Saturday, July 04, 2015

கமல்ஹாசனின் 'தூங்காவனம்'
கமல்ஹாசனிடம் சமீப காலமாக சில ஆச்சரியமான மாற்றங்களை கவனிக்க முடிகிறது. பொதுவாக ஒரு திரைப்படத்தை முடிக்க ஓர் ஆண்டிற்கும் மேலான காலத்தை அவர் எடுத்துக் கொள்வார். இந்த இடைவெளி குறித்து அவரது ரசிகர்களே கவலைப்பட்டு அடுத்த திரைப்படத்தை மிக ஆவலாக எதிர்பார்ப்பது வழக்கம். ஆனால் சமீபகாலமாக அவரது அடுத்தடுத்த திரைப்படத்தின் அறிவிப்புகள் குறுகிய நேரத்தில் வருகின்றன. விஸ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏறத்தாழ முடிந்து போஸ்ட் ப்ரொடக்சன் மெருகேற்றலில் இருப்பதாகச் சொல்கிறார்கள். 'உத்தம வில்லன்' வெளிவந்து துவக்க நாளின் சிக்கலோடு ஓடியோ ஓடாமலோ கடந்து சென்று விட்டது. அதற்குள்ளாக 'பாபநாசம்' திரைப்படத்தின் அறிவிப்பு வந்து படமும் இதோ வெளிவந்து விட்டது. படம் வெளிவரப் போவதற்கு முன்பே இது குறித்த முன்தீர்மான விமர்சனங்கள் வெளிவரத் துவங்கி விட்டன. த்ரிஷ்யத்திற்கும் இதற்குமான வித்தியாசத்தை பட்டியலிட ரசிக விமர்சகர்கள் கொலை வெறியுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சூடு அடங்குவதற்குள்ளாக அவரது அடுத்த திரைப்படம் குறித்தான அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த திரைப்படத்தின் பெயர் 'தூங்காவனம்' என்கிறார்கள். இது Sleepless Night எனும் பிரெஞ்சு திரைப்படத்தின் அதிகாரபூர்வமான ரீமேக் என்று சொல்லப்படுகிறது. விஸ்வரூபம் திரைப்படம் மூலமாக ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களைத் தாண்டிவரவே இப்படி அடுத்தடுத்த திரைப்படங்களை குறுகிய நேரத்தில் அவர் உருவாக்குகிறார் என்று சொல்லப்படுவதில் எத்தனை தூரம் உண்மையிருக்கிறது என்று தெரியவில்லை. எனவே இதில் குறைந்தபட்ச வெற்றியை முதலிலேயே உறுதி செய்து கொள்ள, வெற்றி பெற்ற மற்ற மொழித் திரைப்படங்களை அவர் தேர்ந்தெடுப்பதாகவும் சொல்கிறார்கள். மோகன்லால் நடிப்பில் வெளிவந்த த்ரிஷ்யம் - மலையாள திரையுலகிலேயே அதிக வசூலை செய்த சாதனை திரைப்படம். மேலும் அதன் கதைக்களமும் சுவாரசியமானது மட்டுமல்லாமல், நடிப்பதற்கு வாய்ப்புள்ள சவாலான பாத்திரமும் கூட. மோகன்லால் இதை தனது அற்புதமான பங்களிப்பால் நிறைவு செய்திருந்தார். 

ஆனால் என்னதான் ரீமேக்கிற்காக மாங்கு மாங்கென்று உழைத்தாலும் எழுத்திலக்கியத்தில் மொழிபெயர்ப்பாளனுக்கு கிடைக்கும் சம்பிரதாயமான பாராட்டுதான் பொதுவாக இதற்கும் கிடைக்கும். என்னதான் இருந்தாலும் இது மறுஉருவாக்கம்தானே என்கிற எண்ணம் பார்வையாளர்களின் மனதில் உறைந்தபடி இருக்கும். கமல் போல அற்புதமான கலைஞனுக்கு ரீமேக்குகளில் நடிப்பது நிச்சயமான சவாலான விஷயமல்ல என்று தோன்றுகிறது. அவர் இதுவரை நடித்திருக்கும் ரீமேக் படங்களின் எண்ணிக்கையையும் அதற்கு கிடைத்த வரவேற்பையும் வைத்து இதைச் சொல்லிவிடலாம். 


கமல்ஹாசன் இப்படி மறுஉருவாக்கப்படங்களாக அடுத்தடுத்து தேர்ந்தெடுப்பது ஒருவகையில் ஆச்சரியம் என்றால் 'தூங்காவனத்திற்காக' பிரெஞ்சு திரைப்படத்தை அதிகாரபூர்வமான முறையில் ரீமேக்காக உருவாக்குவது இன்னொரு ஆச்சரியம். Plagiarism  தொடர்பான குற்றச்சாட்டை எதிர்கொள்ளாத படைப்பாளிகளே இருக்க மாட்டார்கள். தமிழ் சினிமாவும் அதற்கு விதிவிலக்கல்ல. மற்ற மொழித் திரைப்படங்களில் இருந்து கதையை, காட்சியை உருவுவது ஏதோ சமீப காலத்திய விஷயம் என்பது போல் சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலிருந்தே இது பழக்கமான விஷயம்தான். சமயங்களில் முறையாக அனுமதி பெறப்பட்டும் (இந்தியாவிற்குள்ளாக) சில திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றாலும் அது சொற்பமானது. அதிலும் அயல் தேசத்து திரைப்படங்கள் என்றால் கேள்வி கேட்பாரே கிடையாது. ஆளாளுக்கு உருவி சிதைத்து ஜாலியாக குழம்பு காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். இப்படியாக அயல் தேசத்து சினிமாக்களில் உருவும் தமிழ் படைப்பாளியாக கமலையே பொதுவாக பிரதானமாக சுட்டிக் காட்டுவார்கள். இந்த விஷயத்தில் அதிகமாக உருளுவது கமலின் தலையாகத்தான் இருக்கும். இவைகளில் சில புகார்கள் உண்மைதான். இன்னும் சிலவை உண்மையல்ல. இந்தப் பதிவை வாசிக்கவும்.

இந்த நிலையில் அதிகாரபூர்வமான முறையில் ஓர் அயல்தேசத்து சினிமாவை மறுஉருவாக்கம் செய்வது கமலின் திரைப்பயணத்தில் இதுதான் முதன்முறை என்று நினைக்கிறேன்.  உலகமயமாக்கத்தின் விளைவாக அதன் சந்தை இன்னமும் விரிவடைந்து வரும் சூழலில் உலகிலேயே அதிகமான திரைப் பார்வையாளர்களைக் கொண்ட தேசங்களில் ஒன்றாக இந்தியா இருப்பதினால் இதுநாள் வரை அறியப்படாமல் அல்லது கண்டுகொள்ளப்படாமல் இருந்த வணிக மதிப்பை இப்போது சீரியஸாக சர்வதேச சினிமா நிறுவனங்கள் உணரத் துவங்கியிருக்கிறார்கள். எனவே இங்கு உருவாகும் பிரபல திரைப்படங்களில் நேரடியான Plagiarism குற்றச்சாட்டு இருந்தால் உடனே அது சம்பந்தப்பட்ட படநிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டு சட்ட நடவடிக்கையை எடுக்கத் துவங்கியிருக்கிறார்கள். எனவே கமலின் இந்த மாற்றத்திற்கு இந்த சூழலும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஹாலிவுட்டும் 2015-ல் மறுஉருவாக்கம் செய்யப் போகும் பிரெஞ்சு திரைப்படமான 'Sleepless Night' (Nuit Blanche) திரைப்படத்தை  சில மாதங்களுக்கு முன் பார்த்திருக்கிறேன். இதன் சுவாரசியத்திற்கு அடிப்படையே இதன் அபாரமான திரைக்கதைதான். மற்றபடி ஒரே இரவில் நிகழும் இதன் மையக்களன் வழக்கமானதொன்றுதான். போதைப் பொருள் கும்பலால் கடத்தப்பட்டிருக்கும் தன் மகனை மீட்பதற்காக ஒரு காவல்துறை அதிகாரி ஆவேசமாக செய்யும் சாகசங்கள் கொண்ட வழக்கமான கதைதான். ஆனால் படுவேகமான, அசத்தலான திரைக்கதையின் மூலம் சுவாரசியப்படுத்தியிருக்கிறார்கள்.

வேகமான திரைக்கதை என்றாலே பொதுவாக பலரும்  சேஸிங் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் என்பதாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஸிட்பீல்ட் உபதேசித்திருக்கும் Three-act structure-ஐ  ஏதோ கணிதசூத்திரம் போல அப்படியே பொருத்தினால் அது உணர்வுபூர்வமான படைப்பாக அல்லாமல் இயந்திரத்தனமான சக்கையாகத்தான் வெளிவரும். வேகமான திரைக்கதை என்பது  அது மட்டுமேயல்ல. பார்வையாளனை கதாபாத்திரங்களோடும் சம்பவங்களோடும் அகரீதியாக ஒன்றச் செய்து அவனுடைய ஆவலையும் பதற்றத்தையும் தூண்டியபடியே இருப்பது. காதல் சார்ந்த கதையில் கூட இதை சாதிக்க முடியும். த்ரிஷ்யம் திரைப்படத்தில் கூட என்ன ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது? ஆனால் பார்வையாளன் நகத்தைக் கடித்தபடி அதைப் பார்க்கவில்லையா?

எல்லாக்கதைகளும் ஏற்கெனவே சலிக்க சலிக்கச் சொல்லப்பட்டு விட்ட இன்றைய தேதியில் ஒரு திரைப்படத்திற்கு மிக மிக அடிப்படையானது திரைக்கதைதான். மேற்குறிப்பிட்ட பிரெஞ்சு திரைப்படத்தின் அபாரமான உருவாக்கத்திற்கு காரணம் மூன்று விஷயங்கள்தான். ஒன்று, திரைக்கதை. இரண்டு, திரைக்கதை. மூன்றும் திரைக்கதையேதான். அப்படியெனில் கதை என்று இருக்க வேண்டாமா? நிச்சயமாக. இல்லையெனில் அது சவத்திற்கு செய்யப்பட்ட ஒப்பனைகள் போல எத்தனை சாமர்த்தியமான திரைக்கதையும் நுட்பங்களையும் கொண்டிருந்தாலும்  ஜீவனேயில்லாமல் போய் விடும்.

கமல்ஹாசன் இந்த திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கின் மறுஉருவாக்கத்திற்காக தேர்வு செய்திருப்பது சற்று ஆச்சரியத்தை தருகிறது. ஏனெனில் இது 'இந்தியத்தன்மை' அல்லாத ஹாலிவுட் ஆக்ஷன் வகையிலான திரைப்படம். புதியஅலை திரைப்படங்கள் தமிழில் தற்போது வெற்றி பெற்றுவரும் சூழலில் இந்த ஆக்ஷன் தன்மையை பெரிதும் மாற்றாமல் ரீமேக் செய்தால் இது நிச்சயம் தமிழ் பார்வையாளர்களுக்கு மிக ஆச்சரியமானதொன்றாக வித்தியாசமான அனுபவமாக அமையும். கமல் அதை சாதிப்பார் என்று தோன்றினாலும் பெரும்பாலும் நைட்கிளப்பினுள் நிகழும் இத்திரைப்படத்தில் வணிக சமரசத்திற்காக நைசாக ஏதேனும் பாடல் காட்சியை செருகி விடுவார்களோ என்கிற சந்தேகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. இதில் கமல் முத்தமிடும் திரிஷாவின் பாத்திரம் அசலில் சில நிமிடங்கள் மட்டுமே வருவது. தமிழில் என்ன செய்யவிருக்கிறார்களோ தெரியவில்லை. போலவே பெண் காவல் அதிகாரியாக வருபவரின் பாத்திர வடிவமைப்பும் சிறிது நேரமே என்றாலும் குறிப்பிடத்தகுந்தது. மதுஷாலினி இந்தப் பாத்திரத்தை கையாள்வார் என யூகிக்கிறேன்.

மேற்குறிப்பிட்ட பிரெஞ்சு திரைப்படத்தின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் அதன் ஒளிப்பதிவு. பெரும்பாலும் நைட்கிளப் கூட்டத்திற்குள்ளேயே நிகழ்ந்து கொண்டிருக்கும் காட்சிகளில் அந்தக் கூட்டத்தை கட்டுப்படுத்தி அதன் தொடர்ச்சிகளில் விலகல்தன்மை இல்லாமல் பதிவு செய்வது சிரமமான விஷயமாகத் தோன்றுகிறது. ஆனால் அதை மேற்சொன்ன திரைப்படத்தில் அபாரமாக சாத்தியப்படுத்தியிருப்பார்கள். காவல்துறை அதிகாரியாக பிரதான பாத்திரத்தில் நடித்திருக்கும் Tomer Sisley அடிப்படையில் ஒரு நகைச்சுவை நடிகர். ஆனால் இத்திரைப்படத்தில் அத்தனை தீவிரத்தன்மையுடன் தன் மகனை மீட்பதற்காக எதையும் செய்யத் துணியும் தந்தையின் பாத்திரத்தை அற்புதமாக கையாண்டிருப்பார். இவர் நேர்மையான காவல் அதிகாரியா அல்லவா என்பதே சற்று புரியாதபடி பூடகமான முறையில் இவரது பாத்திர வடிவமைப்பு அமைக்கப்பட்டிருக்கும்.

தமிழ் திரையில் பல விஷயங்களில் முன்மாதிரியாகவும் முன்னோடியாகவும் இருக்கும் கமல்ஹாசன் ஓர் அந்நிய திரைப்படத்தை முதன்முறையாக அதிகாரபூர்வ முறையில் மறுஉருவாக்கம் செய்யும் விஷயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அதே சமயத்தில் இதில் இந்தியத்தன்மைக்கான சமரசங்களை ஏதும் செய்யாமல் படத்தின் ஜீவனை அப்படியே இதிலும் கடத்தி வந்தால் சிறப்பாக இருக்கும்.

"தூங்காவனத்திற்காக' நிசச்யம் காத்திருக்கலாம். 


suresh kannan

No comments: