Saturday, November 30, 2019

சய்ராட் (மராத்தி திரைப்படம்): கலைக்கப்பட்ட கூடு


உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை நான் இதுவரை பார்த்திருக்கும் சினிமாக்களில் உதிரிப்பூக்கள் போன்று அமைந்த மிகச்சிறந்த உச்சக்காட்சியைக் கொண்ட  (Climax)  திரைப்படம் என தோராயமாக இருபது, இருபத்தைந்து திரைப்படங்களைச் சொல்ல முடியும். அதில் சமீபமாக ஆனால் மிக அழுத்தமாக வந்து இணைந்து கொண்டது மராத்திய திரைப்படமான 'சய்ராட்'. இதன் உச்சக்காட்சியைக் கண்டு நான் தன்னிச்சையாக வாய்விட்டு அழுதேன். அந்த அளவிற்கு உணர்வுபூர்வமாக பார்வையாளர்களை கலங்கடித்த கிளைமாக்ஸ் காட்சியைக் கொண்டது.

பிறநாடுகளில் உருவாகும் சிறந்த சினிமாக்களைக் கூட சற்று முயன்றால் காணக்கூடிய சூழலில் இந்தியாவின் இதர  சில மாநிலங்களில் உருவாகும் திரைப்படங்களைப் பற்றிய விழிப்புணர்வோ அதைப் பார்ப்பதற்கான வாய்ப்புகளோ தமிழகத்தில் குறைவு என்பது ஒரு சமகால முரண்நகை. இந்த சூழலை ஓரளவிற்கு கலைத்துப் போடுவதில் திரைப்பட விழாக்கள், தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் குறிப்பாக  இணையத்தின் பங்கு முக்கியமானது. அதன் எதிரொலிகளில் ஒன்றாக  மராத்தி மொழியில் உருவாகும் சிறந்த திரைப்படங்களைப் பற்றிய உரையாடல்கள் இங்கு பெருகத் துவங்கியிருக்கின்றன.

2015-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதிற்காக இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட 'கோர்ட்' என்கிற மராத்தி திரைப்படம் இங்கு  பரவலான கவனத்தையும் பாராட்டையும் பெற்றது. இதைப் போலவே நாகராஜ் மஞ்சுளே என்கிற இயக்குநரின் முதல் திரைப்படமான ஃபன்றி என்கிற மராத்திய திரைப்படம் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டு விருதுகளைப் பெற்றது அல்லாமல் இந்தியாவின் தேசிய விருதையும் பெற்றது.

இதே இயக்குநரின் உருவாக்கத்தில் சமீபத்தில் வெளிவந்துள்ள 'சய்ராட்' என்கிற மராத்திய திரைப்படம் அவரது முந்தைய திரைப்படத்தை விடவும் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. ரூ.100 கோடி வர்த்தகத்தை கடந்த முதல் மராத்திய திரைப்படம் எனும் பெருமையைப் பெற்றுள்ள இந்த திரைப்படம் விரைவில் தமிழ் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளில் தயாரிக்கப்படவுள்ளது. சிறப்புக் காட்சியாக இது சென்னையில் திரையிடப்பட்டது. ஒரு மராத்திய திரைப்படத்திற்காக மல்டிபெக்ஸ் பார்வையாளர்கள் பெருமளவில் கூடியது அபூர்வமான, ஆரோக்கியமான காட்சியாக இருந்தது.

'சய்ராட்' திரைப்படத்தின் பாடல் காட்சிகள் முதலில் வெளியான போது அது வெகுசன சினிமாவின் குறிப்பாக காதல் திரைப்படங்களின் அடையாளத்தைக் கொண்டிருந்த போது எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. ஃபன்றி போன்று ஒரு முக்கியமான தலித் சினிமாவை உருவாக்கிய இயக்குநர்  அடுத்த திரைப்படத்திலேயே மைய நீரோட்ட சினிமாவிற்கு நகர்ந்து விட்டாரே என்று கவலையாக இருந்தது. ஆனால் அப்படியாவது அவர் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளட்டும் என்கிற ஆறுதலும் கூடவே எழுந்தது.

ஆனால் சய்ராட்  திரைப்படத்தை பார்த்து முடித்தவுடன் அந்தக் கவலையெல்லாம் மறைந்து விட்டது.  மைய நீரோட்ட சினிமாவின் வடிவத்திலேயே சாதிய வன்முறையின் கொடூரத்தை பார்வையாளர்களுக்கு மிக அழுத்தமாக சொல்ல முடியும் என்கிற வகையில் இத்திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. சாதி ஆவணக்கொலைகள் அதிகம் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்தியாவில் இது போன்ற திரைப்படங்களின் தேவை அவசியமானது.

***


மராத்திய மாநிலத்தில் உள்ள சாதியப்பாகுபாடுகள் நிறைந்திருக்கும் ஒரு கிராமம். பர்ஷ்யா என்கிற இளம் மாணவன் கல்வியில் சிறந்தவனாக இருக்கிறான். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன். அவனுடைய மீனவக் குடும்பம். ஆதிக்க சாதியைச் சார்ந்த அர்ச்சி என்கிற சகமாணவியின் மீது காதல்வயப்படுகிறான். அவளுடைய முகத்தை ஒரு நொடி பார்ப்பது கூட அவனுக்கு பரவசமாக இருக்கிறது. நாளுக்கு நாள் இந்த போதை அவனுக்குள் ஏறிக் கொண்டேயிருக்கிறது.

இவனையும் மற்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த இளைஞர்களைப் போலவே உயர்வு மனப்பான்மையுடன் கையாளும் நாயகி ஒரு கணத்தில் தாமும் காதலில் விழுகிறாள். பர்ஷ்யாவின் நண்பர்கள் உதவியுடன் இந்தக் காதல் வளர்கிறது. ஒரு நிலையில் இவர்களின் நெருக்கம் அர்ச்சியின் குடும்பத்திற்கு தெரிந்து விட பர்ஷ்யாவின் குடும்பத்தை மிரட்டி அவனை ஊரை விட்டே வெளியேறச் செய்கின்றனர். அர்ச்சியை பார்க்க முடியாமல் தவித்துப் போகிறான் பர்ஷ்யா. இவனைப் போலவே எதிர்முனையில் தத்தளிக்கும் அர்ச்சி சில பல சாகசங்களுக்குப் பிறகு எப்படியோ தப்பித்து வந்து விட இருவரும் இன்னொரு மாநிலத்திற்கு செல்கிறார்கள்.

ஒரு பெருநகரத்திற்குள் கிராமப்புறத்தைச் சார்ந்த இளம் ஆணும் பெண்ணும் எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்களையெல்லாம் எதிர்கொள்கிறார்கள். விளிம்புநிலை சமூகத்தைச் சார்ந்த ஒரு பெண் இவர்களுக்கு உதவுகிறாள். அழுக்கும் நாற்றமும் சூழ்ந்திருக்கும் அந்த இடத்தில் தங்க பணக்கார சூழலில் வளர்ந்த அர்ச்சிக்கு சிரமமாக இருக்கிறது. என்றாலும் இருவரும் அந்தச் சூழலுக்கேற்ப தங்களைப் பொருத்திக் கொள்ளத் துவங்குகிறார்கள். பொருளாதார ரீதியாக அவர்களின் வளர்ச்சி சற்று வளரத் துவங்கினாலும் இளம் தம்பதியினருக்கேயுள்ள ஊடலும் சச்சரவும் வருகிறது. என்றாலும் அன்பு என்கிற வலுவான கண்ணி அவர்களை பிரிய விடாமல் வைத்திருக்கிறது. அவர்களின் இடையேயான அன்பிற்கு ஓர் இனிய எதிர்வினையாக குழந்தையும் பிறந்து சொந்த வீடு வாங்குமளவிற்கு முன்னேறுகிறார்கள்.இந்த மகிழ்ச்சியான செய்தியை அர்ச்சி தொலைபேசியில் தன் தாய்க்கு தெரிவிக்கிறாள்.

பிறகு வருகிறது அந்த துரதிர்ஷ்டமான நாள்.

பக்கத்து வீட்டுக்காரப் பெண்  இவர்களின் குழந்தையை கடைக்கு அழைத்துச் செல்கிறார். குழந்தையை அனுப்பி விட்டு  வீட்டு வாசலில் மகிழ்வுடன் கோலம் போட்டுக் கொண்டிருக்கும் அர்ச்சி வந்திருக்கும் விருந்தினர்களைப் பார்த்து திகைப்பும் மகிழ்ச்சியும் அடைகிறாள். வந்திருப்பது அவளுடைய அண்ணனும் பிறந்த ஊரிலுள்ள சில ஆட்களும். அவர்களை வீட்டிற்குள் வரவழைத்து உட்கார வைக்கிறாள். சில  நிமிடங்கள் கழித்து காய்கறிக்கூடையுடன் உள்ளே நுழையும் பர்ஷ்யா அவர்களைப் பார்த்து சற்று திகைப்படைந்து சமையல் அறைக்குள் செல்கிறான். மறுக்கும் அவனிடம் வலுக்கட்டாயமாக தேநீர் தந்த விருந்தினர்களுக்கு தரச் சொல்கிறாள் அர்ச்சி.

அடுத்த காட்சி. இதுதான் அந்த உச்சக்காட்சி.

திரும்பி வந்த பக்கத்து வீட்டுக்காரப் பெண்மணி இவர்களின் குழந்தையை வீட்டு வாசலிலேயே விட்டுச் செல்கிறார். குழந்தை வீட்டுக்குள் நுழைகிறது. எதையோ பார்த்து திகை்கிறது. பிறகு  திகிலடைந்து அழுகிறது.  திரும்பி வாசலை நோக்கி தெருவில் அழுது கொண்டே நடக்கிறது.

அதன் பிஞ்சுக்கால்களில் படிந்துள்ள ரத்தக்கறையின் மூலமாக தரையில் உருவாகும் தடயங்கள் நிகழ்ந்த  பயங்கரத்தை பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறது. ஒரு வார்த்தை கூட பேச துணிவில்லாத துக்கத்துடன் பார்வையாளர்கள் அரங்கிலிருந்து கனத்த மெளனத்துடன் வெளியேறுகிறார்கள். அந்த அப்பாவியான இளம் தம்பதியினருக்கான அஞ்சலி போல அமைகிறது அவர்களின் அமைதி.

***

நாகராஜ் மஞ்சுளே இதன் பெரும்பான்மையான காட்சிகளை வெகுசன திரைப்படங்களீன் சாயிலில் உருவாக்கியிருந்தாலும் தனது நுட்பமான சித்தரிப்புகளின் மூலம் இதையொரு நல்ல மாற்று சினிமாவாக ஆக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார். குறிப்பாக இதன் உச்சக்காட்சி ஒரு சிறுகதையின் அபாரமான திருப்பம் மிக வலுவாக பார்வையாளர்களின் முகத்தில் அறைகிறது. இவரது முந்தைய திரைப்படமான ஃபன்றியில் சாதிய நோக்கில் தம்மை துன்புறுத்தும் கூட்டத்தின் மீது சிறுவன் எறியும் கல் காமிராவை நோக்கி விரைந்து வந்த உறையும். அதை விடவும் ஒரு வலுவான அடியை இதில் தந்திருக்கிறார் நாகராஜ் மஞ்சுளே.

தமது சாதியின் மீதுள்ள வெறியால், கவுரவத்தினால் சாதியை  மீறி திருமணம் செய்யும் தங்கள் வாரிசுகளின் வாழ்வையே குரூரமாக கலைத்துப் போடும் ஆணவக்காரர்களின் மீதான அடியாக இது விழுகிறது.

பர்ஷயா மற்றும் அர்ச்சிக்குள் மலரும் காதல் தொடர்பான சித்தரிப்புகள் மிகுந்த அழகியலுடன் நம்பகத்தன்மையுடனும் இருக்கின்றன. அந்த உச்சக்காட்சியில் நிகழவிருக்கும் கொடுமை பற்றிய தடயமே பார்வையாளர்களுக்கு வராமல் படத்தின் பிற்பாதி காட்சிகளை இயக்குநர் சாமர்த்தியமாக நகர்த்திச் சென்றாலும் இவர்களின் எளிய, அழகான வாழ்விற்கு ஏதேனும் ஆகி விடுமோ என்று மெலிதாக பார்வையாளர்கள் கவலை கொள்ளும் நுட்பமும் சாத்தியமாகியிருக்கிறது.

 'திடீரென்று  வெடிகுண்டு வெடிப்பதை காட்டுவது சஸ்பென்ஸ் அல்ல, மாறாக ஒரு வெடிகுண்டு இருப்பதை முதலில் காட்டி விட்டு அது எப்போது வெடிக்கும் என்று பார்வையாளர்களை இருக்கை நுனிக்கு அழைத்து வருவதுதான் சஸ்பென்ஸ்' என்று ஹிட்ச்காக் சொல்வது போல அர்ச்சி குடும்பத்தின் சாதிய பிடிப்புள்ள பயங்கரவாதத்தை முதலிலேயே நிறுவி விடுவதால் இந்தப் பதட்டம் தன்னிச்சையாகவே பார்வையாளர்களுக்கு பிற்பகுதியில் வந்து கொண்டேயிருக்கிறது.

பர்ஷயா மற்றும் அர்ச்சி என்கிற பிரதான பாத்திரங்களாக நடித்திருக்கும் இருவருமே புதுமுகங்களாக இருந்தாலும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக அர்ச்சியாக நடித்திருக்கும் ரிங்க்கு ராஜ்குருவின் நடிப்பு அபாரம். ஆதிக்கசாதியைச் சார்ந்த குடும்பத்தில் பிறந்த உயர்வு மனப்பான்மையுடன் எளிய மனிதர்களை திமிருடன் அணுகுவதும் பிறகு இயல்பாக பர்ஷயாவின் மீது காதல் வயப்படுவதும், காதலனை காப்பாற்றுவதற்காக ரெளத்ரம் கொள்வதும் பின்பு இடம் பெயர்ந்த பிறகு அங்குள்ள வறுமையான சூழ்நிலை, குடும்பத்தைப் பிரிந்த ஏக்கம், கணவனுடன் சச்சரவு, அதைக் கடந்த நிறைவு என ஒவ்வொரு பகுதியிலும் அற்புதமாக  நடித்திருந்தார். இதை சாத்தியப்படுத்திய இயக்குநரின் பங்கு குறிப்பிடத்தக்கது.

மிக குறிப்பாக ஒரு காட்சியை சொல்ல வேண்டும். காதலனுடன் இணைந்த சந்தோஷம் ஒருபுறம் இருந்தாலும் இன்னொரு புறம் அங்குள்ள அழுக்கான சூழலை அவள் வெறுக்கிறாள். அது மட்டுமல்ல தன் குடும்பத்தை பிரிந்த ஏக்கத்துடன் நாள் பூராவும் தனிமையிலேயே இருக்க வேண்டிய சலிப்பை எரிச்சலாக அவனிடம் வெளிப்படுத்துகிறாள். பிறகு அவள் ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் காட்சி காண்பிக்கப்படுகிறது. மிக அடிப்படையான பணி. பிறகு வரும் காட்சிகளில் அவள் மெல்ல அந்த நிலையில் இருந்து நிர்வாகத்தின் பகுதியாக மாறுகிறாள். அவள் மேஜையில் அமர்ந்து சொல்லும் குறிப்புகளை இரு ஆண்கள் பணிவுடன் கேட்டுக் கொள்கிறார்கள். பொருளாதார ரீதியான சுதந்திரம் பெண்களுக்கு எத்தனை தன்னம்பிக்கையை வளர்க்கிறது என்பதை இந்தக் காட்சி மிக அற்புதமாக சொல்கிறது.

இதைப் போலவே அர்ச்சியின் சகோதரனாக வருபவன் சாதியத் திமிர் உள்ளவனாக இருக்கிறான். காரணம் அவனது தந்தை சாதிய அரசியல் செய்யும் ஆசாமி. எனவே அது தரும் திமிரில் ஆசிரியரையே கன்னத்தில் அறைந்து விடுகிறான். அடிபட்ட ஆசிரியரும் இன்னும் சில மூத்த ஆசிரியர்களும் அரசியல்வாதியின் வீட்டிற்குச் சென்று 'யாரென்று தெரியாமல் கேள்வி கேட்டதாக' ஏறத்தாழ மன்னிப்பு கேட்டு விட்டு பரிதாபமாக திரும்புகிறார்கள். கிராமங்களில் சாதியம் எத்தனை வலிமையான சக்தியாக விளங்குகிறது என்பது இது போன்ற காட்சிகளில் அழுத்தமாக வெளிப்படுகிறது. வழக்கமாக தமிழ் சினிமாக்களில் இது போன்ற திமிர் பிடித்த வில்லன்கள் ஆஜானுபாகுவான இளைஞர்களாக இருப்பார்கள். ஆனால் இதில் வரும் இளைஞன் குட்டையாக சாதாரண நபராக இருக்கிறான். பர்ஷயாவின் நண்பர்களாக வரும் இளைஞர்களும் இயல்பாக நடித்துள்ளார்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அதன் நம்பகத்தன்மையோடு வடிவமைக்க, சித்தரிக்க இயக்குநர் மிகவும் மெனக்கெட்டுள்ளார் என்பதை உணர முடிகிறது.

***

இதன் திரைக்கதை ஏறத்தாழ தமிழில் வெளிவந்த பாலாஜி சக்திவேலின் 'காதல்' திரைப்படத்தை நினைவுப்படுத்துகிறது. ஏறத்தாழ இரண்டுமே ஒரே பாதையில் பயணிக்கிறது. இரண்டுமே வெசன திரைப்படக்கூறுகளின் தன்மையையும் கலைப்படத்தின் சாயல்களையும் இணைக் கோடாக கொண்ட மாற்று சினிமாவாக உருவாகியிருக்கிறது. ஆனால் சய்ராட்டின் உச்சக்காட்சி ஏற்படுத்தும் அழுத்தமான தாக்கத்தின் மூலம் அது ஒரு படி முன்னே நின்று மறக்க முடியாத படைப்பாக மாறி விடுகிறது.

காதல் திரைப்படத்தில் வெளிப்படும் பல நுண்தகவல்களின் மூலம் அதன் நம்பகத்தன்மையை வலுவாக பார்வையாளர்களுக்கு கடத்த முயல்கிறார் பாலாஜி சக்திவேல். குறிப்பாக அந்தக் காதலர்கள்  நகரத்தில் இடம் தேடி அலையும் காட்சிகள். என்றாலும்  சய்ராட்டின் நபர்களோடு நாம் அதிகம் உணர்வு சார்ந்த பிணைப்பை உருவாக்கி கொள்ள முடிகிறது. அந்தக் காதலர்களின் இணைப்பு, சச்சரவு, பிரிவு என்று அவர்களுக்கு எந்த தீங்கும் நிகழ்ந்து விடக்கூடாதே என்று பார்வையாளர்கள் பதைத்துக் கொண்டே இருக்கிறார்கள். காதல் திரைப்படத்தில் அதன் நாயகன் முழுதும் நல்லவனாக வழக்கமான நாயகத் தன்மையுடன் சித்தரிக்கப்படுகிறான். ஆனால் சய்ராட் திரைப்படத்தின் நாயகன், தன் மனைவியை ஆணாதிக்க தன்மையுடன் சந்தேகப்படும் கீழ்மையையும் பின்பு அதற்காக மனம் வருந்தும் சமநிலைத்தன்மையோடு நாகராஜ் மஞ்சுளே சித்தரிக்கிறார்.

ஒரு காட்சியில் கணவனுடன் ஏற்பட்ட சச்சரவு காரணமாக தன் பிறந்த வீட்டிற்குச் செல்ல ரயிலில் பயணிப்பது போல் ஒரு காட்சி வருகிறது. 'அய்யோ.. அவள் செல்ல வேண்டாமே' என்று நான் மனதிற்குள் பதறிக் கொண்டேயிருந்தேன். பிறகு அவள் பார்வையற்ற, பிச்சையெடுக்கும் தம்பதியினரைப் பார்த்து மனம் மாறுகிறாள். புனைவுதான் என்றாலும் ஒரு கதாபாத்திரத்தோடு பார்வையாளன் எத்தனை உணர்வுப் பிணைப்புள்ளவனாக மாற்ற வேண்டும் என்கிற இயக்குநரின் திறமையில் நாகராஜ் மஞ்சுளே அபாரமாக வெற்றி பெற்றிருக்கிறார்.

***

இத்திரைப்படத்தின்  இசையை மிக பிரத்யேகமாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். திரைப்படம் வெளியாவதற்கு முன்பு இதன் பாடல்களைக் கேட்ட போது அது இளையராஜா பாடல்களின் பாணியில் இருந்ததை கவனித்தேன். இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர்கள் அஜய் மற்றும் அட்டுல் என்கிற சகோதரர்கள். இளமையிலேயே இசையின் மீது ஆர்வம் ஏற்பட்டு பல சிரமங்களுக்குப் பிறகு ஒவ்வொரு படியாக ஏறி திரைத்துறைக்குள் வருகிறார்கள்.

ஓர் இந்திப்படத்தின் பின்னணி இசையை ஒரு முறை  கவனிக்கிறார்கள். இசையால் இத்தனை உணர்வுபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என வியக்கிறார்கள். அந்த இசையமைப்பாளரை தேடி தேடி கேட்கிறார்கள். அது அவர்களுக்கு இசை தொடர்பான பல புதிய கதவுகளை திறக்கிறது. அந்த இசை இளையராஜாவுடையது.

இதன் பாடல்கள் மராத்தியில் அமோகமான வெற்றி பெற்றுள்ளன. ஓருவகையில் இதன் பாடல்களே இத்திரைப்படத்தை பலரும் கவனிக்கக்கூடிய முன்னோட்டமாக அமைந்தது எனலாம். இதன் பாடல்கள் மற்றும் சிம்ஃபொனி வகையிலான பின்னணி இசை, ஹாலிவுட்டில் உள்ள ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. அந்த வகையில் இது முதல் மராத்தி திரைப்படம் என்கிறார்கள்.

இதன் உச்சக்காட்சிக்கு பின்னணி இசை ஏதும் அல்லாமல் மெளனத்தையே இசையாக அமைத்திருக்கிறார்கள். இசையமைப்பாளர்களின் அற்புதமான நுண்ணுணர்வை இது வெளிப்படுத்துகிறது. இந்த மெளனமே அந்தக் கொடூரத்தின் துயரத்தை பல மடங்காக உயர்த்தி பார்வையாளர்களுக்கு கடத்துகிறது.


***

கெளரவக் கொலைகள் என்படும் சாதி ஆவணக் கொலைகள் அதிகம் நிகழும் நாடுகளுள் ஒன்று இந்தியா. சர்வதேச அளவில் வருடத்திற்கு சுமார் 5000 ஆணவக் கொலைகள் நிகழ்வதாகவும் அதில் ஆயிரம் கொலைகள் இந்தியாவில் நடைபெறுவதாகவும் ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இது போன்ற சாதி ஆவணக் கொலைகளுக்கான காரணங்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் சில மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஒரே சாதிக்குள் நிகழும் அகமணமுறைதான் சாதியின் இருப்பு நீடிப்பதற்கான முதன்மையான காரணம் என்றார் அம்பேத்கர். காதல் திருமணங்கள் அதிகம் நடைபெறுவதுதான் சாதி எனும் இறுக்கமான அமைப்பு சிதைந்து சரிய ஒரு முக்கியமான காரணியாக இருக்கும். ஆனால் சாதிய ரீதியாகவும் வர்க்கரீதியாகவும் முரணான நிலையில் நிகழும் காதல் திருமணங்கள் அவர்களின் பெற்றோர்களினாலேயே மனச்சாட்சியின்றி அழிக்கப்படுவது கொடுமையானது. இதில் அதிகமாக பாதிக்கப்படுவது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நபர்களே. காதலித்த நபர் மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் ஆதிக்க சாதியினரால் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

இத்திரைப்படத்தில் வரும் அந்த இளம் காதலர்கள் பல போராட்டங்களுக்குப் பிறகு தங்களின் வாழ்க்கையை மெல்ல அமைத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கான சொந்த வீடு, குழந்தை என குடும்பம் எனும் நிறுவனத்திற்குள் மெல்ல காலூன்ற துவங்குகிறார்கள். ஆனால் அவர்களின் திருமணம் முடிந்த சில ஆண்டுகளுக்குப் பிறகும் கூட அவர்களின் தந்தைக்கோ, சகோதரனுக்கோ 'சரி. இவர்கள் வாழ்ந்து விட்டு போகட்டுமே' என்கிற எண்ணம் தோன்றவேயில்லை. அவர்களை தேடிக் கொன்றாவது தங்களின் சாதிய கவுரத்தை காப்பாற்ற வேண்டும் என்கிற வெறி நீடிக்கிறது.

இறுதிக்காட்சியில் அர்ச்சியின் சகோதரனும் அவனது அடியாட்களும் அந்த வரவேற்பரையில் உட்கார்ந்து பர்ஷியா தரும்  தேநீரை அருந்துகிறார்கள். அதற்கு முன் அந்த வீட்டுக்கூடத்தில் மாட்டப்பட்டிருக்கும் குடும்பத்தின் மகிழ்ச்சியான புகைப்படங்களை காண்கிறார்கள். குழந்தையோடு தாய் -தந்தையர் சிரிப்போடு நிற்கும் புகைப்படங்கள். அவர்களின் திருமண ஆல்பம் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். அப்போது கூட இந்தக் கூட்டை கலைக்க வேண்டாமே என்று அவர்களுக்குத் தோன்றுவதில்லை. சாதிய வெறி மனிதனின் மனிதநேயகண்களை எத்தனை அபத்தமாக மூடியிருக்கிறது என்கிற பயங்கரத்தை இந்தக் காட்சிகள் உணர்த்துகின்றன.

நல்ல வேளையாக  அந்தக் குழந்தை அந்த வீட்டினுள் அப்போது இல்லை என்பது மட்டுமே எனக்கு ஆறுதலாக இருந்தது. அந்த பிஞ்சுக் குழந்தையின் ரத்தக் கறையுள்ள காலடித் தடயங்கள் சாதி ஆவணக்கொலைகளை நிகழ்த்துபவர்களின் முன்னால் கேள்விக்குறிகளாக நிற்கின்றன. எப்போது பதில் கிடைக்கும் என்பதுதான் தெரியவில்லை. (அம்ருதா இதழில் பிரசுரமானது)

suresh kannan

No comments: