Wednesday, June 10, 2020

Loving (2016) - ‘வரலாற்றுக் காதல்'

மனித வரலாற்றில் எத்தனையோ காதல்கள் உருவாகின்றன. ஆனால் சில காதல்கள்  மட்டும் வரலாற்றையே புரட்டிப் போடுகின்றன. அப்படியொரு காதலைப் பற்றிய திரைப்படம் இது. பல விருதுகளைப் பெற்றுள்ள இந்த திரைப்படம், 'சிறந்த நடிகை'க்கான ஆஸ்கர் நாமினேஷனுக்கும் தகுதி பெற்றுள்ளது.

காதலுக்கு தடையாக மதம்,  சாதி, பணம் என்று எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. சில மேற்கத்திய நாடுகளில் நிறமும் ஒரு கூடுதல் தடையாக இருக்கிறது. வெள்ளையினத்தவர்கள் தங்களை உயர்வாக கருதிக் கொள்வதும் அதனாலேயே கருப்பினத்தவர்களை தாழ்வாக நோக்குவதுமே இந்தப் பாரபட்சத்திற்கு காரணம்.

வெள்ளையினத்தவர், கருப்பினத்தவர்களை திருமணம் செய்து கொள்ள முடியாது என்கிற சட்டம், அமெரிக்காவின் சில மாவட்டங்களில் அமலில் இருந்த காலக்கட்டம் அது. கலப்பின தலைமுறை உருவாகி விடக்கூடாது என்கிற பிற்போக்கு எண்ணமே காரணம்.  நீண்ட கால சட்டப் போரட்டங்களுக்குப் பின்னால் இந்தத் தடையை உடைத்தெறிகிறது ஒரு காதல் தம்பதி.

அப்படி அவர்கள் என்ன செய்தார்கள்? பார்ப்போம்.


***


மில்ட்ரெட் ஒரு கருப்பினப் பெண். திருமணத்திற்கு முன் கர்ப்பமாக இருப்பதை அறிகிறாள். அவளுடைய காதலன் ரிச்சர்ட் வெள்ளையினத்தைச் சார்ந்தவன். கட்டிடத் தொழிலாளியான அவன் தங்களின் கனவு வீட்டை கட்டுவதற்காக வாங்கிய நிலத்தை அவளுக்கு காட்டுகிறான். மில்ட்ரெட்டிற்கு அளவில்லாத சந்தோஷம். வெள்ளையினக் காதலர்கள், கருப்பினப் பெண்களை கை கழுவி விடுவதே அப்போதைய பொதுவான வழக்கம். ஆனால் ரிச்சர்ட் தன்னுடைய காதலில் உண்மையானவனாக இருக்கிறான்.

அவர்கள் வசிக்கும் மாநிலத்தில் வெள்ளையினத்தவர், கருப்பினத்தவர்களை திருமணம் செய்ய சட்டபூர்வமான தடை உள்ளதால் பக்கத்து மாநிலத்திற்கு சென்று திருமணம் செய்கிறார்கள். ஊருக்குத் திரும்பி வந்து ரகசியமாக தங்கள் வாழ்க்கையைத் துவங்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அவர்களைப் பற்றி எவரோ காவல்துறைக்கு சொல்லி விடுவதால் உள்ளூர் போலீஸ் வந்து கைது செய்கிறது. 'ஒழுங்காக பிரிந்து விடுங்கள்' என்கிற மிரட்டலுக்குப் பிறகு ஜாமீன் கிடைக்கிறது.

இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. ஆதிக்க மனோபாவமுள்ள வெள்ளையின நீதிபதி ஒரு குரூரமான தீர்ப்பைத் தருகிறார்.  'சட்டத்தை மீறியதற்காக இருவருக்கும் ஒரு வருட சிறைத் தண்டனை. இதைத் தவிர்க்க வேண்டுமென்றால் இருவரும்  இந்த மாநிலத்தில் 25 வருடங்களுக்கு இணைந்து வாழக்கூடாது.'

***

தான் பிறந்து வளர்ந்த மண்ணை விட்டு பக்கத்து மாநிலத்திற்கு துயரத்தோடு இடம் பெயர்கிறாள் மில்ட்ரெட். நண்பரின் வீட்டில் தங்குகிறார்கள். தன்னுடைய குழந்தை மாமியாரின் மேற்பார்வையில்தான் பிறக்க வேண்டும் என்கிற ஆசையை வெளிப்படுத்துகிறாள் மில்ட்ரெட். எனவே  ரகசியமாக தங்களின் சொந்த மாநிலத்திற்கு செல்கிறார்கள். குழந்தை பிறக்கிறது. ஆனால் அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கத் துவங்கும் முன்பே காவல்துறை அவர்களை கைது செய்கிறது.  மறுபடியும் வழக்கு. அபராதத்துடன் எச்சரித்து விடுவிக்கப்படுகிறார்கள். மறுபடியும் பக்கத்து மாநிலம்.

இவர்களுக்கு மேலும் இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. வாழ்க்கை ஒரு மாதிரியாக போய்க் கொண்டிருந்தாலும் மில்ட்ரெட்டின் மனதில் விலக்க முடியாத துயரம் உறுத்திக் கொண்டேயிருக்கிறது. தங்களுடைய சொந்த மாநிலத்தில் குழந்தைகளை சுதந்திரமாக வளர்க்க முடியவில்லையே என்று. தாங்கள் அப்படி என்ன பாவம் செய்து விட்டோம் என்று வருத்தப்படுகிறாள்.

உரிமைப் போராட்டம் ஒன்று அமெரிக்காவில் நடக்கிறது. அதைப் பார்த்த உத்வேகத்தில் தங்களின் பிரச்சினை குறித்து அமெரிக்க அட்டர்னி ஜெனரலுக்கு கடிதம் எழுதுகிறாள் மில்ட்ரெட். அது தொடர்பாக மில்ட்ரெட்டை ஒரு வழக்கறிஞர் சந்திக்கிறார். அவர் தரும் யோசனை சற்று விபரீதமாகத்தான் இருக்கிறது.

"நீங்கள் மறுபடியும் உங்களின் சொந்த மாநிலத்திற்கு திரும்பிச் செல்லுங்கள். போலீஸ் கைது செய்யும். அப்போது இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம். நிச்சயம் நல்ல வழி கிடைக்கும்"


***

ரிச்சர்ட்டிற்கு இந்த ஏற்பாட்டில் நம்பிக்கையில்லை. தேவையில்லாத ஆபத்தில் ஏன் சிக்க வேண்டும் என நினைக்கிறான். ஆனால் இந்த வழக்கு வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தும் என மில்ட்ரெட் தீர்மானமாக  நம்புகிறாள். அவர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்புகிறார்கள். இந்த வழக்கு பற்றி பத்திரிகைகள் பரபரப்பாக எழுதுகின்றன. மில்ட்ரெட்டை தேடி வந்து பேட்டி எடுக்கிறார்கள். ரிச்சர்ட் எரிச்சலுடன் ஒதுங்கி நிற்கிறான்.


பரபரப்பான நாட்களுக்குப் பிறகு வரலாற்று மகத்துவம் கொண்ட அந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளிக்கிறது. அதன்படி அமெரிக்காவின் எல்லா மாநிலங்களிலுமே கலப்பின திருமணங்களின் மீதான தடை நீக்கப்படுகிறது. மில்ட்ரெட்டின் நம்பிக்கைக்கும் ரிச்சர்ட்டின் உண்மையான காதலிற்கும் கிடைத்த வரலாற்றுப் பரிசு இது.

***

மில்ட்ரெட்டாக Ruth Negga அபாரமாக நடித்திருக்கிறார். விமர்சகர்களின் பாராட்டு மழை இவர் மீது பொழிகிறது. சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது இவருக்கு கிடைக்கலாம். எப்போதும் இறுக்கமான முகமும் பதட்டத்துடன் கூடிய உடல்மொழியுமாக  நடித்திருக்கும் Joel Edgerton-ன் நடிப்பும் சிறப்பு.

இந்த காதல் தம்பதியினருக்கு என்ன நடக்குமோ என்கிற பதட்டமும் கவலையும் நமக்கு தோன்றிக் கொண்டே இருக்குமளவிற்கான திரைக்கதையுடன் சிறப்பாக இயக்கியிருப்பவர் Jeff Nichols.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

No comments: