Thursday, October 24, 2019

Tulip Fever | 2017 | United States, U.K. | இயக்குநர் - Justin Chadwick

அயல் திரை  -2

“ஒரு துலிப் மலரின் துயரம்”


ஹாலிவுட் என்றல்ல, உலகெங்கிலுமே மிகச் சிறந்த திரைப்படங்கள் என்று அறியப்பட்டவை, ஏற்கெனவே எழுதப்பட்ட நாவல்களிலிருந்துதான் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த திரைப்படமும் Deborah Moggach என்கிற பிரிட்டிஷ் நாவலாசிரியை எழுதிய, இதே தலைப்பில் அமைந்த நாவலில் இருந்துதான் உருவானது. காவியத்தன்மை படிந்திருக்கும் இந்த திரைப்படத்தில் ஆணாதிக்க உலகில் ஒரு பெண் பகடைக்காயாக சிக்கி அல்லலுறும் துயரம் மிக அழுத்தமாக பதிவாகியுள்ளது. பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்னமும் கூட மறையாத இந்த அவல நிலைக்கு ஒரு வரலாற்று சாட்சியமாக உருவாகியுள்ள திரைப்படம் இது.

**

17ம் நூற்றாண்டு. நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டெர்டாம் நகரம். அனாதை இல்லத்தில் வளர்ந்த சோபியா என்கிற இளம்பெண், கார்னெலிஸ் என்கிற நடுத்தர வயதைத் தாண்டிய ஒருவருக்கு மணம் முடித்து தரப்படுகிறாள். இந்த திருமணத்தின் மூலம் அவளுடைய இளைய சகோதரிகளுக்கு நல்வாழ்க்கை அமையும் காரணத்தினால் அவள் இந்த தியாகத்தை மனவிருப்பமின்றி ஏற்றுக் கொள்கிறாள்.

தனக்கொரு ஆண் வாரிசு வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காகவே இந்த திருமணத்தை கார்னெலிஸ் செய்து கொள்கிறார். முழுதும் ஒத்துழைக்காத தன்னுடைய ‘படைவீரனை’க் கொண்டு இதற்காக முயற்சித்துக் கொண்டேயிருக்கிறார். சோஃபியா மீது தன்னிச்சையான அன்பு உருவாக அவரது குற்றவுணர்ச்சியே ஒருவகையில் காரணமாக இருக்கிறது. அவருடைய முன்னாள் மனைவியின் பிரசவத்தின் போது, வாரிசு உற்பத்தி மீதான ஆவேசத்தில் ‘எப்படியாவது குழந்தையைக் காப்பாற்றி விடுங்கள்’ என்று மருத்துவரிடம் கூறி விடுகிறார். ஆனால் தாயும் குழந்தையும் இறந்து விடுகிறார்கள். இது சார்ந்த குற்றவுணர்ச்சி அவரை அலைக்கழிக்கிறது. இதுவே சோஃபியா மீது பரிவு காட்டுவதற்கான காரணமாகவும் அமைகிறது. விருப்பமில்லாத, திருப்தியில்லாத மணவாழ்வை வேறு வழியின்றி சகித்துக் கொள்கிறாள் சோஃபியா.

குடும்ப பெருமையை பதிவு செய்யவும் தன் புது மனைவியின் அழகைப் பற்றி வெளியில் பீற்றிக் கொள்ளவும் ஓர் இளம் ஓவியரை வரவழைக்கிறார் கார்னெலிஸ். அந்த நகரத்திலுள்ள மிகச்சிறந்த ஓவியர்களுள் ஒருவனான ஜேன், முதற்பார்வையிலேயே சோஃபியாவின் அழகால் புயல் போல தாக்கப்படுகிறான். ‘இந்த ஓவியன் வேண்டாம், வேறு எவரையாவது அமர்த்துங்கள்’ என்று ஜேனை முதலில் நிராகரிக்கும் சோஃபியா, பின்பு அவனையே மீண்டும் வரச் சொல்கிறாள். இளைஞனான ஜேனின் வருகை அவளுக்குள்ளும் சலனத்தை ஏற்படுத்துகிறது. இருவருக்குள்ளும் தன்னிச்சையான அன்பு உருவாகிறது. பிறகு ஏற்படும் ரகசிய சந்திப்புகளின் மூலம் ஒருவரையொருவர் ஆவேசமாக அறிந்து கொள்கிறார்கள். கார்னெலிஸிக்கு இது தெரியவந்தால் சோஃபியாவின் உயிருக்கு நிச்சயம் ஆபத்து ஏற்படும் சூழலும் இருக்கிறது.

சோஃபியாவின் பணிப்பெண்ணாக இருப்பவர் மரியா. இவளைத் தன் சகோதரியாகவே பாவிக்கிறாள் சோஃபியா. மரியாவிற்கு வில்லியம் என்கிற ரகசிய காதலன் உண்டு. மீன் வியாபாரியான அவனின் மூலம் தன் வளமான எதிர்காலம் உருவாகப் போகிறது என்கிற கனவில் இருப்பவள் மரியா. வில்லியமும் மரியாவின் மீது மிகப் பிரியமாக இருக்கிறான். இவர்களின் சந்திப்புகளும் கூடல்களும் ஒருபுறம் தொடர்கின்றன.

**

அக்காலக்கட்டத்து நெதர்லாந்தில் துலிப் மலர்களின் மீதான வணிகமும் அதன் மீதான சூதாட்டமும் வெறியும் உச்சத்தில் இருந்தது. மேற்கிலிருந்து அறிமுகமாயிருந்த துலிப் மலர்க்குமிழிகளின் விலை விண்ணைத் தொட்டது. அதிலும் அரிய வகை குமிழ்கள் ஒருவரின் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப் போடும் மதிப்பு வாய்ந்ததாக இருந்தது. இது சார்ந்த ஊகப் பேரங்களும் பேராசையுடன் கூடிய கனவுகளும் நகரெங்கும் பெருகி வழிந்தன. விண்ணளவு உயர்ந்து திடீரென்று சரிந்த இந்தப் பொருளியல் நிகழ்வு, வரலாற்றில் முதலாவதாகப் பதிவுசெய்யப்பட்ட ஊக வணிகப் "பொருளியல் குமிழி" எனக் கருதப்படுகிறது.

பணிப்பெண் மரியாவின் காதலனான வில்லியம், ஒரு தரகனின் பேச்சை நம்பி தன்னுடைய வாழ்நாள் சேமிப்பை துலிப் மலர் வணிகத்தில் முதலீடாக இடுகிறான். ஓர் அதிர்ஷ்ட வெற்றி கிடைத்தால் அதன் மூலம் மரியாவுடன் வளமான வாழ்க்கையை வாழ முடியும் என்பது அவனுடைய திட்டம். அதற்கேற்ப அரிய வகை மலர்க்குமிழ் கிடைக்கும் அதிர்ஷ்டம் அவனுக்கு அடிப்பதால் எதிர்பார்த்தபடியே பெரும்பணம் கிடைக்கிறது. இந்தச் செய்தியை தெரிவிக்க மிக ஆவலாக மரியாவைத் தேடி ஓடி வருகிறான்.

தன் காதலன் ஜேனைச் சந்திக்க மரியாவின் உடையை எடுத்து அணிந்து கொண்டு கிளர்ச்சியும் ஆவேசமுமாக ஓடுகிறாள் சோஃபியா. மரியா என நினைத்து இவளைப் பின்தொடரும் வில்லியம், எவனோ ஒரு ஆடவனுடன் ‘மரியா’வின் சந்திப்பு நிகழ்வதைக் கண்டு மனம் வெதும்புகிறான். தீர விசாரிக்கும் பொறுமையைில்லாமல் கழிவிரக்கத்தில் குடி விடுதியை நாடுகிறான். அங்குள்ள ஒரு வேசையின் தந்திரத்தால் தன் அதிர்ஷ்டப் பணத்தை இழக்கிறான். இது தொடர்பான தகராறு காரணமாக, வலுக்கட்டாயமாக கப்பல் படையில் சேர்க்கப்பட்டு அந்த நகரை விட்டு அப்புறப்படுத்தப்படுகிறான். இந்தப் பின்னணி விவரங்களை அறியாத மரியா, வில்லியமின் வருகையைக் காணாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள்.

**

சோஃபியா முதலாளியாகவும் மரியா பணிப்பெண்ணாக இருந்தாலும் பெண் என்கிற நோக்கில் அவர்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியான சிக்கலில் தவிக்கிறார்கள். வாழ்வின் தற்செயல்களும் அசந்தர்ப்பங்களும் அவர்களின் வாழ்வை புயல் நுழைந்த கடற்கரை போல தாக்கத் துவங்குகிறது.

சோஃபியா – ஜேனின் ரகசிய சந்திப்புகள் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்க, வில்லியமுடன் பழகிய காரணத்தால் மரியா கர்ப்பமுறுகிறாள். திருமணத்திற்கு முந்தைய கர்ப்பத்தை தன் முதலாளி கார்னெலிஸ் அறிந்தால் தன் பணி பறிபோகுமென அச்சப்படுகிறாள் மரியா. அவளைத் தேற்றும் சோஃபியா, அதிலிருந்து தப்பிக்க ஓர் உபாயத்தைச் சொல்கிறாள். ஒருவகையில் அவளுக்கான நலனும் அடங்கியிருக்கிற திட்டம் அது.

அதன்படி சோஃபியா கர்ப்பமுற்றிருப்பதாக நடிப்பாள், மரியா அவளுக்கு உதவுவதாக. இதன் மூலம் ஒருபக்கம் மரியா தப்பிக்க முடியும். தனக்கான வாரிசை மிக ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் கார்னெலிஸின் விருப்பமும் நிறைவேறும். இந்தச் சதிக்கு மருத்துவரும் இணங்குகிறார். மருத்துவ சோதனை என்கிற பெயரில் அவர் ஒருமுறை சோஃபியாவிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றதற்காக தரும் விலை இது. கார்னெலிஸ் கண்டுபிடிக்க முடியாதவாறு தங்களின் திட்டத்தை இருவரும் திறம்பட நிகழ்த்துகிறார்கள். தங்களின் குருதியிலிருந்து மட்டும் உருவாகும் வாரிசுகளுக்காக பெண்ணுலகத்தை ஆட்டிப் படைக்கும்  மமதையில் இருக்கும் ஆண்களை இரு எளிய பெண்கள் பழிப்புக் காட்டும் நகைச்சுவை இது.


இதற்கிடையில் ஓவியனான ஜேனும் துலிப் மலர் வணிகத்தால் ஈர்க்கப்படுகிறான். சோஃபியாவுடன் எங்காவது சென்று வாழ வேண்டும் என்பது அவனுடைய விருப்பம். இதற்காக தேவாலயத்தில் வளரும் மலர்க்குமிழ்களை திருட முயன்று தலைமை கன்னியாஸ்திரியிடம் பிடிபடுகிறான். தன் நிலையை அவளிடம் உருக்கமாக கூற, ஜேன் வணிகம் செய்ய அவர் உதவுகிறார். மது விடுதியில் நிகழ்ந்த சச்சரவால் வெளியேற்றப்பட்டிருந்த வில்லியமின் மலர்கள்தான் இவனுக்கும் அதிர்ஷ்டத்தை கொண்டு வருகின்றன. கூடவே துரதிர்ஷ்டத்தையும். அரிய மலர்க்குமிழி கிடைத்த நேரத்தில் அதன் வணிகமும் சூதாட்டமும் சரிந்து வீழ்கிறது. எவருமே இதை வாங்கத் தயாராக இல்லை. ஜேன் உருக்கமானதொரு உரையை கூட்டத்தின் முன் நிகழ்த்துகிறான்.

முன்னர் வில்லியமை ஏமாற்றி பணம் பிடுங்கிய வேசையொருத்தி, ஜேனின் நிலையைக் கண்டு அனுதாபப்பட்டு முதல் விலையைக் கேட்கிறாள். பிறகு மற்றவர்களும் இந்த ஏலத்தில் உற்சாகமாக கலந்து கொள்கிறார்கள். ஜேனுக்கு பெரும்பணம் கிடைக்கப் போகும் செய்தியை அறியும் அவனுடைய கடன்காரர்கள் வீட்டைச் சூழ்ந்து கொள்கிறார்கள். அவனால் வெளியில் செல்ல இயலாத நிலை. எனவே மலர்க்குமிழ்களை எடுத்துவர தன்னுடைய நண்பனை அனுப்புகிறான். ஆனால் அவனொரு குடிகாரன். எனவே எச்சரித்து அனுப்புகிறான் ‘வழியில் எங்கும் வேடிக்கை பார்க்காதே. முக்கியமாக குடிக்காதே’.

செல்லும் வேலையை முடித்து திரும்பும் நண்பன் வழியில் நிகழும் ஒரு சில்லறைத் தகராறில் உற்சாகமாக ஈடுபடுகிறான். அந்த வெற்றியைக் கொண்டாட நண்பர்கள் அழைக்க குடிவிருந்தில் கலந்து கொள்கிறான். அதை முடித்து விட்டு திரும்பும் அவனை ஜேன் ஆவலுடன் வரவேற்கிறான். நண்பன் கொண்டு வருவதில் அரியவகை மலர்க்குமிழ் இருப்பதில்லை. “அடப்பாவி, எங்கேடா அது?” என்று பதட்டத்தின் உச்சிக்கே செல்கிறான் ஜேன். “அது வெங்காயம்தானே, நான் தின்று விட்டேன்” என்று அப்பாவித்தனமாக சொல்கிறான் நண்பன். விலைமதிப்புள்ள அரிய வகை மலர்க்குமிழ் அது. இருக்கிற பணத்தைப் பிடுங்கிய கடன்காரர்கள் எச்சரித்தபடி விலக தலையில் கைவைத்து அமர்ந்து விடுகிறான் ஜேன்.

**

சோஃபியாவின் இல்லத்தில் பிரசவ நாடகம் அதன் உச்சத்தை எட்டுகிறது. பணிப்பெண் மரியாவிற்கு பிரவச வலி எடுக்கிறது. ஆனால் தான் அந்த வலியில் கதறுவதான நாடகத்தை திறமையாக நடத்துகிறாள் சோஃபியா. மருத்துவரும் உடன்படுகிறார். அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. பிரசவத்தில் சோஃபியா இறந்து விடுவது போன்ற நாடகத்தை ஏற்படுத்துகிறார்கள். இதன் மூலம் அவள் தன்னுடைய காதலனுடன் ஊரை விட்டுச் சென்று விட முடியும். அவள் உயிருடன் இருப்பதாக தெரிந்தால் கணவனான கார்னெலிஸ் எப்படியும் துரத்திக் கொல்லுவான் என்பதால் இந்த மரண நாடகம்.

மிகத் திறமையாக வடிவமைக்கப்பட்ட இந்த நாடகத்தின் படி சோஃபியா சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டு கார்னெலிஸ் கண்முன்னால் அப்புறப்படுத்தப்படுகிறாள். தன் மனைவிக்கு இறுதி முத்தம் தர நெருங்கும் கணவனை, ‘சவத்தை நெருங்கினால் தொற்றுநோய் பரவி விடும்’ என்று பயமுறுத்தி தடுத்து விடுகிறார் மருத்துவர். தன்னுடைய திட்டத்தில் வெற்றி பெற்ற சோஃபியாவால் அந்த மகிழ்ச்சியை முழுமையாக ருசிக்க முடியவில்லை. கணவரை ஏமாற்றிய குற்றவுணர்வு வாட்டுகிறது. பிரசவ நாடகத்தின் போது ஆவேசமாக உள்ளே நுழைய முயலும் கணவர், ‘குழந்தை பிறக்காவிட்டாலும் பரவாயில்லை. என் மனைவியை எப்படியாவது காப்பாற்றி விடுங்கள்’ என்று மருத்துவரிடம் உருக்கமாக கதறிய காட்சி வேறு அவளுடைய நினைவில் வந்து கொண்டிருக்கிறது.

திட்டத்தின் படி ஜேனிடம் செலவதற்குப் பதிலாக தன்னுடைய வீட்டிற்கு விரைந்து சென்று ஒளிந்து நின்று பார்க்கிறாள். புதிதாகப் பிறந்த குழந்தையை கணவர் கார்னெலிஸ் பாசத்துடன் கொஞ்சிக் கொண்டிருக்கும் காட்சி அவளுடைய குற்றவுணர்வை அதிகப்படுத்துகிறது. மனஉளைச்சல் தாங்காமல் தன் மேலாடையை ஆற்றில் வீசி விட்டு தற்கொலை உத்தேசத்துடன் கடற்கரையை நோக்கி விரைகிறாள். கடன்காரர்களிடமிருந்து தப்பித்து வரும் ஜேன், ஆற்றில் மிதக்கும் சோஃபியாவின் ஆடையைப் பார்த்து விட்டு அவள் தற்கொலை செய்து கொண்டாள் என நினைத்து மனம் உடைகிறான்.

சோஃபியாவின் இல்லத்தில் இன்னொரு வகையான உச்சக்காட்சி நடைபெறுகிறது. மரியாவின் காதலன் வில்லியம் ஊர் திரும்புகிறான். குழந்தையுடன் இருக்கும் மரியாவைப் பார்த்து சந்தேகமுறுகிறான். அவர்களுக்குள் சச்சரவு ஏற்படுகிறது. “என் அன்புள்ள மடையனே, இது நம் குழந்தை. என்னுடைய உடையில் நீ பார்த்தது என் எஜமானியம்மாள். இந்த நகரிலுள்ள ஓவியனுடன் அவளுக்குத் தொடர்பிருந்தது” என்று உரத்த குரலில் வாக்குவாதம் செய்கிறாள் மரியா

இதை தற்செயலாக கேட்கும் கார்னெலிஸ், கோபப்படுவதற்கு மாறாக மனம் உடைந்து போகிறான். தன்னுடைய வாரிசு வெறியும், அதன் மூலம் அழிந்த ஓர் இளம்பெண்ணும் வாழ்வையும் நினைத்து துயரமடைகிறான். தன்னுடைய வீடு உட்பட அனைத்துச் சொத்துக்களையும் மரியாவிடம் ஒப்படைத்து விட்டு கண்காணாமல் சென்று விடுகிறான். “இது சோஃபியாவின் குழந்தையாகவே இருக்கட்டும். என் குடும்பப் பெருமையைக் காப்பாற்று” என்கிற வேண்டுகோளை மரியாவிடம் முன்வைக்கிறான். அந்த வேண்டுகோளை ஏற்று தன் குழந்தையாக இருந்தாலும் முதலாளி குடும்பத்தின் குழந்தையாகவே வளர்க்கிறாள் மரியா.

துலிப் மலர்களின் மீதான வணிகமும் சூதாட்டமும் முற்றிலுமாக சரிந்து வீழ்கிறது. ஓர் அபத்த நாடகத்தின் முடிவு போல சந்தை வெறிச்சோடிக் கிடக்கிறது. வணிகப் பத்திரங்கள் ஏலக்கூடம் முழுவதும் கேட்பாறின்றி பறந்து கிடக்கின்றன. இதில் முதலீடு செய்த அப்பாவிகளும் பேராசைக்காரர்களும் பித்துப் பிடித்தவர்கள் போல அமர்ந்திருக்கிறார்கள்.

சில வருடங்களுக்குப் பிறகு ஜேன் அந்த நகருக்கு திரும்பி வருகிறான். அவனுடைய இருப்பிடத்தின் பெரும்பான்மையும் அழிந்து விட்டிருக்கிறது. ஆனால் அவன் வரைந்த ஓவியங்கள் இன்னமும் உயிர்ப்போடு உள்ளன. குறிப்பாக அவன் ரசித்து ரசித்து வரைந்த சோஃபியாவின் ஓவியங்கள் இன்னமும் அதன் ஜீவனோடு அவர்களுடைய காதலின் அழியா சாட்சியமாக நிற்கின்றன. தேவாலயத்தில் ஓவியங்களைப் புதுப்பிக்கும் பணி அவனுக்கு கிடைக்கிறது. கன்னியாஸ்திரிகளில் ஒருவராக சோஃபியாவை அவன் காணும் காட்சியோடு படம் நிறைவடைகிறது.

**

பணிப்பெண் மரியாவின் மூலமாக, அவளுடைய பின்னணிக் குரலில் விரியும் இந்த திரைக்கதையில் பதினாறாம் நூற்றாண்டின் பின்புலம் திறமையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்ஜெட் காரணமாக சில பின்னணி இடங்கள்  திரும்பத் திரும்ப வந்தாலும் ஒருகணமும் சலிப்பேறாதவாறு சுவாரசியமான திரைக்கதையை உருவாக்கியுள்ளனர்.

வாழ்வெனும் சதுரங்க விளையாட்டில் சில அபத்தமான நகர்வுகள் எப்படி ஒரு மனிதனின் வெற்றிக்கும் வீழ்ச்சிக்கும் மாறி மாறி காரணமாக இருக்கின்றன என்பதை இத்திரைப்படத்தில் பல இடங்களில் உணர முடிகிறது. துலிப் மலர் வணிகத்தின் மீதான சூதாட்டத்தைப் போலவே, ஆண்களின் உலகில் பெண்களை வைத்து ஆடும் சூதாட்டம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. தனக்கேற்ற இணையுடன் இனிமையான வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டிய சோஃபியா, வறுமை காரணமாக வயதில் மூத்தவரிடம் இரண்டாம் மனைவியாக வந்து சேர வேண்டியிருக்கிறது. காமம் சார்ந்த மன தத்தளிப்பை எதிர்கொள்ள இயலாமல் ஓர் இளைஞனிடம் ரகசிய உறவை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் அந்த இலக்கையும் முழுமையாக அடைய முடியாமல் சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் மதிப்பீடுகளின் மீதான குற்றவுணர்வு காரணமாக மரணத்தை நோக்கி நகர வேண்டியிருக்கிறது.

மரியாவின் உடையை சோஃபியா அணிந்திருக்கிறாள் என்கிற எளிய உண்மையை அறியாத வில்லியம், அந்த வெறுப்பில் குடிவிடுதிக்குச் சென்று தன் எதிர்கால வாழ்விற்கான பணத்தை இழக்கிறான். குடிகார நண்பன் முட்டாள்தனத்தினால் செய்யும் பிழைக்காக கடன்காரர்களிடம் சிக்கித் தவிக்கிறான் ஜேன். அவனுடைய எதிர்காலமும் மகிழ்ச்சிகரமானதாக இல்லை. ‘வாரிசு வெறி’யில் ஓர் இளம் பெண்ணின் வாழ்வைச் சூறையாடிய கார்னெலிஸ் இறுதியில் எதுவுமேயின்றி காணாமல் போகிறான். நாம் விரும்பியோடும் இடத்திற்கு அல்லாமல் அதன் எதிர்திசைக்கு அடித்துச் செல்லும் விதியின் சூதாட்டமே இறுதியில் வெல்கிறது.

நெருங்கிய நட்பாக இருந்தாலும் அசந்தர்ப்பமான சூழலில் மனிதர்கள் சட்டென்று நிறம் மாறும் உதாரணக் காட்சியும் இருக்கிறது. மரியா பணிப்பெண்ணாக இருந்தாலும் அவளைத் தன் சகோதரி போலவே பிரியத்துடன் பாவிக்கிறாள் சோஃபியா. மரியா கர்ப்பமுற்றதை அறிந்ததும் ஆறுதல் சொல்கிறாள்.  அவளை விடுவிப்பதற்கான உபாயத்தையும் தாமே முன்வந்து சொல்கிறாள். ஆனால், தன்னுடைய பணியை இழந்து விடுவோமோ என்கிற அச்சத்தில் சோஃபியாவை மிரட்டத் துணிகிறாள் மரியா. “எனக்கு நீ உதவவில்லையென்றால் ஓவியனுடன் உனக்குள்ள தொடர்பை உன் கணவனிடம் சொல்லி விடுவேன்’ என்று அச்சுறுத்துகிறாள்.

**

சோஃபியாவாக Alicia Vikander தன்னுடைய மிகச்சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். வறுமை காரணமாக ‘வாரிசை உருவாக்கித் தரும் இயந்திரமாக’ தாம் மாற்றப்பட்ட விதியையும், நிறைவேறாத பாலுணர்ச்சி சார்ந்த தவிப்பையும், ஜேன் மீது உருவாகும் காதலை தடுக்க முடியாத கொந்தளிப்பையும், கற்பிற்கும் காதலுக்கும் இடையேயான தத்தளிப்பையும் கச்சிதமான நடிப்பின் மூலம் உணர்த்தியுள்ளார். நடிப்பு ராட்சசனான Christoph Waltz, கார்னெலிஸ் பாத்திரத்தில் அசத்தியுள்ளார். ‘என் இளம் வீரன் இன்று தயாராகவுள்ளான்’ என்று குதூகலமாக தயாராவதும் அந்த இயலாமையை மெளனமாக விழுங்குவதும் என இவரின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது.  இறுதியில் சோஃபியாவின் துரோகத்தை மிக முதிர்ச்சியாக இவர் எதிர்கொள்வது சிறப்பான காட்சிகளுள் ஒன்று. ஜேன் –ஆக நடித்திருக்கும் Dane DeHaan-ன் பங்களிப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது.

Eigil Bryld-ன் அட்டகாசமான ஒளிப்பதிவில் பெரும்பான்மையான காட்சிகள் ஓவியத்திற்கு நிகரான உள்ளன. குறிப்பாக கடற்கரையில் சோஃபியா உலவும் தொலைதூரக் கோணக் காட்சிகள் உள்ளிட்டு பல காட்சிகள் உன்னதமான உணர்வுகளை பார்வையாளர்களுக்கு கடத்துவதாக அமைந்துள்ளன. ஜேனும் சோஃபியாவும் உடல்களின் மூலம் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும் காட்சிகள் அதன் erotic தன்மையின் அழகியலோடும், கண்ணியத்தின் எல்லைக்குள்ளும் அமைந்துள்ளன. Mandela: Long Walk to Freedom போன்ற சிறந்த படங்களை இயக்கியுள்ள Justin Chadwick இந்த திரைப்படத்தை மிக அற்புதமாக இயக்கியுள்ளார்.

மலர் வணிகம் மீதான சூதாட்டத்தைப் போலவே சோஃபியாவின் வாழ்வும் ஆண்கள் உலக சூதாட்டத்தில் அலையுறுதலே இத்திரைப்படத்தின் மையம் எனலாம்.

(குமுதம் தீராநதி -  மார்ச் 2018 இதழில் பிரசுரமானது) 

 
suresh kannan

No comments: