Tuesday, June 02, 2020

Elle (2016) - ‘அவள் அப்படித்தான்'


ஹாலிவுட் திரைப்படங்களை் பெரும்பாலும்  சாகசங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும் போது, ஐரோப்பிய திரைப்படங்கள் மனிதர்களின் பல்வேறு உணர்ச்சிகளை, அதன் சிக்கல்களை மையமாகக் கொண்டிருக்கும். 'அவள்' என்ற அர்த்தம் வரும்படியான தலைப்பைக் கொண்டிருக்கும் இத்திரைப்படம் ஒரு சைக்காலஜி திரில்லர். மிஷேல் எனும் நடுத்தர வயதுப் பெண்ணுக்கு நிகழும் ஓர் அசாம்பாவிதத்தையொட்டி நகரும் திரைக்கதை. பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்ற இத்திரைப்படம், பிரான்சின் சார்பாக ஆஸ்கர் விருதிற்கு அனுப்பப்பட்டிருந்தது.

***

'வீடியோ கேம்' தயாரிக்கும் நிறுவனத்தை, தனது தோழி அன்னாவுடன் இணைந்து நடத்துகிறாள் மிஷேல். விவாகரத்தான அவளுக்கு அன்னாவின் கணவனுடன் ரகசியத் தொடர்பு இருக்கிறது. இந்த நிலையில் ஒருநாள் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவனால் மிஷேல் மூர்க்கமாக வன்கலவி செய்யப்படுகிறாள். அவனால் தாம் மறுபடியும் தாக்கப்படக்கூடும்  என்கிற  அச்சம் மிஷேலுக்கு இருக்கிறது. எனவே அது குறித்தான எச்சரிக்கையுடன் இருக்கிறாள். தன் பகற்கனவுகளில், தன்னைத் தாக்கியவனை பதிலுக்கு விதம்விதமாய் தாக்குவது போல கற்பனை செய்கிறாள்.

இந்த அசம்பாவிதம் குறித்து தனது நண்பர்களிடம் சொல்கிறாள் மிஷேல். 'போலீஸிற்கு போ" என்கிற அவர்களின் ஆலோசனையை ஏற்க அவள் தயாராக இல்லை. அதற்கான காரணம் அவளது இளமைப்பருவத்தில் உறைந்திருக்கிறது. மிஷேல் சிறுவயதாக இருக்கும் போது அவளது தந்தை அக்கம்பக்கம் வீடுகளில் உள்ள நபர்களை கொடூரமாகக் கொன்று காவல்துறையில் மாட்டிக் கொள்கிறார். அந்த பரபரப்பான வழக்கின் விசாரணை, பல வருடங்களுக்குப் பிறகு இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கிறது. இதற்காக தனது தந்தையை கடுமையாக வெறுக்கும்  மிஷேலுக்கு போலீஸ் என்றாலே அலர்ஜியாக இருக்கிறது.

மிஷேலுக்கு நிகழ்ந்த சம்பவம் எப்படியோ பரவி, அவளது கம்பெனியிலேயே எவரோ அது குறித்ததொரு 'அனிமேஷன்' படத்தை உருவாக்குகிறார்கள். தன்னைத் தாக்கியவன் அவனாக இருக்கும் என்று மிஷேல் சந்தேகப்படுகிறாள். அது குறித்து ரகசியமாக ஆராய்கிறாள்.


***

எதிர் வீட்டில் இருக்கும் பாட்ரிக் எனும் ஆசாமி மீது மிஷேலுக்கு ஈர்ப்பு இருக்கிறது. சமயங்களில் ஒளிந்திருந்து அவனை ரகசியமாக கவனித்து மகிழ்கிறாள். பாட்ரிக்கின் குடும்பத்தை விருந்திற்காக தன் வீட்டிற்கு அழைக்கிறாள்.  தன் விருப்பத்தை சூசகமாக அவனிடம் தெரிவிக்கிறாள். இருவருக்குள்ளும் நட்பும் இணக்கமும் உண்டாகிறது.

மிஷேலின் தாய் ஓர் இளைஞனை திருமணம் செய்ய உத்தேசிக்கிறாள். மிஷேலுக்கு இது பிடிப்பதில்லை. விருந்தின் போது தன்னுடைய எதிர்ப்பை கிண்டலாக எதிரொலிக்கிறாள். மிஷேலின் மகனுக்கு ஓர் அடங்காப்பிடாரி மனைவி. பொருளாாதாரக் காரணங்களுக்காக தாயைச் சார்ந்திருக்கிறான் மகன். இது குறித்த சச்சரவுகளும் ஏற்படுகின்றன.

இந்த நிலையில் முகமூடி மனிதனின் வருகை மீண்டும் நிகழ்கிறது.  மிஷேலை தாக்கி அவளுடன் கட்டாயமாக உறவுகொள்ள முயல்கிறான். மிஷேல் இதை மனதளவில்  எதிர்கொள்ள தயாராக இருந்ததால் , இம்முறை பதிலுக்கு துணிச்சலுடன் அவனைத் தாக்குகிறாள். அவன் யாரென்று அடையாளம் தெரிவதில் அவளுக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. எதிர்வீட்டு பாட்ரிக்.

***

எதிரி யாரென்கிற அடையாளம் தெரிந்து விட்ட போதிலும் அவனுடன் தொடர்ந்து பழக வேண்டிய நிலைமை மிஷேலிற்கு. காவல்துறையிடமும் செல்ல முடிவதில்லை.. ஆகவே பூனை - எலி விளையாட்டைத் துவங்குகிறாள். அவனைப் பழிவாங்க வேண்டும் என்று தோன்றினாலும்  ஒருபக்கம் அவன் மீது ஈர்ப்பும் இருக்கும் விசித்திரமான நிலைமை.

மிஷேல் ஒரு விபத்தில் சிக்கிக் கொள்ளும் போது உதவ யாருமில்லாத நிலையில் பாட்ரிக் வந்து காப்பாற்றுகிறான். ஒரு நாளின் தனிமையில் உறவிற்காக பாட்ரிக் அழைக்கிறான். மிஷேல் மனதளவில் அதற்கு தயாராக இருந்தாலும் முந்தைய சம்பவத்தைப் போலவே அவளை அடித்துத் துன்புறுத்தி வக்கிரத்தனமாக தன் வேலையை முடிக்கிறான். மிஷேலுக்குள் வெளிக்காட்டாத வன்மம் பொங்குகிறது.

தன்னுடைய நிறுவனத்தின் புதிய 'வீடியோ கேம்' ஒன்று சிறப்பாக அமைந்ததையொட்டி விருந்திற்கு ஏற்பாடு செய்கிறாள் மிஷேல். பாட்ரிக் குடும்பம் உட்பட அனைவரையும் அழைக்கிறாள். தன் தோழி அன்னாவிடம் 'உன் கணவருடன் எனக்கு தவறான உறவுமுறை இருந்தது' என்று உண்மையை ஒப்புக் கொள்கிறாள். விருந்தின் இடையே 'நான் கிளம்புகிறேன்' என பாட்ரிக்கை மட்டும் அழைத்துக் கொண்டு கிளம்புகிறாள்.

வீட்டிற்கு செல்லும் வழியில் 'உன்னைப் பற்றி போலீஸில் சொல்லலாம் என்றிருக்கிறேன்'  என்று பாட்ரிக்கிடம் செல்கிறாள். அவள் எதிர்பார்த்தபடியே சிறிது நேரத்தில் பாட்ரிக் அவளது வீட்டிற்கு வருகிறான். வழக்கம் போல அவளை மூர்க்கமாக அடித்து உறவு கொள்ள முயற்சிக்கிறான். பாட்ரிக்கின் தலையில் 'மடார்' என்று எவரோ அடிக்கிறார்கள். மிஷேலின் மகன். பாட்ரிக் இறந்து போகிறான்.

'இந்த ஆம்பளைங்கே இப்படித்தான்' என்றபடி மிஷேலும் அன்னாவும் நடந்து செல்லும் காட்சியோடு படம் நிறைவுறுகிறது.

***

'பெண்ணின் மனது ஆழம்' என்பது சலிக்க சலிக்க சொல்லப்பட்டு விட்ட வாக்கியம் என்றாலும் அதில் பெரும்பாலும் உண்மையுள்ளது. பெண்களின் மனது எவ்வாறெல்லாம் விசித்திரமாக இயங்கும் என்பதை அழுத்தமாக  நிரூபிக்கும் திரைப்படம் இது. மிஷேலாக நடித்த Isabelle Huppert-ன் அற்புதமான நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. 'Black Book'  போன்ற பல சிறப்பான திரைப்படங்களை இயக்கியிருக்கும் டச்சு இயக்குநர் Paul Verhoeven, நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் முதல் பிரெஞ்சு திரைப்படம் இது.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

No comments: