Saturday, May 16, 2015

ப்ரதீப்பின் குறும்படங்கள்



நண்பர் ப்ரதீப்பை சில ஆண்டுகளுக்கு முன் முதன்முறையாக சந்தித்த போது நீண்ட தலைமுடியுடன் நவீன நாடகங்களில் தோன்றும் ஆசாமி போலிருந்ததைக் கவனித்து 'உங்களுக்கு நடிகருக்கான முகவெட்டு இருக்கிறது' என்று விளையாட்டாக சொல்லிருந்தேன். ஆனால் அவருக்குள் இத்தனை ஆர்வமுள்ள நடிகர் இருப்பார் என்று நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. தமிழ் சூழலில் புதுக்கவிதை அறிமுகமான சமயத்தில் குடிசைத் தொழில் போல வீட்டுக்கு இரண்டு கவிதைத் தொகுதிகளும் நான்கு கவிஞர்களும் இருந்ததைப் போல சமகாலத்தில் நிறைய இளைஞர்கள் அப்பாவை தொடர்ந்து நச்சரித்து தேற்றிய சில்லறையில் வாங்கிய  உயர்தர கேமராவில் குறும்படம் எடுக்கிறேன் பேர்வழி என்று அலட்டலாக திரிந்து கொண்டிருக்கும் இளைஞர்களில் ப்ரதீப்பும் ஒருவர் போல என்று நினைத்திருந்தேன். ஆனால் காட்சி ஊடகத்தை மிகத் தீவிரமாகவே அணுக முயலும் நபர் என்பதை அவருடைய குறும்படங்களை தொகுப்பாக பார்த்தபின் உணர்ந்தேன்.

அவருடைய Article 39 (f ) எனும் சமீபத்திய குறும்படத்தைப் பற்றி முகநூலில் கீழ்கண்டவாறு எழுதியிருந்தேன். 

நணபர் ப்ரதீப் குமார் பங்களிப்பில் உருவாகியிருக்கும் குறும்படம். சுஜாதாவைச் சந்தித்த போது தேசிகனின் நண்பராக இவரை முதன்முறை சந்தித்த நினைவு. ஒரு நடிகருக்கான முகவெட்டு இவரிடம் இருக்கிறது என்று அவரிடம் அப்போதே சொல்லியிருக்கிறேன்.
இந்தக் குறும்படத்தில் அவர் நடித்திருக்கிறார். குறும்படங்களுக்கென்றே உள்ள சாத்தியங்களின் எல்லையில் உருவான ஒரு முயற்சி. சமூக அலவங்கள் குறித்து எத்தனை சட்டம் போட்டாலும் அது நடைமுறையில் செயல்படுத்தப்படாத வரை, அதற்கான விழிப்புணர்வு நம் ஆழ்மனதிலேயே மலராதவரை அதனால் எவ்வித பயனுமில்லை. கழிவுநீர் சாக்கடைகளை தூய்மைப் படுத்த இயந்திரம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும், மனித உழைப்பு கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும் கூட அது இயல்பாக தொடர்ந்து கொண்டிருப்பதை சாலையில்தினமும் காண்கிறோம்.
குழந்தைத் தொழிலாளர் முறையும் அது போன்றே. அதற்காக 'உச்' கொட்டிக் கொண்டே நம்மைச் சுற்றி இயங்கும் பல குழந்தைகளின் உழைப்பை நாமறியாமலேயே சுரண்டிக் கொண்டிருக்கிறோம், அல்லது சுரணையின்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். வெகுசன ஊடகங்கள் அடித்தட்டு மக்களின் மேல் கரிசனம் கொண்டு 'உருவாக்கும்' செய்திகளும் சுயநலம் சார்ந்தவையே. அதன் ஒரு துளியைத்தான் இக்குறும்பட நாயகனும் பிரதிபலிக்கிறான்.
கேன் வாட்டர் போடும் சிறுவன் அவன் எல்லையில் நன்றாக நடித்திருக்கிறான். நல்ல முயற்சி ப்ரதீப். தொடருங்கள்.



அதற்கு எதிர்வினையாக அவர் இயக்கி, உருவாக்கி, நடித்த குறும்படங்களை வரிசைப்படுத்தி அனுப்பியிருந்தார். வலி என்கிற குறும்படத்தில் சமூகத்தால் புறக்கணிக்கப்படும் திருநங்கையின் அந்தரங்கமான வலியை காட்சிப்படுத்திய விதம் அபாரமாக இருந்தது. காட்சி ஊடகத்தின் அடிப்படையை சரியாகப் புரிந்து கொண்டு வசனங்களை அதிகம் நம்பாமல் காட்சிபூர்வமாகவே தம் படைப்புகளை  நகர்த்திச் செல்லும் அவருடைய புரிதல் நம்பிக்கையளிக்கவும் பாராட்டவும் வைக்கிறது. ஒரு திருநங்கை பாத்திரத்தை தயங்காமல் எடுத்துக் கொண்டு அதன் உடல்மொழியை கூடுமானவரை அவர் வெளிப்படுத்தியிருந்தது நடிப்பில் அவருக்குள்ள ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. (ஆனால் ஒரு பெண்ணின் உடல்மொழிக்கும் திருநங்கையின் உடல்மொழிக்கும் நிறைய வேறுபாடுண்டு).

பச்சா பையா, குறும்படம் ஒரு நகைச்சுவை முயற்சி. ஆக்ஷன் காட்சியை கட் செய்து சொல்லும் போதே அது காமெடியாய்தான் உருமாறப் போகிறது என்பதை எளிதாய் யூகிக்க முடிந்தாலும் அது சண்டைக்காட்சியிலேயே நிகழும் என்பதற்கு மாறாய் குறும்படத்தின் இறுதிப்புள்ளயில் நிகழும் போது உண்மையிலேயே நகைச்சுவை மிளிர்கிறது. போலவே 'விடியல்' குறும்படமும் கண்பார்வையை மீட்டுக் கொண்ட ஒருவன் அதன் பரவசத்துடன் உலகைக் காணும் காட்சிகள். இதிலும் நிறைய வசனம் இல்லை. First Tamil Kiss தமிழ் சமூகத்தில் உள்ள பாலியல் வறட்சி கொண்ட மனோபாவத்தை நகைச்சுவையாகச் சொல்கிறது. விதவிதமான முகங்களையும் பாவங்களையும் காண்பது நல்ல அனுபவம்.

***

இத்தனை குறும்படங்களை உருவாக்கியதின் மூலம் குறும்படங்களை எடுப்பதில் உள்ள நடைமுறைச்சிக்கல்கள், அதன் பட்ஜெட், நடிகர்களை வேலை வாங்குதல், உள்ளிட்ட பல விஷயங்களை ப்ரதீப் கற்றுக் கொண்டிருப்பார் என நம்புகிறேன். இதுவரை அவர் உருவாக்கியதெல்லாம் முயற்சிகளே. இனிதான் அவர் நல்ல குறும்படங்களை உருவாக்கும் அடுத்த தளத்திற்கு நகர்வதை சாத்தியப்படுத்த வேண்டும் என விரும்புகிறேன். உதாரணமாக தமிழில் உள்ள நல்ல சிறுகதைகளை, அதில் உள்ள நல்ல தருணங்களை காட்சி ஊடகத்திற்கேற்ப மாற்றி உருவாக்க முயலலாம்.

இந்த வகையில் நான் பார்த்த சிறந்த குறும்படங்களில் ஒன்றாக, எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதையில் உருவான 'ஒரு கோப்பை தேநீர்' என்கிற இந்தக் குறும்படம். காமிராக் கோணங்கள் முதற்கொண்டு நடிகர்களின் சிறப்பான பங்களிப்பு வரை சிறந்த முறையில் உருவான குறும்படம். வசனங்கள் அதிகம் இறைபடுகின்றன என்பது ஒருகுறை. காவல்துறை பெண்ணாக வருபவரும் கைதியாக வரும் பெண் என இருவருமே நன்றாக நடித்திருந்தார்கள். இதை ப்ரதீப்பிற்கு ஒரு உடனடி முன்மாதிரியாக பரிந்துரைக்கிறேன்.

ப்ரதீப்பிற்கு வாழ்த்துகள். தமிழ் திரையுலகின் புதுஅலை இயக்குநர்கள் இவரைச் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என நம்புகிறேன்.

குறும்படங்கள்












 suresh kannan

No comments: