Wednesday, December 03, 2008

மலத்தின் நாற்றம் வீசும் கதை

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தன்னுடைய சமீபத்திய பதிவில் தமிழ் நவீன இலக்கியத்தில் பரவலாக அறியப்படாத ஆனால் குறிப்பிடத்தக்க படைப்புகளை எழுதியவர்களைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். நானும் இதே போன்றதொரு முயற்சியை ஜுன் 2006-ல் 'அறியப்படாத எழுத்தாளர்களின் வரிசையில்...' என்றொரு தொடராக எழுத ஆரம்பித்தேன். ஆனால் அதை தொடர இயலவில்லை. எழுத்தாளர்கள் மாத்திரமல்ல, சிறிது காலமே பரிமளித்த திரைப்பாடகர்கள், நடிகர்கள், (குணா படத்தின் நாயகி எங்கே போனார்?), இயக்குநர்கள் (ருத்ரைய்யா) போன்றவர்களைப் பற்றி எழுதும் விருப்பமுண்டு.

ராமகிருஷ்ணன் தன்னுடைய பதிவில் எக்பர்ட் சச்சிதானந்தம் என்கிற சிறுகதை எழுத்தாளரைப் பற்றியும் அவருடைய சிறுகதைகளைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். நானும் அந்த சிறுகதைத் தொகுதியைப் பற்றி முன்னர் மரத்தடிக் குழுமத்தில் எழுதியிருக்கிறேன். அதை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ள உத்தேசம். (பாதுகாத்து வைத்திருந்த மரத்தடி.காம்.-க்கு நன்றி.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
"நுகம்" சிறுகதைகள்- அ.எக்பர்ட் சச்சிதானந்தம்
- தமிழினி பதிப்பகம், சென்னை-14. விலை ரூ.60
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

எக்பர்டின் கதைகள் கிறிஸ்துவர்கள் அல்லாதவர்களுக்கு அவ்வளவு பரிச்சயமல்லாத சர்ச் என்னும் கிறிஸ்துவ தேவாலயங்களைச் சுற்றியே வருகிறது. ஆனால் மதப்பிரசாரக் கதைகள் அல்ல. மாறாக அங்கே நடக்கும் அரசியல்களையும், போதர்களின் சுயநலத்தின் அசிங்கங்களையும், ஆலயப் பணம் வசூலிக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக செலவழிக்கப்படுவதையும், கோயில் ஊழியர்களின் குறைகள் கவனிக்கப்படாமல் நிராகரிக்கப்படுவதையும் எந்தவித பிரசாரக் குரலுமின்றி இயல்பான தொனியில் சொல்லிக் கொண்டு போகிறார் ஆசிரியர்.

மூச்சுத்திணறும் வார்த்தைக் கட்டமைப்புகளால் வாசகனைத் திணற வைக்காமல், ஓடும் பேருந்தில் தன் நண்பனுடன் முந்தாநாள் நடந்த சம்பவத்தைப் பற்றி சுவையாக விவாதித்துக் கொண்டு போகும் சிநேகமான எழுத்து இவருடையது. இவர் ஒர் பள்ளி ஆசிரியராக இருப்பதால், அவர்களுக்குள் இருக்கும் போட்டிப் பொறாமைகளையும் இயல்பாக எழுத முடிகிறது.

சில கதைகளைப் படிக்கும் போது, 'பரலோகத்திருக்கிற எங்கள் பிதாவே' என் நான் ஜெபித்து மறந்து போன என் சிறுவயது பள்ளிக்கூடம் ஞாபகத்திற்கு வருகிறது.

தேவாலயக் கல்லறையில் பணிபுரியும் ஏழை ஊழியரின் மகன் இறந்து போகும் போது அவனே சோகத்துடன் அந்தக் காரியங்களைச் செய்யும் சம்பவங்களை ஆசிரியர் விவாதிக்கும் போது வாசகர்களும் கையாலாகத்தனத்துடன் வேடிக்கை பார்க்க நேரிடுகிறது. இன்னொரு கதையில் தன் மகளுக்காக கிறிஸ்துவப் பள்ளியில் ஆசிரியை வேலைக்காக சேர்க்க அந்தத் தந்தை எல்லா வழிகளையும் முயன்று பார்ப்பதும், இறுதியில் அங்கு நடக்கும் அரசியல் காரணமாக வேறு ஒருவருக்கு அந்த வேலை அளிக்கப்படும் போது, தன் தோழி உதவியுடன் தானே ஒரு சிறிய பள்ளியை ஆரம்பிக்க அந்த மகள் முடிவெடுக்கும் அந்த கணத்தில் இளைய தலைமுறையினரை சோர்வடைய விடாமல் ஒரு புது வழியை காண்பிக்கிறார் ஆசிரியர்.

=o=

இந்தச் சூழலைத் தாண்டியும் சில கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அதில் என்னை கவனிக்க வைத்தது, 'மலம்' என்னும் தலைப்பில் எழுதப்பட்ட கதை.

மலம் அள்ளுபவளாக இருந்தாலும், திடகாத்திரமாக, கவர்ச்சியாக இருப்பதால் அவளுடன் உறவு கொள்ள ஆசைப்படும் அவன், மனைவி ஊருக்குப் போயிருக்கும் இதை அவளிடம் வெளிப்படுத்த, அவள் ஒரு நிபந்தனை விதிக்கிறாள். ஒரு நாள் தனக்குப் பதிலாக அவனை எல்லா வீட்டு மலங்களையும் அள்ளச் சொல்கிறாள். அவள் மீதுள்ள வெறியால் இதற்கு சம்மதிக்கும் அவன் மிகுந்த அருவருப்புடன் மலம் அள்ளுவதும் ஒரு நிலையில் தாக்குபிடிக்க முடியாமல் மூச்சடைத்து, வாந்தியெடுத்து நீரெடுத்து கழுவப் போக எல்லா இடமும் மலமாக அவனுக்குள் தெரிகிறது. 'இப்ப என்னா சொல்ற' என்கிறவளை 'வெளியே போ' என்று அவன் கத்துவதுடன் கதை நிறைகிறது.

அவன் மலம் அள்ளும் போது தமக்குள் பேசிக் கொள்வதை இரக்கமே இல்லாமல் வர்ணிக்கிறார் ஆசிரியர்.

.................. 'கட்டி கட்டியா இருந்தாலும் பரவா இல்ல. களி மாதிரி இப்படியா. எந்த குண்டியோ. பயங்கர நாற்றம். என்ன இது வெள்ளைப்புழுவா தொ¢யுது. ஆஸ்கரிஸ், டீனியா... என்ன எளவோ.. சனியன் பூச்சி மாத்திரை சாப்பிட்டா என்ன? என்னத்தை தின்னாளுகளோ இவ்ளோ கெடக்கு. கடவுளே கைல ஏறிடுச்சே புழு.... தரைல தேய்ச்சா கூட இன்னும் நெளியுது. தலைதான் நசுங்கி கிடக்கு. கட்டை விரல் நகத்துல மஞ்சளா எப்போ ஒட்டிச்சி? நக இடுக்குல வேற.' ...................

படிக்கும் நமக்கே குமட்டுகிற போது இதையே வேலையாய் வைத்துள்ள அந்தத் தொழிலாளர்களை நினைக்கும் போது பரிதாபமாக இருக்கிறது.

=o=

பள்ளி ஆசிரியரரான எக்பர்ட் சச்சிதானந்தம் தற்போது காஞ்சிபுரத்தில் வசிப்பதாகக் குறிப்பு இருக்கிறது


suresh kannan

11 comments:

anujanya said...

சுரேஷ்,

முகத்தில் அறையும் கதை. ஏதோ பெருநகரத்தின் அடுக்குமாடியின் குளிரூட்டப்பட்ட அறையில் வெகு நாட்களாகக் காணாமல் போன மனசாட்சியை எதற்கு இந்த நேரத்தில் உசுப்பி விடுகிறீர்கள்?

//எழுத்தாளர்கள் மாத்திரமல்ல, சிறிது காலமே பரிமளித்த திரைப்பாடகர்கள், நடிகர்கள், (குணா படத்தின் நாயகி எங்கே போனார்?), இயக்குநர்கள் (ருத்ரைய்யா) போன்றவர்களைப் பற்றி எழுதும் விருப்பமுண்டு. //

தொடருங்கள் சுரேஷ்.

அனுஜன்யா

லேகா said...

அறிமுகத்திற்கு மிக்க நன்றி சுரேஷ்!!

Anonymous said...

சுரேஷ்...

நல்ல பதிவு...

நான் பொதுவாக உங்களை அவதானித்து வந்ததில் இருந்து தெரிந்துகொண்டது, நீங்கள் ஒரு "பயங்கர" சோம்பேறி...

நல்ல எழுத்து திறமை, ஆனால் கடும் சோம்பல் தொடங்கிய பல விஷயங்களை முடிக்கவிடாமல் செய்திருக்கிறது..

ஆனால் உங்களுக்கு உங்கள் சோம்பேறித்தனத்தை மறைக்க சப்பைக்கட்டு கட்டவும் தெரிந்திருக்கிறது...

இப்படி எல்லாம் மொக்கையாக சொல்வதை விட்டுவிட்டு நேரடியாக சொன்னால்..

யோவ், பத்து வழிகள் என்று தலைப்பு கொடுத்துவிட்டு ஏன் அய்யா 5 லயோ 8 லயோ நிறுத்திப்புடுற ?

Unknown said...

மலம், மனிதம் பேசி மணக்கிறது.
முகத்திலறையும் நிஜம்.

பரிசல்காரன் said...

தொடருங்கள் சுரேஷ்.

Krishnan said...

பரவலாக தெரியாத எழுத்தாளரை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி சுரேஷ்.

உண்மைத்தமிழன் said...

சுரேஷ் ஸார்..

தயவு செய்து தொடருங்கள்.

செவிட்டில் அடித்தது போல் இருக்கிறது கதை.. இதுதாண்டா கதை என்று சொல்ல வைக்கிறது..

நல்ல அறிமுகத்திற்கு நன்றி..

வால்பையன் said...

அவரின் புத்தகங்களை உடனே தேடுவது தான் முதல் வேலை

Anonymous said...

அறிமுகத்திற்கு நன்றி. இதே போல் வேறு பல நல்ல புத்தகங்களையும் அறிமுகப்படுத்துங்கள்.

enRenRum-anbudan.BALA said...

நல்ல அறிமுகத்திற்கு நன்றி, சுரேஷ் ! இது போல நாங்கள் உய்ய நிறைய எழுதுங்களேன் :)

அது போலவே, அப்பப்ப "போட்டுத் தாக்கவும்" செய்யுங்கள் ;-)

சாணக்கியன் said...

கடினமான வேலைதான். ஆனால் தினம் தினம் செய்பவர்கள் இப்படி டீடெய்லாக பார்க்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். சொல்ல வந்த கருத்துக்கு இந்த லாஜிக் எல்லாம் பார்க்கத் தேவையில்லைதான்!