Wednesday, July 22, 2020

Megan Leavey -2017 - ‘ரெக்ஸ் எனும் நண்பன்'



வெடிகுண்டு மிரட்டல் இருப்பதாக தகவல் வரும் பகுதிக்கு கவச உடை அணிந்து நாயுடன் வரும் ஆசாமியைப் பார்த்திருப்போம். அந்த மனிதனுக்கும் நாய்க்குமான நேசத்தைப் பற்றி நாம் எப்போதாவது யோசித்துப் பார்த்திருப்போமா? அப்படியொரு நெகிழ்ச்சியான உறவை சித்தரிக்கும் திரைப்படம் இது.

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில், அமெரிக்க ராணுவத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணுக்கும் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் ஒரு மோப்ப நாய்க்கும் இடையிலான பாசவுணர்வு அற்புதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

**

மேகன் லீவே ஓர் இளம்பெண். அவளுடைய பெற்றோர்கள் பிரிந்திருப்பதால் ஏற்படும் குடும்ப பிரச்சினை காரணமாக அன்பிற்கு ஏங்குபவள். அவளுக்கு பிடித்தமான பணி ஏதும் அமைவதில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போகிறது. ராணுவத்தில் இணைவதற்கான அறிவிப்பை பார்த்ததும் அங்கு சென்று இணைகிறாள்.

அங்கு தரப்படும் கடுமையான பயிற்சிகளை மேகனால் தாக்குப் பிடிக்க முடிவதில்லை. நிறைய சொதப்புகிறாள். மோப்ப நாய்கள் இருக்கும் பகுதியை சுத்தம் செய்ய அனுப்புகிறார்கள். வாழ்க்கையை நொந்து கொண்டே நாய்களின் மலத்தை சுத்தம் செய்கிறார்.

ரெக்ஸ் என்கிற முரட்டுத்தனமான நாய் ஒன்று கூண்டில் இருக்கிறது. இவளைப் பார்த்ததும் ஆக்ரோஷமாக குரைக்கிறது. இவளுக்கும் கோபம் வந்து திட்டுகிறாள். சந்தேகப்படும் நபர்கள் தப்பியோடினால் நாய்கள் கவ்வி பிடிப்பதற்கான பயிற்சி நடக்கிறது. நாய்களின் பயிற்சிக்காக மேகனை ஓடச் சொல்கிறார்கள். பயந்து கொண்டே அதற்கு உடன்படுகிறாள்.

பயிற்சிக்காக அடுத்து ஒரு நாய் வருகிறது. அதனைப் பார்த்ததும் மேகன் அதிர்ந்து போகிறாள். கூண்டில் இருக்கும் தைரியத்தில் இவள் கர்ண கடூரமாக திட்டிய நாய்தான் அது. ரெக்ஸ். அது நிச்சயம் தன்னை பழிவாங்கப் போகிறது என மேகன் நினைக்கிறாள். இவள் பயந்தது போலவே அது ஆக்ரோஷமாக இவளைத் துரத்தி கடிக்கிறது.

ரெக்ஸிற்கு பயிற்சியளிக்கும் நபர் சில காரணங்களால் விலகி விடவே, அந்தப் பணியை மேகனால் செய்ய முடியுமா என கேட்கிறார்கள். உள்ளுற பயம் இருந்தாலும் ரெக்ஸிடம் பழகத் துவங்குகிறாள் மேகன். மெல்ல மெல்ல இருவரும் இணக்கமாகிறார்கள்.

ரெக்ஸ் புத்திக்கூர்மையுள்ள நாய். வெடிகுண்டுகள் எங்கு ஒளிக்கப்பட்டிருந்தாலும் தன் மோப்ப சக்தியால் கண்டுபிடித்து விடும். ‘நாயின் செளகரியத்திற்கு ஏற்ப நீ பின்தொடர்ந்து போ. உன் இஷ்டத்திற்கு நாயை இழுக்காதே’ என்கிறார் மூத்த பயிற்சியாளர்.

சதாம் உசேனை பிடிப்பதற்காக அமெரிக்கா, ஈராக்கின் மீது போர் தொடுத்திருந்த சமயம் அது. வெடிகுண்டு சோதனைக்காக செல்லும் குழுவில் மேகனும் ரெக்ஸூம் இருக்கிறார்கள். தூங்கிக் கொண்டிருக்கும் மேகனை திடீரென்று எழுப்புகிறார்கள். ஒரு வீட்டிற்குள் பதுக்கப்பட்டிருக்கும் பயங்கரமான ஆயுதங்களை ரெக்ஸ் திறமையாக கண்டுபிடிக்கிறது. மேகனை அனைவரும் பாராட்டுகிறார்கள்.

அதனை முடித்து வருவதற்குள் அடுத்த பணி காத்திருக்கிறது. இன்னொரு பயிற்சியாளர் செல்ல வேண்டியது. அவரால் முடியாததால் மேகன் ரெக்ஸூடன் செல்கிறாள். வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டிருக்ககூடும் என்கிற சந்தேகமான இடங்களை ரெக்ஸ் காட்டித் தருகிறது. அங்கெல்லாம் சிவப்பு நிறக் கொடிகளை அடையாளமாக நடுகிறாள் மேகன்.

வெயில் அதிகமாக இருப்பதால் நாய்க்கு ஓய்வு தேவை என வாதாடுகிறாள். நேரமாகிறது என மற்றவர்கள் ஆட்சேபிக்கிறார்கள். தூரத்தில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வேகமாக ஒரு கார் வருகிறது. ரெக்ஸ் அந்தக் காரைப் பார்த்து பயங்கரமாக குரைக்கிறது. ராணுவ வீரர்கள் உஷார் ஆகிறார்கள். எச்சரிக்கை தரும்படி சுட்டு கார் டிரைவரை இறங்கச் சொல்கிறார்கள்.

காரை சோதனையிடுவதற்காக மேகனும் ரெக்ஸூம் செல்லும் போது பக்கத்திலுள்ள ஒரு வெடிகுண்டு பயங்கரமாக வெடிக்கிறது. இருவரும் மயிரிழையில் உயிர் தப்புகிறார்கள். என்றாலும் பலத்த காயம் ஏற்படுகிறது. அடிபட்டிருக்கும் ரெக்ஸை அழுகையுடன் தடவுகிறாள் மேகன். காயம் பட்டிருந்தாலும் பாக்கியுள்ள பணிகளை முடிப்பதற்காக ரெக்ஸை தயார் செய்து மீண்டும் வேலையில் மூழ்குகிறாள் மேகன். அவளுடைய வீரத்தை அனைவரும் பாராட்டுகிறார்கள். அவளுடைய புகழ் தொலைக்காட்சிகளில் பரவுகிறது.

கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக வீட்டிற்கு அனுப்பப்படுகிறார் மேகன். மரணத்தின் நுனியில் இருந்து தப்பித்திருக்கும் அதிர்ச்சி அவளை மன உளைச்சலுக்குள் தள்ளுகிறது. அதன் கூடவே ரெக்ஸின் நினைவும் வந்து போகிறது. ரெக்ஸைப் பற்றி தொலைபேசியில் விசாரிக்கிறாள். அது வேறொரு பணிக்காக ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பப்பட்ட தகவல் கிடைக்கிறது.

ரெக்ஸின் பிரிவு மேகனை மனதளவில் அதிகம் பாதிக்கிறது. தன் பெற்றோரிடம் கிடைக்காத அன்பை ஒரு நாய் அற்புதமாக உணர்த்தியிருக்கிறது. காயத்தினால் ரிடையர்ட் ஆகவிருக்கும் ரெக்ஸை தத்தெடுக்க  மேகன் அனுமதி கேட்கிறாள். ஆனால் ராணுவ அதிகாரி கண்டிப்பாக மறுத்து விடுகிறார். ‘இது வீட்டு விலங்கு அல்ல. ராணுவத்திற்காக பயிற்சி பெற்றது. சாலையில் செல்லும் போது பொம்மை துப்பாக்கி வைத்திருக்கும் சிறுவனை பாய்ந்து கடித்தால் யார் பதில் சொல்வது?’ என்று கேட்கிறார்.

மேகனுக்கு அந்த நிதர்சனம் புரிந்தாலும் ரெக்ஸின் பிரிவைத் தாங்க முடியவில்லை. எனவே ரெக்ஸை தத்தெடுப்பது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கிறாள். பொது மக்களிடம் கையெழுத்து வேட்டை நடத்துகிறாள். ஈராக் போரில் அவள் நிகழ்த்திய சாகசம் காரணமாக புகழ் பெற்றிருப்பதால் மக்களிடமிருந்து ஆதரவும் நிதியும் கிடைக்கிறது.

மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு ரெக்ஸை தத்தெடுப்பதற்கான அனுமதி கிடைக்கிறது. வேறொரு பயிற்சியாளருடன் நடந்து செல்லும் ரெக்ஸை மேகன் அழைக்கிறாள். ரெக்ஸ் வாலாட்டிக் கொண்டே பாய்ந்தோடி வருகிறது. தன்னுடைய வீட்டு அறையில் மேகன் ரெக்ஸூடன் விளையாடும் காட்சியோடு படம் நிறைகிறது.

உண்மையான மேகன் மற்றும் ரெக்ஸின் வீடியோக்கள் படத்தின் இறுதியில் காட்டப்படுகின்றன. ஏப்ரல் 2012-ல் ரெக்ஸ் இறந்து போன செய்தியும்.

மனிதனுக்கும் விலங்கிற்குமான உறவை அற்புதமான சித்தரிக்கும் இத்திரைப்படத்தை Gabriela Cowperthwaite சிறப்பாக இயக்கியிருக்கிறார். மேகனாக Kate Mara அற்புதமாக நடித்திருக்கிறார்.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

No comments: