Sunday, July 19, 2020

RAW (2016) - ‘ரத்த ருசி'





எச்சரிக்கை: இதுவொரு விவகாரமான  ஹாரர் வகை திரைப்படம். மென்மையான மனித உணர்வுகளை சங்கடப்படுத்தக்கூடிய காட்சிகள் நிறைய உண்டு. எனவே முதிர்ச்சியான பார்வையாளர்களுக்கு மட்டுமேயானது.

மனித மனதைப் போல விசித்திரமான வஸ்து இந்த உலகத்தில் வேறெதாவது இருக்குமா என தெரியவில்லை. நம் மனதின் சில ரகசியமான, இருளான பகுதிகளை நாமே அறிந்திருக்க மாட்டோம் என்பதுதான் இதிலுள்ள கூடுதல் சுவாரசியம். குரூரமான இச்சை, வன்முறை மீது நமக்குள்ள தன்னிச்சையான ஆழ்மன ஈர்ப்பு குறித்து உளவியல் நோக்கில் ஆராய்கிறது இந்த பிரெஞ்சு திரைப்படம்.

**
வெட்னரி டாக்டருக்கு படிப்பதற்காக முதல் நாள் கல்லூரிக்குச் செல்கிறார் ஜஸ்டின். அவளை விட்டுவர பெற்றோரும் உடன் செல்கிறார்கள். செல்லும் வழியில் ஒரு உணவகத்தில் சாப்பிடும் போது ஜஸ்டினின் உணவில் ஒரு இறைச்சித்துண்டு கலந்திருக்கிறது. கோபப்படும் தாய் ‘நாங்கள் சுத்த சைவம்’ என்று உணவு பரிமாறுவரிடம் சண்டையிடுகிறார். அது மட்டுமல்ல, இறைச்சியுணவினால் ஜஸ்டினுக்கு ஒவ்வாமை உண்டாகி விடும்.

ஜஸ்டினின் மூத்த சகோதரியான அலெக்சியா அதே கல்லூரியில் படிக்கிறாள். சீனியர். ஜஸ்டினை அழைத்துச் செல்ல அவள் வருவதில்லை. தன்னைத் தானே உற்சாகப்படுத்திக் கொண்டு கல்லூரிக்குள் செல்கிறாள் ஜஸ்டின்.

நடுராத்திரியில் ஒரு கும்பல் அவளது உறக்கத்தைக் கலைத்து அழைத்துச் செல்கிறது. முதல் வருட மாணவர்களுக்கான ராகிங். மதுவும் அரைகுறை ஆடை நடனங்களும் கரைபுரண்டு ஓடுகின்றன. “சீனியர்களை மதித்து நடந்து கொள்ளுங்கள்’ என்று முதல் வருட மாணவர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள். குதிரையின் ரத்தம் அவர்கள் மீது கொட்டப்படுகிறது. அது வழக்கமான சடங்காம்.

அத்தோடு முடியவில்லை. முதல் வருட மாணவர்கள் முயலின் சிறுநீரகத்தை பச்சையாக தின்னும் சடங்கு வேறு நடக்கிறது. ஜஸ்டின் இதைச் செய்ய மறுக்கிறாள். ‘என் அக்காவும் இங்குதான் படிக்கிறாள். எங்கள் குடும்பம் சைவ பழக்கத்தைச் சார்ந்தது’ என்கிறாள்.

அவளது அக்கா அலெக்ஸை அழைக்கிறார்கள். அவள் வந்தவுடன் ‘இங்கு இப்படித்தான். சாப்பிடு’ என்று கட்டாயப்படுத்தி தங்கையை சாப்பிட வைக்கிறாள். அன்றைய இரவு ஜஸ்டினின் உடல் முழுவதும் அரிப்பு தோன்றுகிறது. அதைச் சொரிய சொரிய ரத்தக் களறியாகிறது. ‘நீ சாப்பிட்ட ஏதோவொரு உணவு ஒத்துக் கொள்ளாததால் இந்த விளைவு’ என்கிறார் மருத்துவர். ஜஸ்டினுக்கு அலெக்ஸின் மீது கோபம் வருகிறது. இருவருக்குள் மெல்ல பகைமை மூள்கிறது.

தீவிரமான சைவ உணவுப்பழக்கம் கொண்ட ஜஸ்டினுக்கு மாமிசத்தின் மீது மெல்ல ஈர்ப்பு உண்டாகிறது. குளிர்பதனப் பெட்டியில் இருந்து பச்சையான மாமிசத்தை எடுத்து உண்கிறாள். சில மனச்சிக்கல்கள் அவளுக்கு உருவாகின்றன. சகோதரியிடம் சென்று அரவணைப்பைக் கோருகிறாள். இருவரும் மகிழ்ச்சியாக பேசிக் கொள்கிறார்கள்.

கத்தரிக்கோல் கொண்டு தனக்கு உதவ வந்த அக்காவை வலி தாங்காமல் ஜஸ்டின் உதைத்து விடுகிறாள். அந்த விபத்தில் அலெக்ஸின் விரல் துண்டாகி ரத்தம் சொட்ட மயங்கி விழுகிறாள். ஆம்புலன்ஸ் வருவதற்காக காத்திருக்கும் நேரத்தில்  அந்த விபரீதமான எண்ணம் உருவாகிறது.

வெட்டுப்பட்ட விரலை ஆவலுடன் எடுத்துப் பார்க்கும் ஜஸ்டின் பிறகு மெல்ல அதை ருசித்து உண்ணத் துவங்குகிறாள். மயக்கம் தெளிந்து எழும் அலெக்ஸ் இதை அதிர்ச்சியாக பார்க்கிறாள். அந்த விரலை அவர்களின் வளர்ப்பு நாய் தின்று விட்டதாக இருவரும் பொய் சொல்லி சமாளித்தாலும் மறுபடியும் இருவருக்குள்ளும் பகைமை தோன்றுகிறது.

ஜஸ்டினை அலெக்ஸ் ஒரு நாள் பிரதான சாலைக்கு அழைத்துச் செல்கிறாள். பின்பு எதற்கோ காத்திருக்கிறாள். வேகமாக வரும் ஒரு வாகனத்தின் முன்பு விழுகிறாள். கார் விபத்துக்குள்ளாக்கி உள்ளே இருப்பவர்கள் மரணமடைகிறார்கள். அருகில் செல்லும் அலெக்ஸ், இறந்தவனின் தலையை கடிக்கத் துவங்குகிறாள். அக்காவிற்கும் இந்த விபரீதமான பழக்கம் இருப்பதைக் கண்டு ஜஸ்டின் அதிர்ச்சியடைகிறாள்.

ஜஸ்டினுக்கு குழப்பமான கனவுகள் வருகின்றன. தன்னுடைய அறையில் இருக்கும் ஆண் நண்பனின் உடலை வெறித்துப் பார்க்கிறாள். தன்னிடம் தவறாக நடக்க முயலும் ஒருவனின் வாயைக் கடித்து விடுகிறாள். உள்ளே மாட்டியிருக்கும் அவனுடைய பல்லைத் துப்புகிறாள்.

தன்னுடன் உறவுகொள்ள முயலும் ஆண் நண்பனையும் உறவின் இடையே தன்னிச்சையாக கடிக்க முயல்கிறாள். அவன் பயந்து விடுகிறான். என்றாலும் இவள் மீது அனுதாபம் உண்டாகிறது. ஜஸ்டின் மது போதையில் செய்த ஒரு விபரீதமான காரியம் வீடியோ எடுக்கப்பட்டு கல்லூரி முழுக்கப் பரவுகிறது. ஜஸ்டினின் நண்பன் அதைப் போட்டுக் காட்டுகிறான். ஆத்திரத்தின் உச்சிக்கே செல்லும் ஜஸ்டின் தன் சகோதரியை தேடிச் சென்று தாக்குகிறாள்.

ஒரு நாள் – பக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் ஆண் நண்பனைப் பார்க்கிறாள். பின்பு மெல்ல எழுந்து பார்க்கும் போது அவனுடைய உடலின் ஒரு பகுதி முழுக்க காணமாற் போய் ரத்தக் களறியாக இருக்க, அவன் இறந்து விட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறாள்.. தான்தான் அவனைக் கடித்து தின்று விட்டோமோ என்று அழுகிறாள். அறையின் மூலையில் எதையோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கும் அக்கா அதைச் செய்திருப்பதை உணர முடிகிறது. அலெக்ஸ் சிறையில் அடைக்கப்பட, ஜஸ்டின் தன் தந்தையுடன் உரையாடும் காட்சியோடு படம் நிறைகிறது. ஜஸ்டினின் தாய்க்கும் இது போல் மனித மாமிசத்தை ருசிக்கும் பழக்கம் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறாள். ‘எல்லாம் சரியாகி விடும்’ என்கிறாள் அவளுடைய தந்தை.

**

Julia Ducournau என்கிற பெண் இயக்குநரின் இந்த திரைப்படம் சர்வதேச விழாக்களில் விருதைப் பெற்றுள்ளது. விபரீதமான காட்சிகளின் வழியே சொல்லப்பட்டாலும் நம்முள் உறைந்திருக்கும் மிருக குணங்கள் பாரம்பரிய வழியாக தொடர்ந்து வரும் ஆபத்தை குறியீட்டுத் தன்மைகளுடன் சுட்டிக் காட்டுகிறது. காட்சிகளின் அருவருப்புத் தன்மைகளை விலக்கி விட்டு இதன் முக்கி்யமான மையத்திற்காக இத்திரைப்படத்தை பெரியவர்கள் பார்க்கலாம்.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

No comments: