Sunday, December 29, 2013

சென்னை சர்வதேச திரைவிழா - சில குறிப்புகள்



11வது சென்னை சர்வதேச திரைவிழா சமீபத்தில் நடந்து முடிந்தது. இதற்குப் பின் நின்று இயங்கிய உழைத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி சொல்வது கடமை. இது போன்ற எந்தவொரு பெரிய நிகழ்ச்சியிலும் அது குறித்த புகார்களோ, முணுமுணுப்புகளோ, அரசியலோ அல்லாமல் போகாது. ஏன் இந்த புகார்களை அடுக்குகிறவர்கள் ஒருங்கிணைத்து உருப்படியான ஏதாவது ஒரு நிகழ்வை முயற்சி செய்தால் கூட அதிலும் குறைகாண வேறு சில குழுக்களின் நபர்கள் காத்திருப்பார்கள். தமிழர்களின் பிரத்யேக குணமிது. இப்படியாக சென்னை சர்வதேச திரைவிழாவிலும் அப்படி சில குறைகள் இருந்திருக்கலாம்.

மற்ற மாநில திரைவிழாக்களில் திரையிடப்பட்ட சில முக்கியமான திரைப்படங்கள் இங்கு விடுபட்டிருப்பதையும் அதன் பின்னால் ஒருவேளை இருந்திருக்கக்கூடிய அரசியல் காரணங்களையும் திரைஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். (கடந்த ஆண்டு லீனா மணிமேகலையின் 'செங்கடல்' முதலில் திரையிட தேர்வு செய்யப்படாதது, பின்னர் சம்பந்தப்பட்ட படைப்பின் குழுவினரின் போராட்டத்திற்குப் பிறகே தேர்ந்தெடுக்கப்பட்டது, இந்த ஆண்டு Fanry போன்ற தலித் அரசியலை உரையாடும் திரைப்படங்கள் தற்செயலாகவோ திட்டமிட்டோ புறக்கணிக்கப்பட்டது) ஆனால் இதன் பின்னால் ஒருவேளை இருந்திருக்கக்கூடிய நியாயமான நடைமுறை பிரச்சினைகளை மனதில் கொண்டு அனைத்தையும் மீறி இந்த விழாவை தொடர்ந்து சாதித்துக் காட்டிக் கொண்டிருக்கிற ICAF ஐயும் அதன் பின்னால் நிற்கக்கூடியவர்களையும் அனைத்து மனத்தடைகளையும் மீறி பாராட்டுவதுதான் பண்பாக இருக்க முடியும்.

(விழா அமைப்பாளர்களின் மீது ஒரு வார இதழ் வைத்த ஆதாரமல்லாத குற்றச்சாட்டிற்கும் படங்களை தேர்வு செய்வதில் உள்ள செலவுகளையும் சிக்கல்களையும் பற்றி அமைப்பாளர்களின் பதில்)

உண்மையில் இதுபோன்ற சா்வதேச திரைவிழாக்களை மற்ற மாநிலங்களைப் போன்று தமிழக அரசே ஏற்று எவ்வித மனச்சாய்வுகளும் அற்ற குழுவை ஏற்படுத்தி அதன் மூலம் நடத்த வேண்டும். இந்தியாவிலேயே அதிக திரைப்படங்களை உருவாக்கும் மாநிலங்களுள் ஒன்றான, கேளிக்கை வரி நீக்கம் என்கிற அபத்தமான அரசியல்களைத் தாண்டி திரைத்துறையின் மூலம் கணிசமான வருவாயைப் பெறும் தமிழ்நாட்டிற்கு இது அவசியமான கடமைகளுள் ஒன்று. ஆனால் அரசோ அதற்கு மாறாக சில லட்சங்களை மாத்திரம் தந்து விட்டு அதற்குப் பதிலாக தன்னை முன்னிறுத்திக் கொண்டு அதற்கான மைலேஜைப் பெறுவதில்தான் குறியாக இருப்பது போல் தோன்றுகிறது. இவ்வாறு அரசின் நிதியைப் பெறுவதால் நிகழ்ச்சயில் ஏற்படும் பின்னடைவுகளுள் ஒன்று, அரசியல் காரணங்களுக்காக சில திரைப்படங்கள் தேர்வு செய்யப்படாமலிருப்பது. எனில் கார்ப்பரேட் நிறுவனங்களின் துணை கொண்டு இதனை சாதிக்க முயலலாம். ஆனால் அவற்றிற்கான அரசியலையும் தவிர்க்கவே முடியாது.


என்னுடைய தனிப்பட்ட பார்வையில் இந்த விழாவில் உணர்ந்த சில குறைகளை, நெருடல்களை பதிவு செய்து வைக்கிறேன். அடுத்த வருடங்களில் இவை நிவர்த்தி செய்யப்படலாம் எனவும் நம்புகிறேன்.

1) படங்கள் திரையிடப்படும் இடங்கள் ஒவ்வொன்றும் வேறு வேறு தூரத்தில் இருக்கின்றன. குறிப்பாக இந்த வருடத்தில் இணைக்கப்பட்ட அபிராமி திரையரங்கம், மற்ற இடங்களை ஒப்பிடும் போது தூரமானது. ராயப்பேட்டையில் ஒரு திரைப்படத்தைப் பார்த்து விட்டு குறைந்த இடைவெளி நேரத்திற்குள் அடுத்த இடத்திற்கு விரைவது சங்கடத்தையும் மனஉளைச்சலையும் தருவது. சுயவாகனவசதியற்ற, பொதுவாகன சேவையை நம்பியிருக்கும் என்னைப் போன்றவர்களின் நிலைமை இன்னமும் சிரமமானது. மதிய உணவிற்கான நேரம் கூட இல்லாமல் வெறும் தேநீரை குடித்து விட்டு சில படங்களுக்கு விரைந்திருக்கிறேன். ஐநாக்ஸ் போன்ற மேட்டிமைத்தனமான குறைந்த இருக்கைகள் கொண்ட அரங்கில் அது நிரம்பியவுடன் மனச்சாட்சியே இல்லாமல் கதவைச் சாத்தி விடுவார்கள் என்பதால் அங்கு போகவே தோன்றவில்லை.

இது போன்ற நடைமுறைப் பிரச்சினையைத் தவிர்க்க நாலைந்து திரையரங்கங்களை ஒரே வளாகத்தில் கொண்ட இடத்தை ஏற்பாடு செய்தால் இப்படி அலைந்து திரிகிற வேலை மிச்சமாவதோடு அடுத்த திரைப்படத்திற்கு சாவகாசமான மனநிலையில் மாறிக் கொள்ளலாம். கடந்த வருடத்தில் அமைச்சர் பேசும் போது கலைவாணர் அரங்கம் இருந்த இடத்தில் இதற்காக ஒரு கலையரங்கம் கட்டப்படும் என்று உறுதியளித்திருந்தார். பிறகு அது பற்றிய பேச்சில்லை. இப்போது அது விரைவில் கட்டி முடிக்கப்படும் என்பதாக ஒரு செய்தி வந்துள்ளது மகிழ்ச்சி. அரசியல் மாற்றங்களைத் தாண்டி, அரசியல்வாதிகள் கைப்பற்றி விடாமல் இந்தக் கட்டிடம், அது உருவாக்கப்பட்ட நோக்கத்திலிருந்து மாறாமல் வருடம் பூராவும் கலை நிகழ்வுகள் அமைவதற்கான சாத்தியங்கள் ஏற்பட வேண்டும். வருடம் பூராவும் இங்கு உலக சினிமாக்கள் திரையிடப்பட்டால் அது பயனுள்ளதாக இருக்கும்.

2) அபிராமி திரையரங்கத்தில் பழக்க தோஷத்திலோ என்னமோ, வெளிநாட்டுத் திரைப்படங்களைக் கூட  நடுவில் நிறுத்தி இடைவேளை எனும் அபத்தமான, அராஜகமான விஷயத்தைச் செய்கிறார்கள். வெளிநாட்டு இயக்குநர்கள் இதைப் பார்த்தால் நொந்து விடுவார்கள். தொழில்நுட்பம் முன்னேறாத காலகட்டத்தில் முடிந்து போன ரீலை மாற்றி அடுத்த ரீலை ஏற்ற கட்டாயமாக ஏற்க நேர்ந்த இடைவெளி இது.  வணிகர்களும் நொறுக்குத்தீனிகளை விற்க இந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்டார்கள். நுட்பம் வளர்ந்து இதற்கான தேவை இல்லாவிடினும் கூட இந்தச் சம்பிரதாயம் மாறவேயில்லை. இந்த அபத்தம் எதுவரை வளர்ந்திருக்கிறது என்றால், நமது இயக்குநர்கள் இடைவேளை என்பதை மனதில் வைத்துக் கொண்டு அதற்கான செயற்கையான திருப்பங்களை தங்களின் திரைக்கதையில் உருவாக்குவது வரை வளர்ந்திருக்கிறது. இந்த அபததம் குறித்து திரைப்பட ஆய்வாளர் தியோடர் பாஸகரன் 'இடைவேளை எனும் குறுக்கீடு' என்று தனிக் கட்டுரையே எழுதியிருக்கிறார். ICAF இதில் தலையிட்டு சம்பந்தப்பட்ட ராமநாதன்களுக்கு உபதேசிக்க வேண்டும்.

3) ஒவ்வொரு திரைப்பட ரசிகருமே எந்த திரைப்படத்தைப் பார்ப்பது என்பதை சில மணி நேரங்கள் செலவழித்து தேர்வு செய்து அதற்காக திட்டமி்ட்டு வருகிறார்கள். ஆனால் எதிர்பாராத காரணங்களினால் அது திரையிடப்படாமல் போகும் போது ஏமாற்றமும் நேரவிரயமும் ஏற்படுகிறது. அபிராமி திரையரங்களில் மதியம் 02.00 மணிக்கு திரையிடப்பட வேண்டியதற்காக காத்திருந்தேன். அது முடிந்தவுடன் மீண்டும் நான் ராயப்பேட்டைக்கு விரைய வேண்டும். எனவே படத்தின் நீளத்தையும் அடுத்த படத்திற்கான துவக்க நேரத்தையும் போக்குவரத்திற்கான நேரத்தையும் கணக்கிட்டு உட்கார்ந்திருந்தால் 45 நிமிடங்கள் வரை தொடர்புள்ள படம் திரையிடப்படவேயில்லை. அரங்கத்தில் இருந்த தன்னார்வ மாணவர்களைக் கேட்டால் தொழில்நுட்ப குறை என்பதாக கூறுகிறாாகள். அவர்களை அதிகம் கோபிக்கவும் இயலவில்லை. வேறு நல்ல திரைப்படத்தையாவது திரையிடலாமே என்றாலும் கூட அதற்கான உத்தரவு இல்லை என்கிறார்கள். இது போன்ற சிக்கலான நேரங்களில் என்ன செய்வது என்கிற மாற்று வழிமுறைகளையும் முன்னமே திட்டமிட்டு செயல்படுத்துவது நல்லது.

4) இது நமது குடிமை உணர்வு பற்றியது. இந்த விஷயத்தில் நாம் எந்தளவிற்கு பின்தங்கியிருக்கிறோம் என்பது நாமே அறிந்ததுதான். இதை சுட்டிக்காட்டினால் குற்றவுணர்வோ வெட்கமோ அடையாமல் அதற்காக கோபம் கொள்ளும் அபத்தமும் நம்முடையதுதான். இந்த முறை திரைப்படங்களின் இடையில் கைபேசியில் பேசி தொந்தரவு தரும் நபர்களை அதிகம் காணாதது நான் செய்த பாக்கியம். மாறாக நான் உணர்ந்த அசெளகரியம், திரைப்படங்களுக்கு இடையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே இருப்பது, படம் துவங்கின பத்திருபது நிமிடங்களுக்கு பிறகும் கதவைத் திறந்து திரையில் வெளிச்சத்தைப் பாய்ச்சி உள்ளே நுழைந்து இருக்கையைத் தேடிக் கொண்டேயிருப்பது. இது மற்றவர்களுக்கு எத்தனை இடையூறைத் தரும் என்கிற நுண்ணுணர்வு நம்மிடம் குறைவானதாக இருக்கிறது. ஒவ்வொரு திரைப்படமும் எத்தனை மணிக்கு திரையிடப்படுகிறது என்பதை பல நாட்களுக்கு முன்பே அறிந்திருந்தும் கூட சில நிமிடங்களுக்கு முன்பு வரவேண்டும் என்கிற திட்டமிடல் கூட இல்லாமல் இருப்பது நம் சமூகத்தின் அலட்சியமான மனோபாவத்தையே சுட்டுகிறது. வெளியிலிருந்து வருகிறவர்கள் கூட பரவாயில்லை, திரையரங்கத்தின் வாசலின் தேநீர்க்கடைகளில் உரையாடிக் கொண்டிருப்பவர்கள் கூட கடைசி நிமிடத்தில்தான் நுழைகிறார்கள்.

5) திரைப்படங்களின் synopsis  புத்தகத்தை துவக்கத்திலேயே தராமல் சில நாட்கள் கழி்நத பின் தருவது ஏன் என தெரியவில்லை. போலவே படத்தின் ஷெட்யூல் பிரதிகளையும் முதலில் வநதவர்களுக்கெல்லாம் இறைத்து வாரி விட்டு பின்னால் வந்தவர்களுக்கு அது இல்லை என்று சொல்லாமல் ஒரு நபருக்கு ஒன்று என்று கட்டாயமாக அமல்படுத்தினால் நன்றாக இருக்கும். ஷெட்யூல் காப்பி இல்லாமல் நான் இணையத்திலிருந்து அச்சிட்டு எடுத்துச் சென்றேன்.


()


குறுந்தகடுகளிலும் இணையத்திலும் தரவிறக்கம் செய்து உலக சினிமாவை பார்த்து விடும் ரசிகர்களுக்கு இது போன்ற திரைவிழாக்களில் கலந்து கொள்ளும் அற்புதமான அனுபவம் பற்றி தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் நானும் அப்படித்தான் இருந்தேன். இதற்கு சமீபத்தில் நான் எழுதிய கட்டுரையின் துவக்க வரிதான் இதற்கு சரியான எதிர்வினையாக இருக்கும்.
ஒரு திரைப்படம் குறித்த நினைவுகள் பார்வையாளர்களுக்குள் தங்குவது பிரத்யேகமாக அத்திரைப்படம் குறித்து மாத்திரமல்ல. மாறாக அத்திரைப்படத்தைக் காண்பதற்கு முன்னும் பின்னும் நி்கழ்ந்த சம்பவங்கள் தொடர்பான மனப்பதிவுகளையும் இணைத்துத்தான்....

வாய்ப்பிருப்பவர்கள இது போன்ற திரைவிழாக்களில் கலந்து கொள்வதை தவற விடாதீர்கள். இந்தக் கடடுரையில் விடுபட்டிருக்கும் ஆலோசனைகளை, பரிந்துரைகளை நண்பர்களும் இணைத்து இந்த அனுபவத்தை செழுமையடைய உதவலாம்.

suresh kannan

Saturday, December 28, 2013

இவன் வேற மாதிரி - பிரியாணி



வெங்கட்பிரபு 'மங்காத்தா'வின் ஹாங்ஓவரில் இருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அதைப் போலவே பரபரப்பான திரைக்கதையை அமைக்க முயன்று வெற்றி பெறலாம் என்று நினைத்து தோற்றுப் போயிருக்கிறார். மங்காத்தாவின் வெற்றிக்குக் காரணம் பரபரப்பான திரைக்கதையைத் தாண்டிய ஒரு முக்கியமான காரணம் உண்டு. அது அஜித். நரைமுடியுடன் கூடிய இயல்பான தோற்றத்தில் எதிர்நாயகனாக இயக்குநரால் நடிக்க வைக்கப்பட்டதும்.

ஷாரூக்கான் 'தர்' திரைப்படத்தில் எதிர்நாயகனாக நடித்து வெற்றி பெற்றதற்கு சமமானது இது. ஆனால் அது போன்ற திரைக்கதையை கார்த்தியையும் பிரேம்ஜியையும் கவர்ச்சியையும் வைத்து ஒப்பேற்ற முயன்றால் அது தோல்வியை அடையலாம் என்று வெங்கட்பிரபு யூகித்திருக்க வேண்டும். முதலில் இநத திரைப்படத்திற்கு 'பிரியாணி' என தலைப்பிட என்ன காரணம் என்று குழப்பமாக இருக்கிறது. 'நாயகன் பிரியாணி சாப்பிட சென்று அதைத் தொடர்ந்து சந்திக்கும் சிக்கல்கள்தான் கதை' என்று டெம்ப்ளேட்டாக எழுதுபவர்கள் தலைப்பின் காரணத்தை எளிதாக நியாயப்படுத்தி விடுகிறார்கள். உண்மையில் ஓர் அழகியைத் தொடர்ந்து செல்வதன் மூலம்தான் கார்த்தியும் பிரேம்ஜியும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். எனில் படத்தின் தலைப்பை 'ஐட்டம்' என்று வைத்திருக்கலாமே?. எனக்குப் பிடித்த உணவு வகையான பிரியாணியை வெங்கட்பிரபு இப்படி கேவலப்படுத்தியிருக்க வேண்டாம்.

'இதுக்குத்தானே காத்திருக்கிட்டாங்க' என்ற வசனத்தின் பிற்பாடு ஒரு கெட்ட கவர்ச்சி ஆட்டம் வருகிறது. முக்காடு போட்டுக் கொண்டு ரிகார்டு டான்ஸ் பார்க்க வந்திருப்பவர்களைப் போல 'இதற்குத்தானே வந்திருக்கிறீர்கள்' என்று பார்வையாளர்களை இதை விட கேவலமாக எவரும் அவமானப்படுத்தி விடவே முடியாது.

வெங்கட்பிரபு இயக்கிய முதல் படமான சென்னை-28 தான் அவரின் அழுத்தமான அடையாளம். சுஜாதாவின் நிலாநிழல் நாவலை நினைவுப்படுத்துவது போல் நடுத்தரவர்க்க இளைஞர்களையும் தெருவோர கிரிக்கெட்டையும் அவர்களுக்கிடையான நட்பையும் காதலால் ஏற்படும் குறுக்கீட்டையும் இயல்பான நகைச்சுவையில் புதிதான டிரீட்மெண்டில் சொன்னதாலேயே அது பெருவாரியான வெற்றியைப் பெற்றது. சலிக்க வைத்த  தமிழ் சினிமாவில் சென்னை-28  அப்போது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அவர் அடுத்திய இயக்கிய சரோஜா ஏதோவொரு ஹாலிவுட்டின் நகல் என்று நினைவு. ஏறக்குறைய அதே இளைஞர் பட்டாளத்தை கொண்டிருந்தாலும் சொதப்பலான திரைக்கதையால் மோசமான திரைப்படமாக அமைந்தது. அடுத்த திரைப்படமான 'கோவா' மாறுதலாக ஒரு நல்ல முயற்சி. அதைப் பற்றி இங்கு எழுதியிருக்கிறேன்.

ஆனால் சென்னை-28--ல் இருந்து விலகி வெற்றிகரமான வணிக இயக்குநர் என்கிற நிலையை அடைய வேண்டும் என்கிற விருப்பத்தினால் வெங்கட்பிரபு அவரது  பிரத்யேக அடையாளத்தை இழக்கிறார் என்பதை உணர வேண்டும். பிரியாணி அதைத்தான் நிரூபிக்கிறது.


'வாகனங்களை பாதுகாப்பாக ஓட்டுங்கள், போக்குவரத்து விதிகளை பின்பற்றுங்கள்' என்கிற உபதேசத்திற்கான தமிழ்நாடு அரசின் ஆவணப்படத்தைப் போன்ற திரைக்கதையை 'எங்கேயும் எப்போதும்' கொண்டிருந்தாலும் இரண்டு இளம் காதலர்களைப் பற்றின இரண்டு தனித்தனி இழைகள் மிகமிக சுவாரசியமானதாகவும் குறும்புத்தனத்துடன் அமைந்திருந்ததே சரவணன் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இறுதிப்பகுதி மெலோடிராமாவாக அமைந்திருந்தாலும் வாகனங்களை இயக்குபவர்களின் அலட்சியத்தினால் சில தனிநபர்களின் கனவுகளும் வாழ்க்கையும் எவ்வாறு சிதைந்து போகிறது என்கிற செய்தியை அழுத்தமாகச் சொன்னது 'எங்கேயும் எப்போதும்'

இந்த நிலையில் சரவணனின் அடுத்த திரைப்படத்தைப் பாாக்கும் போது அவரும் தனது அடையாளங்களை இழந்து விட்டு வெற்றிகரமான இயக்குநர்களின் நகலாக முயன்றிருக்கிறார் என்பது தெரிகிறது. 2008-ல் சட்டக்கல்லூரியில் இருபிரிவு மாணவர்களிடையே நிகழ்ந்த கலவரத்தை அச்சு அசலாக காண்பித்திருப்பதில் படம் துவங்கும் போது, பெரியவர்களிடமிருந்து இளம் தலைமுறையினரிடமும் பரவியிருக்கும் சாதி என்னும் புற்றுநோயையும் அதன் பின்னிருக்கும் சாதிய அரசியலையைப் பற்றி இயக்குநர் பேசப் போகிறார் என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் 'நீங்க பார்த்துக் கொண்டிருப்பது தமிழ் சினிமா சார்' என்று தலையில் தட்டி உட்கார்த்தி வைத்து விடுகிறார்.


இயக்குநர் ஷங்கர் உருவாக்கி வைத்திருக்கும் அதே டெம்ப்ளேட்டை மணம் மாறாமல் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார் சரவணன். மிகப் பெரிய வலைப்பின்னல்களில் இயங்கும் ஊழல் அரசியல்வாதிகளை லட்சிய நோக்கு கொண்ட ஒரு தனிமனிதன் ரகசியமான செய்கைகளால் தண்டிப்பது போன்ற ராபின்ஹீட் வகை திரைக்கதை. புகழ்பெற்ற நடிகர்களின் வாரிசுகளின் திணிப்புகளால் விக்ரம் பிரபு போன்றவர்களை நாம் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. வழக்கம் போல புத்தி பேதலித்த மாதிரியான ஹீரோயின். கொக்கு தலையில் வெண்ணையை வைத்து அது வழிந்தோடி கண்களை மறைத்த பின் அதைப் பிடிப்பது போன்று எதற்காக வில்லனை கடத்தி வந்து பிற்பாடு தெருவில் விட்டு விடுகிறார் என்பது இயக்குநருக்கே வெளிச்சம். அப்போதுதான் அவன் பழிவாங்கும் நோக்கில் இரண்டாம் பாதியை நகர்த்த முடியும் என்பதுதான் திரைக்கதை உத்தி என்றால் தமிழ் சினிமாவை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.
 
()
 
முதல் திரைப்படங்களில் புதுமையான தனது கனவுகளையும் எண்ணங்களையும் இறைத்து விட்டு 'அட பரவாயில்லையே' என்று இவர்களை வியக்கும் போது 'ஹிஹி.. நாங்களும் சம்பாதிக்கத்தான் வந்திருக்கிறோம்.' என்று இவர்கள் ஹிட் இயக்குநர்கள் வரிசையில் இணைய அலைமோதுவதைப் பார்க்க பரிதாபமாகத்தான் இருக்கிறது.


suresh kannan

Thursday, December 26, 2013

பொன்மாலைப் பொழுது - காதல் என்கிற மாயமான்




கேமரா இல்லாமல் கூட ஒரு திரைப்படத்தை உருவாக்கி விடலாம். ஆனால் காதல் என்கிற சமாச்சாரம் அல்லாமல்  ஒரு தமிழ் சினிமாவை உருவாக்குவது ஆகக் கடினமான காரியம்.  அந்தளவிற்கு தமிழின் பெரும்பான்மையான திரைப்படங்கள் காதல் எனும் இன்றியமையாத கச்சாப்பொருளைக் கொண்டு உருவாவது என்றாலும் இயற்கையான அந்த உணர்வை செயற்கைத்தனமான பூச்சுகளும் ஊதிப் பெருக்கிய பம்மாத்துகளும் அல்லாமல் யோக்கியமான யதார்த்தத்துடன் ஒரு தமிழ் திரைப்படமாவது அணுகியிருக்கிறதா என்றால் யோசிக்க வேண்டியிருக்கிறது. பதின்ம வயதுகளில் ஏற்படும் காதல் என்றழைக்கப்படும் அந்த உணர்வைப் பற்றியும் அதை குடும்பம், சமூகம் போன்ற நிறுவனங்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றன என்பதையும் பதின்ம வயதினருக்கு ஏற்படும் கலாசார, உளவியல் பிரச்சினைகளைப் பற்றியும்  உரையாடும் தமிழ்த் திரைப்படங்கள் மிகக் குறைவு. சமீபத்தில் வெளிவந்து பரவலான கவனத்திற்கு உள்ளாகாமல் மறைந்து போன 'பொன்மாலைப் பொழுது'  இந்த வகைமையிலான உரையாடலை அதன் வணிக எல்லைக்குள் சாத்தியப்படுத்தியிருக்கிறது என்பதாலேயே இது கவனத்திற்கு உள்ளாக வேண்டிய படமாக அமைகிறது.

சூரிய அஸ்மனத்தில் அல்லது விடியலின் பின்னணயில் சில்ஹவுட் காட்சியில் ஊர்மக்கள் தீப்பந்தத்துடன் துரத்த காதலர்கள் கைப்பற்றி ஓடுவதுடன் இறுதிக்காட்சிகள் உறைந்து போய் நிற்பது  வரையிலான எல்லை வரையே 80-களின் தமிழ் சினிமாக்கள் உரையாடின.  'விடிவெள்ளியை நோக்கி விரையும் இந்தக் காதல் எந்நாளும் ஜீவித்திருக்கும். காதலுக்கு அழிவில்லை. அழிந்தால் அது காதலில்லை' என்று  அசட்டுத்தனமான வாக்கியங்களுடன் இயக்குநர் குரலில் படத்தின் நீதி ஒலிக்க படம் நிறைவடையும். விடிவெள்ளிக்கு அந்தப்புறமாக ஓடின காதலர்கள் என்னவானார்கள் என்கிற கவலை ஏதும் பார்வையாளர்களுக்கோ இயக்குநர்களுக்கோ ஏற்படாது. காதலர்களை இணைத்து வைத்து விட்ட சந்தோஷத்தில் இயக்குநர்களும் சுயவாழ்க்கையில் நிறைவுறாத  அல்லது அனுமதிக்காத காதல் திரையில் நிறைவுற்றவுடன் திருப்தியடைந்து பார்வையாளர்களும் தத்தம் வேலைகளைப் பாாக்கப் போய் விடுவார்கள்.

இனக்கவர்ச்சியின் கனவுகள் தந்த மயக்கத்தில் ஓடிப்போன காதலர்கள் நடைமுறையில் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சினைகளைப் பற்றி கவலையுடன் ஒலித்த முதல் குரல் 'பன்னீர் புஷ்பங்கள்' திரைப்படத்தில்தான் இருந்தது. "உன்னை அடிச்சுப் போட்டுட்டு இந்தப் பொண்ணை நாலைஞ்சு பேர் தூக்கிட்டுப் போனாங்கன்னா என்ன செய்வே?" என்று ஆசிரியர் பாத்திரமான பிரதாப் போத்தன், ஓடிப்போகும் இளம் காதலர்களை நோக்கி கேட்கும் அந்தக் கேள்வியே, இளம் தலைமுறையினரின் காதல் மயக்கங்களை தெளியவைத்து தரையில் கால்பதிக்க வைக்கும் நோக்கத்துடன் கேட்கப்பட்ட நவீன கால தமிழ்த்திரையின் முதல் வசனம் என்பதாகத் தோன்றுகிறது. அதற்குப் பிறகு நீண்ட ஆண்டுகள் கழித்து வந்த பாலாஜி சக்திவேலின் 'காதல்' திரைப்படம் ஓடிப்போகும் காதலர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகளை - நடுரோட்டில் நின்று தவிக்கும் காதலிக்கு நாப்கின் வாங்கித்தரவேண்டிய அவசியம் வரை- உரையாடியது. மிக எளிமையாக உருவாகி விடும் காதலுக்குப் பின்னால் சாதிய படிநிலைகள், சமூக அந்தஸ்தின் ஏற்றத் தாழ்வுகள் உள்ளிட்ட பல கோரமான முகங்கள் உறைந்துள்ளன என்பதை முகத்தில் அறையும் உண்மையுடனும் அதிர்ச்சியுடனும் பதிவு செய்தது. இவ்வாறான சில விதிவிலக்குகளை தமிழ்த் திரையில் காண முடிகிறது.

இந்த வரிசையில் சமீபத்திய வரவு 'பொன்மாலைப் பொழுது'. இளமையின் துள்ளலுடன் ஆரம்பக் காட்சிகள் நகர்கின்றன. உலகமயமாக்கத்தின் விளைவாக முன்பிருந்தததை விட மோசமாக நாகரிக சமுதாயத்தின் சில ஆதாரமான விழுமியங்களும் கலாசார மதிப்பீடுகளும் மறைந்து போய் எல்லாமே பொருளாதாரம் எனும் அளவுகோலில் அளக்கப்படும் யதார்தத்தை புரிந்து கொண்ட சமகால இளைய தலைமுறையின் கொண்டாட்டங்களுடனும் அலட்சியங்களுடனும் துவக்கக் காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சக மாணவியிடம் ஒரு வார்த்தை பேசி விடுவதையே சாதனையாக கொண்டாடின தலைமுறை மறைந்து பாலியல் சார்ந்த நகைச்சுவையை மிக இயல்பாக பகிர்ந்து கொள்ளும் ஆண்-பெண் நட்பு, கலாச்சார காவலர்களின் காதுகளில் புகை வரவழைக்குமளவிற்கு சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு மாணவியின் ஆடைகளை அவிழத்து சக மாணவிகள் ரசிக்கும் காட்சிகள் உட்பட.  இவைகளைத் தாண்டிவுடன்தான் படம் தன்னுடைய மையத்தில் நிலைகொள்ளத் துவங்குகிறது.

படத்தின் நாயகனும் நாயகியும் நட்பாகத்தான் பழகிக் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்குள் காதல் இருந்ததா? தெரியாது. ஆனால் அவர்களுக்குள் காதலை உருவாக்கும் காரியத்தை, அவர்கள் அதை நி்ச்சயித்துக் கொள்வதை பெண்ணின் தந்தையே செய்கிறார். தன்னுடைய மகள் சக மாணவனுடன் சைக்கிளில் பயணிப்பதை கவனிக்கும் அந்த முரட்டுத்தனமான தந்தை, அவர்களை விரட்டிச் சென்று பள்ளிக்குள் நுழைந்து அந்த மாணவனை பல பேரின் முன்னிலையில் செருப்பால் அடித்து தண்டனை அளிக்கிறார். அதுவரை நட்புடன் பழகிய மாணவன் மீது இந்தச் சம்பவத்தின் மூலம் ஏற்படும் அனுதாபமே அந்தப் பெண்ணுக்கு காதலாக மலர்கிறது. ஒரு காதல் உருவாவதற்கு தொடர்புள்ளவர்கள் மட்டுமல்லாமல், சுற்றியுள்ளவர்கள் அதீதமான எதிர்வினைகளின் மூலம் மறைமுக காரணிகளாகிறார்கள் என்பதை அவர்களே அறிவதில்லை என்பதுதான் கொடுமையாக இருக்கிறது.  பெண்ணின் தரப்பில் இந்த எதிர்ப்பு வலுக்க வலுக்க நியூட்டனின் இயற்பியல் கோட்பாடு போல அதன் எதிர்வினையாக காதலின் உறுதியும் கூடிக் கொண்டே போகிறது.

அதிர்ஷ்டவசமாக பையனின் தந்தை பதின்ம வயதின் குழப்பங்களின், தத்தளிப்புகளின் இயல்பை உணர்ந்து முதிர்ச்சியாக நடந்து கொள்கிறார். அவருடைய இளம் வயதில் அவருடைய தந்தை ஆற்றிய கடுமையான எதிர்வினைகளே இவருடைய முதிர்ச்சிக்கு காரணமாய் அமைகிறது. ஒவ்வொரு பெற்றோருமே தங்களின் பதின்ம வயதுகளின் குழப்பங்களையும் தேடல்களையும் உணர்ச்சிகளையும் தாங்கள் எதிர்கொண்ட  அனுபவங்களையும் கடந்துதான் பெற்றோர்களாக உருமாறுகிறார்கள். ஆனால் தங்களுடைய அடுத்த தலைமுறை அதே மாதிரியான உணர்வுகளினால் தடுமாறும் போது தங்களின் அனுபவங்களின் மூலம் அவர்களை முதிர்ச்சியுடன் வழிநடத்திச் செல்லாமல் தங்களுடைய பெற்றோர்களைப் போலவே கண்டிப்புடன் நடந்து கொள்ளும் விசித்திரமான முரணை இத்திரைப்படத்தின் மையமாகச் சொல்லலாம்.

வீட்டுக்காவலில் வைக்கப்படும் தன்னுடைய காதலியைப் பார்க்க முடியாமல் நாயகன் மனஉளைச்சலுக்குள்ளாகி பாதிப்பை அடைகிறான். இன்னொரு புறம் நாயகியின் கல்வியும் தடைக்குள்ளாகிறது. சூழலின் அழுத்தம் தாங்காமல் நாயகனின் தந்தை ஊரை விட்டுப் போக முடிவு செய்கிறார். தன் மகனை பார்க்க துடித்து ஓடிவரும் நாயகியை தடுத்துச் சொல்லும் அந்த வசனத்தின் மீதுதான் மொதத திரைப்படமு்ம் நிற்கிறது. "இது காதலிக்கும் வயது அல்ல. திருமணம் செய்து கொள்ளும் முதிர்ச்சியான வயதும் அல்ல. இருவருமே அவரவர்களின் கல்வியில் கவனம் செலுத்துங்கள். இதற்கான காலத்திற்குப் பின்னும் இருவரின் காதலும் நீர்த்துப் போகாமல் நீடித்தது என்றால் அது உண்மையானது என்றால் நானே உங்களை இணைத்து வைக்கிறேன்" என்கிறார்.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் வாரிசுகளின் காதல்களை இது போன்று முதி்ர்ச்சியாக அணுகினால் எத்தனை தற்கொலைகளும் சாதிய மோதல்களும் பழிவாங்குதல் சம்பவங்களும் தவிர்க்கப்படலாம் என்று யோசிக்கவே ஆறுதலாக இருக்கிறது.

நாயகனின் தந்தையாக நடிகர் கிஷோர் மிக அற்புதமாக நடித்திருக்கிறார். தன்னுடைய மகன் செய்யும் தவறுகளை கண்டும் காணாமலும் ஆனால் அதற்கான தீர்வுகளை மெளனமாக யோசித்து செயலாற்றும் காட்சிகளில் இவரது முகபாவங்கள் அற்புதமாக பதிவாகியுள்ளன. நாயகனாக கவிஞர் கண்ணதாசனின் வாரிசு ஆதவ் கண்ணதாசன் நடித்திருக்கிறார். ராஜவேலின் அழகியல் சார்ந்த ஒளிப்பதிவின் மூலம் 'இது சென்னையின் பகுதிகள்தானா'? என சில காட்சிகள் வியக்க வைக்கின்றன. இதே சமகாலத்தில் வந்த 'ஆதலால் காதல் செய்வீர்' புதிய தலைமுறை இளைஞர்களின் உடற்சார்ந்த கவர்ச்சியையும் அதன்பின்விளைவுகளையும் பற்றி உரையாடியது என்றால் பொன்மாலைப் பொழுது காதலின் புறம் சார்ந்த பிரச்சினைகளையும் அதில் பெற்றோர்களுக்கு இருக்க வேண்டிய  அத்தியாவசிய பங்கினையும் பற்றிப் பேசுகிறது. அறிமுக இயக்குநரான ஏ.சி. துரையிடமிருந்து இன்னும் நல்ல உருவாக்கங்களை எதிர்பார்க்கலாம் என்கிற நம்பிக்கையை 'பொன்மாலைப் பொழுது' ஏற்படுத்தியிருக்கிறது.

(காட்சிப் பிழை, டிசம்பர்  2013-ல் வெளியான கட்டுரை - நன்றி: காட்சிப் பிழை) 

suresh kannan

Friday, December 20, 2013

தீபாவளி திரைப்படங்கள் - தொலைந்து போன குதூகலம்



ஒரு திரைப்படம் குறித்த நினைவுகள் பார்வையாளர்களுக்குள் தங்குவது பிரத்யேகமாக அத்திரைப்படம் குறித்து மாத்திரமல்ல. மாறாக அத்திரைப்படத்தைக் காண்பதற்கு முன்னும் பின்னும் நி்கழ்ந்த சம்பவங்கள் தொடர்பான மனப்பதிவுகளையும் இணைத்துத்தான். கடந்த காலங்களில் திரைப்படம் குறித்த அனுபவங்கள் இவ்வாறாகவே நமக்கு இருந்தன.  கற்பிதங்களாக இருந்தாலும் இயந்திர வாழ்வின் சலிப்பிலிருந்து நம்மை மீட்டெடுத்துக் கொள்ள உதவுபவைகளாக திருவிழாக்கள், பண்டிகைகள் போன்றவைகள் விளங்குவது போலவே இந்த குதூகலகங்களின் ஒரு பகுதியாக திரைப்படங்கள் இருந்தன. ஒரு திரைப்படத்தைக் காணப்போகிறோம் என்கிற நினைவே இன்பமானதாகவும் அதற்கான ஏற்பாடுகள் பரவசமும் பதட்டமும் தருபவையாகயும் இருந்தன. இடைவேளையில் சாப்பிடப்போகும் கோன் ஐஸின், கைமுறுக்கின் மணம் ஒரு வாரத்திற்கு முன்பிலிருந்தே நினைவில் ஊசலாடத் துவங்கி விடும். ஒரு திரைப்படத்தைப் பாாத்து வந்ததிற்கு பின்னர் ஒரு வாரத்திற்குக் கூட அதைப் பற்றிய உரையாடல்கள் நீளும். நாயகன் ஸ்டைலாக துப்பாக்கியை உயர்த்தும் காட்சி, மறந்து போகவே விரும்பாத நாயகியின் ஒரு கண்சிமிட்டல், இன்றைக்கு நினைத்தாலும் சிரி்ப்பை வரவழைக்கும் நகைச்சுவையாளனின் உடலசைவு, இருக்கையின் அசெளகரியமான கைப்பிடி, அனுமதிச் சீட்டுக்காக வரிசையில் முண்டியத்த வியர்வையின் மணம் என்று கலவையான பல நினைவுகள் அத்திரைப்படங்களோடு நீக்கமற உறைந்திருக்கும். சிறுவனொருவன் வெல்லக்கட்டியை ஒவ்வொரு பக்கமாக நிதானமாக ருசித்து சாப்பிடுவது போன்ற உன்னதமான அற்புதத்தை அக்காலததிய தமிழ்திரை காண்பனுபவங்கள் ஏற்படுத்தின.

ஆனால் இன்று, இருபத்திநான்கு மணிநேரமும் திரைப்படங்களை உமிழும் தொலைக்காட்சிகளும் ஒரே மாதிரியான வார்ப்பில் உருவாகும் மசாலா திரைப்படங்களும் மேற்கூறிய குதூகலங்களை தொலைந்து போக வைத்து விட்டன. நூற்றுக்கணக்கான நாட்களுக்கும் மேல் திரையரங்கில் ஓடிய திரைப்படச் சாதனைகள் எல்லாம் ஒரு வரலாற்றுக் கனவாகவே கடந்த காலத்தில் உறைந்து விட்டது. இன்றைய ஃபாஸ்ட்புட் கலாசாரத்திற்கு ஏற்ப இரண்டு மூன்று நாட்களிலேயே அவை நம்மை விட்டு விடைபெற்று விடுகின்றன. அவற்றைப் பற்றிய நினைவுகளும் அவ்வாறே திரையரங்கின் வாசலிலேயே கழன்று விழுகின்றன. இத்தகைய குறுகிய ஆயுளைக் கொண்டிருப்பதனாலேயே படத்தைப் பற்றிய பார்வையாளர்களின் வாய்மொழி பரவுவதற்குள் கவர்ச்சிகரமாக சந்தைப்படுத்தி அதிகமான எண்ணிக்கையில் திரையரங்குகளில் ஒளிபரப்பி, பார்வையாளன் விழித்துக் கொள்வதற்குள் முதல் இரண்டு நாட்களிலேயே அவனிடமிருந்து காசைப் பறித்துக் கொள்ளும் தந்திரத்தை திரை வணிகர்கள் தற்போது செய்து வருகிறார்கள். 'இப்ப வர்ற படங்கல்லாம் அத்தனை ஒண்ணும் நல்லாலீங்க" என்று முணுமுணுத்தாலும் ஒவ்வொரு முறையும் முதல் நாளிலேயே ஏமாறத் தயாராக இருக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை மாறுவதில்லை என்பதுதான் இதிலுள்ள அபத்தமான சோகம்.

இந்தச் சூழலில் கடந்த தீபாவளிக்கு வெளிவந்த மூன்று தமிழ் சினிமாக்களைப் பற்றி பார்ப்போம்.

***

அஜித் நடித்து வெளிவந்த திரைப்படம் - ஆரம்பம். ஹாலிவுட்டில் 'தேறாது' என்று குப்பையில் 1980-ல் தூக்கிப் போட்ட ஜேம்ஸ்பாண்ட் பட ஸ்கிரிப்ட்டை எடுத்து வந்து பிறகு காட்சிக் கோர்வைகளின் வரிசை தவறுதலாக அடுக்கப்பட்டு விட்ட பாணியில் உருவாகியிருக்கிறது ஆரம்பம். சலித்துப் போன ஹீரோயிஸம். செயற்கையான தேசப்பற்று வசனங்கள். விஜயகாந்த்தும் அர்ஜுனும் சலித்துப் போய்  கீழே போட்டு விட்ட யூனிபார்மை அணிந்து கொண்டிருக்கிறார் அஜித். ஊழலின் ஊற்றுக்கண் எதுவென்கிற தெளிவில்லாமல், அவதாரங்கள் அரக்கர்களைக் கொன்றவுடன் மக்களுக்கு சுபிட்சம் ஏற்பட்டு விடுவதான புராண கதையாடல் மாயையைப் போன்று ஊழல் செய்யும் அரசியல்வாதியை நாயகன் உரத்த குரலில் பஞ்ச் டயலாக் பேசி முடித்து கொன்று நீதி நிலைநாட்டப்பட்டவுடன் படம் நிறைகிறது. இதன் மூலம் பார்வையாளன் ஆசுவாசமடைந்து சமகால அரசியல் குறித்தும் அரசியல்வாதிகள் குறித்தும் அவனுக்குள்ள கோபத்தின் ஆழ்மன அழுத்தத்தை தணிக்கும் அதே தந்திரத்தையே 'ஆரம்பமும்' செய்கிறது. ரிடயர்ட் ஆகும்

வயதாகியிருந்தாலும் விநோதமான செயற்கையான சிகையலங்காரங்களை கைவிடாமல் பேத்தி வயதான நடிகைகளோடு ரொமான்ஸ் செய்து கொடுமைப்படுத்தும் நாயகர்களுக்கு மத்தியில் தன்னுடைய தோற்றம் குறித்த கவலை ஏதுமில்லாமல் இயல்பான தோற்றத்தில் அஜித் நடித்திருப்பது இதிலுள்ள ஒரே ஆறுதலான விஷயம். மற்றபடி இத்திரைப்படம் குறித்துக் கூற மேலும் எதுவுமேயில்லை என்பதுதான் இதன் சிறப்பம்சம்.

***

இயக்குநர் ராஜேஷ் சராசரியான அல்லது அதற்கும் கீழான தரமற்ற நகைச்சுவைப் படங்களை உருவாக்குபவர் என்கிற கருத்தொன்று உண்டு. ஆனால் அவர் அதுவரை இயக்கிய முதல் மூன்று திரைப்படங்களையும் (சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி) ஆகியவைகளை தொலைக்காட்சி சானல்களின் புண்ணியத்தில் மீண்டும் மீண்டும் பார்க்கும் போது வணிகப் படங்களின் சாத்தியத்திற்குள், அவர் காட்சிக்கோர்வைகளை அடுக்குகிற விதத்தில் ஒரு சுவாரசியத்தையும் புத்திசாலித்தனத்தையும் பார்க்க முடிகிறது. குறிப்பாக கீழ்நடுத்தர வர்க்க இளைஞனின் இருப்பியல் மனோபாவத்தை, விழுமியங்கள் குறித்த சமகால தலைமுறையினரின் அலட்சியத்தை, அடித்தட்டு மக்களின் நகைச்சுவையை நுட்பமான கலவையுடன் தமிழ்த்திரையில் பதிவு செய்தவர் என்று ராஜேஷை சொல்லலாம். இத்தனைக்கும் அவர் உருவாக்கிய மூன்று படங்களின் திரைக்கதையும்  ஏறக்குறைய ஒரே வார்ப்புதான். பொறுப்பற்ற இளைஞன் ஒரு பெண்ணைக் காதலிக்க முயல்வதும் அதில் ஏற்படும் சிக்கல்களும் தன்னுடைய நண்பனை கவிழ்த்து கலாய்ப்பதும் என்கிற ஒரே மாதிரியான உருவாக்கம். மூன்று திரைப்படங்களிலும் நாயகனின் நண்பனாக சந்தானம் நடித்திருந்தார். என்றாலும் மூன்று திரைப்படங்களையும் பெரிய புகார்கள் ஏதுமின்றி நம்மால் சகித்துக் கொள்ள முடிந்தது என்பதே ராஜேஷின் வெற்றி. அவர் பிரத்யேகமாக உருவாக்கும் திரைக்கதையின் பாணியே இதற்கு காரணம் என்பதை மறுக்க முடியாது.

இதனாலேயே அவரின் நான்காவது திரைப்படமான 'ஆல் இன் ஆல் அழகுராஜாவிற்கு' அவரது படங்களின் ரசிகர்களுக்கிடையே பெரிய எதிர்பார்ப்பிருந்தது. கதை என்கிற வஸ்துவிற்காக பெரிதும் மெனக்கிட வேண்டாம், சுவாரசியமான திரைக்கதையின் மூலமே வெற்றி பெற்று விட முடியும் என்கிற அதீதமான தன்னம்பிக்கையினாலோ என்னவோ இத்திரைப்படம் மிகுந்த அலட்சியத்துடனும் அசுவாரசியமான திரைக்கதையுடனும் உருவாக்கப்பட்டு பார்வையாளர்களால் ரசிக்கப்படாமல் தோல்வியடைந்து ராஜேஷின் தன்னம்பிக்கையைச் சேதப்படுத்தியிருக்கிறது. இத்தனைக்கும் முந்தைய படங்களை விட காட்சிகளின் பின்னணிகளுக்கும் திரைக்கதைக்கும் இதில் அவர் மெனக்கெட்டிருக்கிறார்  என்பதை உணர முடிகிறது. ஆனால் அவரின் பிரத்யேக கலவையில் எங்கோ தவறு நிகழ்ந்ததால் முழுத்திரைப்படமும் சலிப்பான, எரிச்சலான அனுபவத்தையே தருகிறது.

குறுகிய காலத்திலேயே நகைச்சுவை நடிகராக அசுர வளர்ச்சியைப் பெற்றிருக்கும் சந்தானம் அதே வேகத்திலேயே பார்வையாளர்களிடம் சலிப்பைப் பெற்றிருக்கிறார் என்றாலும் நகைச்சுவை நடிப்புதானே என்கிற அலட்சியம் இல்லாமல் சில குறிப்பிட்ட படங்களில் தன்னுடைய பாத்திரங்களின் வடிவமைப்பிற்காக சிறிதாவது உழைக்கிறார் என்பது ஆறுதலளிக்கிறது. 'ஒரு கல் ஒரு கண்ணாடியில்' அவருடைய பாத்திரத்தின் பின்னணி பிராமண இளைஞன் என்பதால் அதற்கான உச்சரிப்பையும் உடல்மொழியையும் படம் நெடுகிலும் எங்கேயும் தவற விடாமல் பின்பற்றியிருந்தார். அதே போன்று 'ஆல்இன்அழகுராஜாவிலும்'  பழைய திரைப்பட நடிகர்கள் எம்.ஆர்.ராதாவையும் சுருளிராஜனையும் இணைக்கின்ற ஒரு விநோதமான கலவையில் நடிப்பதற்காக மெனக்கெட்டிற்கும் சந்தானத்தின் நடிப்பு, படத்தின் சுவாரசியமற்ற தன்மையால் வீணாகியிருக்கிறது. இதனாலேயே பழைய தமிழ் திரைப்படங்களை நையாண்டி செய்ய முயன்றிருக்கும் இயக்குநரின் நோக்கமும் எடுபடாமல் போயிருக்கிறது.

***

பாண்டிய நாடு - சுசீந்திரனின் ஐந்தாவது திரைப்படம்.

கே.எஸ்.ரவிகுமார், பேரரசு போன்று அப்பட்டமான வணிகநோக்குத் திரைப்படங்களை உருவாக்குபவர்கள் ஒருவகை. இவர்கள் சினிமா எனும் கலையை வணிகத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது வெளிப்படை. சுசீந்திரன் போன்றவர்களை அப்பட்டமான வணிகநோக்கு திரைப்பட இயக்குநர்கள் பட்டியலிலும் சேர்க்க முடியாது. பாார்வையாளர்களுக்காக சமரசப்படுத்திக் கொள்ளாத சிறந்த இயக்குநர்கள் பட்டியலிலும் இணைக்க முடியாது. ஆனால் நல்ல சினிமாவைத் தந்து விட வேண்டும் என்கிற ஆதார உந்துதலைக் கொண்டவர்களாகச் சொல்லலாம். சுசீந்திரன் மாத்திரமல்ல, சமகாலத்து இயக்குநர்கள் பெரும்பாலோருக்கு இந்த உந்துதல் இருப்பது பாராட்டுக்குரியது.

உலக சினிமாக்களின் அறிமுகமும் அதைப் பற்றிய உரையாடல்களும் பெருகி வரும் சூழலில் பார்வையாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் கூட ரசனையும் நுகர்வுத் தேடலி்ன் முதிர்ச்சியும் கூடியிருக்கிறது. பார்வையாளர்களின் ரசனை மாற்றம் காரணமாக தேய்வழக்குத் திரைப்படங்களையும் காட்சிகளையும் இனியும் உருவாக்கி தங்களின் இருப்பை நீட்டித்துக் கொள்ள முடியாது.  இந்தச் சூழல் தரும் நெருக்கடி காரணமாகவும் அப்பட்டமான வணிக மசாலாவை தர விரும்பாத மனச்சாட்சியின் காரணமாகவும் பெரும்பாலான வணிக அம்சங்களைத் தவிர்த்து விட்டு நல்ல சினிமாவைத் தரவேண்டும் என்கிற மெனக்கெடலும் விருப்பமும் இந்த இயக்குநர்களிடம் இருப்பதை உணர முடிகிறது. ஆனால் இம்மாதிரியான முயற்சிகள், நல்ல சினிமாக்களாக இ்ல்லாமலும் மசாலாக்களாக அல்லாமலும் இரண்டுங்கெட்டான் தன்மையுடன் இருப்பதுதான் துரதிர்ஷ்டம். எனவே குறைந்த சமரசங்களுக்காக இவற்றைப் பாராட்டுவதா அல்லது தன்னி்ச்சையாக தேய்வழக்குகளில் பயணம் செய்வதற்காக புறக்கணிப்பதா என்கிற குழப்பம் நிலவுகிறது. சுசீந்திரனின் பாண்டியநாடும் இப்படியொரு வகைமையில் சிக்கித் தவிக்கும் திரைப்படமே.

சுசீந்திரனின் முதல் திரைப்படம், 'வெண்ணிலா கபடிக்குழு'.  தமிழகத்தின் கிராமங்களில் இன்னமும் ஜீவித்திருக்கும் பாரம்பரிய விளையாட்டான கபடியையும் தமிழ் சினிமாவின் இன்றியமையாத கச்சாப்பொருளான காதலையும் இணைக்கோடாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு நல்ல முயற்சி. படம் முழுவதும் இயங்கும் மெலிதான நகைச்சுவையும், நெருக்கமான நண்பர்களாகவே இருந்தாலும் சாதி குறித்த மனோபாவம் அவர்களின் ஆழ்மனதில் தன்னிச்சையாக இயங்கும் முரணையும் அதன் விளைவுகளையும் உறுத்தாத தொனியில் சொல்லிச் சென்றது அத்திரைப்படம்.  அடுத்த திரைப்படமான 'நான் மகான் அல்ல, நடுத்தரவர்க்க பின்புலத்தில் உருவாகிவரும் ஒரு சாதாரண இளைஞன், அசாதாரண சந்தர்ப்பங்களின் விளைவாக அதற்கு எதிர்திசையில் இயங்கும் மாஃபியா உலகை, ரவுடிகளின் வன்முறையை எதிர்கொள்ள வேண்டி வரும் முரணியக்கத்தில் நிகழும் சம்பவங்களால் உருவானது. இந்த வகைமையில் உருவாகும் திரைப்படங்களின் துவக்கப்புள்ளியாக ராம்கோபால் வர்மாவின் 'உதயம்' திரைப்படத்தை (தெலுங்கில் ஷிவா) சொல்லலாம். கல்லூரி மாணவனாக இருக்கும் நாயகன், ரவுடிகளின் தொந்தரவுகளை ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவனாக பொறுத்துக் கொண்டே செல்வான். கொதிநிலையின் அழுத்தம் கூடுகிற ஓர் எதிர்பாராத கணத்தில்தான் திருப்பித் தாக்கத் துவங்குவான். (நாகார்ஜூனா சைக்கிள் செயினை உருவியெடுக்கும் அந்தக் காட்சியின் பரவசத்தை பல ரசிகர்கள் இன்னமும் நினைவில் வைத்திருக்கிறார்கள்). இது வழக்கமான கதாநாயகத்தன்மைக்கு சற்று முரணானது.

ஏனெனில் முன்பெல்லாம் கதாநாயகன் என்றால் அவன இயற்கையிலேயே நிச்சயிக்கப்பட்ட நாயகத்தன்மையோடும் அனைத்திலும் பாண்டித்தியம் உள்ளவனாக, சகலகலா வல்லவனாக இருப்பான். அவனுக்கு சண்டையிடத் தெரியும், எப்பேர்ப்பட்ட எதிரியையும் சாதுர்யமாக வீழ்த்த தெரியும் என்பதையெல்லாம் பின்புலத்தோடு  நிறுவத்தேவையேயில்லை. அநீதிகளை சகித்துக் கொண்டு போகவேண்டிய பொறுமையெல்லாம் அவனுக்குத் தேவையேயில்லை. எம்.ஜி.ஆர் என்கிற பிம்பம் இதற்கு சரியான உதாரணம். கூடுவாஞ்சேரியிலுள்ள பூங்காவில் தனிமையில் அமர்ந்திருக்கும் நாயகியை தீய எண்ணத்தோடு நாலைந்து முரட்டுப் பேர்வழிகள் அணுகினால் அது இந்தோனேஷியாவிலுள்ள நாயகனுக்கு எப்படியோ தெரிந்து விடும் அல்லது நாயகன் அதற்காகவே காத்திருப்பார் என்று கூட சொல்லலாம். மேலும் நாயகியும் 'வீல்' என்று அதிக டெசிபலில் கத்துவதின் எதிர்வினையாக கூட இருக்கலாம். மரத்தைப் பிடித்துத் தொங்கியோ அல்லது விமானத்தில் புட்போர்டிலோ எப்படியோ விபரீதம் நிகழ்வதற்குள் அங்கு வந்து முரட்டுப் பேர்வழிகளை துவைத்தெடுத்து துரத்தி விடுவார். சம்பிரதாயத்திற்கு வேண்டுமானால் ஆரம்பக்கணத்தில் ஒன்றிரண்டு அடிகளை வாங்கிக் கொள்வார். இந்தப் படததில் சித்தரிக்கப்படும் பாத்திரத்தின்படி இவர் அலுவலக குமாஸ்தாவாயிற்றே,  இவர் சண்டை பயில்வது போல் கூட ஒரு காட்சி கூட முன்னர் இல்லையே...இவர் எப்படி இத்தனை ரவுடிகளுடன் சண்டையிட முடியும் என்றெல்லாம் பார்வையாளர்கள் யோசிக்க மாட்டார்கள். அப்படி அவர் சண்டையிடாமல் போனால்தான் பார்வையாளர்களுக்கு கோபமும் எரிச்சலும் வரும்.

ஆனால் இப்போதைய பெரும்பாலான பார்வையாளர்கள் இதையெல்லாம் தர்க்கத்தன்மையோடு சிந்திக்கவும் எதிர்கேள்வி கேட்கவும் ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இத்தகைய கேள்விகளை அப்பட்டமான வணிகநோக்கு இயக்குநர்கள் பொருட்படுத்துவதி்ல்லை. தொழில்நுட்பத்தைக் கொண்டு பிரமாண்ட காட்சிகளை அமைத்து பார்வையாளர்களை அப்போதைக்கு வாயடைக்கச் செய்து விடுகிறார்கள். ஆனால் நல்ல சினிமாவை உருவாக்கும் உந்துதல் கொண்ட இயக்குநர்களுக்கு  இவை ஒரு நெருக்கடியைத் தருகின்றன. பார்வையாளர்கள் யதார்த்தத்திற்கு முரணான, தேய்வழக்கு காட்சிகளைக் கண்டு சிரிக்கிறார்கள், புறக்கணிக்கிறார்கள் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். எனவே அந்தரத்திலேயே பறந்து கொண்டிருக்கும் நாயகனை அவனது அசாதாரணத் தன்மையிலிருந்து கீழே இறக்கி யதார்த்தத்திற்கு அருகிலாவது உலவ வைக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படுகிறது.

சுசீந்தரனின் ' பாண்டிய நாடு' நாயகனும் அப்படித்தான் நமக்கு அறிமுகமாகிறான். நடுத்தரவர்கக பின்னணியோடு, உணர்ச்சிவயப்பட்டால் வாய் திக்குகிற குறைபாட்டோடு, 'நாற்பது பேரோடு நம்மால சண்டை போட முடியுமா?' என்கிற சாதாரண மனிதனாக, ரவுடிகளைக் கண்டு பயப்படுகிறவனாகத்தான் அறிமுகமாகிறான். ஆனால் இறுதிக் காட்சியில் நாற்பது பேரோடுதான் சண்டையிடுகிறான். யதார்த்ததிற்கு அருகில் தங்கள் நாயகர்களை கொண்டு செல்ல விரும்பும் படைப்பாளிகள், வணிகம் சார்ந்த தங்களின் சமரசங்களை எளிதில் கைவிடுவதாயில்லை. அதாவது தமிழ் சினிமாவின் தேய்வழக்கு கதாநாயகன் முழுவதுமாக இறக்கவில்லை. 'பைட் சீன் வைக்கலைன்னா, யாருங்க பார்ப்பாங்க?' என்று அவர்களாகவே முடிவு செய்து கொள்கிறார்கள். 'நான் மகான் அல்ல' திரைக்கதையை அப்படியே வேறு சட்டியில் கொதிக்க வைத்து தந்திருக்கிறார் இயக்குநர்.

பாண்டிய நாடு' வித்தியாசமான உள்ளடக்கத்தில் உருவானதான உரையாடலைக கொண்டிருந்தாலும் அதே வணிக மசாலா தான். (தமிழ் சினிமா அகராதியில் 'வித்தியாசம்' என்பதற்கான அர்த்தம் என்னவென்று பல வருடங்களாகவே புரிவதில்லை). ஆனால் இதன் திரைக்கதையில் சுவாரசியமானதொரு கோணம் இருந்தது.

நியாயமான அரசு அதிகாரியாக இருந்த தன்னுடைய சகோதரனைக் கொன்று குடும்பத்தை அமைதியையும் ஒழித்த ரவுடிக்கும்பல் தலைவனை, அந்த அநீதியை சகிக்க முடியாமல் கொல்லத் திட்டமிடுகிறான் நாயகன். அதே சமயம் அவனுடைய தந்தையும் ரவுடியைக் கொல்ல பணம் தந்து கூலிப்படையை அமர்த்துவது பற்றி இவன் அறிவதில்லை. இருவரும் இருமுனைகளில் தனித்தனியாக ரவுடியை சாகடிக்க முயல்கிறார்கள். இதில் தந்தையின் தரப்பு தோற்றுப் போக வழக்கம் போல் நாயகனே ரவுடியை உக்கிரமாக சண்டையிட்டுக் கொல்கிறான். சில துளிகளில் விலக முயன்றாலும் பெரும்பாலான தமிழ் சினிமர்ககள் தங்களின் பாரம்பரிய வார்ப்பிலிருந்து விலக விருப்பமில்லாமல் அதிலேயே சரணடைவது சலிப்பை ஏற்படுத்துகிறது.

இ்ந்த திரைக்கதையை இன்னொரு மாதிரியாக யோசித்துப் பார்க்கலாம். நாயகனின் தந்தையின் பாத்திரத்தை பிரதானப்படுத்தி நடுத்தர வர்க்க வயதான மனிதனொருவன் சூழ்நிலை காரணமாக குற்றவுலகோடு தொடர்பு கொள்ள முயல்வதையும் அந்த உலகின் வன்முறைகளை யதார்த்தத்தில் கண்டு அதிர்வதையும் அதிகாரமும் சட்டமும் அந்த எளிய மனிதனை அலைக்கழிப்பதையும் புறக்கணிப்பதையும், ஓர் உயிரைக் கொல்வது குறித்து அந்த வயதான மனிதர் கொள்கிற மனஉளைச்சலையும் பண்பாட்டு மற்றும் உளவியில் ரீதியான பிரச்சினைகளையும்  குறித்தான காட்சிகளால் இந்தப் படத்தை உருவாக்கியிருந்தால் எப்படியிருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது. எனில் அதில் டூயட் இருக்காது, அதிரடி சண்டைக்காட்சிகள் இருக்காது, அது தமிழ் சினிமாவாக இல்லாமிருப்பதால் வசூலும் இருக்காது. தமிழ் இயக்குநர்களின் இருப்பியல் ரீதியான அச்சத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

இதில் நாயகனின் தந்தையாக நடித்திருப்பவர் இயக்குநர் பாரதிராஜா. முன்பு ஒரு முறை கமல்ஹாசன், இயக்குநர் பாலச்சந்தரை பற்றிக் கூறும் போது 'அவர் நடித்துக் காண்பதில் சில குறிப்பிட்ட சதவீதத்தைக் கூட நடிகர்களாகிய நாங்கள் திரையில் நிகழ்த்தி விட்டால் அதுவே சிறப்பானதாக இருக்கும். அவரெல்லாம் நடிக்க வந்து விட்டால் நாங்கள் வீட்டிற்கு போய் விட வேண்டியதுதான்' என்றார்.  கமல்ஹாசன் குருபக்தியினால் மிகையாக புகழ்ந்தார் என்று எடுத்துக் கொண்டால் கூட கூட்டிக் கழித்து பார்த்தால் கூட பாலச்சந்தரால் சுமாராகவாவது நடிக்க வரும் என்று எதிர்பார்த்திருந்தோம். அவர் நடித்த சில தொலைக்காட்சி தொடர்களையும் திரைப்படக் காட்சிகளையும் பிற்பாடு பார்க்க நேர்ந்த போது ராமராஜனையே சிறந்த நடிகராக ஒப்புக் கொள்ளலாம் போலிருந்தது. அவ்வாறே பாரதிராஜாவும். 'ஆய்த எழுத்தில்' இவரை மணிரத்னத்தினால் ஒரளவிற்கு கட்டுப்படுத்த முடிந்ததென்றாலும் 'ரெட்டச்சுழி' என்கிற திரைப்படத்தில் பாலச்சந்தருடன் இவர் இணைந்து ரிடையர்ட் ஆன பாடகர்கள் தங்களின் பழைய நினைவில் உச்சஸ்தாயியில் பாடுவதைப் போல நடித்து கொடுமைப்படுத்தினார்கள். பாரதிராஜாவின் நடிப்பு  'பாண்டிய நாட்டில்' இன்னமும் மோசம். இம்மாதிரியான மிகை நடிப்பெல்லாம் 80-களிலேயே வழக்கொழிந்து விட்டது என்பதை இயக்குநர் சசீந்திரனால் அவரிடம் சொல்ல முடியவில்லை போலிருக்கிறது. சீனியர் இயக்குநர் என்பதால் படப்பிடிப்புகளில் தனக்கு வந்த அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு  'ஷாட் ஓகே' என்றிருப்பார் போல.

***

இந்த வருட தீபாவளிக்கு வந்திருக்கும் இந்த மூன்று திரைப்படங்களில் 'பாண்டிய நாடு' சிறப்பானது என்கிற பொதுவான கருத்தொன்று இருக்கிறது. இருகோட்டு தத்துவத்தின் படி ஒரு கோட்டை பெரிதாகக் காட்டுவதற்கு  பக்கத்தில் வரையப்படும் சிறிய கோடு உதவுவது போல சாதாரண படமான 'பாண்டிய நாட்டை' சிறப்பானது என்று கருதக்கூடிய மாயையை மிகச் சாதாரணமான மற்ற இரு திரைப்படங்கள் ஏற்படுத்தியிருக்கின்றன என்பதுதான் உண்மை. 

- உயிர்மை - டிசம்பர் 2013-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)     

suresh kannan

Friday, December 13, 2013

11வது சென்னை சர்வதேச திரைவிழா - இரண்டாம் நாள்



அடித்துப்பிடித்து இன்றைய நாளின் கடைசி படத்திற்குத்தான் செல்ல முடிந்தது. உண்மையில் முதலில் நான் செல்லத் திட்டமிட்டிருந்தது அபிராமி திரையரங்கில்  Jeune & Jolie (2013)  என்கிற திரைப்படத்திற்குதான்.  மேட்டருக்கு மேட்டரும் ஆச்சு. நல்லபடம் என்று வேறு நண்பர்கள் சொல்லியிருந்தார்கள் ஆனால் விதி வலியது. சரியாக திட்டமிடாததாலும் அனுமதிச் சீட்டை அதுவரை வாங்காததாலும் அது என்னை வுட்லண்ட்ஸ் தியேட்டரின் முன் நிறுத்தியது. அவசரமாக ரிஜிஸ்டிரேஷனை முடித்து நேரமில்லாததால் அங்கேயே படம் பார்க்கத் தீர்மானித்தேன். நண்பர் சந்திரமோகனிடம் எந்தத் திரைப்படம் போகலாம் என்றதற்கு 'நீங்களே முடிவு செய்யுங்கள்' என்றார். 

இங்கி பிங்கி பாங்கி போட்டு வுட்லண்ட்ஸில் பார்க்கத் தீர்மானித்தோம். மிக மொக்கையான ஸ்கீரினும் இருக்கைகளும் இருக்கும் வுட்லண்ட்ஸ் சிம்பொனியை விட வுட்லண்ட்ஸ் சற்று தேவலையாக இருக்கும் எனவே இந்த முடிவு. வாழ்வோ சாவோ என்று தீர்மானித்ததில் வந்தது 'சால்வோ'



தன் முதலாளியைக் கொல்ல வரும் நபர்களை தாக்கும் பாடிகார்ட் ஒருவன், அதில் தப்பியோடும் ஒருவனை துரத்திச் சென்று 'இதற்கு யார் ஏற்பாடு செய்தது?' எனக்கேட்கிறான். யார் அது எனத் தெரிந்தவுடன் அவன் வீட்டிற்குள் நுழைந்து அவனைக் கொன்று விட்டு அவனுடைய, குறைந்த பார்வையையுடைய தங்கையை தூக்கி வந்து பாழடைந்த தொழிற்சாலை ஒன்றில் தன் பாதுகாப்பில் வைத்துக் கொள்கிறான். எதற்காக எனத் தெரியாது.

முதலில் அவனிடம் முரண்டு பிடிக்கும் அவள், மகா சோம்பேறித்தனமாக நிகழும் பல காட்சிகளுக்குப் பிறகு ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் காரணமாகவோ என்னவோ அவனுடன் பிரியம் கொள்கிறாள். நிமிர வைக்கும் ஸ்டண்ட் காட்சியுடன் சுவாரசியமாகத் துவங்கும் இத்திரைப்படம், premature ejaculation போல விரைவில் தலைசாய்ந்து பிறகு வரும் பல காட்சிகள் மிக மிக நிதானமாக நகர்வதாலேயே அசுவாரசியத்தன்மையைக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒளிப்பதிவும் காட்சிகளின் கோண்ங்களும் இருளும் வெளிச்சங்களுமான கலவையும் ஒலிப்பதிவும் கூட அபாரமாய் இருக்கின்றன.

'தி இந்துவில்' இதற்கான முன்னோட்டக் குறிப்புகளை எழுதினவர் ஒன்று குறும்புக்காரராய் இருந்திருக்க வேண்டும். அல்லது 'தாளி சாவுங்கடா' என்கிற பழிவாங்கும் தன்மையைக் கொண்டவராக இருந்திருக்க வேண்டும். இல்லையெனில்... "விறுவிறுப்பாக நகரும் இத்தாலிய மொழிப் படம்." என்று எழுதியிருக்க முடியாது.

பசியுடன் வீட்டிற்குத் திரும்பி மனைவி தந்த சரியாக வேகாத அரிசி உப்புமாவை 'விதியே' என்று தின்று கொண்டிருக்கும் போதா, அந்தக் கேள்வி விழ வேண்டும்? "இன்னிக்கு பார்த்த படம் எப்படி இருந்துச்சு?"... வாயில் சனி பகவான் சம்மணமிட்டு அமர்ந்திருந்ததால் அதன் எதிர்வினை இல்லாமலா இருக்கும்..? 'இதோ இந்த அரிசி உப்புமா மாதிரியே மொக்கையா இருந்துச்சு." என்றேன்..

'அப்படியா சேதி' என்று உக்கிரமாக பார்த்தவளைத் தணிக்கவும்... நாளைய உப்புமாவின் முன்னேற்பாட்டிற்காகவும் "ஆக்சுவலி... அந்தப் படம் நெறைய அவார்டு வாங்கியிருக்கு"

suresh kannan

Wednesday, December 11, 2013

காட்சிப் பிழை கருத்தரங்கம் - தமிழ் சினிமா 100




தமிழின் முதல் மெளன சினிமாவான கீசகவதம் 1916-ல் நடராஜ முதலியாரால் உருவாக்கப்பட்டது. முதல் பேசும் படமான காளிதாஸ் 1931-ல் வெளியானது. எனில் எப்படி இந்தக் கருத்தரங்கிற்கு தமிழ் சினிமா 100 என தலைப்பிட முடியும் என்று என்னுள் எழுந்த அதே கேள்வியையே யுடிவி தனஞ்செயன் மேடையில் எதிரொலித்தார். 'இந்த விஷயம் அத்தனை முக்கியமல்ல, இந்திய சினிமா 100 என்று சமீபத்தில் கொண்டாடப்பட்டதற்கு எதிர் கருத்தாக்கமாக இதைக் கொள்ளலாம்' என்கிறார் MSS  பாண்டியன். ஜவஹர்லால் பல்கலைக்கழகம், புதுடெல்லியில் தற்கால வரலாற்றுத் துறையில், துறைத் தலைவராக இருக்கும் இவர் முக்கியமான திரைப்பட ஆய்வாளர்களுள் ஒருவர். 'இந்திய சினிமா என்ற ஒன்று இருக்கிறதா?' என்று இவர் எழுப்பிய அடிப்படையான கேள்வி அன்றைய தினத்தை எனக்கு முக்கியமாக்கியது.

()


காட்சிப் பிழை இதழும் லயோலா கல்லூரியின் காட்சித் தகவலியல் துறையும் இணைந்து நிகழ்த்தும் இந்தக் கருத்தரங்கம் 11.12.2013 மற்றும் 12.12.2013 ஆகிய இரண்டு நாட்களில் நிகழ்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக முதன் முதலில் இந்தக் கல்லூரியின் மிகப் பெரிய வளாகத்திற்குள் நுழைகிறேன். கல்வியலும் ஒழுக்கத்திலும் சிறந்த கல்விநிலையம் என்று நான் கல்வி கற்ற காலங்களில் அறியப்பட்ட கல்லூரி. உற்சாகமான நவீன இளம் முகங்கள். தொலைதூர கல்வித்திட்டத்தில் என் பட்டப்படிப்பை முடித்ததினால் கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்க இயன்றியராத ஏக்கம் இந்த வளாகத்தையும் மாணவர்களையும் பார்க்கும் போது என்னுள் எழுகிறது.

விஸகாம் சார்ந்த கல்லூரியின் துறைத்தலைவர்கள், கல்வியாளர்களுக்கேயுரிய ஒழுங்குணர்ச்சியின் எல்லைக்குள் ' சினிமா என்பது சமூகத்தில் நல்ல, ஆரோக்கியமான சிந்தனைகளைப் பரப்புவதாக அமைய வேண்டும்' சமூகத்தில் நிகழும் குற்றங்களுக்கு காரணிகளாக அமையக்கூடாது' என்கிற உபதேசங்களை வரவேற்புரை மற்றும் வாழ்த்துரையில் தெரிவித்து விட்டு அமர்கிறார்கள். வெகுஜன சினிமா, யதார்த்த சினிமா, அழகியல் சினிமா, புதியதலைமுறை சினிமா என்று தமிழ் சினிமாவை நான்கு வகைமைகளாக காண்கிறார் தனஞ்செயன் (யுடிவி). மாணவர்களிடம் நேரடியாக கேள்வி கேட்டு உரையாடும் இவரின் பாணி அவர்களை உற்சாகமாக்குகிறது. 'காட்சிப்பிழை' இதழை எத்தனை பேர் வாசிக்கிறீர்கள் என்கிற அவரின் கேள்விக்கு சில கைகளே உயர்கின்றன. 'சமூகத்தின் நிகழும் குற்றங்களுக்கு சினிமாவை பொறுப்பாக்க முடியாது, சமூக வலைத்தளங்களின் பங்கையும் கவனிக்க வேண்டும்' என்கிறார், சினிமாத்துறையை சார்ந்தவர் என்பதால்.

()

எம்.எஸ்.எஸ் பாண்டியனின் சிறப்புரை. சில தவிர்க்க முடியாத காரணங்களால் நேரமின்மை காரணமாக சுருக்கமாக தயாரித்து வந்திருந்த உரையும் அவர் வெளியிட்ட கருத்துக்களும் அபாரமாக இருந்தன. முன்பே குறிப்பிட்டபடி 'இந்திய சினிமா என்கிற ஒன்று இருக்கிறதா?' என்பதே அவர் உரையின் மையம். 1950-களில் தமிழில் எழுதப்பட்ட சில கட்டுரைகளையும் (குண்டூசி, கல்கி) ஆய்வுக் கட்டுரைகளையும் மேற்கோளிட்டு பேசினார்.

பல்வேறு பிரதேசங்களால், கலாசாரங்களால், மொழிகளால் பிரிந்திருந்தாலும் ஜனநாயகம் என்கிற கயிற்றினால் கட்டப்பட்டிருக்கும் இந்தியாவில் 'இந்திய சினிமா' என்கிற பதமே ஒரு மாயை என்கிற வகையில் பாண்டியனின் கருத்தை புரிந்து கொள்ளலாம். அந்தந்த பிரதேசத்து மக்களுக்காகவே அந்தந்த பிரதேசங்களின் சினிமாக்கள் உருவாகின்றன. ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் கலாசாரத்தை, மொழியை அறியாமல் அந்த சினிமாவை முழுவதுமாக நம்மால் உள்வாங்கிக் கொள்ள முடியாது. இப்படி தடையாக, இது உள்ளிட்ட பல காரணிகள் இருக்கும் போது இந்திய சினிமா என எப்படி அழைக்க முடியும் என்பதும் அதன் நூற்றாண்டை கொண்டாட முடியும் என்பதும் புறந்தள்ள முடியாத கேள்வி. மேலும் இங்கு இந்திய சினிமா என்பதே ஹிந்தி சினிமா என்பதாக முன்வைக்கப்படும் அபத்தத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.

பாண்டியன் மேலும் உரையாடும் போது இன்னமும் நுட்பமாக சென்று  'தமிழ் சினிமா அல்லது தமிழர் சினிமா என்ற ஒன்றும் இருக்கிறதா?' என்கிற கேள்வியை முன்வைக்கிறார். இந்து புராணப் படங்களை இசுலாமியர்கள் பார்ப்பதில்லை. தேவர் மகன் திரைப்படத்தை ஒரு தலித் எப்படி கவனிப்பார், விஸ்வரூபம் திரைப்படத்தை ஒரு இசுலாமியர் எவ்வாறு புரிந்து கொள்வார் என்பது போன்ற கேள்விகளின் இதைப் புரிந்து கொள்ள முடியும். 'இந்திய சினிமா என்பது தேசியக் கட்டமைப்பை அமைக்க முயன்று தோற்றுப் போனதொரு முயற்சி' என்பதாக அவர் சிறப்புரையின் நிறைவுப்பகுதி அமைந்திருந்தது.  நேரமின்மை காரணமாக சமயோசிதமாக அமைந்த சுபகுணராஜனின் சுருக்கமான நன்றியோடு கருத்தரங்கின் இந்த துவக்கப்பகுதி நிறைந்தது.

()

பின்பு தொடர்ந்த அமர்வுகளில் வெங்கடேஷ் சக்கரவர்த்தி அவர்களின் சிறப்புரை இல்லாமல் போனது ஏமாற்றம்.

முதல் அமர்வில், பேராசிரியர் பாவேந்தன் மெளன சினிமாக் காலத்தைப் பற்றி உரையாடினார்.

தமிழ் சினிமாவின் துவக்க கால, கவனிக்கப்படாத 'காட்சியாளர்கள்' (exhibitors) பற்றி இவரின் உரை அமைந்திருந்தது. சென்னையில் முதலில் நிகழ்த்தப்பட்ட திரையிடல்களைப் பற்றி 'தியோடர் பாஸ்கரன்' நூலில் வெளியிட்டிருக்கும் தகவல்களில் வரலாற்றுப் பிழைகள் உள்ளன. சுட்டிக் காட்டப்பட்ட பிறகும் ஏன் அவர் அதை மாற்றிக் கொள்ளவில்லை என்பது இவரது புகாராக இருந்தது. மேலும் 'வரலாற்று ஆய்வாளர்களும் திரைப்பட ஆய்வாளர்களும் சாதிய மனங்களோடு இயங்குகிறார்கள். இதனால் பல முன்னோடிகளைப் பற்றின பதிவுகள் ஆவணப்படுத்தப்படுவதில்லை அல்லது கவனமாக புறக்கணிக்கப்படுகின்றன' என்பது இவரின் குற்றச்சாட்டு. ஜே.சி. டேனியல் என்கிற மலையாள சினிமாவின் முன்னோடியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட செல்லூலாயிட் திரைப்படத்தின் பிரதியையும் அதன் பின்னணியையும் உதாரணமாக எடுத்துக் கொண்டு தன் உரையை விரிவுபடுத்துகிறார். விகாதகுமாரன் திரைப்படம் தொடர்பான சில காணொளிகளின் பகுதிகளும் திரையிடப்பட்டன. 'சினிமா என்பது அதன் சமகால சமூகத்தை புறக்கணிப்பதாக, மறைப்பதாக அமையக்கூடாது' என்கிற இவரின் வேண்டுகோளை இளம் மாணவர்களின் முன் வைக்கிறார். 'ஈழப்பிரச்சினையைத் தவிர்த்து, இளவரசன்-திவ்யா விவகாரத்தின் பின்னணி தவிர்த்து எப்படி சமகால திரைப்படங்களை உருவாக்க முடியும் என்பது இவரின் கேள்வி.

'முப்பதுகளின் தமிழ் சினிமர்' குறித்து சுந்தர் காளி. எம்.கே. தியாகராஜ பாகதவரின் 'சிந்தாமணி' திரைப்படத்தையொட்டி இவரின் உரை அமைந்திருந்தது. தமிழ் சினிமாவின் துவக்க காலத்தில் உருவாக்கப்பட்ட சுமார் 200 பிரதிகளில் இப்போது சுமார் 20 பிரதிகளே மீட்டெடுக்க முடிந்திருப்பதையும் ஆவணப்படுத்தலில் நமக்கிருக்கும் அக்கறையின்மையையும் பற்றி பேசிய இவர், தமிழ் சினிமாவைப் போல உலகின் வேறெந்த சினிமாவிலும் புராணம், மதம் சார்ந்த திரைப்படங்கள் அதிகம் உருவாகவில்லை' என்கிற ஓர் ஆய்வுக்குறிப்பை முன்வைக்கிறார். தமி்ழ் சமூகத்தின் முக்கியமான பகுதியாக மையத்தில் இருந்த தேவதாசிகள் என்கிற சமூகம், நடுத்தர ஒழுங்கியல் உருவாக்கப்பட்டபின் எப்படி விளிம்பிற்குத் தள்ளப்பட்டு பின்பு ஒழிந்து போனது என்பதாக இவரின் உரை தொடர்ந்தது.

()

மதியத்திற்கு மேல் நடைபெற்ற நிகழ்வுகளில் என்னால் கலந்து கொள்ள இயலாமல் போனதால் அவற்றைப் பற்றி எழுத இயலவில்லை. பொதுவாக நான் கவனித்த வரை பேச்சாளர்களுக்கு மாணவர்களின் பொறுமையை எதிர்கொள்தே சவாலாகவும் பதட்டமாகவும் இருந்தது. அவர்களுக்கேற்றபடி தங்களின் உரைகளை எளிமையாகவும் சுவாரசியமானதாகவும் தோழமையாகவும் அமைத்துக் கொள்ளக்கூடிய கட்டாயத்திற்கு உள்ளானர்கள் எனலாம்.

நீண்ட உரைகளின் இறுதியில் தங்களின் பொறுமையின்மையை மாணவர்கள் பலத்த கைத்தட்டல்களின் மூலம் தெரிவித்தது சற்று நெருடலாக இருந்தது. உரைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதும் பல மாணவர்கள் அது பற்றிய அக்கறையின்றி தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்ததைக் காணவும் கவலையாக இருந்தது. இளமையின் உற்சாகமான செயல்பாட்டில் அது இயல்பான எதிர்வினைதான் என்றாலும் தங்களின் கல்வி சார்ந்த நிகழ்வு என்கிற காரணத்தின் அடிப்படையிலாவது அதை அக்கறையுடன் கவனிப்பதற்கான பொறுமையையும் ஆர்வத்தையும் அவர்கள், சிரமப்பட்டாவது வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.

சத்யஜித்ரே என்கிற பெயரை அறிவதற்குள் எனக்கு 18 வயது முடிந்து விட்டிருந்தது. அவரின் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்குள் இன்னும் மூன்றாண்டுகள் கடந்து விட்டன. ஆனால் நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்று ஏற்பட்டிருக்கும் மாற்றத்தில் தகவல்கள் வெள்ளமென பாய்கின்ற ஓர் அதிர்ஷ்டமான சூழலில் மாணவர்கள் இருக்கிறார்கள். ஆய்வாளர்கள் தங்களின் பல்லாண்டுக்கணக்கான உழைப்பின் வெளிப்பாடுகளை சில நிமிடங்களில் வெளிப்படுத்துவதை அறிவதென்பது அதிர்ஷ்டமென்றே சொல்லலாம். இந்த வாய்ப்பை மாணவர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
 
suresh kannan

Monday, December 02, 2013

பொதுவெளியின் எளிய வாசகர்

சனிக்கிழமையன்று ஜெயமோகனின் 'வெள்ளை யானை' நூல் வெளியீட்டு விழா முடிந்து கிளம்பும் போது கடும் பசி. வழக்கமான வேலை நாட்களில் இவ்வாறு அத்தனை பசிக்காத வயிறு, வெளியே செல்லும் நாட்களில் உடலின் ஓவர்டைம் காரணமாகவாகவோ என்னவோ, விரைவில் பசிக்க ஆரம்பித்து விடுகிறது. இதனாலேயே விழா நிகழ்வுகளை ஒருமித்த மனநிலையில் கவனிக்க முடிவதில்லை. அதனாலேயே அவசரமாக எதையாவது திணித்து விட்டு ஓடுவேன். அன்று இயலவில்லை.

விழா முடிந்து நண்பர்களிடம் சிறிது உரையாடி விட்டு சென்ட்ரல் ஸ்டேஷன் அடைந்து வீட்டை அடைவதற்குள் பசி அதன் உக்கிரத்தை அடைந்திருந்தது. ஓளவையார் சொன்னது போல் இடும்பை கூர் வயிறு. கடுமையான பசியை உணர்ந்திருந்தால்தான் இந்த நாவலில் விவரிக்கப்படும் பஞ்சத்தின் விவரணைகளை உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று விழாவில் கெளதம சன்னா (?) சொன்னது நினைவிற்கு வந்தது. (ஒருவேளை பசிக்கே இதெல்லாம் ஓவர்ப்பா தம்பி).

வீட்டின் அருகிலிருக்கும் ஓர் அசைவ உணவகத்திற்கு சென்று அவசரமாய் பிரியாணி ஆர்டர் செய்தேன். காத்திருக்கும் நேரத்தில் சென்ட்ரல் ஸ்டேஷனில் வாங்கிய உயிர்மையைப் புரட்டி ஷாஜியின் கட்டுரையை ஆவலாக வாசித்துக் கொண்டிருந்தேன். (தன்னடக்கத்தை கவனியுங்கள், என் கட்டுரையை வாசிக்கவில்லை). அப்போதுதான் அது நிகழ்ந்தது.

அங்கு சர்வராக பணிபுரியும் ஒருவர் என்னை அணுகி 'இந்த மாச உயிர்மை இத்தனை சீக்கிரம் வந்துடுச்சுஙகளா?" என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பேருந்து மற்றும் ரயில் பயணங்களில் தினத்தந்தி, ராணிமுத்து வகையறாக்களைத் தாண்டி இலக்கிய நூல்கள், சிற்றிதழ்கள், காலச்சுவடு, உயிர்மை போன்ற இடைநிலை இதழ்கள் ஆகியவற்றை வாசிக்கின்ற சகஹிருதயர்களை அபூர்வமாகவே கண்டிருக்கிறேன். அநாமயதேயராக இருந்தாலும் அவர் மீது இனம் புரியாத காரணமறியாத பிரியம் ஏற்பட்டு விடும். சமயங்களில் லஜ்ஜையை கைவிட்டு அவர் வாசிக்கும் நூல் என்னவென்று எட்டிப்பார்ப்பதும் உரையாட கூட முயல்வதும் கூட உண்டு.

ஹோட்டலில் சர்வராக பணிபுரியும் ஒருவர் இலக்கிய இதழைப் பற்றிக் கேட்டது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. (ஏன் ஹோட்டல் சர்வர் இலக்கியம் படிக்க்ககூடாதா, இதைத்தான் மேட்டிமை மனப்பான்மையின் ஆழ்மன விளைவு  என்று ருஷ்ய அறிஞர் மிகாச்சேவ் காபுரா சொல்லியிருக்கிறார் என்றெல்லாம் என்னை தாக்க முனையாமல் அந்த சூழ்நிலையின் யதார்த்தத்தோடு புரிந்து கொள்ளுங்கள்). அவரைப் பற்றி ஆவலாக விசாரித்தேன். பெயரையும் ஊரையும் பற்றி சொன்னார். இது போன்ற இதழ்களை தொடர்ந்து வாசிப்பதாகவும் தெரிவித்தவுடன் என் பசியும் சற்று மறைந்து அவரைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது.

அவர் என்னைப் பற்றி விசாரித்தவுடன் என் பெயரைச் சொன்னேன். அவர் உடனே என் கையிலிருந்த இதழையும் பெயரையும் கச்சிதமாக இணைத்து யோசித்து 'சமீபத்தில் இதில் தொடர்ந்து எழுதுவது நீங்கள்தானே?' என்றார். 'ஆமாம்'

'கடந்த மாத  இதழில் மிஷ்கின் திரைப்படத்தைக் குறித்த கட்டுரையைப் பற்றி ' நல்லாயிருந்ததுங்க' என்று ஆரம்பித்து  'ஏன் இதைப் பற்றி எழுதவில்லை, ஏன் அதை எழுதவில்லை" என்று பல கேள்விகளால் திணறடித்து விட்டார். இதற்குள் நான் ஆர்டர் செய்த உணவும் வந்துவிட்டது. ஆனால் அதை கடும்பசியில் உண்ண இயலாமல் அவரின் கேள்விகள் தொடர்ந்து கொண்டேயிருந்தன. உள்ளே கிச்சனில் வறுபட்டுக் கொண்டிருந்த கோழி கூட அத்தனை துன்பப்பட்டிருக்காது. அந்தச் சங்கடத்தையும் மீறி சினிமா குறித்த அவரின் ஆர்வம் என்னை பிரமிப்படையச் செய்தது. மிஷ்கின் திரைப்படத்தின் பல காட்சிகளை உதாரணம் காட்டிக் கொண்டேயிருந்தார். நான் எழுதிய முந்தைய கட்டுரைகளைக் கூட அவர்  ஞாபகம் வைத்திருந்தது உண்மையில் என்னை நெகிழ வைத்தது. 'என்னுடைய பூர்வீகம் சென்னைதானா? என்பதை மறுபடி மறுபடி கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார். சென்னையில் பிறந்தவர்கள் எழுத்தாளராக எப்படி ஆக முடியும் என்பதை அவர் உறுதியாக நம்பினது போலிருந்தது.

எதற்காக இத்தனை சுயபிரதாபம் என்றால், இத்தனை வருட இணையப் பொதுவாழ்க்கையில் வசைகள் உட்பட பல வாசகர் கடிதங்களை மின்னஞ்சலில் பெற்றிருக்கிறேன். (வாசகர் கடிதங்களை இணையத்தில் பிரசுரிப்பதில்லை. தன்னடக்கம்தான் காரணம்) இணையப் பரிச்சயத்தின் மூலம் பல நண்பர்களின் அன்பையும் சில நண்பர்களின் கசப்பையும்  பெற்றிருக்கிறேன். நூல் வெளியீட்டு விழாக்களில் புத்தக கண்காட்சிகளில் சில நண்பர்களின் அறிமுகத்தைப் பெற்றிருக்கிறேன்.

ஆனால் பொதுச் சமூகத்தில் என்னிடம் எவ்வித முன்தொடர்பும் கொள்ள இயன்றிருக்காத ஓர் அநாயமதேய எளிய நபரை வாசகராக சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. இவரின் அறிமுகத்தின் மூலம் அன்றைய தருணம், வயிறை விடவும் மனம் அதிகமாக நிறைந்திருந்தது.

இதை போல் நூல் வெளியீட்டு விழா இறுதியில் வெளியே கிருஷ்ணமூர்த்தி என்கிற ஆர்வமுள்ள இளைஞரை சந்தித்தேன். திருவண்ணாமலையிலிருந்து இந்த விழாவிற்காகவே வந்திருக்கிறார். இரவு தங்க இடமிருந்தால் மறுநாள் நடக்கவிருந்த வாசகர் கலந்துரையாடலிலும் கூட கலந்து கொள்ள விருப்பம் ஆனால் இரவு கிளம்பினால்தான் மறுநாள் ஊர் அடைய முடியும் என்கிற வருத்தம். கணினி ஏதுமில்லையென்றாலும் கூட கைபேசியிலேயே ஜெயமோகன் தளத்தின் அனைத்துக் கட்டுரைகளையும் வாசித்து விடுவாராம். ஜெயமோகன் படைப்பொன்றைப் பற்றி கட்டுரை கூட எழுதி வைத்திருக்கிறார். பவாவிடம் சொல்லி திருவண்ணாமலையில் நிகழும் இலக்கிய சந்திப்பில் ஜெயமோகனிடம் சேர்த்து விட வேண்டும் என்கிற ஆவலில் இருக்கிறார். அவர் உடல்மொழியிலும் கண்களிலும் தெரிந்த பரவசத்தைக் காண நெகிழ்ச்சியாக இருந்தது. கணினி ஒன்றிருந்தால் அவர் எழுத்துக்களை இணையத்திலேயே பதிப்பிக்க முடியும் என்று யோசனை சொன்னேன். ஆனால் அவரிடம் சொந்தமாக கணினி இல்லை.

இவ்வாறான எளிய வாசர்களின் மூலம்தான் இலக்கியம் எனும் வஸ்து குற்றுயிரும் குலையுறுமாக ஜீவித்துக் கொண்டிருக்கிறது. 


suresh kannan

Sunday, December 01, 2013

வெள்ளை யானை - நூல் வெளியீட்டு விழா


ஜெயமோகனின் 'வெள்ளை யானை (வெள்ளையானை?) நூல் வெளியீட்டு விழா. அரங்கு நிறைந்த கூட்டம்.

நான் இன்னும் இந்த நாவலை வாசிக்கவில்லை என்பதே இந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ள முக்கிய தகுதியுடன் கூடிய அடையாளம். ஏனெனனில் சமகால நூல்வெளியீட்டு விழாக்களில் முக்கிய பேச்சாளர்கள் 'நான் இன்னும் இந்த நூலை வாசிக்கவிலலை' என்றுதான்  வெட்கமேயின்றி தன் உரையைத் துவங்குவார்கள். அதை விடவும் முக்கியமான பணிகள் கொண்டவர் அவர் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். நூலுக்கு சிறிதும் தொடர்புமின்றி மைக்கை விட்டுத்தர மனமின்றி பின்னர் அந்த உரை சுயபிரதாபங்களுடன் நீளும். கூட்டத்தின் வாயிலிருந்து சிரிப்பைப் பிடுங்கும்  நோக்கத்துடன் அசட்டுத்தனமான நகைச்சுவைகளும் கைத்தட்டலை பெற்று விடும் நோக்கத்துடன் ஆவேசக் கூவல்களும்தான் பொதுவெளி மேடை உரையாடல்களின் அடையாளங்கள் என்றாகி நீண்ட வருடங்களாகி விட்டன.

மாறாக இந்த நூல் வெளியீட்டு விழா பெரும்பாலும் நூலுக்குத் தொடர்புடைய உரையுடனும் தன்மையுடனும் காணப்பட்டது ஆசுவாசமாக இருந்தது. 'அம்பேத்கர்' பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் பலத்த கைததட்டல்களும்,  இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர் என்று முன்னுரையில் இடப்பட்டிருக்கும் பெயர் வரிசையை மாற்ற வேண்டும் என்கிற வேண்டுகோள் போன்றவையாக இந்தக் கூட்டத்தின் உரையாடல்களும் மனோநிலையும் தலித் ஆதரவுத்தன்மையுடன் அமைந்திருந்தது இயல்பான ஒன்று. ஏனெனில் 'வெள்ளை யானை' பிரதியின் மையம் அப்படியானது. 'இந்துவத்துவத்தின் குரல்' என்கிற அபத்தமான புரிதலுடன் அறியப்படும் ஜெயமோகன் எழுதிய இந்த சமீபத்திய  படைப்பை தலித் ஆதரவாளர்கள் நெருங்கி வரக்கூடிய, மனவெழுச்சியை ஏற்படுத்தக்கூடிய நுட்பமான வித்தியாசத்துடன் கூடிய தருணம்.

எழுத்தாளர் இமையம், அவர் ஏற்கெனவே எழுதிய 'தி இந்து'வில் வெளியான மதிப்புரையின் சுருக்கப்படாத வடிவத்தை வாசித்தார். பேராசிரியை சரஸ்வதி, ஒரு கல்வியாளருக்கேயுரிய கறாரான தன்மையுடனும் பாடப்புத்தகங்கள் ஏற்படுத்தும் வறட்சியான சலிப்புடனும் நூலைப் பற்றி குறிப்புகளுடன் பேசினார். 'பழைய வரலாற்றை பற்றி அறிந்தால்தான் புதிய வரலாற்றைப் படைக்க முடியும்' என்கிற அம்பேத்கரின் மேற்கோளுடன் பேசிய சட்டமன்ற உறுப்பினர் செ.கு.தமி்ழரசன், தலித் மக்களே தங்களின் வரலாற்று அறியாமையுடன் இருப்பது  குறித்த ஆதங்கத்தைப் பதிவு செய்தார். ஆதிநந்தன் லெமூரியர், வரலாற்றில் மறைக்கப்பட்ட, புதைக்கப்பட்ட இவ்வாறான பல வரலாற்று உண்மைகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் தலித் எழுத்தாளர்களினால் எழுதப்பட்டால் அது சுயசார்புத்தன்மையுடன் எழுதப்பட்டது என பொதுவாக கருதப்படக்கூடிய அபாயம் இருப்பதால் பொதுவானவர்களும் ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றின ஆய்வு நூல்களை எழுத வேண்டும் என்கிற வேண்டுகோளை வைத்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்தியல் பரப்பு மைய மாநிலச் செயலாளர், கெளதம சன்னா சென்னையின் வரலாற்றுப் பின்புலத்தோடு இந்த நூலை ஆய்வு நோக்கில் பல அரிய தகவல்களுடன் கூடிய ஒரு நீண்ட உரையை நிகழ்த்தினார். சென்னையைச் சேர்ந்தவனாக இருந்தாலும் 'லோன் ஸ்கொயர்' என்று அழைக்கப்படும் பகுதியின் பெயர்க்காரணம் உள்ளி்ட்ட பல புதிய தகவல்களை அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பை இவரது உரை நிகழ்த்தியது. வெள்ளை யானையில் விவரிக்கப்படும் 1870-களில் நிகழ்ந்த ஐஸ்அவுஸ் போராட்டம், தமிழகத்தில் நிகழ்ந்த முதல் தலித் போராட்டம் என்று கருதப்பட்டாலும் 1777-ல் நிகழ்ந்த ஒரு கொலையைத் தொடர்ந்த நிகழ்வுகளே தலித்திய மக்களின் போராட்டத்தின் துவக்கம் என்பதும் இது குறித்த சில வரிகள் அயோத்திதாச பண்டிதரின் நூலில் காணப்படுகிறது என்பதும் கெளதன சன்னாவின் உரையிலியிருந்து அறிய முடிந்தது.

ஜெயமோகனின் ஏற்புரையின் மூலம் நம்முடைய வரலாற்றை ஆவணப்படுத்துதலில் எத்தனை அறியாமையுடனும் பின்தங்கியும் இருந்தி்ருக்கிறோம், இருக்கிறோம் என்கிற அதிர்ச்சிகரமான அவமானத்தை மீண்டும்  மீண்டும் அறிய முடிந்தது. கடந்த சமீபத்திய நூற்றாண்டுகளில் நிகழ்ந்த லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக மடிந்த இந்த மிகப் பெரிய  பஞ்சத்தைப் பற்றி, செயற்கையாக நிகழ்த்தப்பட்ட பஞ்சத்தின் மூலம் நிகழ்ந்த படுகொலைகளைப் பற்றி நம்மிடையே எவ்வித ஆவணமுமில்லை. நிழலாக சில தடயங்கள் மாத்திரமே. மாறாக மேறகத்திய உலகில் வரலாற்று ஆவணங்களை பதிவதிலும் பாதுகாப்பதிலும் எத்தனை கவனத்துடனும் அக்கறையுடனும் இருக்கிறார்கள் எ்னகிற நிதர்சனம் அவமானமானதொரு வடுவாக நம் முன் நிற்கிறது.

90-களிலேயே இதை எழுத திட்டமிட்டிருந்தாலும் இந்த நாவலை யாருடைய நோக்கில் எந்த மொழியில் எழுதுவது என்பது குறித்து இந்த நூலாசிரியருக்கு தயக்கமிருந்திருக்கிறது. ஏனெனில் சென்னையைப் பற்றியோ அப்போதைய பேசுமொழியைப் பற்றியோ அறிந்திருக்காத நிலையில் இத்தயக்கம். 'தென்தமிழ்நாட்டில் நிகழ்ந்த சம்பவமென்றால் தன்னம்பிக்கையுடன் எழுதி முடித்திருப்பேன்' என்கிறார். எனவேதான் மூன்றாவது முயற்சியில் இறுதி வடிவத்தை எட்டிய இந்த நாவலில் இந்தப் பிரதேசத்தைப் பற்றி அறிந்திராத எய்டனின் பார்வையில் இந்த நாவல் விரிகிறது. ச.பாலமுருகனின் சோளகர் தொட்டி என்கிற புதினம், சந்தனக்கடத்தல் வீரப்பனை தேடுகிற வேட்டையில் வனக்காவல் அதிகாரிகள், பழங்குடி மக்களை எப்படியெல்லாம் பலவகைகளில் துன்புறுத்தியிருக்கிறார்கள் என்பதை உணர்ச்சிகரமாக விவரித்துச் சென்றாலும் பாத்திரங்கள் உரையாடும் செயற்கைத்தனம் காரணமாகவே அதன் இலக்கிய மதிப்பை இழக்கிறது. தரவுகள் எளிதில் கிடைக்க்ககூடிய சமகாலத்திய பிரச்சினையைப் பற்றி உரையாடும் பிரதியே இத்தனை அலட்சியமாக உருவாக்கப்பட்டிருக்கும் சூழலில் ஒரு பிரதியின் நம்பகத்தன்மைக்காக ஜெயமோகன் முன்வைக்கும் உழைப்பு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

நாவலை விரைவில் வாசிக்க வேண்டும் என்கிற உந்துதலையும் அதற்கும் மேலாக முந்தைய வரலாற்று ஆய்வு நூல்களை (குறிப்பான சென்னையின்) வாசித்தறிய வேண்டும் என்கிற மிகப் பெரிய ஆர்வத்தையும்  இதுவரையிலான வாசிப்பின் போதாமையையும் இந்த நூல் வெளியீட்டு விழா ஏற்படுத்தியிருக்கிறது.