரது சிறுகதை என்று போட்டிருப்பார், நேரம் கருதி கலைஞர் தொலைக்காட்சியில் போடாமலிருந்திருக்கலாம். நான் அந்த குறும்படத்தை கலைஞர் தொலைக்காட்சிக்கு அனுப்புவதற்கு முன்பே பார்த்திருக்கிறேன்.


இருப்பினும் இதை ரவிக்கு தெரியச்செய்கிறேன். நன்றி சு.க.

:-)

மாலோலன் said...

அட்லீஸ்ட் எழுத்தாளார் பெயரை போட்டு நன்றி கூறியிருக்கலாம்!
பட் நம்மூர் சீனியர் டைரக்டர்ஸ் அடிக்காத காப்பியா? சினிமால இதெல்லாம் ரொம்ம சகஜம் சார்!

சமீபத்தில் சுஜாதாவின் "பெண் வேஷம் " சிறுகதை பத்து நிமிட குறும்படமாக பார்த்தேன்.நீங்கள் பார்த்தீர்களா? உங்கள் கருத்தை பதிக்கவும்.
என் கருத்து: இயக்குநரை பசித்த புலி தின்னட்டும்!!
பி.கு:-எடுத்தவர் பாலுமகேந்திராவின் சிஷ்யர்!!

பிச்சைப்பாத்திரம் said...

அன்பான வெயிலான் / முரளிகுமார் பத்மநாபன்,

இதை சம்பந்தப்பட்ட இயக்குநரின் பார்வைக்கே எடுத்துச் செல்வதற்கு நன்றி.

முரளி: குறும்படத்தின் ஆரம்பத்திலேயே அவர் 'ஏ.எச்.கோரிக்கு நன்றி' சொல்லியிருந்தார் என்றால் இந்தப் பதிவே தவறு. இக் குறும்படத்தை இடையிலிருந்துதான் பார்ததேன் என்பதை பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். மேலும் குறும்படத்தின் இறுதியில் 'எழுத்து - இயக்கம்' என இயக்குநரின் பெயரே குறிப்பிடப்பட்டிருந்துதான் என் கண்ணில் பட்டது.

Unknown said...

சுரேஷ்,
நானும் வாரவாரம் பார்க்கிறேன்.
விமர்சனமும் என் பிளாக்கில் எழுதுகிறேன்.முடிந்தால் படிக்கவும்.

நான் எதிர்பார்ப்பது சொல்ல வந்த விஷயத்தை விஷுவலாக, சுவராசியமாக,வித்தியாசமாக சொல்கிறார்களா என்பதுதான். இந்த வாரம “இங்கேயும்” நன்றாக இருந்தது.

//இரண்டு பேர் உரையாடிக் கொண்டிருக்கும் போது //

சிவாஜி கணேசன் காலத்திலிருந்து இது இருக்கிறது.(அவருக்காக அடிக்கடி ஒரு “கர்ஜனை”ஷாட் எடுப்பார்கள்)

19-09-10 அன்று”அன்பின் வலி ” (ஆளி பிரகாஷ்)என்ற குறும்படம் அப்பட்டமான நெட்டில் பார்த்த ஒன்றின் காப்பி.

//நடுவர் பிரதாப் போத்தன் மகா எரிச்சல்//
இவரின் அசட்டுத்தமிழ்தான் எரிச்சல் தவிர இவர் “பச்சக்” என்று சில பாயிண்டுகளைப் பிடிக்கிறார்.

குறும்படங்கள் ரொம்ப மோசம் என்றும் சொல்ல மாட்டேன்.
சில படங்களில் தேவையான உழைப்பு ஹோம் வொர்க் இல்லை. பணம்?

அடுத்து ரொம்ப ஸ்டைல் காட்டுகிறார்கள்.கதையின் இழையை விட்டு விடுகிறார்கள்.

எல்லோரும் சிலாகித்துச் சொன்ன ”மிட்டாய் வீடு” (எனக்கும் பிடித்திருந்தது)திரைப்படத்தில் முக்கால்வாசி நடித்தவர்கள் நடிப்பில் அனுபவமுள்ள Professionals.
இது இயக்குனருக்கு பெருமை இல்லை என்று எண்ணுகிறேன்.

குறும்படத்திற்கு இவர்கள் எதற்கு.யூ டூப் கமெண்டிலும் போட்டேன். பதில் இல்லை.


நன்றி.

காலப் பறவை said...

'உலக சினிமா பார்கிறேன்' என சுற்றி திரியும் உதவி இயக்குனர்களிடம் "தமிழ் சினிமா எடுக்க எதற்கு உலக சினிமா பார்க்கிறாய்" என கேட்டால், கள்ளச்சிரிப்பு ஒன்று தான் பதிலாக வருகிறது.

Ashok D said...

என்னங்க.. நடுவுல ப்ளாக் ஓப்பன் ஆகல...வேறேதோ ப்ளாக்குக்கு போச்சே

பிச்சைப்பாத்திரம் said...

அசோக்: நண்பரொருவரும் தனிமடலில் இதைச் சுட்டிக் காட்டியிருந்தார். JS TRACKER எனும் விட்ஜெட்டை இப்போது எடுத்துவிட்டேன். சரியாக இருக்கும் என நம்புகிறேன். நன்றி.

☼ வெயிலான் said...

புரிதலுக்கு நன்றி சு.க.

இந்தக் கதையை குறும்படமாக எடுப்பதற்கு முன்கூட்டியே கோரியிடம் அனுமதி பெற்று, அவரின் ஒப்புதலுடன் படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.

குறும்படத்தையும் கோரிக்கு காட்டியிருக்கிறார் என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

Ravikumar Tirupur said...

நண்பரே வணக்கம்! நான் தான் தாங்கள் குறிப்பிட்டிருக்கும் ரவிக்குமார்.
உங்களுக்கு சில விசயங்களை தெளிவுபடுத்திவிடுகிறேன்.
கோரி சார் எனக்கு நன்கு பரிட்சயமான நண்பர். அவரது தொகுப்பு முழுதும் படித்திருக்கிறேன். நாளைய இயக்குனரில் கலந்துகொள்ள நினைத்தபோது எளிமையான இந்த கதைதான் உடனே ஞாபகம் வந்தது. அவரிடமே ஆலோசனையும் அனுமதியும் பெற்ற் பின்னரே படப்பிடிப்பு செய்தேன். அந்த கதை 10 பக்கம் இருக்கும் அதற்க்கு நான் திரைக்கதை,வசனம் எழுதி சுருக்கிய காரணத்தால் மட்டுமே எழுத்து என்று என் பெயர் போட்டேன். அவருக்கு நன்றியும், பின்னர் கதை எ.எ.ஹெச்.கெ.கோரி அவர்களின் “சொர்க்கம் பக்கத்தில்” (தொகுப்பில் அதான் தலைப்பு) சிறுகதை தழுவி என்று போட்ட பின்னரே படம் தொடங்கும், படம் முடிந்ததும் ஸ்க்ரேலிங் டைட்டிலிலும் கதை எ.எ.ஹெச்.கெ.கோரி என்று திரும்பவும் வரும். ஒளிபரப்பில் அவர் பெயர் எடிட் செய்யபட்டுவிட்ட தகவலை அவர் கவனத்திற்கும் கொண்டுசென்றுவிட்டேன்.

அடுத்த சுற்றில் போலிஸ் தலைப்பில் நான் எடுத்த ”போஸ்டர்” படத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது அந்த படத்தின் கதை சங்கர்நாராயணன் (கேபிள் சங்கர்) அவர்களுடையது அதற்கு அவரே திரைக்கதை-வசனம் எழுதி தந்துவிட்டதால் எழுத்து என்று அவர் பெயர் போட்டிருக்கிறேன் இய்க்கம் மட்டுமே நான்.

ஏராளமான கதைகள் கொட்டிகிடக்கும்போது நாமெதற்க்கு கதை எழுதவேண்டுமென்று எழுத்தாளர்கள் கதைகளை படமாக்கி வருகிறேன். என் மேல் இந்த குற்றச்சாட்டு வருத்தமளிக்கிறது நண்பரே!
திருப்பூரில் இருந்துகொண்டே தொழிலுக்கு இடையில் என் கனவையும் நிறைவேற்ற பாடுபடுகிறேன்.
உங்கள் வாழ்த்துக்களால் வளர பார்க்கிறேன். வசவுகளால் அல்ல!
பேச 9894982525

Anonymous said...

பாவம் ரவிக்குமாராவது பரவாயில்லை எப்படியாவது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற அதீத ஆர்வ கோளாறு செய்கிறார்.
உலக நாயகன் என்ற ஒரு வெட்டி எப்போதுமே உலக படங்களை காப்பி அடித்து படங்கள் செய்து பில்டப் கொடுக்கிறதே அதை கவனியுங்கள் சுரேஷ் அவர்களே

உங்களுக்கு எங்கு நேரம்?
உலக நாயகனுக்கு மார்கேட் அவுட்டு அந்த எரிச்சலில் எந்திரனை திட்டி இன்னும் நாலு பதிவு போட்டோமோ பின்னோட்டம் பெற்றோமா !!

பிச்சைப்பாத்திரம் said...

அன்பான நணபர் ரவிக்குமார்,

தங்களின் மறுமொழிக்கும் விளக்கத்திற்கும் நன்றி. சம்பந்தப்பட்ட எழுத்தாளரின் ஒப்புதலோடும் அனுமதியோடும்தான் இக்குறும்படம் உருவாக்கப்பட்டது என்பதை அறிய மிக்க மகிழ்ச்சி.

ஆனால் என்னைப் போன்ற ஒரு பொதுவான பார்வையாளனின் கோணத்திலிருந்து இதைப் பாருங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வாசித்திருந்தாலும் ஏதோவொரு விதத்தில் தன்னைக் கவர்ந்த ஒரு சிறுகதையை இன்றைக்கும் நினைவுகூரும் ஒரு வாசகன், அதை தற்போது திரைவடிவில் ஆனால் சம்பந்தப்பட்ட எழுத்தாளரின் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டு வெளியாவதை எவ்வாறு எதிர்கொள்வான்? இதன் பின்னணயில் உள்ள விஷயங்கள் எவ்வாறு அவனுக்குத் தெரியும்?

சம்பந்தப்பட்ட எழுத்தாளரின் பெயரை நீங்கள் திரைவடிவில் குறிப்பிட்டும் இதை ஒளிபரப்பின தொலைக்காட்சி அதை எடிட் செய்ததனின் அவசியமும் மர்மமும்தான் என்ன? ஓர் இயக்குநராக இதற்காக நீங்கள் ஆட்சேபம் தெரிவிக்கவோ போராடவோ இல்லையா? வளர்ந்து வரும் இயக்குநரான நீங்கள் அதிகாரத்தின் முன்னால் அதிகம் செயலாற்ற முடியாத நடைமுறை யதார்த்தத்தையும் அதே சமயத்தில் கசப்புடன் ஏற்க வேண்டியிருக்கிறது. ஆனால் ஒரு படைப்பாளியாக இதிலுள்ள வேதனை உங்களுக்குப் புரியும்தானே? இந்தப் பதிவை வாசித்தவர்களுக்கும் குறும்படத்துடன் தொடர்புள்ளவர்களுக்கும் மாத்திரமே இந்தச் சிறுகதை குறிப்பிட்ட எழுத்தாளருக்குச் சொந்தமானது; அவரது அனுமதியுடன்தான் படமாகியுள்ளது என்பது தெரியும். மற்றவர்களுக்கு?

இந்தப்பதிவை ரவிக்குமார் என்கிற இளம் இயக்குநரின் மீதாக அதாவது ஒரு தனிப்பட்ட நபரின் மீது குற்றஞ்சாட்டும் விதமாக நான் எழுதவில்லை. அது என் நோக்கமும் கிடையாது.

பொதுவாகவே தமிழ்த்திரையுலகில் எழுத்தாளன் என்பவன் ஒரு கிள்ளுக்கீரை. உபயோகித்த பிறகு கறிவேப்பிலை மாதிரி தூக்கி எறியப்பட வேண்டியவன். இதில் ஒரளவிற்காவது தனது கம்பீரத்தை இழக்காமலிருந்தவர் ஜெயகாந்தன் மாத்திரமே. நுண்ணுணர்வு உள்ளவர்கள் இயங்கவே முடியாத இடங்களுள் சினிமாத்துறையும் ஒன்று. அல்லது மிகுந்த சகி்ப்புத்தன்மை வேண்டியிருக்கும்.

எது எதற்கோ கோடிக்கணக்கில் செலவழிக்கிறவர்கள் சினிமா உருவாக்கப்படுவதற்கான கதைக்கும் கதாசிரியர்களுக்கும் செலவு செய்ய மூக்கால் அழுவார்கள். சமீபத்திய ஒரு படத்தில் 'இதுவரை படப்பிடிப்பே நடந்திராத இடமாகத் தேடியலைந்து கோடிக் கணக்கில் செலவழித்திருக்கிறார்களாம். அட ஞான சூன்யங்களே! இதுவரை யாரும் கையாண்டிராத ஒரு கதைக் கருவை, சமூகப் பிரச்சினையை தீர்வை இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறேன் என்று ஒரு இயக்குநர் சொன்னாலாவது சற்று பெருமைப்படலாம். யாருமே படப்பிடிப்பு நடத்தியிராத இடம் என்றால் அதில் என்ன பெருமையிருக்கிறது? அப்படியாக சென்னையிலேயே பல மூத்திரச் சந்துகள் உள்ளன? அதில் நடத்தி பெருமை காணலாமே?

இவ்வாறு கதாசிரியர்களுக்கு தமிழ்த் திரையுலகம் செய்யும் துரோகம், சின்னத் திரையிலும் பரவிவிட்டதே என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்டதுதான் இந்தப்பதிவு. தவிர உங்களைக் குற்றஞ்சாட்டவோ, சங்கடப்படுத்துவதோ என் நோக்கமல்ல.

தமிழ் இலக்கியத்திலிருந்து இன்னும் பல சிறந்த படங்களை நீங்கள் உருவாக்குவதை நானும் விரும்புகிறேன்; வரவேற்கிறேன்.

PRABHU RAJADURAI said...

சுரேஷ் கண்ணன், உங்களுக்கு அபாரமான எழுத்து திறமை இருக்கிறது. அந்நியனுக்கு இருந்த பேச்சுத் திறமை போல;-)

அதானல்தான் 5 கோடி அடிப்பவனை எல்லாம் விட்டு விட்டு 5 பைசா அடிப்பவன்தான் போட்டுத் தள்ளப்பட வேண்டியவன் என்று எங்களை நம்ப வைக்க முடிகிறது.


நேற்று கூட எந்திரன் டிரையலர் பார்த்தேன். ரஜினி காலை தரையில் உதைக்க நிலம் பாளம் பாளமாக வெடிக்கிறது. இதே காட்சியை இதே மாதிரி சமீபத்தில் நாய் ரோபோட்டாக வரும் கார்ட்டூன் படத்தில் உண்டு. சங்கர் என்னடாவென்றால், எந்த ஆங்கிலப் படங்களிலிருந்தும் காப்பியடிக்கவில்லை என்று பேட்டியளித்துக் கொண்டிருக்கிறார்.

ஆமாம் விஷூவல் மீடியா...அதில் கதையை காப்பியடிப்பது குற்றம். அனுமதி பெற்றால் குற்றமல்ல. காட்சியமைப்பை காப்பியடிப்பது அனுமதி பெற்றால் கேவலம்!

சரி, நீங்கள் பள்ளி நாடகங்களில் நடித்தது இல்லலயா? இப்படி திரும்பி ஆடியன்ஸுக்கு பின்புறத்தை காட்டாதே காட்டாதே என்று டீச்சர் சொல்லிக்கொண்டே இருப்பார்களே

காட்சி முடிந்து போகும் பொழுதும் பின்னாலேயே நடந்து போக வேண்டுமே! ;-)

Anonymous said...

Kindly remove this abusive post after asking apology from the director.

Anonymous said...

I am disappointed with your reply even after hearing his honest account of what really happened with the editing. You jumped the gun after watching the movie from the middle and has the nerve to criticize him for plagiarism.

Proverbially 'Honesty is the best Policy'.