Saturday, July 18, 2020

Fabricated City (2017) - ‘சிலந்திவலை நகரம்'
இதுவொரு கரம் மசாலா ஆக்ஷன் திரைப்படம். திரைக்கதையிலும் சரி, காட்சிகளின் உருவாக்கத்திலும் சரி, தென் கொரியர்கள், ஹாலிவுட்டையெல்லாம் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த பரபரப்பான திரைப்படத்தின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. அப்பாவி ஒருவன் மீளவே முடியாத ஒரு சிக்கலில் எப்படி மாட்டிக் கொள்கிறான் என்பதும் அசாதாரணமான சம்பவங்களின் மூலம் எப்படி அவன் மீண்டு வருகிறான் என்பதுமே இதன் கதை.

***


Kwon Yoo  ஒரு இளம் வயது போர் வீரன். டட்டட்டட்.. என்று நவீன ரக துப்பாக்கியால்  எதிரிகளைச் சுட்டு வீழ்த்துவதே அவனுடைய முக்கியமான பொழுதுபோக்கு. ஆம், இது நிகழ்வது வீடியோ கேமில். பொழுது பூராவும் அதிலேயே கழித்து 'சோம்பேறி' என்று தாயால் அன்பாக அழைக்கப்படுபவன். உருப்படியான வேலை வெட்டி இல்லாததால் வீடியோ விளையாட்டே கதியாக இருக்கிறான். இணையத்தின் வழியாக முகம் தெரியாத அநாமதேய குழுவோடு இந்த விளையாட்டு நடக்கிறது.

இப்படியாக அவன் தன் பணியில் பிஸியாக இருக்கும் ஒரு நாளின் கொழுத்த ராகு காலத்தில் அவனுடைய காலடியில் அநாதையாக கிடக்கும் ஒரு மொபைல் ஒலிக்கிறது. 'இந்த போனை நான் தவற விட்டு விட்டேன். எடுத்து வந்து என்னிடம் தருகிறாயா?' முதலில் சலிப்படைபவன் அதற்கு 300 டாலர் கிடைக்கும் என்றவுடன் உற்சாகமாகிறான். காசுக்கு லாட்டரி அடித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு ஜாக்பாட்.

சொல்லப்பட்ட விலாசத்திற்கு செல்கிறான். குளியல் அறைக்குள் தெரியும் மங்கலான பெண் 'போனை வைத்து விட்டு பணத்தை எடுத்துக் கொண்டு போ' என்கிறாள். அப்படியே செய்கிறான்.

மறுநாள் காவல்துறை இவனை கழுத்திலேயே போட்டு கைது செய்து கொண்டு போகிறது. குளியலறைப் பெண் நீருக்குப் பதிலாக ரத்தத்தில் மிதந்து கொண்டிருந்தாள் என்பதே காரணம். மட்டுமல்ல இவனுடைய கைரேகை முதற்கொண்டு எல்லா சாட்சியங்ளும் இவனுக்கு எதிராக அமைந்திருக்கின்றன.

'நான் செய்யவில்லை ஐயா, நம்புங்கள்' என்று கத்துகிறான், கதறுகிறான். ம்ஹூம். எதுவும் சட்டத்தின் காதுகளில் விழவில்லை. சாட்சியங்கள் வலுவாக அமைந்திருப்பதால் சிறையில் தள்ளப்படுகிறான். 'என் மகன் அப்பாவி. காப்பாற்றுங்கள்' என்று அவனுடைய தாய் பொதுமக்களிடம் கதறுகிறாள். பலனில்லை. 'கொலைகாரப் பாவி' என்று ஊரே திட்டுகிறது.

கொடுமை கொடுமை என்று கோயிலுக்குப் போனால் அங்கேயும் இரண்டு கொடுமை என்கிற கதையாக,  தவறான வழக்கிற்குள் சிக்க வைக்கப்பட்டு சிறைக்குச் சென்ற இளைஞனுக்கு அங்கேயும் நிம்மதியில்லை. சிறையினுள் இருக்கும் மூத்த அண்ணன்மார்கள் காரணமேயில்லாமல் இவனை அடித்துப் பிழிந்து கொண்டே இருக்கிறார்கள். நிமிர்ந்து பார்த்தாலே அடியும் உதையும்.

இதன் இடையே இவனுடைய தாயின் மரணச் செய்தியை இவனுடைய வழக்கறிஞர் கொண்டு வருகிறார். விரக்தியின் உச்சத்திற்கே செல்கிறான். ஆனால் உள்ளுக்குள் கோபமும் கொப்பளிக்கிறது. தன்னுடைய வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்ட அந்த நயவஞ்சகன் யார்? கண்டுபிடித்தாக வேண்டும். 'இதோ வருகிறேன்' என்று சிறையில் இருந்து தப்பிக்கிறான்.

ஊரெங்கும் இவனுடைய புகழ் பரவியிருப்பதால் தலைமறைவாக இருக்க வேண்டியிருக்கிறது. எவருமே உதவிக்கு இல்லாத சூழலில் எதிர்பாராத திசையிலிருந்து ஆதரவுக்கரம் நீள்கிறது. இவனுடைய வீடியோ கேம் குழு. அதுவரை இணையத்தில் பெயராக மட்டுமே அறியப்பட்டவர்கள், ரத்தமும் சதையுமாக வருகிறார்கள். ஆண் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒருவர் பெண்ணாாக இருப்பது அனைவருக்கும் ஆச்சரியம். கணினி நுட்பத்தில் அவள் கில்லாடியாக இருக்கிறாள்.


'குற்றம் நடந்தது என்ன?' என்று ஒவ்வொரு ஆதாரத்தையும் அவர்கள் அலசிப் பிழிந்து ஆராய்கிறார்கள். ஒரு துளியையும் விட்டு வைப்பதில்லை. அதில் கிடைக்கும் வீடியோ காட்சிகளின் மூலம் இளைஞன் குற்றமற்றவன் என்கிற சாட்சியம் கிடைக்கிறது. ஆனால் இதை சட்டத்தின் முன் நிரூபித்தாக வேண்டும். எப்படி? எப்படி?

இதற்குப் பின்னணியில் உள்ள நபர் எவரென்று ஆராய்கிறார்கள். அதிர்ச்சியாக இருக்கிறது. இதற்கிடையில் சிறையிலிருந்த அண்ணன்மார்கள் வேறு இவனைத் துரத்திக் கொண்டு வருகிறார்கள். அவர்களையும் சமாளித்து இந்த சூழ்ச்சிகளுக்குப் பின்னால் உள்ளவனையும் கண்டுபிடித்தாக வேண்டிய சவால்.

தன்னுடைய குழுவோடு எப்படி அந்த இளைஞன் இதை சாதிக்கிறான் என்பதை ரகளையான சாகசக் காட்சிகளின் வழியாக சொல்லியிருக்கிறார்கள். ஆங்காங்கே லாஜிக் எகிறுகிறதுதான் என்றாலும் இறுதிக் காட்சி வரை இந்த பரபரப்பும் திருப்பங்களும் குறைவதில்லை என்பதே இந்த  அசத்தலான திரைக்கதையின் வெற்றி.

பெரிய மனிதர்களைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களில் அப்பாவிகளை மிகத் திறமையாக சிக்க வைக்கும் நபரை அழிப்பதோடு படம் முடிகிறது.


***

வீடியோ கேமையும் உண்மையான சாகசக் காட்சிகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட படத்தின் துவக்கப்பகுதியே அட்டகாசமாக இருக்கிறது. அப்பாவியான இளைஞன் கொலைப்பழியில் சிக்க வைக்கப்படுவது மட்டுமல்லாமல் சிறையில் அடியும் உதையும் வாங்கும் காட்சிகள் பரிதாபத்தை ஏற்படுத்துகின்றன.

வில்லன் தன்னுடைய கட்டிடத்தையே மிகப் பெரிய டேட்டா சர்வராக வைத்திருப்பது பிரமிப்பு ஏற்படுத்துகிறது. பிரம்மாண்டமான அறையின் தரை முழுவதும் விரியும் விதம் விதமான வீடியோக்காட்சிகள் நம்மை வாய் பிளக்க வைக்கின்றன.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்திலிருந்து மீளும் இளைஞனாக Ji Chang-wook அருமையாக நடித்துள்ளார். இருக்கை நுனியில் அமரும் பரபரப்பை இறுதி வரை தக்க வைத்த இயக்குநர் Park Kwang-hyun-ன் திறமை பாராட்டத்தக்கது.

விறுவிறு மசாலாவாக இருந்தாலும் சரி, மென்மையாக காதலாக இருந்தாலும் சரி. .. தென் கொரியர்களின் கொடி உயரப்பறக்கிறது.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

No comments: