Thursday, July 16, 2020

Frantz (2016) - ‘ரகசியமானது காதல்'





இதுவொரு விநோதமான காதல்கதை. தன் காதலனைக் கொன்றவனையே ஒரு பெண்ணால் காதலிக்க முடியுமா? அப்படியொரு வசீகரமான சிக்கலுடன் நகர்கிறது இந்த திரைப்படம்.

***

ஜெர்மனியில் உள்ள ஒரு சிறுநகரம். முதலாம் உலகப்போர் முடிந்திருந்த சமயம். போரில் இறந்து போன தன் காதலன் Frantz -ன் கல்லறையில் மலர்கள் வைக்க துயரத்துடன் செல்கிறாள் அன்னா. அங்கு ஒரு ஆச்சரியம். அவளுக்கு முன்னரே எவரோ வந்து  மலர் வைத்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். விசாரிக்கும் போது பிரான்ஸில் இருந்து வந்திருக்கும் புதிய இளைஞனைப் பற்றிய தகவல் கிடைக்கிறது.

தன் காதலனின் பெற்றோருடன் தங்கியிருக்கிறாள் அன்னா.  பிரான்ஸ் இளைஞனான அட்ரியன் அவர்களின் வீட்டிற்கு வருகிறான். அப்போதுதான் முடிந்திருக்கும் போரின் பகை காரணமாக ஜெர்மானியர்களும் பிரெஞ்சுக்காரர்களும் பரஸ்பரம் வெறுத்துக் கொள்கிறார்கள். வந்தவன் பிரெஞ்சுக்காரன் என்பதால் என்னவென்று விசாரிக்காமலேயே Frantz -ன் தந்தை அவனை 'வெளியே போ' என துரத்துகிறார். 'இறந்து போன தங்களுடைய மகனின் நண்பனாக  அவன் இருக்கலாமே' என்கிறாள் அவருடைய மனைவி.

விடுதியில் தங்கியிருக்கும் அவனுக்கு அன்னா கடிதம் எழுதி வீட்டிற்கு வரவழைக்கிறாள். வந்தவன் Frantz -ன் நண்பன் என்று தெரிய வருகிறது.  பாரிஸ் நகரத்தில் தானும் Frantz -ம் எப்படியெல்லாம் பழகினோம் என்று விவரிக்கிறான் அட்ரியன். Frantz -ன் பெற்றோர்கள் நெகிழ்ந்து போகிறார்கள். புதியவன் மீது பாசம் கொள்ளத் துவங்குகிறார்கள்.  காதலன் இறந்த துக்கத்தில் இருக்கும் அன்னாவிற்கும் அதே நிலைமை. புதியவன் மீது நேசம் உருவாகிறது. அவனுடைய நல்ல குணத்தால் ஈர்க்கப்படுகிறாள்.

அட்ரியனை உள்ளூர் ஜெர்மானியர்கள் வெறுக்கிறார்கள். எனவே தன் ஊருக்கு கிளம்ப முடிவு செய்கிறான். ஆனால் ஒரு கணத்தில் குற்றவுணர்வு தாங்காமல் அன்னாவிடம் தன் தவற்றை கண்ணீருடன் ஒப்புக் கொள்கிறான். ஆம்.போர் முனையில் Frantz  -ஐ கொன்றது இவன்தான். மன்னிப்பு கேட்பதற்காகவே வந்திருக்கிறான். பாரிஸில் நண்பர்களாக பழகிக் கொண்டிருந்தோம் என்று அவன் சொன்னதெல்லாம் பொய்.

அட்ரியன் சொன்ன வாக்குமூலம் அனைத்தையும் Frantz -ன் பெற்றோரிடம் கூறாமல் மறைத்து விடுகிறாள் அன்னா. பதிலாக, அட்ரியனின் தாயாருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவன் அவசரமாக சென்று விட்டதாக பொய் சொல்கிறாள்.  அது மட்டுமல்லாமல், அட்ரியன் அங்கிருந்து அனுப்பும் மன்னிப்புக் கடிதத்தை அழித்து விட்டு தானே ஒரு கடிதத்தை உருவாக்கி அவர்களுக்கு வாசித்துக் காட்டுகிறாள்.  உண்மை தெரியாத Frantz -ன் பெற்றோர் 'நல்ல பையன்.. நன்றாக இருக்கட்டும்' என வாழ்த்துகிறார்கள்.

தான் சொன்ன பொய்க்காக தேவாலயம் சென்று பாவ மன்னிப்பு கேட்கிறாள் அன்னா. ஒரு சமயத்தில் அவள் அட்ரியனுக்கு அனுப்பும் கடிதம் திரும்பி வந்து விடுகிறது. தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்படுகிறாள்.

அவளுக்கு அட்ரியனைக் காண வேண்டுமென்று தோன்றுகிறது. Frantz -ன் பெற்றோர்களும் அதையே சொல்கிறார்கள். ' இறந்து போன எங்கள் மகனையே நினைத்துக் கொண்டிருக்காதே. பிரான்ஸுக்குச் சென்று அவனைத் தேடு. உன் புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்".

பிரான்ஸ் செல்கிறாள் அன்னா. ஜெர்மனி தேசத்தவள் என்பதால் வெறுப்புடன் பார்க்கப்படுகிறாள். முன்பு அட்ரியனுக்கு ஏற்பட்ட அதே நிலைமை. சில பல சிரமங்களுக்குப் பிறகு அட்ரியனின் வீட்டைக் கண்டுபிடிக்கிறாள். ஆனால் அவளுக்கு அங்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.

ஜெர்மனியில் இருந்து திரும்பிய அட்ரியன் குற்றவுணர்வில் இருக்கிறான். தற்கொலை முயற்சியும் தோற்றுப் போக பாரிஸை விட்டு தன் பிறந்த ஊருக்குச் சென்று விடுகிறான். இளம் வயது தோழியை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறான். அவனுடைய தாயும் அதைத்தான் விரும்புகிறாள்.

அன்னாவின் காதலுக்கு ஏற்படும் இன்னொரு தோல்வி. தங்களின் காதலை உணர்ந்தாலும் அதை வெளிப்படுத்த முடியாத  சூழல் காரணமாக அன்னாவும் அட்ரியனும் தத்தளிக்கிறார்கள். முத்தங்களுடனும் கண்ணீருடனும் பிரிகிறார்கள்.

ஊர் திரும்ப விரும்பாத அன்னா, Frantz -ன்பெற்றோர்களுக்கு கடிதம் எழுதுகிறாள். இம்முறையும் பொய்தான்.  "நான் அட்ரியனை சந்தித்தேன்.. பிரியமாகப் பழகுகிறார். புதிய வாழ்க்கைக்காக இங்கேயே தங்குகிறேன்'

தற்கொலை எண்ணத்தை கைவிட்டு 'வாழப்போகிறேன்' என்கிற உறுதியுடன் அன்னா ஓர் ஓவியத்தை பார்ப்பதோடு படம் நிறைகிறது.

***

பழைய மற்றும் புதிய காதல்களின் இடையே அன்னா தவிப்பதுவே இந்த திரைப்படத்தின் மையம். தேசங்களுக்கு இடையே நிகழும் போர் காரணமாக தனிநபர்களுக்குள் உருவாகும் வெறுப்பு எத்தனை அபத்தமானது என்பதை  உணர முடிகிறது.

இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கும் விதம் சுவாரசியமானது. நிகழ்காலம் முழுவதும் கறுப்பு -வெள்ளையில் சித்தரிக்கப்படுகிறது. கடந்த காலம் வண்ணத்தில். ஆனால் இந்த வரிசை சமயங்களில் எங்கெல்லாம் மாறுகிறது என்பதைக் கவனிப்பது கூடுதலான சுவாரசியமாக இருக்கிறது.

குடும்ப உறவுகளில் உள்ள புதிர்களை ஆராயும் விதமாக தம் திரைப்படங்களை தொடர்ந்து உருவாக்கும் François Ozon இத்திரைப்படத்தை அற்புதமாக இயக்கியிருக்கிறார். மென்மையான பின்னணி இசை படத்தோடு பொருந்தி ஒலிக்கிறது. அன்னாவாக Paula Beer -ன் நடிப்பு அற்புதம்.

கறுப்பு -வெள்ளையில் ஒரு வண்ணமயமான காதல் கவிதை என இந்த திரைப்படத்தைச் சொல்லலாம்.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

No comments: