Friday, November 08, 2019

Arctic | 2018 | Iceland | இயக்குநர் - Joe Pennaஅயல் திரை  - 12

பனிப்பிரதேசத்தில் ஒரு தனிமைப் பயணம்இந்த திரைப்படத்தின் கதையையும் வசனங்களையும் ஒரு குழந்தையின் உள்ளங்கையில் எழுதி விடலாம். அப்பவும் இடம் மீதம் இருக்குமளவிற்கு பிரம்மாண்டமான மெளனத்தால் நிரம்பிய படம் இது. கதையின் பின்னணி அப்படி.

‘Survival film’ என்கிற வகைமையில் இதுவரை நிறைய திரைப்படங்கள் உருவாகியிருக்கின்றன.  மனித நடமாட்டம் அற்ற தனிமையான தீவில் அல்லது அப்படியொரு பிரதேசத்தில் மாட்டிக் கொண்டு அல்லாடி உயிர் தப்புவதற்காக மூச்சுத் திணறுகிறவர்களின் கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படங்கள். ‘ராபின்சன் குருசோ’ இதன் முன்னோடி திரைப்படம் எனலாம். ‘டாம் ஹாங்க்ஸ்’ நடித்த ‘Cast Away’ இந்த வகையில் பிரபலமானது.

2018-ல் வெளிவந்த ‘Arctic’ இந்த வகைமையைச் சேர்ந்ததுதான். கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதோடு "Golden Camera" பிரிவில் போட்டியிடும் தகுதியையும் பெற்றிருந்தது.

**


ஆர்க்டிக் பகுதி பற்றி நமக்குத் தெரியும். பூமியின் வடமுனையில் அமைந்துள்ளது. இதன் தென்முனையில் இருப்பது அண்டார்ட்டிக்கா. பனிக்கட்டிகளால் சூழ்ந்துள்ள இந்தப் பிரதேசங்களில் மிகுந்த சிரமத்திற்குள்தான் மனிதர்கள் வாழ முடியும்.

விமானவிபத்து காரணமாக, இப்படிப்பட்ட ஆர்க்டிக் பகுதியில் சிக்கிக் கொள்கிறான் ‘ஓவர்கார்ட்’ என்கிற, ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆசாமி. அவனை மீட்பதற்காக எவரும் வருவதில்லை. அவன் அங்கு மாட்டிக் கொண்டிருக்கிறான் என்பது வெளியுலகத்திற்கு தெரியுமா என்பதே கூட தெரியாத நிலைமை.

என்றாலும் அவன் நம்பிக்கையை இழப்பதில்லை. அவனுடைய அன்றாட பணி கச்சிதமாகத் திட்டமிட்ட வகையில் இருக்கும். காலையில் எழுந்தவுடன் பனிக்கட்டியின் அடியில் வைக்கப்பட்டிருந்த தூண்டிலில் ஏதாவது மீன்கள் சிக்கியிருக்கிறதா என்று பார்த்து அவற்றை பத்திரப்படுத்த வேண்டியது. தன்னிடமிருக்கும் இயந்திரத்தின் மூலம் அருகில் ஏதேனும் விமானம் அல்லது ஹெலிகாப்டரின் நடமாட்டம் இருக்கிறதா என்று சோதித்துப் பார்ப்பது, பனிக்கரடி ஏதேனும் தூரத்தில் தென்பட்டால் ஓடிவந்து பழுதடைந்திருக்கும் விமானத்திற்குள் வந்து பதுங்கிக் கொள்வது, உடல் முழுவதும் போர்த்தி பாதுகாத்துக் கொண்டு இரவில் உறங்குவது.

அந்தப் பகுதியில் தற்செயலாக வரும் வானூார்தியின் வழியாக என்றாவது ஒருநாள் இங்கிருந்து தப்பிச் சென்று விட முடியும் என்கிற நம்பிக்கையை இழக்காமல் இருக்கிறான் அவன். ஒரு நாள், அப்படியொரு அதிசயமும் நிகழ்கிறது. இவன் சுழற்றிக் கொண்டிருக்கும் இயந்திரத்தில் அருகில் ஏதோவொரு வானூர்தி இருப்பதற்கான சமிக்ஞைகள் தெரிகின்றன. ஆம்.. அது உண்மைதான். தூரத்தில் ஒரு ஹெலிகாப்டர் பறந்து வந்து கொண்டிருக்கிறது. ஓவர்கார்ட் மிகவும் மகிழ்ச்சியடைகிறான். ஆரஞ்சு வண்ணப்புகையை உருவாக்கி அவர்களின் கவனத்தைக் கவர முயற்சிக்கிறான்.

ஆனால் துரதிர்ஷ்டம் இவனை விடுவதாக இல்லை. அப்போது அடித்துக் கொண்டிருக்கும் பனிப்புயலில் சிக்கி ஹெலிகாப்டர் பனியில் விழுந்து விபத்திற்கு உள்ளாகிறது. பரபரப்புடன் அருகில் சென்று பார்க்கிறான். தலையில் அடிபட்டு விமானி இறந்து கிடக்க, அருகிலிருக்கும் ஒரு பெண், இடுப்பில் ஏற்பட்ட பயங்கரமான காயத்துடன் குற்றுயிராக கிடக்கிறாள். ரத்தம் வெளியேறாதவாறு முதலுதவி செய்து அவளை மெல்ல தன்னுடைய விமானத்திற்குள் அழைத்துச் செல்கிறான்.

எப்போதாவது ஒருமுறை சுயநினைவை அடையும் அவள் பெரும்பாலும் மயக்கத்திலேயே இருக்கிறாள். ‘எல்லாம் சரியாகி விடும்” என்கிற நம்பிக்கையான வார்த்தைகளைச் சொல்லி அவளைக் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறான். வேறு எந்த வானூர்தியும் அங்கு வராமல் போகவே, காயமடைந்திருக்கும் பெண்ணை ஒரு தள்ளுப் படுக்கையில் வைத்து பனிப்பாறைகளின் வழியாக நகர்த்திச் செல்கிறான். கையில் வரைபடம் இருந்தும் பாதைகள் அவனைக் குழப்புகின்றன. பனிக்கரடியின் தாக்குதல் உள்ளிட்ட சில சிக்கல்களை வேறு அவன் சமாளிக்க வேண்டியிருக்கிறது.

ஓவர்கார்டும் அந்த இளம் பெண்ணும் பிழைத்தார்களா என்பதை மீதமுள்ள காட்சிகள் மெளனம் நிரம்பிய பரபரப்புடன் விவரிக்கின்றன.

**

மனிதன் சமயங்களில் தனிமையை விரும்புகிறவனாக இருந்தாலும் அடிப்படையில் அவன் இதர மனிதர்களுடன் கூடிவாழ்கிற சமூக விலங்கு என்பதை இந்த திரைப்படம் மிக அழுத்தமாக உணர்த்துகிறது. அது மட்டுமில்லாமல் எந்தவொரு சிக்கலான தருணத்திலும் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது என்கிற செய்தியையும் மிக ஆழமாக நமக்குள் கடத்துகிறது. இதையும் தாண்டிய விஷயமும் ஒன்றுண்டு.

‘தானே எப்படி மீள்வது?’ என்பது புரியாத நிலைமையில் இருக்கும் ஓவர்கார்ட், தன்னைப் போலவே இந்தச் சிக்கலில் வந்து மாட்டிக் கொண்ட, சுயநினைவில் இல்லாத இளம்பெண்ணை மிகுந்த சிரமங்களுக்கு இடையில் காப்பாற்றி அழைத்துச் செல்கிறான். கால்கள் புதையும் பனியில் ஒருவர் நடந்து செல்வதே சிரமமானது எனும் போது, தள்ளுப்படுக்கையில் அவளை இழுத்துச் செல்கிறான். மேடான பகுதியில் அந்தப் பெண்ணை ஏற்ற முடியாத சிரமங்கள் ஏற்பட்டாலும் அவளைக் கைவிடாத அவனுடைய நல்லியல்பு நம்மைப் பிரமிக்க வைப்பதோடு அது தொடர்பான செய்தியையும் நமக்குள் கடத்துகிறது.

ஓவர்கார்ட் என்னும் பாத்திரத்தில், டென்மார்க்கைச் சேர்ந்த நடிகரான Mads Mikkelsen மிக அபாரமாக நடித்துள்ளார். ‘The Hunt’ உள்ளிட்ட திரைப்படங்களுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளவர் இவர். மூச்சைத் திணற வைக்கும் தனிமையின் பயங்கரத்தில் ‘தான் எப்படியாவது மீட்கப்படுவோம்’ என்று இவர் காட்டுகிற பொறுமை வியக்க வைக்கிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகளை இவரது அபாரமான நடிப்புதான் தாங்கிப் பிடிக்கிறது.

ஒரு கட்டத்தில், காயம் அடைந்திருக்கும் பெண்ணிடமிருந்து எவ்வித அசைவும் இல்லாததால், ‘அவள் இறந்து விட்டாள்’ என்று கருதி விட்டு விட்டு நகர்கிறார். ஆனால் பனிப்பாறையின் இடுக்கிற்குள் இவர் விழுந்து கால் சிக்கிக் கொண்டு மேலேறி வருவதற்குள் பெரும்பாடாகி விடுகிறது.

**

இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குநரான Joe Penna. பிரேசில் நாட்டைச் சேர்ந்த இவர் அடிப்படையில் ஓர் இசைக்கலைஞர். தனது இசை ஆல்பங்களின் மூலம் இணையத்தில் மிகுந்த புகழைப் பெற்றுள்ளார். 400 மில்லியன் பேர் இவரது வீடியோ ஆல்பங்களைப் பார்த்து ரசித்திருப்பதாக கூறப்படுகிறது. தொலைக்காட்சி விளம்பரங்களையும் குறும்படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.

‘ஆர்க்டிக்’ இவர் இயக்கிய முதல் திரைப்படம் என்றாலும் சர்வதேச திரைப்படத்திற்கான தரத்தையும் உள்ளடக்கத்தையும் கொண்டிருக்கிறது. திரைப்படம் என்பது காட்சிகளின் வழியாக விவரிக்கப்பட வேண்டியதொரு ஊடகம் என்னும் அடிப்படையை நிரூபிக்கிற விஷயத்தை ஜோ பென்னா சாதித்துள்ளார்.

காட்சிகளையே சார்ந்துள்ள இவ்வாறான திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவும் பின்னணி இசையும் மிக அவசியமானது. Tómas Örn Tómasson-ம், Joseph Trapanese-ம் தங்களின் பங்களிப்பை மிகச் சிறப்பாக தந்துள்ளனர். ஓவர்கார்டின் தனிமையும் அவர் எதிர்கொள்ளும் சிக்கல்களும் பார்வையாளர்களிடம் உணர்வுபூர்வமாகவும் மிகையின்றியும் கடத்தப்பட்டுள்ளன.

உயிர்வாழ்வதற்கான தீராத ஏக்கத்தையும் அதற்கான போராட்டத்தையும் சிக்கலான சூழலிலும் பிறர்க்கு உதவும் தியாகத்தையும் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறது, இந்த ‘ஆர்க்டிக்’ திரைப்படம். 


(குமுதம் தீராநதி -  JUNE  2019 இதழில் பிரசுரமானது) 


suresh kannan

No comments: