Monday, May 23, 2016

அகிராவின் ‘தெரு நாய்’

ஜப்பானிய திரைப்பட மேதையான ‘அகிரா குரசேவா’ மொத்தம் 30 திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் அவற்றில் பொதுவாக சில திரைப்படங்களைப் பற்றிய உரையாடல்  மட்டுமே தமிழ் சூழலில் திரும்பத் திரும்ப நிகழ்கின்றன.  உதாரணமாக ரஷோமான் (1950), செவன் சாமுராய் (1954) போன்ற படைப்புகள். இன்னும் சற்று உள்ளே நகர்ந்தால் தஸ்தாயேவ்ஸ்கியின் நாவலையொட்டி உருவான தி இடியட் (1951), மற்றும் இகிரு (1952) போன்ற திரைப்படங்கள். அகிராவின் அதிகம் உரையாடப்படாத உன்னதமான திரைப்படங்கள் மேலும் பல இருக்கின்றன. அவற்றில் ஒன்று, Stray Dog. 1949-ல் வெளியானது. இது அவருடைய ஒன்பதாவது திரைப்படம்.

அகிராவின் அதுவரையிலான திரைப்படங்களோடு ஒப்பிடும் போது இயக்கத்தின் நுட்பமும் காட்சிப்படுத்துதலின் செய்நேர்த்தியும் சிறப்பாக அமைந்த திரைப்படம் இது. அவருடைய முதல் மாஸ்டர்பீஸாக இத்திரைப்படத்தை விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். இதில் அவர் காட்சிகளைக் கையாண்டிருக்கும் விதம், அவற்றின் உருவாக்க முறைகள், காமிராவின் கோணங்கள் ஆகியவற்றைப் பார்த்தால் இன்றும் கூட பிரமிப்பும் வியப்பும் ஏற்படுத்துபவைகளாக அமைகின்றன. ஆனால் ‘இது எனக்கு திருப்தியை ஏற்படுத்தாத திரைப்படம்’ என்கிறார் அகிரா. கலைநுட்பத்தின் முழுமையைத் தேட முயலும் கலைஞர்களுக்கு தம்முடைய படைப்புகளில் அந்தரங்கமான திருப்தி என்பது ஏற்படவே ஏற்படாது என்றே அதைக் கருத வேண்டும்.

இந்த திரைப்படம் வெளியான அடுத்த வருடத்தில் அதாவது 1950-ல் அவர் உருவாக்கிய ‘ரஷோமான்’ திரைப்படம் மூலமாகவே அவர் சர்வதேச அரங்குகளில் பிரத்யேகமாக கவனிக்கப்பட்டார். ஜப்பானிய திரைப்படங்களைப் பற்றிய கவனமும் சர்வதேச திரைப்பார்வையாளர்களுக்கிடையே எழுந்தது.


போருக்குப் பிந்தைய ஜப்பான். டோக்கியோவின் ஒரு கோடைக்காலம். இளநிலை காவல்துறையாக பணிபுரியும் முரகாமி (தோஷிரோ மிஃபுனே) ஒரு பேருந்து பயணத்தின் போது தன்னுடைய துப்பாக்கியை தொலைத்து விடுகிறார். பேருந்தில் இருந்து இறங்கி ஓடும் திருடனை கண்டு கொள்ளும் அவர் பதற்றத்துடன் அவனை சந்து பொந்துகளில் துரத்திச் சென்றாலும் பிடிக்க முடிவதில்லை. குற்றவுணர்வுடன் தன்னுடைய தவறை ஒப்புக் கொள்ளும் அவர் தன் பணியை ராஜினாமா செய்ய முன்வருகிறார். மிகவும் நல்லவரான அவருடைய மேலதிகாரி துப்பாக்கியைத் திரும்பப் பெறுவதற்கான கனிவான யோசனையைச் சொல்கிறார்.

முரகாமி தொலைந்து போன தன்னுடைய துப்பாக்கியைத் தேடிச் செல்லும் சம்பவங்கள் மூலம் டோக்கியோவின் அப்போதைய காலக்கட்டத்தின் சமூக பின்னணிக் காட்சிகள் மிக நுட்பமாக விரிகின்றன. பாலியல் தொழிலாளிகள், உதிரிக் குற்றவாளிகள், சில்லறை ரவுடிகள், கிளப்பில் ஆடும் நடன மங்கைகள், ராணுவத்திலிருந்து திரும்பி வேலையற்று தெருவில் உலவும் இளைஞர்கள் என்று பல மனிதர்கள் இதன் பின்னணயில் உலவுகிறார்கள்.

இத்திரைப்படத்தில் கோடையின் வெப்பம் இத்தனை உக்கிரமாக சித்தரிக்கப்பட்டிருப்பதைப் போன்று வேறு எந்த திரைப்படத்திலும் நான் கண்டதில்லை. இந்தியா போன்ற ஆசிய நாடுகளின் வெப்பநிலையை உணர்ந்தவர்கள் இந்தப் புழுக்கமான காட்சிகளை நெருக்கமாக உணர்வார்கள். அந்தளவிற்கு படம் முழுவதிலும் மனிதர்கள் வியர்வையைத் துடைத்துக் கொண்டும் விசிறிக் கொண்டும் புழுக்கத்தின் சலிப்போடு ஒருவரையொருவர் எரிச்சலோடும் கோபத்தோடும் அணுகுகிறார்கள்.

ஒரு நடனவிடுதியில் கவர்ச்சியாக நடனமாடும் இளம் மங்கைகள் தம்முடைய பணி முடிந்ததும் மேல் தளத்திலுள்ள தங்களின்  இருப்பிடத்திற்குச் சென்று வெட்டிச் சாய்க்கப்பட்ட மரங்கள் போல் ஒருவர் ஒருவராக அப்படியே தரையில் சாய்ந்து இளைப்பாறுகிறார்கள். அவர்களின் முகங்களிலும் உடலிலும் படிந்திருக்கும் வியர்வைத் துளிகள் அண்மைக் கோணத்தில் காட்டப்படுகின்றன. சில நிமிடங்களில் கடந்து போகும் இந்தக் காட்சியின் மூலம் நடனமாடும் அந்தப் பெண்களின் மீதான கவர்ச்சி சார்ந்த பிம்பத்தை அழித்து அவர்களின் உடல் சார்ந்த வலியையும் துயரத்தையும் பார்வையாளர்களுக்கு அபாரமாக கடத்தி விடுகிறார் அகிரா. கோடைக்காலப் பின்னணி என்பது ஒரு முக்கியமான பாத்திரமாகவே இத்திரைப்படத்தில் பதிவாகியிருக்கிறது.

**
தொலைந்து போன தன்னுடைய துப்பாக்கியை எவ்வாறு கண்டெடுப்பது என்கிற  குழப்பத்துடன் குற்றவுணர்வுடனும் பரபரப்பாகவும் தவிக்கும் முரகாமிக்கு அவனுடைய உயர் காவல் அதிகாரியான சட்டோ (டகாஷி ஷிமுரா) கனிவுடன் உதவுகிறார். காவல் பணியில் அதிக வருட அனுபவம் உள்ளவர் என்பதால் அவருக்கு குற்றவாளிகளின் உலகைப் பற்றி நன்கு அறிமுகமுள்ளது. ஒவ்வொரு குற்றவாளியின் தனிப்பட்ட தகவல்களை அறிந்தவராக இருக்கிறார். குற்றவாளிகளை அவர்களுடைய போக்கிலேயே விட்டு தகவல்களை சேகரிக்கும் காட்சிகள் அற்புதமாக இருக்கின்றன.

இந்த தேடலின் இடையில் ஒரு நாள் சட்டோ, முரகாமியை எதிர்பாராத ஆச்சரியமாக தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். அவருடைய மனைவியும் குழந்தைகளும் முரகாமியை அன்புடன் வரவேற்கிறார்கள். இருவரும் அமர்ந்து தங்களின் தொழில் சார்ந்த பிரச்சினைகளை மதுவருந்திக் கொண்டே உரையாடுகிறார்கள். முரகாமி கிளம்பும் போது குழந்தைகள் உறங்கி விடுகிறார்கள். பொம்மைகளின் இடையே குழந்தைகள் உறங்கும் காட்சியும் அதை பெற்றோரும் முரகாமியும் நின்று பார்க்கும் காட்சியும் காமிராவின் கோணமும் நெகிழ்வை ஏற்படுத்துபவையாக இருக்கிறது. ஒரு வீட்டின் குடும்பத்தலைவன் இரவில் வீட்டுக்கு வந்து உறங்கிக் கொண்டிருக்கும் தன் குழந்தையை ரசித்துக் கொண்டே அன்றைய நாளின் பணியின் களைப்பையும் சலிப்பையும் கடக்க முயலும் உணர்வை நினைவூட்டுபவையாக பதிவாகியிருக்கிறது அந்தக் காட்சி.

**

முரகாமியின் இந்தப் பயணத்தில் பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்கிறான். அவனுடைய தொலைந்து போன துப்பாக்கியின் மூலம் இதர சில குற்றங்களுக்கான விடைகள் கிடைக்கின்றன. தன்னிடமிருந்து துப்பாக்கியைத் திருடிச் சென்றவன் பற்றிய தகவலைப் பெறுவதற்காக ஜேப்படி பெண்ணொருத்தியை பின்தொடர்ந்து செல்கிறான். அவளோ இவனுக்கு பல வழிகளில் போக்கு காட்டினாலும் தப்பிக்க இயலவில்லை. அவள் தரும் தகவலின் படி கள்ள மார்க்கெட்டில் துப்பாக்கியைத் தேடிப் போகிறான். மிக நீண்ட இந்தக் காட்சிக்கோர்வையில் உதிரிக்குற்றவாளிகள் உட்பட பல மனிதர்கள் தென்படுகிறார்கள். இதற்கிடையில் அவனுடைய துப்பாக்கியைப் பயன்படுத்தி குற்றமொன்று நடைபெறுவதால் மிகுந்த பதட்டமடைகிறான் முரகாமி.

ஒவ்வொரு கண்ணியாக பின்தொடர்வதில் குற்றவாளியின் காதலியை கண்டுபிடிக்க நேர்கிறது. அவளோ தன் காதலனைப் பற்றிய எந்தவொரு தகவலையும் தர மறுக்கிறாள். முரகாமியின் உயர்நிலை அதிகாரியான சட்டோவை துப்பாக்கியில் சுட்டு விட்டு குற்றவாளி ஓடிவிடுகிறான். அவனுடைய காதலி மனம் மாறி முரகாமிக்கு குற்றவாளியிடம் இருப்பிடம் பற்றி சொல்ல சிலபல துரத்தலுக்குப் பிறகு அவனைப் பிடித்து விடுகிறான்.

குற்றவாளியும் முரகாமியைப் போலவே ராணுவத்தில் பணிபுரிந்து விட்டு ஊர்திரும்பியவன். போருக்குப் பின்னான வறுமை காரணமாக குற்றத் தொழிலில் ஈடுபடுகிறான். தன்னுடைய காதலி விரும்பிக் கேட்ட அதிக விலையுடைய ஆடையை வாங்குவதற்காகவே அவன் முரகாமியின் துப்பாக்கியைத் திருடி விற்று விடுகிறான். அவன் குற்றவாளியாக இருந்தாலும் அவனுடைய அன்பிற்காகவே முதலில் அவனுடைய காதலி காட்டித் தராமல் இருக்கிறாள்.  குற்றவாளியைப் போலவே முரகாமியும் ராணுவத்திலிருந்து திரும்பியவன்தான். அந்தச் சூழலே அவனை காவல்துறையில் இணைய வைக்கிறது. போருக்குப் பின்னதான சூழல் இருவேறு மனிதர்களை எதிரெதிர் திசையில் பயணம் செய்ய வைக்கிற முரணை மிக நுட்பமாக சுட்டிக் காட்டுகிறார் அகிரா குரசேவா.

**

படத்தின் துவக்கத்தில் பதட்டமுடனும் அச்சத்துடனும் காணப்படும் ஒரு நாயின் முகம் பரபரப்பான இசையின் பின்னணியில் நெருக்கமான அண்மைக் கோணத்தில் காட்டப்படுகிறது. முரகாமி துப்பாக்கியைத் தேடி கோடைக்காலத்தில் தெரு தெருவாக அலைந்து திரிவதின் ஒரு படிமமாகவே அந்த நாய் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.

பொதுவாக காவல்துறை அதிகாரி என்றாலே எளிய மக்களை அதட்டி ஒடுக்குபவராகவும் வன்முறையைச் செலுத்துபவராகவும் சித்தரிக்கப்படும் சூழ்நிலையில்  அவர்களும் பதட்டப்படும், அச்சப்படும் சாதாரண, எளிய நபர்களே என்கிற யதார்த்தத்தை பதிவு செய்கிறார் அகிரா. முரகாமிக்கு தன்னுடைய பணியை இழப்பதை விட துப்பாக்கியை அலட்சியமாக தொலைத்து விட்டோமே என்கிற குற்றவுணர்வுதான் அதிகம் அலைக்கழிக்கிறது. படம் பூராவும் பரபரப்பும் படபடப்புமாகவே அலைகிறார்.

தோஷிரோ மிஃபுனே இந்தப் பாத்திரத்தை மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறார். வேட்டைக்கு கிளம்பும் பசித்த விலங்கின் ஆர்வமும் குரூரமும் படபடப்பும் அவருடைய கண்களில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அவரது பிரத்யேகமான உடல்மொழியும் வேகமான அசைவுகளும் கூர்மையான பார்வையும் எப்போதும் போலவே சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தன்னுடைய பெரும்பாலான படங்களில் தோஷிரோ மிஃபுனே-வை அகிரா பயன்படுத்தியிருப்பதில் இருந்தே இந்தக் கூட்டணிக்குள்ள புரிந்துணர்வையும் நெருக்கத்தையும் அறிய முடியும்.

இதைப் போலவே முரகாமியின் உயர்நிலை காவல் அதிகாரியாக வரும் டகாஷி ஷிமுராவும் அற்புதமாக நடித்திருக்கிறார். குற்றவாளிகளின் வாழ்வியலும் அவர்களைப் பற்றிய உளவியலும் நன்கு அறிந்த அனுபவமுள்ள காவல்துறை பணியாளராக இருக்கும் அவர், முரகாமியைப் போல அல்லாமல் எவ்வித பதட்டமும் அல்லாமல் சமயோசிதமாக குற்றவாளிகளைக் கனிவுடன் கையாண்டு தகவல்களைப் பெறுகிறார்.

இன்னொன்று, இதில் சித்தரிக்கப்படுபவர்கள் உதிரிக்குற்றவாளிகளாக இருந்தாலும் காவல்துறையின் விசாரணைக்கு அவர்கள் அஞ்சி நடுங்குவதில்லை. தாங்கள் விரும்பாவிட்டால் சில கேள்விகளுக்கு பதில் அளிக்கத் தேவையில்லை என்கிற மனித உரிமையின் அடிப்படை சார்ந்த அறிவையும் பிரக்ஞையையும் கொண்டிருக்கிறார்கள். ஜேப்படி பெண், கள்ளத் துப்பாக்கி விற்கும் பெண், குற்றவாளியின் காதலி  என்று அனைவருமே விசாரணைக்கு அஞ்சாமல் தாங்களே விரும்பும் பட்சத்தில்தான் தகவல்களை அளிக்க முன்வருகிறார்கள்.

**

படத்தின் துவக்கக் காட்சியில் முரகாமி குற்றவாளியை துரத்திக் கொண்டு வரும் காட்சிகள், ஜேப்படி பெண்ணை துரத்தும் காட்சிகள், உதிரிக்குற்றவாளிகள் நிறைந்திருக்கும் கள்ளச் சந்தையில் முரகாமி சுற்றும் காட்சிகள், விளையாட்டு நடைபெறும் வெளிப்புறக் காட்சிகளையும் அரங்கக் காட்சிகளையும் இணைத்திருக்கும் கச்சிதம் போன்றவை ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநருக்கான மேதமையைக் காட்டுகின்றன.

அதிகாரத்தை வைத்திருப்பவர்கள், அதிகாரத்திற்கு உட்படுபவர்கள், அதை மீறும் குற்றவாளிகள் என்று ஏறத்தாழ பெரும்பாலோனோர் சூழ்நிலையின் கைதிகளாக இயங்க நேரும் அவலத்தின் மீதான தத்துவார்த்தமான உணர்வைத் தருகிறது  இத்திரைப்படம். இறுதிக் காட்சியில் முரகாமி குற்றவாளியைப் பிடித்து தன்னுடைய தேடலை நிறைவு செய்தாலும் ஏதோவொரு குழப்பமும் நிறைவின்மையும் அவனுக்குள் நெருடிக் கொண்டேயிருக்கிறது. அவனுடைய உயர்அதிகாரிதான் அவனுடைய முதல் வழக்கை அவன் திறமையாக கையாண்டதற்காக அவனைப் பாராட்டி ஆற்றுப்படுத்துகிறார்.

போருக்குப் பின்னதான ஒரு பிரதேசத்தில் நிகழும் மாற்றங்களையும் தனிமனிதர்களின் துயரங்களையும் வெறுமையையும் அகிராவின் பல திரைப்படங்கள் நுட்பமாக சித்தரித்துள்ளன. அவற்றில் சிறப்பானததொன்றாக இந்த ‘தெரு நாயை’ குறிப்பிட முடியும்.

- உயிர்மை - மே 2016-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)

suresh kannan

No comments: