Saturday, December 12, 2009

சாருவும் டி.ராஜேந்தரும்



முன்பொரு காலத்தில் டி.ராஜேந்தர் என்றொரு இசையமைப்பாளர் இருந்தார். (இன்னும் பலவும் செய்து வந்தார் என்று சொல்வார்கள்) பிறந்ததிலிருந்தே இவருக்கு தாடியிருந்ததோ என்னுமளவிற்கு "தோன்றிற் தாடியுடன் தோன்றிய" இவரை தாடியில்லாமல் பார்த்த சிலர் இன்னும் மனநல சிகிச்சை எடுத்து வருவதாக கேள்வி. 'ஒரு தலை ராகம்' திரைப்படம் வெளியானவுடன் இதன் பாடல்கள் அந்தக்காலத்தில் காட்டுத்தீ போல் தமிழ்நாட்டில் பரவியது. என்னுடைய பள்ளி நாட்களில் வளாகத்துக்குள்ளே நடைபெறும் விழாக்களில் 'மன்மதன் ரட்சிக்கணும்' ஜாலியான குரலின் பாடல் நிச்சயம் இடம்பெறும். இவரது இசையமைப்பில் 'வைகைக் கரை காற்றே நில்லு' பாடல் எம்.எஸ்.விஸ்வநாதனாலேயே சிலாகிக்கப்பட்டது. ஒரு ஏகாந்தமான மனநிலையில் கேட்டால் இப்போதும் கூட அது ஒரு நல்ல பாடல். அதன் இசைக்கோர்வை கேட்பதற்கு இதமாக இருக்கும். 'மாலை எனை வாட்டுது' இன்னொரு ரத்தினம்.

எதற்கு இத்தனை விஸ்தாரமாக டி.ஆரின் இசையைப் பற்றி சொல்கிறேன் என்றால் மற்ற துறைகளில் அவர் மக்களால் பொதுவாக காமெடியனாகவே பார்க்கப்பட்டார். "தங்கச்சி.. நான் என்ன சொல்றேன்னா.." என்று அவர் அழுது புலம்பி நடித்திருப்பதை இப்போதிருக்கும் ரசிகர்கள் துளிக்கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பாடலில் இதயம் என்ற ஒரு வார்த்தை வந்தால் உடனே பெரிய பெரிய அளவில் இதய வடிவ உருவத்தை பாடல்களில் நகர்த்திக் காட்டுவார். இந்த ஒரு விஷயத்தில் பொதுமக்களை விட தச்சர்கள், பெயிண்டர்கள் இவரை மிக அதிக அளவில் விரும்பினார்கள் என்றொரு புள்ளிவிவரம் கூறுகிறது. இன்றும் கூட 'டண்டணக்கா' என்றால் டிஆரே நினைவுக்கு வரும் வகையில் காமெடி நிகழ்ச்சிகளில் இவரை கதறக் கதற பிழிந்து விடுகிறார்கள். ஒரு நல்ல அல்லது சுமாரான இசையமைப்பாளர் மற்ற துறைகளில் நிகழ்த்தின் அபத்தச் சுவடுகளின் பின்னால் மறைக்கடிக்கப்படுவது அல்லது மறக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது.

ஏறக்குறைய இதே புள்ளியில் எழுத்தாளர் சாருநிவேதிதாவை நிறுத்திப் பார்க்கிறேன். அவரது எழுத்தை கணையாழி குறுநாவல் (நினைவில் புதர்ச்சரிவுகளிலிருந்து) போட்டிக் காலத்திலிருந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன். பாலியல் எழுத்தின் மீது கவிந்திருக்கும் பாசாங்குகளை முற்றிலுமாக களைந்து விடுகிற, வாசகனிடம் நேரடியான எளிமையில் உரையாடுகிற, மற்றவர் தொடக்கூட தயங்கும் விஷயங்களை உக்கிரமான ஆழத்தில் இறங்குகிற, நவீன மரபில் உதாசீனப்படுத்தப்படுகிற உடலைக் கொண்டாடுகிற, அயல் இலக்கியங்களை இசையை தமிழ் சமூகத்திற்கு அறிமுகப்படுத்துகிற விஷயங்களுக்காக கொண்டாடப்படுவதை விட, அவர் மேம்பாக்காக எழுதுகிற, விரும்பியே சர்ச்சையில் ஈடுபடுகிற, புனிதப்பசுக்களின் பீடத்தை தாக்குகிற, சில சக எழுத்தாளர்களை இடுப்பின் கீழ் தாக்குகிற எழுத்துக்களுக்காக அதிகம் வெறுக்கப்படுகிறவராகவும் காமெடியனாக பார்க்கப்படுகிறவராகவும் இருக்கிறார்.



சாருவின் 'கடவுளும் நானும்' எனும் கட்டுரைத் தொகுதியை சமீபத்தில் படித்துப் பார்த்தேன். ஏற்கெனவே இணையத்தில் அவசரமாக படித்ததுதான் என்றாலும் சாவகாசமாக புத்தகத்தில் படிப்பது இன்னும் சுவாரசியமாக இருந்தது. 'ஆன்மீகம்' எனும் சமாச்சாரம் சமகால சூழலில் அதன் உண்மைக்கு மாறாக பல பரிமாணங்களில் புரியப்பட்டும் குழப்பப்பட்டும் இருக்கிற நிலையில் சாருவின் ஆன்மீகம் என்ன என்பதைப் பற்றின அடிப்படை வடிவத்தை இந்தப் புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது. பாபா படத்திலிருந்த விபூதி கொட்டுகிற காமெடிகளையெல்லாம் (உண்மையில் சுவற்றின் காரை பெயர்ந்து விழுந்திருக்கலாம்) அவர் ஆன்மீகச் சட்டகத்தில் இட்டு நம்பிக் கொண்டிருக்கட்டும். ஆனால் இதில் என்னைக் கவர்ந்தது அதுவல்ல. அரபி இசையைப் பற்றியும் சூ·பிக்களை பற்றியும் சாரு எழுதிக் கொண்டு போகிறார். எனக்குத் தெரிந்து நவீன தமிழ் இலக்கியம் இந்த எல்லையை அதிகம் தொட்டதில்லை. De saz இசைக்குழு, ஹெடோனிஸம், ஹ·பீஸின் கஜல் பாடல்கள், சூ·பி கதைகள், பிஸ்மில்லா கான், பட்டினத்தார் போன்றவற்றைப் பற்றி சாருவைத் தவிர வேறு யாரும் எழுதினாக எனக்குத் தெரியவில்லை. வேறு யாரேனும் எழுதியிருந்து பரவலாக அறியப்படாமல் போயிருக்கலாம். அல்லது வாசகனை நெருங்க விடாத மொழியில் நிறுத்தி வைத்திருந்திருக்கலாம். வெறுமனே பெயர்களை உதிர்க்கிறவர் என்ற புகாரும் அவர் மீதுண்டு. அது ஒருவேளை உண்மையாகவே இருந்தாலும் அந்த எளிய வேலையைச் செய்யக்கூட சாரு போன்றோரைத் தவிர வேறு யாரும் எனக்குத் தென்படவில்லை. சாரு அறிமுகப்படுத்துகிற அந்த ஆரம்பப்புள்ளியைப் பற்றிக் கொண்டு மேலேறிச் செல்வது வாசகனின் கடமையே ஒழிய எழுதுபவரே அனைத்தையும் புட்டுப் புட்டு வைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முறையற்றது.

இந்த ஒரு காரணத்திற்காகவே சாருவை நான் பாராட்ட விரும்புகிறேன்; அவரது சில அலட்டல்களைத் தாண்டியும் அவரது எழுத்துக்களை தொடர்ந்து வாசிக்கிறேன்.

கடவுளும் நானும் (கட்டுரைத் தொகுதி)'
உயிர்மை பதிப்பகம் பக்கம் 80 ரூ.40/-

image courtesy: original uploader & uyirmmai


suresh kannan

11 comments:

ஆயில்யன் said...

//ஒரு நல்ல அல்லது சுமாரான இசையமைப்பாளர் மற்ற துறைகளில் நிகழ்த்தின் அபத்தச் சுவடுகளின் பின்னால் மறைக்கடிக்கப்படுவது அல்லது மறக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது.///

நிச்சயம் உண்மை!

எங்க ஊர்க்காரர் என்ற தொடர்பில் அவரது இளமைக்கால அனுபவங்கள் அவர் தம் நண்பர்கள் மூலம் கேட்டறிந்ததுண்டு! சிறு வயதிலிருந்தே கலைத்துறையின் மீது கொண்ட பற்று அவரின் வெற்றிக்கும் சில தோல்விகளுக்கும் காரணம்!

நெருங்கி பழகினால் அவரின் சிறப்புக்கள் புரிபடும் என்பது அவரின் நண்பர்களின் கருத்தாக இன்றும் உள்ளது!

ஊர்க்காரர் என்ற வகையில் அவரிடம் மன்னிப்பு கேட்கும் ஒரு விசயம் என்னிடத்தில் உண்டெனில் நான் செய்த போட்டோ ரீமிக்ஸ் “யப்பா” ஒன்றுதான் :(( அதுவும் நண்பர்களுக்கிடையில் பகிர்ந்துக்கொள்ளப்பட்டது வெளியே வந்த விதம் என்னை ஆச்சர்யப்படுத்திக்கொண்டிருக்கிறது இந்த நொடிவரையிலும்!

Ashok D said...

//பாலியல் எழுத்தின் மீது கவிந்திருக்கும் பாசாங்குகளை முற்றிலுமாக களைந்து விடுகிற, வாசகனிடம் நேரடியான எளிமையில் உரையாடுகிற, மற்றவர் தொடக்கூட தயங்கும் விஷயங்களை உக்கிரமான ஆழத்தில் இறங்குகிற, நவீன மரபில் உதாசீனப்படுத்தப்படுகிற உடலைக் கொண்டாடுகிற, அயல் இலக்கியங்களை இசையை தமிழ் சமூகத்திற்கு அறிமுகப்படுத்துகிற விஷயங்களுக்காக கொண்டாடப்படுவதை விட, மேம்பாக்காக எழுதுகிற, விரும்பியே சர்ச்சையில் ஈடுபடுகிற, புனிதப்பசுக்களின் பீடத்தை தாக்குகிற, சில சக எழுத்தாளர்களை இடுப்பின் கீழ் தாக்குகிற எழுத்துக்களுக்காக அதிகம் வெறுக்கப்படுகிறவராகவும் காமெடியனாக பார்க்கப்படுகிறவராகவும் இருக்கிறார்//

மிக சரியாகவும் மிக தவறாகவும் புரிந்துகொள்ளபடும் மனிதர்களில் சாரு முதன்மையானவர். மேல் கூறிய பதிவில் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்.

Anonymous said...

சாருவை நீங்கள் படித்தாலும் படிக்காவிட்டாலும் அவர் பல்லாயிரம் வாசகர்கள் விரும்புகிற ஒரு எழுத்தாளர்.

ஏதோ ஓசியில் கிடைத்த ஒரு வலைப்பதிவில் நான்கைந்து பதிவு உருபடியாக எழுதிவிட்டதற்காகவே நீங்களெல்லாம் ஆணவமாக அலையும்போது சாரு போன்றவர்களின் அலட்டல் நியாயமானது

Ganesan said...

அகநாழிகை-புத்தக வெளியீடு-புகைப்படங்கள்.

http://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_12.html

குப்பன்.யாஹூ said...

சாருவின் கருத்துக்கள் புதுமையானவை, ஆனால் அதை ஆரம்ப காலத்தில் அவர் வெளிப்படுத்திய பாங்கு அல்லது சக எழுத்தாளர்கள், பதிப்பகத்தினரிடம் அவர் கொண்ட வெறுப்பு , பகைமை, கோபம் கூட அவரது எழுத்துக்கள் வெளி வராமல் இருந்டிர்க்க காரணாமாக இருக்கலாம்.

ராஜேந்தர் என் பார்வையில் சாருவிடம் இருந்து மாறுபட்டவர். ராஜேந்தர் வணிக சந்தையிலும் வெற்றி பெற்ற ஒரு இயக்குனர், நடிகர், இசை அமைப்பாளர். i do not think charu is a commercial hit writer.

எத்தனையோ ஒளிப்பதிவு நாட விற்பனையாளர்கள் ராஜேந்தர் பாடல்கள் மூலம் பணம் சம்பாதித்து உள்ளனர்.

உங்களுக்கும் எனக்கும் ராஜெண்டரை பிடிக்க விட்டாலும் கூட, நாம் உண்மையை ஒத்து கொண்டுதான் ஆக வேண்டும். அவர் காலத்தில், தொடர்ந்து எட்டு அல்லது ஒன்பது வெற்றி படங்கள் கொடுத்த இயக்குனர். அதுவும் ஒரே மாத்ரி கதை அமைப்பு, பாடல், இசை நயத்துடனே, அந்த ஒன்பது படங்களும் மாபெரும் வெற்றி.

சிந்தனையை தூண்டு மற்றும் ஒரு பதிவிற்கு நன்றி

Anonymous said...

Charu is a bog joker

Anonymous said...

I completetly agree with your observations about Charu. I read him regularly and he has introduced me to some great writers and I am thankful for that.

He has written some great fiction and also some great journalistic articles, just like my other favourite author Gabriel Garcia Marquez. He is one of the best writers in Tamil today. But his spiritual views are complete nonsense and he should keep it to himself.

But I disagree with all these idiots who are running around, proclaiming him to be some sort of messiah and that he is above all sorts of criticism.

Anonymous said...

Both Charu and T.R have one common problem- they dont know how to handle themselves.

Swami said...

Vimarsippavargalai paduvegamaaga thiruppi thakkuvadhai thavira charuvidam oru kuraiyumillai. kallamatra nalla idhayam. T.rajendar oru irritating character. avarodu charuvai oppidivathu periya thavaru.

சாணக்கியன் said...

/* அதிகம் வெறுக்கப்படுகிறவராகவும் காமெடியனாக பார்க்கப்படுகிறவராகவும் இருக்கிறார்*/

உண்மைதான். சாருவின் ‘கிழக்குமொட்டைமாடி’ பேட்டியை கேட்கும்வரை நானும் அவரை சைக்கோவாக நினைத்திருந்தேன்.

Anonymous said...

தனி மனித (டி ராஜேந்தர்) தாக்குதல்களை தவிருங்கள்

தனி மனித ஒழுக்கத்தில் டி ராஜேந்தர் இருக்கும் திசை க்கு கூட சாருவால் வர முடியாது