Wednesday, July 01, 2015

பருக்கை - வீரபாண்டியன் - சாமானியனின் இலக்கியம்திருமணம், பிறந்த நாள் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது உணவுப் பந்திகளில் பரிமாறும் இளைஞர்களின் முகத்தை நம்மில் எத்தனை பேர் கவனித்திருப்போம்? அவர்கள் சாப்பிட்டிருப்பார்களா என்று நம்மில் எத்தனை பேர் உள்ளுக்குள்ளாவது நினைத்திருப்போம்? பெரும்பாலும் இல்லை என்பதுதான் நேர்மையான விடையாக இருக்கும். இல்லை என்பது மாத்திரமல்ல, அவர்கள் செய்யும் சிறுதவறுகளை கூட மிகைப்படுத்தி 'ஏதோ தாம் அவமானப்படுத்தப்பட்டு விட்டதான'  தோரணையுடன் மிகையாக எதிர்வினையாற்றுபவர்களே அதிகம். கண்ணெதிரேயே பல்வேறு சுவையான உணவுகள் இருக்க,  பசியைக் கிளப்பும் அவற்றின் வாசனையோடு ஆனால் அவற்றை உண்ணவும் முடியாமல் உள்ளுக்குள் தகிக்கும் பசியோடு அவற்றுடனேயே பணியாற்றுவது என்பது எதிரிக்கு கூட தர விரும்பக்கூடாத தண்டனை. அனுபவித்தவர்களால்தான் அதன் கொடுமையை உணர முடியும்.

அவ்வாறாக பணிபுரிய நேர்ந்திருக்கும் படித்த இளைஞர்களின் அவல வாழ்வினைச் சொல்லிச் செல்கிறது வீரபாண்டியனின் 'பருக்கை' நாவல். நவீன தமிழ் இலக்கியம் இதுவரை அணுகாத வாழ்வியல் அனுபவத்தின் பதிவு இது என்று கருதுகிறேன். மன்னர்களின், ஜமீன்தாரர்களின், செல்வந்தர்களின் புகழுரைகளும் சாதனைகளுமே பெரும்பாலும் வரலாறாகவும் இலக்கியமாகவும் அவர்களே வரலாற்று நாயகர்களாக பிரதானமாக முன்நிறுத்தப்பட்டு பதியப்பட்டுக் கொண்டிருந்த வரலாற்று மரபில், சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்களின், புறக்கணிக்கப்பட்டவர்களின் அழுகையும் அலறலும் துயரமும் வாய்மொழி புலம்பல்களாக, நாட்டார் பாடல்களாக காற்றில் கரைந்து சொற்களாக உறைந்தது போக, ஆய்வாளர்களின் முயற்சியினால் எழுத்தாக பதிவானவை மிக சொச்சமே. 

இந்திய தேசம் காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்ட பிறகு நடுத்தர வர்க்கத்தினரும் கல்வி கற்க முடிந்ததில் அவர்களின் வாழ்வியல்  சார்ந்த அக/புறஅனுபவங்ளைச் சார்ந்த படைப்புகள் மலர்ந்தன. ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் சமூகத்தில் அவர்கள் உள்ள நிலையைப் போலவே இலக்கியத்திலும் புறக்கணிக்கப்பட்டார்கள். இந்த வகைமையில் ஜெயகாந்தன் போன்றவர்கள் முன்னோடிகளாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களின் சமூகத்திலிருந்தே எழுத வந்தது தொன்னூறுகளில்தான் சாத்தியமானது. 'தலித் இலக்கியம்' எனும் பிரத்யேக வகைமையும் பிறந்தது. 

***

வீரபாண்டியனின் 'பருக்கை' நாவல் பிரதானமாக சாதிய நோக்கில் அல்லாமல் வர்க்க வேறுபாட்டினால் அவதியுறும் இளைஞர்களைப் பற்றி பேசுகிறது.  சமூகத்தின் அடித்தட்டைச் சார்ந்த, கிராமத்து மற்றும் சிறுநகரத்து இளைஞர்கள் கல்விக்காக பெருநகரங்களுக்கு இடம்பெயரும் போது வசிப்பிடத்திற்காகவும் உணவிற்காகவும் அங்கு எதிர்கொள்ள நேரும் துயரங்களையும் கல்விக்கட்டணம் உள்ளிட்ட பல செலவுகளைச் சமாளிக்க பல்வேறு வகையான பகுதி நேரப் பணிகளை செய்யும் போது அடையும் அவலங்களையும் பற்றி விவரிக்கிறது. இந்த வகையில், இந்தப் புதினம், தமிழ் இலக்கியத்தின் முக்கியமான கோணம் மற்றும் பதிவு.

இந்தப் புதினத்தில் வரும் இளைஞர்கள் செய்யும் பகுதி நேரப் பணிகளில் பிரதானமாக இருப்பது 'கேட்டரிங்' எனப்படும் உணவுப் பரிசாகரப் பணி. இது ஏன் என்கிற காரணத்தை யூகிப்பது மிக எளிதானது. விடுதிகளில் கிடைக்கும் தரமற்ற, சுவையற்ற உணவுகளை வேறு வழியின்றி சகித்துக் கொள்ளும் இளைஞர்களுக்கு சுவையான உணவுகளை ருசிக்கும் அபூர்வமான தருணங்கள் இம்மாதிரியான பணிகளின் மூலம்தான் சாத்தியப்படும். எனவே முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமளவிற்கு இதற்கு அதிகம் வருவதற்கு இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அவ்வாறு உணவுன்பது நடைமுறையில் அத்தனை எளிதான விஷயமல்ல என்பது இந்த நாவலில் விவரிக்கப்படும் துயரமான சம்பவங்களின் மூலம் உணர முடிகிறது. அனைவரும் உண்டு முடித்த பிறகு கடைசியாகவே உணவருந்துவதற்கான வாய்ப்பு,  சமயங்களில் அதுவுமின்றி உணவு காலியாகிப் போவது, விருப்பமான உணவுகள் விரைவில் தீர்ந்து போவது, அதுவரை பசியை அடக்கிக்கொண்டிருந்த காரணத்தினால் பசி மரத்துப் போய் உணவின் மீதான ஆர்வம் குறைவது உள்ளிட்ட பல துன்பமான விஷயங்கள் அதில் நிகழ்கின்றன. பணிகளில் நேரும் தவறுகளுக்காக எதிர்கொள்ள வேண்டிய வசைகளும் அவமானங்களும், பணி செய்ததற்கான சம்பளம் கிடைப்பதிலுள்ள நிச்சயமின்மை போன்றவைகளையும் இந்த இளைஞர்கள் எதிர்கொள்ள நேர்கிறது.

இளைஞர்களின் பசியுணர்வும் உணவின் மீதான விருப்பமும் அது சார்ந்த ஏக்கமும் ஒரு மூர்க்கமான விலங்கைப் போலவே உள்ளார்ந்து இந்த நாவலின் பெரும்பாலான பகுதிகளை ஆக்ரமித்துக் கொண்டு உலவுகிறது. நல்ல உணவிற்கான வேட்கையும் அலைச்சலும் இந்த நாவலில் தொடர்ந்து விவரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. நன்றாக உணவருந்தி கொண்டாட வேண்டிய வயதில் அது கிடைக்காத ஏக்கத்துடன் அலைவது கொடுமை. இளமையில் வறுமை கொடிது. கேட்டரிங் பணிக்காக செல்லும் போது டீலக்ஸ் பேருந்தின் அதிக கட்டணத்திற்காக தயங்கி சாதாரண பேருந்திற்காக காத்திருப்பது போன்ற பல குறிப்புகள் அவர்களின் வறுமையைச் சொல்கின்றன. ஆனால் இவை வாசகனிடமிருந்து அனுதாபத்தைக் கோரும் நோக்கில் அல்லாமல் இளைஞர்களுக்கேயுரிய உள்ள நையாண்டியோடும் நகைச்சுவைத்தன்மையோடும் பதிவு செய்யப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. ஆங்காங்கே வெளிப்படும் சமூகவிமர்சனங்களுடன் அமைந்த உரையாடல்களும் கவனிக்கத்தக்கது. இந்தப் புதினத்தில் இயங்கும்  இளைஞர்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அதனினும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளையும் வசதிகளையும் பற்றி புகார் கலந்த பெருமூச்சுடன் வரும் ஓர் உரையாடல் குறிப்பும் அதை இன்னொரு நபர் மறுத்து அதன் சமூகநீதி சார்ந்த தேவையை வலியுறுத்தும் பதிலுமாக சமநிலைத்தன்மையுடன் பதிவாகியிருக்கிறது. ஒட்டு மொத்த புதினத்தின் தொனியே ஒரு தனிநபரின் டைரிக்குறிப்புகளைப் போன்ற எளிமையான மொழியுடனும் விவரணைகளுடன் அமைந்துள்ளது. ஒருவகையில் அதுவே இதன் பலவீனமும் கூட. விமர்சன மரபு சார்ந்து எவ்வித சலுகையும் அல்லாமல் கறாரான பார்வையுடன் அணுகினால் இதன் மொழி, கட்டுமானம், அமைப்பு போன்றவை எவ்வித திட்டமிடலும் இல்லாமல் கால் போன போக்கில் செல்லும் பாதை போல மேம்போக்கான பிரதியாக உருவாக்கப்பட்டுள்ளது. என்றாலும் இந்தச் சமூகத்தில் உருவாகி வந்திருக்கும் எழுத்து என்கிற காரணத்தினாலேயே இது வரவேற்கப்பட வேண்டிய அவசியத்தையும் கொண்டிருக்கிறது. அடுத்த முறை எந்த விருந்திற்காவது செல்லும் போது அங்கு உணவு பரிமாறும் இளைஞர்களின் முகங்களை சில நிமிடங்களாவது கவனிக்க வைக்கும் தூண்டுதலை இந்த நாவல் ஏற்படுத்தியிருப்பதே இதன் வெற்றி எனலாம்.

சாகித்ய அகாதமியின் 'யுவ புரஸ்கார்' விருது பெற்றிருக்கும் நூலாசிரியர், வீரபாண்டியனுக்கு வாழ்த்துகள். இவரிடமிருந்து மேலதிகமாக இன்னமும் ஆழமான அனுபவங்களையும், சமூக நோக்கு சார்ந்த படைப்புகளையும் எதிர்பார்க்க முடியும் என்கிற நம்பிக்கையை இந்த நூல் தந்திருக்கிறது. இந்தப் புதினத்தின் விற்பனை வாய்ப்பு, அது சார்ந்த வணிகம் ஆகியவற்றையெல்லாம் கவலைப்படாமல் இந்த நாவல் உரையாடும் களத்திற்காகவும் அதன் உள்ளடகத்திற்காகவும் வெளியிட்ட பரிசல் செந்தில்நாதனை பாராட்ட வேண்டும். இந்த நூலை அன்புடன் பரிசளித்த நண்பர் கே.என்.சிவராமனுக்கு நன்றி.

பருக்கை
வீரபாண்டியன்
பரிசல் புத்தக நிலையம், எம்.எம்.டி.ஏ. காலனி, சென்னை-106
விலை : ரூ.160
கைப்பேசி : 9382853646 suresh kannan

No comments: