Monday, July 13, 2015

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது
பெருநகரத்தின் இன்னொரு முகம்


இன்றைய தேதியில், ஒரு திரைப்படத்தை உருவாக்கும் சிரமங்களுக்கு ஈடான நெருக்கடியை அதனை சந்தைப்படுத்துவதற்கும், வெளியிடுவதற்கும் அடைய வேண்டியிருப்பதாகச் சொல்கிறார்கள். திரையரங்கம் கிடைக்காதது உள்ளிட்ட எத்தனையோ காரணங்களுக்காக பல சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் டிஜிட்டல் உருவில்  அப்படியே  பரிதாபமாக உறைந்து கிடக்கின்றன. அப்படியே அரங்குகள் கிடைத்தாலும் அந்தத் திரைப்படங்களுக்கு ஏற்படக்கூடும் அற்பாயுளின் ஆபத்தை முதலில் கடந்தாக வேண்டும். முதல் நாளிலேயே, ஏன் ஒரேயொரு திரையிடலேயே தன் தகுதியை நிரூபித்துக் கொண்டால்தான் வாய்மொழி வார்த்தையாக அது பரவி சில நாட்களாவது தொடர்ந்து இயங்கும். சமீபத்திய உதாரணம் 'காக்கா முட்டை'. ஸ்டார் நடிகர்களின்திரைப்படங்களைத் தவிர இதர திரைப்படங்களை தொடர்ச்சியான மூளைச்சலவை விளம்பரங்களின் மூலம் ஓட வைக்க முடியாது.

திரைப்படத் தொழில் நசிந்து கொண்டு வருவதாக தயாரிப்பாளர்கள் ஒருபுறம் புலம்பிக் கொண்டிருந்தாலும் இன்னொரு புறம் புற்றீசல்கள் போல நிறைய திரைப்படங்கள் வெளிவருவதற்கான அறிவிப்புகளும் தயாரிப்புகளும் வந்து கொண்டேயிருக்கின்றன. ஒரு முன்னணி நாளிதழின் சினிமாப்பக்கங்களைப் பார்த்தால் நட்சத்திர நடிகர்களின் திரைப்பட விளம்பரங்களுக்கு இடையில்  "யார்யா இவிய்ங்க" என்று யோசிக்க வைக்கும்அளவில் பக்கத்து வீட்டு இயல்பான முகங்களுடன் கூடிய சினிமா விளம்பரங்களை நிறைய காண முடிகிறது. அவற்றின் நடிகர்கள், இயக்குநர்கள் யாரென்றே நமக்குத் தெரியாது ; அத்திரைப்படங்கள் எப்போது வெளிவரும் என்பதும் நமக்குத் தெரியாது ; அவை வெளிவந்ததா, இல்லையா, ஓடினதா, இல்லையா என்று கூட தெரியாது. திடீரென்று அந்த திரைப்படத்தின் விளம்பரங்கள் மறைந்து அது போன்ற வேறு திரைப்படங்களின் விளம்பரங்கள் அந்த இடங்களில் நிறைந்திருக்கும்.

இம்மாதிரியான திரைப்படங்களுள் ஒன்று, 'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது'. வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் இத்திரைப்படம் கூட்டத்தில் மறைந்த போது, இம்மாதிரியான அபலைத் திரைப்படங்களுக்கு வாழ்வளிக்கும் வகையில் இவைகளை  தொடர்ந்து  விடாப்பிடியாக பார்த்து விடும் நண்பரொருவர், இத்திரைப்படத்தை பிரத்யேகமாக குறிப்பிட்டு 'கவனப்படுத்தப்பட வேண்டிய திரைப்படம்' என்றார். 'நாயகன் திரைப்படத்திற்கு பிறகு நான் பார்த்த சிறந்த திரைப்படம் இதுவே' என்று பாரதிராஜா ஒரு மேடையில் மிகையுற்சாகமாக முழங்கியதை இதன் பத்திரிகை விளம்பரங்களில் கண்டதும் ஞாபகமிருந்தது. மேலும் இதன் போஸ்டர்கள் இயல்பான அழகியல் உணர்வுடன் வடிவமைக்கப்பட்டிருந்ததும் நினைவில் வந்தது. எனவே இதை காலங் கடந்தும் தேடிப்பிடித்துப்  பார்த்தேன்.

***
பொருளீட்டுவதற்காகவும் இன்னபிற காரணங்களுக்காகவும் பெருநகரத்திற்குள் இடம் பெயர்பவர்கள் முதலில் சந்திக்கும் நெருக்கடியே வசிப்பிடம்தான். உறவினர் வீடுகளிலும் நண்பர்களின் வீடுகளிலும் துவக்கத்தில் தற்காலிகமாக தங்க முடியுமே தவிர அந்த ஏற்பாடு நீண்ட காலத்திற்கு சாத்தியப்படாது. உறவினர்களையும் குறைசொல்ல முடியாது. நகரம் அவர்களுக்குள் படிய வைத்து விடும் மனோபாவம் அப்படி. அது மனிதர்கள் தங்குவதற்கான சிறிய இடத்தை  மட்டும் அனுமதிப்பதைப் போலவே அவர்களின் மனத்தையும் அவ்வாறாகவே சுருக்கி விடுகிறது. எனவே நகரத்தினுள் வருபவர்கள் துவக்க தடுமாற்றங்களுக்குப் பிறகு நெரிசலான மேன்ஷன்களிலும் விடுதிகளிலும் ஒண்டிக் கொள்கிறார்கள்.

கிராமத்திலிருந்தும் சிறுநகரங்களிலிருந்தும் புலம் பெயரும் நபர்கள் வசிப்பிடத்திற்காக எதிர்கொள்ளும் அவலங்களை, நெருக்கடிகளை இத்திரைப்படத்தின் ஒரு பகுதி மிக நுட்பமாகவும் அழுத்தமாகவும் காட்சிப்படுத்தியுள்ளது. கிராமத்தின் வெளிகளில் தாரளமாக புழங்கிய அவர்கள் நகரத்தின் இண்டு இடுக்குகளில் சிக்கி அது பழகும் வரை மூச்சு திணறுவார்கள்.  ஒரு மனிதனின் வாழ்விற்கு மிக அவசியமான உணவு, உடை உறையுளில் முதலிரண்டை  நகரத்தில் எப்படியோ எளிமையாக சமாளித்துக் கொள்ள இயன்றாலும் கடைசி விஷயத்தை சம்பாதிப்பது அதிகச் சிரமமானதொன்று. நகரங்களில் தெருக்களிலும் பேருந்து நிலையங்களிலும் நினைத்தபடி படுத்துறங்க முடியாது. காவல்துறையினராலும் சமூக விரோதிகளாலும் தொல்லைகள் ஏற்படும்.

இவர்களின் உடனடி புகலிடமாக அமையக்கூடியது  எளிய செலவின் மூலம் சமாளிக்கக்கூடிய மேன்ஷன்கள்தான். ஆனால் இரண்டு நபர்கள் தங்கக்கூடிய இடத்தில் பத்து  நபர்களாவது அடைந்து கிடக்க வேண்டி வரும். மலம் நுரைத்துக் கிடக்கும் கழிவறையில் அமர ஜென் மனநிலை வேண்டும். உள்ளாடை காணாமற் போயிருந்தால் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் அதை அணிந்து போன சக அறைவாசியின் பழைய உள்ளாடையை முகம் சுளிக்காமல் அணிந்து கொள்ளும் சகிப்புத்தன்மை வேண்டும். இம்மாதிரியான மேன்ஷன்வாசிகளின் வாழ்வியல் அவலங்கள் பல தமிழ் திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஏறத்தாழ அனைத்து உதவி இயக்குநர்களும் இந்த சூழலைக் கடந்து வருபவர்கள்தான் என்பதால்  அது திரையில் எதிரொலிப்பது இயல்புதான். பாலாஜி சக்திவேல் இயக்கிய 'காதல்' திரைப்படத்தின் இதை சற்று நுட்பமாகவே பதிவு செய்துள்ளது. இந்த சூழலை சகித்துக் கொள்ள இயலாதவர்கள், சற்று அதிகமாக சம்பாதிப்பவர்கள், ஒரு  ஃபிளாட்டை வாடகைக்கு எடுத்து அதைப் பகிர்ந்து தங்கிக் கொள்கிறார்கள். பல்வேறு காரணங்களுக்காக இவ்வாறான தனிநபர்களுக்கு வீடுகள் கிடைப்பது முன்பெல்லாம் மிக கடினம். உலகமயமாக்கத்தின் எதிரொலியாக மென்பொருள் நிறுவனங்களில் அதிகம் சம்பாதிக்கக்கூடிய இளைஞர்களிடமிருந்து கிடைக்கக்கூடிய கணிசமான வாடகைக்காகவே, வீட்டு உரிமையாளர்கள் அதற்கேற்ப தங்களையும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சமூகத்தில் பொருளாதார சமநிலையின்மையை ஏற்படுத்தியதற்கு இந்த சூழலும் ஒரு காரணம். அதிக சதவீதத்துடன் ஏற்றப்பட்ட இந்தளவிற்கான வாடகையை தர முடியாத சாமான்யர்களுக்கு மேன்ஷன்கள்தான் கதி.

சினிமாவில் சாதிப்பது உள்ளிட்ட பல்வேறு கனவுகளுடன் நகரத்திற்குள் இடம் பெயர்ந்திருக்கும் சில இளைஞர்களின் வாழ்க்கை அனுபவங்களை, நெருக்கடிகளை, காமம் சார்ந்த தேடல்களை, நிறைவேறா ஏக்கங்களை இரண்டு மூன்று கிளைக்கதைகளாக இணைத்து சொல்ல முற்பட்டிருக்கிறது இத்திரைப்படம். ஆனால் இதுவேதான் படத்தின் மிகப் பெரிய பலவீனமே. இந்த இணைப்பு கச்சிதமாகவும் கோர்வையானதாகவும் அமையாமல் படத்திற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அதைத் தாண்டி படத்தில் துண்டு துண்டாக சில அற்புதமான கணங்கள் உள்ளன. 'கதைக்குள் இருந்து கதையை வெளியேற்றுவதுதான் எனது எழுத்து பாணி' என்று குறிப்பிடுவார் எழுத்தாளர் சா.கந்தசாமி. அதாவது கதைகளை சுவாரசியமாக உருவாக்குவதற்காக அதில் வலிந்து திணிக்கப்படும் செயற்கைத்தனங்களை பெரும்பாலும் விலக்கி கூடுமானவரை அந்த இயல்புத்தனத்துடன் எழுத்தில் பதிவு செய்வது. இந்த திரைப்படத்திலும் அதைப் போன்றே 'சினிமாத்தனம்' அல்லாத தருணங்கள் உள்ளன. அந்தவொரு காரணத்திற்காகவே இத்திரைப்படம் கவனப்படுத்தப்படுவது அவசியமாகிறது.

தான் எழுதும் திரைக்கதையின் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்று விவேகானந்தரின் பொன்மொழியை அவ்வப்போது உத்வேகமாக நினைவுப்படுத்திக் கொண்டு அமரும் செல்ல பாண்டி, அதற்கான தனிமையமையாமல் அவதியுறுகிறான். (இந்த அவதிகளே படத்தின் முழு திரைக்கதையாக உருவாகியிருப்பதாக படத்தின் இறுதியில் வெளியாவது ஒரு எதிர்பார்த்த சுவாரசியம்). செல்போன் உரையாடல்களின் மூலம் பெண்களைக் கவர்ந்து அறைக்குள் வரவழைத்து பாலுறவு கொள்கிறான் கார்த்திக். அவனுக்கும் அதற்கான தனிமை தேவைப்படுகிறது.  ஊரில் அவனுடைய அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் தெரிந்து கிளம்புகிறவனுக்கு காமத்தை ருசிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது ஊருக்குப் போவதை தவிர்த்து விட்டு அதற்கே முன்னுரிமை தருகிறான். பிறகு அவனுடைய அம்மா இறந்து போன தகவல் கிடைக்கும் போது அது தரும் குற்றவுணர்வில் கரைந்து அழுகிறான். அதற்கும் கூட ஒரு சினிமாப்பாடல்தான் உதவுகிறது.

பிறகு நின்று போகும் ஒரு திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணிபுரியும் நாகராஜ், ஏதோ ஒரு உற்சாகமான மனநிலையில் ஊரிலிருக்கும் அண்ணன் மகனுக்கு சைக்கிள் வாங்கி வருவதாக தொலைபேசியில் வாக்களித்து விடுகிறான். தானே நண்பர்களிடம் ஒண்டிக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியில் அது சாத்தியமாகாமல் போகும் போது அண்ணன் மகனை  எதிர்கொள்ள முடியாமல் ஒவ்வொரு சமயத்திலும் அவமானத்தால் கூனிக்குறுகுகிறான்; ஊருக்குப் போகாமல் தவிர்க்கிறான்.  'சித்தப்பாவிடம் சைக்கிள் கேட்காதே' என்று சிறுவனது அப்பா அவனை அடிக்கிறார். 'கேட்பேன்' என்று அடம்பிடிப்பான் சிறுவன். பின்பு 'இனிமே சைக்கிள் கேட்க மாட்டேன்' என்று பரிதாபமாக கூறி விட்டு ஓடிப் போவான். இந்தக் காட்சிக் கோர்வைகள் நன்றாக எழுதப்பட்ட ஒரு சுவாரசியமான  சிறுகதை போலவே பதிவாகியிருக்கிறது.  குடிப்பழக்கத்தால் மனைவியிடம் தொடர்ந்து அவமானப்பட்டு பிழைப்பதற்காக நகரத்திற்கு வரும் செல்லப்பாண்டியின் உறவினர் ஒருவர் மறுபடியும் தோற்ற மனிதராக ஊர் திரும்பி மீண்டும் அவமானப்படுகிறார். இப்படியாக சில இயல்பான மனிதர்களுடன் கூடிய கிளைக்கதைகள்.


இந்த கிளைக்கதைகளுள் மிக இயல்பாகவும் அழுத்தமாகவும் பதிவாகியிருப்பது செல்லப்பாண்டி வீடு கிடைக்காமல் அவதியுறும் பகுதிதான். நண்பர்கள் செய்யும் சச்சரவுகளால் பிழைகளால் அவன் ஒவ்வொரு முறையும் வீடு மாற நேரும் அவல நகைச்சுவை அதற்குரிய சுவாரசியத்துடன் இடம்பெறுகிறது. "மச்சான்.. ரூம்ல ஒரு பிரச்சினையாயிடுச்சு.. இன்னிக்கு ஒரு நாள் உன் ரூம்ல தங்கிக்கட்டுமா?" என்பதே இவர்களின் உரையாடலின் ஒரு பகுதியாக, ஏன் அந்த சமகால வாழ்வின் ஒரு பகுதியாகவே அமைகிறது. இந்த விஷயத்திலும் பணம் கடன் கேட்கும் விஷயத்திலும் ஒருவரையொருவர் இரக்கமேயின்றி தவிர்த்துக் கொள்கிறார்கள். அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் அவ்வாறு தவிர்க்க வைக்கின்றன. ஒருநாள் தங்கிக் கொள்ள வருகிறவன் இரண்டு ஆண்டுகளாக நகராமலிருப்பதும் போகிற போக்கில் ஒரு காட்சியில் நகைச்சுவையாக சொல்லப்படுகிறது.

ஓர் இரவு முழுவதும் உறங்குவதற்கு இடம் கிடைக்காமல் நள்ளிரவில் செல்ல பாண்டி அலையும் காட்சிகள் துன்பியல் கவிதை போலவே பதிவாகியுள்ளன. இயக்குநர் மருதுபாண்டி (இவர்தான் உண்மையான செல்லப்பாண்டி என்பதை எளிதாகவே யூகிக்க முடிகிறது) இலக்கிய ருசியறிந்தவராக இருக்கிறார். படம் துவங்கும் போது பல்வேறு கனவுகளுடன் நகரங்களை நோக்கி வருபவர்கள் தொடர்பாக அப்துல் ரகுமானின் கவிதையின் வரிகள் டைட்டில் கார்டின் பின்னணியில் ஒலிக்கின்றன. அதைப் போலவே, ஒரு சிக்கலான சூழலினால் வீட்டு உரிமையாளருக்கு தெரியாமல் தினமும் நள்ளிரவில் தனது அறைக்குச் சென்று உறங்குகிறான் செல்ல பாண்டி. அதற்காக அவர்கள் உறங்கும் வரை படிக்கட்டில் தவிப்போடு காத்திருக்கிறான். அப்போது பின்வரும் விக்ரமாதித்யனின் 'வீடு திரும்புதல்' கவிதையி் வரி, அவனது மன எதிரொலியாக மிகப் பொருத்தமாக பின்னணயில் ஒலிக்கிறது.
வீடென்பது இடமா / விரும்பும் மனமா / வீடென்றால், எல்லோருக்குமே அம்மா / ஊருக்குள் இருக்கிறது வீடு / வீட்டிற்குள் இருக்கிறார்கள் ப்ரியமானவர்கள் /  ப்ரியமானவர்களைத்தான்
தேடுகிறது உள்மனது / வீடு கிட்டத்தில் இருக்க வேண்டும் / வேண்டியவர்கள் பக்கத்தில் இருக்க வேண்டும் / வீடென்பது கனவு / வெளியென்பது எதார்த்தம் / வீடும் வெளியுமாய்த்தான்
விளங்குகிறது உலகம் / இங்கு எதற்காக வீடு திரும்ப வேண்டும் நாம்? / யார் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் நம்மை?

இந்தக் கவிதையின் கடைசி வரி இவ்வாறாக புலம் பெயர்ந்து பிரம்மச்சாரிகளாகவே தனிமையில் உழல்பவர்களுக்கானது. நாஞ்சில் நாடனின் அற்புதமான நாவலான 'சதுரங்க குதிரையின்' பிரதான பாத்திரமான நாராயணன்,  மனது முழுக்க ஊர் நினைவுகளோடு புலம் பெயர்ந்து மும்பையில் பணிபுரிவான். திருமணம் ஆகாமலே அவனுடைய ஆண்டுகள் கடந்து கொண்டிருக்கும். அலுவலத்திலிருந்து வீட்டிற்கு திரும்பும் தொலைவைக் கடக்கும் பல சமயங்களில் 'ஏன் வீட்டுக்குப் போக வேண்டும்' என்று அவனுக்கு துயரம் சார்ந்த சலிப்பாகவே இருக்கும். இந்தக் கவிதை அவ்வாறானவர்களை மிக நுட்பமாக பிரதிநிதித்துவப் படுத்துகிறது.

செல்ல பாண்டிக்கும் வீட்டு உரிமையாளர் பெண்ணுக்கும் ஏற்படும் காதல் அல்லாத ஆனால் காதல் மாதிரியும் தோன்றும் அந்த விநோதமான, மெல்லிய  உறவு 'சினிமாத்தனமே' இல்லாமல் அத்தனை அற்புதமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணும் அத்தனை இயல்பான தோற்றத்துடன் அற்புதமாக நடித்திருக்கிறார். 'பாலைவனச் சோலை' என்கிற திரைப்படத்தில் சந்திரசேகருக்கும் சுஹாசினிக்கும் ஏற்படும் பரஸ்பரம் சொல்லப்படாமலேயே உணர்த்தப்படுவது போன்ற 'மிக நுண்ணிய காதல்' நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் திரையில் சாத்தியப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறது. சினிமா திரைக்கதையை முயன்று கொண்டேயிருக்கும் செல்லப்பாண்டியாக பாபி சிம்ஹா மிக அற்புதமாக நடித்திருக்கிறார். உறங்க இடமின்றி அலையும் காட்சிகளிலும் வீட்டு உரிமையாளர் பெண்ணிடம் மனதிலேயே வளரும் அந்த மெல்லிய காதலையும் நண்பர்களின் சச்சரவுகளை எதிர்கொள்ளும் காட்சிகளிலும் தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஜிகர்தண்டாவின் மூலம் அவருக்கு கிடைத்திருக்கும் புகழ், இந்தப் படத்தை கவனிப்பதற்கு உதவியிருக்கிறது.

பெண்களுடன் நைச்சியமாக  பழகி உறவு கொள்பவனான கார்த்திக் அவ்வாறாக ஒரு பெண்ணை ஏமாற்ற முயலும் போது அவனுடைய நண்பர்கள் அவனுடைய சார்பில் உரையாடுவார்கள். பொதுவாக இம்மாதிரியான சித்தரிப்புகளின் போது அறம் சார்ந்து அவனுக்கு உபதேசிக்கிற நண்பர்கள் எவராவது அந்தக் காட்சியில் இயங்குவார்கள். ஆனால் நடைமுறை சார்ந்த இயல்பில் நண்பனின் பக்கம் தவறுதான் என்று நன்றாகத் தெரிந்திருந்தாலும் அவனைக் காப்பாற்றவே நண்பர்கள் முயல்வார்கள். அந்த மனோபாவத்தை அதன் இய்ல்பின் படியே  இயக்குநர் மிகச் சிறப்பாக பதிவாக்கியிருக்கிறார். சற்று தாமதமாகத்தான் தங்களின் தவறை உணர்ந்து அந்தப் பெண்ணிடம் அவர்கள் மன்னிப்பு கேட்கின்றனர்.

ஊரில் குடித்து சீரழிந்து மனைவியால் அவமானப்படும் செல்ல பாண்டியின் உறவினர் ஒருவர் (இயக்குநர் மருதுபாண்டி இந்தப் பாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார்) நகரத்திற்கு வருவார். சகஅறைவாசிகளில் ஒருவர் அவருடைய பரிதாப நிலையைக் கண்டு வாடகை ஏதும் தர வேண்டாம் என்று முதலில் சொல்வார். ஆனால் பிறகு ஓர் அற்பக்காரணத்திற்காக அவரை நுட்பமாக பழிவாங்க முயல்வார். மனித மனதின் அந்தரங்கமான இருண்மைகள் எந்த நேரத்தில் எதற்காக வெளிப்படும் என்பதில்தான் நம் கீழ்மைகளைக் கடக்கும் சவாலே உள்ளது. இது போன்ற நுட்பமான வெளிப்பாடுகள் இத்திரைப்படத்தின் காண்பனுபவத்தை சுவாரசியமாக்குகிறது. இரண்டு ஆண்களுடன் காதல் அடிப்படையில் பழகும் ஆனால் அதில் ஒருவனுக்கு முன்னுரிமை தரும் ஒரு பெண்ணின் உரையாடல் மூலம் 'சமகால காதலின்' விநோதமான முரண்களையும் இயக்குநர் போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார். அதைப் போலவே சினிமாத்தனம் அல்லாத பல இயல்பான முகங்களுடன் கூடிய உதிரியான பாத்திரங்கள் தத்தம் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றன. செல்ல பாண்டியின் உறவினர் மனைவியாக நடித்திருக்கும் பெண் கையாலாகாத கணவனைத் தண்டிக்கும் அந்த சிறு காட்சியிலேயே அத்தனை அற்புதமாக நடித்திருக்கிறார்.

'எல்லோரிடமும் நிச்சயம் ஒரு நல்ல கதை இருக்கும்' என்பார் எழுத்தாளர் சுஜாதா. அதைப் போலவே கிராமம் சார்ந்தும் இடம் பெயர்ந்த நகரம் சார்ந்தும் தமக்குள்ள அனுபவங்களை இயக்குநர் நுட்பமான காட்சிகளுடனும் அழகியலுடன் பதிவாக்கியுள்ளார் என்று தோன்றுகிறது. துண்டு துண்டாக நிற்கும் இந்த தருணங்கள் முழுமையாகவும் கோர்வையான திரைக்கதையாகவும் அமைந்திருந்தால் தமிழில் இதுவொரு குறிப்பிடத்தகுந்த திரைப்படமாகியிருந்திருக்கும். 

அம்ருதா - ஜூன் 2015-ல் வெளியான கட்டுரை. (நன்றி: அம்ருதா)

suresh kannan

No comments: