Wednesday, November 20, 2019

தீபன்: புலம் பெயர்தலின் துயரம்




மதவாதம், பயங்கரவாதம், வன்முறை, சுற்றுச்சூழல் பாதிப்பு, பொருளாதார சமநிலையின்மை போன்று பல பிரச்சினைகளை சமகால உலகம் சந்தித்துக் கொண்டு வருகிறது.  இந்த வரிசையில் புலம் பெயரும் அகதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முக்கியமாக இணைத்துக் கொள்ள வேண்டும். நேரடியாகவும் மறைமுகமாகவும் இவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய கண்ணிகளாக இருக்கின்றன.

மதம், இனம், நிறம் போன்ற பாகுபாடுகளிலிருந்து உற்பத்தியாகிற பகைமைகள் காரணமாக உலகெங்கிலும் ஆங்காங்கே நிகழும் உள்நாட்டுப் போர்களினால் பெரிதும் பாதிக்கப்படுவது அப்பாவியான சராசரி மக்கள். தங்களின் பாரம்பரிய மண்ணை விட்டு உறவுகளையும் உடமைகளையும் ஒரு துரதிர்ஷ்ட கணத்தில் பிரிந்து,  உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பல நடைமுறை இன்னல்களுக்கிடையில் நிச்சயமில்லாத எதிர்காலத்தை நோக்கி நகர்வதென்பது துன்பங்களிலேயே பெரிய துன்பம்.

மூன்றாம் உலக நாடுகளின் வளங்களைச் சுரண்டுவதற்காகவும் ஆயுத வியாபாரத்திற்காகவும் இவ்வகையான சண்டைகள் வல்லரசு நாடுகளால் தூண்டப்படும் வன்முறை அரசியல் தொடர்ந்து  நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. அகதிகள் உருவாவதற்கு ஒருவகையில் காரணமாக இருக்கும் வல்லரசுகளே, அவர்கள் அடைக்கலம் நாடி ஓடி வரும் போது கதவை அடைப்பதும் மூன்றாந்தர குடிமக்களாக கையாள்வதும் கொடுமையின் உச்சம்.

இந்த வகைமையிலான  ஒரு துன்பியல் நாடகத்தை இயல்பான திரைமொழியில் விவரிக்கிறது தீபன் என்கிற  பிரெஞ்சு திரைப்படம். எழுத்தாளர் ஷோபாசக்தி, இத்திரைப்படத்தில் பிரதான பாத்திரங்களில் ஒன்றில் நடித்துள்ளார்.

***

ஈழப் போராளியான சிவதாசன், போரில் இறந்து போன தன் சகாக்களின் உடல்களை எரிக்கும் காட்சியோடு திரைப்படம் துவங்குகிறது. தன்னுடைய சீருடையையும்  நெருப்பில் எரித்து விட்டு சிவில் உடைக்கு மாறுகிறான். போரின் மீது அவனுக்கு ஏற்பட்டிருக்கும் மனவிலகலையும் கசப்பையும் வெளிப்படுத்தும் அடையாளமாக அது அமைந்திருக்கிறது. அவனது குடும்பத்தை இந்தப் போரில் இழந்திருக்கிறான்.

பிரான்ஸிற்கு புலம் பெயர்வது அவனது திட்டம். இறந்து போனவர்களின் கடவுச்சீட்டுகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதன் படி அவனுடைய புதிய அடையாளப் பெயர் - தீபன். மனைவியாக யாழினியும், மகளாக இளையாளும் கிடைக்கிறார்கள். ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத இந்த மூன்று அந்நிய நபர்களும் சூழல் காரணமாக 'ஒட்ட வைத்த' ஒரு குடும்பமாக பிரான்ஸிற்கு செல்வதும் அங்குள்ள புதிய சூழலில், கலாசாரத்தில் தம்மை தகவமைத்துக் கொள்ள போராடும் காட்சிகளோடும் பயணிக்கிறது இந்த திரைப்படம்.


இவர்களுடனான பயணத்தில், புலம் பெயரும் ஒரு குடும்பத்தின் அகம் மற்றும் புறம் சார்ந்த சிக்கல்களை பார்வையாளர்களாகிய நாமும் அறியவும் உணரவும் முடிகிறது. இத்திரைப்படத்தை இயக்கிய Jacques Audiard-ன் முந்தைய சில படங்களைப் பார்த்திருக்கிறேன்.  A Prophet (2009)  Rust and Bone (2012) ஆகிய திரைப்படங்களில், புதிய சூழலுக்குள் விழ நேரும் ஒருவன், அங்குள்ள வன்முறை உள்ளிட்ட இதர சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பதுதான் மையமாக இருக்கும். 'தீபன்' திரைப்படமும் ஏறத்தாழ அந்தக் கருத்தாக்கத்தை ஒட்டியே அமைந்திருக்கிறது.

***

லீனா மணிமேகலை இயக்கி 'செங்கடல்' என்கிற சுயாதீன படைப்பில் நடித்திருந்த அனுபவம் மட்டுமே எழுத்தாளர் ஷோபாசக்திக்கு இருந்தாலும், இத்திரைப்படத்தில் ஒரு தொழில்முறை நடிகரைப் போல் அபாரமான பங்களிப்பை தந்திருக்கிறார். இயக்குநர் அவ்வாறாக உபயோகப்படுத்தியிருக்கிறார் என்றும் கூட சொல்லலாம். கதாபாத்திரத்தின் படி 'தீபன்' ஒரு முன்னாள் போராளி, இந்நாள் அகதி.  உண்மையாகவே  முறையே அந்தந்த நிலைகளில் இருந்த/இருக்கிற ஷோபாசக்திக்கு இந்தப் பாத்திரத்தை உள்வாங்கி நடிப்பதற்கு அவை கூடுதல் பலமாக இருந்திருக்கக்கூடும். பெரும்பாலான காட்சிகளில் இறுக்கமான, தீவிரமான முகத்துடன் அந்தப் பாத்திரத்தின் வடிவமைப்பிற்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்.

'உங்களுக்கு சிரிக்கவே தெரியாது. நகைச்சுவை உணர்வே கிடையாது அதுதான் பிரச்சினை' என்கிறார் அவனது 'மனைவி' யாழினி. 'இங்கு (பிரான்சில்) எதற்காக சிரிக்கிறார்கள் என்றே தெரியவில்லை' என்று அவன் குறைபட்டுக் கொள்வதற்கு அவள் தரும் பதில் அது. மிக அற்புதமான காட்சி அது. அதுவரை விலகலாக இருந்த இருவரும் ஒருவரையொருவர் அந்தரங்கமாக தொட்டுக் கொள்வதற்கான முதல் துவக்கம் அது. பிறகு உடலையும் தாண்டிய நேசமாக அது மலர்கிறது. அந்த மூவருமே அதுவரை ஒருவரையொருவர் கடுமையாக வெறுக்கும் உணர்வும் வேறு வழியில்லாத சூழலில் சகித்துக் கொள்ளும் 'பிளாஸ்டிக்'தனமான உறவும் நுட்பமான காட்சிகளின் வழியாக  நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

இளையராஜாவின் இசை என்பது தமிழர்களின்  வாழ்வில் ஒரு பகுதியாக இணைந்தது. இதில் ஈழத் தமிழர்களும் விதிவிலக்கல்ல. இதுவரையான தமிழ் சினிமாவில் இளையராஜாவின் பாடலும் இசையும், துண்டு துண்டாக நிறைய பயன்படுத்தப்பட்டுள்ளன. காதலுணர்வை, காமத்தை, ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தை, தேர்ந்தெடுக்கப்பட்ட உணர்வை வெளிப்படுத்தும் விதமாக பலவகைகளில் உபயோகமாகியுள்ளன. ஆனால் இந்த திரைப்படத்தில், ஒரு சில நிமிடங்களில் கடந்து போனாலும்,  இளையராஜாவின் பாடலொன்று அத்தனை பொருத்தமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை ஒரு பிரெஞ்சு இயக்குநர் சாதித்திருக்கிறார் என்பது வியப்பை ஏற்படுத்துகிறது.

யாழினி தன்னை விட்டு தப்பிச் செல்வதை நினைத்து தீபன் முதலில் ஆத்திரப்பட்டாலும் பிறகு நிதானமான ஒரு மனநிலையில் அதை அனுமதிக்கிறான். ஆனால் அந்த பிரிவை தாங்க இயலாத சூழலில் ஒரு பாரில் மதுவருந்திக் கொண்டிருக்கும் போது பின்னணியில் இளையராஜாவின் ஒரு பாடல் ஒலிக்கிறது.  'ஓடுற நரியில ஒரு  நரி கிழநரிதான், இங்கு ஆடுற நரியில பல நரி குள்ளநரிதான், ஒண்ணுக்கும் ஒண்ணுக்கும் அடிதடிதான், மண்ணுக்குப் போகிற உலகத்திலே' .. இந்தப் பாடலை கடுமையான துயரத்துடன் தீபன் அழுது கொண்டே கூடவே கசப்புடன் பாடும் ஒரு காட்சி அபாரமானது. இந்த வரிகள் படத்தின் மையத்திற்கும் கூட தத்துவார்த்த நோக்கில் பொருந்திப் போவது ஆச்சரியமான தற்செயல்.

இதே போன்று இன்னொரு காட்சியின் தனிமையிலும் ஓர் ஆவேசமான பாடலை தீபன் பாடுகிறான். பிரான்ஸிற்கு வரும் முதுநிலை போராளி ஒருவர், தீபனிடம் 'ஆயுதம் வாங்க பணம் திரட்ட வேண்டும்' என்று சொல்லும் போது 'எதற்கு? என் குடும்பம்  முழுவதையும் இழந்து விட்டேன். என்னைப் பொருத்த வரை போர்  முடிந்து விட்டது' என்று சொல்லி உடல் முழுக்க பலத்த உதைகள் வாங்குகிறான் தீபன். ஒரு காலத்தில் தீவிரமாக கொண்டிருந்த கொள்கைகளும் நம்பிக்கைகளும் வீழ்ச்சியின் நுனியில் பொருள் இழந்து போகும் கசப்பை உணர்த்தும் காட்சியது.

***

யாழினியாக நடித்திருப்பவர் காளீஸ்வரி ஸ்ரீனிவாசன். சென்னையைச் சார்ந்தவர். நாடக குழுக்களில் இயங்கிய அனுபவமுள்ளவர். இவரின் பாத்திரமும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை உணர்ந்து நடித்துள்ளார் இவர். உயிர் தப்புதலுக்காக, தன் இருப்பின் நீட்டித்தலுக்காக ஒட்ட வைக்கப்பட்ட குடும்பத்தின் உறுப்பினர் என்கிற பிரக்ஞை இவருக்கு எப்போதும் உள்ளது. எனவே இவருக்கும் தீபனுக்கும் மகள் இளையாளுக்குமான உறவில் எவ்விதமான மெலோடிராமா சித்தரிப்பும் இல்லை. மனிதனின் ஆதார குணங்களுள் ஒன்றான சுயநலம் எனும் சுருதி இவருக்குள் ஓடிக் கொண்டேயிருக்கிறது. அது தவறானதொன்றும் கிடையாது.

போர்  சூழலில் எப்படியாவது தப்பிக்க வேண்டுமென்பதற்காக அநாதையாக நிற்கும் சிறுமியை தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருகிறார் யாழினி. என்றாலும் தீபனை சார்ந்திருக்க வேண்டிய அவசியம். லண்டனில் உள்ள தன் உறவினரிடம் சென்று விடுவதுதான் இவரது திட்டம். ஆனால் சூழல் அவரை  பிரான்ஸிற்கு இட்டுச் செல்கிறது. பணிக்குச் செல்ல வற்புறுத்தும் தீபனிடம் 'எல்லோரும் என்னை ஒரு மாதிரியாக பார்க்கிறாங்கோ' என்று சங்கடப்படுகிறார். ஆனால் மெல்ல மெல்ல அந்த சூழலுக்கு தன்னைப் பொருத்திக் கொள்ளும் காட்சிகள் இயல்பான பரிணாமத்துடன் நகர்கின்றன.

அவர்கள் வசிக்கும் குடியிருப்பு போதைப் பொருள் வணிகர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அடிக்கடி துப்பாக்கி மோதல்கள் நடக்கின்றன. போர் சூழலில் இருப்பவர்களுக்கு அல்லது அங்கிருந்து தப்பியவர்களுக்கு ஒரு துப்பாக்கி வெடிக்கும் சத்தமானது அவர்களின் ஆழ்மனதில் எவ்விதமாக மரணத்தின் குறியீடாக பதிந்திருக்கும் என்பதற்கான நிரூபணங்கள் இத்திரைப்படத்தில் உள்ளன. நெருப்பில் இருந்து தப்பித்து நீரில் மூழ்கி தத்தளிக்கும் அவல நகைச்சுவை கதையாக, யாழினிக்கு துப்பாக்கி வெடிக்கும் இந்த சூழல் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. தீபனுக்குத் தெரியாமல் அங்கிருந்து தப்ப முயன்று ரயில் நிலையத்தில் பிடிபடுகிறாள். 'அங்கிருந்த அளவிற்கான பயங்கர சூழல் இங்கில்லை, தீபன் சமாதானப்படுத்த முயலும் போது 'ஆம். அங்கு நீங்கள்தானே சுட்டுக் கொண்டிருந்தீங்கோ' என்று சொல்லி அடிபடுகிறாள். புலிகளின் மீதான விமர்சனங்கள் இது போல் ஓரிரு காட்சிகளில் என்றாலும் வலிமையான குற்றச்சாட்டுடன் கடந்து போகின்றன.

தான் பணிபுரியும் வீட்டினுள் உள்ள போதை மாஃபியா இளைஞனை இவளுக்கு பிடித்துப் போகிறது. அது சார்ந்த காட்சிகள் மிக நுட்பமாகவே பதிவாகியுள்ளன. அவன் 'தீபனைப்' பற்றி விசாரிக்கும் போது 'அவன் என்ட மனுசன் அல்ல' என்கிற உண்மையை முதலில் இயல்பாக கூறுகிறாள். ஆனால் பிறிதொரு காட்சியில் 'அவர் என்னோட புருஷன்' எனும் போது அவளுக்குள் நிகழ்ந்திருந்த அக மாற்றம் துல்லியமாக வெளிப்படுகிறது.

***

என்னளவில் இத்திரைப்படத்தின் மிகப் பரிதாபமான பாத்திரம் என்பது இளையாளுடையதுதான். Claudine Vinasithamby என்கிற சிறுமி இந்தப் பாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறாள். தீபன் மற்றும் யாழினியின் சித்தரிப்புகளோடு ஒப்பிடும் போது இவள் தோன்றும் காட்சிகள் குறைவுதான் என்றாலும் வலிமையாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. தன் குடும்பத்தை இழந்து போன துக்கம் ஒருபுறமிருக்க இரண்டு அந்நியர்களை நம்பி வேறு ஒரு சூழலுக்கு பயணப்பட வேண்டிய நிர்ப்பந்தம். புலம் பெயர் பயணத்தில் உளரீதியாக அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளாகத்தான் இருக்கும். மல்லாந்த நிலையில் கடற்கரையில் பிணமாக ஒதுங்கிய, சிரிய அகதியான Alan Kurdi எனும் சிறுவனின் சித்திரம் சர்வதேச ஊடகங்களில் வெளியாகி உலகத்தின்  மனச்சாட்சியை உலுக்கிய அந்த புகைப்படம் நினைவில் வந்து போகிறது.

தன்னுடன் விளையாடாமல் ஒதுக்கும் சக சிறுமியின் மீது பாய்ந்து சண்டை பிடிப்பதிலிருந்து, தன்னை வெறுக்கும் யாழினியிடம்  'உங்களுக்கு தம்பி, தங்கச்சி என்று யாருமில்லையா?, அவர்கள் மீது செலுத்திய அன்பைப் போல ஏன் என் மேல் செலுத்தக் கூடாது" என்று கேட்பது வரை அன்பிற்கான ஏக்கமும் உறவுகளை இழந்ததின் துக்கமும் இவளது கண்களில் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. எந்தவொரு புதிய விஷயத்தையும் குழந்தைகள் எளிதில் கற்றுக் கொள்வார்கள் எனும்படி பிரெஞ்சு மொழியின் சந்தேகங்ளை தன் பெற்றோருக்கு விளக்கும்படியாக தேறி நிற்கிறாள்.

மாஃபியா இளைஞனாக நடித்திருக்கும் Vincent Rottiers-ன் நடிப்பும் பாராட்டத்தக்கது. இவர் யாழினியுடன் உரையாடும் காட்சிகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

***

இத்திரைப்படத்தில் எந்தவொரு விஷயமும் பார்வையாளர்களுக்கு வலிந்து சொல்லப்படுவதில்லை; நியாயப்படுத்தப்படுவதுமில்லை. தவளைப் பாய்ச்சலின் வசீகரத்துடன் காட்சிகள் நகர்கின்றன. ஒவ்வொன்றையும் அவரவர் நோக்கில் அர்த்தப்படுத்திக் கொள்வது பார்வையாளர்களின் கடமையாகிறது. பிரான்ஸில் புதிதாக சேரும் இளையாளிடம் 'ஏன் உங்கள் ஊரில் படிக்கவில்லை' என்றொரு கேள்வி கேட்கப்படுகிறது. 'அரசாங்கம் எங்கள் பள்ளியை இடித்து விட்டது' என்கிறாள். 'என்னது அரசாங்கமா?' என்று முகத்தில் அதிர்ச்சி காட்டுகிறாள் பள்ளி நிர்வாகி.

புலம் பெயர்ந்த இடத்தில் அமைதியாக வாழத்தான் விரும்புகிறான் தீபன். போரும் வன்முறையும் அவனுக்குள் அத்தனை கசப்பை நிறைத்திருக்கிறது. எனவே அங்குள்ள இழிவையெல்லாம் சகித்துக் கொள்கிறான். கட்டிடத்தின் ஒரு அறையை சுத்தம் செய்யச் செல்லும் போது அங்குள்ள முரட்டு இளைஞர்கள், இவனை ஓரமாக அமர்ந்து காத்திருக்கச் சொல்கிறார்கள். முன்னாள் போராளியான தீபன், மூலையில் குந்தி அமர்ந்தபடி முகத்தில் அவமானமும் ஆனால் சற்று கம்பீரமும் வெளிப்படும்படி புகையை வலிக்கும் ஓர் அண்மைக்கோண காட்சியில் ஷோபாசக்தியின் முகபாவம்  அபாரமாக இருந்தது.

ஆனால் புதிய இடத்திலும் வன்முறையின் நிழல் தொடரும் போது, அதன் மூலம் தனக்குப் பிரியமானவளை இழக்கலாம் என்கிற சூழல் ஏற்படும் போது அவனுக்குள்  இருந்த போராளிக் குணம் விழித்துக் கொள்கிறது. 'No Fire Zone' என்கிற எல்லைக்கோட்டை நிர்ணயித்து வன்முறையாளர்களுக்கு எச்சரிக்கை செய்கிறான். ஆனால் இறுதிக் காட்சியில் நிகழும் சண்டைக் காட்சிகள் எல்லாம் இந்த திரைப்படத்தை ஒரு சாகச கேளிக்கை சினிமாவின் தரத்திற்கு கீழிறக்குவது தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

இத்திரைப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் அண்மைக் கோணங்களால் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பாத்திரங்களின் முகபாவங்கள் துல்லியமாக வெளிப்படும்படி உருவாக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் குடும்பங்களின் ஆலய வழிபாட்டுக் காட்சியொன்றை உதாரணமாக சொல்லலாம். யாழினி பணிக்குச் செல்லும் முதல் நாளில், படிக்கட்டுகளின் வழியாக ஏறிச் செல்லும் காட்சிகள் அவளின் அகம் சார்ந்த அச்சத்தையும் படபடப்பையும் சிறப்பாக பிரதிபலிக்கின்றன. அவசியமான இடங்களில் ஒலிக்கும், இந்திய மரபு சார்ந்த பின்னணி இசை காட்சிகளுடன்  ஒத்திசைவாக அமர்ந்திருக்கிறது.

***


இறுதிக் காட்சிகளைத் தவிர எந்தவொரு அகதியின் துயர வாழ்வியலுக்கும் பொருத்திப் பார்க்கும்படியான பொதுத்தன்மையை இத்திரைப்படம் கொண்டிருக்கிறது. உயிர் தப்ப வேண்டி மூன்றாம் உலக நாடுகளிலிருந்து ஐரோப்பிய தேசங்களில் தஞ்சமடையும் அகதிகள், புதிய சூழலில் தன்னைப் பொருத்திக் கொள்வதற்கான போராட்டங்கள், சிக்கல்கள் போன்றவை சிறப்பாக பதிவாக்கப்பட்டிருக்கின்றன. அரசியல் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டிய சர்ச்சைகளும் இல்லாமலில்லை. ஒரு சராசரி ஐரோப்பியனின் மனதில்  இத்திரைப்படத்தின் இறுதிக்காட்சி சாகசங்கள் எம்மாதிரியான எதிர்வினையை உற்பத்தி செய்யும் என எண்ணிப் பார்க்கிறேன். அப்பாவி மக்களோடு கலந்து வெளியேறும் போராளிகள் புதிய இடத்திலும் வன்முறை கலாச்சாரத்தை பரவச் செய்கிறார்கள் என்கிற பொருளைத் தரும் ஆபத்தையும் இத்திரைப்படம் கொண்டிருக்கிறதா என்கிற கேள்வி எழாமல் இல்லை.

கான் திரைப்பட விழாவில் மிக உயரிய விருதான Palme d'Or கவுரவத்தை இத்திரைப்படம் பெற்றிருப்பது பொருத்தமான தேர்வே. ஈழப்பிரச்சினை என்பது அரசியல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் தமிழக மனங்களுக்கு மிகவும் நெருக்கமானது. ஈழ அகதிகளின் வாழ்வியல் சிக்கல் என்பது தமிழகத்திலும் உள்ள பிரச்சினைதான். உணர்வுச் சுரண்டலின் நோக்கில் அரசியல் ஆதாய கூப்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் இந்தப் பிரச்சினை சார்ந்து எந்தவொரு நுட்பமான தமிழ் சினிமாவும் இதுவரை உருவாகாதாதும் அதற்காக உள்ள நடைமுறைத்தடைகளும் முரண்நகையாக கொள்ளக்கூடிய விஷயமாக இருக்கிறது.



(உயிர்மை இதழில் பிரசுரமானது) 

 
suresh kannan

No comments: