Tuesday, July 07, 2020

The Great Wall (2016) - ‘விநோத மிருகங்களின் அட்டகாசம்'




நம்ம ஊர் பாகுபலியைப் போல  பிரம்மாண்டமான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் இது. ஆனால் இதில் எதிரிகள் மனிதர்களின் உருவில் இருப்பதில்லை. சீனர்களின் பழைய வரலாற்றையும் உலக அதிசயங்களில் ஒன்றான சீனப்பெருஞ்சுவரையும் ஒட்டி நகரும் திரைக்கதை. கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் வரும் நாயகன் உள்ளூரில் நிகழும் போராட்டத்தைக் கண்டு மனம் மாறி  தியாக மனப்பான்மையுடன் தானும் இணையும் கதைகளின் வரிசையில் இதுவும் ஒன்று.

***

கி.பி 1010. சொங் அரசமரபு சீனாவை ஆட்சி செய்து கொண்டிருந்த காலக்கட்டம். சீனர்கள் ரகசியமாக கண்டுபிடித்திருக்கும் வெடிமருந்தை தேடி ஐரோப்பிய கூலிப்படை ஒன்று கிளம்புகிறது. வழியில் உள்ள கொள்ளைக்காரர்களுடன் நிகழும் கடுமையான சண்டையில் இந்தக் குழுவில் பலர் இறக்கிறார்கள்.

மிஞ்சுவது சிலர் மட்டுமே. அதில் நாயகன் வில்லியமும் அவனுடைய நண்பன் டோவரும் இருக்கிறார்கள். திரும்பி விடலாமா, பயணத்தை தொடரலாமா என்கிற விவாதம் அவர்களுக்குள் நடக்கும் போது விநோதமான ஏதோவொன்று அவர்களைத் தாக்குகிறது. நிச்சயம் அது மனித உருவமல்ல. வில்லியம் ஆவேசத்துடன் தன் வாளைச் சுழற்றுகிறான். எதுவென்றே தெரியாத விநோதமான மிருகத்தின் கை மட்டும் துண்டாக விழுகிறது. மற்றவர்கள் இறந்து போக வில்லியமும் அவனுடைய நண்பனும் மட்டுமே பிழைக்கிறார்கள்.

பயனில்லை என்று கருதி மற்றவர்கள் கைவிட்ட காந்த துண்டு ஒன்றை வில்லியம் பத்திரப்படுத்தியிருந்தான். மற்றவர்களைக் கொன்ற மிருகத்தால் வில்லியமையும் அவனது நண்பனையும் கொல்ல முடியாமல் போவதற்கு காந்தமே காரணம். இந்த உண்மை அப்போது அவனுக்குத் தெரியவில்லை. மிருகத்தின் கையையும் காந்தத்தையும் எடுத்துக் கொண்டு பயணிக்கிறார்கள்.

மறுநாள் மறுபடியும் கொள்ளைக் கூட்டம் துரத்துகிறது. வேகமாகத் தப்பிச் சென்று ஓரிடத்தை அடைந்தவுடன்  இருவரும் திகைத்துப் போய் நிற்கிறார்கள். பிரம்மாண்டமான சுவர். அதன் மேல்  கோட்டை. ஆயிரக்கணக்கான சீன போர் வீரர்கள்.  இவர்களைச் சுற்றி அம்புகள் சரசரவென பாய்ந்து வட்டம் போட்டு நிற்கின்றன. வேறு வழியின்றி இருவரும் சரண் அடைகிறார்கள்.

***

வில்லியம் வைத்திருக்கும் மிருகத்தின் கையை பார்த்து விட்டு சீன போர் அதிகாரிகள் அதிர்ச்சியும் திகைப்பும் அடைகிறார்கள்.   விநோத மிருகத்தை ஒரு நபர் கொல்வது சாத்தியமேயில்லை. 'நீீயா கொன்றாய்?' என்று திரும்பத் திரும்ப கேட்கிறார்கள். சீனர்களின் மரபு சார்ந்த நம்பிக்கைப் படி அதுவொரு தீய உயிரினம். 60 வருடங்களுக்கு ஒரு முறை நகரை நோக்கி  படையெடுத்து வரும். அதற்காகத்தான் பெரும்படையுடன் சுவரின் அருகில் காவல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சில நாட்களுக்கு முன்பே அதன் நடமாட்டம் துவங்கி விட்ட விஷயம் வில்லியமின் மூலமாகத்தான் தெரிய வருகிறது. இருவரையும் கைதிகளாக வைக்கிறார்கள்.

மறுநாள் - விநோத மிருகங்கள் ஆயிரக்கணக்கில் படை படையாக வந்து சுவரின் மீது ஆவேசமாக ஏற முயல்கின்றன. பெண்கள் அணி உட்பட  தயாராக இருந்த போர் வீரர்கள் பல்வேறு உத்திகளின் மூலம் அவற்றை எதிர்த்து கடுமையாக போர் புரிகிறார்கள். இரு தரப்பிலும் காயமும் சாவும். உயிரைப் பணயம் வைத்து தடுத்தாலும் ஒன்றிரண்டு மிருகங்கள் சுவரின் மீது ஏறி வீரர்களை பயங்கரமாகத் தாக்கத் துவங்குகின்றன.

இதைப் பார்த்த வில்லியம் தன் நண்பனோடு இணைந்து அந்த மிருகங்களை போராடிக் கொன்றொழிக்கிறான். இதனால்  சீனப் படையின் ஜெனரலுக்கு இவன் மீது நல்ல அபிப்ராயம் உருவாகிறது. கைதிகளாக அல்லாமல் விருந்தினராக நடத்துகிறார்கள்.

***

அன்றிரவு மிருகங்கள் மீண்டும் வந்து தாக்குகின்றன. அந்தச் சண்டையில் ஜெனரல் இறந்து போகிறார். இவைகளை எவ்வாறு தடுப்பது என்று வில்லியம் யோசிக்கிறான். இத்தனை கொடூரமான மிருகத்தை எவ்வாறு முன்பு தம்மால்  கொல்ல முடிந்தது என யோசிக்கிறான். தன் கையில் அப்போது காந்தம் இருந்துதான் காரணம் என யூகிக்கிறான். எனவே உயிருடன் ஒரு மிருகத்தைப் பிடித்து அதைப் பரிசோதித்துப் பார்ப்பது என முடிவு செய்கிறான்.

மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு ஒரு மிருகத்தை பிடிக்கிறார்கள். வில்லியம் யூகித்தது சரிதான்.  பிடிபட்ட மிருகத்தின் அருகில் காந்தத்தை கொண்டு சென்றால் அது தன் சக்தியை இழந்து நிற்கிறது. இந்தக் கண்டுபிடிப்பு வெற்றியடைவது உற்சாகமளிக்கிறது.

இதன் இடையில் வில்லியமின் நண்பன் இவனை நச்சரித்துக் கொண்டேயிருக்கிறான். "நீ என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாய். இவர்களுக்கு உதவி செய்து கொண்டு இங்கேயே தங்கி விடப் போகிறாயா? இங்கிருந்து வெடிமருந்தை லவட்டிக் கொண்டு போவதுதானே நம் திட்டம்?"

வில்லியமிற்கு தடுமாற்றமாக இருக்கிறது. என்றாலும் நண்பன் துரோகித்து வெடிமருந்தை திருடிக் கொண்டு கிளம்பும் போது தடுக்கப் பார்க்கிறான்.  ஆனால் சந்தர்ப்ப சூழலால் இவன் குற்றவாளியாக பிடிபடுகிறான்.  கண்ணால் பார்த்த ஒருவன் இவன் சார்பாக சாட்சி சொல்ல தப்பிக்கிறான்.


***

மிருகங்கள் தலைநகரை நோக்கிச் செல்வதாக தகவல் கிடைக்கிறது. பெண் ஜெனரல் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அங்கு கிளம்புகிறார்கள். வில்லியம் விடுதலை விட்டாலும் செல்ல மனமின்றி அவர்களுடன் கிளம்புகிறான். மிருகங்கள் படைபடையாக அணிவகுத்து அனைத்தையும் அழிக்கின்றன.

மிருகங்களின் தலைவியை அழித்து விட்டால் அனைத்து மிருகங்களும் தன்னாலேயே செயல் இழந்து விடும் என தெரிகிறது. தான் முன்னர் பிடித்து வைத்திருந்த மிருகத்தின் மூலம் அதற்கான வியூகத்தை அமைக்கிறான் வில்லியம். சில பல கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு காந்தத்தின் மூலமும் வெடிமருந்தின் மூலம் தலைவியைக் கொல்ல, மற்ற மிருகங்கள் பொல பொலவென சரிகின்றன. தங்களின் நகரத்தைக் காப்பாற்றியதற்காக பெண் ஜெனரல் நன்றி சொல்கிறாள்.

வெடிமருந்து திருடியதற்காக பிடிபட்ட தன் நண்பனை விடுவித்துக் கொண்டு வில்லியம் கிளம்புவதோடு படம் நிறைகிறது.

பிரபல சீன இயக்குநரான Zhang Yimou அட்டகாசமாக இயக்கியுள்ளார். மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் நிகழும் ஆவேசமான போரை காட்சி வடிவில் பார்த்தால்தான் அதன் பிரம்மாண்டம் தெரியும்.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

No comments: