Tuesday, September 22, 2020

வாக்குச்சீட்டு எனும் கேலிச்சித்திரம் - Secret Ballot (2001)

 

 
 
 
அமித் மசூர்கர் இயக்கியுள்ள ‘நியூட்டன்’ என்கிற இந்தி திரைப்படம், ஆஸ்கர் விருதிற்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்படுவதற்காக தேர்வாகியுள்ளது. இந்த தேர்வு அறிவிப்பு வெளிவந்த அதே சமயத்தில் திரைப்படமும் வெளியான தற்செயல் ஆச்சரியம் காரணமாக பார்வையாளர்கள் மற்றும் ஊடகங்களின் கவனம் இதன் மீது குவிந்தது. படத்தைக் காணும் ஆவல் மிகுந்த திரை ரசிகர்கள் இதனை நோக்கி செல்ல, ‘ஐயோ.. விருதுப்படமா?” என்று மற்றவர்கள் வண்டியை வேறுபக்கம் திருப்பினார்கள்.

தான் இயக்கிய இரண்டாவது திரைப்படமே, ஆஸ்கர் விருதிற்கு அனுப்பப்பட்ட விஷயம் இயக்குநருக்கு ஒருபுறம் மகிழ்ச்சியை அளித்திருக்கக்கூடும் என்றாலும் இன்னொருபுறம் ஒரு சர்ச்சையையும் அவர் சந்திக்க வேண்டியிருந்தது. 2001-ல் வெளியாகியிருந்த ‘சீக்ரெட் பேலட்’ எனும் இரானிய திரைப்படத்தின் திரைக்கதையிலிருந்து ‘நியூட்டன்’ நகலெடுக்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த சர்ச்சைகளை அமித் மசூர்கர் முற்றிலுமாக மறுத்தார். ‘ஒரு நோக்கில் இரண்டு படைப்புகளின் மையமும் ஒரே மாதிரியாக தோற்றமளித்தாலும், திரைக்கதையும காட்சியமைப்புகளும் வெவ்வேறான திசையின் பயணத்தைக் கொண்டவை’ என்று வாதிட்ட அவரின் தரப்பிற்கு அனுராக் காஷ்யப் உள்ளிட்ட சில இயக்குநர்களும் ஆதரவு தந்தனர்.

இதன் உச்சக்கட்டமாக, ‘சீக்ரட் பேலட்’ திரைப்படத்தின் இயக்குநர் Babak Payami, ‘நியூட்டன்’ திரைப்படத்தைப் பார்த்து விட்டு ‘இது நிச்சயம் நகலெடுப்பு இல்லை. இரண்டு திரைப்படங்களும் ஒரே விஷயத்தை மையமாகக் கொண்டிருந்தாலும் முற்றிலும் வெவ்றோன குரலில் பேசுகின்றன’ என்று சொன்ன நேர்மையான அபிப்ராயம், அமித் மசூர்கரை நிம்மதியடைய வைத்திருக்ககூடும். இந்த சர்ச்சையை ஆஸ்கர் விருது கமிட்டி தீவிரமாக எடுத்துக் கொண்டால், அது இந்திய திரைப்படம், நாமினேஷன் பட்டியலில் முன்னேறுவதற்கும் இறுதி முனையை அடைவதற்கும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.

**

இந்தக் கட்டுரையில் இரானிய திரைப்படமான ‘சீக்ரெட் பேலட்’ திரைப்படத்தைப் பற்றி விரிவாக காணவிருக்கிறோம்.

இரானின் தெற்கு கடையோரப் பகுதியில் உள்ள பாலைவன தீவு. ஆள் நடமாட்டம் மிக அரிதாக உள்ள இடத்தில் துப்பாக்கியுடன் இரண்டு ராணுவ வீரர்கள் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள். கடற்கரை வழியாக நிகழக்கூடிய குற்றங்களை தடுப்பதற்காகவும் கண்காணிப்பதற்காகவும் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இரவு விழித்திருந்த காவலாளி அலுப்புடன் உறங்கச் செல்ல, பகல் நேர பொறுப்பாளி கடமைக்கு இணையும் சோம்பலான விடியற்காலை காட்சிகளுடன் படம் துவங்குகிறது. வந்திருக்கும் பெரிய அளவு பெட்டியை பொறுப்பாக எடுத்து வைக்கிறார் அவர். மேலும் சில சோம்பலான கணங்கள் நகர்ந்த பிறகு  படகில் வந்து இறங்குகிறார் ஒரு பெண்.

அதுவொரு தேர்தல் நாள். அந்தப் பகுதியின் ஏஜெண்ட்டாக அந்தப் பெண் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். தேர்தல் என்றால் என்னவென்றே தெரியாத, வாக்குச்சீட்டின் பொருள் பற்றிய விழிப்புணர்வும் கல்வியறிவும் இல்லாத அந்தப் பகுதி மக்களை, அந்தப் பெண்மணி தேடிக் கண்டடைந்து வாக்கு சேகரிக்க வேண்டும். இதை முடித்து விட்டு மாலை ஐந்து மணிக்கெல்லாம் அவர் கடற்கரைக்குத் திரும்பியாக வேண்டும். இல்லையென்றால் படகு போய் விடும்.

தான் வந்திருக்கும் நோக்கம் மற்றும் பணி ஆகியவற்றைப் பற்றி காவலாளியிடம் விளக்கமாக கூறுகிறார் அந்தப் பெண். ஆனால் காவலாளியோ, பெண்ணை திகைப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். “ஏஜெண்ட் என்றவுடன் ஓர் ஆண்தான் வருவார் என்று எதிர்பார்த்தேன். நிச்சயம் ஒரு பெண்ணை எதிர்பார்க்கவில்லை. என்ன அரசாங்கம் நடத்துகிறார்கள்” என்று முணுமுணுக்கிறார். ஒரு பெண் அதிகாரியுடன்  இணைந்து பணிபுரிய வேண்டுமா என்று தயங்கும் பழமைவாத ஆணாக அந்த ராணுவ வீரர் இருக்கிறார்.

“உத்தரவு அப்படித்தான் சொல்கிறது. இதற்கு இணங்காவிடில் இதற்கான பின்விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்’ என்று மிரட்டலான கெஞ்சலுடன் அவரை தன்னுடன் அழைத்துச் செல்கிறார் ஏஜெண்ட். ஓணாணை மடியில் கட்டிக் கொண்டது போல, முணுமுணுத்துக் கொண்டே வரும் பாதுகாவலருடன், வாக்குச் சேகரிப்பிற்காக பாமரர்களும் கொள்ளையர்களும் நிறைந்திருக்கும் பாலைவனப்பகுதிக்குள் அந்தப் பெண் பிடிவாதமாக திரிந்து அலையும் பயணமே இந்த திரைப்படம்.

நிதானமாக நகரும் இந்த திரைப்படத்தை சற்று கவனித்துப் பார்த்தால் ஒவ்வொரு காட்சிக்குள்ளும் கொப்பளிக்கும் நகைச்சுவை ஒளிந்துள்ளது. யதார்த்தத்தை முகத்தில் அறையும் அவல நகைச்சுவை. ஒரு வாக்குச்சீட்டு தம் தலையெழுத்தை மாற்றக்கூடிய வல்லமை பெற்றது என்பதைப் பற்றி அங்குள்ள பெரும்பாலோனோருக்கு தெரியவில்லை. அத்தனை அறியாமை நிறைந்திருக்கும் பகுதியாக அது இருக்கிறது. இரானிய நிலப்பகுதி மட்டுமல்ல, ஒருவகையில் இந்தியக் கிராமங்களுக்கும் இந்தப் படத்தைப் பொருத்திப் பார்க்கலாம். இதைப் போன்று உள்ள அத்தனை பிரதேசங்களுக்கும் அச்சு அசலாக பொருந்திப் போகும். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் ஒருபக்கம், வாக்களிப்பதின் மூலம் தன் நிலைமையில் மாற்றம் ஏற்படக்கூடும் என்கிற ஜனநாயக நம்பிக்கையின் மீதான அறியாமை ஒருபுறம்,

வாகனத்தை செலுத்தும் காவலாளி கேட்கிறார். “திருடர்களும் ரவுடிகளும் கூட வாக்களிக்கலாமா?” “ஆம். அதுதான் ஜனநாயகம்” என்று பதிலளிக்கிறார் ஏஜெண்ட். காவலாளிக்கு இதிலுள்ள முரண் புரியவில்லை. ‘திருடர்களுக்கு எதற்காக வாக்குரிமை தருகிறார்கள்? என்ன மாதிரியான அரசாங்கம் இது?” என்று அலுத்துக் கொள்கிறார்.

ஜீப்பில் துப்பாக்கியுடன் வரும் பாதுகாவலரைப் பார்த்து ஓர் இளைஞன் ஓடத் துவங்குகிறான். “அவனை துரத்திப் பிடித்து வாக்களிக்க வைக்கலாம்” என்கிறார் ஏஜெண்ட். இவர்களின் வாகனம் வேகமாக வருவதைப் பார்த்து அவன் மேலும் பயந்து ஓடுகிறான். ஒருவழியாக அவனைத் தடுத்து நிறுத்துகிறார்கள். துப்பாக்கியைப் பார்த்து அவன் மிரள்கிறான். பயங்கரவாதிகளை தடுக்கிறோம் பேர்வழி என்று பொதுமக்களின் மீதும் ராணுவத்தினர் அத்துமீறல் செய்யும் அட்டூழியங்களின் பயம், அந்த இளைஞனின் அச்சத்தில் தெரிகிறது. பயத்துடன் வாக்களித்து விட்டுச் செல்கிறான்.

வாக்களிப்பதற்காக இவர்களைத் தேடி ஒரு கூட்டம் வருகிறது. ஏஜெண்ட் மகிழ்ந்து போகிறார். ஆனால் அங்கிருக்கும் பெண்களின் அனைவரின் சார்பாக வந்திருக்கும் ஓர் ஆணே வாக்களிக்கும் முடிவை எடுப்பார் என்பதை அறிந்து அதிர்ந்து போகிறார். “இல்லை. யாருக்கு வாக்களிப்பது என்கிற முடிவை அவரவர்கள்தான் எடுக்க வேண்டும்” என்று ஏஜெண்ட் சொல்வது அந்த ஆணுக்குப் புரிவதில்லை. “இல்லை. இவர்களின் கணவன்மார்கள் அதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.”. இவ்வாறு பழமைவாத மனோபாவமும் ஆணாதிக்க சிந்தனைகளும் நிறைந்திருக்கும் பாமரர்களிடம் சிக்கி தத்தளிக்கிறார் அந்தப் பெண் ஏஜெண்ட். என்றாலும் சோர்ந்து விடாமல் வாக்களிக்க வேண்டிய முறையை விளக்கி தன் கடமையை பிடிவாதமான நேர்மையுடன் நிறைவேற்ற முனைந்து கொண்டேயிருக்கிறார்.

கடற்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருப்பவர்களிடம் வாக்கு சேகரிக்கலாம் என்கிறார் ஏஜெண்ட். ஆனால் அவர்கள் முறையான அடையாள அட்டை இல்லாமல் கள்ளத்தனமாக இந்தப் பிரதேசத்தில் இருப்பவர்கள் என்பதால் வாக்களிக்க இயலாமல் போகிறது. இத்திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியில் உள்ள subtext-ஐயும் ஊடுருவிப் பார்த்தால் சிரிப்பும் கோபமும் ஒருசேர வருகிறது. வாக்களிக்கும் தகுதியுள்ளவர்களை படகில் துரத்தியாவது பிடிக்கலாம் என்கிறார் ஏஜெண்ட். அவரது கடமையுணர்ச்சியைப் பார்த்தால் ஒருபக்கம் பிரமிப்பாகவும் இன்னொரு பக்கம் நகைப்பாகவும் இருக்கிறது.

சில படித்த இளைஞர்கள் தாமாக முன்வந்து வாக்களிக்க வருகிறார்கள். இதற்காக ஏஜெண்ட்டை தேடி தொலைதூரத்திலிருந்து வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வாக்களிக்க விரும்பிய வேட்பாளர்களின் பெயர்கள் பட்டியலில் இருப்பதில்லை. அது சார்ந்த முணுமுணுப்புகளை எழுப்புகிறார்கள். மோசமான தலைவர்களே நம் முன் நிறுத்தப்படுவதையும், வேறு வழியில்லாமல் அவர்களில் ஒருவரையே நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுவதையும் இந்தக் காட்சி மிக நுட்பமாக கிண்டலடிக்கிறது.

ஓர் அரசு அதிகாரியாக தன் கடமையில் கண்ணுங்கருத்துமாக இருக்கும் பெண் ஏஜெண்ட்டின் மீது பாதுகாவலருக்கு ஒருபக்கம் இனம் புரியாத பரிவு இருந்தாலும் இன்னொரு பக்கம் எரிச்சலாகவும் இருக்கிறது. ஆள் அரவமில்லா பிரதேசத்தில் இப்படி அலைய வைக்கிறாரே என்று. ஓரிடத்தை கடக்கும் போது, போக்குவரத்து சிக்னல் சிவப்பில் இருப்பதால் வாகனத்தை செலுத்தாமல் நிறுத்தி விடுகிறார். “இது பாலைவனம்தானே, எந்த வாகனமும் வராது. வண்டியை எடுங்கள். நான் நேரத்திற்கு சென்றாக வேண்டும்” என்று மன்றாடுகிறார் அந்தப் பெண். ஆனால் அந்தப் பெண்ணின் கடமையுணர்ச்சியை பழிப்பு காட்டும் வகையில் வாகனத்தை நகர்த்த மறுக்கிறார் பாதுகாவலர். ஏஜெண்ட் மிகவும் கெஞ்சிக் கேட்டபிறகு வாகனத்தை இயக்க முன்வருகிறார்.

உண்மையில் அந்த இடத்தில் சிக்னல் போஸ்ட் எதுவும் கிடையாது. ஆள் அரவமற்ற பாலைவனத்தில் எப்படி போக்குவரத்து சிக்கல் வரும்? இயக்குநரின் குறும்பு அது.

**

பெண்கள் கூட்டமாக இருக்கும் இடத்திற்கு செல்கிறார்கள். அங்கு ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்திருப்பதால் அது சார்ந்த பரபரப்புகளுடன் பெண்கள் இயங்குகிறார்கள். பாதுகாவலர் ஆண் என்பதால் அவரை அங்கு அனுமதிக்க மறுக்கிறார்கள். எனவே பெண் ஏஜெண்ட் மட்டும் சென்று வாக்களிப்பதின் அவசியத்தைப் பற்றி விளக்குகிறார். “இதையெல்லாம் எங்கள் வீட்டு ஆண்கள்தான் முடிவு செய்வார்கள். நாங்கள் தன்னிச்சையாக எதுவும் செய்ய முடியாது” என்கிறார்கள் பெண்கள். இந்தக் காட்சியை பார்க்கும் நமக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் உண்மை நிலவரம் இதுதானே? கிராமப்புறம் என்றல்ல, நகர்ப்புறம் சார்ந்த எளிய சமூகத்தினரின் நிலையும் இதுதான். ‘கணவர் எந்தக் கட்சியைப் பரிந்துரைக்கிறாரோ அதிலேயே கண்மூடித்தனமாக வாக்களிக்கும் மனைவிமார்கள் இன்னமும் இருக்கிறார்கள். கிருஷ்ணன் நம்பி எழுதிய ‘மருமகள் வாக்கு’ சிறுகதையும் இங்கு நினைவிற்கு வருகிறது.

செல்லுமிடமெல்லாம் வாக்களிப்பதின் அவசியத்தைப் பற்றி அனத்திக் கொண்டே வருகிறார் ஏஜெண்ட். ஆனால் கேட்பதற்குத்தான் ஆளில்லை கூட வரும் பாதுகாவலர் மட்டும்தான் கேட்டுக் கொண்டு வருகிறார். ஒரு பகுதி முழுக்க பெண்மணி ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பது தெரிய வருகிறது. ஆனால் அந்த ‘பெண் நாட்டாமையை’ பார்க்கவே முடிவதில்லை. எந்த வீட்டின் கதவைத் தட்டினாலும் திறப்பதில்லை. பெண் ஏஜெண்ட் நகர்ந்த பிறகு  அவர்கள் ரகசியமாக எட்டிப் பார்க்கிறார்கள். “இங்கிருக்கும் பெண்கள் எவரும் வாக்களிக்க மாட்டார்கள். நீங்கள் போகலாம்” என்று துரத்துகிறார் ஒரு பெரியவர்.

அதே சமயத்தில் பெண் நாட்டாமையிடமிருந்து இவர்கள் சாப்பிடுவதற்கான உணவு வந்து சேர்கிறது. வாக்கின் முக்கியத்துவத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் விருந்தினர்களை உபசரிக்கும் விருந்தோம்பல் உணர்வு குறித்து அறிய நெகிழ்வாக இருக்கிறது. சுவாரசியமான முரண் இது.

நேரத்திற்குள் திரும்ப வேண்டிய பதட்டத்தில் பெண் ஏஜெண்ட் இருந்தாலும் திரும்பும் வழியில் எத்தனை வாக்குகளை சேர்க்க முடியுமோ அத்தனை நல்லது என்கிற நோக்கில் மல்லுக்கட்டுகிறார். வழியில் தென்படும் வியாபாரியொருவரை அணுகுகிறார். “என்னிடம் ஏதாவது பொருளை வாங்கிக் கொண்டால் வாக்களிக்கிறேன்” என்று பேரம் பேசுகிறார் அவர். வேறு வழியில்லாமல் ஒரு பொம்மையை வாங்குகிறார். ஆனால் வியாபாரியிடம் முறையான அடையாள அட்டை இல்லை. இன்னொரு பெரியவர் “இந்தப் பட்டியலில் இருப்பவர்களுக்கு எல்லாம் நான் வாக்களிக்க மாட்டேன். கடவுளுக்கு மட்டுமே என்னுடைய ஓட்டு. அந்தப் பெயர் இதில் இருக்கிறதா?” என்கிறார். ஏற்கெனவே குறிப்பிட்டபடி அவல நகைச்சுவை ஒவ்வொரு காட்சியிலும் கொப்பளித்துக் கொண்டேயிருக்கிறது. இது போன்ற பல விநோதமான அனுபவங்களை அவர் சந்திக்க வேண்டியிருக்கிறது.

பெண் ஏஜெண்ட் திரும்பும் நேரமாகி விட்டது. அவரை அழைத்துச் செல்ல வேண்டிய படகு வருவதில்லை. “இத்தனை நேரம் சுற்றிக் கொண்டிருந்தோம். உன்னுடைய வாக்கை சேகரிக்கவில்லையே” என்று பாதுகாவலரிடம் கேட்கிறார் பெண் ஏஜெண்ட். வாக்குச் சீட்டை வாங்கும் பாதுகாவலர், சீட்டின் கடைசியில் ‘பெண் ஏஜெண்ட்டின்’ பெயரை எழுதுகிறார். “உனக்குத்தான் வாக்களிக்க விரும்புகிறேன்” என்பது இதன் மூலம் அவர் சொல்லும் விளக்கம். இந்தப் பயணத்தில் இருவருக்குமான முரண்கள் நிறைய இருந்தாலும் தன்னுடைய கடமையில் மிக கவனமாக இருக்கும் பெண்ணின் மீது பாதுகாவலருக்கு ஏற்படும் தன்னிச்சையான மரியாதையையும் பிரியத்தையும் மிக நுட்பமாக இந்தக் காட்சி உணர்த்துகிறது.

பெண் ஏஜெண்ட்டை அழைத்துச் செல்லும் படகு வராததால் தத்தளித்துக் கொண்டிருக்கும் அவரை, சிறிய ரக விமானம் வந்து அழைத்துச் செல்கிறது. மக்களின் அடிப்படையான விஷயங்களில் போதிய கவனம் செலுத்தாத அரசு இயந்திரம், சில அநாவசியமான விஷயங்களுக்காக ஊதாரித்தனமாக செலவு செய்யும் அலட்சியத்தையும் அதிலுள்ள ஊழலையும் இறுதிக் காட்சி நையாண்டி செய்கிறது.

**

அவசியமான இடங்களில் மட்டும் ஒலிக்கும் பின்னணி இசை, இந்த திரைப்படத்தின் காண்பனுபவத்தை உன்னதமாக்குகிறது. புலர்ந்தும் புலராத விடியற்காலையின் வெளிச்சம், சுட்டெரிக்கும் நடுப்பகல், அந்தி மாலையின் அழகு என ஒரு நாளின் பயணத்தை அது சார்ந்த ரியல் டைமில் பதிவு செய்திருக்கும் அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறது ஒளிப்பதிவு.

பெண் ஏஜெண்ட்டாக Nassim Abdi-ம் பாதுகாவலராக வரும் ராணுவ வீரரராக Cyrus Abidi-ம் மிக அற்புதமாக நடித்துள்ளனர். உண்மையில் ஒரு திரைப்படத்தை கண்டு கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வே நமக்கு வருவதில்லை. அசலாக நடந்து கொண்டிருக்கும் காட்சிகளை அப்படியே படம்பிடித்த யதார்த்தமே பல இடங்களில் முன்நிற்கிறது. எந்தவொரு காட்சிக்கோர்வையுமே முழுமையாக இல்லை. துண்டு துண்டான காட்சிகளுடன் படம் நகர்கிறது. ஆனால் நுண்ணுணர்வுள்ள பார்வையாளன் மீதப்பகுதிகளை தன்னுடைய மனக்காட்சிகளுடன் இட்டு நிரப்பிக் கொள்ளக்கூடிய சாத்தியத்தை வழங்கியிருப்பதால் இயக்குநரின் மீது மரியாதை தோன்றுகிறது.

**

இந்திய சுதந்திரப் போராட்டம் மிக தீவிரமாக நிகழ்ந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் கூட அது பற்றிய செய்தியோ தகவலோ முற்றிலும் அறியாத இந்தியக் கிராமங்கள் பல இருந்தன. தகவல் நுட்பம் போதிய அளவு இல்லாதது ஓர் உபகாரணமே தவிர, பாமரத்தன்மையும் விழிப்புணர்வு இன்மையும் நிறைந்திருந்ததே பிரதான காரணம். பெரும்பானமை சமூகம் இப்படி அறியாமையுடன் நீடிப்பதைத்தான் அரசியல்வாதிகளும் விரும்புகிறார்கள். சில சில்லறை மீன்களை அவர்களை நோக்கி வீசுவதின் மூலம் அதிகாரம் எனும் பெரிய திமிங்கலத்தை எளிதாக கைப்பற்றி விட முடியும் என்பதை நடைமுறையில் நிரூபித்துக் கொண்டேயிருக்கிறார்கள். மக்களின் அறியாமைதான் மிகப்பெரிய மூலதனமாக இருக்கிறது.

சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்டம் என்றல்ல, தகவல் நுட்பம் பெருகி வழிந்தோடும் இன்றைய காலக்கட்டத்திலும் கூட இது சார்ந்த அறியாமை ஏறத்தாழ அப்படியேதான் நீடிக்கிறது. கிராமப்புறங்கள், சிறுநகரங்கள் என்றல்ல நகர்ப்புறங்களும் இதில் விதிவிலக்கல்ல. தாம் விரும்பும் வேட்பாளரை அது சார்ந்த சரியான காரணங்களுடனும் பிரக்ஞையுடனும் தேர்ந்தெடுக்கும் வாக்காளர்களின் சதவீதம் மிக குறைவு. அதனால்தான் நல்ல தலைவர்கள் நமக்கு கிடைப்பதில்லை. இதற்கு மாறாக தேர்தல் காலங்களில் கிடைக்கும் தற்காலிகமான, அற்ப ஆதாயங்கள், ‘இந்தக் கட்சிதான் பெரும்பான்மையாக வரப்போகிறது, பிறகு ஏன் நம் வாக்கை வீணடிக்க வேண்டும்?” என்கிற அசட்டுத்தனமான கணக்குகள் உள்ளிட்ட பல காரணங்களால் முறையான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அரிதான நேர்மையாளர்கள் கடுமையாக நிராகரிக்கப்பட்டு, நீண்டகால ஊழல்வாதிகளே மறுபடியும் மறுபடியும் அதிகாரத்திற்கு வருகிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் யார் என்பது அந்த தொகுதியின் மக்களுக்கே நினைவில் இருப்பதில்லை. துறை சார்ந்த அமைச்சர்கள் யார் யார் என்கிற தகவலே பலருக்கு தெரிவதில்லை. யாரோ ஒருவருக்கு வாக்களித்து விட்ட பிறகு தம் கடமை முடிந்து விட்டது என்று நினைப்போரே அதிகம். ஆனால் ‘நிலைமையில் பெரிதும் மாற்றமில்லையே, நாம் இப்படி அவதிப்படுகிறோமே’ என்கிற புலம்பல்களும் ஒருபக்கம் நீடித்துக் கொண்டு இருக்கின்றன. நல்ல தலைவர்களை தேர்ந்தெடுப்பதின் மூலம்தானே நல்லாட்சி கிடைக்கும் என்கிற அடிப்படையான நீதியை பலரும் செளகரியமாக மறந்து விடுகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் தேர்தல் என்பதும் வாக்கு என்பதும் வெற்று சம்பிரதாயமாக அசட்டுத்தனமான கேலிக்கூத்தாகவே நீடிக்கும் என்கிற செய்தியை இந்த திரைப்படம் அழுத்தமாக பதிவு செய்கிறது. மக்களிடம் அரசியல் விழிப்புணர்வும் கல்வியறிவும் வளராமல், அந்தப் பெண் ஏஜெண்ட் போல கண்ணுங்கருத்துமாக பணியாற்றும் அதிகாரிகளின் உழைப்பு பாலைவனத்தில் வீசப்பட்ட நீர் போல எவருக்கும் பயனில்லாமல்தான் போகும்.

Babak Payami இயக்கியுள்ள இந்த திரைப்படம், ஈரான் தேசத்திற்கு மட்டுமானதல்ல, அரசியல் உணர்வில்லாத பாமரர்கள் நிறைந்திருக்கும் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் பொருத்தமானது.
 
 
(குமுதம் தீராநதி  இதழில் பிரசுரமானது)

suresh kannan

Tuesday, August 11, 2020

கமல்ஹாசன்: ‘தேய்வழக்குகளை உதறியெரியும் பெருங்கலைஞன்’

Image Credit: Original uploader
 
பொதுவாக  முன்னணி சினிமா நாயகர்களின் உண்மையான வயதிற்கும் அவர்கள் ஏற்கும் பாத்திரங்களின் வயதிற்கும் பல சமயங்களில் தொடர்பே இருக்காது. இது சார்ந்த கிண்டல்களும் நமட்டுச்சிரிப்புகளும் ரசிகர்களிடையே நெடுங்காலமாக உண்டு.

நடுத்தர வயதைத் தாண்டியும் ‘கல்லூரி மாணவனாகவே’ முரளி நடித்த திரைப்படங்கள் ஏராளம். இந்த நோக்கில் ரஜினி மீதான கிண்டல்களுக்கு பஞ்சமேயில்லை. தெலுங்கு நடிகர்கள் இந்த விஷயத்தில் செய்ததெல்லாம் மாபெரும் பாதகம் என்றே சொல்லலாம். நடிப்பில் சாதனைகள் புரிந்த சிவாஜி கணேசன் கூட ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு கோட், சூட் அணிந்து ஸ்ரீதேவி போன்ற இளம் நடிகைகளுடன் மூச்சு வாங்க டூயட் பாடிய அநியாயமெல்லாம் நடந்தது.

இந்த வரிசையில் கமலும் விதிவிலக்கல்ல. நடுத்தர வயதைத் தாண்டியும் மரத்தைச் சுற்றி டூயட் பாடி, நாயகியுடன் மறைவில் சென்று உதட்டைத் துடைத்துக் கொண்டே வரும் அபத்தத்தை அவரும் செய்திருக்கிறார். ஆனால் ரஜினி போல தொடர்ந்து அடம்பிடிக்காமல் ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு தன் வயதுக்கேற்ற பாத்திரங்களை ஏற்க அவர் தயங்கியதில்லை. ‘கடல் மீன்கள்’ ‘ஒரு கைதியின் டைரி’ போன்ற திரைப்படங்களில் வயதான தோற்றத்தில் நடித்த போது அவருடைய வயது முப்பதுக்கும் குறைவாகத்தான் இருந்தது.

தன் வயதுக்கேற்ற பாத்திரங்களை கமல்ஹாசன் ஏற்றாரா என்னும் நோக்கில், 2000-ம் ஆண்டிலிருந்து அவர் நடித்த திரைப்படங்கள், அதிலுள்ள சிறப்பம்சங்கள், தோல்விகள் போன்ற விஷயங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். 
 
**
 
சராசரியான திரைப்படங்களைத் தாண்டி கலையம்சமுள்ள படங்களைத் தேடும் ரசிகர்களால் இன்றும் கூட சிலாகிக்கப்படுகிற “ஹேராம்’2000-ம் ஆண்டில் வெளியானது.

உடம்பு சுருங்கி இறுதிப் படுக்கையில் கிடக்கும் கிழவர் பாத்திரம், காதல் பொங்கி வழியும் கணவன், சாமியார் கோலத்தில் குற்றவுணர்வுடன் இரண்டாம் திருமணத்திற்கு அரைமனதுடன் சம்மதிக்கும் ஆசாமி, முறுக்கு மீசையுடன் புது மனைவியுடன் ஐக்கியமாகத் துவங்கும் நபர், அனைத்தையும் துறந்து விட்டு பழிவாங்கப் புறப்படும் கோபக்காரர் என்று ஐந்து விதமான தோற்றங்களில் ‘சாஹேத்ராமனாக’ விதம் விதமாக அவதாரம் எடுத்தார் கமல்.

ஒப்பனை என்கிற சமாச்சாரம் வெறுமனே அழகைக் கூட்டுவதற்காக என்பது அல்லாமல் ஒரு கதாபாத்திரத்தை அதன் மூலம் எப்படியெல்லாம் வேறுபடுத்திக் காட்ட முடியும் என்பதற்கு இந்தத் திரைப்படம் ஒரு கச்சிதமான உதாரணம். அத்தனை தோற்றங்களிலும் கமல் ‘நச்’சென்று பொருந்தினார்.

இதே ஆண்டில்தான் ‘தெனாலி’ திரைப்படம் வெளியானது. போர் சூழல் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தவராக கமல் நடித்திருந்தார். ஈழத்தமிழ் பேசி அவர் நடித்திருந்தது சிறப்பான அம்சமாக பார்க்கப்பட்டது. ‘எதைக் கண்டாலும் பயம்’ என்பதுதான் இந்தக் கதாபாத்திரத்தின் பலவீனம். ஆனால் அதன் நல்லியல்புகள் காரணமாக இதே பலவீனம்தான் அதன் பலமாகவும் பல காட்சிகளில் வெளிப்படுகிறது. இந்த சுவாரசியமான முரணை அடிப்படையாகக் கொண்ட காட்சிகள் சுவாரசியமாக வெளிப்பட்டிருக்கும். இவற்றைத் தாண்டி இதுவொரு வணிகநோக்குத் திரைப்படமே.

கமலின் சில சிறந்த திரைப்படங்கள், தாமதமாகத்தான் அங்கீகரிக்கப்படும், பாராட்டப்படும் என்றொரு பரவலான கருத்து உண்டு. அதற்கு பொருத்தமான திரைப்படங்களுள் ஒன்றான ‘ஆளவந்தான்’ 2001-ல் வெளியானது.

திடகாத்திரமும் மூர்க்கமும் மொட்டைத் தலையும் கொண்ட ‘நந்து’ பாத்திரம் ரசிகர்களை பெருமளவு ஈர்த்தது. சித்தியின் கொடுமையினால் பாதிக்கப்படும் ஒரு சிறுவன் பிறகு எப்படி மனப்பிறழ்வு கொண்டவனாகவும் பெண் வெறுப்பாளனாகவும் மாறுகிறான் என்பதை தனது மிரட்டலான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார் கமல்.

இதில் வரும் விபரீதமான காட்சியொன்றில், வன்முறையின் தீவிரத்தைக் குறைத்துக் காட்ட அனிமேஷன் வடிவில் படமாக்கப்பட்டது. இந்த உத்தியைப் பார்த்து பிரமித்து தன்னுடைய திரைப்படம் ஒன்றில் பயன்படுத்திக் கொண்டதாக ஹாலிவுட் இயக்குநர் க்வென்டின் டரான்டினோ ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். ஹாலிவுட் படங்களில் இருந்து கமல் நிறைய உருவியிருக்கிறார் என்று கூறப்பட்டிருந்த புகார்களுக்கு மாற்றாக நிகழ்ந்த விஷயம் இது.

பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம் போன்ற திரைப்படங்களை சாய்ஸில் விட்டுவிடலாம். அபாரமான நகைச்சுவைத் திரைப்படங்கள் என்பதைத் தாண்டி குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்கு அவற்றில் எந்த வித்தியாசமும் நிகழ்வில்லை. 
 
 
**

2003-ல் வெளியான ‘அன்பே சிவம்’, கமலின் பயணத்தில் ஒரு முக்கியமான படம். ‘தன் அழகான தோற்றத்தை கோரமாக்கிக் கொண்டு நடிக்க முன்வருபவனே சிறந்த நடிகன்’ என்று சிவாஜி அடிக்கடி கூறுவாராம். அந்த வகையில் ‘குணா’ முதற்கொண்டு பல பரிசோதனை முயற்சிகளை கமல் துணிந்திருக்கிறார். அன்பே சிவமும் அதில் ஒன்று. சோடாபுட்டி கண்ணாடி, தழும்புகளால் நிறைந்திருக்கும் அவலட்சணமான முகம், சார்லி-சாப்ளினை லேசாக நினைவுப்படுத்தும் உடை என்று வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருந்தார் கமல். இதன் எதிர்முனையில் தோற்றத்திலும் சிந்தனையிலும் ஒரு நவீன இளைஞனை பிரதிபலிக்கும் பாத்திரத்தில் மாதவன் நடித்திருந்தார். இந்த முரண் படத்தின் சுவாரசியத்திற்கு அடிப்படையாக அமைந்திருந்தது.

படம் முழுக்க ‘வித்தியாசமான தோற்றத்திலேயே’ வந்தால் ரசிகர்கள் விரும்பமாட்டார்களோ என்கிற தயக்கம் எப்போதுமே நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இருக்கும் போல. எனவே பிளாஷ் பேக்கில் முறுக்கு மீசையும் இடதுசாரி சிந்தனையும் கொண்ட தெரு நாடகக் கலைஞனாகவும் வந்து நாயகியுடன் ‘ரொமான்ஸ்’ செய்து இதை சமன் செய்தார் கமல். இந்த உத்தியை பல திரைப்படங்களில் காணலாம்.

2004-ல் வெளியான ‘விருமாண்டி’யும் கமலின் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று. நெற்றியில் விபூதிப்பட்டை, குங்குமம், முரட்டு மீசை, அலட்சியமாக வாரப்பட்ட தலைமுடி, முன்கோபம் என்று தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தர வயது ஆசாமியை மிக கச்சிதமாக கண் முன்னால் நிறுத்தியிருந்தார் கமல். பல்வேறு கோணங்களில் வெளியாகும் வாக்குமூலங்களைக் கொண்டு ‘உண்மை என்பது எது? என்பதைத் தத்துவார்த்தமாக தேடிய ‘ரஷோமான்’ திரைப்பட உத்தி இதில் பயன்படுத்தப்பட்டிருந்தது. மதுரையின் வழக்கு மொழியை கமல் சிறப்பாக கையாண்டிருந்தார்.

2005-ல் வெளியான ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ வணிகரீதியாக தோல்வியடைந்த படம் என்றாலும் ஒருவிதத்தில் மிக முக்கியமானது. ‘பிளாக் ஹியூமர்’ என்னும் அவல நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்ட முதல் தமிழ் சினிமா என்று இதை அடிக்கோடிட்டு குறிப்பிட வேண்டும்.

‘சூப்பர் ஹீரோக்களுக்கு’ நிகரான ‘அந்தர்பல்டி’ சாகசங்களை இதர நாயகர்கள் செய்து கொண்டிருக்கும் போது, காது கேட்பதில் குறைபாடு உள்ள இயல்பான நடுத்தர வயது ஆசாமியாக இதில் வருவார் கமல். படம் முழுவதும் இம்சைகளை ஏற்படுத்தும் மென்மையான நகைச்சுவைக் காட்சிகள் வந்து கொண்டேயிருக்கும்.

ஒரு காவல்துறை அதிகாரிக்கு வைப்பாட்டியாக இருக்கும் இன்னொரு நடுத்தர வயதுள்ள பாத்திரம்தான் இந்தத் திரைப்படத்தின் நாயகி. பதினெட்டு வயதிற்கு குறையாத இளம் பெண்களுடன் டூயட் பாடிக் கொண்டிருக்கும் இதர நாயகர்களின் திரைப்படங்களுக்கு இடையில் இது வியப்பூட்டும் அம்சம் எனலாம். மூன்று அமெச்சூர் திருடர்கள், தவறுதலாக வேறொரு சிறுவனை கடத்தி வந்து விட்டு படும் பாடுதான் இந்தத் திரைப்படத்தின் மையம். (இதே விஷயம் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம்’ திரைப்படத்திலும் ஒரு பகுதியாக வரும்).

தனது பிரத்யேக ஸ்டைலில் திரைப்படங்களை உருவாக்குபவர் கெளதம் வாசுதேவ மேனன். ரொமான்ஸ் + ஆக்ஷன் என்பதுதான் இவரது பாணி. இவரும் கமலும் ‘வேட்டையாடு விளையாடு’ (2006) என்கிற திரைப்படத்தில் இணைந்த போது அது புதிய வண்ணத்தில் அமைந்தது. துப்பறியும் அதிகாரியை நாயகனாகக் கொண்டு பல ஹாலிவுட் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. தமிழ் சினிமாவில் அப்படியொரு பாணியில் வந்த முயற்சியாக ‘வேட்டையாடு விளையாடு’ (2006) அமைந்தது.

கணவனால் குடும்ப வன்முறைக்கு ஆளாகும் ஒரு பெண்தான் இதில் நாயகி. அந்தச் சூழலில் இருந்து அவரை விடுவித்து நாயகன் மறுமணம் புரிவார். பொதுவாக ஹீரோக்களுக்கு ஒவ்வாத இது போன்ற விஷயங்களையெல்லாம் கமல் இயல்பாகச் செய்து கொண்டிருந்தார்.

சிவாஜியின் ‘நவராத்திரி’யை தாண்டிச் செல்லும் நோக்கும் நோக்கத்திலோ, என்னவோ.. கமல் பத்து வேடங்களில் நடித்த ‘தசாவதாரம்’ (2008) ஒரு முக்கியமான முயற்சி. இதில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் பிரத்யேகமான தோற்றங்களை உருவாக்கி, அதை திரையில் சித்தரிப்பதற்காக கமல் மிகவும் மெனக்கெட்டிருந்தார். ரங்கராஜ நம்பி, பல்ராம் நாயுடு, வின்செட் பூவவராகன் என்று ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒவ்வொரு வழக்கு மொழி, பாணி, பின்னணி என்று ரகளையாக நடித்திருந்தார் கமல். குறிப்பாக கிழவி பாத்திரத்தில் அவரது உடல்மொழியும் வசன உச்சரிப்பும் அபாரம்.

ஆனால் இவற்றை தனித்தனியாக பார்க்கிற போது சுவாரசியமாக இருந்ததே ஒழிய, ஒட்டு மொத்த சித்திரமாகப் பார்க்கிற போது பொழுதுபோக்கு சினிமா என்கிற அளவைத் தாண்டி இதில் விசேஷமாக எதுவும் இல்லை. ‘தன் திரைப்படங்களில் தன்னை மிகவும் முன்நிறுத்திக் கொள்வார்’ என்று கமல் மீது பொதுவாக சொல்லப்படும் விமர்சனத்தை ஆழமாக உறுதிப்படுத்துவதாக ‘தசாவதாரம்’ அமைந்தது. பத்து வேடங்களிலும் கமல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு எழுதப்பட்ட திரைக்கதை என்பதால் செயற்கையாகத் தெரிந்தது.
 
 
**

இதர மாநிலங்களில் உருவான சிறந்த திரைப்படம் என்றால் அதை தமிழில் ரீமேக் செய்ய கமல் எப்போதும் தயங்கியதில்லை என்பதற்கு ‘குருதிப்புனல்’ முதற்கொண்டு பல உதாரணங்கள் இருக்கின்றன.  அந்த வகையில் 2009-ல் வெளியான திரைப்படம் ‘உன்னைப் போல் ஒருவன்’. மத தீவிரவாதத்தை அரசு இயந்திரமானது ஆதாய அரசியலோடும் மெத்தனத்தோடும் கையாளும் போது ஒரு சராசரி மனிதனுக்கு எழும் கோபத்தின் வெளிப்பாடுதான் இந்தத் திரைப்படத்தின் மையம். குறுந்தாடியுடன் ஒரு கல்லூரி பேராசிரியரின் நடுத்தரவர்க்க தோற்றத்தில் நடித்திருந்தார் கமல். அசல் வடிவத்தை ஏறத்தாழ சிதைக்காமல் தமிழில் கொண்டு வந்தது பாராட்டுக்குரியது. இதிலும் அவரின் வயதுக்கேற்ற பாத்திரம்தான்.

2015-ல் வெளியான ‘உத்தம வில்லன்’ திரைப்படத்தை, ஏறத்தாழ கமலின் Mini Bio-graphical version எனலாம். அந்த அளவிற்கு அவருடைய அசல் வாழ்க்கையின் தடயங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தத் திரைப்படத்தில் நிறைந்திருந்தன. மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு நடிகன், அபத்தங்களால் நிறைந்திருந்த தன் அதுவரையான வாழ்க்கையை சிறிதாவது அர்த்தபூர்வமானதாக ஆக்க பாடுபடுகிறான். ‘மனோரஞ்சன்’ என்னும் நடிகனாக கமல் நடித்த சில காட்சிகள், அவர் எத்தனை திறமையான நடிகர் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்தன.

‘Spy Thriller’ எனப்படும் வகைமையான அதுவரையான தமிழ் சினிமாவில் மிக அமெச்சூராகத்தான் கையாளப்பட்டது. இதை ஏறத்தாழ ஹாலிவுட் தரத்திற்கு கொண்டு சென்ற திரைப்படம் ‘விஸ்வரூபம்’ I & II. முதல் பகுதியில் இருந்த இடைவெளிகளுக்கான பதில்கள் இரண்டாம் பகுதியில் இருக்கும் அளவிற்கு அபாரமான திரைக்கதையால் கட்டப்பட்டவை. இந்திய உளவாளி ஒருவன் சர்வதேச தீவிரவாதத்தை எதிர்கொள்வதுதான் இதன் மையம்.

பெண்மையின் சாயல் கொண்ட விஸ்வநாதன், எரிமலையின் ஆற்றலோடு விஸாமாக வெளிப்படும் காட்சி, தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க ஆக்ஷன் காட்சிகளுள் ஒன்றாக இருக்கும். ‘படம் புரியவில்லை’ என்கிற பரவலான கருத்து இதன் மீது எழுந்தது. ஆனால் நிதானமாகப் பார்த்தால் எத்தனை நுட்பமான விஷயங்களை இவற்றில் அடுக்கியிருக்கிறார் என்பது புரியும்.

கமலின் ரீமேக் வரிசையில் இன்னொரு அபாரமான முயற்சி ‘பாபநாசம்’ (2015).  மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘திரிஷ்யம்’ தமிழில் திருநெல்வேலியை பின்னணியாகக் கொண்டு வெளியானது. அன்பான மனைவி, இரண்டு மகள்கள் கொண்ட நடுத்தர வயது பாத்திரத்தில் ‘சுயம்புலிங்கமாக’ கமல் நடித்திருந்தார். இதில் அவர் வழக்கம் போல் தன் அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தாலும் மலையாளத்தில் மோகன்லால் செய்தததோடு ஒப்பிட்டால் கமல் சற்று பின்தங்கியிருப்பார் என்றுதான் சொல்ல வேண்டும்.

டூயட், காமெடி, ஆக்ஷன் என்று ஒரு தேய்வழக்கு திரைக்கதையுடன் நெடுங்காலமாக இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் நிறத்தை தொடர்ந்து மாற்றிக் கொண்டு வருவதில் கமல்ஹாசனுக்கு பிரதான பங்குண்டு. அந்த வகையில் ‘தூங்காவனம்’ (2015) ஒரு அற்புதமான முயற்சி. பிரெஞ்சு திரில்லர் திரைப்படத்தின் ரீமேக். தமிழ் வடிவத்திற்காக அசட்டு மசாலாக்கள் எதுவும் திணிக்கப்படாமல் யோக்கியமாக உருவாக்கப்பட்டதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஒரு முன்னணி நாயகனுக்குரிய தேய்வழக்குகளை கமல் கொண்டிருந்தாலும் ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு இவற்றிலிருந்து அவர் தொடர்ந்து மீற முயற்சித்துக் கொண்டே இருப்பதை கவனிக்க முடியும்.

‘மகாநதி’ திரைப்படத்தில் அவர் இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பனாக நடிப்பதைக் கண்ட ஒரு சீனியர் நடிகர் ‘இவ்வாறெல்லாம் நடித்தால் உன் இமேஜ் போய்விடும்’ என்று எச்சரித்தாராம். ஆனால் கமலின் சிறந்த திரைப்படங்களை கணக்கெடுத்தால் ‘மகாநதி’ அதில் உறுதியாக இடம்பெறும் என்பதுதான் வரலாறு. இந்த தொலைநோக்குப் பார்வையும் துணிச்சலும் பாத்திரத்திற்காக தன்னை மாற்றிக் கொள்ளும் மெனக்கெடலும் கமலிடம் எப்போதும் இருந்திருக்கிறது.





suresh kannan

Sunday, August 02, 2020

American Made (2017) - ‘ஆகாயக் கோட்டை'




Barry Seal என்கிற விமானியின் வாழ்க்கைச் சம்பவங்களையொட்டி உருவான அமெரிக்கத் திரைப்படம் இது. மிகச்சிறந்த விமானியாக துவங்கும் பேரி சீலின் வாழ்க்கை, சர்வதேச கடத்தல்களில் ஈடுபட்டு வீழ்வதை திகிலும் பரபரப்புமாக விவரிக்கிறது.  சர்ரென்று உயரே பறந்து உற்சாகமாக பயணித்து தடாலென்று கீழே விழும் ஒரு விமானத்தைப் போலவே அவருடைய வாழ்க்கையும் அமைந்தது பரிதாபமான தற்செயல்.

**

வருடம் 1970. பேரி சீல் ஒரு திறமையான விமானி. குறைந்த வயதிலேயே கமாண்ட் பைலட் ஆன அளவிற்கான திறமை. விமான நிறுவனம் தரும் சம்பளம் அவனுக்கு போதுமானதாக இல்லை. எனவே பயணத்தின் இடையே சிகரெட் பெட்டிகளை கடத்தும் சிறிய குற்றத்தோடு துவங்குகிறது அவனுடைய சாகச வாழ்க்கை.

CIA அதிகாரி ஒருவர் அவனை அணுகுகிறார். “சின்ன விஷயங்களுக்காக உன் திறமையை வீணாக்காதே. நான் சொல்கிறபடி செய். நிறைய பணம்” என்கிறார். “என்ன வேலை?”.

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் பனிப்போர் உச்சத்தில் இருந்த காலக்கட்டம் அது. மத்திய அமெரிக்காவின் சில பகுதிகளில் கம்னியூஸ்ட் படைகளுக்கு ரஷ்யா உதவி செய்து கொண்டிருந்தது. அமெரிக்கா இதை தடுக்க விரும்பியது. பேரி சீல் ஒரு சிறிய விமானத்தின் மூலம் அந்தப் பகுதிகளில் தாழ்வாக பறந்து புகைப்படங்கள் எடுக்க வேண்டும். இன்னொரு வகையில் அதற்குப் பெயர் உளவு பார்த்தல்.

கிடைக்கப் போகும் ஆதாயங்களுக்காக மிக ஆபத்தான இந்தப் பணியை பேரி ஒப்புக் கொள்கிறான். விமான நிறுவன பணியை தூக்கிப் போட்டு விட்டு இதில் இறங்குகிறான். ‘கரணம் தப்பினால் மரணம்’ என்கிற விஷயத்தை அநாயசமாக கையாள்கிறான். இவனது திறமையான பணியைக் கண்டு CIA உற்சாகமாகிறது. அடுத்த பணியைத் தருகிறது. எதிரிப் பிரதேசங்களில் உள்ள ராணுவ அதிகாரிகளிடம் பணத்தைத் தந்து விட்டு ரகசியங்களைப் பெற்று வருவது. கூரியர் வேலை.

இந்தச் சமயத்தில்தான் இன்னொரு அதிர்ஷ்டம் அல்லது ஆபத்து பேரியைத் தேடி வருகிறது. கொலம்பியாவில் உள்ள மிகப்பெரிய போதை மருந்து கடத்தல் குழு இவனைத் தொடர்பு கொள்கிறது. “தோ… பாருப்பா.. ப்ளைட்ல சும்மாதானே திரும்பிப் போறே..  நாங்க தர்ற பாக்கெட்டுக்களை அமெரிக்காவிற்கு எடுத்துட்டுப் போ”. (இந்தக் குழுவின் தலைவனான பாப்லோ எஸ்கோபர் பற்றி தனியான திரைப்படமே இருக்கிறது).

முதலாளிக்குத் தெரியாமல் ரிடர்ன் டிரிப்பில் தக்காளி மூட்டைகளை ஏற்றிக் கொள்ளும் லாரி டிரைவர் மாதிரி, இதற்கும் பாரி சந்தோஷமாக ஒப்புக் கொள்கிறான். அவனே எதிர்பாராத அளவிற்கு பணம் கொட்டுகிறது. CIA இதைக் கண்டும் காணாமலும் இருந்தாலும் போதைமருந்து கடத்தலை கண்காணிக்கும் அதிகாரிகள் மோப்பம் பிடித்து விடுகிறார்கள். CIA அதிகாரியே இந்த தகவலைத் தருகிறார். “நான் சொல்கிற இடத்திற்கு குடும்பத்தோடு தப்பி ஓடு”.

தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியையும் குழந்தைகளையும் எழுப்பி பொருட்களை மூட்டை கட்டிக் கொண்டு ‘மேனா’ என்கிற சிறிய மாகாணத்திற்கு விரைகிறான் பாரி. அங்குள்ள ஏர்போர்ட்டையே அவனுக்குத் தரும் CIA அடுத்து வேறு ஒரு பணியைத் தருகிறது. இந்த முறை துப்பாக்கிகள். கம்யூனிஸ்ட்களை எதிர்க்கும் வலதுசாரி குழுவொன்றிற்கு சப்ளை செய்ய வேண்டும். செய்கிறான். அடுத்து ஆட்கள். அதையும் உற்சாகமாக செய்கிறான் பேரி.

ஒரு புறம் CIA, மறுபுறம் போதையுலகம் என்று இருபுறமும் பணம் கொட்டுகிறது. வீட்டில் புதைத்து வைக்க இடமில்லாத அளவிற்கு பணம். வங்கியில் கொண்டு போய்க் கொட்டுகிறான். இவனுடைய பணத்தை வைப்பதற்காகவே தனி காப்பறை அமைக்கிறார்கள். அந்தளவிற்கு பணம்.

ஏறத்தாழ பணத்தில் குளித்துக் கொண்டிருக்கும் பேரியின் வாழ்க்கையில் மச்சானின் உருவில் ஆபத்து வருகிறது. “எனது தம்பிக்கு வேலை போட்டுக் கொடுங்கள்” என்கிறாள் மனைவி. உச்சநீதிமன்ற உத்தரவை மறுக்க முடியுமா? சும்மா வெட்டியாக ஒரு வேலையைத் தருகிறான். பேரி ஒளித்து வைத்திருக்கும் சூட்கேஸ்களில் ஒன்றை திருடிக் கொண்டு உற்சாகமாக ஷாப்பிங் கிளம்புகிறான் ஊதாரி மச்சான்.

காவல்துறை இதைக் கவனித்து மச்சானைக் கைது செய்கிறது. பேரி அப்போது புதிய டீல் ஒன்றிற்காக கடத்தல் குழுவுடன் கொலம்பியாவில் இருக்கிறான். “காப்பாத்துங்க” என்று மச்சான் கதறுகிறான். “அதை நாங்க பார்த்துக்கறோம். எங்க வேலையை முதல்ல முடி” என்கிறது கடத்தல்குழு. மச்சான் தப்பிப்பதற்காக பேரி உதவி செய்கிறான். ஆனால் அவன் திமிராகப் பேசி விட்டு கிளம்பும் போது கார் வெடித்து சிதறுகிறது. ‘நாங்க பார்த்துக்கறோம்” என்று கடத்தல் குழு சொன்னதின் அர்த்தம் இதுதான் போல.

பேரி ஆகாயத்தில் கட்டிய கோட்டை ஒருவழியாக வீழ்ச்சியடையத் துவங்குகிறது.  FBI அவனுடைய வீட்டைச் சோதனையிட்டு எல்லா பணத்தையும் கைப்பற்றுகிறது. CIA அவனை கைகழுவுகிறது. வசமாக சிக்குகிறான் பேரி. ஆனால் அவன் தப்பிக்க இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. தனது அரசியல் எதிரிகளுக்கு போதை மருந்து கடத்தல் உலகத்துடன் தொடர்பிருக்கிறது என்பதை அமெரிக்கா நிரூபிக்க பேரியைப் பயன்படுத்துகிறது. தனது கூட்டாளிகளையே ரகசியமாகப் படம் எடுக்கிறான் பேரி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது பத்திரிகைகளில் வெளியாகி விடுகிறது. கடத்தல் குழு தன்னை உயிருடன் விடாது என்பது பேரிக்கு தெளிவாக தெரிந்து விடுகிறது. ஒவ்வொரு நாளும் தன் மரணத்தை எதிர்பார்க்கிறான்.

அரசியல் காரணங்களால் நீதிமன்றத்திலிருந்து எளிதாக அவன் தப்பித்து விட்டாலும் கடத்தல் குழுவின் பழிவாங்கலில் இருந்து அவனால் தப்பிக்க முடியவில்லை. சுடப்படுகிறான்.

**
எழுபதுகளின் காலக்கட்ட பின்னணியில், பேரி சீல் ஆக டாம் குரூஸ் அட்டகாசமாக நடித்திருக்கிறார். பணம் சேர சேர, ‘’மங்காத்தா’ அஜித் போல ‘மணி.. மணி..’ என்ற இவர் உற்சாகமாக சிரிப்பது கலக்கல். “கெட்டவங்களுக்கு ஆண்டவன் அள்ளித் தருவான். ஆனா கைவிட்டுடுவான்” என்கிற பாட்சா நீதியை சொல்லும் இந்தத் திரைப்படம், எதிரி நாடுகளில் அமெரிக்கா செய்யும் கலகங்களையும் குழப்பங்களையும் அம்பலப்படுத்துகிறது. ‘The Bourne Identity’ வரிசை திரைப்படங்களை இயக்கிய Doug Liman இத்திரைப்படத்தையும் அற்புதமாக உருவாக்கியுள்ளார்.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

Saturday, August 01, 2020

Adam's Apples (2005) - ‘நம்பிக்கையின் சம்பளம்'



நன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்திற்கு அழிவேயில்லை. இந்தப் பிரபஞ்சம் உருவான முதல் கணத்திலிருந்தே இந்த தர்மயுத்தம் துவங்கியிருக்கக்கூடும். தேவனின் கருணைக்கும் சாத்தானின் வசீகரத்திற்கும் இடையில் தத்தளிக்கும் மனிதர்களைப் பற்றிய திரைப்படம் இது. அறம் ஒருபோதும் தோற்பதில்லை என்கிற நீதியை வலுவாக சித்தரிக்கும் படைப்பு. மிக நுட்பமான திரைக்கதையைக் கொண்டது.

**

அதுவொரு புனர்வாழ்வு மையம். சிறையில் இருந்து பரோலில் வரும் கொடூரமான குற்றவாளிகளை நல்வழிப்படுத்துவது அதன் நோக்கம். அந்த மையத்தின் தலைவரும் மதகுருவுமான இவான், இறைவனிடத்தில் முழுமையான நம்பிக்கையைக் கொண்டவர். ‘சாத்தானின் சோதனையால்தான் நமக்கு தீமைகள் நேர்கின்றன. அவற்றை பொறுமையுடன் எதிர்கொண்டால் இறைவனின் அன்பை பெறலாம்’ என்பதில் தீவிரமான நம்பிக்கையுடையவர்.

நவ – நாஜி குழுவைச் சேர்ந்தவனான ஆதாம், சிறையில் இருந்து பரோலில் வெளியாகி அந்த இடத்திற்கு வருகிறான். சக மனிதர்கள் மீது இவான் காட்டும் அன்பும் பொறுமையும் ஆதாமை குழப்பத்தில் ஆழத்துகின்றன. ‘இம்பூட்டு நல்லவனா ஒருத்தன் இருக்கவே முடியாதே’ என்று சந்தேகப்படுகிறான். இவானின் நற்பண்புகள் அவனைக் குற்றவுணர்வில் ஆழ்த்துகின்றன. எனவே இவானின் மீது கடுமையான கோபம் கொள்கிறான்.

முன்னாள் குற்றவாளிகளான காலித்தும், குன்னாரும் இவானின் பேச்சைக் கேட்டு கட்டின பசுமாடு மாதிரி இருப்பது ஆதாமை மேலும் குழம்ப வைக்கிறது. “இங்கு வந்ததற்காக நீ ஏதாவது உருப்படியான வேலையைச் செய்ய வேண்டும்” என்கிறார் இவான். ‘சர்ச் வாசலில் இருக்கும் ஆப்பிள் மரத்திலுள்ள பழங்களை வைத்து கேக் செய்கிறேன்” என்று பதிலளிக்கிறான் ஆதாம். இந்தப் போட்டியில் வென்று இவானின் முகத்தில் கரி்யைப் பூச வேண்டும் என்கிற வெறி எழுகிறது ஆதாமிற்கு.

ஆனால் ஆப்பிள் மரத்தை பாதுகாப்பது அத்தனை எளிமையான வேலையாக இல்லை. பறவைகள் கூட்டமாக வந்து கொத்தித் தின்று பழங்களை சேதப்படுத்துகின்றன. என்ன முயன்றும் அவற்றைத் துரத்த முடியவில்லை. ‘சாத்தானின் சோதனை இது” என்கிறார் இவான். ஆதாம் அதை ஏற்கவில்லை. தன் கூட்டாளிகளின் மூலம் துப்பாக்கியைக் கொண்டு வருகிறான். ஆனால் அதற்குள் காலித் பறவைகளைச் சுட்டுக் கொல்கிறான்.

இவானின் அன்பான நடவடிக்கைகள் ஆதாமை எரிச்சல்பட வைக்கின்றன. அவருடைய நம்பிக்கையை எப்படியாவது உடைக்க வேண்டும் என்கிற வெறி ஏற்படுகிறது. ஒரு விவாதத்தின் போது இவானை கடுமையாகத் தாக்குகிறான் ஆதாம். ஆனால் சிறிது நேரம் கழித்து ரத்தக் களறியாக எழுந்து வரும் இவான், எதுவுமே நடக்காதது போல ஆதாம் உள்ளிட்ட மற்றவர்களிடம் உரையாடுகிறார். இதைக் கண்டு ஆதாமிற்கு வெறுப்பும் எரிச்சலும் அதிகமாகிறது.

இவானுடைய பின்னணித் தகவல்களை அருகிலுள்ள ஒரு மருத்துவரின் மூலம் ஆதாம் அறிகிறான். மருத்துவருக்கும் இவானின் மீது இதே மாதிரியான எரிச்சல் உள்ளதால் ஆதாமைத் தூண்டி விடுவது போல தகவல்களைச் சொல்கிறார்.  இவானுடைய இளமைப்பருவம் இன்பகரமானதாக இல்லை. மனைவி ஒரு விபத்தில் இறந்து விட்டார். அவருடைய மாற்றுத்திறனாளி மகன் சக்கர நாற்காலியில் உறைந்து கிடக்கிறான்.

இவானால் இத்தனை துன்பங்களையும் தாங்கிக் கொண்டு எப்படி இயல்பாகவும் அன்பாகவும் இருக்க முடிகிறது என்கிற கேள்வி ஆதாமைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. உடல்ரீதியாக சித்திரவதை செய்தாலும் இவானை எதுவுமே செய்ய முடியவில்லை என்பதால் உளரீதியான தாக்குதலைத் துவங்குகிறான் ஆதாம். “கடவுள் உன் மீது அன்பு வைத்திருக்கிறார் என்பதெல்லாம் பொய். அவர் உன்னை பயங்கரமாக வெறுக்கிறார். அதனால்தான் உனக்கு இத்தனை துன்பங்கள் ஏற்படுகின்றன” என்று தொடர்ந்து கூறுகிறான்.

ஒரு கட்டத்தில் இவான் இதை நம்ப ஆரம்பிக்கிறார். அவருடைய காதில் இருந்து ரத்தம் வந்து கொண்டேயிருக்கிறது. அப்போதும் மனம் இளகாத ஆதாம் அவரை கடுமையாக தாக்குகிறான். இவானின் மனம் கலைவது சக குற்றவாளிகளையும் பாதிக்கிறது. அதுவரை இயல்பாக இருந்த அவர்கள் தங்களின் குற்றவுலகிற்கு மறுபடியும் திரும்புகிறார்கள். காலித் ஒரு பெட்ரோல் பங்க்கை கொள்ளையடிக்க ஆவேசமாக கிளம்புகிறான். அதுவரை இவனிடம் பேசிக் கொண்டிருந்த குன்னார் மெளனமாகிறான்.

இந்த மாற்றங்கள் ஆதாமைக் குழப்புகின்றன. இவானின் அன்பும் கருணையும் உண்மையாகவே மனிதர்களிடம் மாற்றங்களை ஏற்படுத்துகிறதோ என்கிற எண்ணம் தோன்றுகிறது. இவானின் மீது மெல்ல இரக்கம் சுரக்கிறது. அவரைத் தூக்கிப் போய் மருத்துவமனையில் சேர்க்கிறான். ஆனால் மருத்துவர் அதிர்ச்சிகரமான தகவலைத் தருகிறார். ‘இவானுக்கு பெரிய அளவில் மூளைக்கட்டி இருக்கிறது. அதனால்தான் காதில் ரத்தம் வருகிறது. இன்னமும் சில நாட்களில் அவர் இறந்து விடுவார்”.

காலித்திற்கும் ஆதாமின் கூட்டாளிகளுக்கும் தகராறு ஏற்படுகிறது. அவர்களை துப்பாக்கியால் காயப்படுத்துகிறான் காலித். எனவே அவர்கள் ஆயுதங்களுடனும் ஆட்களுடனும் திரும்ப வருகிறார்கள். ஆதாம் அவர்களைச் சமாதானப்படுத்த முயல்கிறான். தலையில் கட்டோடு அங்கு வரும் இவான் அவர்களைத் தடுக்க முயல, குண்டு அவர் தலையில் பாய்கிறது. ரத்த வெள்ளத்தில் கீழே சரிகிறார் இவான்.

இவான் இறப்பதற்குள் ஆப்பிள் கேக்கை செய்து அவருடைய அன்பைப் பெற வேண்டும் என்கிற காரணத்திற்காக சேதமடைந்தது போக மீதமிருக்கும் ஒரேயொரு ஆப்பிளில் கேக் செய்து மருத்துவனைக்கு எடுத்துச் செல்கிறான் ஆதாம். இவானின் படுக்கை காலியாக இருக்கிறது. மருத்துவர் ஆச்சரியமான தகவலைச் சொல்கிறார். “குண்டு பாய்ந்ததில் தலையில் இருந்த புற்றுநோய் குணமாகி விட்டது. மருத்துவ அதிசயம் இது”

மருத்துவனையின் வெளியே அமர்ந்திருக்கும் இவானுடன் இணைந்து கேக்கை உண்கிறான் ஆதாம். சில மாதங்கள் கடக்கின்றன. பரோலில் இருந்து இரண்டு புதிய குற்றவாளிகள் அங்கு வருகிறார்கள். கோபத்துடன் இவானைத் தாக்குகிறார்கள். இவானைப் போலவே ஆதாமும் அவர்களைப் பொறுமையாக கையாள்வதோடு படம் நிறைகிறது. ஆம். இவான், ஆதாமை தன்னைப் போலவே மாற்றி விட்டார்.

இவான், ஆதாம், ஆப்பிள், கிறித்துவ தேவாலயம், Book of job எனும் பழைய ஏற்பாட்டு நூல்.. என்று படம் முழுவதும் விவிலிய உருவகங்கள் நிறைந்திருக்கின்றன. தேவாலயத்தின் மணி அடிக்கும் போதெல்லாம் அதன் அதிர்வு காரணமாக ஆதாமின் அறையில் மாட்டப்பட்டிருக்கும் ஹிட்லரின் படம் நழுவி விழுவது நல்ல குறியீடு.

இவானாக Mads Mikkelsen-ம் ஆதாமாக Ulrich Thomsen-ம் அருமையாக நடித்திருக்கிறார்கள். டென்மார்க் தேசத்தைச் சேர்ந்த இந்த திரைப்படத்தை அற்புதமாக இயக்கியிருப்பவர் Anders Thomas Jensen.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

Wednesday, July 29, 2020

After the Storm (2017) - ‘புயலுக்குப் பின்னால்'




மெதுவாக நகரும் நீரில் மிதந்து செல்லும் பூவைப் போன்ற சாவகாசமான, இயல்பான திரைக்கதையைக் கொண்டது இந்த ஜப்பானிய திரைப்படம். குடும்பம் என்கிற அமைப்பு எத்தனை அழகானது, அவசியமானது என்பதை அழுத்தமாக உணர்த்தும் பாடம். குரூப் போட்டோவிற்கு நின்று சிரிக்கும் தமிழ் சினிமா போல நாடகத்தனமாக அல்லாமல் யதார்த்தமாக நிறையும் கிளைமாக்ஸ்தான் இதன் முக்கியமான வித்தியாசமே.

**

Ryota ஒரு தனியார் துப்பறிவாளன். அவனுக்கு இன்னொரு முகமும் உண்டு. விருது பெற்ற நாவல் ஒன்றை படைத்த எழுத்தாளன். ஆனால் அதெல்லாம் பழைய கதை. இப்போது அவன் காலி பெருங்காய டப்பா. எழுதுவதற்கான உத்வேகம் இல்லாமல் சூதாட்டத்தில் பணத்தைக் கரைப்பவன். இதனாலேயே இவனது மனைவி விவாகரத்து பெற்று விட்டாள். புதிதாக இன்னொருவனை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறாள்.

மாதத்திற்கொரு முறை தன் மகனை சந்திக்கும் தருணத்திற்காக ஆவலாக காத்திருக்கிறான் Ryota, தன் மனைவிக்கு இன்னொரு திருமணம் ஆகி விட்டால் நிரந்தரமாகவே தன் மகனைப் பிரிய வேண்டுமே என்று அஞ்சுகிறான். அவர்களை ரகசியமாக பின்தொடர்ந்து ஏக்கத்துடன் கண்காணிக்கிறான். இவன் ஊதாரி என்பதால் மனைவி வெறுக்கிறாள். “பராமரிப்புச் செலவு பணத்தைக் கொண்டு வரவில்லையா, உனக்கெல்லாம் குடும்பம் எதுக்கு?” என்று திட்டுகிறாள். அதுவும் நியாயம்தான்.

துப்பறியும் தொழிலில் தன் முதலாளிக்குத் தெரியாமல் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் சூதாட்டத்தில் தொலைக்கிறான் Ryota. அவனுக்கு ஒரு வயதான தாயார். தனக்கு வரும் பென்ஷனை வைத்துக் கொண்டு தனியாக ஒரு ஃபிளாட்டில் வசிக்கிறார். வசதியான வீட்டிற்கு குடிபெயர்வது என்பது கிழவியின் நீண்ட கால கனவு. ஏன், வாழ்நாள் லட்சியம் என்று கூட சொல்லலாம். மகன் மற்றும் மகளுடன் இணைந்து வாழ வேண்டும் என்று ஆசை.

ஆனால் ஊதாரி மகனின் மூலமாக அது இயலாது என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அதற்காக தன் மகனை அவர் வெறுப்பதில்லை. மறைந்து போன தன் கணவனைப் போலவே, மகனும் ஊதாரியாக கடன் வாங்கிக் கொண்டு சுற்றுகிறானே என்கிற வருத்தம் மட்டும் உண்டு. “பணம் ஏதும் வேண்டுமா?” என்று பாசமாக தாய் விசாரிப்பார். “இல்லையே.. என்னிடம் இருக்கிறது. இப்போதுதான் போனஸ் வாங்கினேன்” என்று ஜம்பமாக சொல்லுவான் மகன். ‘ராஸ்கல், உன்னைப் பற்றி தெரியாதா, எனக்கு?” என்று கிண்டல் செய்வாள் தாய். இப்படியொரு உறவு.

Ryota தன் தாயைத் தேடி வருவதற்கு இன்னொரு ரகசியமான காரணமும் உண்டு. அவனுடைய தந்தை வைத்திருந்த தொன்மையான பொருள் இன்று ஏலத்தில் நல்ல விலை போகும். அதை நோண்டி எடுப்பதற்காக வருகிறான். தாயிடம் சூசகமாக அதைப் பற்றி விசாரிக்கிறான். ‘அந்தாளைக் கட்டிக்கிட்டு என்ன சுகத்தைக் கண்டேன். அவர் சம்பந்தப்பட்ட எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டேன்” என்கிறாள் கிழவி. ஆனால் கணவனின் சட்டை முதற்கொண்டு பல பொருட்களை அவர் அப்படியே வைத்திருப்பது பின்னால் ஒரு காட்சியில் வருகிறது. உள்ளூற ஒளிந்திருக்கும் அன்பு.

தனிமையில் வசிக்கும் தாயின் வீட்டிற்கு டிடெக்டிவ்வின் சகோதரியும் அவ்வப்போது வந்து செல்வாள். தாயின் பென்ஷன் பணத்தை அவள் பிடுங்கிச் செல்கிறாளோ என்கிற சந்தேகம் இவனுக்கு. சகோதரிக்கும் அதே சந்தேகம். எனவே ஜாடை மாடையாக இருவரும் ஒருவரையொருவர் சீண்டிக் கொள்கிறார்கள்.

Ryota தன் மகனைச் சந்திக்கும் நாள். அவனை அழைத்துக் கொண்டு எங்கெங்கோ சுற்றுகிறான். தன்னிடமுள்ள சொற்ப பணத்தை வைத்துக் கொண்டு மலிவான பொருட்களை வாங்கித் தந்து சமாளிக்கிறான். பிறகு தன் தாயின் வீட்டிற்கு செல்கிறான். பேரனைப் பார்த்ததும் கிழவிக்கு சந்தோஷம். அன்பாக உபசரிக்கிறார்.

‘தன் மகன் இன்னும் திரும்ப வரவில்லையே’ என்று Ryota-வின் முன்னாள் மனைவியும் அங்கு வருகிறாள். கிழவிக்கு சந்தோஷம் இரட்டிப்பாகிறது. அன்றிரவு அவர்களை தங்க வைக்க முயற்சிக்கிறாள். முதலில் மறுக்கும் மருமகள், புயல் அறிவிப்பு காரணமாக அங்கு தங்க சம்மதிக்கிறாள். மகனும் மருமகளும் ஒரே அறையில் தங்குவதற்கான சூழலை ஏற்படுத்துகிறார் கிழவி. அப்படியாவது அவர்களுக்குள் ஒற்றுமை வராதா என்கிற ஏக்கம்.

முன்னாள் மனைவியிடம் பாசமாக பேசி பிரிந்து போன உறவை மீட்க முயற்சிக்கிறான் Ryota. ‘உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா” என்று விலகிச் செல்கிறாள் அவள். அன்றிரவு புயல் மழையில் வேடிக்கை பார்க்க தன் மகனை அழைத்துச் செல்கிறான் Ryota. இவர்களைக் காணாமல் மனைவியும் பின்னால் வந்து சேர்கிறாள். அந்த சிறிய குடும்பம் அன்னியோன்யமான தருணங்களைப் பகிர்ந்து கொள்கிறது. அவர்களுக்கிடையேயான உறவு மறுபடியும் புதிதாக மலர்ந்து விடக்கூடாதா என்று நமக்கே தவிப்பாக இருக்கிறது.

ஆனால் – மறுநாள் விடிந்தவுடன் அவரவர்களின் வாழ்க்கைக்குத் திரும்புவதோடு படம் நிறைவடைகிறது. இதில் வரும் தாய்க்கிழவியை பார்த்து நெகி்ழாதவர்கள் இருக்கவே முடியாது. அப்படியொரு இயல்பான நடிப்பு. ‘இந்த ஆம்பளைங்கள்லாம் இருக்கறத விட்டுட்டு பறக்கறத பிடிக்கப் போவாங்க. அதுவும் முடியாம திரும்ப வர்றப்ப எதுவும் இருக்காது” என்று தன் வாழ்க்கையையும் இணைத்து தன் மகனுக்கு கிழவி உபதேசம் செய்யும் காட்சி அற்புதமானது. பேரனும் மருமகளும் ஒருநாளாவது தன் வீட்டில் தங்க மாட்டார்களா என்கிற கிழவியின் துடிப்பை ஒவ்வொரு தாயிடமும் நாம் பார்த்திருப்போம். தந்தை தன் மீது வைத்திருந்த அன்பை Ryota இறுதிக்காட்சியில் அறிந்து கொள்ளும் இடம் நெகிழ்வானது.

இத்திரைப்படம் இன்னொரு வகையில் சமகால ஜப்பானிய வாழ்வியலையும் நுட்பமாக பதிவு செய்திருக்கிறது. பிள்ளைகளின் பராமரிப்பின்றி நொந்து மடியும் முதியோர்களின் தனிமை, அற்பமான காரணங்களுக்கு கூட விவாகரத்து பெறும் இளைய தலைமுறை, பெற்றோர்களின் பிரிவால் குழம்பித் தவிக்கும் பிள்ளைகள் என்று இத்திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் நெருக்கமாக உணர முடிகிறது.

ஆசியக் குடும்பங்கள் என்றல்ல உலகம் முழுக்கவே குடும்பம் என்கிற அமைப்பின் உள்ளே நிகழும் உறவுச்சிக்கல்கள், பிரிவின் தவிப்புகள் ஆகியவற்றை இத்திரைப்படம் வலிமையாக சுட்டிக் காட்டுகிறது. இதில் வரும் தம்பதியினர் இணையாமல் போனாலும், அவ்வாறானதொரு நிலைமையை நாம் அடையவிடக்கூடாது என்கிற படிப்பினையையும் பெற முடிகிறது.

Like Father, Like Son போன்ற பல அற்புதமான திரைப்படங்களைத் தந்திருக்கும் இயக்குநர் Hirokazu Kore-eda-ன் இன்னொரு அபாரமான படைப்பு இது.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

Tuesday, July 28, 2020

A Taxi Driver (2017) - ‘ரத்த பூமிக்குள் ஒரு யுத்த சாகசம்'





தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்று சுயநலமாய் இருக்கும் ஒரு டாக்சி டிரைவர், சந்தர்ப்ப சூழல்கள் ஏற்படுத்தும் மனமாற்றத்தால், தனக்கு ஏற்படும் ஆபத்தையும் பொருட்படுத்தாது பொதுநலவாதியாக மாறும் கதை. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த தென்கொரிய திரைப்படத்தை அற்புதமாக இயக்கியிருப்பவர் Jang Hoon. 

**

வருடம் 1980, மே மாதம்.  தென்கொரியாவில் உள்ள Gwangju நகரில் கிளர்ச்சி ஏற்படுகிறது. அங்கு நிகழும் அரசியல் குழப்பங்களை பயன்படுத்திக் கொண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றுகிறது. ஜனநாயகத்தை மீட்கக் கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். தனது ஆயுத பலத்தைப் பயன்படுத்தி அவர்களை முரட்டுத்தனமாக அடக்குகிறது ராணுவம். மாணவர்கள், பொதுமக்கள் என்று போராட்டம் செய்பவர்கள் எல்லோரையும் கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளுகிறது.

உள்ளூர் மக்களைத் தவிர இந்த படுகொலைச் சம்பவங்கள் பற்றி  வேறு எவருக்கும் தெரியவில்லை. வெளியுலகம் அறியாதவாறு அனைத்து தொடர்புகளையும் தனது கட்டுப்பாட்டில் ராணுவம் வைத்திருக்கிறது. உண்மை நிலைமைக்கு மாறாக மாணவர்கள் செய்யும் கலவரத்தினால்தான் பாதிப்பு ஏற்படுகிறது என்பது போன்ற வதந்திகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன.

ஜெர்மனியைச் சேர்ந்த பத்திரிகையாளரான பீட்டர், இந்த அநீதியைப் பற்றி வெளியுலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்ட நினைக்கிறார். ஆனால் அங்கு செல்வது எளிதானது அல்ல. ஆபத்துக்கள் நிறைந்தது. ராணுவத்தினருக்கு தெரிந்தால் சுட்டு விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். பெரும்பணம் செலவு செய்து ஒரு டாக்சியை ஏற்பாடு செய்கிறார் பீட்டர்.

சியோல் நகரத்தைச் சேர்ந்த டாக்சி டிரைவர் கிம். சமீபத்தில் மனைவியை இழந்தவர். மிகுந்த வறுமையிலும் தன்னுடைய ஒரே மகளை பாசத்துடன் வளர்க்கிறார். Gwangju நகரத்திற்குச் செல்ல ஒரு சவாரி இருப்பதை அறிந்தவுடன் ஏற்பாடு செய்யப்பட்ட டிரைவரை முந்திக் கொண்டு ஆவலுடன் பாய்கிறார். அதில் கிடைக்கும் பெரும்பணம் மட்டுமே அவருக்குத் தெரிகிறது. அந்தப் பயணத்திலுள்ள ஆபத்து பற்றி தெரிவதில்லை “நான்தான் உங்கள் டிரைவர்’ என்று பொய் சொல்லி விட்டு பீட்டரை ஏற்றிக் கொண்டு செல்கிறார். பீட்டர் செய்தி சேர்க்க வந்த பத்திரிகையாளர் என்பது கிம்மிற்கு தெரியாது.

நகருக்குள் எந்தவொரு வாகனமும் செல்ல விடாதவாறு ராணுவத்தினர் கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். பீட்டரை சந்தேகக் கண்ணுடன் பார்க்கிறார்கள். டிரைவர் கிம் தனது சாதுர்யமான பேச்சினால் அவர்களை சமாளித்து ரகசிய வழியின் மூலம் நகருக்குள் எப்படியோ சென்று விடுகிறார்.

நகரின் உள்ளே எங்கு பார்த்தாலும் கலவரம். போராட்டம் செய்யும் மாணவர்களை ராணுவம் சுட்டுக் கொல்கிறது. அதையெல்லாம் பற்றி கவலையே படாத கிம், தான் பாட்டிற்கு ஓரமாக உட்கார்ந்து உணவைச் சுவைத்துக் கொண்டிருக்கிறார். பாதுகாப்பற்ற சூழலில் பீட்டர் வீடியோ காமிராவின் மூலம் காட்சிகளை பதிவாக்குகிறார்.

டிரைவருக்கு அப்போதுதான் சூழ்நிலையின் பதட்டம் மெல்ல உறைக்கிறது. “யோவ்.. விஷயத்தைச் சொல்லாம என்னைக் கூட்டிட்டு வந்திட்டியா.. எப்படி திரும்பப் போறது?” என்று புலம்பத் துவங்குகிறார். ஆனால் ராணுவம் சுடுவதில் குருவி மாதிரி செத்து கீழே வீழும் மாணவர்களைப் பார்த்ததும் அவருக்குள்ளும் வீரம் பொங்குகிறது. இதர டாக்சி டிரைவர்களையும் அழைத்துக் கொண்டு உயிருக்குப் போராடும் மாணவர்கள் மருத்துவமனை செல்ல உதவுகிறார்.

ஒரு கட்டத்தில் ராணுவ அதிகாரி பீட்டரைப் பார்த்து விடுகிறார். “எவனோ வெளிநாட்டு பத்திரிகையாளன் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறான். அவனை தப்ப விட்டால் நமக்கு ஆபத்து” என்று வீரர்களுக்கு உத்தரவிடுகிறார். பீட்டரும் கிம்மும் எப்படியோ உயிர் தப்புகிறார்கள். அன்றிரவு உள்ளூர் ஆசாமி ஒருவன் இவர்களுக்கு அடைக்கலம் தருகிறான். “இங்கு நடக்கும் அக்கிரமங்களை நீங்கள்தான் வெளியுலகத்திற்கு சொல்ல வேண்டும்” என்று பீட்டரிடம் கண்ணீர் மல்க கேட்டுக் கொள்கிறான்.

தனது மகள் வீட்டில் தனிமையாக இருப்பாளே என்கிற கவலை கிம்மிற்குத் தோன்றுகிறது. மறுநாள் விடியும் போது யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பாதுகாப்பான இடத்தை வந்து அடைந்ததும்தான் அவருக்கு சற்று நிம்மதி பிறக்கிறது. ஆனால் உள்ளுக்குள் குற்றவுணர்ச்சி. ‘பத்திரிகையாளரை விட்டு விட்டு வந்து விட்டோமே’ என்று.

‘மாணவர்கள் கலவரம் செய்கிறார்களோமே, ராணுவத்தினரை தாக்குகிறார்களாமே’ என்று அங்கு சிலர் பேசிக் கொள்கிறார்கள். ராணுவத்தின் மூலம் ‘வெளிவரும்’ செய்திகளை அவர்கள் நம்புகிறார்கள். அப்போதுதான் கிம்மிற்கு எல்லாமே புரிகிறது. உயிர் போகும் ஆபத்து இருந்தாலும் இந்தச் செய்திகளை பீட்டர் ஏன் வெளியுலகத்திற்கு சொல்ல அத்தனை சிரமப்பட்டார் என்று. வெளிநாட்டு பத்திரிகையாளருக்கு இருக்கும் நீதியுணர்வு கூட உள்ளூர் ஆசாமியான நமக்கு இல்லையே என்று கிம்மிற்கு உறுத்துகிறது.

தனது வீட்டிற்குச் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டு மறுபடியும் ஆபத்து நிறைந்த நகருக்குள் வண்டியைச் செலுத்துகிறார். பத்திரிகையாளரைத் தேடி மருத்துவனைக்கு செல்கிறார். மாணவர்களின் பிணங்கள் நிறைந்து கிடக்கின்றன. அதைப் பார்த்து அழுகிறார் கிம். பீட்டர் எல்லாக் காட்சிகளையும் வீடியோவில் பதிவு செய்கிறார்.

பத்திரிகையாளரையும் அவரது காமிராவையும் பத்திரமாக வெளியே கொண்டு சேர்த்தால்தான் உண்மைநிலை உலகிற்கு தெரியும் என்கிற ஆவேசம் கிம்மிற்கு பிறக்கிறது. “எப்படியாவது உங்களை விமானநிலையத்தில் கொண்டு சேர்க்கிறேன்” என்று பீட்டருக்கு வாக்குறுதி தருகிறார். இவர்கள் வெளியேறுவதை ராணுவம் தடுக்கப் பார்க்கிறது. துப்பாக்கி குண்டுகள் இவர்களின் வாகனத்தின் மீது பாய்கின்றன. வேகமாக காரை ஓட்டிச் செல்லும் கிம்மிற்கு ஆதரவாக இதர டாக்சி டிரைவர்களும் வருகிறார்கள். அதில் சிலர் செத்துப் போகிறார்கள். அவர்களின் உதவியுடன் வெற்றிகரமாக விமானநிலையத்தை வந்து அடைகிறார் கிம்.

டாக்சி டிரைவரின் சாகசத்தை எண்ணி பத்திரிகையாளர் பீட்டர் நெகிழ்ந்து போகிறார். ஆனால் பீட்டரிடம் தன்னுடைய முகவரியை கிம் சொல்வதில்லை. ராணுவத்தின் அட்டூழியங்கள் வெளியுலகத்திற்கு தெரிய வருகின்றன. கலவரம் ஓய்ந்து சில வருடங்களுக்குப் பின் சியோலுக்கு திரும்ப வரும் பீட்டர், தனக்கு உதவிய பெயர் தெரியாத டாக்சி டிரைவரைப் பற்றி பத்திரிகைகளிடம் சொல்கிறார்.

பத்திரிகையாளருக்கும் டிரைவருக்கும் முதலில் ஏற்படும் சண்டையும், பிறகு அவர்களுக்கு ஏற்படும் நட்புணர்வும், சூழலை உணர்ந்தவுடன் கிம்மிற்கு ஏற்படும் மனமாற்றமும் என பல முக்கியமான காட்சிகள். தவற விடக்கூடாத திரைப்படம்.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

Sunday, July 26, 2020

Sarmasik (2015) - ‘கப்பலுக்குள் ஒரு பிக்பாஸ் விளையாட்டு'





ஏறத்தாழ முழு திரைப்படமும் ஒரு கப்பலுக்குள் நிகழ்வது போன்ற சுவாரசியம் மற்றும் திகிலான திரைக்கதையைக் கொண்டது Sarmasik. வேறு வழியில்லாத சூழலில் கப்பலின் உள்ளே ஆறு மனிதர்கள் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. உணவுப் பற்றாக்குறை, பாதுகாப்பற்ற உணர்ச்சி, எதிர்கால பயம் உள்ளிட்ட சில காரணங்களால் அவர்களுக்குள் மெல்ல மெல்ல ஏற்படும் உளவியல் மாற்றங்களையும் அதன் பயங்கரங்களையும் மிக நுட்பமாக பதிவாக்கியிருக்கிறது இந்த துருக்கி நாட்டு திரைப்படம். இளம் இயக்குநர் Tolga Karaçelik-ஆல் உருவாக்கப்பட்டுள்ள இது பல விருதுகளைப் பெற்றுள்ளது.

**

அந்தக் கப்பலுக்கு துறைமுகத்தை நெருங்க முடியாத சிக்கல் ஏற்படுகிறது. அதன் உரிமையாளர் திவாலாகி விட்டதாக கப்பலின் கேப்டனுக்கு தகவல் வருகிறது. உள்ளே இருக்கும் பணியாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வரவில்லை. கப்பலில் உணவு, எரிபொருள் எல்லாம் குறைவாக இருக்கிறது. சரியான நிலைமை தெரியும் வரை கப்பல் கரையருகே நிற்க வேண்டிய சூழல்.

ஒரு கப்பலை நிர்வகிப்பதற்கு அடிப்படையாக தேவைப்படும் ஐந்து நபர்களை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவர்களை அனுப்பி விடுகிறார் கேப்டன். ‘இனி நாம் இணைந்துதான் இந்தக் கப்பலை காப்பாற்ற வேண்டும். நிலைமை சீரடைந்ததும் உங்களுக்கு சம்பளம் கிடைத்து விடும்’ என்று மற்றவர்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார். அவரின் சொல்லுக்கு மற்றவர்கள் கட்டுப்பட்டாலும் உள்ளுக்குள் சற்று அவநம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

அரசாங்கத்தால் தன்னுடைய வீடு இடிக்கப்படவிருப்பதை தொலைக்காட்சியின் மூலம் அறியும் நடிர் வீட்டுக்குப் போக துடிக்கிறான். சமையல் பணியில் இருப்பவன் அவன். “அங்கே போய் நீ என்ன செய்யப் போகிறாய்? இங்கே இருந்தாலாவது சம்பளம் கிடைக்கும்’ என்கிறார் கேப்டன். அரை மனதுடன் சம்மதிக்கிறான் நடிர். “உன் மீது எனக்கு நம்பிக்கையுள்ளது. இங்குள்ள மற்றவர்களை நீதான் கண்காணிக்க வேண்டும்” என்கிறார்.

இதைப் போலவே மூத்த பணியாளரான இஸ்மாயிலை தனது வலது கரமாக நியமிக்கிறார் கேப்டன். அவரிடமும் அதையே சொல்கிறார். ‘நான் உன்னை நம்புகிறேன்”. இப்படி ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக சொல்வதின் மூலம் ‘தாங்கள் முக்கியமானவர்கள்’ என்பதைப் போல அவர்களை உணரச் செய்யும் தந்திரம்.

ஆனால் புதிதாக பணியில் இணைந்திருக்கும் சென்க் கலகவாதியாக இருக்கிறான். ‘இவர்கள் நம்மை ஏமாற்றப் பார்க்கிறார்கள். நமக்கு சம்பளம் வராது. நாம் இங்கேயே இருந்து சாக வேண்டியதுதான்” என்று மற்றவர்களைக் குழப்புகிறான். முதலில் ஒழுங்காக இருக்கும் ஆல்பரும் இவனுடன் இணைந்து கொள்கிறான். இருவரும் ஒழுங்காக வேலை செய்யாமல் குடித்து விட்டு தூங்குகிறார்கள்.

இஸ்மாயில் சொல்லும் வேலையைச் செய்யாமல் டபாய்க்கிறான் சென்க். இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. கேப்டனிடம் சென்று புகார் செய்கிறார் இஸ்மாயில். ‘நிலைமை சரியில்லை. அவன் வேலையை நீ செய்’ என்கிறார் கேப்டன் கறாராக. கேப்டனை எதிர்க்கவும் முடியாமல் சென்க்கை சகித்துக் கொள்ளவும் முடியாமல் தத்தளிக்கிறார் இஸ்மாயில்.

ஒவ்வொருவரிடமும் மெல்ல மெல்ல பகையும் கசப்பும் உருவாகிறது. எப்போது வேண்டுமானாலும் அங்கு கலவரம் உருவாகும் நிலைமை. தம்மை மற்றவர்கள் தாக்கி விடுவார்களோ என்று ஒவ்வொருவருமே சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது சார்ந்த பதட்டமும் திகிலும் நிழலைப் போல அவர்களை துரத்திக் கொண்டேயிருக்கிறது.

இதற்கிடையில் குர்த் என்பவன் கப்பலில் இருந்து காணாமற் போகிறான். சென்க் அவனை கப்பலில் இருந்து தள்ளிக் கொன்றிருக்கலாம் என்று தோன்றுகிறது. குர்த்தின் ஆவி கப்பலுக்குள் சுற்றிக் கொண்டிருக்கிறது என்று சமையல்காரனான நடிர் அலறுகிறான். மற்றவர்கள் அவனை சமாதானப்படுத்துகிறார்கள்.

தங்களுக்கு கிடைக்கப் போகும் சம்பளத்தை விடவும் இந்தக் கப்பலில் இருந்து எப்போது வெளியேறுவது என்கிற கேள்வியே அனைவரின் மனதிலும் முதன்மையாக இருக்கிறது. கேப்டனிடம் கேட்கலாம் என்கிறான் சென்க். மற்றவர்கள் தயங்குகிறார்கள். என்றாலும் தயக்கத்துடன் சென்று கேட்கிறார்கள். ஏற்கெனவே நிறைய சிக்கலில் இருக்கும் அவர் கோபமாக கத்தி இவர்களை துரத்துகிறார்.

நாட்கள் கடக்க கடக்க இன்னமும் நிலைமை சிக்கலாகிறது. கூண்டில் அடைக்கப்பட்ட மிருகங்கள் போல் ஆகிறார்கள். எந்த நேரத்திலும் எவராவது கொல்லப்படலாம். வெறுப்பும் துரோகமும் எரிச்சலும் நிறைந்து கிடக்கிறது.  குர்த்தின் ஆவி கப்பலுக்குள் சுற்றுவதை இப்போது இஸ்மாயில் காண்கிறார். மன உளைச்சல் தாங்காத நடிர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறான். சென்க்கின் மனநிலை பிசகி உளற ஆரம்பிக்கிறான். தன்னைக் கொன்று விடுவார்களோ என்கிற பயத்தில் அறைக்குள் அடைந்து கொள்கிறார் கேப்டன்.

இறுதியில் அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை பூடகமான பயங்கரத்துடன் விளக்குகிறது திகிலான காட்சிகள்.

**

மனிதன் கூடிவாழ விரும்பும் சமூக விலங்குதான். ஆனால் சிக்கலான சந்தர்ப்பங்களில் அவன் சுயநலம் மிகுந்து எழும் வெறும் விலங்காக மாறிப் போகிறான். ஓரிடத்தில் அடைபடும் மனிதர்களுக்கிடையில் மெல்ல மெல்ல மாறும் விபரீத நடத்தைகளைப் பற்றி மிக நிதானமாகவும் அதே சமயத்தில் நுட்பமாகவும் இந்தப் படம் விவரிக்கிறது.

இத்திரைப்படமும் ஏறத்தாழ ஒரு பிக்பாஸ் விளையாட்டுதான். ஒருவர் மீது மற்றவர்கள் சந்தேகம் கொள்கிறார்கள். புறம் பேசுகிறார்கள். துரோகம் செய்கிறார்கள். தலைமைப் பொறுப்பில் இருக்கும் கேப்டன், மிகுந்த சாமர்த்தியத்தோடு அவர்களை கறாராக மேய்த்து சமாளித்தாலும், நிலைமை சிக்கலாகும் போது தோற்றுப் போகிறார். அங்குள்ள சிக்கலை மேலும் ஊதி வளர்க்கிறான் முரடனான சென்க்.

ஆனால் சற்று நிதானமாக யோசித்துப் பார்த்தால் சூழல்தான் அவர்களை மனச்சிதைவிற்கு இட்டுச் செல்கிறது என்பது நமக்குப் புலப்படும். அங்குள்ள பணியாளர்கள் ஒவ்வொருவருக்குமே தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. அதைச் சமாளிப்பதற்கான பணத்திற்குத்தான் கடுமையான இந்தப் பணியில் வந்து இணைகிறார்கள். ஆனால் எப்போது சம்பளம் கிடைக்கும் என்று தெரியாத சூழலில் கப்பலில் அடைபட்டு கடுமையாக வேலை செய்ய வேண்டும் என்கிற கட்டாயத்திற்கு உள்ளானால் ஞானியாக இருப்பவன் கூட சாத்தானாக மாறி விடுவான்.

சிக்கலான சூழலில் மனிதர்களிடம் ஏற்படும் இந்த நடத்தை மாற்றத்தை மிக நுட்பமாக விவரிக்கும் திரைப்படம்.  தனது முதல் படைப்பிலேயே சர்வதேச சிக்ஸர் அடித்திருக்கிறார் இயக்குநர்.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

Friday, July 24, 2020

Baby Driver (2017) - ‘கலையும் கொலையும்'




‘வன்முறையும் இசையும் கலந்து அற்புதமாக மிளிர்வது சில திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம். கலையுணர்வும் கொலையுணர்வும் கலந்த வசீகரமான திரைக்கதையே Baby Driver-ன் அடிப்படையான பலம். பாத்திர வடிவமைப்பின் கச்சிதம் முதற்கொண்டு பல அருமையான விஷயங்கள் இத்திரைப்படத்தில் உள்ளன.

**

பேபி என்கிற இளைஞன்தான் பிரதான பாத்திரம். அவனுடைய இளம் வயதில் அவனுடைய பெற்றோர் ஒரு கார் விபத்தில் இறந்து விட்டனர். தப்பிப் பிழைத்த பேபியின் காதில் பாதிப்பு ஏற்பட்டு தொடர்ந்து சத்தம் வருகிறது. அதை தவிர்க்க, காதில் Ipod அணிந்து எப்போதும் இசை கேட்பது அவனது வழக்கம். மற்றவர்கள் உரையாடுவதில் முக்கியமான பகுதியை பதிவு செய்து இசையுடன் ரீமிக்ஸ் செய்வது அவனுடைய பொழுதுபோக்கு. மிக முக்கியமாக அதிவேகமாகவும் திறமையாகவும் கார் ஓட்டத் தெரிந்தவன்.

பணப்புழக்கம் உள்ள இடங்களைத் தேர்ந்தெடுத்து கொள்ளையடிப்பதற்கான திட்டங்களை திறமையாக உருவாக்குபவர் டாக். ஒருமுறை பயன்படுத்திய குழுவை இன்னொரு முறை பயன்படுத்த மாட்டார். அவர்களுக்கான ரகசியப் பெயர்களும் உண்டு. ஆனால் விதிவிலக்காக பேபியை மட்டும் டிரைவராக தொடர்ந்து பயன்படுத்துகிறார். அவன் தன்னுடைய அதிர்ஷ்டம் என நம்புகிறார்.

டாக்கின் விலையுயர்ந்த காரை திருடி மாட்டிக் கொள்வதால், விருப்பமில்லா விட்டாலும் செஞ்சோற்று கடன் தீர்க்க அவரிடம் பணிபுரிய வேண்டிய நிலைமை பேபிக்கு. கொள்ளையர்கள் காவல் துறையிடம் மாட்டிக் கொள்ளாமல் அதிவேகமாக காரைச் செலுத்துவதில் பேபி திறமையானவன். கொள்ளையடித்த பணத்தில் சொற்பமான தொகையை பேபியிடம் விட்டெறிவார்கள். ‘இன்னமும் இரண்டு திட்டங்களில் பணிபுரிந்தால் போதும், பிறகு விட்டு விடுகிறேன்” என்று டாக் வாக்களித்திருப்பதால், வன்முறை பிடிக்காத பேபி, பல்லைக்கடித்துக் கொண்டு அவருக்கு உடன்படுகிறான்.

ஓர் உணவகத்தில் டெபோரா என்கிற பெண்ணைச் சந்திக்கிறான் பேபி. அவளது களங்கமில்லாத தன்மையும் இசையறிவும் பேபியை ஈர்த்து விடுகிறது. இருவருக்குள்ளும் மெல்ல காதல் உண்டாகிறது.

பேபி செய்ய வேண்டிய கடைசி பணி. தனது திட்டத்தை டாக் விளக்குகிறார். அதற்காக புதிய குழு வந்திருக்கிறது. இசை கேட்டுக் கொண்டே பேபி கவனிப்பதை ஒரு முரடன் வெறுக்கிறான். ‘இந்த மாதிரி பாட்டுக் கேட்கற சின்னப்பையனை வெச்சுக்கிட்டு எப்படி இத்தனை ஆபத்தான வேலையை செய்ய முடியும்?” என்று எரிச்சல் அடைகிறான். உதடுகளை கவனிப்பதின் மூலம் விஷயத்தை புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்ற பேபி, திட்ட விவரங்களை தெளிவாக கூற, முரடன் ஆச்சரியம் அடைகிறான். என்றாலும் அவனுக்கு பேபி மீது எரிச்சல் தோன்றுகிறது.

கொள்ளைடிக்க கிளம்புகிறார்கள். எவரும் ரத்தம் சிந்துவதை விரும்பாத பேபி, அங்கு கொலை நிகழ்வதை வெறுக்கிறான். கொள்ளையர்கள் பணத்துடன் ஓடி வருகிறார்கள். காரை ஸ்டார்ட் செய்யாத பேபியை முரடன் மிரட்டி காரை எடுக்கச் சொல்கிறான். இருவருக்குள்ளும் பகை தோன்றுகிறது. காரை மிகத்திறமையான ஓட்டி அவர்களை தப்பிக்க வைக்கிறான் பேபி.

சொன்னபடியே பேபியின் கடைசி பணியில் அவனை விடுவிக்கிறார் டாக். டெபேரா மீது ஏற்படும் காதல் பேபியின் வாழ்க்கையை மாற்றுகிறது. பிட்ஸா டெலிவரி செய்யும் பணியில் சேர்கிறான். வாகனத்தை வேகமாக ஓட்டுவது அவனுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி என்பதால் பணி சுலபமாக இருக்கிறது.

ஒரு நாள் தன்னுடைய காதலியை விலையுயர்ந்த ஓட்டலுக்கு அழைத்துச் செல்கிறான் பேபி. அவர்களின் பில் தொகை செலுத்தப்பட்டதாக கூறுகிறார்கள். அவனுடைய பழைய முதலாளி டாக். திரும்பவும் இன்னொரு கொள்ளைத் திட்டத்திற்கு வர வற்புறுத்துகிறார். பேபி மறுக்கிறான். “உன் கால்களையும் நேசத்திற்கு உரியவர்களையும் இழக்க விரும்புகிறாயா?” என்று  மிரட்டுகிறார் டாக். அவர்கள் எதற்கும் அஞ்சாத பயங்கரவாதிகள் என்பதால் வேறுவழியில்லாமல் பேபி அதற்கு உடன்படுகிறான். ஆனால் ஒரு உள்ளுக்குள் ஒரு ரகசிய திட்டம். தன் காதலியுடன் ஊரை விட்டு தப்பிச் செல்ல முடிவெடுக்கிறான். டெபோராவிடம் இது பற்றி தெரிவிக்கிறான். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் தடை ஏற்படுகிறது. பேபி தவித்துப் போகிறான்.

புதிய ஆயுதங்கள் வாங்குவதற்காக செல்கிறார்கள். அங்கு ஏற்படும் குழப்பத்தில் துப்பாக்கிச் சண்டை நடக்கிறது. வெற்றிகரமாக உயிர்தப்பி திரும்புகிறார்கள்.  வரும் வழியில் உணவகத்தில் காரை நிறுத்தச் சொல்கிறான் முரடன். அது டெபோரா பணிபுரியும் உணவகம் என்பதால் மறுக்கிறான் பேபி. ஆனால் முரடன் மிரட்டவே வேறு வழியில்லாமல் அவர்களுடன் செல்கிறான். தன்னுடைய தொழில் டெபேராவிற்கு தெரிந்து விடும் என்பதால் குற்றவுணர்வு அடைகிறான்.

இருவரும் கண்ணால் பேசிக் கொள்வதை கவனித்த முரடன் சந்தேகமடைகிறான். பயணத் திட்டத்தை மாற்றி இரவு 2 மணிக்கு வருகிறேன் என்று ரகசிய செய்தியை தருகிறான் பேபி. ஆயுதம் வாங்கச் சென்ற இடத்தில் நடந்த சண்டையினால் திட்டம் கசிந்து விடும் என்று குழப்படைகிறார் டாக். எனவே அனைவரையும் அன்றிரவு அங்கேயே தங்கச் சொல்கிறார். நள்ளிரவைத் தாண்டிய பிறகு பேபி அங்கிருந்து ரகசியமாக கிளம்புகிறான். ஆனால் முரடர்கள் வழிமறிக்கிறார்கள். அவன் உரையாடலை பதிவு செய்வதைப் பார்த்து போலீஸ் ஆளாக இருப்பானோ என்கிற சந்தேகம் ஏற்படுகிறது.

“இது என் பழக்கம்” என்கிறான் பேபி. நம்ப மறுக்கிறார்கள். அவனுடைய வீட்டிற்குச் சென்று அனைத்து டேப்புகளையும் பார்த்தபிறகு நம்பிக்கை வருகிறது. திட்டமிட்டபடி மறுநாள் கொள்ளைக்கு கிளம்புகிறார்கள். அங்கு முரடன் உயிர்க்கொலையை நிகழ்த்துவதால் பேபிக்கு கோபம் வருகிறது. மிகத் திறமையாக அவனைச் சாகடிக்கிறான்.

சில பல துரத்தல்களுக்குப் பிறகு கூட வரும் ஒவ்வொருவரும் இறக்கிறார்கள். பேபியின் உண்மையான காதலை அறியும் டாக், பணம் தந்து தப்பிக்கச் சொல்கிறார். ஆனால் களங்கமில்லாத டெபோராவை குற்றவுலகுடன் தொடர்பு படுத்த விரும்பாத பேபி, தப்பிக்க வாய்ப்பிருந்தும் காவலர்களிடம் சரண் அடைகிறான்.

பரோலில் வெளிவரும் பேபி, டெபோராவை சந்திக்கும் இனிமையான காட்சியோடு படம் நிறைவுறுகிறது. அட்டகாசமான திரைக்கதை, பின்னணியிசை. பாத்திரங்களின் வடிவமைப்பு, வசனங்கள், என்று ஒவ்வொரு விஷயமும் மிக கவனமாக உருவாக்கப்பட்டுள்ளதே இத்திரைப்படத்தின் பலம். Edgar Wright-ன் அபாரமான இயக்கம், இதை முக்கியமான திரைப்படமாக மாற்றுகிறது.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

Thursday, July 23, 2020

Jackals (2017) - ‘குள்ளநரி மனிதர்கள்'





‘இருக்கை நுனியில் அமர வைத்த கிளைமாக்ஸ்’ என்று சில திரைப்படங்களைப் பற்றி எழுதுவார்கள்.. ஆனால் படம் முழுவதுமே அப்படியான காட்சிகளால் நிறைந்திருக்கும் ஹாரர் –திரில்லர்தான் Jackals. 1980-ல் நிகழ்வதாக சித்தரிக்கப்படுகிறது. கொலைவெறியுடன் திரியும் ரகசியக்குழுவில் சிக்கும் இளைஞனை அவனது குடும்பமே இணைந்து மீட்க முயல்வதுதான் கதை. மகனை மீட்டார்களா அல்லது அவர்களே மாட்டிக் கொண்டார்களா?

**

பல்வேறு காரணங்களால் சக மனிதர்களை வெறுக்கும், அவர்களை சாகடிக்க முயலும் ரகசியவாத குழுக்கள் உலகம் முழுவதும் உள்ளன. சமீபத்திய பயங்கரமான ‘ப்ளூவேல்’ விளையாட்டுக் குழுவும் அப்படித்தான். தற்கொலை எண்ணமுள்ளவர்கள், இந்த பூமிக்கு பாரம், சாகட்டுமே என்று நினைக்கும் குருரமானவர்கள். உலகம் முழுவதும் பரவியுள்ளதாக சொல்லப்படும் ‘இலுமினாட்டி’யும் அப்படியொரு ரகசியக் குழு என்கிறார்கள்.

ஓர் இளைஞன் தன்னுடைய குடும்பத்திற்குள் சென்று பெற்றோரையும் தங்கையையும் சாவகாசமாக கொல்லும் காட்சியோடு திரைப்படம் துவங்கிறது. அவர்கள் யார் என்றெல்லாம் சொல்லப்படுவதில்லை. இந்தக் குழுவின் பயங்கரத்தை உணர்த்த. அவ்வளவே.

இரு இளைஞர்கள் காரில் வேகமாக பயணிக்கும் போது கார் டயர் பஞ்சர் ஆகிறது. அதை அவர்கள் சரிசெய்து கொண்டிருக்கும் போது இன்னொரு வாகனத்தில் வரும் இருவர், இவர்களை தாக்கி விட்டு ஒரு இளைஞனை மட்டும் மயக்கப்படுத்தி கொண்டு செல்கிறார்கள். தாக்கியவர்களில் ஒருவர் இளைஞனின் தந்தை.

அவர் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? ஜஸ்டின் அவர்களின் மகன். கொலைவெறி ரகசியக்குழுவிடம் இணைந்து அவனும் கொடூரனாகி விட்டான். அவனுடைய மனதை மாற்றுவதற்காக ஒதுக்குப்புறமாகவுள்ள தன் வீட்டிற்கு வலுக்கட்டயமாக அழைத்துச் செல்கிறார் தந்தை. முரட்டுத்தனமாக செயல்படும் ஜஸ்டினிடம் பேசி மனதை மாற்ற ஜிம்மி என்பவர் கூட வருகிறார்.

இவர்களின் வருகைக்காக வீட்டில் காத்திருப்பவர்கள் தாய், சகோதரன், ஜஸ்டினின் காதலி சமந்தா, அவர்களின் குழந்தை. வீட்டின் மாடியறையில் ஜஸ்டினை இழுத்துச் சென்று ஒரு நாற்காலியில் இறுக்கமாக கட்டிப் போடுகிறார்கள். இல்லையென்றால் அவனால் இவர்களது உயிருக்கே கூட ஆபத்து நேரிடலாம். ஜிம்மிக்கு இந்த ஆபத்து பற்றி நன்கு தெரியும்.

மயக்கம் தெளிந்த ஜஸ்டின் எல்லோரையும் வெறித்துப் பார்க்கிறான். ‘என்னை அவிழ்த்து விடுங்கள். என் பெயர் ஜஸ்டின் இல்லை” என்று வெறித்தனமாக கத்துகிறான். ரகசியக் குழுவில் அவனுடைய பெயர் வேறு. சகோதரன் ஜஸ்டினை வெறுப்புடன் பார்க்கிறான். ‘இந்த முரடனை ஏன் வரவழைத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்’ என்று அவனுக்கு கோபம். ‘ஐயோ.. என் பிள்ளை இத்தனை பயங்கரமாக பேச மாட்டானே” என்று தாய் பதறுகிறாள். அருகில் பாசமாக செல்லும் அவளுடைய காதை வெறியுடன் கடிக்கிறான் ஜஸ்டின். எப்படியோ இழுத்து சமாளிக்கிறார்கள்.

ஜிம்மி எத்தனையோ பேசிப் பார்த்தும் ஜஸ்டின் அப்படியேதான் இருக்கிறான். அவனது காதலி சமந்தா, தன் குழந்தையுடன் வந்து  பாசமாக பேசுகிறாள். ம்ஹூம்…

இரவு நேரம் வருகிறது. வெளியே எவரோ அமர்ந்திருப்பதை ஜஸ்டினின் தந்தை பார்க்கிறார். ‘நான் போய் பார்த்து விட்டு வருகிறேன்’ என்று ஜிம்மி கிளம்புகிறார். இருட்டில் அமர்ந்திருப்பது ஒரு இளம்பெண். இவர் துரத்தினால் நகர்வதில்லை அருகில் செல்லும் போது விருட்டென்று மறைந்து விடுகிறாள்.

அவள் அங்கு ஏதோ வரைந்து வைத்திருக்கிறாள். ஜிம்மி அருகில் சென்று பார்க்கிறார். ரகசியக்குழுவின் அடையாளக்குறி. ஜஸ்டினின் காதருகில் உள்ள அதே அடையாளம். இவர்கள் எப்படி தங்களைப் பின்தொடர்ந்து வந்தார்கள் என்று ஜிம்மிக்கு ஆச்சரியம். இவர்கள் தாக்கிய இன்னொரு இளைஞன் மயக்கம் தெளிந்து பின்னால் வந்திருக்க வேண்டும்.

ஜிம்மி அந்த மாயப் பெண்ணை துரத்திச் செல்லும் போது மேலேயிருந்து வீசப்படும் கயிற்றில் சிக்குகிறார். அப்போதுதான் தெரிகிறது.. ஒருவர் அல்ல.. பல நபர்கள் அந்த வீட்டைச் சுற்றி நிற்கிறார்கள். நரியைப் போன்ற முகமூடியுடன் அணிந்து குழுவாக நகரும் அவர்களின் இயக்கமே அச்சமூட்டுவதாக இருக்கிறது. இளம்பெண் ஓடிவந்து அநாயசமாக ஜிம்மியின் கழுத்தில் கத்தியைப் பாய்ச்சுகிறாள்.

வீட்டின் உள்ளே இருந்து பார்க்கிறவர்கள் அதிர்ந்து போகிறார்கள். கதவு, சன்னல் என்று எல்லாவற்றையும் அடைக்கிறார்கள். காவல்துறையின் உதவியை நாடலாம் என்று தொலைபேசியை எடுத்தால் வேலை செய்வதில்லை. அக்கம் பக்கத்தில் நடமாட்டம் இல்லாத இடம். ஒரு மைல் தூரத்திற்கு ஓடிச் சென்றால்தான் அடுத்த வீடு. ஆனால் வெளியில் சென்றால் குள்ளநரிக் குழு கடித்துக் குதறி விடும்.

ஒரு குழந்தை உட்பட உள்ளே மாட்டிக் கொண்டிருப்பவர்கள் நால்வர். கூடவே இருக்கும் வெடிகுண்டு ஜஸ்டின். வெளியே கொலைவெறிக்குழு. எப்படி தப்பிப்பார்கள்? கொலைகாரரர்கள் அவசரப்படுவதில்லை. இவர்கள் வெளியே வரும் வரை மெளனமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘அவர்கள் என்னை மீட்க வந்திருக்கிறார்கள்’ என்று ஜஸ்டின் குரூரமாகப் புன்னகைக்கிறான்.

குழுவில் உள்ள குள்ளநரி முகமூடி ஒன்று மெல்ல வீட்டினுள் நுழையப் பார்க்கிறது. சமந்தாவின் கையைப் பிடித்து வெளியே இழுக்கிறது. ஜஸ்டினின் தந்தை அவளைக் காப்பாற்றுகிறார். “அவர்களுக்கு இவன்தானே வேண்டும், பேசாமல் இவனை வெளியே தள்ளிவிட்டு நாம் தப்பிக்கலாம்” என்று கத்துகிறான் சகோதரன். ஆனால் பெற்றோர் அதற்கு ஒப்புக் கொள்வதில்லை.

மெல்ல மெல்ல தாக்குதல்கள் ஆரம்பிக்கின்றன. அவர்கள் அவசரப்படவேயில்லை. உள்ளே நுழையும் ஒருவனை ஜஸ்டினின் தந்தை மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு சாகடிக்கிறார். என்றாலும் மெல்ல மெல்ல ஒருவர் ஒருவராக வருகிறார்கள். குழந்தை வீறிட்டுக் கத்துகிறது.

‘நான் பின்பக்க கதவின் வழியாக வெளியேறி ஓடிச் சென்று பக்கத்தில் உதவியை கேட்கிறேன்’ என்று சகோதரன் வெளியே ஓடுகிறான். ஆனால் சாமர்த்தியமாக சென்றாலும் அவர்களிடம் மாட்டிக் கொள்கிறான். முதலில் அவனுடைய கையை எரிக்கிறார்கள். இதை வீட்டிற்குள் இருந்து பார்க்கிற தாய், பாசத்தில் வெளியே செல்ல அவளும் மாட்டிக் கொள்கிறாள்.

கட்டப்பட்டிருக்கும் ஜஸ்டின் சந்தோஷக் கூச்சலிடுகிறான். அவனை கழற்றி வெளியே அனுப்பினால் தப்பிக்க முடியுமா? அனுப்பினாலும் தம்மைக் கொன்று விடுவார்களா? குழப்பம்.. பதட்டம்… பயம்….

வேறு வழியில்லாமல் அவனைக் கழற்றி விடுகிறார்கள். அவன் மெல்ல வெளியே செல்கிறான். ஆனால் சகோதரனையும் தாயையும் மெல்ல மெல்ல அவர்கள் சாகடிக்கிறார்கள். வேறு வழியில்லை. ஜஸ்டினின் தந்தை, சமந்தாவிற்கு ஓர் உபாயம் சொல்கிறார். “நான் வெளியே சென்று அவர்களை திசை திருப்புகிறேன். நீ குழந்தையை தூக்கிக் கொண்டு வேகமாக ஓடி விடு”.

அவ்வாறே வெளியில் சென்று  அவர் குழுவிடம் போராடுகிறார். எல்லோரையும் முகமூடிக் குழு சாகடிக்கிறது. சமந்தா குழந்தையை தூக்கிக் கொண்டு பதைபதைப்புடன் நீண்ட தூரம் ஓடுகிறாள். தப்பித்து விட்டோம் என்று நினைக்கும் போது…. பின்னால்....

எப்படியாவது அனைவரும் தப்பித்து விடுவார்கள் என்று நாம் நினைக்கும் போது அதற்கு எதிர்திசையில் செல்வதுதான் இந்த திரைக்கதையின் சாகசம். முதலும் முடிவும் இல்லாமல் இருந்தாலும் பரபரப்பான திகில் காட்சிகளுக்காக பார்ககலாம். இயக்கம். Kevin Greutert.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

Wednesday, July 22, 2020

Megan Leavey -2017 - ‘ரெக்ஸ் எனும் நண்பன்'



வெடிகுண்டு மிரட்டல் இருப்பதாக தகவல் வரும் பகுதிக்கு கவச உடை அணிந்து நாயுடன் வரும் ஆசாமியைப் பார்த்திருப்போம். அந்த மனிதனுக்கும் நாய்க்குமான நேசத்தைப் பற்றி நாம் எப்போதாவது யோசித்துப் பார்த்திருப்போமா? அப்படியொரு நெகிழ்ச்சியான உறவை சித்தரிக்கும் திரைப்படம் இது.

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில், அமெரிக்க ராணுவத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணுக்கும் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் ஒரு மோப்ப நாய்க்கும் இடையிலான பாசவுணர்வு அற்புதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

**

மேகன் லீவே ஓர் இளம்பெண். அவளுடைய பெற்றோர்கள் பிரிந்திருப்பதால் ஏற்படும் குடும்ப பிரச்சினை காரணமாக அன்பிற்கு ஏங்குபவள். அவளுக்கு பிடித்தமான பணி ஏதும் அமைவதில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போகிறது. ராணுவத்தில் இணைவதற்கான அறிவிப்பை பார்த்ததும் அங்கு சென்று இணைகிறாள்.

அங்கு தரப்படும் கடுமையான பயிற்சிகளை மேகனால் தாக்குப் பிடிக்க முடிவதில்லை. நிறைய சொதப்புகிறாள். மோப்ப நாய்கள் இருக்கும் பகுதியை சுத்தம் செய்ய அனுப்புகிறார்கள். வாழ்க்கையை நொந்து கொண்டே நாய்களின் மலத்தை சுத்தம் செய்கிறார்.

ரெக்ஸ் என்கிற முரட்டுத்தனமான நாய் ஒன்று கூண்டில் இருக்கிறது. இவளைப் பார்த்ததும் ஆக்ரோஷமாக குரைக்கிறது. இவளுக்கும் கோபம் வந்து திட்டுகிறாள். சந்தேகப்படும் நபர்கள் தப்பியோடினால் நாய்கள் கவ்வி பிடிப்பதற்கான பயிற்சி நடக்கிறது. நாய்களின் பயிற்சிக்காக மேகனை ஓடச் சொல்கிறார்கள். பயந்து கொண்டே அதற்கு உடன்படுகிறாள்.

பயிற்சிக்காக அடுத்து ஒரு நாய் வருகிறது. அதனைப் பார்த்ததும் மேகன் அதிர்ந்து போகிறாள். கூண்டில் இருக்கும் தைரியத்தில் இவள் கர்ண கடூரமாக திட்டிய நாய்தான் அது. ரெக்ஸ். அது நிச்சயம் தன்னை பழிவாங்கப் போகிறது என மேகன் நினைக்கிறாள். இவள் பயந்தது போலவே அது ஆக்ரோஷமாக இவளைத் துரத்தி கடிக்கிறது.

ரெக்ஸிற்கு பயிற்சியளிக்கும் நபர் சில காரணங்களால் விலகி விடவே, அந்தப் பணியை மேகனால் செய்ய முடியுமா என கேட்கிறார்கள். உள்ளுற பயம் இருந்தாலும் ரெக்ஸிடம் பழகத் துவங்குகிறாள் மேகன். மெல்ல மெல்ல இருவரும் இணக்கமாகிறார்கள்.

ரெக்ஸ் புத்திக்கூர்மையுள்ள நாய். வெடிகுண்டுகள் எங்கு ஒளிக்கப்பட்டிருந்தாலும் தன் மோப்ப சக்தியால் கண்டுபிடித்து விடும். ‘நாயின் செளகரியத்திற்கு ஏற்ப நீ பின்தொடர்ந்து போ. உன் இஷ்டத்திற்கு நாயை இழுக்காதே’ என்கிறார் மூத்த பயிற்சியாளர்.

சதாம் உசேனை பிடிப்பதற்காக அமெரிக்கா, ஈராக்கின் மீது போர் தொடுத்திருந்த சமயம் அது. வெடிகுண்டு சோதனைக்காக செல்லும் குழுவில் மேகனும் ரெக்ஸூம் இருக்கிறார்கள். தூங்கிக் கொண்டிருக்கும் மேகனை திடீரென்று எழுப்புகிறார்கள். ஒரு வீட்டிற்குள் பதுக்கப்பட்டிருக்கும் பயங்கரமான ஆயுதங்களை ரெக்ஸ் திறமையாக கண்டுபிடிக்கிறது. மேகனை அனைவரும் பாராட்டுகிறார்கள்.

அதனை முடித்து வருவதற்குள் அடுத்த பணி காத்திருக்கிறது. இன்னொரு பயிற்சியாளர் செல்ல வேண்டியது. அவரால் முடியாததால் மேகன் ரெக்ஸூடன் செல்கிறாள். வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டிருக்ககூடும் என்கிற சந்தேகமான இடங்களை ரெக்ஸ் காட்டித் தருகிறது. அங்கெல்லாம் சிவப்பு நிறக் கொடிகளை அடையாளமாக நடுகிறாள் மேகன்.

வெயில் அதிகமாக இருப்பதால் நாய்க்கு ஓய்வு தேவை என வாதாடுகிறாள். நேரமாகிறது என மற்றவர்கள் ஆட்சேபிக்கிறார்கள். தூரத்தில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வேகமாக ஒரு கார் வருகிறது. ரெக்ஸ் அந்தக் காரைப் பார்த்து பயங்கரமாக குரைக்கிறது. ராணுவ வீரர்கள் உஷார் ஆகிறார்கள். எச்சரிக்கை தரும்படி சுட்டு கார் டிரைவரை இறங்கச் சொல்கிறார்கள்.

காரை சோதனையிடுவதற்காக மேகனும் ரெக்ஸூம் செல்லும் போது பக்கத்திலுள்ள ஒரு வெடிகுண்டு பயங்கரமாக வெடிக்கிறது. இருவரும் மயிரிழையில் உயிர் தப்புகிறார்கள். என்றாலும் பலத்த காயம் ஏற்படுகிறது. அடிபட்டிருக்கும் ரெக்ஸை அழுகையுடன் தடவுகிறாள் மேகன். காயம் பட்டிருந்தாலும் பாக்கியுள்ள பணிகளை முடிப்பதற்காக ரெக்ஸை தயார் செய்து மீண்டும் வேலையில் மூழ்குகிறாள் மேகன். அவளுடைய வீரத்தை அனைவரும் பாராட்டுகிறார்கள். அவளுடைய புகழ் தொலைக்காட்சிகளில் பரவுகிறது.

கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக வீட்டிற்கு அனுப்பப்படுகிறார் மேகன். மரணத்தின் நுனியில் இருந்து தப்பித்திருக்கும் அதிர்ச்சி அவளை மன உளைச்சலுக்குள் தள்ளுகிறது. அதன் கூடவே ரெக்ஸின் நினைவும் வந்து போகிறது. ரெக்ஸைப் பற்றி தொலைபேசியில் விசாரிக்கிறாள். அது வேறொரு பணிக்காக ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பப்பட்ட தகவல் கிடைக்கிறது.

ரெக்ஸின் பிரிவு மேகனை மனதளவில் அதிகம் பாதிக்கிறது. தன் பெற்றோரிடம் கிடைக்காத அன்பை ஒரு நாய் அற்புதமாக உணர்த்தியிருக்கிறது. காயத்தினால் ரிடையர்ட் ஆகவிருக்கும் ரெக்ஸை தத்தெடுக்க  மேகன் அனுமதி கேட்கிறாள். ஆனால் ராணுவ அதிகாரி கண்டிப்பாக மறுத்து விடுகிறார். ‘இது வீட்டு விலங்கு அல்ல. ராணுவத்திற்காக பயிற்சி பெற்றது. சாலையில் செல்லும் போது பொம்மை துப்பாக்கி வைத்திருக்கும் சிறுவனை பாய்ந்து கடித்தால் யார் பதில் சொல்வது?’ என்று கேட்கிறார்.

மேகனுக்கு அந்த நிதர்சனம் புரிந்தாலும் ரெக்ஸின் பிரிவைத் தாங்க முடியவில்லை. எனவே ரெக்ஸை தத்தெடுப்பது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கிறாள். பொது மக்களிடம் கையெழுத்து வேட்டை நடத்துகிறாள். ஈராக் போரில் அவள் நிகழ்த்திய சாகசம் காரணமாக புகழ் பெற்றிருப்பதால் மக்களிடமிருந்து ஆதரவும் நிதியும் கிடைக்கிறது.

மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு ரெக்ஸை தத்தெடுப்பதற்கான அனுமதி கிடைக்கிறது. வேறொரு பயிற்சியாளருடன் நடந்து செல்லும் ரெக்ஸை மேகன் அழைக்கிறாள். ரெக்ஸ் வாலாட்டிக் கொண்டே பாய்ந்தோடி வருகிறது. தன்னுடைய வீட்டு அறையில் மேகன் ரெக்ஸூடன் விளையாடும் காட்சியோடு படம் நிறைகிறது.

உண்மையான மேகன் மற்றும் ரெக்ஸின் வீடியோக்கள் படத்தின் இறுதியில் காட்டப்படுகின்றன. ஏப்ரல் 2012-ல் ரெக்ஸ் இறந்து போன செய்தியும்.

மனிதனுக்கும் விலங்கிற்குமான உறவை அற்புதமான சித்தரிக்கும் இத்திரைப்படத்தை Gabriela Cowperthwaite சிறப்பாக இயக்கியிருக்கிறார். மேகனாக Kate Mara அற்புதமாக நடித்திருக்கிறார்.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

Tuesday, July 21, 2020

The Zookeeper's Wife -2017 - ‘மனித காட்சிச்சாலை'





நாஜிகளால் யூதர்கள் பல்வேறு விதமாக கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவங்கள் பற்றி ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் வந்துள்ளன. அந்த வரிசையில் இதுவொன்று. போர் பற்றிய சித்திரமாக இல்லாமல், மிருகங்களை நேசிக்கும் மனிதநேயப் பெண் ஒருவரின் பார்வையின் வழியாக விரிகிறது.

தங்களின் உயிரைப் பணயம் வைத்து முந்நூறுக்கும் மேலாக யூதர்களை தப்ப வைத்து அவர்களை தங்களின் பராமரிப்பில் ஒளித்து வைத்த ஒரு குடும்பத்தைப் பற்றிய உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.

**

வருடம் 1939.  போலந்து நாட்டின் வார்சா நகரம். அங்குள்ள பிரம்மாண்டமான மிருகக்காட்சி சாலையின் பராமரிப்பாளராக இருப்பவர் டாக்டர். ஜேன். அவருடைய மனைவி அன்டோனியா. அவள் அனைத்து மிருகங்களின் அன்பையும் பெற்றிருப்பவள். அவளது ஒவ்வொரு அசைவையும் அவை பிரியத்துடன் கண்டுகொள்ளும். மிருகக்காட்சி சாலையில் உள்ள எல்லா மிருகங்களுக்கும் காலை வாழ்த்து சொல்வதில்தான் அன்டோனியாவின் நாள் துவங்கும்.

இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்து கொண்டிருந்த சமயம். ஜெர்மனியின் படை போலந்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது. அங்குள்ள பலர் நகரத்தை விட்டு வெளியேறுகிறார்கள். குறிப்பாக யூதர்கள் உயிர் பயத்தோடு தப்பியோடுகிறார்கள்.

ஜெர்மனியின் வான்வழித் தாக்குதல் நடக்கிறது. குண்டு மழை பொழிகிறது. இதில் மிருகக்காட்சி சாலையும் பாதிப்படைகிறது. மிருகங்கள் பதட்டத்துடன் தப்பிக்கப் பார்க்கின்றன. பல மிருகங்கள் சாகின்றன. அவற்றின் மீது அன்பு வைத்துள்ள அன்டோனியா பதறிப் போகிறாள். ஆனால் ஏதும் செய்ய இயலாத நிலைமை.

அவர்களின் குடும்பமும் ஊரை விட்டு வெளியேற முடிவு செய்கிறது. அன்டோனியாவிற்கு மிருகங்களை விட்டு பிரிய மனமில்லை. கணவனிடம் சொல்லிப் பார்க்கிறாள். ம்ஹூம்.. பலனில்லை. நிலைமையும் நாளுக்கு நாள் மோசமாகிறது. ஆனால் போர் சூழல் காரணமாக அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதால் அவர்கள் மறுபடியும் அங்கு திரும்பி வருகிறார்கள்.

பெர்லின் மிருகக்காட்சி தலைமையாளரான லட்ஸ் ஹெக் அங்கு வருகிறார். அவர் ஒரு ஜெர்மானியர். அன்டோனியாவிடம் தன் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறார். அங்குள்ள முக்கியமான மிருகங்களை பெர்லினுக்கு எடுத்துச் செல்வதாக சொல்கிறார். போர் முடிந்ததும் மீண்டும் அவற்றை திருப்பித் தருவதாக சொல்கிறார்.  அன்டோனியாவால் அதைத் தடுக்க முடியவில்லை. வேறு வழியும் இல்லை.

இறைச்சிக்காகவும் பாடம் செய்து பெருமையுடன் வரவேற்பறையில் மாட்டி வைப்பதற்காகவும் அங்குள்ள சில மிருகங்களை சுட்டுக் கொல்கிறார் லட்ஸ். அவருடைய நோக்கம் குறித்து அன்டேனானியாவிற்கு சந்தேகம் வருகிறது. ஆனால் பலமுள்ள ஜெர்மானிய படையை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலைமை.
**

போலந்தின் வதை முகாமில் அடைக்கப்பட்டுள்ள யூதர்கள் விதம்விதமாக கொடுமைப்படுத்தப்படுவதைக் கண்டு மனம் வருந்துகிறார் அன்டோனியாவின் கணவர். அங்குள்ள சிலருக்காவது உதவ வேண்டும் என்று அவருக்குத் தோன்றுகிறது.

எனவே மனைவியுடன் இணைந்து ஒரு திட்டம் போடுகிறார். வீணாக உள்ள மிருகக்காட்சி சாலையில் பன்றிப் பண்ணை ஒன்று ஆரம்பிப்பது. அதற்கான காய்கறிக் கழிவுகளை முகாமில் இருந்து கொண்டு வருவது. அப்போது கழிவுகளின் உள்ளே சில யூதர்களை ஒளித்து தப்பிக்க வைத்து அழைத்து வருவது.

ஆனால் இது மிகவும் ஆபத்தான திட்டம். ஏனெனில் யூதருக்கு எவராவது ஒரு குவளை தண்ணீர் தந்தால் கூட சுட்டுக் கொல்லப்படும் கொடுமையான நிலைமை அமலில் இருந்தது.

லட்ஸிடம் இதற்கான அனுமதி கேட்கிறார்கள். அவர் தயங்கும் போது ‘பன்றிப் பண்ணையின் மூலம் ராணுவ வீரர்களுக்கான இறைச்சி கிடைக்கும்’ என்று சொல்லி ஒப்புக் கொள்ள வைக்கிறார்கள்.

மிகுந்த பதட்டத்துடன் ஒவ்வொரு நாளும் யூதர்களை தன் வசிப்பிடத்திற்கு கொண்டு வருகிறார் டாக்டர். ஜேன். ஜெர்மனி ராணுவ வீரர்களால் வன்கலவிற்கு ஆளான ஓர் இளம்பெண்ணும் அதில் அடக்கம். விருந்தினர்களை வீட்டின் தரைத்தளத்தில் அன்புடன் தங்க வைக்கிறார் அன்டோனியா. போர் சூழலில் தங்களுக்கான உணவு கிடைப்பதே சிரமம் எனும் போது அவர்களையும் சமாளிக்கிறார். எவருடைய கண்ணிலும் அவர்கள் படாமல் மறைத்து வைப்பது இன்னொரு சவால்.

தன் வீட்டில் மறைந்து இருப்பவர்களுக்காக போலி அனுமதிச் சீட்டு வாங்கி அங்கிருப்பது அனுப்பி வைப்பது இன்னொரு திட்டம். வந்தவர்களை தன்னுடைய உறவினர்கள் என்று மற்றவர்களை நம்ப வைக்கிறார்.

ஜெர்மானியரான லட்ஸ்க்கு அன்டோனியாவின் மீது ஒரு கண். இக்கட்டான ஒரு சூழலின் போது ஒளிந்துள்ளவர்கள் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக அவருடைய கவனத்தை திசைதிருப்ப முத்தம் தர வேண்டிய நிலைமை அன்டோனியாவிற்கு ஏற்படுகிறது. இவர்கள் பழகுவதைப் பார்த்து அன்டோனியாவின் கணவருக்கு சந்தேகம் வருகிறது. குடும்பத்திற்குள் சண்டை மூள்கிறது. அன்டோனியா தன் நிலைமையை விளக்கிச் சொன்னாலும் பலனில்லை. என்றாலும் சண்டையின் சூடு மெல்ல தணிகிறது.

போர் சூழலின் நிலைமை மாறுகிறது. ரஷ்யப் படையின் கை ஓங்குவதால் ஜெர்மனி வீரர்கள் அச்சமடைகிறார்கள். இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளுர் புரட்சிப்படை ஒன்று ஜெர்மானியர்களைத் தாக்குகிறது. இந்த மோதலில் அன்டோனியாவின் கணவன் சுடப்படுகிறான்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட அன்டோனியா துயரமடைகிறாள். தன் கணவனைக் காப்பாற்ற, லட்ஸின் உதவியை நாடுகிறாள். இதற்காக தன் உடலைத் தரவும் தயாராக இருக்கிறாள்.

அன்டோனியாவின் குடும்பம் யூதர்களை ஒளித்து வைத்த விஷயத்தை லட்ஸ் அறிகிறான். பயங்கர கோபம் கொள்கிறான். அவன் வருவதற்குள் அனைத்து யூதர்களையும் தப்பிக்க வைக்கிறாள் அன்டோனியா. கோபத்தில் அவளுடைய மகனை சுடும் அளவிற்கு கோபம் கொள்கிறான் லட்ஸ். ஆனால் நல்லவேளையாக அவன் மனம் மாறுகிறது.

போர் முடிவிற்கு வருகிறது. ஜெர்மானியவர்கள் வார்ஸாவை விட்டு வெளியேறுகிறார்கள். அன்டோனியாவின் குடும்பம் மிருகக்காட்சி சாலைக்கு மறுபடியும் வருகிறது. அவளுடைய கணவனும் உயிரோடுதான் இருக்கிறான். அந்த இடத்தை அவர்கள் புதுப்பிப்பதோடு படம் நிறைகிறது.

**

நூற்றுக்கணக்கான யூதர்களை நாஜியின் கொடுமைகளில் இருந்து உயிரோடு தப்பிக்க வைத்ததற்காக அன்டோனியா தம்பதிக்கு விருது கிடைக்கிறது. இந்த மிருகக்காட்சி சாலை இன்றும் வார்ஸாவில் இயங்குகிறது.

பெண் இயக்குநரான Niki Caro இத்திரைப்படத்தை அற்புதமான இயக்கியுள்ளார். படம் முழுவதும் நெகிழ்வான காட்சிகளால் நிறைந்துள்ளன.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

Sunday, July 19, 2020

RAW (2016) - ‘ரத்த ருசி'





எச்சரிக்கை: இதுவொரு விவகாரமான  ஹாரர் வகை திரைப்படம். மென்மையான மனித உணர்வுகளை சங்கடப்படுத்தக்கூடிய காட்சிகள் நிறைய உண்டு. எனவே முதிர்ச்சியான பார்வையாளர்களுக்கு மட்டுமேயானது.

மனித மனதைப் போல விசித்திரமான வஸ்து இந்த உலகத்தில் வேறெதாவது இருக்குமா என தெரியவில்லை. நம் மனதின் சில ரகசியமான, இருளான பகுதிகளை நாமே அறிந்திருக்க மாட்டோம் என்பதுதான் இதிலுள்ள கூடுதல் சுவாரசியம். குரூரமான இச்சை, வன்முறை மீது நமக்குள்ள தன்னிச்சையான ஆழ்மன ஈர்ப்பு குறித்து உளவியல் நோக்கில் ஆராய்கிறது இந்த பிரெஞ்சு திரைப்படம்.

**
வெட்னரி டாக்டருக்கு படிப்பதற்காக முதல் நாள் கல்லூரிக்குச் செல்கிறார் ஜஸ்டின். அவளை விட்டுவர பெற்றோரும் உடன் செல்கிறார்கள். செல்லும் வழியில் ஒரு உணவகத்தில் சாப்பிடும் போது ஜஸ்டினின் உணவில் ஒரு இறைச்சித்துண்டு கலந்திருக்கிறது. கோபப்படும் தாய் ‘நாங்கள் சுத்த சைவம்’ என்று உணவு பரிமாறுவரிடம் சண்டையிடுகிறார். அது மட்டுமல்ல, இறைச்சியுணவினால் ஜஸ்டினுக்கு ஒவ்வாமை உண்டாகி விடும்.

ஜஸ்டினின் மூத்த சகோதரியான அலெக்சியா அதே கல்லூரியில் படிக்கிறாள். சீனியர். ஜஸ்டினை அழைத்துச் செல்ல அவள் வருவதில்லை. தன்னைத் தானே உற்சாகப்படுத்திக் கொண்டு கல்லூரிக்குள் செல்கிறாள் ஜஸ்டின்.

நடுராத்திரியில் ஒரு கும்பல் அவளது உறக்கத்தைக் கலைத்து அழைத்துச் செல்கிறது. முதல் வருட மாணவர்களுக்கான ராகிங். மதுவும் அரைகுறை ஆடை நடனங்களும் கரைபுரண்டு ஓடுகின்றன. “சீனியர்களை மதித்து நடந்து கொள்ளுங்கள்’ என்று முதல் வருட மாணவர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள். குதிரையின் ரத்தம் அவர்கள் மீது கொட்டப்படுகிறது. அது வழக்கமான சடங்காம்.

அத்தோடு முடியவில்லை. முதல் வருட மாணவர்கள் முயலின் சிறுநீரகத்தை பச்சையாக தின்னும் சடங்கு வேறு நடக்கிறது. ஜஸ்டின் இதைச் செய்ய மறுக்கிறாள். ‘என் அக்காவும் இங்குதான் படிக்கிறாள். எங்கள் குடும்பம் சைவ பழக்கத்தைச் சார்ந்தது’ என்கிறாள்.

அவளது அக்கா அலெக்ஸை அழைக்கிறார்கள். அவள் வந்தவுடன் ‘இங்கு இப்படித்தான். சாப்பிடு’ என்று கட்டாயப்படுத்தி தங்கையை சாப்பிட வைக்கிறாள். அன்றைய இரவு ஜஸ்டினின் உடல் முழுவதும் அரிப்பு தோன்றுகிறது. அதைச் சொரிய சொரிய ரத்தக் களறியாகிறது. ‘நீ சாப்பிட்ட ஏதோவொரு உணவு ஒத்துக் கொள்ளாததால் இந்த விளைவு’ என்கிறார் மருத்துவர். ஜஸ்டினுக்கு அலெக்ஸின் மீது கோபம் வருகிறது. இருவருக்குள் மெல்ல பகைமை மூள்கிறது.

தீவிரமான சைவ உணவுப்பழக்கம் கொண்ட ஜஸ்டினுக்கு மாமிசத்தின் மீது மெல்ல ஈர்ப்பு உண்டாகிறது. குளிர்பதனப் பெட்டியில் இருந்து பச்சையான மாமிசத்தை எடுத்து உண்கிறாள். சில மனச்சிக்கல்கள் அவளுக்கு உருவாகின்றன. சகோதரியிடம் சென்று அரவணைப்பைக் கோருகிறாள். இருவரும் மகிழ்ச்சியாக பேசிக் கொள்கிறார்கள்.

கத்தரிக்கோல் கொண்டு தனக்கு உதவ வந்த அக்காவை வலி தாங்காமல் ஜஸ்டின் உதைத்து விடுகிறாள். அந்த விபத்தில் அலெக்ஸின் விரல் துண்டாகி ரத்தம் சொட்ட மயங்கி விழுகிறாள். ஆம்புலன்ஸ் வருவதற்காக காத்திருக்கும் நேரத்தில்  அந்த விபரீதமான எண்ணம் உருவாகிறது.

வெட்டுப்பட்ட விரலை ஆவலுடன் எடுத்துப் பார்க்கும் ஜஸ்டின் பிறகு மெல்ல அதை ருசித்து உண்ணத் துவங்குகிறாள். மயக்கம் தெளிந்து எழும் அலெக்ஸ் இதை அதிர்ச்சியாக பார்க்கிறாள். அந்த விரலை அவர்களின் வளர்ப்பு நாய் தின்று விட்டதாக இருவரும் பொய் சொல்லி சமாளித்தாலும் மறுபடியும் இருவருக்குள்ளும் பகைமை தோன்றுகிறது.

ஜஸ்டினை அலெக்ஸ் ஒரு நாள் பிரதான சாலைக்கு அழைத்துச் செல்கிறாள். பின்பு எதற்கோ காத்திருக்கிறாள். வேகமாக வரும் ஒரு வாகனத்தின் முன்பு விழுகிறாள். கார் விபத்துக்குள்ளாக்கி உள்ளே இருப்பவர்கள் மரணமடைகிறார்கள். அருகில் செல்லும் அலெக்ஸ், இறந்தவனின் தலையை கடிக்கத் துவங்குகிறாள். அக்காவிற்கும் இந்த விபரீதமான பழக்கம் இருப்பதைக் கண்டு ஜஸ்டின் அதிர்ச்சியடைகிறாள்.

ஜஸ்டினுக்கு குழப்பமான கனவுகள் வருகின்றன. தன்னுடைய அறையில் இருக்கும் ஆண் நண்பனின் உடலை வெறித்துப் பார்க்கிறாள். தன்னிடம் தவறாக நடக்க முயலும் ஒருவனின் வாயைக் கடித்து விடுகிறாள். உள்ளே மாட்டியிருக்கும் அவனுடைய பல்லைத் துப்புகிறாள்.

தன்னுடன் உறவுகொள்ள முயலும் ஆண் நண்பனையும் உறவின் இடையே தன்னிச்சையாக கடிக்க முயல்கிறாள். அவன் பயந்து விடுகிறான். என்றாலும் இவள் மீது அனுதாபம் உண்டாகிறது. ஜஸ்டின் மது போதையில் செய்த ஒரு விபரீதமான காரியம் வீடியோ எடுக்கப்பட்டு கல்லூரி முழுக்கப் பரவுகிறது. ஜஸ்டினின் நண்பன் அதைப் போட்டுக் காட்டுகிறான். ஆத்திரத்தின் உச்சிக்கே செல்லும் ஜஸ்டின் தன் சகோதரியை தேடிச் சென்று தாக்குகிறாள்.

ஒரு நாள் – பக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் ஆண் நண்பனைப் பார்க்கிறாள். பின்பு மெல்ல எழுந்து பார்க்கும் போது அவனுடைய உடலின் ஒரு பகுதி முழுக்க காணமாற் போய் ரத்தக் களறியாக இருக்க, அவன் இறந்து விட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறாள்.. தான்தான் அவனைக் கடித்து தின்று விட்டோமோ என்று அழுகிறாள். அறையின் மூலையில் எதையோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கும் அக்கா அதைச் செய்திருப்பதை உணர முடிகிறது. அலெக்ஸ் சிறையில் அடைக்கப்பட, ஜஸ்டின் தன் தந்தையுடன் உரையாடும் காட்சியோடு படம் நிறைகிறது. ஜஸ்டினின் தாய்க்கும் இது போல் மனித மாமிசத்தை ருசிக்கும் பழக்கம் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறாள். ‘எல்லாம் சரியாகி விடும்’ என்கிறாள் அவளுடைய தந்தை.

**

Julia Ducournau என்கிற பெண் இயக்குநரின் இந்த திரைப்படம் சர்வதேச விழாக்களில் விருதைப் பெற்றுள்ளது. விபரீதமான காட்சிகளின் வழியே சொல்லப்பட்டாலும் நம்முள் உறைந்திருக்கும் மிருக குணங்கள் பாரம்பரிய வழியாக தொடர்ந்து வரும் ஆபத்தை குறியீட்டுத் தன்மைகளுடன் சுட்டிக் காட்டுகிறது. காட்சிகளின் அருவருப்புத் தன்மைகளை விலக்கி விட்டு இதன் முக்கி்யமான மையத்திற்காக இத்திரைப்படத்தை பெரியவர்கள் பார்க்கலாம்.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

Saturday, July 18, 2020

Fabricated City (2017) - ‘சிலந்திவலை நகரம்'




இதுவொரு கரம் மசாலா ஆக்ஷன் திரைப்படம். திரைக்கதையிலும் சரி, காட்சிகளின் உருவாக்கத்திலும் சரி, தென் கொரியர்கள், ஹாலிவுட்டையெல்லாம் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த பரபரப்பான திரைப்படத்தின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. அப்பாவி ஒருவன் மீளவே முடியாத ஒரு சிக்கலில் எப்படி மாட்டிக் கொள்கிறான் என்பதும் அசாதாரணமான சம்பவங்களின் மூலம் எப்படி அவன் மீண்டு வருகிறான் என்பதுமே இதன் கதை.

***


Kwon Yoo  ஒரு இளம் வயது போர் வீரன். டட்டட்டட்.. என்று நவீன ரக துப்பாக்கியால்  எதிரிகளைச் சுட்டு வீழ்த்துவதே அவனுடைய முக்கியமான பொழுதுபோக்கு. ஆம், இது நிகழ்வது வீடியோ கேமில். பொழுது பூராவும் அதிலேயே கழித்து 'சோம்பேறி' என்று தாயால் அன்பாக அழைக்கப்படுபவன். உருப்படியான வேலை வெட்டி இல்லாததால் வீடியோ விளையாட்டே கதியாக இருக்கிறான். இணையத்தின் வழியாக முகம் தெரியாத அநாமதேய குழுவோடு இந்த விளையாட்டு நடக்கிறது.

இப்படியாக அவன் தன் பணியில் பிஸியாக இருக்கும் ஒரு நாளின் கொழுத்த ராகு காலத்தில் அவனுடைய காலடியில் அநாதையாக கிடக்கும் ஒரு மொபைல் ஒலிக்கிறது. 'இந்த போனை நான் தவற விட்டு விட்டேன். எடுத்து வந்து என்னிடம் தருகிறாயா?' முதலில் சலிப்படைபவன் அதற்கு 300 டாலர் கிடைக்கும் என்றவுடன் உற்சாகமாகிறான். காசுக்கு லாட்டரி அடித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு ஜாக்பாட்.

சொல்லப்பட்ட விலாசத்திற்கு செல்கிறான். குளியல் அறைக்குள் தெரியும் மங்கலான பெண் 'போனை வைத்து விட்டு பணத்தை எடுத்துக் கொண்டு போ' என்கிறாள். அப்படியே செய்கிறான்.

மறுநாள் காவல்துறை இவனை கழுத்திலேயே போட்டு கைது செய்து கொண்டு போகிறது. குளியலறைப் பெண் நீருக்குப் பதிலாக ரத்தத்தில் மிதந்து கொண்டிருந்தாள் என்பதே காரணம். மட்டுமல்ல இவனுடைய கைரேகை முதற்கொண்டு எல்லா சாட்சியங்ளும் இவனுக்கு எதிராக அமைந்திருக்கின்றன.

'நான் செய்யவில்லை ஐயா, நம்புங்கள்' என்று கத்துகிறான், கதறுகிறான். ம்ஹூம். எதுவும் சட்டத்தின் காதுகளில் விழவில்லை. சாட்சியங்கள் வலுவாக அமைந்திருப்பதால் சிறையில் தள்ளப்படுகிறான். 'என் மகன் அப்பாவி. காப்பாற்றுங்கள்' என்று அவனுடைய தாய் பொதுமக்களிடம் கதறுகிறாள். பலனில்லை. 'கொலைகாரப் பாவி' என்று ஊரே திட்டுகிறது.

கொடுமை கொடுமை என்று கோயிலுக்குப் போனால் அங்கேயும் இரண்டு கொடுமை என்கிற கதையாக,  தவறான வழக்கிற்குள் சிக்க வைக்கப்பட்டு சிறைக்குச் சென்ற இளைஞனுக்கு அங்கேயும் நிம்மதியில்லை. சிறையினுள் இருக்கும் மூத்த அண்ணன்மார்கள் காரணமேயில்லாமல் இவனை அடித்துப் பிழிந்து கொண்டே இருக்கிறார்கள். நிமிர்ந்து பார்த்தாலே அடியும் உதையும்.

இதன் இடையே இவனுடைய தாயின் மரணச் செய்தியை இவனுடைய வழக்கறிஞர் கொண்டு வருகிறார். விரக்தியின் உச்சத்திற்கே செல்கிறான். ஆனால் உள்ளுக்குள் கோபமும் கொப்பளிக்கிறது. தன்னுடைய வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்ட அந்த நயவஞ்சகன் யார்? கண்டுபிடித்தாக வேண்டும். 'இதோ வருகிறேன்' என்று சிறையில் இருந்து தப்பிக்கிறான்.

ஊரெங்கும் இவனுடைய புகழ் பரவியிருப்பதால் தலைமறைவாக இருக்க வேண்டியிருக்கிறது. எவருமே உதவிக்கு இல்லாத சூழலில் எதிர்பாராத திசையிலிருந்து ஆதரவுக்கரம் நீள்கிறது. இவனுடைய வீடியோ கேம் குழு. அதுவரை இணையத்தில் பெயராக மட்டுமே அறியப்பட்டவர்கள், ரத்தமும் சதையுமாக வருகிறார்கள். ஆண் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒருவர் பெண்ணாாக இருப்பது அனைவருக்கும் ஆச்சரியம். கணினி நுட்பத்தில் அவள் கில்லாடியாக இருக்கிறாள்.


'குற்றம் நடந்தது என்ன?' என்று ஒவ்வொரு ஆதாரத்தையும் அவர்கள் அலசிப் பிழிந்து ஆராய்கிறார்கள். ஒரு துளியையும் விட்டு வைப்பதில்லை. அதில் கிடைக்கும் வீடியோ காட்சிகளின் மூலம் இளைஞன் குற்றமற்றவன் என்கிற சாட்சியம் கிடைக்கிறது. ஆனால் இதை சட்டத்தின் முன் நிரூபித்தாக வேண்டும். எப்படி? எப்படி?

இதற்குப் பின்னணியில் உள்ள நபர் எவரென்று ஆராய்கிறார்கள். அதிர்ச்சியாக இருக்கிறது. இதற்கிடையில் சிறையிலிருந்த அண்ணன்மார்கள் வேறு இவனைத் துரத்திக் கொண்டு வருகிறார்கள். அவர்களையும் சமாளித்து இந்த சூழ்ச்சிகளுக்குப் பின்னால் உள்ளவனையும் கண்டுபிடித்தாக வேண்டிய சவால்.

தன்னுடைய குழுவோடு எப்படி அந்த இளைஞன் இதை சாதிக்கிறான் என்பதை ரகளையான சாகசக் காட்சிகளின் வழியாக சொல்லியிருக்கிறார்கள். ஆங்காங்கே லாஜிக் எகிறுகிறதுதான் என்றாலும் இறுதிக் காட்சி வரை இந்த பரபரப்பும் திருப்பங்களும் குறைவதில்லை என்பதே இந்த  அசத்தலான திரைக்கதையின் வெற்றி.

பெரிய மனிதர்களைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களில் அப்பாவிகளை மிகத் திறமையாக சிக்க வைக்கும் நபரை அழிப்பதோடு படம் முடிகிறது.


***

வீடியோ கேமையும் உண்மையான சாகசக் காட்சிகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட படத்தின் துவக்கப்பகுதியே அட்டகாசமாக இருக்கிறது. அப்பாவியான இளைஞன் கொலைப்பழியில் சிக்க வைக்கப்படுவது மட்டுமல்லாமல் சிறையில் அடியும் உதையும் வாங்கும் காட்சிகள் பரிதாபத்தை ஏற்படுத்துகின்றன.

வில்லன் தன்னுடைய கட்டிடத்தையே மிகப் பெரிய டேட்டா சர்வராக வைத்திருப்பது பிரமிப்பு ஏற்படுத்துகிறது. பிரம்மாண்டமான அறையின் தரை முழுவதும் விரியும் விதம் விதமான வீடியோக்காட்சிகள் நம்மை வாய் பிளக்க வைக்கின்றன.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்திலிருந்து மீளும் இளைஞனாக Ji Chang-wook அருமையாக நடித்துள்ளார். இருக்கை நுனியில் அமரும் பரபரப்பை இறுதி வரை தக்க வைத்த இயக்குநர் Park Kwang-hyun-ன் திறமை பாராட்டத்தக்கது.

விறுவிறு மசாலாவாக இருந்தாலும் சரி, மென்மையாக காதலாக இருந்தாலும் சரி. .. தென் கொரியர்களின் கொடி உயரப்பறக்கிறது.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan