Monday, June 01, 2020

The Accountant (2016) - ‘இயந்திரக் கணிதன்'





இத்திரைப்படம் வழக்கமானதொரு ஆக்ஷன் திரில்லர் அல்ல.  ஆட்டிஸம் போன்ற மாற்றுத்திறன் கொண்ட நபர் தொடர்பான திரைப்படம் என்றால் பொதுவாக அழுகாச்சியாக அல்லது மெலோ டிராமாக இருக்கும். ஆனால் அத்தகைய நபர் ஒருவரை சாகசங்களோடு இணைத்ததே இத்திரைப்படத்தின் சுவாரசியமான அம்சம். Ben Affleck  இந்தப் பாத்திரத்தை ரகளையாக கையாண்டுள்ளார்.


***


ஆட்டிஸ குறைபாடுள்ள சிறுவனான கிறிஸ் அதிக ஆக்ரோஷமானவனாக இருக்கிறான். 'அதிக வெளிச்சம், சப்தம் இவர்களை பாதிக்கும். சிறிது காலத்திற்கு அவனை என்னிடம் விட்டு விடுங்கள்' என்கிறார் சிறப்பு மருத்துவர். ஆனால் ராணுவத்தில் பணிபுரியும் தந்தை, அதற்கு முரணான கருத்தைச் சொல்கிறார். 'எது அவனைப் பாதிக்கிறதோ, அதனை நோக்கியே அவன் தீவிரமாகச் செல்ல வேண்டும். அதுதான் சரியான மருந்து' என்று கிறிஸ்ஸையும் அவனது சகோதரனையும் கடுமையான சண்டைப் பயிற்சியில் ஈடுபடுத்துகிறார். இதனால்் கிறிஸ்ஸின் தாய் இவர்களை விட்டுப் பிரிந்து சென்று விடுகிறார்.

வளர்ந்த கிறிஸ் கணக்கில் அசகாய சூரப்புலியாக இருக்கிறான். எத்தனை சிக்கலான கணக்குகளையும் மனதிலேயே போட்டு விடைகாணும் திறமையுள்ளவன். குறி பார்த்து சுடுவதிலும் கெட்டிக்காரன். பயங்கரவாதிகளின் கணக்குகளில் சீர்திருத்தம் செய்து சம்பாதிக்கும்  ஆபத்தான பணியில்  இருக்கிறான். அனாமதேய பெண் குரலொன்று அவனுக்கு உதவியாளராக இருக்கிறது.  ரோபோட்டிக்ஸ் நிறுவனம் ஒன்று, தங்களின் கம்பெனி கணக்குகளில் உள்ள கோளாற்றை சீர்செய்வதற்காக கிறிஸ்ஸை அணுகுகிறது.

இது ஒருபுறமிருக்க, டிரெஷரி ஏஜெண்ட்டான ரேமண்ட் கிங், பயங்கரவாதிகளின் கணக்குகளை ஆராய்கிறார். அவர்களுக்கு உதவும் 'அக்கவுண்டண்ட்' என்கிற பெயர் மட்டும் கிடைக்கிறது. தனது உதவியாளராக மெடினாவை அழைக்கிறார். "நீ இவனைக் கண்டுபிடித்தேயாக வேண்டும். இல்லையென்றால் உன் வேலை போய் விடும். உன்னுடைய பழைய க்ரைம் ரெக்கார்டுகள் என்னிடம் இருக்கின்றன". எனவே மெடினா தேடுதலில் தீவீரமாக ஈடுபடுகிறாள்.

***

ரோபோட்டிக்ஸ் நிறுவன கணக்குகளில் நிகழ்ந்துள்ள முறைகேடுகளை கிறிஸ் கண்டுபிடிக்கிறான். அந்தக் கம்பெனியின் உயர்அதிகாரி கொல்லப்படுகிறார். கிறிஸ் மோசடிகளை முழுவதுமாக முடிக்கும் முன்பு நிறுவனத்தின் தலைவர்  இவனிடம் வந்து அதை நிறுத்துமாறு கூறுகிறார். கிறிஸ்ஸின் இயல்புப் படி ஒன்றை துவக்கி விட்டால் அதை முழுவதுமாக முடிக்காமல் அவனால் இயல்புத்தன்மையை அடைய முடியாது. எனவே இந்த வேலையை தனக்கு தந்த பெண்மணியைப் பார்க்கச் செல்கிறான். ஆனால் அவளும் கொல்லப்பட்டிருக்கிறாள்.

கிறிஸ்ஸையும் கொல்வதற்கான சம்பவங்கள் நடக்கின்றன. மிகத் திறமையாக தப்பிக்கிறான். ரோபாட்டிக்ஸ் நிறுவனத்தில் தனக்கு உதவியாளராக இருந்த இளம்பெண்ணை கொல்லப் போகிறார்கள் என்று அறிகிறான். அவளும் நிதி மோசடி பற்றி அறிந்தவள். அவளைக் காப்பாற்றுகிறான். அவளைத் தன் ரகசிய இடத்திற்கு அழைத்து வந்து  தன் பழைய வரலாற்றைக் கூறுகிறான்.

'அக்கவுண்டன்ட்' யார் என்கிற தேடுதலில் ஈடுபட்டிருக்கும் மெடினா, மிகச் சிரமப்பட்டு கிறிஸ்ஸின் பெயரை கண்டுபிடித்துவிடுகிறாள். அவளும் டிரெஷர் ஏஜெண்ட் ரேமண்ட் கிங்கும், கிறிஸ்ஸின் வீட்டிற்கு செல்கிறார்கள். கிறிஸ் அங்கு இருப்பதில்லை.

***

மெடினாவிடம், ரேமண்ட் கிங்   சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பழைய சம்பவம் ஒன்றை பகிர்கிறார். பயங்கரவாதிகளை கண்காணித்துக் கொண்டிருந்த சமயத்தில் துப்பாக்கி சப்தம் கேட்டு உள்ளே நுழைகிறார். வழியெங்கும் பயங்கரவாதிகள் இறந்து கிடக்கிறார்கள். அவருடைய தலையின் பின்னால் ஒரு துப்பாக்கி. "நீ உன் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக இருந்தாயா?" என்று  கேள்வி கேட்கப்படுகிறது. "ஆம்" என்கிறார் ரேமண்ட் பயத்துடன். அவரைக் கொல்லாமல் விடுகிறான் 'அக்கவுண்டன்ட்' ஆன கிறிஸ்.

ரோபாட்டிக்ஸ் நிறுவன தலைவரின் வீட்டிற்கு செல்கிறான் கிறிஸ். அங்கு பலத்த பாதுகாப்பு. நவீன துப்பாக்கிகளுடன் ஆட்கள். எல்லோரையும் வீழ்த்தினாலும் கூட்டத்தின் தலைவனுடன் சண்டையிட நேர்கிறது. அவன் கிறிஸ்ஸின் சகோதரன். பல ஆண்டுகளுக்குப் பின்னால் அவர்கள் சந்திக்கிறார்கள். நிறுவனத் தலைவரை கிறிஸ் சுட்டுக் கொல்கிறான். ரேமண்ட் கிங் வகித்த பதவியை மெடினா அடைகிறாள்.

***

'அவர்கள் குறைபாடுள்ளவர்கள்'  என்றும் 'நாம் இயல்பானவர்கள்' என்று எப்படி நிச்சயமாக சொல்ல முடியும்? என்கிற தத்துவார்த்தமான கேள்வியுடன் படம் நிறைகிறது. இவ்வாறான சிறப்புத் தன்மையுள்ள நபர்கள் ஒருவகையில் அசாதாரணமானவர்கள். பொங்கி வழியும் அவர்களின் செயலாற்றல் சரியான வழியில் திசை திருப்பப்பட்டால் பல அசாதாரணமான விஷயங்களை அவர்கள் செய்வார்கள். ஆனால் அது தவறான திசையாக இருக்கக்கூடாது என்பதை படம் அழுத்தமாக உணர்த்துகிறது.

ஆட்டிஸக் குறைபாடுள்ள கிறிஸ் ஆக பென் அஃப்லெக் அற்புதமாக நடித்திருக்கிறார். படம் முழுவதும் இறுக்கமான முகத்துடன் சுருக்கமான வார்த்தைகளில் அந்தப் பாத்திரத்திற்கு உயிர் தந்திருக்கிறார். சற்று குழப்பமான திரைக்கதையாக இருந்தாலும்  சுவாரசியமான திரைப்படத்தை தந்திருக்கிறார் இயக்குநர் Gavin O'Connor.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

No comments: