Sunday, May 01, 2016

முகநூல் குறிப்புகள் - 1

இந்த வாரம் முதல் முகநூல் மற்றும் G+ல் பகிரப்படும் குறிப்புகளை சேகரத்திற்காக வலைப்பதிவிலும் பதிவு செய்ய உள்ளேன். 

இந்த வாரக் குறிப்புகள்.

***


பெங்களூருவில் உள்ள பழமையான தமிழ் நூலகமொன்று இனவெறுப்பு சார்ந்த அரசியல் காரணங்களாலோ அல்லது வேறு சில தனிப்பட்ட பகைகளினாலோ, நிலஅபகரிப்பு காரணங்களினாலோ அல்லது வேறு எந்த காரணங்களாக இருக்கட்டும். அழிக்கப்பட்டது மன்னிக்கப்படவே முடியாதது.

அது எந்தப் பிரதேசத்தின், எந்த மொழியின் நூலகமாக இருந்தாலும் அதுதான் அச்சமூகத்தின் ஆன்மாவாக திகழ்கிறது.

ஏறத்தாழ அனைத்து ஈழ தமிழ் எழுத்தாளர்களின் ஏராளமான நூற்கள், சஞ்சிகைகள், ஆய்வு நூல்கள் போன்றவை டிஜிட்டலைஸ் செய்யப்பட்டு இணையத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. பல தன்னார்வலர்களின் அபாரமான உழைப்பும் தேடலும் இதன் பின்னேயுள்ளன.

ஏன் இந்த ஆவேசமான சேகரிப்பு என்று யோசித்துப் பார்த்தேன். லட்சக்கணக்கான புத்தகங்கள் இருந்த யாழ்ப்பாண நூலகம் இனவெறியர்களால் எரித்து அழிக்கப்பட்டதை ஈழ தழிழர்களும் வாசகர்களும் மட்டுமல்ல, உலகமெங்கிலும் உள்ள எந்தவொரு புத்தக ஆர்வலர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஒரு சமூகத்தின் அடையாளமே இல்லாமல் அழித்து விட ஒருவழி அவற்றின் கலாசார அடையாளங்களை துடைத்தழிப்பது. அதுதான் யாழ்ப்பாணத்திலும் பெங்களூருவிலும் நடந்த விஷயங்கள்.

யாழ்ப்பாண நூலக எரிப்பு அனைத்து ஈழ நெஞ்சங்களிலும் ஒரு ஆறாத வடுவாக, கலாசார சோகமாக பதிந்திருக்கும். எனவேதான் அவர்களின் கடுமையான மற்ற துயரங்களுக்கு இடையிலும் நூற்களை எவரும் அழிக்க இயலாத வண்ணம் மின்மயமாக்கி உலகத்தின் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். நான் எப்போதுமே பிரமிக்கும் விஷயம் இது.

ஆனால் தமிழகத்திலோ அவ்வாறான நெருக்கடிகள் இல்லாத சூழலிலும் அற்பமான அரசியல் காரணங்களுக்காக நூலகங்களும் புத்தகங்களும் தூசியால் மூழ்கிப் போகும் படி வைத்திருக்கிறார்கள். தமிழக சமூகம் சொரணயற்று இயங்கும் விதங்களில் இதுவுமொன்று.

***

மீண்டும் வியக்கிறேன். தினமலரில் ஜெயமோகன் எழுதும் அரசியல் தொடர் தொடர்பான முயற்சி யாரால் சாத்தியப்பட்டதோ தெரியாது, அவருக்கு நன்றி.

நண்பர்களே, இந்த தொடரை தொகுத்து வைத்துக் கொண்டு நிதானமாக வாசித்துப் பாருங்கள். அவர் எழுதுவது மலினமான உள்ளூர் அரசியல் வம்புகளைப் பற்றியல்ல. ஒட்டுமொத்த வரலாற்றுப் பார்வையில் அதன் பின்புலத்தில் அரசியல், அதிகாரம் போன்ற அமைப்புகளைப் பற்றி மிக எளிமையான மொழியில் ஆனால் மிக ஆழமான உள்ளடக்கத்துடன் எழுதி வருகிறார்.

'அரசியலுக்கும் நமக்கும் என்னங்க சம்பந்தம்' என்கிற அறியாமையின மீது அமைந்த மனவிலகல் உள்ளவர்கள், அது குறித்து பாமரத்தனமாக மிகையுணர்ச்சியுடன் பேசுபவர்கள் அனைவரும் இந்த நிதானமான எழுத்தை வாசிப்பது அவசியம். இந்த தொடர் ஒரு நூலாக வர வேண்டியதும் அவசியம்.

ஜெயமோகன் இந்துத்துவ பரப்புரை செய்கிற ஆசாமி, என்கிற வம்புத் தகவல்களையும் முன்முடிவுகளையும் கைவிட்டு இதை வாசியுங்கள். ஒருவேளை அவர் அப்படிப்பட்டவர் என்பதை அறிவதற்கு அல்லது நிறுவுவதற்காவாவது இந்த தொடரின் மூலம் கிடைக்கும் அரசியல் அறிவு பயன்படலாம். வாசிக்காமல் நிராகரிப்பதின் மூலம் இழப்பு உங்களுக்குத்தான்.

வாசியுங்கள்.. வாசியுங்கள்..

***

ரயில்வே க்ராஸிங் பிரிட்ஜ் சரிவிலிருந்து சற்று மூச்சு வாங்க இறங்கிக் கொண்டிருந்தேன். எதிரே ஒரு பாட்டியும் சிறுவனும் மேலே ஏறிக்கொண்டிருந்தார்கள்.பாட்டி மிக தளர்ச்சியாக மிதந்து வந்து கொண்டிருந்தார். அவர்கள் கடந்து செல்லும் போது பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.

'நான் தொலைஞ்சு போயிடுவோனோன்னு கைய பிடிச்சிக்கச் சொல்றியா?" - இது சிறுவன்.

"இல்லடா.. நான் தொலைஞ்சு போயிடுவனோன்னுதான். வயசாறதில்லையா?"

அவ்வளவுதான் காதில் விழுந்தது. கடந்து போய் விட்டார்கள்.பாட்டி சொன்ன வசனத்தை சற்று யோசித்துக் கொண்டே வந்தேன். அவர் என்ன பொருளில் சொல்லியிருப்பாரோ என்னவோ? அல்லது நகைச்சுவையாக கூட சொல்லியிருக்கலாம், அல்லது உண்மையாகவே கூட சிறுவனின் தயவு அவருக்கு தேவைப்பட்டிருக்கலாம்.

என்றாலும் வயதில் மூத்தவர்கள் சொல்லும் சிறு சொற்களிலும் நிச்சயம் அர்த்தமிருக்கும். ஏனெனில் அது அனுபவத்தின் மொழி. பல நல்லது கெட்டதுகளைக் கடந்து உணர்ந்து அந்த முதிர்ச்சியிலிருந்து உதிரும் மொழி. நிச்சயம் அதில் ஓர் வழிகாட்டுதல் இருக்கும்.

பொதுவெளியில் இளம் பிள்ளைகளை கை பிடித்து அழைத்துச் செல்வது ஒரு சவாலான விஷயம். அனுபவமுள்ளவர்களுக்கு தெரியும். எந்நேரமும் அவர்கள் கையை விட்டு விலகி சென்று விடலாம் அல்லது ஓடி விடலாம். அதிலும் ஆபத்தான சூழல்களில்தான் அவர்கள் அதை அதிகம் செய்ய முயன்று பதட்டத்தைக் கிளப்பி விடுவார்கள்.

யாரும் தம்மை கட்டுப்படுத்தாத சுதந்திர உணர்வே இளமையின் அடையாளம். அதன் பின்விளைவுகளை யோசிக்கும் நிலையில் அவர்கள் இல்லை. அவர்களுக்குள் ஊற்றெடுக்கும் உற்சாகத்தை, செயல்திறனை எரிக்க ஏதாவது செய்தே ஆக வேண்டும்.

"என் கைய பிடிச்சிட்டே வா.. எங்காவது விழுந்துடப் போறே" என்று பாட்டி கடுகடுப்புடனும் எரிச்சலுடனும் சொல்லியிருந்தால் அந்தப் பையன் வீம்புக்கென்றே அதை மீறியிருக்கக்கூடும். இளமையின் இயல்பு அது. இருவருக்குள் பகைமையும் எரிச்சலும்தான் மிஞ்சும்.

மாறாக பாட்டி ஓர் எளிய உத்தியின் மூலம் இதைக் கடந்து வருகிறாள் என்று தோன்றிற்று.

"நான் தொலைஞ்சுடுவேன். அதனால என் கைய பிடிச்சு பத்திரமா கூட்டிட்டுப் போ"

இப்போது சிறுவன் தன்னை முக்கியமானவனாக, பொறுப்பானவனாக உணர்வான். பாட்டியை பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். பெரியவர்களின் உலகில் நுழைவதுதான், அந்த அங்கீகாரம்தான் சிறுவர்களுக்கு பிடிக்கும். எனவே இப்போதுதான் பாட்டியின் கையை அவன் விடவே மாட்டான். வீட்டிற்குச் சென்றதும் 'நான்தான் பாட்டியைப் பத்திரமா அழைச்சிட்டு வந்தேன்" என்று கூட வெள்ளந்திதனமாக சொல்லக்கூடும்.

இப்போது இருவருக்குள்ளும் பகைமைக்கு மாறாக அன்பும் இணக்கமும் கூடும்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

அனுபவத்தின் மொழிக்கு எப்போதுமே பயன் உண்டு. பொறுமையுடன் காது கொடுத்து கேட்போம்.

***

குறைந்த பட்சம் 2 மணி நேரம் சுவாரசியமாக அமர்ந்து பார்ப்பதன் பொறுமையைக் கூட சமீபத்திய தமிழ்த் திரைப்படங்கள் தருவதில்லை. டிஜிட்டல் நுட்பம் எளிதானது சிறுமுதலீட்டுத் திரைப்படங்களின் நோக்கில் ஒருவகையில் வரவேற்கத்தக்கது என்றாலும் மற்றொரு பக்கம் புற்றீசல் மாதிரி நிறையக் கொடுமைகள் உலா வருகின்றன.

திரைக்கதை என்கிற வஸ்துவை இவர்கள் ஏன் கவனத்தில் கொள்வதேயில்லை என்று ஆச்சரியமாக இருக்கிறது. இயற்கை வேளாண்மை பற்றி அழுத்தமாக சொல்லியிருக்கிறோம் என்று 'வெற்றிவேல்' படத்தைப் பற்றி சசிகுமார் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். ஆனால் படத்தின் அப்படி எந்த 'மண்ணும்' இல்லை.


இந்த நிலையில் ஜெய் நடித்த 'புகழ்' என்கிற திரைப்படம் பார்த்தேன். எவ்வளவோ தேவலை. இதில் குறிப்பாக வாலாஜா என்கிற சிறுநகரத்தின் ஒரு நிலஅபகரிப்பு பிரச்சினையை மையப்படுத்தியிருந்தார்கள். மாவட்டம், வட்டம், தொகுதி என்று அந்தப் படி நிலைகளில் உள்ள உள்ளுர் அரசியல்களின் பிரச்சினையை சற்று நுட்பமாகவே சொல்லியிருந்தார்கள். இதில் வரும் மாவட்ட செயலாளர் தன் அரசியல் மதிப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக நிறைய செலவு செய்கிறார். ஆனால் தன்னுடைய மகனுக்கு ஒரு பைக் கூட வாங்கித்தர முடிவதில்லை. இப்படி இரண்டுங்கெட்டான் அரசியல்வாதிகளை நான் நேரிடையாகவே பார்த்திருக்கிறேன்.

தாஸ் என்கிற இந்தப் பாத்திரத்தில் மாரிமுத்து அசத்தியிருந்தார். கவுன்சிலர் தேர்தலுக்காக வார்டு பிரிக்கும் கூட்டத்தில் நிகழும் பிரச்சினைகள் யதார்த்தமாக பதிவாகியிருக்கின்றன.

கவிஞர் பிறைசூடனும் ஒரு பாத்திரத்தில் சுமாராகவே நடித்திருந்தார். ஒரு காலத்தில் இடதுசாரிகளை போற்றிப் புகழ்ந்து வந்த திரைப்படங்கள் குறைந்து அவர்கள் கிண்டலடிக்கப்படத் துவங்கி விட்ட நிலையில் ஆறுதலாக ஒரு நல்ல கம்யூனிஸ்ட் அரசியல்வாதியை காட்டினார்கள்.

ஒரு வழக்கமான தமிழ் திரைப்படத்தின் வார்ப்பிற்குள் இருந்தாலும் காட்சிகள் வேகமாக நகர்ந்தன. எடிட்டரை நிச்சயம் பாராட்ட வேண்டும். ஆனால் வழக்கமான ஹீரோயிஸத்தோடு படத்தை முடித்து விட்டார் இயக்குநர். ஜெய்யின் நடிப்பு பாராட்டத்தக்கது. கருணாஸ் கூட குறிப்பிடத்தக்க அளவில் கவனத்தைக் கவர்ந்தார்.

உதயம் NH4, பொறியாளன், புகழ் என்று இயக்குநர் மணிமாறன் நம்பிக்கையைக் கூட்டுகிறார்.

***

"இணையத்து பாசாங்குப் பதிவுகளைப் பார்த்தீர்களா? எவராவது அரசியல்சரிநிலையற்ற தன்மையோடு வெள்ளந்திதனமாகவோ அல்லது அது சார்ந்த உயர்வு மனப்பான்மையுடனோ ஒரு கருத்தை வெளியிட்டு விட்டால் இணையமே கூடி அவரைப் போட்டு கும்மியெடுத்து விடுகிறதே?

இந்த 'கும்மர்கள்' அவரவர்களின் சுயவாழ்வில் இத்தகைய கீழ்மைகளை செய்வதேயில்லையா? அல்லது தாங்கள் பொதுவெளியில் ஜபர்தஸ்தாக உபதேசிப்பவற்றை தாங்களும் உண்மையிலேயே கறாராக கடைப்பிடிக்கும் லட்சியவாதிகளாக இருக்கிறார்களா?"

நண்பர் சிரிப்புடன் இந்தக் கேள்விகளைக் கேட்டார்.

நான் சொன்னேன்.

'விழுமியங்கள் பின்பற்றப்பட வேண்டியவதற்காக அதற்கான நோக்கத்துடனும் நம்பிக்கையுடனும் உருவானவை. அவைதான் நம்மை நாகரிக சமுதாயத்தை நோக்கி அழைத்துச் செல்லும். நாம் கீழ்மைகளை நோக்கி செல்லும் போதெல்லாம் நம் மனக்குரலின் மூலம் எச்சரிக்கும். அதனாலேயே பல தீமைகள் நிகழாமல் கட்டுப்படுத்தப்படுகின்றன.

ஆனால் ஒவ்வொரு சராசரி மனிதனும் அம்மாதிரியான கீழ்மைகளை நோக்கியே கவரப்படுகிறான். அது இயல்புதான். அவற்றிலிருந்து விடுபட ஒருபுறம் போராடுகிறான். விழுமியங்களின் மீதான உள்ளார்ந்த நம்பிக்கையும் பயமுமே அவனை அந்தக் கட்டுப்பாட்டைத் தூண்டுகிறது.

பொதுவெளியில் விழுமியங்களின் மீது விருப்பமுள்ளவனாகவும் அதை மீறுபவர்களின் மீது சினம் கொள்வதுமாக பாசாங்கு செய்வதும் ஒருவகையில் நல்ல அடையாளமே. ஏனெனில் அது சார்ந்த நம்பிக்கைகள் அவன் ஆழ்மனதில் மெல்ல மெல்ல படிந்து அதுவே சமூகத்தின் பொது வழக்கமாகவும் கலாசாரமாகவும் மாறும். நாகரிக சமூகம் இப்படித்தான் மெல்ல மெல்ல அதன் படிகளில் ஏறி வந்து கொண்டிருக்கிறது.

எனவே ஒருவகையில் இந்த பாசாங்குகள் நல்லதே".


இதையெல்லாம் நீங்கள் 'கேக்'காமலேயே நான் சொல்வதன் காரணம் விளங்குகிறதா?

***

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மூன்றாவது நிறுத்தத்திற்கு முன்பாக ஏறினேன். ஓர் இருக்கை காலியாக இருந்தது. பக்கத்தில் ஒரு சிறுவன். எதிர் இருக்கையிலிருந்த சிறுமி காலி இருக்கையில் கால் வைத்திருந்தது. வெயில் தந்த எரிச்சலில் 'எடும்மா' என்றேன் மென்அதட்டலாக. என்னை ஒரு மைக்ரோ செகண்ட் வெறுப்புடன் பார்த்தது.

என்ன இருந்தாலும் சிறுமிதானே? காண்டா மிருகங்களே ஷூக்காலை தூக்கி இருக்கையில் பந்தாவாக வைத்துக் கொண்டு வரும் போது சிறுமிக்கு என்ன தெரியும் என்று நினைத்துக் கொண்டு ஒரு வலுக்கட்டாயமான புன்னகையுடன் மூலம் சிறுமியைச் சமாதானப்டுத்த முயன்றேன். இருந்தாலும் அம்மணிக்கு கோபம் போகவில்லை. குறுகுறுவென்று பார்த்தவாறிருந்தது. என்னுடைய மகளின் நினைவு வந்து போயிற்று. அவளும் அப்படித்தான். வழியில் இப்படி யாராவது குறும்பு செய்தால் அங்கு அடக்கி வாசித்து வீட்டில் வந்து புலம்பித் திட்டி தீர்த்து விடுவாள். உள்ளுற சிரிப்பு வந்தது.

எழுத வந்தது இதுவல்ல. சிறுமியின் பக்கத்திலிருந்த அவர்களின் தாய். யாரிடமோ தொலைபேசியில் பேசிக் கொண்டே...... இருந்தார். நிச்சயம் குடும்ப அரசியல். அது சார்ந்த வம்பு. தொலைக்காட்சி சீரியல்களில் கேட்டுப்பழகிய தொனியிலேயே எவரிடமோ பேசிக் கொண்டிருந்தார்.

என் பக்கத்தில் அமர்ந்திருந்த சிறுவன் அவரின் மகன் போலும். சற்று எரிச்சலுடன் தாயின் நீண்ட தொலைபேசி உரையாடலை பார்த்துக் கொண்டேயிருந்தான். பின்பு "பேசின் பிரிட்ஜ் வரப் போகுதும்மா" என்றான். தாயின் கவனத்தைக் கலைப்பதே அவனுடைய நோக்கம் என்பது வெளிப்படை. பேசின் பிரிட்ஜ் நிறுத்தம் வர குறைந்தது ஒரு வாரம் ஆகும் என்பது தினமும் போகும் அனுபவஸ்தர்களுக்கு தெரியும்.

சிறுவனின் எச்சரிக்கையைக் கேட்டதும் தாயும் சற்று பத்ட்டத்துடன் 'பையை எடுத்து வெச்சுக்கோ' என்பது போல் சைகை காட்டினார். அப்போதும் உரையாடலை நிறுத்தவில்லை.

ஒருவழியாக பேசின்பிரிட்ஜ் வந்தது. பையன் பையை எல்லாம் தூக்கப் போக தாயாரோ 'இரு. இரு.. ' என்று சைகை காட்டி உரையாடலைத் தொடர்ந்தார்.

'ஒண்ணு வூட்டை எழுதி வை.. இல்லைன்னா.. 20 லட்சம் கொடுன்னு சொல்றாங்களாம்.. அவங்க நாத்திதான் சொன்னா.... என்ன அநியாயம் பாரேன்.."

எனக்கு சற்று பதைப்பு. ஒருவேளை பேசின் பிரிட்ஜில் இறங்க வேண்டிய அவர்கள், அம்மணியின் உரையாடல் சுவாரசியத்தில் தவற விட்டார்களோ என்று தோன்றியது. எச்சரிக்கலாமா என்று நினைத்தேன். ஆனால் அப்படியில்லை. அவர்கள் சென்ட்ரலில்தான் இறங்க வேண்டும் போல. தாயாரின் சாவகாசமான உடல்மொழியில் இருந்து அப்படி தெரிந்தது. எனக்கும் சற்று நிம்மதி.

தாயார் எப்போது தொலைபேசி உரையாடலை முடிப்பாரோ என்று சிறுவன் பொறுமையிழந்து பார்த்துக் கொண்டேயிருந்தான். பொறுப்புள்ள சிறுவன்தான் போல. பைகளை தயாராக கையில் வைத்திருந்தான். அவனின் பொறுமையின்மை எனக்கும் பரவி விட்டதுதான் ஆச்சரியம்.

சிறுமிக்கு அந்தப் பிரச்சினை எதுவுமில்லை. அது பாட்டுக்கு ஜன்னலில் அவளின் உலகத்தில் ஆழ்ந்திருந்தது. சமயத்தில் என்னை நோக்கி ஒரு குறுகுறு. நான் புன்னகையை மறைத்து கவனிக்காமலிருக்க சிரமப்பட்டேன்.

சிறுவனின் பொறுமையின்மையையும் தாயின் நீண்ட வம்பு உரையாடலையும் மாற்றி மாற்றி பார்க்க எனக்கே சுவாரசியமாகத்தான் இருந்தது. சமயங்களில் அந்த தாயாரின் முகத்தையும் சற்று குறும்போடு பார்த்தேன். அப்பவாவது உரையாடலை முடிப்பாரோ என்கிற நப்பாசையோடு. எனக்கு தொடர்பில்லாததுதான். இருந்தாலும் சிறுவனுக்காக இதைச் செய்ய வேண்டும் என்று தோன்றிற்று. ம்..ஹூம்.. அவர் பாட்டுக்கு தொலைபேசி உரையாடலில் சுவாரசியமாக இருந்தார்.

ஒருவழியாக சென்ட்ரல் நிறுத்தம் நெருங்கியது. சிறுவனும் சிறுமியும் ஏறக்குறைய எழுந்து நின்று விட்டார்கள். அப்போதும் உரையாடலைத் துண்டிக்க மனமின்றி விடைபெற்றுக் கொண்டு அந்த அம்மிணி சொன்ன கடைசி வாக்கியம்தான் என் வாயிலிருந்து புன்னகையை வெடிக்க வைத்து விட்டது.

"சென்ட்ரல் வந்துடுச்சுக்கா.. எறங்கப் போறேன். நான் வீட்டுக்குப் போயிட்டு பேசறேன்."

***

சபாஷ் நாயுடு - படத்தின் தலைப்பு வெளிவந்தவுடனேயே அது குறித்த நுண்ணரசியல் அலசல்களும் வரத்துவங்கி விட்டன. படத்தின் தலைப்பில் ஒரு சமூகத்தின் பெயர் இருக்கிறதாம்.

இனங்களும் சாதிகளும் மதங்களும் மனிதன் கூடி வாழத் துவங்கிய காலத்திலிருந்து அதன் பண்பாட்டுத் துளிகளால் மெல்ல மெல்ல தொகுக்கப்பட்டு உருவான சமூக அமைப்புகள். பல்லாண்டுகளாக இறுகி இறுகி கெட்டி தட்டிப் போன விஷயம். சாதியை ஒழிப்போம் என்பதெல்லாம் கேலிக்கூத்தான கோஷம். உண்மையில் சாதி போன்ற அமைப்புகள் இருப்பதில் தவறில்லை. அவை அந்தந்த இனக்குழுக்களின் பண்பாட்டு அடையாளங்கள் மட்டுமே. சாதி இல்லையென்றால் வேறு எந்த அடையாளத்திலாவது மனிதசமூகத்தில் பிரிவுகள் உண்டாகியே தீரும். இது இயற்கை.

ஆனால் எங்கே பிரச்சினை என்றால் சாதி குறித்த உயர்வு மனப்பான்மை, தாழ்வு மனப்பான்மை, அது குறித்த சீண்டல்கள், கற்பிக்கப்பட்ட உயர்வு, தாழ்வுகள், வன்முறைகள் போன்றவைகள்தான் பிரச்சினை. அவ்வாறான கற்பிதங்கள்தான் பகைமையை உண்டாக்குகின்றன.

ஒரு நாகரிக சமூகத்தின் அடையாளம் எல்லாவற்றின் மீதான விமர்சனங்களையும் பகடிகளையும் ஏற்றுக் கொள்வதே. அந்த வகையில் ஓர் குறிப்பிட்ட சமூகத்தாரின் நுண்மையான கலாசாரத்தை அதன் பொருந்தாத விஷயங்களை கிண்டலடித்து திரைப்படம் எடுக்கலாம், நவீன இலக்கியம் உருவாகலாம். நகைச்சுவைத் துணுக்குகள் வரலாம். அந்த சுயபகடியையும் ஏற்றுக் கொள்வதே நாம் முதிர்ச்சியடைந்து கொண்டிருப்பதற்கு அடையாளம்.

இதன் மீதான கிண்டல்கள், சொலவடைகள் ஒரு காலத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூட சமூகத்தில் பரஸ்பரம் புழங்கி வந்தன. அதை சம்பந்தப்பட்ட சமூகத்தினரே கூட அசட்டு சிரிப்புடன் தாண்டி வந்ததும் உண்டு. 'ஆதாயம் இல்லாத செட்டி ஆத்தோட போவாரா' என்பது போல.

ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாகியிருக்கிறது. ஒரு சமூகத்தின் பெயரை உச்சரித்தாலே அது பதட்டமான சூழலை ஏற்படுத்துகிறது என்றால் நாம் நாகரிக சமூக நகர்விலிருந்து பின்னோக்கி எதிர்திசையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதே பொருள்.

ஒரு திரைப்படம் வெளிவராமல், அதன் உள்ளடக்கம் பற்றி அறியாமலேயே நாம் பதட்டம் கொள்கிறோம் என்றால் தவறு சாதியின் மீதா, நம்முடைய மனோபாவத்தின் மீதா?


***

'''தேவா் காலடி மண்ணே'விற்கு நிகரான ஏன், அதற்கும் மேலான கருத்தியல் ஆபத்தைக் கொண்டது 'எஜமான் காலடி மண்ணெடுத்து' வகையறா திரைப்படங்கள்.

(இதை கமல்xரஜினி என்கிற குறுகிய நோக்கில் ரசிக மனோபாவத்தோடு குறுக்கி, திரித்துப் பார்ப்பவர்களுக்கு பதில் சொல்லப் போவதில்லை. சரத்குமார், விஜயகுமார் வகையறா திரைப்படங்களும் இதில் அடங்கும்.)

ஆனால் சில ஆர்வக்கோளாறு முற்போக்கு ஆவேச ஆசாமிகள், வரவழைக்கப்பட்ட அறச்சீற்றத்தோடு தேவர்மகன் குறித்தான, அபத்தமான தர்க்கங்களால் முன்னர் நிறுவப்பட்ட எளிய மேற்கோள்களை பிடித்துக் கொண்டு குதிக்கும் சிறுபிள்ளைத்தனங்கள் நகைச்சுவையாக இருக்கிறது. சராசரிகளுக்கும் போலி அறிவுஜீவிகளுக்கும் இந்த நோக்கில் வித்தியாசம் ஏதுமில்லை.

ஒரு பிரதியின் மையத்தை ஒட்டு மொத்த முழுமையான நோக்கில் அணுகுவதே முறையான விமர்சன வழி. எளிமைப்படுத்தப்பட்ட துண்டுகளை தங்களுடைய சார்பின் நோக்கில் செளகரியமாக எடுத்துக் கொண்டு விளாசித் தீர்ப்பதல்ல.

இது குறித்து இயன்றால் விரிவான கட்டுரை ஒன்றை எழுதவிருக்கிறேன் என்பதை அறிவிப்பாகவும் எச்சரிக்கையாகவும் கொள்ளலாம்.


***

'கடந்த தேர்தலில் என்னுடைய வாக்கை எவரோ செலுத்தி விட்டார்கள். இந்த முறை என்னுடைய பெயர் இல்லை. எனவே வாக்களிக்கும் தினத்தன்று இங்கு இருக்க மாட்டேன். வெளிநாட்டில் படப்பிடிப்பிற்கு சென்று விடுவேன். ஆனால் வாக்களிக்க இயன்றால் மகிழ்ச்சியடைவேன்'


இந்த ரீதியில் அருளியிருப்பவர் கமல்ஹாசன். இப்படி ஒன்றுக்கொன்று முரணான, அபத்தமான கருத்துக்களை ஒரு சாதாரண ஆசாமியால் கூட சொல்ல முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது.

இத்தனைக்கும் வாக்களிப்பதற்கான தேர்தல் ஆணையத்தின் பரப்புரை முயற்சிகளில் பங்களித்தவர் கமல்ஹாசன் என்கிற நினைவு.

நூறு சதவீத வாக்களிப்பு என்கிற இலக்கை நோக்கி தேர்தல் ஆணையமும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து உழைத்துக் கொண்டு வரும் வேளையில் ஒரு பிரபலத்தின் இம்மாதிரியான பொறுப்பற்ற பேச்சு அதில் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது கூடவா அவருக்கு தெரியாது?

'வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை சோதித்துக் கொள்ளுங்கள்' என்று தேர்தல் ஆணையம் ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே தொடர்ந்து எச்சரித்துக் கொண்டு வருகிறது. நடிகர் பிஸியாக இருந்தாலும் வேறு எவரையாவது வைத்து அதை உறுதிப்படுத்திக் கொண்டிருந்திருக்கலாமே, அல்லது அதில் குறையிருந்தால் நிவர்த்தி செய்திருக்கலாமே?

பட்டியலில் கமல்ஹாசனின் பெயர் உள்ளது என்று தற்போது தமிழக தேர்தல் ஆணையர் உறுதிப்படுத்தி வாக்களிக்கச் சொல்லி கமல்ஹாசனை வேண்டியிருப்பதிலிருந்து நடிகர் தம் பெயர் பட்டியலில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவதற்கான எந்த முயற்சியையும் செய்யவில்லை என்று தெரிகிறது. பின்பு ஏன் இந்த அலட்டல்?

கடந்த முறை அவர் பெயரில் வேறு எவரோ வாக்களித்தார்கள் என்பது உண்மையெனில் ஒரு பிரபலத்தையே அடையாளம் தெரியாத அளவிற்கு அங்கு பணிபுரிந்த தேர்தல் அதிகாரிகள் அந்த அளவிற்கு மங்குனி பாண்டியாகவா இருந்திருப்பார்கள்? அல்லது கமல் ஏதோ படப்பிடிப்பில் வித்தியாசமான கெட்டப்பில் அப்படியே இங்கு வந்து விட்டார் என்று கருதி ஏமாந்து விட்டார்களா?


***

என் மேலதிகாரி ஒருவர் அறுபது வயதைக் கடந்தவர். தெலுங்கர். சராசரிக்கும் மேலான ரசனையைக் கடந்தவர். தினசரி அரசியல் நடப்புகளை, உலக நடப்புகளை பத்திரிகைகளின் வாயிலாக கூர்ந்து கவனிப்பவர். அது பற்றிய சுயகருத்துக்களை தெளிவாக முன்வைக்கக்கூடியவர்.

தெலுங்கு சினிமாக்கள் பற்றி சிலாகித்துக் கூறுவது அவர் வழக்கம். காரசாரமான தெலுங்கு சினிமாக்கள். குறிப்பாக மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன் போன்றவர்கள் பிரியம். 'என்னா ஸ்டைலா இருக்கானுங்க' என்பார். ஆனால் மலிவான ரசனை கொண்ட திரைப்படங்களை புகழ மாட்டார். மசாலா திரைப்படமாக இருந்தாலும் அதில் சற்று புத்திசாலித்தனம் கலந்திருக்க வேண்டும். திரைக்கதை சற்றாவது வித்தியாசப்பட்டிருக்க வேண்டும். அஜித்தின் மங்காத்தா திரைப்படத்தை ஐம்பது தடவையாவது பார்த்திருப்பாராம். sriமந்துடு திரைப்படத்தைப் பற்றி அப்படி புகழ்வார். சமகால தெலுங்கு திரைப்படங்களைப் பற்றி எனக்கு நல்ல அபிப்ராயமும் பாார்க்கும் விருப்பமும் எழுந்தது அண்ணன் கே. என். சிவராமன் எழுத்துக்குப் பிறகு இவரது பேச்சுக்குப் பிறகுதான்.

விஷயம் என்னவெனில் இவர் சமீபத்தில் பார்த்தது 'தோழா' திரைப்படம். தமிழ் வடிவத்தில்தான் பார்த்திருக்கிறார். நாகார்ஜூனாவின் கம்பீரத்தை புகழ்ந்தது எதிர்பார்த்ததுதான். ஆனால் கார்த்தியின் நடிப்பையும் அப்படி புகழ்ந்து தள்ளி விட்டார். நடிகர் சிவகுமார் இவரது நண்பர். அந்தவுணர்ச்சியில் சொல்லவில்லை. உண்மையாகவே அவருக்கு பிடித்திருந்தது. நாலைந்து நாட்களாகவே தோழா புராணம்தான். 'கார்த்தி என்னமா நடிச்சிருக்கான்பா'


எனவே தோழாவைப் பார்க்கத் துணிந்தேன்.

சொன்னால் அலட்டுகிறேன் என்பீர்கள். என்னால் பத்து நிமிடங்களுக்கு மேல் கூட அந்த அபத்தத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை. காரணம் மிக எளிமையானது. அதன் பிரெஞ்சு மூலமான 'தி இன்டச்சபிள்ஸ்' திரைப்படத்தை நான் ஏற்கெனவே பார்த்திருந்தேன். சமீபத்தில் ஓர் இதழில் இத்திரைப்படத்தைப் பற்றி எழுதுவதற்காக மறுபடியும் கூட பார்த்திருந்தேன் என்பதால் பசுமையாகவே நினைவில் நின்றிருந்தது. அதுதான் பிரச்சினையும் கூட.

அதில் வரும் திரைக்கதையின் வடிவமும் கதாபாத்திர வடிவமைப்பும் பாத்திரங்களின் உடல்மொழியும், தமிழ் வடிவத்தோடு ஒப்பிடும் போது மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசத்தோடு அமைந்திருந்தது. குறிப்பாக quadriplegic ஆக நடித்திருப்பவரின் பிரெஞ்சு உழைப்பு தமிழில் அப்படியே மொண்ணையாக சாகடிக்கப்பட்டிருந்தது. நாகார்ஜூனாவிடம் அந்த வாதையின் அடையாளமே தெரியவில்லை. போதாக்குறைக்கு கார்த்தியின் அலட்டல். இந்தக்கொடூரத்தின் உச்சம் தமன்னா. ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு ஆயிரம் ரூபாய்க்கான முகபாவத்தை தருகிறார்.. வாந்தி வருவது போல் இருந்தது.'தோடா.. வன்ட்டாரு..பிலிப்பு. பிரெஞ்சு படம் தான் பார்ப்பாராம் ஒலக சினிமா ரசிகரு' என்று சிலர் கிண்டலடிப்பார்கள் என்று தெரியும். நான் இதை விடவும் 'தர டிக்கட்டாக' இருந்தவன் என்பதை இந்தச்சமயத்தில் தமிழ் கூறும் நல்லுலகத்திடம் பதிவு செய்ய விரும்புகிறேன்.

வெகுசன எழுத்தின் மூலமாக சுஜாதா அறிமுகமாகி, அதிலிருந்து கணையாழி, அந்தக் கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருந்த சத்யஜித்ரேவின் மூலமாக உலக சினிமாவின் வாசல் திறந்தது.

நுண்ணுணர்விற்கும் ரசனைக்கும் கல்விக்கும் தொடர்பேயில்லை. பதேர் பாஞ்சாலி, பைசைக்கிள் தீவஸ் போன்ற கிளாசிக் திரைப்படங்களை உலக சினிமா பற்றிய எவ்வித அறிமுகமும் அனுபவமும் அல்லாத கிராமத்து மக்கள் ரசித்துப் பார்த்திருக்கிறார்கள். காரணம் எளியது. ஏனெனில் அது அவர்களின் வாழ்வியலை உண்மையாகவும் நேரடியாகவும் பிரதிபலித்தது. மொழி,கலாசாரம் போன்ற தடைகள் இருந்தாலும் கூட அவர்களால் அத்திரைப்படத்தை அணுக முடிந்தது.

உலகசினிமாவின் பரிச்சயமும் அணுகலும் பரவலாகி வீட்ட இன்றைக்கும் கூட வெகுசன திரைப்பட பார்வையாளர்கள் அதை 'நாய் கொண்டு வந்து போட்ட வஸ்து' மாதிரியே ஒருவித அசூயையுடனும் கிண்டலுடனும் பேசுகிறார்கள். அதற்கான சிறிய உழைப்பைத் தர அவர்கள் தயாராக இல்லை என்பதே உண்மை. அது புரியாமற் போய் விடுமோ என்கிற பயமும் தாழ்வுணர்வுமே அதை நிராாகரிப்பதற்கான எளிய காரணங்களை உருவாக்கி விடுகிறது.

எனவே இந்த மனோபாவத்தையே இந்திய இயக்குநர்களும் பிரதிபலிக்கிறார்கள். பார்வையாளனுக்கு புரியாமல் போய் விடுமோ என்று எந்தவொன்றையும் எளிமைப்படுத்தி ஸ்பூனால் ஊட்டிக் கொண்டே இருக்கிறார்கள். எனவே பெரும்பான்மையான இந்திய வெகுசன திரைப்படங்கள் குழந்தைத்தனமாக இருக்கிறது. பார்வையாளர்களும் காலம் காலமாக மம்மு சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஓர் அந்நிய மொழியில் சிறப்பாக உருவாக்கப்படும் ஒரு திரைப்படம், உள்ளூர் ரசிகர்களுக்காக கொத்து பரோட்டாவாகி விடும் அவலம் இதனால்தான் நிகழ்கிறது. தோழாவும் இந்த விபத்தில் சிக்கியதொரு பலிகடா.

ரசனை மாற்றம் இங்கும் நிகழ்ந்தால் இயக்குநர்களும் அதற்கேற்ப மாறுவார்கள். மாறியே தீர வேண்டும். தர டிக்கட்டாக இருந்தவன் பிரெஞ்சு சினிமாவை எவ்வித மனத்தடையும் இன்றி நுகர முடியும் என்பதற்கு நானே ஒரு நடைமுறை உதாரணம்.


***


சில நட்சத்திரங்கள் திரையில் தோன்றியவுடன், ஏன் படம் முடியும் வரையிலும் கூட ஹை-வோல்டேஜ் மின்சாரம் பாய்ந்தது போல திரை அதிர்ந்து கொண்டேயிருக்கும். பழைய காலத்தில் எம்.ஜி.ஆரை அப்படிச் சொல்வார்கள். ஆனால் என்னளவில், என் ரசனைப்படி, நான் உணர்ந்தவரை அது ரஜினி மற்றும் அஜித்திற்கு மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது. 'சாமி' விக்ரம், 'சிங்கம்' 'காக்க காக்க' சூர்யா போல இன்னபிற உதாரணங்கள் இருந்தாலும் தொடர்ச்சியான உதாரணங்களாக இவர்கள் இருவரை மட்டுமே சொல்ல முடியும்.

கபாலி டீஸரிலும் அந்த மேஜிக்கை உணர முடிகிறது. 'எத்தனை வயசானாலும் உன் ஸ்டைலும் வேகமும்'' குறையவேயில்லை' என்கிற படையப்பா வசனம் இன்னமும் செல்லுபடியாகிறது. அரசியல் குழப்படி நோக்கில் ரஜினி காமெடி பிம்பமாகியிருந்தாலும் அவருடைய திரை பிம்பத்தின் அந்தஸ்து இன்னமும் கூட பெரிதும் சேதாரம் ஆகாமல் இருக்கிறது என்பதற்கு இந்த டீஸர் உதாரணம்.

டீஸரை வைத்து இந்தக் கருத்தை சொல்வது சரியில்லைதான் என்றாலும் ஏறத்தாழ ரஜினி படங்களின் பொதுவான சாயலையே இது கொண்டிருப்பது மட்டுமே உள்ளூற சற்று நெருடலாக இருந்தது. இது கூட அதன் இயக்குநர் ரஞ்சித்தாக இருப்பதால்தான். படம் வரட்டும். ரஞ்சித் தன் தனித்தன்மையை நிச்சயம் பதிவு செய்திருப்பார் என்கிற நம்பிக்கையை இன்னமும் நான் இழக்கவில்லை.


***

கடந்த வருட உயிர்மை விழாவில் எஸ்.ராமகிருஷ்ணனை சந்தித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த போது சுஜாதாவின் அசாதாரணமான வாசிப்பை வியந்து கொண்டேயிருந்தார்.

"சுஜாதா தன்னுடைய புனைவு மற்றும் அபுனைவு எழுத்துக்களில் தாம் படித்த நூற்கள், அவற்றின் ஆசிரியர்கள், அவற்றின் சுருக்கமான உள்ளடக்கம் ஆகியவைகளைப் பற்றி தொடர்ச்சியாக ஏராளமாக எழுதியுள்ளார்.

அப்போது மட்டுமல்ல, இப்போதும் கூட தமிழ் உலகம் பெரிதும் கேள்விப்பட்டிராத, அறிந்திராத அரிய நூற்கள், நூலாசிரியர்கள் ஆகியவைகளைப் பற்றி அவர் எழுதியிருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவற்றைப் பற்றிய குறிப்புகளை 'பத்தியா. நான் இதெல்லாம் படிச்சிருக்கேன்' என்பது போல அடிக்கோடிட்டு பீற்றிக் கொள்ளாமல் புனைவின் உரையாடல்களின் இடையே போகிற போக்கில் கூட அலட்சியமாக சொல்லிச் செல்வார்.

அவ்வாறான நூற்கள், ஆசிரியர்கள் பற்றிய தகவல்களை நான் தொகுக்கலாம் என்றிருக்கிறேன். அதன் மூலம் பல ஆச்சரியமான தகவல்கள் பதிவாகும்"

என்றார். 'உடனே செய்ங்க'' என்றேன். சமயங்களில் அதைப் பற்றி ஏன் எழுதாமலிருக்கிறார் என்று எனக்கு தோன்றும்.இந்த வருட உயிர்மை விழாவில் 'சுஜாதா படித்த புத்தகங்கள்' என்கிற தலைப்பில் எஸ்.ரா. உரையாற்றப் போவதான அறிவிப்பை பார்த்தவுடன் 'மறக்காமல் நினைவில் வைத்திருந்து சாத்தியப் படுத்தப் போகிறாரே' என்று மகிழ்ச்சியும் ஆர்வமும் ஏற்பட்டது.

எஸ்.ராவின் இந்த உரை சுஜாதாவின் வாசகர்களுக்கு மட்டுமல்லாமல். அனைத்து நூல் ஆர்வலர்களுக்குமே முக்கியமானதாகவும் சுவாரசியமானதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கிறேன். இது வீடியோவில் மட்டும் பதிவாகாமல் எழுத்து வடிவில் ஒரு கட்டுரையாகவும் பதிவு செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கையையும் வைக்கிறேன்.

suresh kannan

No comments: