Sunday, May 22, 2016

ஈராக்கில் உலவும் தமிழர்


ஒருவர் தமது எழுத்தை மற்றவர்கள் பரவலாக அறியச் செய்தவற்கு நாளிதழ், மாத இதழ் போன்ற அச்சு ஊடகங்கள் மட்டுமே வழி என்றிருந்த காலம்  ஒன்றிருந்தது. சுமாராக எழுதுபவர்கள் அதில் பங்கு பெற முடியாத படி கூர்மையாகவும்  கோர்வையாகவும் சுவாரசியமாகவும எழுதுபவர்கள் மட்டுமே அதில் பங்குபெறக்கூடிய பொதுவான சவால்கள் இருந்தன. ஆனால் இணையம்  என்கிற ஊடகம் இங்கு புழக்கத்தி்ல் வந்த பிறகு இந்தச் சுவரெல்லாம் உடைந்தது. உங்கள் பெயரில் வலைத்தளம் துவங்கி எண்ணங்களை எழுதி அதை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தால் ஒரு சிற்றிதழின் வாசகர் எண்ணிக்கைக்கு நிகரான நபர்கள் அதைக் காணக்கூடிய சாத்தியம்  உண்டாயிற்று. ஒரு சராசரியான நபர் கூட தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துவதற்கான வெளியை இணையம் உருவாக்கியது.  இணையத்தின் இந்த அபாரமான வளர்ச்சி காரணமாக அச்சு ஊடகத்தில் மட்டுமே எழுதி வந்த எழுத்தாளர்கள் கூட இணையத்தின் பக்கம் நகர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கட்டற்ற சுதந்திரம் கொண்ட தன்மையே ஒருவகையில் இணையத்தின் பலமாக இருந்தாலும் இன்னொரு வகையில் பலவீனமாகவும் உள்ளது.

இணையம் தந்திருக்கும் இந்த தங்க வாய்ப்பை பலரும் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்று பார்த்தால் பொதுவாக பெரிதும் ஏமாற்றமே. பொழுதுபோக்காக திண்ணைகளில் அமர்ந்து வெற்று உரையாடல்களை நிகழ்த்தும் முந்தைய காலத்தைப் போலவேதான் இணையத்தை பயன்படுத்துபவர்களும் அரசியல், சினிமா போன்றவற்றைச் சார்ந்த வம்புகளால் இணையத்தை நிறைக்கிறார்கள். மிக அரிதாகவே ஆக்கப்பூர்வமான நல்ல எழுத்தை காண முடிகிறது. பல்வேறு காரணங்களால் வெளி நாடுகளில் புலம் பெயர்ந்திருக்கும் தமிழர்களும் பொதுவாக இந்த வம்பாளர்களின வரிசையில் இருக்கிறார்கள். எங்கெங்கோ பல்வேறு கலாசார பின்னணிகளில்  வாழ்ந்தாலும் அவர்களின் கவனம் முழுக்க தமிழக அரசியல், சினிமா குறித்த இன்னபிறவற்றின் மீதிலேதான் குவிந்திருக்கிறது. தங்களின் மண்ணை விட்டுப் புரிந்த ஏக்கத்தை இவ்வாறான உரையாடல்களின் மூலமாக தீர்த்துக் கொள்கிறார்களோ என்று தோன்றினாலும் ஏன் அவர்கள் தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அயல் பிரதேசத்தின் கலாசாரம், சமூகம், வரலாறு, அரசியல், பண்பாட்டு அடையாளங்கள், உள்ளுர் விஷயங்கள் போன்றவற்றைப் பற்றி அதிகம் எழுதாமல் இருக்கிறார்கள் என்கிற மனக்குறை என்னிடம் நீண்ட காலமாக உண்டு.

ஓர் அயல் பிரதேசத்தின் சுற்றுலாத்தளங்களை சில மணி நேரங்கள் மட்டுமே  கண்டு விட்டாலே அந்தப் பிரதேசத்தின் கலாசாரத்தைப் பற்றி அறிந்து விட முடியாது. நூல்கள் மற்றும் இணையத்தளங்களின் மூலம்  கூட அது சாத்தியமாகாது. அந்தப் பிரதேசத்தின் உட்பகுதிகளில் சில காலம் வாழ்ந்து அந்த மக்களோடு இணைந்து பழகி வாழ்ந்து பார்ப்பதன் மூலமே அந்தக் கலாசாரத்தின் ஆன்மாவை நாம் சிறிதாவது உணர முடியும். சொந்த மண்ணை விட்டுப் பிரிந்திருப்பது துயரமான விஷயம்தான் என்றாலும் இந்த வாய்ப்பு அமைந்திருக்கும் புலம் பெயர் தமிழர்கள் இந்த வகையில் அதிகம் எழுதுவது அவசியமானது என்று கருதுகிறேன்.

***

தற்போது ஈராக்கில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் இந்த நோக்கில் அபாரமாக செயல்படுகிறார். மதுரை, கல்லுப்பட்டியைச் சேர்ந்த இவர்  2002-ம் ஆண்டு முதல் மஸ்கட், கத்தார், குவைத், அபுதாபி போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தாலும் 2012 முதல் ஈராக்கில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். இந்த வாய்ப்பின் மூலம் கிடைத்த அந்த தேசத்தினுடான தம்முடைய நேரடி நடைமுறை அனுபவங்களை இணையத்தில் தொடர்ந்து  எழுதி வந்தார்.

அந்த அனுபவங்களின் மேம்படுத்தப்பட்ட பதிவுகள் ஒரு தனி நூலாக 'ஈராக் - நேற்றும் இன்றும்' என்கிற தலைப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ளது. ஓர் அயல் தேசத்தைப் பற்றிய ஒரு தமிழரின்  நேரடி அனுபவங்களின் தொகுப்பு என்கிற வகையில்  இதுவொரு முன்னோடியான முயற்சி எனலாம்.

***

சுமேரியா நாகரிகத்தின் பிறப்பிடமான ஈராக் தேசத்தின் பழமையான பின்னணி, அதன் பூர்வகுடிகள், அந்நிய படையெடுப்பு, பிரிட்டிஷ் காலனியாதிக்கம் போன்ற ஆதாரமான  விவரங்களோடு துவங்கும் நூல், பிறகு ஈராக் 1932-ல் சுதந்திரம் பெற்றாலும் மன்னராட்சியின் கீழ் தொடர்ந்து பல்வேறு ஆட்சியாளர்களின் சிக்கி சதாம் ஹூசைனிடமிருந்து விடுபட்டு தற்போது மெல்ல நகர்ந்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸின் ஆக்ரமிப்பு வரை விரிவான தகவல்களுடன் உரையாடுகிறது. போர் மேகங்கள் நிலையாக சூழ்ந்திருக்கும் அபாயமும் அதன் மூலம் சமூகத்தில் நிலவும் அச்சமும் இருப்பின் நிச்சயமின்மையும் உறுத்தாமல் இயல்பாக விவரிக்கப்பட்டிருக்கின்றன.

இன்றைய ஈராக் 'ரிபப்ளிக் ஆஃப் ஈராக்' என அறியப்பட்டாலும் மூன்று துண்டுகளாக பிரிந்துள்ளது. ஒன்று மெயின்லேண்ட் ஈராக் எனப்படும் அதிகாரபூர்வ பகுதி, தனி நாட்டு கோரிக்கையுடன் பல ஆண்டுகளாக போராடி வரும் குர்திஸ்தான் பகுதி, இவை தவிர பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் ஆக்ரமிப்பில் உள்ள பகுதிகள். மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கையைக் கொண்ட ஷியா பிரிவினருக்கும் ஸன்னி பிரிவினருக்கும் ஓயாத மோதலும் துப்பாக்கிச் சூடும் என்று அன்றாட வன்முறையை மிக சகஜமான கொண்ட வாழ்க்கை. எண்ணெய் வளம் மிக்க தேசமாக இருந்தாலும் உள்நாட்டு குழப்பங்களாலும் தொடர்ச்சியான போராலும் முதலாளித்துவ நாடுகளின் சுயநல தலையீடுகளாலும் ஏழ்மையான மக்களே அதிகம். செல்வந்தர்களின் சதவீதம் குறைவு.

ஈராக்கின் கலாசாரம், உணவுப்பழக்கம், மின்சாரம் உள்ளிட்ட அன்றாட வசதிகளின் பற்றாக்குறை, மக்களின் அணுகுமுறை, பொருளாதாரம், எண்ணைய் அரசியல், உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான பாபிலோன் போன்ற சுற்றுலா தளங்கள்.. என்று அந்த நிலவியலின் நேரடிக் காட்சிகளை மிக சுவாரசியமான விவரணைகளுடன் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். ஆந்திர தொழிலாளர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் நடமாட்டம் குறைவாகவே உள்ளது என்றாலும் இந்தியர்கள் என்றாலே ஈராக்கியர்களுக்கு அன்பும் மதிப்பும் இருப்பதை பல அனுபவங்களின் வாயிலாக விவரிக்கிறார்  ஜெயக்குமார். மீன் வளம் அதிகமுள்ள ஈராக்கில் அசைவ உணவுக்காரர்களுக்கான உணவுகளே அதிகம் கிடைக்கும் போது சைவப்பழக்கம் உள்ள நூலாசிரியரின் அவதியும் மொழிப்பிரச்சினையும் சங்கடத்தை மறைத்துக் கொண்ட சுவாரசியத்துடன் விரிகின்றன. ஈராக்கில் நுழைந்த முதல் நாள் அன்று ஒரு காஃபிக்காக அவர் நடத்திய போராட்டத்தை வாசிக்கும் போது வாய் விட்டு சிரிக்கத் தோன்றுகிறது.

இத்தனை சங்கடங்கள் இருந்தாலும் ஒருமுறை கூட ஏன் இங்கு வந்து மாட்டிக் கொண்டோம் என்று தோன்றவேயில்லை என்கிற அவரின் கூற்றிலிருந்து புதிய உலகங்களை ஆராய விரும்பும் துணிச்சல் மிக்க ஆர்வமும் பாதுகாப்பின்மைகளுக்கு இடையே உணரும் பாதுகாப்பின் முரணையும் நாம் அறிய முடிகிறது. வழக்கமான 'உலக செய்திகளிலும்' இணையத் தளங்களிலும் ஈராக் பற்றி நாம் மேலோட்டமாக அறிந்திருக்கும் விவரங்களை கலைத்துப் போடுகிறது இந்த நூல். நூலாசிரியரின் நேரடி அனுபவங்கள் என்கிற காரணத்தினாலேயே அதற்குரிய முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது.


****

ஈராக் - நேற்றும் இன்றும்
ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன்
தடம் பதிப்பகம்
முதல் பதிப்பு: 2016
விலை: ரூ.150·-
மின்னஞ்சல்: thadampathippagam@gmail.com

அம்ருதா - ஏப்ரல் 2016-ல் வெளியான கட்டுரை (நன்றி: அம்ருதா)


suresh kannan

No comments: