Tuesday, October 21, 2008

மனுஷ்யபுத்திரனால் ரூ.50/- பிழைத்தது

ஒரு கால கட்டத்தில் ஆர்வமாக சேர்த்த தீபாவளி மலர்கள் நாளடைவில் (அதாவது வருடடைவில்) இதனுடைய ஒரேமாதிரியான template-களின் காரணமாக சலிப்பை ஏற்படுத்தின. மேப்லித்தோ பேப்பரில் பளபளவென்ற வண்ணங்களில் அம்மன், முருகன், பாபா படங்கள், காஞ்சி சாமியார் வகையறாக்களின் அருளுரைகள், தீபாவளி சம்பந்தப்பட்ட அசட்டு ஜோக்குகள் (மாமனார் வீட்டிற்கு வரும் மருமகன்), தீபாவளியை எப்படி கொண்டாடுவேன் என்று நடிகர், நடிகையர்களின் வழவழா பேட்டிகள், வழக்கமான கழிசடை எழுத்தாளர்களோடு இடைநிலை இதழ்களிலும் சிற்றிதழ்களிலும் மாத்திரமே புழங்கும் எழுத்தாளர்களின் சிறுகதைகள் (தெவச சாப்பாடு போல இவர்களை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அழைப்பார்கள். அதிலும் அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி ரேஞ்ச் மட்டும்தான். கோணங்கி போன்றவர்களெல்லாம் யாரென்று பத்திரிகை ஆசிரியர்களுக்கே தெரியுமோ, என்னவோ), இன்னும் பல அசட்டுத்தனங்களுடன் தலையணை சைஸிலும் பேசாமல் ஒரு குவார்ட்டரும் சைட்டிஷ்-ம் வாங்கியிருக்கலாமோ என்று எண்ண வைக்கும் விலையிலும் வரும். எனவே வெடிச் சத்தத்தைப் போலவே தீபாவளி மலர்களும் அலர்ஜியை ஏற்படுத்தும் லிஸ்டில் எப்பவோ சேர்ந்து விட்டது.

என்றாலும் டைம்ஸ் ஆ·ப் இந்தியா பத்திரிகை ஒரு சிறப்பு இதழை ஜனவரி 08-ல் வெளியிட்ட போது அதை வாங்க எனக்கு ஒரே காரணம்தான் இருந்தது. தொகுப்பாசிரியர்: சுஜாதா. அவரின் இலக்கிய மதிப்பு அல்லாத எழுத்துக்களைக் கூட அதனுடைய சுவாரசியம் கருதியும் அவ்வாறு எழுதுவதின் கற்றல் கருதியும் தவறாமல் வாசிப்பதுண்டு. நான் எழுதுவதில் ஒரு சதவீத சுவாரசியமும் உபயோகமும் இருந்தாலும் அதற்கு காரணம் அந்த ஆசான்தான்.

அந்த இதழ் பெரும்பாலும் வெவ்வேறு இலக்கிய படைப்பாளிகளைக் கொண்டு மனுஷ்யபுத்திரனின் உதவியோடு சுவாரசியமாக அமைந்திருந்தது. அதைப் பற்றி எழுதின பதிவு இங்கே.

Photobucket

இந்த வருடம் டைம்ஸ் ஆ·ப் இந்தியாவும் தீபாவளி மலரை வெளியிட்டிருக்கிறது. மேலோட்டமாக சுஜாதா, மனுஷ்யபுத்திரன் பெயர்களை பார்த்தவுடன் என்ன ஏதென்று விசாரிக்காமல் வாங்கிவிட்டேன். பிறகு சாவகாசமாக வீட்டில் புரட்டிப் பார்க்கும் போது "தீபாவளி கொண்டாட்டம்" பற்றி த்ரிஷா வகையறா நடிகைகளின் பேட்டிகளையும் புகைப்படங்களை பார்த்த மாத்திரத்தில் திடுக்கிட்டு உள்ளடக்கத்தை அவசரமாக மேய்ந்தேன்.

இந்த இதழின் சிறப்பாசிரியராக 'ஆய்' மதனை டைம்ஸ் அழைத்திருக்கிறது. மேலட்டையிலேயே பிரசுரமாகியிருந்த இதை கவனிக்கத் தவறிவிட்டேன். இதழின் தரம் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் - 'அனுராதா ரமணனின் சிறுகதை ஒன்று பிரசுரமாகியிருக்கிறது'. இது போதுமென்று நினைக்கிறேன்.

ஜெயமோகன், சா.கந்தசாமி என்று சில ரத்தினங்களும் உள்ளன. சமீபத்தில் மேற்கொண்ட பயணத்தில் காசியில் ஏற்பட்ட அனுபவத்தை பிய்த்து சுத்தியலால் ஆங்காங்கே தட்டி தந்துள்ளார் ஜெயமோகன். ஏற்கெனவே வாசித்த இணைய வாசகர்கள் அல்லாதவர்களுக்கு நிச்சயம் இது நல்ல வாசிப்பனுபவத்தை தரும்.

'தமிழ் வலைப்பூக்கள் பற்றி' இளங்கோவன் எழுதிய கட்டுரையை பார்த்தவுடனே 'அட நம்ம ஏரியாவாச்சே' என்று ஆவலாக பாய்ந்தேன். வலைப்பூ எழுதினால் போலீஸ் புடிச்சுக்கும் என்று பயங்காட்டியிருந்தவர், சர்வீஸ் கமிஷன் பரிட்சை மாதிரியான ஒரு கேள்வித்தாளையும் பிற்பகுதியில் போட்டு எரிச்சலடைய வைத்திருந்தார்.

என்னடா இது, ரூ.50/-க்கு ஒரு பியராவது அடித்து குப்புறப்படுத்து தூங்கியிருக்கலாமே என்றெழுந்த எண்ணத்தை மாற்றியமைத்தது மனுஷ்யபுத்திரன் 'சுஜாதா' பற்றி தொகுத்திருந்த இணைப்பு. சுஜாதா என்கிற ஆளுமையின் பல்வேறு பக்கங்களிலிருந்து துறை வாரியாக சாம்பிள் தந்திருக்கிறார். கணையாழியின் கடைசிப்பக்கங்கள், கமலுடன் ஒரு சந்திப்பு, தமிழில் போர்னோ, சுஜாதாவின் பேவரைட் ஸ்ரீரங்கம், தேவன் வருகை சிறுகதை, பெங்களுர், சத்யஜித்ரே சினிமா.... என்று சுஜாதா பல்வேறு காலகட்டத்தில் எழுதின படைப்புகளிலிருந்து சிறந்த மாதிரிகளை தேர்ந்தெடுத்து தொகுத்திருக்கிறார் ம.பு.

சுஜாதாவின் தீவிர வாசகர்கள் இவைகளை ஏற்கெனவே படித்திருப்பார்கள் என்றாலும் என்னுடைய அனுபவம் போல் சிறந்ததொரு nostalgia-வை அவர்களுக்கு இவை வழங்கும் என நம்புகிறேன். சுஜாதாவை ஒரளவே அறிந்திருக்கிற இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பு. அவர் தமிழ் உரைநடையில் ஏற்படுத்தியிருக்கிற அபாரமான பாதிப்பு பற்றி இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

இந்த ஒரு காரணத்திற்காகவே இந்த மலரை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். இந்த மலரின் பெரும்பகுதியை ஏற்கெனவே குறிப்பிட்ட தீபாவளி மலர்களின் template-களின் சம்பிரதாயம் கெடாமல் தொகுத்திருக்கிற சிறப்பாசிரியர் மதனின் பங்களிப்பு பற்றி சுஜாதாவின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமெனில் 'அவரைப் பசித்த புலி தின்னட்டும்"

suresh kannan

8 comments:

Ramesh said...

Where can I buy it? Is it available online?

பிச்சைப்பாத்திரம் said...

//Where can I buy it? Is it available online?//

ரமேஷ்: இது இணையத்தில் கிடைக்கிறதா என்பது பற்றி தெரியாது. இல்லை என்றுதான் நினைக்கிறேன். பெரிய புத்தகக்கடைகளிலும் ரயில்நிலைய புத்தகக்கடைகளிலும் கிடைக்கும்.

முரளிகண்ணன் said...

nice review

Krishnan said...

I have been relishing your posts. To me, it sounds very honest and straight from your heart.

I missed out the earlier Times of India malar edited by Sujatha, any chance of getting it now anywhere ?

Going by your review, feel it is okay spending Rs. 50 on this Deepavali special.

My Deepavali wishes to you and your family.

anujanya said...

//(தெவச சாப்பாடு போல இவர்களை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அழைப்பார்கள். அதிலும் அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி ரேஞ்ச் மட்டும்தான். கோணங்கி போன்றவர்களெல்லாம் யாரென்று பத்திரிகை ஆசிரியர்களுக்கே தெரியுமோ, என்னவோ), //

:)))

வெகுஜன எழுத்தாளர்கள் பாவம். விட்டு விடுங்கள்.

அனுஜன்யா

Dr.Rudhran said...

should be said very loud

Unknown said...

//இதழின் தரம் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் - 'அனுராதா ரமணனின் சிறுகதை ஒன்று பிரசுரமாகியிருக்கிறது'. இது போதுமென்று நினைக்கிறேன்//

:-))

As you have mentioned, Times Now spl edition by Sujatha was fantastic.Dono abt this one.Tnx for the Intro,will try to read this.

enRenRum-anbudan.BALA said...

//இதழின் தரம் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் - 'அனுராதா ரமணனின் சிறுகதை ஒன்று பிரசுரமாகியிருக்கிறது'. இது போதுமென்று நினைக்கிறேன்.
//
ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு குசும்பு ஆகாது ;-)