கண்ணொளி அற்ற கதாபாத்திரங்கள் இயல்பாகவோ மிகையாகவோ இயங்கும் பல திரைப்படங்களை நாம் பார்த்திருக்கிறோம். தமிழ்த் திரைப்படங்களில் கமலின் ராஜபார்வை, விக்ரமின் காசி, 'அமர்க்களத்தின்' சார்லி பாத்திரம், 'நான் கடவுள்' அம்சவல்லி... போன்றவற்றை ஒரளவிற்கு குறிப்பிட்டுச் சொல்லலாம். ஆனால் கண்ணொளியை இழந்த ஒரு பாத்திரம் அதை மீண்டும் பெற்ற பிறகு அவர்களுக்கு ஏற்படும் மனச்சிக்கல்களை எந்தவொரு திரைப்படமும் முன்வைத்ததாக எனக்குத் தெரியவில்லை. கண் பார்வை கிடைத்ததோடு அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவே அவை நிறைவுறும். பார்வையற்ற ஒருவர் அந்தக் குறைபாட்டில் இருந்து விடுபடுவது மகிழ்வடையக்கூடிய நிகழ்வுதானே, அதில் என்ன பிரச்சினை இருக்கப் போகிறது என்பதைத்தான் ஒரு சராசரி மனம் யோசிக்கும். ஆனால் அதிலிருக்கும் மனச்சிக்கல்களை பிரதானமாக வைத்து இயங்குகிறது மஜித் மஜிதியின் The Willow Tree திரைப்படம். (Beed-e majnoon - 2005).
யூசுப் கல்லூரி பேராசிரியர். சிறுவயது விபத்தில் கண்பார்வையை இழந்தவர். மனைவியுடனும் அன்பான மகளுடனும் வாழ்க்கை நகர்கிறது. தம்முடைய தீராத முனைப்பின் மூலம் தம்முடைய தடையைத் தாண்டி சிறந்த பேராசிரியராக இருக்கிறார். என்றாலும் தம்முடைய கண் பார்வை திரும்புவதைப் பற்றின ஆசையும் வேண்டுதலும் அவருக்கு இருக்கிறது. ஏறத்தாழ முப்பத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மருத்துவ அதிசயமாக, பிரான்சில் நடைபெறும் அறுவைச் சிகிச்சையின் மூலம் அவருடைய பார்வை திரும்பக் கிடைக்கிறது. இலையைச் சுமந்துச் செல்லும் ஒரு எறும்பைக் காண நேர்கிற முதல் காணலில் மிகவும் அகமகிழ்ந்து போகிறார் யூசுப். தாம் இதுவரை குரல்களாகவும் விரல்தடவல்களாகவும் உணர்ந்த விஷயங்களைக் காணப் போகிற மகிழ்ச்சித் திகைப்பில் ஆழ்கிறார். ஆனால் நிகழ்வுகள் எதிர்த்திசையில் பயணிக்கின்றன. இதன் காரணமாக தீராத மன உளைச்சலுக்கு ஆளாகிறார். மனைவி அவரை விட்டு பிரிந்துப் போகிறார். யூசுப் என்கிற அந்த மனிதன் எதிர்கொள்கிற அகச்சிக்கல்களை அறிய நாம் இந்தத் திரைப்படத்தினைக் காண வேண்டும்.
சிறந்த நடிப்பிற்காக நாம் யாரையெல்லாமோ பாராட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால் யூசுப்பாக நடித்த Parviz Parastui-ன் திறமையைக் காண நேர்ந்தால் வியப்பால் நாம் திகைப்படைந்து விடுவோம். அந்த அளவிற்கு தம்முடைய உயிரோட்டமான, இயல்பான பங்களிப்பின் மூலம் இந்தப் படைப்பின் முழுக்க நிறைந்திருக்கிறார். Scent of a Woman-ல் அல்பசினோவின் பார்வையற்ற பாத்திரத்தின் திறமையை இந்தப் பதிவில் திகட்ட திகட்ட எழுதியிருந்தேன். ஆனால் இப்போது அல்பசினோவை பின்னுக்குத் தள்ளிக் கொண்டு Parviz Parastui முன்னே நிற்கிறார்.
பார்வையற்ற நிலையில் தம்முடைய மகளுடன் பழகுகிற ஆரம்பக் காட்சியில் அவருடைய முகத்தில் தந்தையின் கனிவு நிறைந்திருப்பதைக் காணலாம். அறுவைச் சிகிச்சை முடிந்த பிறகு தம்முடைய நீண்ட வருட வேண்டுகோள் நிறைவேறப் போகிற மகிழ்ச்சியிலும் பதட்டத்திலும் மருத்துவர் பிரிப்பதற்கு முன்னாலேயே தம்முடைய கண் கட்டுக்களை தாமே மெல்ல அவிழ்த்துக் கொண்டு சுற்றுப் புறக்காட்சிகள் தெரிவதைக் கண்டு மகிழும் காட்சி குறிப்பிடத்தகுந்தது. பார்வையற்ற நிலையில் ஊன்றுகோலின் உதவியுடன் இயல்பாக நடக்க முடிந்தவருக்கு, பார்வை கிடைத்தவுடன் அப்போதுதான் நடக்க முயல்கிற குழந்தை போல் நடக்கிற காட்சியில் அவருடைய உடல் மொழி மிக அற்புதமாய் அமைந்திருக்கிறது. இதிலிருந்து மெல்ல மெல்ல விடுபவதை தொடர்ச்சியாக காட்சிகளில் மிகத் திறமையாக பின்பற்றியிருக்கிறார்.
விமான நிலையத்தில் தம்மைக் காண வந்திருக்கும் பெருந்திரளான கூட்டத்தில் எந்த முகம் தம்முடைய மனைவி, மகள் என்று தேடுகிற காட்சியும் மிக அற்புதம். மெல்ல அவருக்குள் ஏற்படுகிற ஏமாற்றத்தையும் அவர் கற்பனைக்கு மாறாக உலகம் இயங்கும் ஏமாற்றத்தையும் இயக்குநர் மஜித் மஜிதி உணர்வுப்பூர்வமான காட்சிப் பின்னணிகளின் மூலம் நகர்த்துகிறார். ரயில் பயணத்தில் பிக்பாக்கெட் திருடனின் சாகசத்தை வியப்புடனும் திகைப்புடனும் பார்க்கும் காட்சி ஒரு உதாரணம். தம்முடைய வாழ்க்கை இத்தனை வருடங்கள் வீணாக கழிந்ததாக தம்முடைய தாயிடம் வெடிக்கும் காட்சியிலும் இறுதியில் தம்முடைய புத்தகங்கள் அனைத்தையும் வீசியெறியும் காட்சியும் பார்வையாளனுக்கு திகைப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் காட்சிகள்.
மஜித் மஜிதியின் இன்னுமொரு சிறந்த திரைப்படம்.
suresh kannan
7 comments:
:)
துள்ளாத மனம் துள்ளும் படத்தில் சிம்ரனுக்கு பார்வை வந்ததும், விஜய் முகத்தை பார்த்துவிட்டு அவர் படும் வேதனையை பார்ட் 2 வாக யாரும் எடுத்தால் நன்றாக இருக்கும்!
இங்கு கிடைக்குதா என்று பார்க்கிறேன், ஆவலை தூண்டிவிட்டுவிட்டீர்கள்!
ROFL at குசும்பன் comment.. :-)))))))))))))))))))))))
thnx for introducing this movie.. does the move name "willow tree" signifies anything ?!
//does the move name "willow tree" signifies anything ?!//
யூசுப்பிற்கு 'வில்லோ மரம்' அதிர்ஷ்டத்தைத் தரக்கூடியது. சக நோயாளியிடம் இதைப் பகிர்ந்து கொள்வார். அறுவைச் சிகிச்சைக்கு முன்பு மருத்துமனை வளாகத்தில் உள்ள வில்லோ மரத்தின் கீழ் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வார். ஆனால் இந்தப் புகைப்படம் அச்சாகி அவர் கையில் கிடைக்கும் தருணமும் அவர் மீண்டும் பார்வையிழக்கும் தருணமும் ஒன்றாக இருக்கும். இதன் மூலம் மனிதர்களுக்கு அதிர்ஷ்டங்களின் மீதான நம்பிக்கையை இயக்குநர் கேள்விக்குட்படுத்துகிறாரோ என்பது என் புரிதல்.
தலைப்பும், விமர்சனமும் இனிமை.. நுட்பமாக பகிர்ந்ததற்கு நன்றி ஸார். Color of Paradise பார்த்து ரசிச்சிருக்கேன்..இந்த பட அறிமுகத்திற்கு நன்றி.
-Toto
www.pixmonk.com
விமர்சனம் - உங்க பதிவுல நான் தவற விடாத பகுதி.. டவுன்லோடு செஞ்சு பாக்கறேன்..
குசும்பன் கமெண்ட்.... முடியலைய்யா :)
நன்றி சுரேஷ்.
இந்த பதிவை உலக சினிமாவின் முகப்புத்தகத்தில் பதிகிறேன்.
நன்றி..
Post a Comment