Saturday, November 23, 2019

அப்பாஸ் கியரோஸ்தமி - வாழ்வின் விசாரணைக் கலைஞன்




ஈரானியப் புரட்சிக்குப் பிறகு உருவான புதிய அலை திரைப்பட இயக்குநர்களுள் அப்பாஸ் கியரோஸ்தமி முக்கியமானவர். ஈரானிய சினிமாவின் முன்னோடிகளுள் ஒருவர். புரட்சியின் போது பல கலைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறிய போது கூட இவர் அங்கிருந்து வெளியேறவில்லை. 'ஒரு மரம் இடம் பெயர்க்கப்பட்டால் கனி தருவதில்லை. தந்தாலும் அதன் சொந்த மண்ணின் சுவை இருப்பதில்லை. நானும் இடம் பெயர்ந்திருந்தால் அந்த மரத்தைப் போல்தான் ஆகியிருப்பேன்' என்றார் அப்பாஸ். ஈரானிய சமூகம்  பற்றி வெளிநாட்டினர் கொண்டிருந்த பிற்போக்குப் பார்வையை மாற்றியமைத்ததில் இவருடைய திரைப்படங்களுக்கு முக்கியமானதொரு பங்குண்டு. குறும்படங்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் என்று பல்வேறு படைப்புகளை உருவாக்கிய அப்பாஸ் கியரோஸ்தமி,  கடந்த 2016 ஜூலை 4ந்தேதியன்று தனது எழுபத்தி ஆறாவது வயதில் மறைந்தார். இவரது மரணத்திற்கு இரைப்பை-குடல் புற்றுநோய் காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அப்பாஸின் காட்சி உருவாக்க முறை மிக  தனித்துவமானது. சிறார்களின் உலகத்தின் வழியாக  ஈரானிய சமூகத்தின் நிலவெளிக் காட்சிகள், இயற்கை பேரிடரின் காரணமாக அச்சமூகம் எதிர் கொள்ளும் கலாசார, உளவியல் பிரச்சினைகள் ஆகியவற்றை தத்துவ நோக்கில் கலையமைதியுடன் எளிய முறையில் பதிவு செய்யும் திறன் கொண்டவராக இருந்தார். புனைவும் யதார்த்தமும் ஏதோவொரு  வகையில் மிக நுட்பமாக கலந்து உருவாக்கப்பட்ட ஆவணப்படங்களின் தன்மையை இவரது பெரும்பாலான திரைப்படங்கள் கொண்டிருக்கும்.  ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்களில் காமிராக்களை நிலையாக பொருத்தி நடிகர்களை இயல்பாக தொடர்ந்து உரையாடச் செய்வது, மிக நீளமான காட்சிகளை உருவாக்குவது, சில நிமிடங்களுக்கும் மேலாக நீளும் தூரக்காட்சிகளை பதிவு செய்வது போன்றவை இவரது உருவாக்க முறைகளில் குறிப்பிடத்தக்கது. இவை 'கியரோஸ்தமி பாணி' என்று அழைக்கப்பட்டன. இவரது திரைப்படங்களில் மிக அவசியமான இடங்களில் மட்டுமே பொருத்தமான பின்னணி இசை பயன்படுத்தப்பட்டிருக்கும். மற்றபடி காட்சிகள் பதிவாகும் இடங்களின் சத்தங்களே இதன் பின்னணி ஒலிகளாக இருக்கும்.  காட்சிகளை துண்டு துண்டாக எடுப்பது ஒரு திரைப்படத்தின் ஒத்திசைவு தொனியை சிதைத்து விடும் என்பது இவருடைய நம்பிக்கை.

***

இவருடைய முதல் குறும்படமான  The Bread and Alley 1970-ல் உருவானது. மனிதனுக்கும் விலங்கிற்கும் ஏற்படும் உறவை இந்த பத்து நிமிட கறுப்பு - வெள்ளை குறும்படத்தில் அபாரமாக பதிவு செய்திருப்பார் அப்பாஸ். சாலையில் கிடக்கும் காகித உருளை உதைத்தபடியே வருவான் ஒரு சிறுவன். நீள் காட்சிகளாக இவை பதிவு செய்யப்பட்டிருக்கும். குறுகிய வழிப்பாதை ஒன்றின் வழியாக வரும் அவன், நாய் ஒன்று துரத்துவதைக் கண்டு பயத்துடன் திரும்பி ஓடுவான். அந்த இடத்தை எப்படி கடப்பது என்கிற திகைப்புடன் பாதையின் திருப்பத்தில் அப்படியே நின்று விடுவான்.

பிறகு அந்த வழியைக் கடக்கும் ஒரு பெரியவரின் பின்னாலேயே செல்வான். ஏறத்தாழ அனைத்து சிறுவர்களும் தங்கள் வாழ்வில் நிச்சயம் எதிர்கொண்ட அனுபவமாக இது இருக்கக்கூடும். அந்தப் பெரியவர் பிறகு வேறு பாதையில் பிரிந்து சென்று விடுவார். சிறுவன் பயத்துடன் பாதையின் ஓரமாக நாயைப்  பார்த்துக் கொண்டே செல்வான். இருவரின் கண்களும் ஓரிடத்தில் சந்தித்துக் கொள்ளும். நாய் பாய்ந்து வரும் போது பின்வாங்கி தன்னிடமுள்ள ரொட்டியை அதற்குப் போடுவான். அதன் பிறகு நாய் அவனுடன் இணக்கமாகி வாலாட்டிக் கொண்டு அவன் பின்னாலேயே வரும். சிறுவனின் வீடு வந்தவுடன் உள்ளே சென்று விடுவான். நாயும் உள்ளே நுழைய முயலும். சிறுவனின் தாய் கதவை மூடி விட்டு செல்வார். நாய் அந்த வீட்டின் வாசலிலேயே படுத்துக் கொள்ளும். அந்தப் பாதையின் வழியாக இன்னொரு சிறுவன் வருவான். அவனும் பயத்துடன் பாதையின் ஓரமாகச் செல்வான். ஒரு கணத்தில் பாயும் நாயைக் கண்டு அவன் திகைப்புறுவதுடன் இந்தக் குறும்படம் நிறையும்.

இந்தக் குறும்படத்திற்கான படப்பிடிப்பில் காட்சிகளை படமாக்குவதில் ஒளிப்பதிவாளருக்கும் இயக்குநருக்கும் முரண் ஏற்பட்டிருக்கிறது. துண்டு துண்டாக காட்சிகளை படம் பிடித்து பின்பு ஒருங்கிணைத்துக் கொள்ளலாம் என்கிற ஒளிப்பதிவாளின் ஆலோசனையை இயக்குநர் அப்பாஸ் கியரோஸ்தமி ஏற்கவில்லை. இத்தனைக்கும் அந்தக் குழுவில் அனுபவமுள்ளவராக இருந்தவர் ஒளிப்பதிவாளர் மட்டுமே. இதற்காக ஒரு காட்சியை படம் பிடிப்பதற்காக நாற்பது நாட்கள் செலவாகியிருக்கின்றன. ஒரு திரைப்படத்தின் தொனியை இறுதி செய்வதில் இயக்குநரின் செல்வாக்கும் பிடிவாதமும் எத்தனை  அவசியமானது என்பதை உணர்த்தும் விஷயங்களாக இவை இருக்கின்றன.


லாங் டேக் எனப்படும் நீள்காட்சிகளின் உன்னதத்திற்கு  'Through The Olive Trees' எனும் திரைப்படத்தின் இறுதிக் காட்சியை  ஓர் உதாரணமாக  சொல்லலாம். இத்திரைப்படம் முழுவதிலும் எளிய இளம் காதலன் ஒருவன், ஒரு பெண்ணிடம் தன்னுடைய காதலை தொடர்ந்து முறையிட்டுக் கொண்டேயிருப்பான். இவன் கல்வி கற்காமல் இருப்பதும் சொந்தமாக வீடு இல்லாததும் அவனுடைய திருமணத்திற்கு தடையாக இருக்கும். பூகம்பத்தினால் தமது பெற்றோரை இழந்திருக்கும் அந்தப் பெண்ணிடம், தமக்குத் திருமணம் நடந்தால் தான் எப்படியெல்லாம் அவளைப் பார்த்துக் கொள்வேன்  என்று அவளிடம் விவரித்தபடியே இருப்பான். அங்குள்ள கலாசார சூழல் காரணமாக அந்தப் பெண் இவனிடம் ஒரு வார்த்தை கூட உரையாட மாட்டாள். அவளுடைய உணர்வு, எதிர்வினை என்ன என்பது பார்வையாளர்களான நமக்குத் தெரியாது. "உனக்கு என் மீது காதல் இருப்பது எனக்குத் தெரியும்.  நீ ஒரேயொரு முறை என்னை ஆழமாக பார்த்தாய். அந்தப் பார்வையின் காரணமாகத்தான் இத்தனை நாட்களாக  நம்பிக்கையுடன் உன் பின்னால் சுற்றிக்  கொண்டேயிருக்கிறேன்" என்பான்  அந்த இளைஞன். அவளிடமிருந்து எந்தவொரு எதிர்வினையும் இருக்காது.

இருவருமே ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதால் படப்பிடிப்பு  முடிந்த நாளன்று அந்தப் பெண் தனியாக ஒரு பாதையில் செல்வாள். அத்திரைப்படத்தின் இயக்குநர் (அது அப்பாஸ் கியரோஸ்தமியின் கதாபாத்திரம்தான்) இளைஞனிடம் 'நீயும் செல்' என்று சூசகமாக சொல்வார். அவருக்கு இளைஞனின் உணர்வுகளையும் நிலைமையையும் பற்றி தெரியும். அவளிடம் இறைஞ்சிக் கொண்டே செல்லும் இளைஞன் ஒரு கட்டத்தில் சலித்து நின்று விடுவான். இயக்குநரும் பின்னால் வந்து கொண்டிருப்பார். நமக்கே இளைஞனின் மீது அத்தனை பரிதாபமாக இருக்கும்

என்றாலும் அந்த இளைஞன் விடாமுயற்சியுடன், ஆலிவ் மரங்கள் நிறைந்திருக்கும் வழியைக் கடந்து ஒற்றையடிப் பாதை வழியாக செல்லும் பெண்ணை நோக்கி ஓடுவான். மிக அற்புதமான நீள்காட்சி இது. இருவரும் தூரத்தில் புள்ளிகளாக தெரிவார்கள். இளைஞன் அவளை நெருங்குவது குத்துமதிப்பாக தெரியும். பின்பு இளைஞன் மாத்திரம் திரும்ப வருவதும் தெரியும். பின்னணியில் மகிழ்ச்சியான துள்ளலிசை ஒலிப்பதுடன் படம் நிறையும். அந்த இளைஞன்  அவளின் ஒப்புதலைப்  பெற்று விட்டானா அல்லவா என்பது பார்வையாளர்களுக்குத் தெளிவாக உணர்த்தப்பட்டிருக்காது என்றாலும் அந்த இசையின் மூலம் அவன் தன் காதலை வெற்றிகரமாக சம்பாதித்து விட்டான் என்கிற குறிப்பு பூடகமாக உணர்த்தப்பட்டிருக்கும். ஏறத்தாழ அந்த இளைஞனின் மகிழ்ச்சியும் ஆசுவாசமும் பார்வையாளனுக்குள்ளும் நிறைந்து பொங்கி வழியும் அற்புதமான தருணம் அது. நிகழ்ந்து கொண்டிருந்த படப்பிடிப்பில் இந்த இளைஞன், அந்தப் பெண்ணின் கணவனாக  நடித்துக் கொண்டிருப்பான் என்பது சுவாரசியமான முரண்நகை.

***


அப்பாஸ் கியரோஸ்தமி அடிப்படையில் ஓர் ஓவியர்.  சில விஷயங்களில் சத்யஜித்ராய்க்கும் இவருக்கும் ஒற்றுமையுண்டு. துவக்க காலக்கட்டத்தில் ஓவியராகவும் வரைகலை கலைஞராகவும் இருந்த அப்பாஸ் அறுபதுகளில் விளம்பர நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். பல தொலைக்காட்சி விளம்பரங்களை உருவாக்கியுள்ளார். சிறுவர் நூல்களுக்கு ஓவியங்கள் வரைந்துள்ளார். இரானிய திரைப்படங்களின் புதிய அலை இயக்குநர்களில் முன்னோடியான Dariush Mehrjui-ன் 'கவ்' எனும் திரைப்படத்தில் உதவியாளராக அப்பாஸின் திரைப்பணி  துவங்கியது.

இவர் உருவாக்கிய முதல் குறும்படம், மேலே விவரிக்கப்பட்ட 'ரொட்டியும் ஒற்றையடிப் பாதையும்'. இதன் பிறகு பல குறும்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் திரைப்படங்கள் என சுமார் நாற்பது படைப்புகளை உருவாக்கியுள்ளார்.


இவரது துவக்க கால திரைப்படங்களில் முக்கியமானது Koker trilogy எனும் முத்தொகுப்பு திரைப்படங்கள். வடக்கு ஈரானில் உள்ள கோக்கர் எனும் கிராமத்தின் பின்புலத்தில் உருவாக்கப்பட்டதின் காரணமாக விமர்சகர்களால் இவை முத்தொகுப்பு படைப்புகளாக கருதப்படுகிறது. என்றாலும் இதை  அப்பாஸ் கியரோஸ்தமி ஒப்புக் கொள்ளவில்லை. முதல் திரைப்படத்தை இதில் இணைக்க அவர் விரும்பவில்லை.  இந்த மூன்று திரைப்படங்களுக்கு பின்னால் உருவான வந்த Taste of Cherry எனும் திரைப்படத்தோடுதான் முத்தொகுப்பாக இவை இணைத்துப் பார்க்கப்பட வேண்டியது என்கிறார். ஏனெனில் அவை வாழ்வின் நிச்சயமின்மையையும் மரணத்தையும் தத்துவார்த்த விசாரத்தோடு குறுக்கு விசாரணை செய்யும் திரைப்படங்கள் என்பதால்.


என்றாலும் Koker trilogy-ல் வெளியான முதல்  திரைப்படமான Where Is the Friend's Home? ஈரானிற்கு வெளியே சர்வதேச அரங்கில் அப்பாஸிற்கு தனித்த அடையாளத்தை தேடித் தந்தது. இது 1987-ல் உருவானது.


தனது நண்பனின் வீட்டுப்பாட புத்தகத்தையும் சேர்த்து தவறுதலாக கொண்டு வந்து விடுவான் ஒரு சிறுவன். தன் நண்பன் ஆசிரியரிடம் தண்டனை பெறக்கூடாதே என்பதற்காக புத்தகத்தை அவனிடம் திருப்பித் தருவதற்காக பக்கத்து கிராமத்தில்  இருக்கும் நண்பனின் வீட்டை தேடிச் செல்லும் பயணம்தான் இத்திரைப்படம். சிறார்களின் களங்கமில்லாத உலகில் இந்தச் சமூகம் எந்தெந்த வகையில் எல்லாம் தம் அதிகாரத்தைச் செலுத்துகிறது என்பதை எவ்வித ஆரவாரமும் இல்லாமல் விவரிக்கிற திரைப்படம்.

மாலை நேரத்தில் எங்கும் செல்லக்கூடாது என தடுக்கும் அவன் தாய், அவனை வீட்டுப்பாடம் செய்யவும் அழும் கைக்குழந்தையை கண்காணிக்கவும் வலியுறுத்துகிறார். அவனுடைய முறையீட்டின் பின்னணியை அவர் உணர்வதில்லை. அவன் எப்படியோ அங்கிருந்து வெளியே செல்லும் போது அவனுடைய தாத்தா அதைக் கவனித்து அவனை வேண்டுமென்றே வேறொரு பணியைச் செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார். 'எங்க காலத்துல எல்லாம் கண்டிச்சு, அடிச்சுதான் வளர்த்தாங்க. இவங்களையும் இப்படித்தான் வளர்க்கணும்" என்று சமவயது நண்பருடன் பழமைவாதம் பேசுகிறார். இவ்வாறாக சிறுவன் சந்திக்கும் பல தடைகளின் மூலம் சிறுவர்களின் உலகம் பெரியவர்களால் எப்படியெல்லாம் இடையூறு செய்யப்படுகிறது என்பது இயல்பாக சொல்லப்படுகிறது. இறுதிக்காட்சியில் தன் நண்பன் தண்டனை அடையாமல் காப்பாற்றுவதற்காக அந்தச் சிறுவன் செய்யும் விஷயம் கவிதைத்தனமானது மட்டுமல்லாமல் நெகிழ்வடைய வைப்பதும் கூட. இதில் வரும் சிறுவன் மிக அற்புதமான முகபாவங்களோடு நடித்திருந்தான்.


இந்த தொகுப்பில் அடுத்தது, Life, and Nothing More... (1992). தன் முந்தைய திரைப்படத்தில் நடித்த சிறுவனைத் தேடி படத்தின் இயக்குநரும் அவரது மகனும் செல்லும் திரைக்கதை. ஈரான் பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டிருந்த சமயம் அது. எனவே அந்தப் பயணம் முழுவதும் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட காட்சிகளும் அந்த நெருக்கடியின் இடையிலும் பூக்கும் மனிதநேய தருணங்களும் மிக இயல்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஈரானிய சமூகத்தில் இயற்கை பேரிடர் உருவாக்கும் பெளதீக  இழப்புகளையும் பிரிவுகளின் மூலமான மக்கள் அடையும் உளவியல் சிக்கல்களையும் அப்பாஸின் திரைப்படங்கள் தொடர்ந்து பேசுகின்றன. அந்த வகையில் அவரது திரைப்படங்களில் பூகம்பம் ஒரு முக்கியமான கருத்தாக்கமாக உள்ளது.

இந்த முத்தொகுப்பின் இறுதி திரைப்படம்தான், மேலே விவரிக்கப்பட்ட 'Through the Olive Trees' (1994). படப்பிடிப்பின் இடையே நிகழும் இளைஞனின் காதல் முறையீட்டுக் கதை. இதில் என்ன வியப்பு என்றால், இத்தொகுப்பின் இரண்டாவது திரைப்படத்தில் நிகழும் ஒரு காட்சிக்கோர்வைதான் அதன் பின்னணியோடு ஒரு முழு திரைப்படமாக இதில் விரியும். சங்கிலித் தொடர் போல வேறு பரிமாணங்களில் தனது படைப்புகளை உருவாக்குவது, இணைப்பது என்பது அப்பாஸின் தனித்துவமான உருவாக்க முறையாக உள்ளது.


***

இந்த  வகையில் அப்பாஸின் முக்கியமான  படைப்பு (Close-up) 1990-ல் வெளியானது. Docufiction வகைமையில் உருவானது. Mohsen Makhmalbaf ஈரானின் இன்னொரு முக்கியமான இயக்குநர். The Cyclist உள்ளிட்ட பல முக்கியமான திரைப்படங்களை உருவாக்கியவர். Hossain Sabzian என்கிற நபர் இந்த இயக்குநராக தன்னை போலியாக சித்தரித்துக் கொண்டு ஒரு குடும்பத்திற்குள் நுழைவார். அந்த வீட்டை படப்பிடிப்பிற்காக உபயோகப்படுத்திக் கொள்வதாகவும் அங்குள்ளவர்களை நடிகர்களாக பயன்படுத்துவதாகவும் பாவனை செயவார். அங்குள்ள ஒருவருக்கு சந்தேகம் வருவதன் பெயரில் விசாரிக்கும் போதுதான் இவர் ஒரு போலி நபர் என்பது தெரியவரும். நீீதிமன்றத்தில் வழக்கு பதிவாகும்.

அப்பாஸ் இந்த விவரங்களை அப்படியே திரைப்படமாக எடுத்தார். நீதிமன்றத்திடம் சிறப்பு அனுமதி பெற்று அங்கு நடைபெற்ற வழக்கு விசாரணையை தம் திரைப்படக்காட்சிகளுடன் இணைத்தார். போலி நபராக ஏமாற்றியவா், அதே பாத்திரத்தில் இந்த திரைப்படத்தில் நடித்தார் என்பதுதான் இன்னமும் வேடிக்கையான விஷயம். புனைவிற்கும் யதார்தத்திற்கும் உள்ள இடைவெளியை அழித்துக் கொண்டே வந்தது அப்பாஸின் தனித்துவமான முறை என்றது இதனால்தான். போலியாக நடித்தவர் மோசடிப் பேர்வழியல்ல. அவர்  ஒரு சினிமா விரும்பி. குறிப்பிட்ட ஈரானிய இயக்குநரின் மகா ரசிகர். எனவே அந்தப் பிரியத்தின் மீதான ஆழ்மனது உணர்வுகளின் வெளிப்பாடாக அந்த இயக்குநராகவே தன்னை சித்தரித்துக் கொண்டார். சராசரியான நபர்கள் சமூகத்தில் பிரபலமான அடையாளங்களோடு தொடர்புபடுத்திக் கொள்ள விழையும் உளவியல் மற்றும் அடையாளச் சிக்கலை உரையாடும் திரைப்படம் இது.

Ten என்கிற திரைப்படமும் மிக முக்கியமானது மட்டுமல்ல, துணிச்சலானதும் கூட. படத்தலைப்பு உணர்த்தும் படி இது பத்து சிறு பகுதிகளால் ஆனது. இத்திரைப்படம் முழுவதுமே ஓடும் வாகனத்தில் பதிவான காட்சிகளால் தொகுக்கப்பட்டது. கார் ஓட்டிச் செல்லும் ஓர் இளம்பெண்ணின் வழியாகவும் அதில் பயணிக்கும் நபர்களின் மூலமாகவும் ஈரானியப் பெண்களின் வாழ்வியல் சிக்கல்கள் விரிகின்றன. ஆண்மைய மதிப்பீடுகளின் வழியாக இயங்கும் உலகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு துயரங்கள் மிக நுட்பமாக இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  கார் ஓட்டும் பெண் தன் கணவனை விவாகரத்து  செய்து விட்டு இன்னொரு ஆணை மணந்து கொண்டவள். முன்னாள் கணவனிடம் உள்ள மகனை அவ்வப்போது அழைத்து வருவது அவளின் வழக்கம். காரில் பயணிக்கும் போது அந்த தாய்க்கும் மகனுக்கும் நிகழ்கிற உரையாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. வேறு திருமணம் செய்து கொண்ட காரணத்திற்காக அந்தச் சிறுவன் தன் தாயை வெறுக்கிறான்.

சிறுவனுக்கான இயல்பான உடல்மொழியில் அவன் உரையாடினாலும் அவனிடமிருந்து உற்பத்தியாகும் வெறுப்பு மிக உக்கிரமானதாக இருக்கிறது. ஆணாதிக்க உலகத்தின்  ஒரு மினியேச்சராக அச்சிறுவன் இருக்கிறான். தன் தாயின் மன உணர்வுகளைப் புரிந்து கொள்ள அவன் தயாராகவே இல்லை. இப்படியாக காரில் பயணிக்கும் பெண்ணின் சகோதரி, தோழி. பாலியல் தொழிலாளி, துயரங்களைக் கடந்து செல்ல மதச்சடங்குகளிடம்  அடைக்கலமாகும் ஒரு மூதாட்டி என பல்வேறு நபர்களின் மூலமாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இதில் அலசப்படுகின்றன. இந்த உரையாடல்களும் காட்சிகளும்  ஈரானிய சமூகத்திற்கு மட்டுமன்றி உலகளாவிய அளவில் பெண் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசும் நுண்ணுணர்வுடன் அமைந்திருப்பது அபாரமானதொன்றாக இருக்கிறது.

முழுக்க ஓடும்  வாகனத்தில் பதிவு செய்யப்பட்ட இத்திரைப்படம் அதன் உருவாக்க முறைக்காகவும் உள்ளடக்கத்திற்காகவும் பலத்த பாராட்டைப் பெற்றது. அப்பாஸிடம் உதவி இயக்குநராக இருந்த ஜாபர் பனாஹி, இதே முறையில் உருவாக்கிய Taxi என்கிற சமீபத்திய திரைப்படமும் சர்வதேச அரங்கில் மிகவும் சிலாகிக்கப்பட்டதாக அமைந்தது.

இவ்வாறாக அப்பாஸ் கியரோஸ்தமி ஒவ்வொரு படைப்புமே உருவாக்கத்திலும் உரையாடும் விஷயத்திலும் அதற்கான தனித்துவத்தையும் நுட்பத்தையும்  கொண்டிருந்தவை. Shirin என்கிற 2008-ல் வெளியான திரைப்படம், ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் பல்வேறு பெண்களின் முகபாவங்கள், அண்மைக் கோணத்தில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளைக் கொண்டு மட்டுமே உருவான படைப்பாகும். தமது இறுதிக்காலத்தில் அவர் இயக்கிய Certified Copy (2010) மற்றும் Like Someone in Love (2012) ஆகிய திரைப்படங்கள் ஈரானிற்கு வெளியே உருவானவை.

***


அப்பாஸின் திரைப்படங்களை ஏறத்தாழ அனைத்து உலக சினிமா இயக்குநர்களும் பாராட்டியுள்ளனர். "அவருடைய திரைப்படங்களைப் பற்றி வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்திய இயக்குநரான சத்யஜித்ரே மரணமடைந்த போது அந்த வெற்றிடத்தை எண்ணி நான் கவலை கொண்டிருந்தேன். ஆனால் அப்பாஸ் கியரோஸ்தமியின் திரைப்படங்களைக் காண நேர்ந்த போது அந்த வெற்றிடம் நிரப்பப்பட்ட மகிழ்ச்சியை அடைந்தேன்' என்றார் அகிரா குரசேவா. கான் திரைப்பட விழாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான Palme d'Or விருது உள்ளிட்டு பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார் அப்பாஸ் கியரோஸ்தமி. திரைப்படம் தொடர்பாக பல நூல்களையும் எழுதியுள்ளார்.

ஏறத்தாழ அப்பாஸின் அனைத்து திரைப்படங்களுமே சிறார்களின் வழியாக, பெண்களின் வழியாக, இயற்கையின் வழியாக மானுட குலத்தின் சிக்கல்களை, அதன் துயரங்களை மிக இயல்பான மொழியில் பேசும் திரைப்படங்களாகும். ஆனால் அவை துயரங்களின் இருண்மைகளை மட்டுமல்லாமது அதன் இடையில் நாம் காணத்தவறும் நம்பிக்கை கீற்றின் வெளிச்சசங்களையும் அடையாளப்படுத்துகிறது. இந்த வகையில் அசோகமித்திரனது படைப்புகளோடு அப்பாஸின் திரைப்படங்களை ஒப்பிடலாம்.


(உயிர்மை இதழில் பிரசுரமானது)

suresh kannan

No comments: