விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'நீயா நானா' நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிறும் தொடர்ந்து பார்ப்பது வழக்கம். கடந்த வார நிகழ்ச்சியில் 'நவீன தீண்டாமை' என்கிற புதிய சொல்லாடலை முன்வைத்து கோபிநாத் நிகழ்ச்சியை நடத்தினார். திரைத்துறையினர், அரவாணிகள், திருமண/நில தரகர்கள், மதுக்கடை பணியாளர்கள், விதவைகள், விவாகரத்து பெற்றவர்கள்/ அரசியல்வாதிகள், காவல்துறையினர் போன்றவர்களை நம் சமூகம் எந்தவித காரணங்களுமின்றி கற்பிதங்கள் காரணமாக முன்தீர்மானத்துடன் தேவையற்ற வெறுப்பை/அருவெறுப்பை/ஒதுக்குதலை அவர்கள் மீது காட்டுகிறது. இவ்வாறாக ஒதுக்கப்படுபவர்கள் ஒரு குழுவாக தங்களின் கசப்பான அனுபவங்களை தங்கள் முன் வைத்தனர். சமூகத்தின் பிரதிநிதிகளாக அமர்ந்திருந்த எதிர்க்குழுவினர் எந்த காரணங்களுக்காக தாங்கள் அவர்களை ஒதுக்குகிறோம் அல்லது ஒதுங்குகிறோம் என்பதை கூறினர்.
ஒதுக்கப்படுபவர்களின் குரல்கள் சில:
(1) நான் டாஸ்மாக்கில் சூப்பர்வைசராக பணிபுரிகிறேன். இதனாலேயே என்னை "ஊத்திக்குடுக்கற வேலைய செய்யறவன்" என்கிற அருவெறுப்போடும் கிண்டலோடும் என் பணியை நோக்குகின்றனர்.
(2) நான் ஒரு துணை நடிகை. இதனாலேயே எனக்கு பலர் வாடகைக்கு வீடு தர மறுக்கின்றனர். ஒரு படப்பிடிப்பில் வெயிலாக இருக்கிறதே என்று அருகிலிருந்த வீட்டில் நிழலுக்காக ஒதுங்கப் போகும் போது அந்த வீட்டினர் அருவெறுப்புடன் என்னை துரத்தியடித்தனர். நான் செய்த பாவம் என்ன?
(3) நான் ஒரு அரசியல்வாதி (கவுன்சிலர்). இந்த காரணத்திற்காகவே எனக்கு பெண் தர மறுத்தனர்.
(4) நான் ஒரு விவாகரத்து பெற்ற பெண். இதனால் என் பிறந்த வீட்டிலேயே என்னை துரத்தியடித்தனர். அலுவலகத்தில் சக ஆண் பணியாளர்கள் என்னை பாலியல் நோக்கில் அணுகினர். உறவினர்கள் அவர்கள் வீட்டு விசேசங்களுக்கு என்னை கூப்பிடுவதில்லை.
(5) நான் ஒரு உதவி இயக்குனன். திரைத்துறையை சேர்ந்தவன் என்ற காரணத்தினாலேயே எனக்கு வீடு தர மறுக்கின்றனர்.
(6) நான் ஒரு திருமண அமைப்பாளர். சுமார் 300 திருமணங்களை நடத்தியுள்ளேன். ஆனால் எங்களை புரோக்கர் என்கிற இழிவான நோக்கிலேயே பார்க்கின்றனர்.
(7) நான் gay, lesbian, transgender போன்றவர்களின் உரிமைகளுக்காக போராடுகிறவன். ஆனால் என்னையும் ஒரு gayவாகவே இந்தச் சமூகம் பார்க்கிறது.
பொதுச் சமூகத்தின் குரல்கள் சில:
(1) திரைத்துறையினர் அனைவரையும் நாங்கள் குற்றம் சொல்லவில்லை. ஆனால் அவர்களைப் பற்றி கேள்விப்படுகிற பெரும்பான்மையான செய்திகள் அவ்வளவு சிலாக்கியமாக இல்லை. எனவே அவர்களுக்கு வாடகைக்கு வீடு தர மாட்டோம்.
(2) திருமண தரகர் சொன்ன பொய்யால் என் திருமண வாழ்க்கையே பாதித்து மிகவும் சிரமப்பட்டேன்.
(3) பொது இடங்களில் அரவாணிகளின் அடாவடித்தனத்தால் அவர்களைப் பார்த்தாலே எரிச்சலும், கோபமும், அருவெறுப்பும் வருகிறது. ஒருபால் உறவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அருவெறுப்பாக இருக்கிறது.
(4) போலீஸ்காரர்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்களுக்கு வாடகைக்கு வீடு தருவதில்லை. பின்னால் அவர்களால் பிரச்சினை வரும் என்று பயப்படுகிறோம்.
(5) அசைவம் சாப்பிடுபவர்களை, மது குடிப்பவர்களை பிடிப்பதில்லை. அவர்களை நாங்கள் ஒதுக்குவதில்லை. நாங்கள் 'ஒதுங்கிப் போகிறோம்'. அவ்வளவுதான் விஷயம்.
()
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எழுத்தாளர் சாருநிவேதிதா இவ்வாறாக சமூகத்தின் சில பிரிவினரை பொதுச் சமூகம் ஒதுக்குவதை cultural fascism என்று வர்ணித்தார்.
.." பெரும்பாலும் விளிம்புநிலையில் உள்ள மக்களே இவ்வாறான புறக்கணிப்பை சந்திக்க நேரிடுகிறது. திரைத்துறையில் இருக்கும் டைரக்டர் ஷங்கரையோ, ரஜினிகாந்த்தையோ இச்சமூகம் ஒதுக்குவதில்லை. ஆனால் துணை நடிகர் என்றால் ஒதுக்குகிறோம். ஒரு அரவாணியை நம்மால் ஒரு நண்பராக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியை நடத்தும் ரோஸ், அந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன்பிருந்தே என்னுடைய நண்பர். அவருடன் நண்பராக பல இடங்களுக்கு சென்றிருக்கிறேன். ஒரு முறை எங்கள் வீட்டிற்கு வந்த அவரிடம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசினோம். ரோஸ் கிளம்பும் போது அவரிடம் 'rest room உபயோகித்து விட்டுப் போங்கள்' என்று நான் சொன்னதற்கு மிகவும் நெகிழ்ந்து போனார். இதுவரை தன்னிடம் யாரும் அவ்வாறு கேட்டதில்லை என்று'
... விவாகரத்திற்குப் பிறகு என்னுடைய எட்டு வயது மகளோடு வாடகைக்கு வீடு தேடி போகும் போது பெரும்பாலோனோர் வீடு தர மறுத்தனர். டெல்லியில் இருந்த போது 'ரவி' என்கிற பெயர் 'ரபி' என்று உச்சரிப்புடன் கேட்டு அதற்காகவே வீடு கிடைக்கவில்லை. அசைவம் சாப்பிடுபவர்களுக்கு வீடு தர மறுக்கின்றனர்.
...இவ்வாறான சில மனத்தடைகள் நம்மிடம் இருக்கின்றன. அவற்றிலிருந்து இந்த சமூகம் வெளிவர வேண்டும்.
()
சமூகக் குரல்களின் சார்பில் சிறப்பு விருந்தினராக வந்திருந்தவர் (பெயரைக் கவனிக்கவில்லை. கோயில் குருக்கள் தோற்றத்தில் இருந்தார்) கூறியது.
.. திரைத்துறையினர் தாங்கள் செய்யும் தொழில் குறித்து அவர்களுக்கே ஒரு பெருமிதமும் பெருமையும் இருக்க வேண்டும். அவர்களே அவர்களின் தொழிலை இழிவாக பார்க்கக்கூடாது. (நான் என் தொழில் குறித்து பெருமையே கொள்கிறேன் என்று துணை நடிகை தொழில் புரிபவர் பதிலளித்தது உரையாடலின் கூச்சலில் பெரும்பாலோரின் கவனத்திற்கு வராமல் போய் விட்டது). மதுக்கடைகளில் பெரும்பாலும் கெட்டவர்களின் நடமாட்டமும் அதிர்வுகளும் இருக்கும். எனவே அவர்களுக்கு வீடு தர மறுப்பதில் தவறில்லை.
ஒதுக்கப்படுபவர்களின் குழுவில் இருந்த அரவாணி ஒருவர் "எங்களை இந்தச் சமூகம் எல்லாவிதத்திலும் ஒதுக்கி வைக்கிறது. வீட்டிலிருந்தும் துரத்துகிறார்கள். இந்தச் சமூகமும் எங்களை அருவெறுப்புடன் பார்க்கிறது. எந்த வேலை வாய்ப்பும் எங்களுக்கு கிடையாது. இப்படி எல்லா இடங்களிலும் ஒதுக்கப்படும் அரவாணிகள் செய்யக்கூடியது பிச்சை எடுப்பதும், பாலியல் தொழில் புரிவதும்தான். சமயங்களில் வன்முறையையும் அடாவடித்தனத்தையும் சில அரவாணிகள் கையில் எடுப்பது தவிர்க்க முடியாமல் போகிறது. அதற்கு இந்தச் சமூகம்தான் காரணம் என்றார்.
நிகழ்வின் உச்சமாக, அரவாணிகளைப் பற்றி வெறுப்பாக பேசிக் கொண்டிருந்த பெண், நல்ல பண்புகளுடன் உள்ள ஒரு அரவாணியை நண்பராக ஏற்றுக் கொள்ள தமக்கு ஏதும் தடையில்லை என்று கூறி எதிர் குழுவில் இருந்த அரவாணியை கட்டித்தழுவிக் கொண்டார். இந்தச் செய்கையால் மிகவும் நெகிழ்ச்சியடைந்த நிகழ்ச்சியின் நடத்துநர் கோபிநாத் அந்தப் பெண்ணுக்கு சபையை standing ovation அளிக்கச் செய்தார்.
()
எல்லா முற்போக்கு பாசாங்கு முகமூடிகளையும் கழற்றி விட்டு இந்தத் தலைப்பினுள் என்னை நான் பொறுத்திப் பார்த்தேன். நிச்சயம் காவல்துறையினர் என்றால் எனக்கு அலர்ஜி. நான் சந்தித்தவர்களில் பெரும்பான்மையோர் தன்னிடமிருந்த அதிகார மமதையோடுதான் இருந்தார்கள். தன் கடமையை உணர்ந்து பொறுப்புடனும் மிருதுவாகவும் அணுகியவர்கள் சொற்பமானவர்களே. நிலத்தரகர்களில் பெரும்பான்மையோர் ஏமாற்றுக்காரர்களாய்த்தான் இருக்கிறார்கள். brokers excuse. திருமண தரகர்கள் பற்றிய அனுபவமில்லை.
குடிப் பழக்கம் உள்ளவர்கள் வேறு; குடிகாரர்கள் வேறு. குடியை ஒரு விடுதலையாக, மிதமோடு நாகரிகமாக அருந்துபவர்களுடன் பிரச்சினையிலலை. ஆனால் அளவுக்கதிகமாக குடித்து விட்டு ரோட்டில் விழுந்து கிடப்பவர்கள், வாந்தியெடுப்பவர்கள், மற்றவர்களுடன் தகராறு செய்பவர்கள் போன்றவர்களைக் கண்டால் நிச்சயம் எரிச்சலாக இருக்கும். அதற்காக மதுக்கடைகளில் பணிபுரிபவர்களையும் குடிகாரர்களாக நினைத்து அருவெறுப்பது முட்டாள்தனம். அதே போல்தான் விவாகரத்து பெற்றவர்களையும், திரைத் துறையில் பணிபுரிபவர்களையும் ஒதுக்குவது.
ஒருபால் உறவு கொள்பவர்கள் குறித்து ஒரு காலத்தில் எனக்கு மிகுந்த வெறுப்பும் அருவெறுப்பும் இருந்தது. ஒருபால் உறவு நாட்டமுடையவர்கள் குறித்து ராயர் காப்பி கிளப் குழுமத்தில் நடந்த விவாதத்தில் என்னுடைய அருவெறுப்பை வெளிப்படுத்திய போது 'அவர்களின் பார்வையில் நீங்கள் அருவெறுப்பாய் தெரியக்கூடும் அல்லவா?' என்று எழுதினார் பத்ரி. விரல்கள் அழுகிக் கிடக்கும் தொழுநோயாளிக்கு ஆரோக்கியமானவனின் விரல்கள் அருவெறுப்பைத்தான் தரும் என்று நாகூர் ரூமி அதற்கு எதிர்வினையாக எழுதியது ஞாபகமிருக்கிறது.
ஆனால் நாளடைவில் ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சியின் போக்கில் புரிதலின் பேரில் இன்று அது மட்டுப்பட்டிருக்கிறது எனலாம். இடது கை பழக்கம் போல் ஒருபால் உணர்வும் ஒருவகையான இயற்கை உணர்வே என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் ஒருபால் உறவு நாட்டமுடையவர்கள் சட்டபூர்வமாக திருமணம் செய்ய வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. என்றாலும் எரிச்சலான பேருந்து பயணங்களில் எப்பவாவது ஆண்குறிகள் மேலே உரசும் போது 'அட நாய்களா, இதில் விருப்பமுள்ளவர்களுடன் கூடித் தொலைங்களேன். ஏன் மற்றவர்களை தொந்தரவு செய்கிறீர்கள்' என்று கத்தத் தோன்றுகிறது.
அரவாணிகள் குறித்து பார்க்கும் போது விளிம்பு நிலையிலும் உள்ள அவர்களிடம் பொதுச்சமூகம் எல்லாக் கதவுகளையும் அடைத்து அவ்வாறு ஒதுக்குவது தவறுதான் என்று தோன்றினாலும் சிந்தனை ரீதியில்சில நடைமுறை அனுபவங்களின் போது நாம் அறிவைத் துறந்து அவற்றை உணர்ச்சியின் வழிதான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நான் பார்த்தவரை எங்கள் அலுவலகத்தில் வரும் அரவாணிகள் மிகவும் மோசமாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றனர். ஆண்களில் சிலரும் எளியவழியில் காசுபெற பெண் வேடமிட்டு வந்து தகராறு செய்து அரவாணிகளின் மீதான வெறுப்பை அதிகரிக்கச் செய்கின்றனர் என்று அரவாணிகள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுகிறது. என்றாலும் அவர்களின் உள்ளார்ந்த சமூக கோபத்தின் வெளிப்பாட்டை பொதுச் சமூகம் தன்னை மாற்றிக் கொள்ளும் சூழல் ஏற்படும் வரை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என நினைக்கிறேன்.
(பரபரப்பாக கவனிக்கப்பட வேண்டும் என்கிற உள்நோக்கத்துடனே பதிவின் தலைப்பு அமைக்கப்பட்டது. உள்ளடக்கத்திற்கும் அதற்கும் பெரிதான தொடர்பில்லை).
suresh kannan
15 comments:
//(பரபரப்பாக கவனிக்கப்பட வேண்டும் என்கிற உள்நோக்கத்துடனே பதிவின் தலைப்பு அமைக்கப்பட்டது. உள்ளடக்கத்திற்கும் அதற்கும் பெரிதான தொடர்பில்லை). //
நல்லா எழுதுற நீங்களுமா..??? :(
நல்லா இருக்கு சார்!
உங்க பதிவும் நல்ல இருக்கு.
'... விவாகரத்திற்குப் பிறகு என்னுடைய எட்டு வயது மகளோடு வாடகைக்கு வீடு தேடி போகும் போது பெரும்பாலோனோர் வீடு தர மறுத்தனர். டெல்லியில் இருந்த போது 'ரவி' என்கிற பெயர் 'ரபி' என்று உச்சரிப்புடன் கேட்டு அதற்காகவே வீடு கிடைக்கவில்லை. '
இது பொய்.ஏனென்றால் வட இந்தியாவிலும் ரவி என்ற பெயர்
சாதாரணம் (ரவீந்தர், ரவிக்குமார்,
ரவீந்திரா,ரவிஷங்கர்).ரபி என்பது raffi என்று தான் சொல்லப்படும்.ரவிக்கும்,
ரபிக்கும் உச்சரிப்பு வேறு.சாரு
அரசு ஊழியராக இருந்தும் வீடு
கிடைக்கவில்லையென்றால்
அவர் பெண் குழந்தையுடன்
தனியாக இருப்பது காரணாமாக
இருக்கலாம்.சாரு எப்படிப்
பேசினாரா, எப்படி நடந்து
கொண்டாரோ யாருக்கு
தெரியும் :).
முன்பெல்லாம்
பாச்சிலர் என்றால் வீடு தர
மாட்டார்கள். இப்போது
தலைகீழ், 4 பேர் பாச்சிலர்
இருந்தாலும் ஓகே வாடகை
அதிகம் வரும் என்பதால்
யாரும் வீடு தர தயங்குவதில்லை.
பலர் போலிஸ்காரர்கள்,வக்கீல்களுக்கு
வீடு தருவதில்லை.அதில் நியாயம்
இருக்கிறது.இவர்கள் அடாவடி
பேர்வழிகள் என்ற இமேஜ் உருவாகக்
காரணம் யார்?.வீடு கொடுத்தால்
காலி செய்யமாட்டார்கள்,தொந்தரவு
தருவார்கள்,கோர்ட் கேஸ் என்று இழுத்தடிப்பார்கள், வாடகையும் சரியாக வராது என்று நினைப்பது சரிதான்.
ஷங்கருக்கும்,ரஜினி காந்த்திற்கும்
சொந்தமாக மாளிகைகளே உண்டு.
அவர்கள் எதற்கு வாட்கைவீடு
தேடுவார்கள்.
//ஷங்கருக்கும்,ரஜினி காந்த்திற்கும்
சொந்தமாக மாளிகைகளே உண்டு.
அவர்கள் எதற்கு வாட்கைவீடு
தேடுவார்கள்.//
அவர்களுக்கு வீடு கிடைப்பதல்ல பிரச்சினை. நாம் அதைப் போன்ற திரைப் பிரபலங்களையும் அதே துறையில் உள்ள ஏழ்மையான துணைநடிகர்களை அணுகும் விதத்தில் உள்ள மாற்றத்தை குறித்தது அது.
சாரு கோபமடைந்து திட்டி தன் இணையதளத்தில் எழுதினால்
என்ன செய்வீர்கள்.தலைப்பை
மாற்றுங்கள்.
பார்த்ததை நன்கு எழுதியுள்ளீர்கள்..
//சாரு கோபமடைந்து திட்டி தன் இணையதளத்தில் எழுதினால்
என்ன செய்வீர்கள்.தலைப்பை
மாற்றுங்கள்//
மோதிரக் கையால் குட்டு எனக் கொள்ள வேண்டியது தான்!
Antha nigalchiyai muzhuvathum parkkavillai, nalla pathivu.
பெரும்பாலான கருத்துகளுடன் ஒத்து போகிறேன்.
தவிர்க்க முடியாத காரணத்தால் அந்த நிகழ்ச்சியைக் காண இயலவில்லை.
நீங்கள் எழுதியதைப் படிக்கும்போது, மகிழ்ச்சியாகவும்.. ஒரு நிகழ்ச்சியை எப்படி Shortஆகவும், தெளிவாகவும் சொல்ல வேண்டும் என்று படிப்பினையாகவும் உள்ளது.
எந்த முகஸ்துதிக்குமோ, ஜால்ராவுக்குமோ இதைச் சொல்லவில்லை. வெரி சீரியஸ்.
அதே போல ஒவ்வொரு பதிவின் முடிவிலும் நீங்கள் உங்கள் பெயரெழுதுவது ஏனென்று தெரியவில்லை. (நான் எழுதறதால-ன்னு சொல்லாதீங்க.. :-)...)
//கையேடு said...
//(பரபரப்பாக கவனிக்கப்பட வேண்டும் என்கிற உள்நோக்கத்துடனே பதிவின் தலைப்பு அமைக்கப்பட்டது. உள்ளடக்கத்திற்கும் அதற்கும் பெரிதான தொடர்பில்லை). //
நல்லா எழுதுற நீங்களுமா..??? :(//
என் கருத்தும் இதே. உங்களைப் போன்ற தரமான ப்திவர்களுக்கு இந்த விளம்பர உத்தி தேவையில்லதது.
You have an excellent memory and vivid expression.
I'm reading 2nd entry from your blog. Interesting so far.
Thanks for the ' early preview of neeya nanna' as this episode i guess will be aired in Singapore in coming weeks.
In btwn:
குடிப் பழக்கம் உள்ளவர்கள் வேறு; குடிகாரர்கள் வேறு. குடியை ஒரு விடுதலையாக, மிதமோடு நாகரிகமாக அருந்துபவர்களுடன் பிரச்சினையிலலை.
hmm...belive you know what to do..
b/rgds
ameen-sg
சிந்திக்கப் பழக வேண்டும்.
சொந்தக் கதை தான். நானும் மனைவியும் வீடு பார்த்தோ. டாக்டரு, இன்சினீயரு எண்டு வீடு தர வந்தவங்களுகு ஈழத்தவர் என்றதும் மனசு மரத்து விட்டது. வாழ்க வளமுடன். அவ்ர்களால் தான் இப்பொழுது நான் உயர்ந்த நிலையில் உள்ளேன். இல்லாவிட்டால் இன்னமும் இந்தியாவில் இருந்து கொண்டு குப்பை கொட்டி இருந்திருப்பேன். இப்பொழுது ஏசி ரூமில இருந்து கொண்டு, அதி வேக கணினியில், வேலை நேரத்தில் இந்த குப்பைகளை எழுத முடியுமா?
எல்லாவற்றிலும் நல்லதையே காணலாம். எதிர் மறை எண்ணங்கள் ஒருவனின் சிந்தனைத் திறனை மட்டுமல்ல, வாழ்க்கை ஓட்டத்தையும் மாற்றி விடும்.
very good one!
indha maadhiri joodaa thalaippu vaikkalannaa, naan miss panniyiruppen. :)
தலைப்பு மட்டும்தான் கொடுமை.
தவிர உள்ளே உள்ள சரக்கு அக்மார்க்தான்
நல்ல பதிவு - தலைப்பைத் தவிர.
வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்
இந்த நிகழ்ச்சியின் ஒளித்துணுக்கில் சாருவின் பகுதியை இங்கு காணலாம்.
http://www.charuonline.com/dec08/VijayTvNeeyaNaana.html
Post a Comment