Monday, November 26, 2007

TSOTSI - ஓரு வன்முறையாளனின் குழந்தைமை

சவுத் ஆப்ரிக்கா திரைப்படம் (2005) ஒன்றை சமீபத்தில் காண நேரிட்டது.

எல்லா மனிதர்க்குள்ளும் கடவுளும் சாத்தானும் இருப்பார்கள். சதவிகிதம்தான் வெவ்வேறு அளவில் இருக்கும். நூறு சதவிகித கடவுளையோ சாத்தானையோ காணவே முடியாது என்பது என் நம்பிக்கை. கொடூர வன்முறையாளனுக்குள்ளும் எங்கோ ஒரு ஓரத்தில் ஒளிந்திருக்கும் ஈரம் கசியும் சூழ்நிலையும் ஏற்படலாம். சாந்த சொருபியும் வெறி கொள்ளும் தருணங்களும் உண்டுதான். சூழ்நிலைதான் ஒரு மனிதனை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே என்றாலும் இயற்கையாகவே அதற்குள் பதியப்பட்டிருக்கும் குணாதிசயங்களும் விஞ்ஞானப்படி பரம்பரை பரம்பரையாக சில விஷயங்களும்தான் ஒரு குழந்தையின் நடத்தையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் சிலவாக இருக்கிறது.

Photo Sharing and Video Hosting at Photobucket

புதிய பாதை என்கிற சற்றே தமிழ்படத்தை நினைவுப்படுத்தும் இந்தப் படத்தின் முக்கிய பாத்திரமான tsotsi சிறிதளவு பணத்திற்காக ஒரு உயிரையே கொல்லத் துணிபவன். அவ்வளவாக முதிர்ச்சியுறாத இளைஞன்தான். கல்வியறிவு இல்லாதவன். ரயில் நிலையத்தில் அதிகப்பணம் வைத்திருப்பவர்களை நோட்டமிட்டு, இடையூறு ஏற்படுத்தும் பட்சத்தில் அவர்களை கொன்றும் பணத்தை பறிப்பதை தொழிலாக (mugging) வைத்திருக்கும் இவருக்கு மூன்று நண்பர்கள். Boston ஒரளவிற்கு படித்தவன். decency என்கிற வார்த்தையின் பொருளை அறிந்தவன். ஆசிரியர் பயிற்சிக்காக படிக்க முயல்பவன். Die-ape சுயபுத்தி இல்லாதவன்; tsotsiயின் நிழலை பின்தொடர்பவன். Butcher மகா முரடன். tsotsi-யிடம் உள்ள சிறிதளவு மனிதாபிமானம் கூட இல்லாதவன்.

ரயிலில் ஒரு கிழவரை கொன்று பணத்தை கைப்பற்றி மது அருந்திக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தில் boston அந்தக் கொலை தவிர்த்திருக்கப்படக்கூடியது என்று கூறுகிறான். decency என்றால் என்னவென்று தெரியுமா என்று மற்றவர்களை வினவுகிறான். tsotsi-யை "உன்னுடைய உண்மையான பெயர் என்ன? யார் உன் பெற்றோர்? என்று கேட்கிறான். ஆத்திரமடையும் tsotsi அவனை நையப்புடைத்து விட்டு எங்கோ ஓடுகிறான். ஒரு பெண்ணை துப்பாக்கியால் சுட்டுவிட்டு காரை திருடிக் கொண்டு போகும் tsotsi சற்று தூரம் போன பிறகுதான் பின்சீட்டில் ஒரு கைக்குழந்தை அழுதுக் கொண்டிருப்பதை கவனிக்கிறான். காரிலிருந்த பொருட்களையும் குழந்தையையும் திருடிக் கொண்டு தன்னுடைய சேரிக்கு செல்கிறான். யாரும் அறியாமல் தன்னுடைய குடிசையில் குழந்தையை வளர்க்க முடிவு செய்கிறான். இதன் காரணமாக தன்னுடைய நண்பர்களைக்கூட புறக்கணிக்க முடிவு செய்கிறான்.

குழந்தை பசியால் அழுவதைக் கண்டு பக்கத்தில் குழந்தை வைத்திருக்கும் ஒரு பெண்ணை (Miriam) மிரட்டி பால் கொடுக்கச் சொல்கிறான். Miriam குழந்தையை தன்னுடைய குழந்தையுடனே இணைத்து பராமரிப்பதாக சொல்கிறாள். "வெளியே சொன்னால் உன்னை கொன்று விடுவேன்" என்று மிரட்டுகிறான் tsotsi. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தையின் தாயும், தந்தையும் குழந்தையை எப்படியாவது மீட்கச் சொல்லி காவல் துறையை வேண்டுகின்றனர். அவனுடைய உருவப்படம் வரையப்பட்டு பத்திரிகைகளில் பிரசுரமாகிறது.

இதற்கிடையில் சிறுவயதிலேயே தாயின் அருகாமையை இழந்த, தந்தையால் வீட்டை விட்டு துரத்தியடிக்கப்பட்ட, தெருவோரச் சிறுவர்களுடன் வளர்ந்த tsotsiயின் கடந்த கால வாழ்க்கை சொற்ப கணங்களில் ஆனால் உணர்ச்சிகரமாக சொல்லப்படுகிறது.

()

குழந்தையை வளர்ப்பதற்காகவும் Boston-ன் மேற்படிப்புச் செலவிற்காகவும் பணம் திருட tsotsiயும் அவனது நண்பர்களும் குழந்தையின் வீட்டிற்கே செல்கிறார்கள். குழந்தையின் தகப்பனை கட்டிப் போட்டு விட்டு Die-ape தின்பதற்கான பொருளையும் Butcher மதிப்புள்ள பொருளையும் தேடும் சூழலில் tsotsi குழந்தைக்கான பால் பவுடர் டப்பாக்களையும், பொம்மைகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறான். குழந்தையின் தகப்பன் இடையில் அலாரத்தை அழுத்தி காவல் துறைக்கு சமிக்ஞையை ஏற்படுத்த ஆத்திரமடையும் Butcher அவனை சுடப் போகும் தருணத்தில் tsotsi நண்பனையே சுட்டு வீழ்த்துகிறான். பயந்து போகும் Die-ape இவனை விட்டு பிரிந்து போகிறான்.

திருடின காரை விற்ற பணத்தை குழந்தையை பராமரிக்கும் Miriamத்திடன் தரும் போது வாங்க மறுக்கும் அவள், "பத்திரிகையில் நானும் படித்தேன். நீ சுட்டதால் இந்தக் குழந்தையின் தாய் கால்களை இழந்துவிட்டாள். அதை உன் பணத்தால் திருப்பித்தர முடியுமா?" என்று கேட்கிறாள். tsotsi மனம் மாறி குழந்தையை திருப்பித் தரும் தருணத்தில் காவல்துறை அவனை சூழ்கிறது.

tsotsi என்ன ஆனான்? குழந்தை பத்திரமாக பெற்றோர்களிடம் சேர்ந்ததா? .... விடையை அறிய படத்தைப் பாருங்கள்.

()

Athol Fugard என்பவர் எழுதின நாவலின் அடிப்படையில் Gavid hood இயக்கியிருக்கும் இந்தப்படத்தை தெற்கு ஆப்ரிக்க அரசும் இணைந்து தயாரித்திருக்கிறது. 2005-க்கிற்கான ஆஸ்கார் விருதையும் (சிறந்த வெளிநாட்டுத்திரைப்படம்) இந்தப்படம் பெற்றிருக்கிறது.

குழந்தை பசியால் அழும் போது தன்னிடமுள்ள பால்டின்னை குழந்தைக்கு புகட்டிவிட்டு யாரோ வருவதால் அவசரம் அவசரமாக குழந்தையையும் பால்டின்னையும் ஒரு பைக்குள் வைத்து விட்டுச் சென்று விடியற்காலையில் திரும்பும் போது குழந்தையின் முகம் பூராவும் எறும்புகள் சூழ்ந்திருக்கும் காட்சி நம் மனத்தை பதைக்கவும் நெகிழவும் செய்கிறது. கணவனை இழந்து வறுமையில் வாடும் Miriam, அந்தச் சூழ்நிலையிலும் tsotsi தரும் பணத்தை ஏற்றுக் கொள்ளாதிருக்கும் மனத்திடமும் நம்மை கவர்கிறது. Miriam குழந்தையை குளிப்பாட்டும் போது தன்னுடைய தாயின் நினைவு வர அதை கனிவோடு கவனத்துக் கொண்டிருக்கும் tsotsi, Miriam தன்னைப் பார்ப்பதை கவனித்தவுடன் தன்னுடைய முகபாவத்தை கடுமையாக்கிக் கொள்ளும் காட்சி சிறப்பு. குழந்தையின் வீட்டில் திருடப் போகும் tsotsi, குழந்தையின் அறை விலையுயர்ந்த பொருட்களாலும் பொம்மைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருப்பதை ஏக்கத்துடனும் பிரமிப்புடனும் காண்பதும் நம்மைக் கவர்கிறது.

தான் சிறுவயதில் இழந்த பெற்றோர்களின் அருகாமையையும் அரவணைப்பையும், ஒரு குழந்தைக்கு தர முடிவு செய்யும் tsotsi நடைமுறைச் சிக்கல்களால் அதை தொடர முடியாத சோகம் நம்மையும் சூழ்கிறது.

()

மிகச் சிறந்த படமென்று சொல்ல முடியாவிட்டாலும், மயிலிறகால் நம் மனதை வருடி நெகிழச் செய்து மனிதம் இன்னும் எத்தனை வருடங்களானாலும் உயிர்ப்போடுதான் இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது tsotsi.

1 comment:

அகல்விளக்கு said...

யோ(க்)கி(யன்) கதைய சுட்ட மாதிரி இருக்கு...

ஹிஹி சும்மாதான் தல கேட்டேன்...

அதோட விமர்சனத்துல இருந்துதான் நான் இங்கயே வந்தேன்...
:-)