Sunday, July 26, 2020

Sarmasik (2015) - ‘கப்பலுக்குள் ஒரு பிக்பாஸ் விளையாட்டு'

ஏறத்தாழ முழு திரைப்படமும் ஒரு கப்பலுக்குள் நிகழ்வது போன்ற சுவாரசியம் மற்றும் திகிலான திரைக்கதையைக் கொண்டது Sarmasik. வேறு வழியில்லாத சூழலில் கப்பலின் உள்ளே ஆறு மனிதர்கள் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. உணவுப் பற்றாக்குறை, பாதுகாப்பற்ற உணர்ச்சி, எதிர்கால பயம் உள்ளிட்ட சில காரணங்களால் அவர்களுக்குள் மெல்ல மெல்ல ஏற்படும் உளவியல் மாற்றங்களையும் அதன் பயங்கரங்களையும் மிக நுட்பமாக பதிவாக்கியிருக்கிறது இந்த துருக்கி நாட்டு திரைப்படம். இளம் இயக்குநர் Tolga Karaçelik-ஆல் உருவாக்கப்பட்டுள்ள இது பல விருதுகளைப் பெற்றுள்ளது.

**

அந்தக் கப்பலுக்கு துறைமுகத்தை நெருங்க முடியாத சிக்கல் ஏற்படுகிறது. அதன் உரிமையாளர் திவாலாகி விட்டதாக கப்பலின் கேப்டனுக்கு தகவல் வருகிறது. உள்ளே இருக்கும் பணியாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வரவில்லை. கப்பலில் உணவு, எரிபொருள் எல்லாம் குறைவாக இருக்கிறது. சரியான நிலைமை தெரியும் வரை கப்பல் கரையருகே நிற்க வேண்டிய சூழல்.

ஒரு கப்பலை நிர்வகிப்பதற்கு அடிப்படையாக தேவைப்படும் ஐந்து நபர்களை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவர்களை அனுப்பி விடுகிறார் கேப்டன். ‘இனி நாம் இணைந்துதான் இந்தக் கப்பலை காப்பாற்ற வேண்டும். நிலைமை சீரடைந்ததும் உங்களுக்கு சம்பளம் கிடைத்து விடும்’ என்று மற்றவர்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார். அவரின் சொல்லுக்கு மற்றவர்கள் கட்டுப்பட்டாலும் உள்ளுக்குள் சற்று அவநம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

அரசாங்கத்தால் தன்னுடைய வீடு இடிக்கப்படவிருப்பதை தொலைக்காட்சியின் மூலம் அறியும் நடிர் வீட்டுக்குப் போக துடிக்கிறான். சமையல் பணியில் இருப்பவன் அவன். “அங்கே போய் நீ என்ன செய்யப் போகிறாய்? இங்கே இருந்தாலாவது சம்பளம் கிடைக்கும்’ என்கிறார் கேப்டன். அரை மனதுடன் சம்மதிக்கிறான் நடிர். “உன் மீது எனக்கு நம்பிக்கையுள்ளது. இங்குள்ள மற்றவர்களை நீதான் கண்காணிக்க வேண்டும்” என்கிறார்.

இதைப் போலவே மூத்த பணியாளரான இஸ்மாயிலை தனது வலது கரமாக நியமிக்கிறார் கேப்டன். அவரிடமும் அதையே சொல்கிறார். ‘நான் உன்னை நம்புகிறேன்”. இப்படி ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக சொல்வதின் மூலம் ‘தாங்கள் முக்கியமானவர்கள்’ என்பதைப் போல அவர்களை உணரச் செய்யும் தந்திரம்.

ஆனால் புதிதாக பணியில் இணைந்திருக்கும் சென்க் கலகவாதியாக இருக்கிறான். ‘இவர்கள் நம்மை ஏமாற்றப் பார்க்கிறார்கள். நமக்கு சம்பளம் வராது. நாம் இங்கேயே இருந்து சாக வேண்டியதுதான்” என்று மற்றவர்களைக் குழப்புகிறான். முதலில் ஒழுங்காக இருக்கும் ஆல்பரும் இவனுடன் இணைந்து கொள்கிறான். இருவரும் ஒழுங்காக வேலை செய்யாமல் குடித்து விட்டு தூங்குகிறார்கள்.

இஸ்மாயில் சொல்லும் வேலையைச் செய்யாமல் டபாய்க்கிறான் சென்க். இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. கேப்டனிடம் சென்று புகார் செய்கிறார் இஸ்மாயில். ‘நிலைமை சரியில்லை. அவன் வேலையை நீ செய்’ என்கிறார் கேப்டன் கறாராக. கேப்டனை எதிர்க்கவும் முடியாமல் சென்க்கை சகித்துக் கொள்ளவும் முடியாமல் தத்தளிக்கிறார் இஸ்மாயில்.

ஒவ்வொருவரிடமும் மெல்ல மெல்ல பகையும் கசப்பும் உருவாகிறது. எப்போது வேண்டுமானாலும் அங்கு கலவரம் உருவாகும் நிலைமை. தம்மை மற்றவர்கள் தாக்கி விடுவார்களோ என்று ஒவ்வொருவருமே சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது சார்ந்த பதட்டமும் திகிலும் நிழலைப் போல அவர்களை துரத்திக் கொண்டேயிருக்கிறது.

இதற்கிடையில் குர்த் என்பவன் கப்பலில் இருந்து காணாமற் போகிறான். சென்க் அவனை கப்பலில் இருந்து தள்ளிக் கொன்றிருக்கலாம் என்று தோன்றுகிறது. குர்த்தின் ஆவி கப்பலுக்குள் சுற்றிக் கொண்டிருக்கிறது என்று சமையல்காரனான நடிர் அலறுகிறான். மற்றவர்கள் அவனை சமாதானப்படுத்துகிறார்கள்.

தங்களுக்கு கிடைக்கப் போகும் சம்பளத்தை விடவும் இந்தக் கப்பலில் இருந்து எப்போது வெளியேறுவது என்கிற கேள்வியே அனைவரின் மனதிலும் முதன்மையாக இருக்கிறது. கேப்டனிடம் கேட்கலாம் என்கிறான் சென்க். மற்றவர்கள் தயங்குகிறார்கள். என்றாலும் தயக்கத்துடன் சென்று கேட்கிறார்கள். ஏற்கெனவே நிறைய சிக்கலில் இருக்கும் அவர் கோபமாக கத்தி இவர்களை துரத்துகிறார்.

நாட்கள் கடக்க கடக்க இன்னமும் நிலைமை சிக்கலாகிறது. கூண்டில் அடைக்கப்பட்ட மிருகங்கள் போல் ஆகிறார்கள். எந்த நேரத்திலும் எவராவது கொல்லப்படலாம். வெறுப்பும் துரோகமும் எரிச்சலும் நிறைந்து கிடக்கிறது.  குர்த்தின் ஆவி கப்பலுக்குள் சுற்றுவதை இப்போது இஸ்மாயில் காண்கிறார். மன உளைச்சல் தாங்காத நடிர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறான். சென்க்கின் மனநிலை பிசகி உளற ஆரம்பிக்கிறான். தன்னைக் கொன்று விடுவார்களோ என்கிற பயத்தில் அறைக்குள் அடைந்து கொள்கிறார் கேப்டன்.

இறுதியில் அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை பூடகமான பயங்கரத்துடன் விளக்குகிறது திகிலான காட்சிகள்.

**

மனிதன் கூடிவாழ விரும்பும் சமூக விலங்குதான். ஆனால் சிக்கலான சந்தர்ப்பங்களில் அவன் சுயநலம் மிகுந்து எழும் வெறும் விலங்காக மாறிப் போகிறான். ஓரிடத்தில் அடைபடும் மனிதர்களுக்கிடையில் மெல்ல மெல்ல மாறும் விபரீத நடத்தைகளைப் பற்றி மிக நிதானமாகவும் அதே சமயத்தில் நுட்பமாகவும் இந்தப் படம் விவரிக்கிறது.

இத்திரைப்படமும் ஏறத்தாழ ஒரு பிக்பாஸ் விளையாட்டுதான். ஒருவர் மீது மற்றவர்கள் சந்தேகம் கொள்கிறார்கள். புறம் பேசுகிறார்கள். துரோகம் செய்கிறார்கள். தலைமைப் பொறுப்பில் இருக்கும் கேப்டன், மிகுந்த சாமர்த்தியத்தோடு அவர்களை கறாராக மேய்த்து சமாளித்தாலும், நிலைமை சிக்கலாகும் போது தோற்றுப் போகிறார். அங்குள்ள சிக்கலை மேலும் ஊதி வளர்க்கிறான் முரடனான சென்க்.

ஆனால் சற்று நிதானமாக யோசித்துப் பார்த்தால் சூழல்தான் அவர்களை மனச்சிதைவிற்கு இட்டுச் செல்கிறது என்பது நமக்குப் புலப்படும். அங்குள்ள பணியாளர்கள் ஒவ்வொருவருக்குமே தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. அதைச் சமாளிப்பதற்கான பணத்திற்குத்தான் கடுமையான இந்தப் பணியில் வந்து இணைகிறார்கள். ஆனால் எப்போது சம்பளம் கிடைக்கும் என்று தெரியாத சூழலில் கப்பலில் அடைபட்டு கடுமையாக வேலை செய்ய வேண்டும் என்கிற கட்டாயத்திற்கு உள்ளானால் ஞானியாக இருப்பவன் கூட சாத்தானாக மாறி விடுவான்.

சிக்கலான சூழலில் மனிதர்களிடம் ஏற்படும் இந்த நடத்தை மாற்றத்தை மிக நுட்பமாக விவரிக்கும் திரைப்படம்.  தனது முதல் படைப்பிலேயே சர்வதேச சிக்ஸர் அடித்திருக்கிறார் இயக்குநர்.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

No comments: