Sunday, November 17, 2019

பாவம் இந்த பாவனாக்கள்...
சமூகத்தின் இதர தொழில் பிரிவுகளோடு ஒப்பிடும் போது சினிமாவும் அரசியலும் விநோதமான விதிகளைக் கொண்டவை. ஏறத்தாழ சூதாட்டம்தான்.  அதிர்ஷ்டக் காற்று அடித்தால் பரமபத ஏணியில் ஒரே தவ்வில் உயர்வதைப் போலவே அதே வேகத்தில் கீழே விழுந்து விடக்கூடிய ஆபத்தைக் கொண்டவை. இந்த ஆட்டத்தின்  சதுரங்க விதிகளைப் புரிந்து கொள்ளாமல் இதில் அதிக காலம் தள்ள முடியாது. இதர துறைகளிலாவது உண்மையாக தொடர்ந்து உழைத்துக் கொண்டேயிருந்தால் ஒரு குறிப்பிட்ட உயரத்தை பிடித்து விட முடியும் என்கிற குறைந்தபட்ச உத்தரவாதமுண்டு. சினிமாவிலும் அரசியலிலும் இது அறவே இல்லை. அதிலும் சினிமாவில் பல வருடங்களாகவே துவக்க நிலையிலேயே இருந்து தலை நரைத்து  மறைந்து போனவர்கள் இருக்கிறார்கள். அரசியல் விருப்பத்தை அதிகார போதை இயக்குவதைப்  போலவே சினிமாத் துறையின் விருப்பத்தை பணம் மற்றும் புகழ் போதை இயக்குகிறது.

ஆண்களின் இருப்பே கேள்விக்குள்ளாகும் சினிமாத் துறையில் பெண்களின் நிலை என்ன? அவர்கள் இங்கு இழப்பதும் பெறுவதும் என்ன? பெண்களைப் பொறுத்தவரையில்  திறமை கூட  இரண்டாம்பட்சம்தான். அழகும் இளமையும் உள்ள பெண்களுக்கு சில கதவுகள் உடனே திறக்கின்றன. கூடவே சற்று அதிர்ஷ்டமும் அடித்து விட்டால் சில காலத்திற்கு அவர்கள்தான் ரசிகர்களின் கனவு தேவதை. வாய்ப்பு கிடைக்காத ஆயிரம் தேவதைகள் பின் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் சினிமாவில் நுழைவதற்கும் நுழைந்த பிறகு தங்களின் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கும் திறமை மற்றும் அழகைத் தவிர கூடுதலாக இன்னொரு தகுதியும் தேவையிருப்பதாக சொல்கிறார்கள். 'ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றை அடைய முடியும்' என்கிற அந்த தங்க விதி கட்டாயம் என்கிறார்கள். சினிமாவின் நுட்பங்களைப்  புரிந்து கொள்வதைக் காட்டிலும் சினிமாவுலகின் அடிப்படை அரசியலை புரிந்து கொள்வது அவசியமானது என்கிறார் அந்தத் துறையில் உள்ள நண்பரொருவர்.

சமூகத்தின் பெரும்பான்மையைப் போலவே சினிமாத்துறையும் ஆணாதிக்கப் பேர்வழிகளால், ஆண்மைய சிந்தனைகளால் நிரம்பி வழிவதில் ஆச்சரியமில்லை. ஆனால் இவர்கள் உருவாக்குகிற திரைப்படங்களில் ஒரு பக்கம் பெண்கள் தாயாக போற்றப்படுவார்கள். புரட்சி செய்வார்கள். இன்னொரு பக்கம் அவர்களின் உடலை முதலீடு செய்து நடைபெறுகிற சதை வியாபாரமும் ஆரவாரமாக நிகழும்.பெண்ணுடல் என்பது சினிமாவின் ஒரு முக்கியமான வணிக அங்கம். இந்த அச்சில்தான்  சினிமா ஒரு பகுதி சுழல்கிறது.

புகழையும் செல்வத்தையும் குறுகிய காலத்தில் எட்டிவிடக்கூடிய இந்தத் துறையில் பெண்கள் பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் இருக்கிறார்களா? பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பாலியல் சீண்டல்களிலிருந்து அவர்களை காக்கவும் 2013 -ல் Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal)  என்கிற சட்டம் ஏற்படுத்தப்பட்டது. கார்ப்பரேட் நிறுவனங்களின் வணிகத்திற்கு இணையாக நிகழும் சினிமாத்துறையில் இது தொடர்பான விதிமுறைகள் நடைமுறையில் பேணப்படுகின்றனவா?

எந்தவொரு நிறுவனத்திலும் அந்தந்த பணிக்கேற்ற தகுதியே முதன்மையாக பெண் பணியாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சினிமாத்துறையில் மட்டும் சில பல சம்பிரதாய விஷயங்களைக் கடந்தவுடன் 'அந்த' விஷயத்திற்கு சம்மதமா?' என்கிற வில்லங்கமான கேள்வி நேரடியாகவும் மறைமுகமாகவும் முன்வைக்கப்படுகிறது. அந்தக் கேள்விக்கு ஆம்/இல்லை என்று சொல்வதைப் பொறுத்துதான் வாய்ப்பு கிடைப்பதும் நிராகரிக்கப்படுவதும் நடக்கிறது என்கிறார்கள். இவ்வாறு பொதுமைப்படுத்துவது முறையற்றது என்றாலும் நியாயமான விதிவிலக்குகள் உண்டு என்றாலும்  துணை நடிகைகள் முதல் நாயகிகள் வரை  இது எழுதப்படாத ஒப்பந்தமாக, திறந்த ரகசியமாக நடைமுறையில் உள்ளதுதான் என்கிறார் சினிமாத் துறையில் இருந்த நண்பரொருவர். நல்ல சினிமாவை உருவாக்கி விட வேண்டும் என்று கனவு காணும்  படைப்பாளிளுக்கு இடையில் இது போன்ற வக்கிரப் பேர்வழிகளாலும் சினிமாவுலகம் நிறைந்திருக்கிறது.


சமீபத்தில் பாவனா என்கிற நடிகையின் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை சம்பவம், சினிமாத்துறையில்  பெண்களுக்கு உண்மையிலேயே பாதுகாப்பிருக்கிறதா, இல்லையா என்கிற முக்கியமான கேள்வியை எழுப்பியிருக்கிறது.

**


ஃபேஸ்புக்'கில் என்னுடைய சுயவிவர புகைப்படத்தை பொதுவாக அடிக்கடி நான் மாற்றுவதில்லை. பழைய புகைப்படமே நீண்ட காலமாக இருந்து வந்தது. இது குறித்து நண்பர்கள் சிலர் அலுத்துக் கொண்டே  அவ்வப்போது அறிவுறுத்துவார்கள். ஆனால் கடந்த வாரத்தில் ஒரு நாள் உள்ளிருந்து துயரம் பொங்க சட்டென்று தீர்மானித்து மாற்றினேன். அது நடிகை பாவனாவின் புகைப்படம்.  அவருக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்முறை சம்பவம் பற்றிய செய்தி  ஊடகங்களின் தலைப்புகளில் அப்போது துடித்துக் கொண்டேயிருந்தது. அதன் உள்ளே இருந்தது பெரும்பாலும் பரபரப்பும் ரகசியமான கிளர்ச்சியும். அதுவொரு உயிரின் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையின் வலி என்கிற பொருளில் பதிவானது சில இடங்களில் மட்டுமே.  இந்த பரபரப்பின் ஆயுள் சில நாட்கள் மட்டும் இருக்கும். பிறகு இது ஆறிய அவல் போல நிதானமாக மெல்லுவதற்கு உதவும்.

பாவனா நடித்த திரைப்படங்கள் எதையும் அதிகம் நான் பார்த்ததில்லை. அவரைப் பற்றிய விவரங்கள் கூட அதிகம் தெரியாது. என்றாலும் மிஷ்கின் இயக்கி அவர் நடித்த முதல் தமிழ் திரைப்படத்தில் மூக்கின் நுனியில் எப்போதும் கோபம் தயாராக இருக்கும் ஒரு துடிப்பான பாத்திரத்தை சிறப்பாக கையாண்டிருந்தார். தந்தை - மகள் உறவும் காதலன் -காதலின் நேசமும் அந்த திரைப்படத்தில் சிறப்பாக பதிவாகியிருந்தன. எனவே அது சார்ந்த ஓர் உற்சாக பிம்பமாக என் மனஅடுக்குகளில் பாவனா பதிவாகியிருந்தார். தன்னுடலின் மீது நிகழ்த்தப்பட்ட அநீதியைப் பற்றி துணிச்சலுடன்  பொதுவெளியில் பதிவு செய்ததற்காக அவரைப் பாராட்ட விரும்பிய அதே சமயத்தில் அதன் பின்னேயிருந்த மனஉளைச்சலையும் என்னால்  யூகிக்க முடிந்தது. ஏனெனில் இது போன்ற பிரச்சினைகளில் பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளியாக முன்நிறுத்தும் விசித்திரமான நீதிபதிகளைக் கொண்ட  சமூகமிது. பாவனாவின் துணிச்சலைப் பாராட்டியும்  தார்மீகமாக  ஆதரவு தர வேண்டியும் அவரது புகைப்படத்தை ஃபேஸ்புக் சுவரின் முகப்பில் வைத்தேன்.

இந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் தொடர்பாக  மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மலையாள திரைப்பட சமூகமே திரண்டு அவர் பின்னால் நின்றது. 'ஓர் ஆணாக நான் வெட்கித் தலைகுனிகிறேன்' என்றார் பிருத்விராஜ் சுகுமாரன். கேரள முதல்வர் பினராயி விஜயன் பாவனாவிடம் தொலைபேசியில் ஆறுதல் சொல்கிறார். 'குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள்' என்று ஊடகங்களின் முன் உறுதி தருகிறார். இந்த அதிசயங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் நடக்குமா என யோசித்துப் பார்க்கிறேன். இங்கு நடந்து கொண்டிருக்கும் அதிகாரப் போட்டி ஆபாசங்களின் இடையில் விவசாயிகள் உள்ளிட்ட மக்களின் ஆதாரமான பிரச்சினைகள் கூட புதைந்து நிற்கும் போது, இவற்றையெல்லாம் எவர் கவனிப்பார்கள்?***

சமூகத்தில் ஊறிப் போயிருக்கும் ஆணாதிக்க சிந்தனைகளின் காரணமாக,  பெண்களின் மீது நெடுங்காலமாக நிகழ்த்தப்படும் பல்வேறு வன்முறைகளின் வரலாற்றுத் துளியே பாவனாவின் மீது நிகழ்த்தப்பட்ட இந்தச் சம்பவம்.  அவர் நடிகை என்பதால் ஊடக வெளிச்சமும் ஆதரவும் உடனே கிடைத்தது. இதுவே ஒரு சாதாரண நபராக, எளிய, நடுத்தர வர்கக பின்னணியுடையவராக  இருந்திருந்தால் 'நாலு பேருக்காக' அச்சப்பட்டு தன் மீது நிகழ்த்தப்பட்ட அநீதியை தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டு மெளன அழுகையின் மூலம் இந்த துயரத்தைக் கடந்திருக்கக்கூடும், அல்லது குடும்பம், காவல்துறை, நீதிமன்றம் போன்ற சமூக நிறுவனங்களின் முன்னால் குற்றவாளியாக நின்று தன் தரப்பின் நீதிக்காக தானே கெஞ்சி மேலும் அவமானப்பட வேண்டியதாயிருக்கும்.

கடந்த பத்து வருடங்களில் பெண்களின் மீது நிகழும் குற்றங்கள் இரு மடங்காக உயர்ந்திருக்கின்றன என்று தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் (NCRB) வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரமொன்று தெரிவிக்கிறது. ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் பெண்களின் மீது நிகழும் வன்முறைச் சம்பவங்கள் பற்றிய புகார்கள் பதிவாவதாக இன்னொரு குறிப்பு தெரிவிக்கிறது. பதிவாகாத புகார்களையும் அனுமானித்தால்  இந்த எண்ணிக்கை அஞ்சக்கூடிய அளவிற்கு உயரும்.

சென்னை, மாங்காட்டைச் சேர்ந்த ஹாசினி என்கிற ஆறு வயது சிறுமி காணாமற் போனதாக முதலில் புகார் பதிவானது. பிறகான விசாரணையில் பக்கத்து வீட்டு இளைஞர் ஒருவரால் பாலியல் வன்முறைக்குள்ளாகி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியான விவரம் தெரிய வந்தது. எர்ணாவூரைச் சேர்ந்த மூன்று வயது ரித்திகா. முந்தைய வழக்கைப் போலவே காணாமற் போனதாக கருதப்பட்டு பிறகு இவருடைய பிணம் குப்பைத் தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. பக்கத்து வீட்டில் இருந்த பெண்மணி, நகையைத் திருடுவதற்காக  குழந்தையைக் கொன்று விட்டதாக சொல்லப்பட்டாலும் உண்மையான பின்னணி இன்னமும் அறியப்படவில்லை. இவையெல்லாம் சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்த, ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்ட குற்ற வழக்குகள் மட்டுமே.


***

இது போன்ற பாலியல் வன்முறை ஒரு சராசரி பெண் மீது நிகழ்த்தப்பட்டால் அதை அனுதாபத்துடன் நோக்கும் சமூகம், ஒரு நடிகை தொடர்பானது என்றால் அலட்சியமாகவும், கிளர்ச்சியான மனோபாவத்துடனும் பார்க்கிறது. இன்னும் சிலர் பல படி கீழே இறங்கி அநாகரிகமான சொற்களால் வக்கிரமாக வம்பு பேசத் துவங்கி விடுகின்றனர்.

பாவனா தொடர்பான செய்தி ஊடகத்தில் வந்த போது சமூக வலைத்தளங்களில் அது தொடர்பான சில உரையாடல்கள் இவ்வாறாக இருந்தன. "இது தொடர்பான வீடியோவோ, புகைப்படமோ வெளிவந்துடுச்சா" என்று நாக்கை சப்புக் கொண்டபடியே கேட்கிறார் ஒருவர். "காசு கூடுதலா தந்தா அவளே வந்திருக்கிறப் போறா" என்கிறார் இன்னொரு நியாயவாதி. "சினிமாவில் ஆபாசமான பாடல்களுக்கு வெட்கமின்றி ஆடும் நடிகைதானே?" என்று தர்க்கரீதியான கேள்வியை கறாராக முன்வைக்கிறார் இன்னொரு வெள்ளந்தி. மேற்கோள் காட்டக்கூடிய குறைந்தபட்ச மலினமான சொற்கள் இவை. இன்னும் பல எதிர்வினைகள் காது கூசும் அளவிற்கு ஆபாசமும் வக்கிரத்தனமும் கொண்டவை.

நடிகை என்பதைத் தாண்டி  நம் வீட்டிலுள்ள ஒரு பெண்ணைப் போலவே ரத்தமும் சதையும் உணர்ச்சிகளும் கொண்ட  இன்னொரு பெண்ணுக்கு ஏற்பட்ட வலியும் துயரமும்தானே என்று ஏன் அவர்களால் யோசிக்க முடியவில்லை? எது அவர்களைத் தடுக்கிறது?  நடிகை என்பதால் ஏற்படும் முன்தீர்மானம் சார்ந்த எண்ணங்களின் பிரதிபலிப்புகள் இவை. அதன் வழியாக வெளிப்படும் ஆணாதிக்க வக்கிரங்கள்.

சினிமாத்துறை என்றல்ல, எந்தவொரு துறையிலும் பணிபுரியும் பெண்களுக்கும் இங்கு பாதுகாப்பில்லை. பாலியல் ரீதியிலான சமிக்ஞைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எதிர்கொண்டு கடக்க வேண்டிய அவலமான சூழல்தான் நிலவுகிறது.   பெண்களை வெறும் உடலாக, பாலியல் துய்ப்பிற்கான அடையாளமாக மட்டுமே பார்க்கும் ஆண்மையச் சிந்தனையில் உழலும் அற்ப உலகம், நடிகைகளை இன்னமும் கூடுதலாக  துகிலுரித்து மகிழ்வதில் ஆச்சரியமேதுமில்லை. நடிப்புத் துறையும் இன்னபிற துறைகளைப் போலவே ஒரு தொழில்தான். ஆனால் அதில் இயங்கும் பெண்கள் எல்லோருமே பாலியல் அழைப்புகளுக்கு தயாராக இருப்பார்கள் என்று இவர்கள் நினைப்பது என்னமாதிரியான ஈன புத்தி?

பாலியல் தொழிலாளர்களாக இருந்தாலும் சரி, பாலியல் திரைப்படங்களில் நடிப்பவர்களாக இருந்தாலும் சரி, அவர்களின்  அனுமதியின்றி அவர்களின் உடலைத் தொடுவது, அத்துமீறுவது  சட்டரீதியான குற்றம் என்கிற அடிப்படை புரிதல் கூட இல்லை.  ஒரு நடிகை திரையில் நடிக்கும் கிளர்ச்சிகரமான காட்சிகளை வைத்து யதார்த்த வாழ்க்கையிலும் அவர்கள் அப்படியே இணங்குவார்கள், அந்த நோக்கில் அவர்களை அணுகலாம் என்று கருதிக் கொள்வது எத்தனை பெரிய அபத்தம்? திரையில் சாகசம் செய்யும் அவதார நாயகர்களை அப்படியே நம்பி அதிகாரத்தை கையளிக்கும் அதே பாமரத்தனம்தான்  இதிலும் வெளிப்படுகிறது.


***

நாடகங்களிலும் சினிமாவிலும் பெண் நடிகர்களே இல்லாத நிலையில் ஆண்களே பெண் வேடமிட்டு 'ஸ்த்ரீபார்ட்'டாக நடித்த காலம் ஒன்று இருந்தது.  சினிமாவில்  நடிப்பதென்பது ஒழுக்க மதிப்பீடுகளின் அடிப்படையில் எதிர்மறையானதாக கருதப்பட்டது. பிறகு இந்த நிலை மெல்ல மெல்ல மாறியது. என்றாலும் கூட ஒரு காலக்கட்டத்தில் நாயகிகளின் எண்ணிக்கை குறைவாகவும் தேவை அதிகமாகவும் இருந்தது.  முப்பது வயதைக் கடந்த  நாயகி கூட 'காலேஜ்ஜூக்கு போயிட்டு வர்றேன்' என்று மழலையில் கொஞ்சும் பழைய திரைப்படங்களின் காட்சிகளை இப்போது பார்த்தால் சிரிப்பு வந்தாலும் அந்தக் காலத்தில் இவற்றைப் பொருட்படுத்தாமல் ரசித்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று நிலைமை தலைகீழ். ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒரு புது நாயகி வந்து கொண்டேயிருக்கிறார். எவரென்றே நினைவு வைத்துக் கொள்ள முடிவதில்லை. பெயரையும் முகத்தையும் கவனிப்பதற்குள் விட்டில்பூச்சிகள் மாதிரி தோன்றி மறைந்து கொண்டேயிருக்கிறார்கள். சினிமாத்துறையில் குறுகிய காலத்தில் கிடைக்கும் புகழும் பணமுமே இதற்கு பிரதானமான காரணம். சில பெண் குழந்தைகள் ரேஸ் குதிரைகள்  மாதிரி இதற்கென்றே வளர்க்கப்படுகின்றன. பாட்டு,நடன வகுப்பு, தொலைக்காட்சிகளின் ரியாலிட்டி ஷோ என்று எந்தவகையிலாவது மஞ்சள் வெளிச்சத்தில் நனைந்தே ஆக வேண்டும் என்று குழந்தைகளை விட பெற்றோர்கள் ஆசைப்படுகின்றனர். முன்பெல்லாம் வறுமையான சமூகத்தைச் சார்ந்த பெண்கள்தான், ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள்' எனும் பணிக்கு வருவார்கள். ஆனால் கடந்த சில வருடங்களாக உயர்நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த பெண்கள் கூட தங்களின் பாக்கெட் மணிக்காக சினிமாத்துறைக்கு வருகிறார்கள். திரிஷா கூட இப்படியாக வந்து பிறகு நாயகியாக உயர்ந்தவர்தான். எனவே இது சார்ந்த போட்டி நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருக்கிறது. இத்தகைய சூழலை ஆணாதிக்க உலகம் தங்களின் பாலியல் சுரண்டல்களுக்காக நன்கு பயன்படுத்திக் கொள்கிறது.

'என் அப்பா இருந்திருந்தால் சினிமாவுக்கு வந்திருக்க மாட்டேன்,  என் அம்மா இருந்திருந்தால் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன்' என்பது ஜெயலலிதா ஒரு நேர்காணலில் கூறிய வாக்கியம். துணிச்சலின் அடையாளமாக 'இரும்புப் பெண்மணி' என்று அறியப்படும் அவருக்கே இம்மாதிரியாக சுயஇரக்கத்துடன் கூறக்கூடிய நிலைமை என்றால் இந்தத் துறையின் லட்சணங்களை புரிந்து கொள்ளலாம். பாவனாவின் சம்பவம் ஊடகங்களில் வெளியான பிறகு சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மியும் தனக்கேற்ப பாலியல் சீண்டல் அனுபவத்தை பொதுவெளியில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். செல்வாக்கான பின்புலத்திலிருந்து வருபவருக்கே இதுதான் நிலைமை.

***

ஒரு ஆண் நடிகர் சினிமாவில் சிரமப்பட்டு நுழைந்தாலும் நாயகராக தன்னை  நிலைநிறுத்திக் கொண்டால் அவரைச் சுற்றி குறைந்தபட்ச உத்தரவாதமான வணிக மதிப்பு உருவாகி விடுகிறது. அதை தக்க வைத்துக் கொண்டால் கூட போதும். ஆனால் நாயகிகளுக்கு இந்த நிலைமையில்லை. அவர்களின் சினிமா ஆயுள் குறுகியது. அவர்கள் நாயகிகளாக உருவாவதற்கு தயாரிப்பாளர், இயக்குநர், நாயகன் என்று பல வட்டங்களைத் தாண்டி வர வேண்டியிருக்கிறது. ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டால் ஒன்று அங்கிருந்து விலக நேர்கிறது அல்லது அக்கா, அண்ணி, அம்மா வேடங்களுக்கு நகர வேண்டியிருக்கிறது. மகளாக நடித்த சிறுமியே  வளர்ந்த பிறகு அதே நாயகனுக்கு இணையான நாயகியாக நடிக்கும் கொடுமையெல்லாம் இங்கு சகஜமாக இருக்கிறது. பார்வையாளர்களும் எவ்வித நெருடலும் சுரணையும் இல்லாமல் இவற்றையெல்லாம் ரசிக்கிறார்கள்.

சினிமாவில் நாயகிகளாக நடித்தவர்கள் அந்த அந்தஸ்தில் இருந்து வீழ்ச்சியடைய நேர்வது கொடுமையானதொன்று. அவர்கள் மறுபடியும் தங்களின் முந்தைய சராசரி பொருளியல் வாழ்க்கைக்கு திரும்ப முடியாது. எனவே தங்களின் பொருளாதார அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ள பல சமரசங்களில் ஈடுபடுகிறார்கள். தொலைக்காட்சிக்கு செல்கிறவர்கள் ஒருபக்கம் என்றால் அந்தப் போட்டியை எதிர்கொள்ள முடியாத, புகழும் வனப்பும் இல்லாத நடிகைகள் பாலியல் தொழிலாளிகளாக மாறுகிறார்கள். பின்பு அவர்களே அந்தத் தொழிலை ஒருங்கிணைக்கிறவர்களாகவும் மாறுகிறார்கள். இதுவும் ஆணாதிக்க உலகினருக்கு நல்ல வாய்ப்பாக அமைகிறது.

நடிகையாக இருந்த காலத்தில் சம்பாதித்த பணத்தையெல்லாம் உறவினர்களை நம்பி ஏமாந்த நடிகைகளும் உண்டு. இம்மாதிரியானவர்களில் சிலர் பாதுகாப்பின்மை உணர்வு காரணமாக மனஉளைச்சல் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நடிகைகள் தொழிலதிபர்களை தேடி திருமணம் செய்து கொள்ளும் செய்திகளைப் பார்த்து நாம்  கிண்டலடிக்கிறோம். ஆனால் அதன் பின்னால் உள்ள பரிதாபத்தை கவனிக்கத் தவறி விடுகிறோம்.  அதுவரையான சொகுசுகளிலிருந்து கீழே இறங்கவும் முடியாமல் மேலே நகரவும் முடியாமல் இருக்கும் நிலைமையைச் சமாளிக்கவே பணம் கொண்ட தொழிலதிபர்களை மணந்து கொள்கிறார்கள். செல்வந்தர்களுக்கும் தானொரு நடிகையை அடைந்து விட்டோம் என்கிற கிளர்ச்சி சார்ந்த திருப்தி ஏற்படுகிறது. ஆனால் இவ்வாறு நிகழும் பெரும்பாலான திருமணங்கள் பரஸ்பர ஏமாற்றத்தையும் சலிப்பையும் அடைந்தவுடன் உடைந்து விடுகின்றன. நடிகைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறி விடுகிறது. இவ்வாறான நிலைமைக்கு செல்லாமல் புத்திசாலித்தனமாக தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் பெண்கள் வெகு சிலரே.

சினிமாத்துறை என்பது பெரும் நிதிச்சுழற்சியுடன் நிகழும் தொழில் என்பதால் பெரும்பாலும் அரசியல்வாதிகளும் மாஃபியா கும்பலும் இணைந்த கண்ணிகளால் இயங்குகிறது. தாவூத் இப்ராஹிம் போன்ற சர்வதேச கொள்ளைக்காரர்களிடம் மும்பை சினிமாவுலகம் சிக்கிக் கொண்டிருப்பது மாதிரியான சூழல் மெல்ல தென்னிந்தியாவிற்கும் பரவுகிறது. மட்டுமல்லாமல்  தாங்கள் அறிமுகம் செய்யும் நாயகிகளை குறிப்பிட்ட காலத்திற்கு தங்களின் கட்டுப்பாட்டிற்குள்ளேயே வைத்துக் கொள்ளும் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் இருப்பதாகவும் ஒரு தகவல் உண்டு. அது சார்ந்த சர்ச்சைகள் ஊடகங்களில் அவ்வப்போது வெடிக்கின்றன.


***

நடிகை பாவனாவிற்கு நிகழ்ந்த பாலியல் வன்முறைக்கு பின்னணியாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அந்தப் பெண்ணிற்கு இழைக்கப்பட்ட அநீதியின் துயரத்தை எவற்றாலும் மழுப்பி விட முடியாது. பெண்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்கிற நோக்கில் கொண்டுவரப்பட்ட சட்டமானது, இதர துறைகளில் மட்டும் என்றல்லாமல்் சினிமாத்துறையிலும் கறாராக அமல்படுத்தப்படவும் கண்காணிக்கப்படவும் வேண்டும். பெண்களிடமிருந்து வரும் புகார்களை விசாரிக்க வேண்டிய இடங்களில்  பெரும்பாலும் ஆண்களே இருப்பதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா என்பது கேள்விக்குரியதாக இருக்கும் நிலை மாற வேண்டும்.

இத்தனை கோடிகள் புழங்கும் சினிமாத்துறையானது அடிப்படையில் ஒழுங்குப்படுத்தப்படாததாக இருக்கிறது. பெரும்பாலான இதர பணிகளைப் போல ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அல்லாமல் இயங்கும் திரைத்துறையில் பெண்களுக்கு அடிப்படையான பாதுகாப்பைத் தரும் நடைமுறைகளை ஏற்படுத்த வேண்டும். படப்பிடிப்புத் தளங்களிலும் காட்சிகளை உருவாக்கும் விதங்களிலும் அவர்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். அவர்களின் விருப்பத்திற்கு மாறான காட்சிகளுக்காக வற்புறுத்தப்படக்கூடாது.

பெரும்பாலான சினிமாக்கள்  இங்கு ஆண்மைய சிந்தனைகளால், காட்சிகளால்தான்  உருவாகின்றன. நாயகனுக்கு முக்கியத்துவம் தரும் அதே நேரத்தில் நாயகியை புத்திசாலியாக அல்லாமலும் கவர்ச்சிப் பதுமைகளாக மட்டுமே சித்தரிக்கும் நிலை மாற வேண்டும். ஆண் நடிகர்களை சுற்றி மட்டுமே இயங்கும் வணிகமானது  பெண்களுக்கான வணிக மதிப்பு கொண்டதாகவும் மாற வேண்டும். பார்வையாளர்களும் இதற்கு ஆதரவு தர வேண்டும். கலை, இலக்கியம், கல்வி என்று ஒவ்வொரு பிரிவிலும் பெண்களின் மதிப்பும் முக்கியத்துவமும் அதிகரித்தால்  பாவனாக்களிடம் மீதான வன்முறைகள் வருங்காலத்தில் மட்டுப்படக்கூடும். இந்த அடிப்படையான விஷயங்களில் மாற்றம் ஏற்படாமல் பெண்கள் பாதுகாப்பு குறித்து வெறுமனே கோஷம் எழுப்பிக் கொண்டிருப்பதும் கவலையடைந்து கொண்டிருப்பதும் வீணே.  இவை நிகழாமல் ஒவ்வொரு மார்ச் 8 அன்றும் 'பெண்கள் தினத்தை' கொண்டாடுவது வெறும் சம்பிரதாயமாகவே எஞ்சும்.(உயிர்மை இதழில் பிரசுரமானது)

suresh kannan

No comments: