Tuesday, July 28, 2020

A Taxi Driver (2017) - ‘ரத்த பூமிக்குள் ஒரு யுத்த சாகசம்'

தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்று சுயநலமாய் இருக்கும் ஒரு டாக்சி டிரைவர், சந்தர்ப்ப சூழல்கள் ஏற்படுத்தும் மனமாற்றத்தால், தனக்கு ஏற்படும் ஆபத்தையும் பொருட்படுத்தாது பொதுநலவாதியாக மாறும் கதை. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த தென்கொரிய திரைப்படத்தை அற்புதமாக இயக்கியிருப்பவர் Jang Hoon. 

**

வருடம் 1980, மே மாதம்.  தென்கொரியாவில் உள்ள Gwangju நகரில் கிளர்ச்சி ஏற்படுகிறது. அங்கு நிகழும் அரசியல் குழப்பங்களை பயன்படுத்திக் கொண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றுகிறது. ஜனநாயகத்தை மீட்கக் கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். தனது ஆயுத பலத்தைப் பயன்படுத்தி அவர்களை முரட்டுத்தனமாக அடக்குகிறது ராணுவம். மாணவர்கள், பொதுமக்கள் என்று போராட்டம் செய்பவர்கள் எல்லோரையும் கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளுகிறது.

உள்ளூர் மக்களைத் தவிர இந்த படுகொலைச் சம்பவங்கள் பற்றி  வேறு எவருக்கும் தெரியவில்லை. வெளியுலகம் அறியாதவாறு அனைத்து தொடர்புகளையும் தனது கட்டுப்பாட்டில் ராணுவம் வைத்திருக்கிறது. உண்மை நிலைமைக்கு மாறாக மாணவர்கள் செய்யும் கலவரத்தினால்தான் பாதிப்பு ஏற்படுகிறது என்பது போன்ற வதந்திகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன.

ஜெர்மனியைச் சேர்ந்த பத்திரிகையாளரான பீட்டர், இந்த அநீதியைப் பற்றி வெளியுலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்ட நினைக்கிறார். ஆனால் அங்கு செல்வது எளிதானது அல்ல. ஆபத்துக்கள் நிறைந்தது. ராணுவத்தினருக்கு தெரிந்தால் சுட்டு விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். பெரும்பணம் செலவு செய்து ஒரு டாக்சியை ஏற்பாடு செய்கிறார் பீட்டர்.

சியோல் நகரத்தைச் சேர்ந்த டாக்சி டிரைவர் கிம். சமீபத்தில் மனைவியை இழந்தவர். மிகுந்த வறுமையிலும் தன்னுடைய ஒரே மகளை பாசத்துடன் வளர்க்கிறார். Gwangju நகரத்திற்குச் செல்ல ஒரு சவாரி இருப்பதை அறிந்தவுடன் ஏற்பாடு செய்யப்பட்ட டிரைவரை முந்திக் கொண்டு ஆவலுடன் பாய்கிறார். அதில் கிடைக்கும் பெரும்பணம் மட்டுமே அவருக்குத் தெரிகிறது. அந்தப் பயணத்திலுள்ள ஆபத்து பற்றி தெரிவதில்லை “நான்தான் உங்கள் டிரைவர்’ என்று பொய் சொல்லி விட்டு பீட்டரை ஏற்றிக் கொண்டு செல்கிறார். பீட்டர் செய்தி சேர்க்க வந்த பத்திரிகையாளர் என்பது கிம்மிற்கு தெரியாது.

நகருக்குள் எந்தவொரு வாகனமும் செல்ல விடாதவாறு ராணுவத்தினர் கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். பீட்டரை சந்தேகக் கண்ணுடன் பார்க்கிறார்கள். டிரைவர் கிம் தனது சாதுர்யமான பேச்சினால் அவர்களை சமாளித்து ரகசிய வழியின் மூலம் நகருக்குள் எப்படியோ சென்று விடுகிறார்.

நகரின் உள்ளே எங்கு பார்த்தாலும் கலவரம். போராட்டம் செய்யும் மாணவர்களை ராணுவம் சுட்டுக் கொல்கிறது. அதையெல்லாம் பற்றி கவலையே படாத கிம், தான் பாட்டிற்கு ஓரமாக உட்கார்ந்து உணவைச் சுவைத்துக் கொண்டிருக்கிறார். பாதுகாப்பற்ற சூழலில் பீட்டர் வீடியோ காமிராவின் மூலம் காட்சிகளை பதிவாக்குகிறார்.

டிரைவருக்கு அப்போதுதான் சூழ்நிலையின் பதட்டம் மெல்ல உறைக்கிறது. “யோவ்.. விஷயத்தைச் சொல்லாம என்னைக் கூட்டிட்டு வந்திட்டியா.. எப்படி திரும்பப் போறது?” என்று புலம்பத் துவங்குகிறார். ஆனால் ராணுவம் சுடுவதில் குருவி மாதிரி செத்து கீழே வீழும் மாணவர்களைப் பார்த்ததும் அவருக்குள்ளும் வீரம் பொங்குகிறது. இதர டாக்சி டிரைவர்களையும் அழைத்துக் கொண்டு உயிருக்குப் போராடும் மாணவர்கள் மருத்துவமனை செல்ல உதவுகிறார்.

ஒரு கட்டத்தில் ராணுவ அதிகாரி பீட்டரைப் பார்த்து விடுகிறார். “எவனோ வெளிநாட்டு பத்திரிகையாளன் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறான். அவனை தப்ப விட்டால் நமக்கு ஆபத்து” என்று வீரர்களுக்கு உத்தரவிடுகிறார். பீட்டரும் கிம்மும் எப்படியோ உயிர் தப்புகிறார்கள். அன்றிரவு உள்ளூர் ஆசாமி ஒருவன் இவர்களுக்கு அடைக்கலம் தருகிறான். “இங்கு நடக்கும் அக்கிரமங்களை நீங்கள்தான் வெளியுலகத்திற்கு சொல்ல வேண்டும்” என்று பீட்டரிடம் கண்ணீர் மல்க கேட்டுக் கொள்கிறான்.

தனது மகள் வீட்டில் தனிமையாக இருப்பாளே என்கிற கவலை கிம்மிற்குத் தோன்றுகிறது. மறுநாள் விடியும் போது யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பாதுகாப்பான இடத்தை வந்து அடைந்ததும்தான் அவருக்கு சற்று நிம்மதி பிறக்கிறது. ஆனால் உள்ளுக்குள் குற்றவுணர்ச்சி. ‘பத்திரிகையாளரை விட்டு விட்டு வந்து விட்டோமே’ என்று.

‘மாணவர்கள் கலவரம் செய்கிறார்களோமே, ராணுவத்தினரை தாக்குகிறார்களாமே’ என்று அங்கு சிலர் பேசிக் கொள்கிறார்கள். ராணுவத்தின் மூலம் ‘வெளிவரும்’ செய்திகளை அவர்கள் நம்புகிறார்கள். அப்போதுதான் கிம்மிற்கு எல்லாமே புரிகிறது. உயிர் போகும் ஆபத்து இருந்தாலும் இந்தச் செய்திகளை பீட்டர் ஏன் வெளியுலகத்திற்கு சொல்ல அத்தனை சிரமப்பட்டார் என்று. வெளிநாட்டு பத்திரிகையாளருக்கு இருக்கும் நீதியுணர்வு கூட உள்ளூர் ஆசாமியான நமக்கு இல்லையே என்று கிம்மிற்கு உறுத்துகிறது.

தனது வீட்டிற்குச் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டு மறுபடியும் ஆபத்து நிறைந்த நகருக்குள் வண்டியைச் செலுத்துகிறார். பத்திரிகையாளரைத் தேடி மருத்துவனைக்கு செல்கிறார். மாணவர்களின் பிணங்கள் நிறைந்து கிடக்கின்றன. அதைப் பார்த்து அழுகிறார் கிம். பீட்டர் எல்லாக் காட்சிகளையும் வீடியோவில் பதிவு செய்கிறார்.

பத்திரிகையாளரையும் அவரது காமிராவையும் பத்திரமாக வெளியே கொண்டு சேர்த்தால்தான் உண்மைநிலை உலகிற்கு தெரியும் என்கிற ஆவேசம் கிம்மிற்கு பிறக்கிறது. “எப்படியாவது உங்களை விமானநிலையத்தில் கொண்டு சேர்க்கிறேன்” என்று பீட்டருக்கு வாக்குறுதி தருகிறார். இவர்கள் வெளியேறுவதை ராணுவம் தடுக்கப் பார்க்கிறது. துப்பாக்கி குண்டுகள் இவர்களின் வாகனத்தின் மீது பாய்கின்றன. வேகமாக காரை ஓட்டிச் செல்லும் கிம்மிற்கு ஆதரவாக இதர டாக்சி டிரைவர்களும் வருகிறார்கள். அதில் சிலர் செத்துப் போகிறார்கள். அவர்களின் உதவியுடன் வெற்றிகரமாக விமானநிலையத்தை வந்து அடைகிறார் கிம்.

டாக்சி டிரைவரின் சாகசத்தை எண்ணி பத்திரிகையாளர் பீட்டர் நெகிழ்ந்து போகிறார். ஆனால் பீட்டரிடம் தன்னுடைய முகவரியை கிம் சொல்வதில்லை. ராணுவத்தின் அட்டூழியங்கள் வெளியுலகத்திற்கு தெரிய வருகின்றன. கலவரம் ஓய்ந்து சில வருடங்களுக்குப் பின் சியோலுக்கு திரும்ப வரும் பீட்டர், தனக்கு உதவிய பெயர் தெரியாத டாக்சி டிரைவரைப் பற்றி பத்திரிகைகளிடம் சொல்கிறார்.

பத்திரிகையாளருக்கும் டிரைவருக்கும் முதலில் ஏற்படும் சண்டையும், பிறகு அவர்களுக்கு ஏற்படும் நட்புணர்வும், சூழலை உணர்ந்தவுடன் கிம்மிற்கு ஏற்படும் மனமாற்றமும் என பல முக்கியமான காட்சிகள். தவற விடக்கூடாத திரைப்படம்.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

No comments: