Friday, December 31, 2010

தமிழ் சினிமா - 2010

2010-ல் வெளிவந்திருக்கும்  தமிழ் சினிமாவிலிருந்து தேர்ந்தெடுத்த சில முக்கியமான தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலை காணும் போது சற்று நம்பிக்கை தோன்றினாலும் தமிழ்த்திரையின் மீது ஆண்டாண்டு காலமாக உள்ள அவநம்பிக்கையும் ஆதங்கமும் அப்படியே மாறாதிருக்கும் நிலை நீடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அயாச்சியே ஏற்படுகிறது.

திரைப்பட உருவாக்கங்களின் எண்ணிக்கையில் உலகிலேயே இரண்டாம் இடத்திலிருக்கிற நாடு இந்தியா. அங்குள்ள மாநிலங்களில் இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழ்நாடு. ஆனால் நாம் உற்பத்தி செய்து கொண்டிருப்பது பெரும்பாலும் வணிகநோக்கு குப்பைகளையே. தொழில்நுட்பம் என்கிற அழகான பேக்கிங்கில் இவ்வாறான குப்பைகளே பல்வேறு வணிக உத்திகளின் மூலம் செயற்கையான பரபரப்பும் கவர்ச்சியுமான சூழல் உருவாக்கப்பட்டு அவை பார்வையாளனிடம் திணிக்கப்படுகின்றன. அதற்கு இந்த வருடத்தின் மிகச் சிறந்த உதாரணம். எந்திரன். எந்திரனுக்கு நிகரான பரபரப்பை சென்ற வருடங்களில் ஏற்படுத்தியது இதே நடிகரின் 'பாபா'. ஆனால் அதில் முன்வைக்கப்பட்ட போலித்தனமான ஆன்மீகம் காரணமாகவும் நம்பகத்தன்மையின்மை மற்றும் சுவாரசியமின்மை காரணமாகவும் 'பாபா' படுதோல்வியைத் தழுவியது. ஆனால் பொதுவான தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையை மிகத் துல்லியமாக தெரிந்து வைத்திருக்கும் ஷங்கர், அதற்கு வேண்டிய எல்லாவித பிரம்மாண்ட மசாலாக்களையும் வண்ணங்களையும் தடவி தனது பொருளை பெரும் வணிக சாகசத்துடன் விற்று வெற்றியடைந்தார்.

மறுபடியும் மறுபடியும் இதைத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது.  இந்த வணிக மாய்மால சூழலிலிருந்து சற்றே சற்று விலகி நின்று உருவாக்கப்படும் திரைப்படங்களைக் கூட நாம் 'உலக சினிமா' என்கிற பெருமிதத்துடன் கொண்டாடி மகிழ்கிறோம். உலக சினிமா என்னும் விஷயத்தை நாம் இன்னும் சர்வதேச திரைப்பட விழாக்களிலும் டிவிடிகளிலும் பார்க்கும் நிலையில்தான் இருக்கிறோமே ஒழிய, நம் பிரதேசத்தின் மொழியில் உலகத்தரமுள்ள படைப்பு என்பது இன்னும் கனவாகவே உள்ளது. அதை நோக்கி அங்குலம் அங்குலமாக முன்னேறும் படைப்புகளைக் கண்டு மகிழும் வேளையிலேயே அதை சீர்குலைக்கும் விதமாக 'எந்திரன்' போன்ற ஏதாவதொரு வணிக சுனாமி அந்த முயற்சியை விழுங்கி விடுகிறது.

தமிழில் சர்வதேச தரத்தில் சினிமா எடுக்கும் நம்பிக்கையை அவர்களது உருவாக்கங்களின் மூலம் நமக்கு தந்திருப்பவர்களாக இருவரை மாத்திரமே இதற்கு முன்னால் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.  பாலுமகேந்திரா மற்றும் மகேந்திரன்.(ருத்ரைய்யா 'அவள் அப்படித்தான்' என்னும் ஒரே அற்புதத்துடன் ஓய்ந்து விட்டார்)  'பருத்தி வீரன்' காரணமாக அந்த வரிசையில் அமீரையும் குறி்ப்பிட்டிருந்தது நினைவிலிருக்கிறது. ஆனால் அவரோ 'யோகி' போன்ற குப்பை நகல்களில் ஈடுபட்டு அந்த நம்பிக்கையை தகர்த்தெறிந்து விட்டார்.

இப்போது அந்த நம்பிக்கையை நான் மிஷ்கின் மீது வைக்க விரும்புகிறேன். வெளிப்படையான காரணம், நந்தலாலா. ஜப்பானியப்படத்தின் நகல் என்கிற குற்றச்சாட்டும் வணிகசினிமாக்களின் சில கூறுகளை தன்னுள் வைத்திருக்கிற திரைப்படமாக 'நந்தலாலா' இருந்தாலும் சமகால சூழலில் அது ஒரு முக்கியமான முயற்சியாக எனக்குப் படுகிறது. அசட்டுத் திமிரான பேச்சைக் குறைத்துக் கொண்டு தனது சிறந்த உருவாக்கங்களின் மூலம் பார்வையாளர்களின் மூலம் மிஷ்கின் உரையாட முடிவு செய்வாராயின், தமிழில் மிக முக்கியமானதொரு இயக்குநராக அவர் பரிணமிக்க வாய்ப்புண்டு.


சரி. இப்போது 2010-ல் வெளிவந்த சில குறிப்பிடத்தகுந்த படங்களைப் பார்ப்போம். இவை என்னுடைய தனிப்பட்ட ரசனை சார்ந்து உருவாக்கப்பட்டவை என்பதை நினைவில் கொள்வது நல்லது.

நந்தலாலாவைத் தவிர குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு திரைப்படம், செல்வராகவனின் 'ஆயிரத்தில் ஒருவன்'. படத்தின் முற்பகுதி சாதாரண சினிமாத்தனங்களைக் கொண்டிருந்தாலும் பிற்பகுதி புராதனத்தையும் சமகாலத்தையும் ஒரே புள்ளியில் இணைக்கும்விதமான திரைக்கதையைக் கொண்டிருந்தது பாராட்டத்தக்கது. இன்னொன்று அங்காடித் தெரு. தமிழ்ச்சினிமாவின் தீராத கச்சாப்பொருளான காதலில் இருந்து இதனால் விலகி நிற்கமுடியவில்லையென்றாலும் பளபளப்பான கட்டிடங்களில் விரும்புகிற பொருளை முழுக்கவனத்துடன் தேடுகிற நாம், அதைத் தேடித்தருகிற பணியாளர்களை அந்த நொடியிலேயே மறந்து விடுவோம். இதுபோன்ற விளிம்புநிலை பணியாளர்களின் துயரங்களை முன்வைத்த வகையில் 'அங்காடித் தெரு' குறிப்பிடத்தகுந்த உருவாக்கம். பிரபு சாலமனின் 'மைனா'வும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தாலும் 'வித்தியாசமான படம்' என்கிற போர்வையில் அதுவும் வணிகச் சினிமாவிற்கான கூறுகளைக் கொண்டிருந்தது. இயக்குநர் படத்தின் வியாபாரத்தைப் பற்றி கவலைப்படாமல் படத்தை உருவாக்கும் சுதந்திரம் தரப்பட்டிருந்தால் இதை இன்னும் அதிக சிறப்புடன் உருவாக்கியிருப்பார் என நம்புகிறேன்.

சின்னத்திரையில் மிரட்டிய 'நாகா'வின் ஆனந்தபுரத்து வீடு கவனிக்கப்படாமலேயே போனதில் தனிப்பட்ட வகையில் எனக்கு வருத்தமே. ஆங்கிலத் திரைப்படங்களில் 'Road Films" என்கிற வகையில் உருவாக்கப்படுவது போல தமிழிலும் 'பையா' ' நந்தலாலா' 'வ க்வார்ட்டர் கட்டிங்' போன்றவை உருவாக்கப்பட்டது மகிழ்ச்சி.

Spoof வகை திரைப்படங்களில் சிரத்தையெடுத்து உருவாக்கப்பட்டிருந்தாலும் 'இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கத்தை' விட 'தமிழ்படமே' எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் அது ஒரு முழுமையான கதையோட்டத்தோடு அல்லாமல் துண்டு துண்டு காடசிகளாக கிண்டலடிப்பதை மாத்திரமே பிரதானமாக எடுத்துக் கொண்டு பெரிய பட்ஜெட் 'லொள்ளு சபா' போல் அமைந்து விட்டது அதன் பலவீனம். American pie தொடர் படங்களைப் போன்று ஒருபால்உறவு பாத்திரங்களையும் நகைச்சுவை முலாமுடன் சொல்லிச் சென்ற 'கோவா'வும் எனக்குப் பிடித்திருந்தது.

அதிரடி ஆக்சன் நாயகர்களின் போலித்தனங்களை பார்த்த சலித்த நமக்கு 'களவாணி'யின் இயல்பான சில்லறைத் திருட்டுகளும் யதார்த்தமான காட்சிகளும் என்னைக் கவர்ந்தது. இந்த ரீதியில் 'வம்சமும்' குறிப்பிடத்தகுந்த படைப்பு. இயக்குநர் பாண்டிராஜ் கவனிக்கப்படத் தகுந்த இயக்குநர்.

'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தின் வணிகரீதியான வெற்றி என்னை ஆச்சரியப்படுத்தியது. எந்த விதமான அடிப்படை கதையுமில்லாமல் வெறுமனே அசட்டுத்தனமான நகைச்சுவையைக் கொண்டே நகர்த்தப்படட இதையே தமிழக மனம் எப்படிவிரும்பியது என்பது ஆச்சரியம். (இத் திரைப்படத்தைப் பற்றி பேயோன் எழுதியிருக்கும் பகடிக் கட்டுரை நிச்சயம் வாசிக்கப்பட வேண்டியது).

'மதராச பட்டினம்' அதன் கலை இயக்க உழைப்பிற்காக குறிப்பிடத் தகுந்த படம் என்றாலும் பெரும்பாலும் 'டைட்டானிக்கை' நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்ததாலும் ஆர்யாவின் மந்தமான நடிப்பினாலும் என்னைக் கவரவில்லை. எமி ஜாக்சன் சிறந்த வரவு.

மணிரத்னத்தின் 'ராவணன்' உருவாக்கமும் தொழில்நுட்பமும் கவரும் வகையில் இருந்தாலும் உள்ளடக்கம் பலவீனமாக இருந்ததால் ரசிக்க முடியாமல் போய் விட்டது. கெளதம் வாசுதேவனின் 'விண்ணைத் தாண்டி வருவாயா' எனக்கு மிகவும் பிடித்துப் போனது குறித்து எனக்கே ஆச்சரியமாகயிருக்கிறது. சினிமாவின் போலித்தனமாக காதல் உணர்வுகளைத் தாண்டி இதில் அசலான உணர்வுகள் சிறிதேனும் வெளிப்பட்டிருப்பதே காரணமாயிருக்கலாம் என நம்புகிறேன். சிம்பு ஒரு இனிய ஆச்சரியம்.

ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தவாறு சமகால தமிழ் சினிமா சூழலை மாத்திரம் வைத்தே இதன் பலங்களை முன்வைத்திருக்கிறேன். ஆனால் சர்வதேச தரத்தோடு ஒப்பிடும் போது இவை தொலைதூரத்திலேயே நிற்கின்றன என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஒருபுறம் பொழுதுபோக்குப் படங்களும் வணிக சினிமாக்களும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் இன்னொரு புறத்தில் ஒரு சிறிய சதவீத அளவிற்காவது 'மாற்றுத் திரைப்படங்கள்' உருவாவாவதும் மக்களின் ரசனை அதற்கேற்றவாறு மாறாதிருப்பதுமே நம் பலவீனம்.

சிறந்த திரைப்படங்கள்

நந்தலாலா
ஆயிரத்தில் ஒருவன்
அங்காடி தெரு

குறிப்பிடத்தகுந்த திரைப்படங்கள்

விண்ணைத் தாண்டி வருவாயா
கோவா
தமிழ்படம்
ராவணன்
களவாணி
மதராச பட்டிணம்
வம்சம்
மைனா 

குறிப்பிடத்தகுந்த மறுஉருவாக்க மற்றும் மொழிமாற்றத் திரைப்படங்கள்

டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர்
ரத்த சரித்திரம்

சிறந்த ஒளிப்பதிவு கொண்ட திரைப்படங்கள்

 நந்தலாலா (மகேஷ் முத்துசாமி)
 ராவணன் (சந்தோஷ் சிவன், மணிகண்டன்) 

சிறந்த இசையமைப்பாளர் 

ஏ.ஆர்.ரஹ்மான் (விண்ணைத் தாண்டி வருவாயா, ராவணன்)  

சிறந்த பின்னணி இசையமைப்பாளர் 

இளையராஜா (நந்தலாலா)

சிறந்த கதை

ஆயிரத்தில் ஒருவன்  

 சிறந்த திரைக்கதை

விண்ணைத் தாண்டி வருவாயா

சிறந்த வசனம் 

அங்காடி தெரு (ஜெயமோகன்)

சிறந்த இயக்குநர்கள்

மிஷ்கின் (நந்தலாலா)
செல்வராகவன் (ஆயிரத்தில் ஒருவன்)

சிறந்த நடிகர்
மிஷ்கின் (நந்தலாலா)

சிறந்த நடிகை
அஞ்சலி (அங்காடி தெரு)

சிறந்த துணைநடிகர்கள்
பார்த்திபன் (ஆயிரத்தில் ஒருவன்)
பாண்டி (அங்காடி தெரு)

சிறந்த துணைநடிகை
ஸ்நிக்தா (நந்தலாலா)

சிறந்த பாடலாசிரியர்
வைரமுத்து (ஆயிரத்தில் ஒருவன்)

சிறந்த பரிசோதனைப் பாடல்
ஆரோமலே (விண்ணைத் தாண்டி வருவாயா)

சிறந்த தொழில்நுட்பம்
எந்திரன்

சிறந்த ஏமாற்றம்
மன்மதன் அம்பு

துரதிருஷ்டவசமான நிகழ்வு

சுவர்ணலதா மறைவு


முரளி மற்றும் ஹனீபா மறைவு

சென்ற வருட பட்டியல்

தமிழ் சினிமா 2009

suresh kannan

image courtesy: http://hindia.in/tamilcinema

14 comments:

Unknown said...

/-- துரதிருஷ்டவசமான நிகழ்வு --/

நடிகர் முரளியை விட்டு விட்டீர்களே...

சக்தி கல்வி மையம் said...

திரைப்பட தேர்வு மிகவும் சரியாக உள்ளது.

நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
Wish You Happy New Year

http://sakthistudycentre.blogspot.com

என்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா...

Unknown said...

நான் மகன் அல்ல படத்தில் வரும் பையன் (நந்தாவில் குழந்தையாக சூர்யாவாக நடித்தவர்) வில்லத்தனமான அல்லது எதிர்மறையான நடிப்பில் பின்னி இருந்தார். அவருடைய முக பாவங்கள் அருமையாக இருந்தது.

கூத்துப் பட்டறையில் இருந்து வந்தவர் என்று மணிஜி சொல்லக் கேள்விப் பட்டேன்.

தர்ஷன் said...

ம்ம் நிறைய விடயங்களில் உங்களோடு ஒத்துப் போகும் அதேவேளை சிலவற்றில் மாறுபடுகிறேன். சினிமாக்கள் ஒரு தர்க்கனூபூர்வமாய் ஏற்றுக் கொள்ளப்படத்தக்க களத்தில் மட்டுமே இயங்க வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் எனக்கு கிடையாது. பார்க்கும் இரண்டரை மணி நேரத்தில் அது என்னை உள்ளீர்த்துக் கொண்டால் போதும். அவ்வகையில் பாஸ் என்கிற பாஸ்கரன்,எந்திரன் போன்றவையும் எனக்கு நிறைவையே தந்தன.

☀☃ கிறுக்கன்☁☂ said...
This comment has been removed by the author.
☀☃ கிறுக்கன்☁☂ said...

உங்கள் பார்வையில் எல்லா படங்களும் நல்ல தேர்வு ஆனால் ஆயிரத்தில் ஒருவன் :( சிறந்த கதையா ?(கோவபடுத்திடனோ)

Toto said...

// இயக்குநர் படத்தின் வியாபாரத்தைப் பற்றி கவலைப்படாமல் படத்தை உருவாக்கும் சுதந்திரம் தரப்பட்டிருந்தால் இதை இன்னும் அதிக சிறப்புடன் உருவாக்கியிருப்பார் என நம்புகிறேன். //

ஒரு இய‌க்குன‌ரே த‌யாரித்தால் கூட‌ வியாபார‌ம் ப‌ற்றி க‌வ‌லைப்ப‌டாம‌ல் இருக்க‌ முடியாது. இது தான் மைனாவுக்கும் ந‌ந்த‌லாலாவுக்கும் இருந்த‌ வித்தியாச‌ம்னு கூட‌ சொல்வேன்.

-Toto.

Anonymous said...

///////// சிறந்த தொழில்நுட்பம்
எந்திரன் ///////



சார் ...,பல்ல கடிச்சிக்கிட்டு டைப் பண்ண மாதிரி இருக்குது ? ..,எனிவே புத்தாண்டு வாழ்த்துக்கள் சார் ..,

Anonymous said...

நந்தலாலா சிறந்த படமா??? என்ன உங்கள் ரசனை... கிகுஜிரோ பார்த்தீர்களா?? தவறான தேர்வு. ஆயிரத்தில் ஒருவன்..சிறந்த படம் மற்றும் கதையா...கொடுமை....தமிழன் வரலாறு தெரியாத இயக்குனர் எடுத்த ஆங்கில படங்களின் தொகுப்பு....மீண்டும் ஒரு சிந்தனையற்ற தேர்வு.

ரத்த சரித்திரமும் அம்பேத்கரும் ஒரே இடத்தில்...அட ஆண்டவா...

உங்கள் சினிமா ரசனை இந்த வருடமாவது ஆழமாக/மென்மையாக இருக்கட்டும். நிறைய உலக சினிமா பார்த்துவிட்டு, அதில் இருந்து திருடிய படங்களுக்கு பாராட்டு தெரிவியுங்கள் நண்பரே....மன்னிக்க!!

Unknown said...

அது என்னங்க சர்வதேச தரத்துல சினிமா .. ரசனை என்பது தனிப்பட்ட விஷயம் .. அது ஒரு ஒரு ஆளுக்கும் மாறுபடும் .. அதுக்கு நீங்க ஒரு standard வைக்கறதே முதல தப்பு. இந்த உலக சினிமா அப்டிங்கற மாயை விட்டுட்டு முதல வாங்க...

Anonymous said...

என் கருத்தை நீக்கினாலும் அதை படித்து புரிந்து கொண்டிருப்பீர்கள் என்பதே போதும்.

கேடுகெட்ட திருட்டு படங்களான நந்தலாலா, ஆயிரத்தில் ஒருவன் போன்றவற்றை ஊக்குவித்தது நியாயமா என்று கேட்டதற்கு கருத்து நீக்கம்???
உங்கள் மனசாட்சிக்கு தெரியும்....புத்தாண்டு வாழ்த்துகள்!!

Srinivas said...

//சிறந்த இசையமைப்பாளர்

ஏ.ஆர்.ரஹ்மான் (விண்ணைத் தாண்டி வருவாயா, ராவணன்) //

Enthiran A.R.Rahman dhaango..

apparam Sirandha Villan podave illa ??
oh..v 2.O va podanumennu vittuteengala ?? :)

கையேடு said...

எல்லோரையும் திருப்தி படுத்த அவசரமா பங்குபாகம் பிரிச்ச மாதிரி இருக்கு.

rajkumar said...

திருட்டு டிவிடியில் எந்திரன் பார்த்து விட்டீர்களோ?

சரி..சிவாஜியின் பரபரப்பு மறந்து போய்விட்டதா? நீங்கள் கூட அப்போது சிவாஜி ஏன் தோற்க வேண்டும் என்று பதிவெல்லாம் போட்டீர்கள்.

சிவாஜியை மறந்து பாபாவிற்கு போய்விட்டீர்கள்.