Friday, June 05, 2020

Hell or High Water (2016) - ‘செய் அல்லது செத்துமடி'







குற்றங்களை கறாராக விசாரித்து தீர்ப்பும் தண்டனையும் சொல்வது வேறு, குற்றங்களுக்கான ஆணி வேர் காரணங்களை கண்டறிவது வேறு. ஒரு குறிப்பிட்ட இடத்தின் சமூகவியல் பின்னணி கூட குற்றங்களுக்கு காரணமாக அமையலாம். சகோதர்களாக இருக்கும் இரு சில்லறைத் திருடர்களின் மூலமாக இத்திரைப்படம் அதைத்தான் சொல்கிறது.

**

இடம் மேற்கு டெக்சாஸ். அண்ணன் டேனர், தம்பி டோபி. 'சூது கவ்வும்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி  ஐந்து கட்டாயமான விதிகளை வைத்துக் கொண்டு பாதுகாப்பு காரணமாக குறைந்த அளவு பணத்தைக் கொள்ளையடிப்பார் அல்லவா? அது போலவே இவர்களும் சில்லறை நோட்டுக்களை மட்டும் திருடுபவர்கள். இவர்களுக்கும் சில பாலிசிகள் உண்டு.  வங்கிகளில் மட்டுமே கொள்ளையடிப்பார்கள்.  முதல் ஊழியர் வரும் காலை நேரத்தில் முகத்தை மறைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து துப்பாக்கி முனையில் மிரட்டி சிறிய மதிப்புள்ள பணத்தைக் கொள்ளையடிப்பார்கள். பெரிய நோட்டுக்களைத் தொட்டால் பிரச்சினை ஏற்படும் என தெரியும். கொள்ளையடிக்கப் பயன்படுத்தும் கார்களை மண்ணில் புதைத்து விடுவார்கள். இவர்களின் மீது தொடர்ச்சியாக புகார்கள் வந்தாலும் எந்த தடயமும் கிடைக்காததால் காவல்துறை திணறுகிறது.

**

இவர்களின் கொள்ளைகளுக்கு பின்னால் ஒரு புனிதமான நோக்கம் உண்டு. அவர்களின் தாய்க்குச் சொந்தமான பண்ணையொன்று கடனில் மூழ்கியிருக்கிறது. அதை மீட்க வேண்டும். அண்ணன் ஏற்கெனவே சில திருட்டுக்களில் சிறை சென்றவன் என்பதால்  அவனுக்கு குடும்பம் என்று ஏதுமில்லை. ஆனால் தம்பிக்கு பணத் தேவை இருக்கிறது. விவாகரத்து ஆனவன் என்றாலும் தங்களின் மகன்கள் வருங்காலத்தில் கஷ்டப்படாமல் இருக்க வேண்டும் என நினைக்கிறான். குறிப்பாக தன்னைப் போல் ஆகி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறான். அதற்காக அடமானத்தில் இருக்கும் பண்ணை நிலத்தை எப்படியேனும் மீட்டாக வேண்டும். மேலும் சில வங்கிகளில் கொள்ளையடிக்கிறார்கள். திருடிய பணத்தையெல்லாம் சாமர்த்தியமாக வெள்ளையாக்குகிறார்கள்.

மார்கஸ் சில நாட்களில் ரிடையர்ட் ஆகப் போகும் போலீஸ்காரர். அவருடைய உதவியாளர் ஆல்பர்ட்டோ. இருவரும் இணைந்து இந்த சில்லறைத் திருடர்களை பிடிக்க வியூகம் வகுக்கிறார்கள். மார்கஸ் அனுபவஸ்தர் என்பதால் அவர்கள் திருடும் முறையை அலசுகிறார். 'இந்தந்த இடத்தில்தான் அடுத்து வருவார்கள்' என்று யூகித்து சொல்கிறார். உதவியாளருக்கு இது பிடிபடவில்லையென்றாலும் அவருடன் வேண்டாவெறுப்பாக செல்கிறார்.


**

அண்ணனும் தம்பியும் வழக்கம் போல் ஒரு வங்கிக்கு காலை நேரத்தில் வேட்டைக்கு செல்கிறார்கள். ஆனால் அங்கு நிறைய வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். என்றாலும் சுதாரித்துக் கொண்டு அனைவரையும் மிரட்டி விட்டு கொள்ளையடிக்கத் துவங்குகிறார்கள். வங்கியின் காவலாளியும் வாடிக்கையாளர் ஒருவரும் தங்களிடம் துப்பாக்கியில் இவர்களை சுட முயல பதிலுக்கு  சுட்டு அவர்களை சாகடிக்கிறார்கள். தப்பி வெளியே வந்தால் அங்கும் பொதுமக்களில் சிலர் துப்பாக்கியுடன் நிற்கிறார்கள். எப்படியோ அவர்களிடமும் தப்பி வரும் போது தம்பிக்கு  குண்டு பாய்ந்து விடுகிறது.  பின்னாலேயே  காவல்துறையின் வாகனங்கள்.

தம்பியிடம் பணத்தை தந்து விட்டு அண்ணன் வேறொரு வாகனத்தில் செல்கிறான். காவல்துறையிடமிருந்து சாமர்த்தியமாக தப்பி ஒரு குனறின் மீது ஏதேறி அங்கிருந்து போலீஸ்காரர்களை துப்பாக்கியால் சுடுகிறான். இரு தரப்பிலும் சண்டை நடக்கிறது. இந்த தகவல் மார்கஸூக்குப் போகிறது. 'நான் சொன்னேன் பாத்தியா, வா, போகலாம்' என்று ஆல்பிரெட்டை கூட்டிக் கொண்டு கிளம்புகிறார். அங்கு நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் ஆல்பிரெட்டின் தலையில் குண்டு பாய்ந்து உடனே இறந்து போக மார்கஸூக்கு பயங்கர கோபம் வருகிறது.

உள்ளூர்க்காரர் உதவியுடன் குன்றின் இன்னொரு பக்கமாகச் சென்று அண்ணன் திருடனை சுட்டு வீழ்த்துகிறார். தன்னுடைய அண்ணன் கொல்லப்பட்டது குறித்து அறிந்து தம்பி வருத்தப்படுகிறான். ஒருவகையில் அந்தச் சாவு எதிர்பார்த்துதான். பணம் தம்பிக்குச் செல்லட்டும் என தன் உயிரையே தந்திருக்கிறான் அண்ணன். கொள்ளையடித்த பணத்தை வைத்து கடனில் இருந்த பண்ணையை தம்பி மீட்கிறான். அந்த நிலத்தில் எண்ணைய் வளம் இருப்பதால் அவனுக்குப் பிறகு அவனுடைய வாரிசுகளுக்கு நிலையான வருமானம் வரும் நிம்மதி ஏற்படுகிறது. அவனுடைய கணக்கு வழக்குகள் சுத்தமாக இருப்பதால் காவல்துறையால் அவனை  எதுவும் செய்ய முடிவதில்லை.

**

ரிடையர்ட் ஆகும் மார்க்ஸ், தம்பி திருடனை தேடிப் போகிறார். தன்னுடைய கூட்டாளி இறந்து போனதை அவர் அத்தனை  எளிதில் மறக்கத் தயாராக இல்லை. அவன் துப்பாக்கியுடன் நிற்கிறான். "உன் கூட  கொஞ்சம் பேசத்தான் வந்திருக்கேன். உட்காரலாமா?" இருவரும் உரையாடுகிறார்கள். "ஏன் செஞ்சீங்க?"

டோபி தன்னுடைய குடும்பத்தின் வறுமையான பின்னணி பற்றி சொல்கிறான். அவர்களின் தாய் சமீபத்தில் இறந்து போனதைப் பற்றியும் அண்ணன் திருடனாக இருந்தது பற்றியும் தன் மகன்களுக்காக இந்த நிலத்தை மீ்ட்க பணம் சேர்த்தது பற்றியும் என எல்லாவற்றையும் சொல்கிறான். அவனுடைய மனைவியும் மகன்களும் வருகிறார்கள். அவர்களின் முன்னால் உரையாட விரும்பாத மார்கஸ் கிளம்புகிறார். 'இந்த உரையாடலை வேறொரு சமயத்தில் முடித்துக் கொள்ளலாம்' என்கிறான் டோபி.


**

காலனி ஆதிக்கத்தின் மூலம் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்த பழங்குடிகளின் இளைய தலைமுறை தங்களின் பாரம்பரிய வறுமையிலிருந்து மெல்ல மீள்வதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் துயரத்தின் வரலாற்றைப் பற்றி இத்திரைப்படம் பேசுகிறது. வயதான போலீஸ்காரர் மார்கஸாக நடித்திருக்கும் Jeff Bridges-ன் நடிப்பு அருமை. இவரும் உதவியாளரும் பேசிக் கொள்ளும் வசனங்கள் சுவாரசியமானது. டோபியாக Chris Pine கலக்கியிருக்கிறார். டெக்ஸாஸின் அபாரமான பாரம்பரிய இசை படமெங்கும் ஒலிக்கிறது. பல விருதுகளைப் பெற்றிருக்கும் இத்திரைப்படத்தை திறமையாக இயக்கியிருப்பவர் David Mackenzie.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

No comments: