Friday, July 24, 2020

Baby Driver (2017) - ‘கலையும் கொலையும்'




‘வன்முறையும் இசையும் கலந்து அற்புதமாக மிளிர்வது சில திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம். கலையுணர்வும் கொலையுணர்வும் கலந்த வசீகரமான திரைக்கதையே Baby Driver-ன் அடிப்படையான பலம். பாத்திர வடிவமைப்பின் கச்சிதம் முதற்கொண்டு பல அருமையான விஷயங்கள் இத்திரைப்படத்தில் உள்ளன.

**

பேபி என்கிற இளைஞன்தான் பிரதான பாத்திரம். அவனுடைய இளம் வயதில் அவனுடைய பெற்றோர் ஒரு கார் விபத்தில் இறந்து விட்டனர். தப்பிப் பிழைத்த பேபியின் காதில் பாதிப்பு ஏற்பட்டு தொடர்ந்து சத்தம் வருகிறது. அதை தவிர்க்க, காதில் Ipod அணிந்து எப்போதும் இசை கேட்பது அவனது வழக்கம். மற்றவர்கள் உரையாடுவதில் முக்கியமான பகுதியை பதிவு செய்து இசையுடன் ரீமிக்ஸ் செய்வது அவனுடைய பொழுதுபோக்கு. மிக முக்கியமாக அதிவேகமாகவும் திறமையாகவும் கார் ஓட்டத் தெரிந்தவன்.

பணப்புழக்கம் உள்ள இடங்களைத் தேர்ந்தெடுத்து கொள்ளையடிப்பதற்கான திட்டங்களை திறமையாக உருவாக்குபவர் டாக். ஒருமுறை பயன்படுத்திய குழுவை இன்னொரு முறை பயன்படுத்த மாட்டார். அவர்களுக்கான ரகசியப் பெயர்களும் உண்டு. ஆனால் விதிவிலக்காக பேபியை மட்டும் டிரைவராக தொடர்ந்து பயன்படுத்துகிறார். அவன் தன்னுடைய அதிர்ஷ்டம் என நம்புகிறார்.

டாக்கின் விலையுயர்ந்த காரை திருடி மாட்டிக் கொள்வதால், விருப்பமில்லா விட்டாலும் செஞ்சோற்று கடன் தீர்க்க அவரிடம் பணிபுரிய வேண்டிய நிலைமை பேபிக்கு. கொள்ளையர்கள் காவல் துறையிடம் மாட்டிக் கொள்ளாமல் அதிவேகமாக காரைச் செலுத்துவதில் பேபி திறமையானவன். கொள்ளையடித்த பணத்தில் சொற்பமான தொகையை பேபியிடம் விட்டெறிவார்கள். ‘இன்னமும் இரண்டு திட்டங்களில் பணிபுரிந்தால் போதும், பிறகு விட்டு விடுகிறேன்” என்று டாக் வாக்களித்திருப்பதால், வன்முறை பிடிக்காத பேபி, பல்லைக்கடித்துக் கொண்டு அவருக்கு உடன்படுகிறான்.

ஓர் உணவகத்தில் டெபோரா என்கிற பெண்ணைச் சந்திக்கிறான் பேபி. அவளது களங்கமில்லாத தன்மையும் இசையறிவும் பேபியை ஈர்த்து விடுகிறது. இருவருக்குள்ளும் மெல்ல காதல் உண்டாகிறது.

பேபி செய்ய வேண்டிய கடைசி பணி. தனது திட்டத்தை டாக் விளக்குகிறார். அதற்காக புதிய குழு வந்திருக்கிறது. இசை கேட்டுக் கொண்டே பேபி கவனிப்பதை ஒரு முரடன் வெறுக்கிறான். ‘இந்த மாதிரி பாட்டுக் கேட்கற சின்னப்பையனை வெச்சுக்கிட்டு எப்படி இத்தனை ஆபத்தான வேலையை செய்ய முடியும்?” என்று எரிச்சல் அடைகிறான். உதடுகளை கவனிப்பதின் மூலம் விஷயத்தை புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்ற பேபி, திட்ட விவரங்களை தெளிவாக கூற, முரடன் ஆச்சரியம் அடைகிறான். என்றாலும் அவனுக்கு பேபி மீது எரிச்சல் தோன்றுகிறது.

கொள்ளைடிக்க கிளம்புகிறார்கள். எவரும் ரத்தம் சிந்துவதை விரும்பாத பேபி, அங்கு கொலை நிகழ்வதை வெறுக்கிறான். கொள்ளையர்கள் பணத்துடன் ஓடி வருகிறார்கள். காரை ஸ்டார்ட் செய்யாத பேபியை முரடன் மிரட்டி காரை எடுக்கச் சொல்கிறான். இருவருக்குள்ளும் பகை தோன்றுகிறது. காரை மிகத்திறமையான ஓட்டி அவர்களை தப்பிக்க வைக்கிறான் பேபி.

சொன்னபடியே பேபியின் கடைசி பணியில் அவனை விடுவிக்கிறார் டாக். டெபேரா மீது ஏற்படும் காதல் பேபியின் வாழ்க்கையை மாற்றுகிறது. பிட்ஸா டெலிவரி செய்யும் பணியில் சேர்கிறான். வாகனத்தை வேகமாக ஓட்டுவது அவனுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி என்பதால் பணி சுலபமாக இருக்கிறது.

ஒரு நாள் தன்னுடைய காதலியை விலையுயர்ந்த ஓட்டலுக்கு அழைத்துச் செல்கிறான் பேபி. அவர்களின் பில் தொகை செலுத்தப்பட்டதாக கூறுகிறார்கள். அவனுடைய பழைய முதலாளி டாக். திரும்பவும் இன்னொரு கொள்ளைத் திட்டத்திற்கு வர வற்புறுத்துகிறார். பேபி மறுக்கிறான். “உன் கால்களையும் நேசத்திற்கு உரியவர்களையும் இழக்க விரும்புகிறாயா?” என்று  மிரட்டுகிறார் டாக். அவர்கள் எதற்கும் அஞ்சாத பயங்கரவாதிகள் என்பதால் வேறுவழியில்லாமல் பேபி அதற்கு உடன்படுகிறான். ஆனால் ஒரு உள்ளுக்குள் ஒரு ரகசிய திட்டம். தன் காதலியுடன் ஊரை விட்டு தப்பிச் செல்ல முடிவெடுக்கிறான். டெபோராவிடம் இது பற்றி தெரிவிக்கிறான். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் தடை ஏற்படுகிறது. பேபி தவித்துப் போகிறான்.

புதிய ஆயுதங்கள் வாங்குவதற்காக செல்கிறார்கள். அங்கு ஏற்படும் குழப்பத்தில் துப்பாக்கிச் சண்டை நடக்கிறது. வெற்றிகரமாக உயிர்தப்பி திரும்புகிறார்கள்.  வரும் வழியில் உணவகத்தில் காரை நிறுத்தச் சொல்கிறான் முரடன். அது டெபோரா பணிபுரியும் உணவகம் என்பதால் மறுக்கிறான் பேபி. ஆனால் முரடன் மிரட்டவே வேறு வழியில்லாமல் அவர்களுடன் செல்கிறான். தன்னுடைய தொழில் டெபேராவிற்கு தெரிந்து விடும் என்பதால் குற்றவுணர்வு அடைகிறான்.

இருவரும் கண்ணால் பேசிக் கொள்வதை கவனித்த முரடன் சந்தேகமடைகிறான். பயணத் திட்டத்தை மாற்றி இரவு 2 மணிக்கு வருகிறேன் என்று ரகசிய செய்தியை தருகிறான் பேபி. ஆயுதம் வாங்கச் சென்ற இடத்தில் நடந்த சண்டையினால் திட்டம் கசிந்து விடும் என்று குழப்படைகிறார் டாக். எனவே அனைவரையும் அன்றிரவு அங்கேயே தங்கச் சொல்கிறார். நள்ளிரவைத் தாண்டிய பிறகு பேபி அங்கிருந்து ரகசியமாக கிளம்புகிறான். ஆனால் முரடர்கள் வழிமறிக்கிறார்கள். அவன் உரையாடலை பதிவு செய்வதைப் பார்த்து போலீஸ் ஆளாக இருப்பானோ என்கிற சந்தேகம் ஏற்படுகிறது.

“இது என் பழக்கம்” என்கிறான் பேபி. நம்ப மறுக்கிறார்கள். அவனுடைய வீட்டிற்குச் சென்று அனைத்து டேப்புகளையும் பார்த்தபிறகு நம்பிக்கை வருகிறது. திட்டமிட்டபடி மறுநாள் கொள்ளைக்கு கிளம்புகிறார்கள். அங்கு முரடன் உயிர்க்கொலையை நிகழ்த்துவதால் பேபிக்கு கோபம் வருகிறது. மிகத் திறமையாக அவனைச் சாகடிக்கிறான்.

சில பல துரத்தல்களுக்குப் பிறகு கூட வரும் ஒவ்வொருவரும் இறக்கிறார்கள். பேபியின் உண்மையான காதலை அறியும் டாக், பணம் தந்து தப்பிக்கச் சொல்கிறார். ஆனால் களங்கமில்லாத டெபோராவை குற்றவுலகுடன் தொடர்பு படுத்த விரும்பாத பேபி, தப்பிக்க வாய்ப்பிருந்தும் காவலர்களிடம் சரண் அடைகிறான்.

பரோலில் வெளிவரும் பேபி, டெபோராவை சந்திக்கும் இனிமையான காட்சியோடு படம் நிறைவுறுகிறது. அட்டகாசமான திரைக்கதை, பின்னணியிசை. பாத்திரங்களின் வடிவமைப்பு, வசனங்கள், என்று ஒவ்வொரு விஷயமும் மிக கவனமாக உருவாக்கப்பட்டுள்ளதே இத்திரைப்படத்தின் பலம். Edgar Wright-ன் அபாரமான இயக்கம், இதை முக்கியமான திரைப்படமாக மாற்றுகிறது.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

No comments: