Wednesday, February 24, 2010

(ராம் கோபால்) வர்மாவிற்கு வயதாகி விட்டதா?

என்னை வெறுப்படையச் செய்யும் சமாச்சாரங்களில் தெலுங்கு டப்பிங் படங்களு்க்கு பிரதான இடமுண்டு.  (ஜெயமாலினியின் சாகச உடலமைப்பிற்காகவும் நடனத்திற்காகவும்  சமயங்களில் அவற்றை சகித்துக் கொள்வேன்). ஆனால் அப்படியான படங்களில் ஒன்றை பார்த்து பிரமித்து அமர்ந்திருந்த ஆச்சரியமும் வர்மாவின் முதல்படமான ‘உதயம்’ (தெலுங்கில் ‘ஷிவா’) மூலம்.நிகழ்ந்தது,  இதே மாதிரியான இந்தித் திரை அனுபவம் ‘ரங்கீலா’வின் மூலம் நிகழ்ந்ததும் அதன் இயக்குநரும் வர்மா என்பதும் தற்செயலான ஆச்சரியம். அதிலிருந்து RGV என்றழைக்கப்படும் ராம் கோபால் வர்மாவின் உருவாக்கங்களை மிக ஆவலுடன் எதிர்பார்க்கத் துவங்கினேன்.


கதை சொல்லும் பாணியையும் காட்சிக் கோணங்களையும் ஒளி அமைப்பையும், வசனங்களைக் குறைத்து நுட்பமான முகபாவங்களின் மூலம் செய்தியை உணர்த்தும் ஹாலிவுட் பாணியையும் தன்னுடைய உருவாக்கங்களில் நுழைத்துக்  கொண்டு இந்திய சினிமாவின் முகத்தையே சற்று மாற்றியமைத்தவர் என்று வர்மாவை உறுதியாகச் சொல்லலாம். இதை முன்பே ஒரளவிற்கு மணிரத்னம்  நிகழ்த்திவிட்டார் என்றாலும் அவரின் நீட்சியான வர்மா பல அடிகள் தாண்டியிருக்கிறார். குறிப்பாக நிழல் உலக மனிதர்களையும் அவர்களின் அரசியல் தொடர்புகளையும் யதார்த்தத்திற்கு மிக அருகாக நின்று சித்தரித்திருந்ததை ஒரு சாதனையாகவே சொல்லலாம். வணிக ரீதியாக பல தோல்விப் படங்களை தந்திருந்தாலும் கேளிக்கை சார்ந்த திரைஉருவாக்க இயக்குநர்களில் வர்மாவின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது. சத்யா, கம்பெனி, நிஷப்த், சர்க்கார், சர்க்கார் ராஜ்.... போன்றவை என்னளவில் நல்ல உருவாக்கங்கள். கறுப்பு மேஜிக்கை ஆதரிக்கும் பூங்க் உள்ளிட்ட பல படங்கள் எரிச்சலூட்டுபவை என்றாலும் வர்மாவின் மீதான நேசம் குறையவில்லை.

எதற்காக இவ்வளவு பில்டப் என்றால், வர்மாவின் சமீபத்திய திரைப்படமான RANN பார்த்தேன். (போர் அல்லது போர்க்களம் என்று அர்த்தம் கொள்ளக்கூடியது). இப்படியொரு சொதப்பலை வர்மாவினால் எப்படி செய்ய முடிந்தது என்று ஆச்சரியமாக இருந்தது. (இந்த இடத்தில் இடுகையின் தலைப்பை வாசிக்கவும்).

()

'சில பத்திரிகைச் செய்திகளுக்கும் அதன் உண்மைத்தன்மைக்கும் உள்ள இடைவெளி மிக தூரம்' என்பதை என்னுடைய பதின்மத்திலேயே தெரிந்து கொள்ள நேர்ந்தது என்னுடைய அதிர்ஷ்டமா அல்லது துரதிர்ஷ்டமா என்று தெரியவில்லை.

எங்கள் வீட்டுத் திண்ணையில் தண்டபாணி அண்ணன் எப்போதும் ஒரு ஜமாவுடன் அமர்ந்திருந்து எம்ஜிஆர் பாடல்களை உற்சாகமாக பாடிக் கொண்டிருப்பார். ஒழிந்த நேரங்களில் ஆடுபுலிஆட்டமும் ரம்மியும். அதுவும் சலித்துப் போன நேரங்களில் தன்னுடைய வீரதீர பராமரக்கிங்களை நிறைய மசாலா சேர்த்து சொல்லிக் கொண்டிருப்பது பெரும்பாலும் பொய் என்று தெரிந்தேயிருந்தாலும் நானும் ஓரத்தில் அமர்ந்து வாயைத் திறந்து ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருப்பேன். என்னுடைய ஆளுமை உருவாக்கத்தில் தண்டபாணி அண்ணனின் கூறுகளும் இருக்கலாம். அப்படியாப்பட்டவர் ஒரு பகல் வேளையில் நடுத் தெருவில் வைத்து கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டார். மாலை பள்ளியிலிருந்து திரும்பியதும்தான் இந்த அதிர்ச்சியான செய்தி எனக்குத் தெரிய வந்தது. ஊர்த்தலைவரின் உறவினர் பெண்ணொருத்தி தண்டபாணி அண்ணனை விழுந்து விழுந்து காதலித்ததும் வேறு வழியின்றி இவரும் அதை ஏற்றுக் கொண்டதையும் தொடர்ந்து கொலை மிரட்டலும் லேசுபாசாக எழுந்திருக்கிறது. 'அவ்வாறெல்லாம் நடக்காது, திருமணத்தை நடத்திக் கொண்டால் சரியாகிவிடும்' என்று அலட்சியமாக இருந்தவர் எதிர்பாராத தருணத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்.

ஆனால் மாலைப் பத்திரிகைகளில் இந்த சமாச்சாரங்களின் தடயமே இல்லாமல் ஏதோவொரு சில்லறைத்தகராறில் ஏதோவொரு இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்டார் என்றிருந்ததை வாசிக்க எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும்  இருந்தது. அதற்குப் பின்னாலும் கூட உண்மை வெளிவரவில்லை. ஊர்த்தலைவருக்கு இருந்த அரசியல் செல்வாக்கு இதை சாதித்திருக்கிறது.

ஆக... எங்கள் பகுதி மக்களுக்கு அந்தச்  சம்பவத்தின் உண்மையான பின்னணி தெரிந்திருக்க.. மற்றவர்கள் பத்திரிகையில் வந்திருந்தைத்தான் நம்ப வேண்டிய கட்டாயம். ஒரு சாதாரண குற்ற நிகழ்விற்கே இந்தக் கதி என்றால், மிகப் பெரிய குற்றங்களை ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள் எந்த அளவிலான நம்பகத்தன்மையோடு வெளிப்படுத்தும் என்கிற சந்தேகம் பொதுப்பரப்பில் தோன்றி நிறைய மாமாங்களாகிவிட்டது.

இந்த பழைய சமாச்சாரத்தைத்தான் வர்மாவின் Rann திரைப்படம் நவீன மொழியில் பேசுகிறது. ஊடகங்கள் பெருகிவிட்ட இன்றைய சூழ்நிலையில் போட்டி காரணமாகவும் இருப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்காகவும் பணத்திற்காகவும் அரசியல்வாதிகளோடும் தொழிலதிபர்களோடும் கைகுலுக்கி செய்திகளை 'உருவாக்கும்' அபாயத்தில் ஈடுபட்டால் பொதுமக்கள் நிஜத்தை எங்குதான் கண்டு கொள்வார்கள் என்கிற ஆதாரக் கேள்வியை முன் வைக்கிறது.


விஜய் மாலிக் (அமிதாப் பச்சன்) ஒரு நேர்மையான செய்தி சானலின் தலைவர். செய்திகளை அதன் நம்பகத்தன்மையோடு மக்களுக்கு தருவதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாதவர். வணிகப் போட்டியில் பின்தங்கியிருந்தாலும் இதன் நேர்மை காரணமாகவே இந்தச் சேனல் மக்களிடம் நற்பெயரை பெற்றுள்ளது. அமெரிக்காவிலிருந்து திரும்பியிருக்கும் இவரது மகனான ஜெய்க்கு (சுதீப்) ஊடகம் என்பது இன்னுமொரு வியாபாரம். லாபம் என்பதுதான் அதன் நிகர செயல்பாடாக இருக்க வேண்டும் எனக் கருதுகிறான். ஆனால் கண்டிப்பான தந்தையைத் தாண்டி எதையும் செய்துவிட முடியவில்லை.

இந்நிலையில் அவரது மைத்துனனின் சதியாலோசனைப்படியும் கெட்ட அரசியல்வாதியான (அரசியல்வாதி என்றாலே நல்லவர் எவர் இருக்க முடியும் என்று கேட்டால் என்னிடம் பதிலில்லை) மோகன் பாண்டேயின் (பரேஷ் ராவல்) வழிநடத்துதலின்படியும் அப்போதைய நேர்மையான பிரதமருக்கு எதிரான ஒரு சதிச் செய்தியை செயற்கையாக உருவாக்கி தன்னுடைய சேனலில் ஒளிபரப்புகிறான். தந்தையையும் எப்படியோ இதை நம்ப வைத்துவிடுகிறான். இதன் காரணமாக அடுத்த தேர்தலில் கெட்ட அரசியல்வாதி பிரதமராகி விடும் சூழ்நிலையை உருவாக்குகின்றனர்.

அந்த சேனலில் பணிபுரியும், அமிதாப்பை தன்னுடைய ஆதர்சமாகக் கொண்டிருக்கும் இளம் செய்தியாளர் பூரப் சாஸ்திரி (ரிதேஷ் தேஷ்முக்) இந்தச் சதியை அமிதாப்பிடம் துப்பறிந்து வெளிப்படுத்துவதும் தன்னுடைய தவற்றைத் தாமதமாக தெரிந்து கொண்ட அவர் மக்களிடம் எல்லாவற்றையும் ஒப்புக் கொண்டு நேரலையில் மன்னிப்பு கேட்பதுமாக படம் நிறைகிறது.

சத்யா, கம்பெனி போன்ற அற்புதங்களை நிகழ்த்தின வர்மாவா, ஒரு ஹை-பட்ஜெட் டெலிபிலிம் போன்றிருக்கும் இந்தத் திரைப்படத்தை இயக்கினார் என்று ஆச்சரியமாக இருந்தது. வர்மாவின் வழக்கமான சாகசத்தினால் திரைக்கதையை ஒரளவிற்கு சகித்துக் கொண்டாலும் பல தர்க்கத் துவாரங்களுடன் இருக்கும் கதையின் பலவீனமான அஸ்திவாரம் காரணமாக எதையுமே ரசிக்க முடியவில்லை. பல வருடங்களாக செய்தித் துறையில் இருக்கும் அமிதாப்பால் எப்படி அந்த பொய்ச் செய்தியை நம்பி ஒளிபரப்ப முடிந்தது என்ற கேள்வியில் துவங்கி அந்தச் சேனலின் போட்டிக்காரரான அம்ரிஷ் கக்கர் தான் பெற்ற ஐந்நூறு கோடி ரூபாயை இப்படியா வெளிப்படையாக ஒப்புக் கொள்வார் என்பது முடிய பல கேள்விகள் தொடர்ந்து தலையில் சுற்றிக் கொண்டேயிருந்ததால் இந்தப் படத்தால் ஒரு நல்ல அனுபவத்தை எனக்குத் தர இயலவில்லை என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியும்.

பரேஷ் ராவலின் ஒப்பனை எரிச்சலைத் தந்தாலும் அவரின் அலட்டாத நடிப்பு நிறைவைத் தருகிறது. ஒரு நனைந்த எலி போலவே அமிதாப் இந்தப்படத்தில் உலவுகிறார். விஜயகாந்த் பட ரேஞ்சிற்கு கிளைமாக்சில் அவர் பேசும் நீண்ட வசனம் கொட்டாவியை வரவழைத்தாலும் சில முகபாவங்களில் அவருடைய இத்தனை வருட சாதனையின் ரேகையைக் கண்டு கொள்ள முடிகிறது. Stay tuned, Please dont goaway என்று குரோர்பதியில் நிமிடத்திற்கு ஒரு முறை சொன்னவரே இதில் ஊடகங்கள் பார்வையாளர்களை தக்கவைத்துக் கொள்ள செய்யும் அநியாயங்களையும் அபத்தங்களையும் பட்டியலையிடுவதைக் காணும் போது சம்பந்தம் இல்லாவிட்டாலும் அதிலுள்ள நகைமுரணை யோசிக்க சுவாரசியமாக இருக்கிறது.

செய்தி தொகுப்பாளர்கள் செய்யும் கோணங்கித்தனங்களை எதிரொலித்துக் காட்டியிருக்கும் ராஜ்பால் யாதவ்வின் நகைச்சுவையான நடிப்பு குறிப்பிடத்தகுந்தது. நீத்து சந்திராவை பார்வையாளர்கள் ரசிக்க அனுமதிக்காமல் வெறுமனே தலையை மாத்திரம் காட்டும் காட்சிகளில் (?!) உபயோகப்படுத்தியிருப்பது வர்மாவின் ரசனையின்மையைக் காட்டுகிறது. :-)

வர்மாவின் ரசிகர்கள் சகவாச தோஷத்திற்காக வேண்டுமானால் ஒருமுறை பார்த்துத் தொலைக்கலாம் என்பதைத் தவிர இத்திரைப்படத்தில் வேறொன்றுமில்லை. 

suresh kannan

17 comments:

கானகம் said...

// பல தர்க்கத் துவாரங்களுடன் இருக்கும் கதையின் பலவீனமான அஸ்திவாரம் காரணமாக //

You mean logic holes?

if yes,

What a translation.. and accurate too

சென்ஷி said...

//ஒரு சாதாரண குற்ற நிகழ்விற்கே இந்தக் கதி என்றால், மிகப் பெரிய குற்றங்களை ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள் எந்த அளவிலான நம்பகத்தன்மையோடு வெளிப்படுத்தும்//

குற்றங்கள்ல சாதா, ஸ்பெசல்ன்னு இருக்குதுங்களா?

கே.என்.சிவராமன் said...

அன்பின் சுரேஷ்,

முதலிலேயே சொல்லிவிடுகிறேன்... 'RANN' பார்க்கவில்லை. எனவே இந்தத் திரைப்படம் குறித்து என்னால் மறுமொழியில் உரையாட முடியவில்லை.

ஆனால்,

இந்த இடுகையின் தலைப்பு 'ஷாக் வேல்யூ'வை கருத்தில் கொண்டு வைத்திருப்பதாக கருதலாமா?

ஒரு படைப்பாளி அல்லது கலைஞன் அல்லது தொழில்நுட்ப வல்லுநன், தன் ஆயுசு முழுக்க 'நல்ல'வற்றை மட்டுமே தர வேண்டும் என எதிர்பார்ப்பது சரியாகப்படவில்லை. 'குப்பைகளை'யும் சேர்த்தே எவன் உற்பத்தி செய்கிறானோ அல்லது படைக்கிறானோ அவனே கலைஞனாக அல்லது படைப்பாளியாக அல்லது தொழில்நுட்ப வல்லுநனாக இருக்க முடியும்.

படைப்பாக்கத்தின்போது அவனுக்குள்ளும் குரங்கு சேஷ்டைகள் எட்டிப் பார்க்கும். சறுக்கல் நிகழும். மனச்சோர்வில் அலைவான். அதற்காக வயதாகிவிட்டது... தூர போ என்பதான தொனி சரியா?

இந்த இடுகையையே எடுத்துக் கொள்வோம்.

ஆர்ஜிவிக்கு வயதாகிவிட்டது. அதனால் அவரது மூளை வேலை செய்யவில்லை என்பதான தீர்ப்பு நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் இதை எழுதியிருக்கும் நீங்களும் வாசிக்கும் நாங்களும் இளமையானவர்களா?

எனில், 'வயதை' தீர்மானிப்பவர்கள் யார்?

வயதுக்கும் இதுபோன்ற 'மூளை வேலை செய்யவில்லை' என்பதான தொனிக்கும் தொடர்பு உண்டா?

நாளையே இதே ஆர்ஜிவி உங்களுக்கு அணுக்கமான படத்தை இயக்கினால், இந்தத் தீர்ப்பு வாபஸ் ஆகுமா?

எந்தவொரு படைப்பாளி அல்லது கலைஞன் அல்லது தொழில்நுட்ப வல்லுநனின் முழு திறமையையும் ஒரு படைப்பை வைத்து முடிவு கட்டிவிட வேண்டாம் என்று சொல்வதற்காகவே இவ்வளவையும் சொல்ல நேர்ந்தது.

தவிர, ஆர்ஜிவி நடத்துவது இந்தி சினிமா கமர்ஷியல் உலகில் ஒருவகையான யுத்தம்.

கரண்ஜோகர் - யாஷ் சோப்ரா வகையறாக்களுக்கு எதிரான போர் இது. அதிக பட்ஜெட் - வெளிநாட்டு லோகேஷன் - ஆர்ட்டிஸ்ட் வேல்யூ - நீண்ட வருடங்கள் படப்பிடிப்பு - என்பதான அபத்தத்தையும், 'குடும்பம்', 'காதல்' வகையறா கதைக்களுக்கு மாற்றாகவும் ஆர்ஜிவி போராடி வருகிறார்.

இந்தப் போராட்டத்தில் சோர்வு ஏற்படுவதும், தற்காலிக தோல்வி கிடைப்பதும் இயல்பே.

அதற்காக யுத்தம் முடிந்துவிட்டதாக அறிவிப்பது சரியில்லை...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

karthi said...

Through JMs webpage , i came your site.

I have not seen this film. but the film got good reviews from critics except the media.
we should appreciate this idea
"நீத்து சந்திராவை பார்வையாளர்கள் ரசிக்க அனுமதிக்காமல் வெறுமனே தலையை மாத்திரம் காட்டும் காட்சிகளில் (?!) உபயோகப்படுத்தியிருப்பது வர்மாவின் ரசனையின்மையைக் காட்டுகிறது. :-)"

Strongly object this... i think you forgot how RGV stripped Nisha kothari, urmila,antara mali..

சைவகொத்துப்பரோட்டா said...

பட விமர்சனத்தை விட, நீங்கள் சொன்ன உண்மைச்சம்பவம் அதிர்ச்சியாகத்தான்
இருக்கிறது.

இரும்புத்திரை said...

இந்த பதிவில் நன்றாக ஜல்லி அடித்து இருக்கிறீர்கள்.உங்களுக்கும் வயதாகி விட்டதா அப்பா மகனை நம்ப மாட்டாரா.அதுவும் தொழில்வாரிசாக போகும் மகனை.

Subbaraman said...

Good comment, Sivaraman sir.

Prasanna Rajan said...

’லோலிட்டாவை’ பார்த்து கவரப்பட்டு தான் ‘நிஷப்த்’ படத்தை எடுத்தார் RGV. அந்த படத்திற்கு ‘ரன்’ எவ்வளவோ பரவாயில்லை. ஏதோ ஒரு பேட்டியில் தன்னை வெளியுலகில் தலை காட்ட முடியாமல் வெட்கமடையச் செய்த படங்கள் அதிகம் என்று RGVயே சொல்லி இருக்கிறார்.

ஒரு படைப்பாளி தன் படைப்புலக வாழ்க்கையில் சறுக்குவது சகஜம். ஏன் நாளைக்கே RGV நல்ல திரைப்படம் ஒன்றைத் தரலாம். நீங்கள் அந்த படத்தைப் பற்றி புகழ்ந்து எழுதலாம். பெரும்பாலான இந்திய படைப்பாளிகள், 50 வயதை கடந்த காலத்தில் தான் நிறைவான படைப்புகளை தந்து உள்ளனர். வயதாகி விட்டது என்று சொல்வதெல்லாம் ஒரு வகையான தனிப்பட்ட தாக்குதல் என்றே சொல்வேன்.

ஏன் உங்களுக்கும் RGVக்கும் வாய்க்கால் தகராறா?

Anonymous said...

ஒரு பதினைந்து நிமிடம் கூட என்னால் இந்த
படத்தை உட்கார்ந்து பார்க்க முடியவில்லை
ஒரு முதிர்ந்த நடிகர் நடித்தும் கூட
நடிப்பில் ஒரு நாடாக தன்மை விட
மெதுவாக செயற்கை தன்ம்யுடன் நகர்வதாக
தெரிகிறது

suresh

ஆர்வா said...

கண்டிப்பா பார்க்கணும் சார். நல்லா எழுதி இருக்கீங்க

-தோழன் மபா, தமிழன் வீதி said...

என்னைப்போன்று படம் பார்க்காதவர்களுக்கு படம் பார்த்த திருப்தியை தந்தது உங்கள் விமர்சனம்.

கூடவே நீங்கள் சொன்ன உண்மை சம்பவத்தின், மொழி நடை நன்றாக இருந்தது சற்று அதிர்ச்சியாகவும் இருந்தது.

www.bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Anonymous said...

ராம் கோபால் வர்மாவின் முதல் படம் “க்‌ஷண க்‌ஷண” (தெலுங்கு), ஷிவா/உதயம் அல்ல.

Anonymous said...

மிகத் தாமதமாகவே இருந்தாலும், இது ஒரு பின்னூட்டமில்ல, ஒரு சந்தேகம் தான் என்பதாலும் கேட்கிறேன். “குறிப்பாக நிழல் உலக மனிதர்களையும் அவர்களின் அரசியல் தொடர்புகளையும் யதார்த்தத்திற்கு மிக அருகாக நின்று சித்தரித்திருந்ததை ஒரு சாதனையாகவே சொல்லலாம்.” எனக்குப் புரியாத விஷயம் என்னவென்றால், இந்த மாதிரி நிழல் உலகங்களில் எது எதார்த்தம் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? நேரடியான அனுபவம் இல்லையென்றாலும் அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பாவது பெற்றிருக்கிறீர்களா? இதற்கு முன் பல பேர்கள் இவ்வாறு சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ஏதோவொரு (சமீபத்தில் வந்த நூற்றுக்கனக்கான) மதுரை பக்கத்து கிராமம் சார்ந்த ஒரு படத்தைப் பார்த்து இவ்வாறான ஒரு கருத்தை மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் சொல்லப் படித்திருக்கிறேன். அந்த படத்தில் வந்தது எதார்த்தமா அல்லவா என்பதை விட பிரியதஷனுக்கு மதுரைப் பக்கத்து கிராமங்களில் இருக்கும் பரிச்சயம் தான் எனக்குக் கேள்வியாகப் பட்டது. அழகாகக் கதை சொன்னார் என்பதோடு விடப்படாதா? ஏனென்றால் மதுரைப் பக்கத்து, வெளியுலகத் தொடர்புகள் மிகச் சொற்பமான ஒரு கிராமத்துப் பின்னணி கொண்ட எனக்கு பெரும்பாலான, அது மாதிரிப், படங்கள் யதார்த்ததுக்கு சற்று தொலைவிலேயே நின்று சித்தரித்துள்ளதாகவே பட்டது. மதுரையைச் சுற்றி ஓரளவுக்கு அனைத்து வகையான கிராமங்களிலும் எனக்குப் பரிச்சயமுண்டு.

பிச்சைப்பாத்திரம் said...

அன்புள்ள அனானி,

சில வார்த்தைகளை தன்னிச்சையாகவே அதனின் ஆழமான பொருளை உணராமலேயே பயன்படுத்தி விடுகிறோம். அது போலத்தான் இது. நிச்சயம் தவறுதான். சினிமா நமக்குக் காண்பித்த சமூகச் சூழலையே முந்தைய படங்களில் பார்த்து அதிலிருந்து நாமாக ஒரு மாதிரி யூகித்துக் கொண்டு பிற்பாடான படங்களில் 'யதார்த்தமான காட்சி' என்று சொல்வது நிச்சயம் அபத்தம்தான்.

இன்னொரு பக்கமும் உண்டு. வடசென்னையில் வாழ்பவன் என்கிற முறையில் சில சில்லறை ரவுடிகளை நேரடியாக கூர்ந்து மேலோட்டமாக பழகி கவனித்திருக்கிறேன். அந்த மாதிரியான சில கூறுகளை வர்மாவின் படத்திலும் பார்த்ததும் 'யதார்த்தம்' என்கிற வார்த்தை வந்துவிட்டிருக்கும் என்று இப்போது யூகிக்கிறேன். ஆனால் இதுவே கிராமத்து சூழலை 'யதார்த்தம்' என்று குறிப்பிட்டிருந்தால் அதைவிட முட்டாள்தனமிருக்க முடியாது. ஏனெனில் நான் இதுவரை எந்தவொரு கிராமத்தையும் சாவகாசமாக கவனித்தில்லை.

வர்மாவின் படத்தை பார்த்து 'நிழல்உலக' மனிதர் 'த்தா... நம்மள அப்படியே எடுத்திருக்காண்டா" என்று சொன்னால்தான் அது யதார்த்தம் என்ற அர்த்தத்தில் வரும்.

பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே.

Anonymous said...

நண்பர் சுரேஷ்,

இனி இந்த விவாதத்தின் மூலத்தை விட்டு விடுவோம். ஆனால் இதில் மிகுந்த ஆசுவாசமான விஷயம் என்னவென்றால் இதனை நீங்கள் வெளிப்படையாக ஒத்துக்கொண்டதுதான். ”சில வார்த்தைகளை தன்னிச்சையாகவே அதனின் ஆழமான பொருளை உணராமலேயே பயன்படுத்தி விடுகிறோம். அது போலத்தான் இது. நிச்சயம் தவறுதான்.” - மிகச் சரி. அதே நேரத்தில், வட சென்னை வாசி, சில்லறை ரவுடிகளை நோக்கும் வாய்ப்பு எனபது கண்டிப்பாக கருத்தில் கொள்ளப பட வேண்டியது விஷயம் தான். விவாதம் ”இது அல்லது அது” என்று binaryயாக இல்லாமல் இருப்பது, நமது தமிழ் விவாதச் சூழலில் மிக அரிது.

நமது விவாதச் சூழலில் நான் அதிகமும் அவதானித்த விஷயம் என்னவென்றால், தங்களுடைய கருத்துக்கு எதிர்கருத்து எந்தவொரு பதிவராலும், அவர் எவ்வளவு ’மொக்கை’யாக எழுதியிருந்தாலும், வரவேற்கப்படுவதில்லை. வரவேற்கப்படாதது மட்டுமல்ல, மிகக் கடுமையான முறையில் எதிர் கொள்ளப்படுகிறது. நான் பெரும்பாலும் அனானியாகவே கருத்துக் கூற விரும்புவேன் (அதற்கு சொந்த காரணங்கள் உண்டு). எதிர்க் கருத்தென்றால் முதல் தாக்குதல் “ஏன் கோழை போல் அனானியாக் வருகிறாய்? நிஜ முகத்துடன் வா” என்று தான் அனைவருமே பதிலிறுப்பார்கள் (ஆனால் பெரும்பாலானவர்கள் சொந்தப் பெயரில் எழுதுவதில்லை என்பதை மறந்து விடுவார்கள்). கருத்தை (நியாயமாக) மறுத்தோ, விளக்கியோ அல்லது சப்பைக் கட்டியோ பதிலிறுக்க மாட்டார்கள். கருத்துக்குக் கடுமையான விமர்சனம் வந்து விட்டதே என்ற கோபம் தான் முதலில் வரும். உதாரணத்துக்கு - http://tharaasu.blogspot.com/2010/03/blog-post.html இந்த இடுகையையும் அதன் பின்னூட்டங்களையும் பாருங்கள். இது நான் கண்டதிலேயே கொஞ்சம் மிதமான அனானிக்கான பின்னுட்டம்.

ஆனால் ஒத்த கருத்துக்கு “அனானியாக வராமல் நிஜ முகத்துடன் வா” - என்று ஒருவரும் என்னைக் கூறியதில்லை. :)

Anonymous said...

அருமையான அலசல் நண்பரே..