Friday, November 29, 2019

ஓவியர் கோபுலு: உறைந்து போன தூரிகை
இன்றைய அளவிற்கு கேளிக்கை அம்சங்கள் இல்லாத முந்தைய காலக்கட்டத்தில் அதாவது 1940-களில் புத்தக வாசிப்பு என்பது பொழுது போக்கின் ஒரு பிரதான அம்சமாக இருந்தது. குறிப்பாக வெகுஜன இதழ்களில் வெளியாகும் தொடர்கதைகள். கல்கியின் பொன்னியின் செல்வன் வெளிவந்து கொண்டிருந்த போது அடுத்த அத்தியாயத்தை வாசிக்கும் ஆவல் தாங்காமல் சில வாசகர்கள் புத்தக ஏஜெண்ட்டின் வருகைக்காக ரயில் நிலையத்திலேயே வந்து காத்திருந்து சுடச்சுட வாங்கி அங்கேயே வாசிப்பார்களாம். இவ்வாறான தொடர்களை தொகுத்து பைண்ட் செய்து புத்தகங்களாக சேகரிப்பது என்பதும் அப்போதைய பிரதான பொழுதுபோக்காக இருந்தது. இந்தக் காலக்கட்டத்தை 'தொடர்கதைகளின் பொற்காலம்' என்று கூறலாம். இன்றைய தொலைக்காட்சி சீரியில்களின் எழுத்து வடிவ முன்னோடி அது. காலப்போக்கில்  மெல்ல விலகுகிற விஷயத்தில் தொடர்கதைகளும் ஒன்றாகிப் போனது தவிர்க்க முடியாத சோக பரிணாமம். தொடர்கதைகளை ஆர்வமாக வாசிக்கும் போக்கு சுமாராக எண்பதுகள் வரை நீடித்து பின்பு மெல்ல மெல்ல அருகிப் போனது.

தொடர்கதைகளைப் போலவே அதற்காக வரையப்படும் ஓவியங்களுக்கும் கூட அப்போது வெறித்தனமான வாசகர்கள் இருந்தார்கள். தொடர்கதையை வாசிப்பதை விடவும் அதிகமான நேரத்தை செலவழித்து ஓவியங்களை நிதானமாக ரசிக்கவும் பாதுகாக்கவும்  செய்கிற நபர்கள். அதற்கான சாவகாசமான நேரமும் இருந்த காலக்கட்டம் அது. மாலி, சில்பி, மணியம், எஸ்.ராஜம், மாதவன், தாணு, ராஜூ என்று பல பத்திரிகையுலக ஓவிய ஜாம்பவான்கள் கலை மற்றும் அழகியல் உணர்வுடன் அற்புதமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். பல குடும்பங்களின் பூஜையறைகள் இவர்கள் நுட்பமாக வரைந்த கடவுள் சித்திரங்களால் நிறைந்திருப்பது என்பது ஒரு வழக்கமாகவே இருந்தது. தீபாவளி மலர்களில் வெளியாகும் அட்டைப்படங்கள், இதழின் உள்ளே வழுவழுப்பான தாளில் அச்சிடப்பட்டிருக்கும் வண்ணமிகு ஆன்மீக ஓவியங்களை வாசகர்கள் கண்ணில் ஒற்றிக் கொண்டு பாதுகாப்பார்கள். இந்த ஜாம்பவான்களின் வரிசையில் முக்கியமானதொரு கலையாளுமைதான், மாலியால் கோபுலு என்றழைக்கப்பட்ட எஸ்.கோபாலன்.

தேவன் எழுதிய துப்பறியும் சாம்பு,  கொத்தமங்கலம் சுப்புவின் 'தில்லானா மோகனாம்பாள், சாவியின் வாஷிங்டனில் திருணம், ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், ராஜம்கிருஷ்ணனின் மண்ணகத்துப் பூந்துளிகள் போன்று பல எழுத்தாளர்களின் எண்ணற்ற தொடர்களுக்கு ஓவியம் தீட்டி அவற்றை மேலதிகமாக அழகுறச் செய்தவர் கோபுலு. மாத்திரமல்லாமல் அரசியல் கேலிச் சித்திரங்கள், அங்கத நகைச்சுவைகள், ஹாஸ்ய கோட்டோவியங்கள் வரைவதிலும் புகழ்பெற்றவர். நகைச்சுவை ஓவியம்தானே என்பதற்காக மேலோட்டமான தீற்றல்களாக அல்லாமல் ஒவ்வொரு சித்திரத்திலும் நுணுக்கமாக பல நுட்பமான விவரங்கள் பதிவாகுமாறு உருவாக்குவது கோபுலுவின் சிறப்பு. குறிப்பாக நடுத்தரவர்க்க பிராமண குடும்பத்து கலாசாரங்களின் மிகத் துல்லியமான பல்வேறு விதமான பரிமாணங்களை அவரது ஓவியங்களில் காணலாம்.  காலத்தையும் கடந்து நிற்கும் பண்பாட்டுப் புதிவுகள் அவை. ஆர்.கே.லஷ்மணின் 'மிஸ்டர் பொதுஜனம்' போல துப்பறியும் சாம்புவிற்காக கோபுலு பிரத்யேகமாக உருவாக்கிய நீளமான மூக்கும், சோகமும் அசட்டுக்களையுடனான முகமுமான துப்பறியும் சாம்பு பாத்திரம் பார்ப்பதற்கு சுவாரசியமானது. தன்னை 'Artoonist' என்று வர்ணித்துக் கொண்டவர் கோபுலு

***

தஞ்சாவூரில் பிறந்த கோபாலனுக்கு சிறுவயது முதலே ஓவியங்கள் வரைவதில் ஆர்வமும் ஈடுபாடும் ஏற்பட்டது.  தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பங்களும் அரண்மனையில் உள்ள தஞ்சாவூர் ஓவியங்களும் இவரை மிகவும் கவர்ந்தன. அக்கம் பக்கத்து வீடுகளின் பூஜையறைகளில் கடவுள் படம் வரைந்து பெண்களிடம் நிறையப் பாராட்டும் சன்மானமும் பெற்றார்.  ஆனந்த விகடன் இதழில் அப்போது வெளியாகும் பிரபல ஓவியர் மாலியின் ஓவியங்களைப் பார்த்து வியந்து பிரமித்து அதே மாதிரியாக தானும் வரைந்து பார்ப்பார். பிற்காலத்தில் மாலியுடனேயே பணிபுரியப் போகும் பொன்னான வாய்ப்பு சாத்தியமாகப் போகிறது என்பது அவருக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை.

ஆனால் அவரது தந்தைக்கோ இவர் நன்றாகப் படித்து முடித்தவுடன் தான் பணியாற்றிய ரயில்வே துறையில் சேர்த்து விட்டால் நிம்மதி என்று தோன்றியது. கோபாலனின் ஓவிய ஆசிரியா் இவரது அபாரமான திறமையையும் ஆர்வத்தையும் பார்த்த பின்னர் அவரது தந்தையிடம் செய்த பரிந்துரையினால்தான் இவரால் கும்பகோணத்தின் ஒவியக் கல்லூரியில் இணைந்து கற்க முடிந்தது.

ஓவியப் படிப்பை முடித்து சென்னைக்கு வந்தவுடன் மிகுந்த சிரமத்திற்குப் பின் ஆனந்த விகடனில் பணிபுரியும் மாலியை சந்திக்கிறார். அப்போதைய ஆனந்தவிகடன், அட்டைப் படத்திலேயே ஹாஸ்ய சித்திரங்களைக் கொண்டு வெளிவரும். கோபாலனின் ஓவியத் திறமையைப் பாராட்டிய மாலி அவரது நகைச்சுவைச் சித்திரங்கள் இரண்டை ஆனந்தவிகடனில் அட்டையில் வெளியிடுகிறார். விகடனிலேயே தன் ஓவியங்கள் வெளியானதில் கோபாலனுக்கு பரவசமும் கூடுதலாக சன்மானமும் கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சி. தீபாவளி மலர் ஒன்றிற்காக மாலியின் வழிகாட்டுதலின் பேரில் திருவையாறு தியாகராஜ சுவாமிகளின் இல்லத்திலிருக்கும் ராமர் பட்டாபிகேஷப்படம் உள்ளிட்ட பல திருவுருவங்களை ஓவியங்களாக வரைந்து மாலியின் நன்மதிப்பைப் பெறுகிறார். பிறகு ஆனந்தவிகடனிலேயே மாலியின் கீழ் பணிபுரியும் வாய்ப்பும் கிடைக்கிறது.

அங்கு பொறுப்பாசிரியாக இருந்த எழுத்தாளர் தேவன் படைப்புகளுக்கு இவர் வரைந்த ஓவியங்கள் பரவலாக பாராட்டைப் பெற்று அது வெற்றிக் கூட்டணியாக அமைகிறது. தேவன் எழுதிய துப்பறியும் சாம்பு, ஜஸ்டிஸ்  ஜகந்நாதன்,  ஸ்ரீமான் சுதர்சனம்,  மிஸ்டர் வேதாந்தம், சி.ஐ.டி. சந்துரு போன்ற படைப்புகளும் அதற்குப் பொருத்தமான கோபுலுவின் ஓவியங்களும் வாசகர்களால் பெருவாரியாக ரசிக்கப்படுகின்றன. வாசனின் மறைவிற்குப் பிறகு விகடனின் தொடர் வெற்றியில் சற்று தொய்வு ஏற்பட்ட போது அதை மீண்டும் நிமிர்த்தியது கொத்தமங்கலம் சுப்பு எழுதிய 'தில்லானா மோகனாம்பாள்' தொடர். ஒவ்வொரு வாரமும் இந்தத் தொடரை வாசகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வாசித்தார்கள். பிறகு இது திரைப்படமாகவும் வந்து வெற்றி பெற்றது எல்லோருக்கும் தெரியும். இந்தத் தொடருக்கும் கோபுலுவின் ஓவியங்கள் கூடுதல் மதிப்பை உருவாக்கியது என்றால் அதில் மிகையில்லை. பிறகு எழுத்தாளர் சாவியுடன் அமைந்த கூட்டணியும் மகா வெற்றி. 'வாஷிங்டனில் திருமணம்' நகைச்சுவைத் தொடரையும் அந்தக் கற்பனையையும் மிஞ்சும் கோபுலுவின் கோட்டோவியங்களையும் மக்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

***

பொதுவாக கோபுலுவை ஓவியராகவும் கேலிச் சித்திரக்காராகவும் அறிபவர்கள் பெரும்பாலும் அவருடைய இன்னொரு பரிமாணத்தை அறிந்திருக்க மாட்டார்கள். விளம்பரத் துறையிலும் நுழைந்து அதிலும் வெற்றிக் கொடி நாட்டியவர் கோபுலு. ஒரு விளம்பரத்தை மக்களிடம் வெற்றிகரமாக சென்று பரப்புவதற்கும் அடிப்படையானது கலைத் திறமைதானே? எனவே தனது ஓவியத் திறமையை தான் உருவாக்கும் விளம்பரங்களில் இணைத்து அதை வெற்றிகரமான கலவையாக்கினார். ராசி சில்க்ஸ், காளிமார்க் குளிர்பானம், ப்ரில் இங்க், எல்.ஐ.சி. போன்ற நிறுவனங்களின் விளம்பரங்களை பல புதுமையான வழிகளில் முன்நிறுத்தி தொடர் வெற்றிகளைத் தேடித் தந்தார். ஸ்ரீராம் சிட்ஸ், உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ், குங்குமம், சன்டிவி போன்றவைகளின் இலச்சினையை (Logo) உருவாக்கி அவற்றின் வணிக அடையாள வெற்றிக்கு அடித்தளம் அமைத்துத் தந்தார். ஜெயலலிதா, ஹேமமாலினி போன்ற நடிகைகள் இவர் உருவாக்கிய விளம்பரங்களில் மாடலாக பணிபுரிந்திருக்கின்றனர் என்பது சுவாரசியமான வரலாறு.

இயற்கை ஒருவருக்கு வழங்கும் பிரத்யேகமான கலைத் திறமையை, அதுவே பறித்துக் கொள்ள முயல்வது ஒரு சோகமான முரண். 2002-ம் ஆண்டில் கோபுலுவிற்கு ஒரு சோதனைக் கட்டம். மூளையில் ஏற்பட்ட ஒரு பாதிப்பினால் வலது கையும் காலும் செயல் இழந்தன. 'என் ஓவியங்களின் பாணியை 'கோபுலு ஸ்ட்ரோக்ஸ்' என்று புகழ்வார்கள். ஆனால் பாருங்கள் .. எனக்கே ஸ்ட்ரோக் வந்துவிட்டது' என்று அந்த இக்கட்டான நேரத்திலும் தன் நகைச்சுவையை இழக்காதவர் கோபுலு. மருத்துவருடைய ஆலோசனையின் பேரில் இடது கையால் வரைந்து பழகினார். பிறகு வலது கையும் இயல்பான பழக்கத்திற்கு வந்து விட்டதால் இருகைகளிலுமே வரையும் திறனைப் பெற்றார். கலைஞர்களுக்கு விபத்துகளும் ஒருவகையில் வரம் போலும். ஒருபுறம் தன் கவனத்தை விளம்பரத் துறையில் செலுத்திக் கொண்டிருந்தாலும் இன்னொரு புறம் பத்திரிகைகளுக்கு ஓவியம் வரைவதையும் விடவில்லை.

1991-ல்  கருணாநிதி கையினால் கலைமாமணி விருது, 1999-ல் எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் விருது, 2000-ல் முரசொலி அறக்கட்டளை விருது உள்பட பல விருதுகளை வாங்கியுள்ளார். 'ஒரு கார்ட்டூனிஸ்டின் அடிப்படை பண்பானது மனித நேயமும் நகைச்சுவையும் விமர்சனமும் கொண்டதாக இருக்க வேண்டும். சமூகத்தைப் பிரதிபலிக்கும் படைப்புகளை உருவாக்க வேண்டும்' என்பது இவரது கருத்து. தன்னுடைய சித்திரங்களில் உருவாகும் மனிதர்களைப் போலவே கோபுலுவும் எப்போதும் நகைச்சுவையும் உற்சாகமும் கொண்டிருந்த மனிதராக இருந்தார் என்று அவருடன் பழகிய நண்பர்கள் கூறுகிறார்கள். தனது குருவான மாலியைத் தவிர அமெரிக்க சித்திரக்காரரான நார்மன் ராக்வெல் மற்றும் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட்டான டேவிட் லோ ஆகியோருடைய கோட்டோவியங்களின் பாதிப்புகளையும் தன் படைப்புகளில் கொண்டிருந்தார்.

தனது 91வது வயது வரையிலும் கூட உற்சாகமாக இயங்கி வந்த கோபுலு, உடல்நலக்குறைவினால் சமீபத்தில்  மறைந்து போனாலும் அவர் உருவாக்கிய கோடுகளும் வண்ணங்களும் அபாரமான நகைச்சுவையும் காலத்திலும் வாசகர்களின் மனதிலும் அப்படியே அழியாமல் உறைந்திருக்கும்.
 
suresh kannan

1 comment:

வரதராஜலு .பூ said...

சுவாரஸ்யமான மனிதரைப் பற்றி சுவாரஸ்யமான கட்டுரை. இன்ஃபர்மேடிவ்

//'என் ஓவியங்களின் பாணியை 'கோபுலு ஸ்ட்ரோக்ஸ்' என்று புகழ்வார்கள். ஆனால் பாருங்கள் .. எனக்கே ஸ்ட்ரோக் வந்துவிட்டது' என்று அந்த இக்கட்டான நேரத்திலும் தன் நகைச்சுவையை இழக்காதவர்//

//கலைஞர்களுக்கு விபத்துகளும் ஒருவகையில் வரம்//

ஃபென்டாஸ்டிக்