Friday, January 07, 2011

நாஞ்சில் நாடன் பாராட்டு விழா (3)

பகுதி 1   |   பகுதி 2  பத்ரியின் வீடியோ பதிவு 

எழுத்தாளர் ராஜேந்திர சோழன்
அதுவரை இறுக்கமாக இருக்கும் அரங்கு சில பேச்சாளர்கள் ஆரம்பித்தவுடன் இறுக்கம் தளர ஆரம்பிக்கும் அல்லவா? எழுத்தாளர் ராஜேந்திர சோழனின் பேச்சு அவ்வாறாக இருந்தது. பேச்சின் இறுதியில் மக்கள் போராளியான மருத்துவர் பினாயக் சென்னுக்கு விதிக்கப்பட்டிருக்கும் ஆயுள் தண்டனை மீதான கண்டனத்தை பதிவு செய்தது முக்கியமானது. 'எழுத்தாளர்கள் சமகால அரசியலில் இருந்து விலகி இருக்கக்கூடாது' என்கிற ஞாநியின் கருத்தை இவரும் எதிரொலித்தார்.

ராஜேந்திர சோழன் பேச்சின் ஒரு பகுதி குறித்து யோசித்தேன். 'தமிழகத்தில் பகுத்தறிவு இயக்கம் என்பதின் செயல்பாடுகள் அதீதமாகி (பகுத்தறிவு வேண்டாமென்று சொல்லவில்லை) எல்லாவற்றையும் மூடநம்பிக்கை என்கிற பெயரில் மறுத்து தம்முடைய தொன்மங்களிலிருந்தும் பழங் கலாசாரங்களிடமிடமிருந்தும் தமிழன் துண்டிக்கப்பட்டு கிடக்கிறான்' என்பது இவர் பேசியது. வீடு திரும்பும் வழியில் இது பற்றி சிவராமனிடம் இதுபற்றி பேசிக் கொண்டிருந்தேன். ராஜேந்திர சோழனின் தமிழ் தேசியப் பின்னணி ஆர்வம் குறித்து சிவராமன் விளக்கினார். (இது பற்றி மாத்திரமல்லாமல் வலைப்பதிவில் தொடர்ந்து எழுதச் சொல்லி அவரைக் கேட்டுக் கொண்டேன். செய்வார் என நம்புகிறேன்). 

எழுத்தாளர் கண்மணி குணசேகரன்
விழாவின் இறுதியில் ஜெயமோகன் உட்பட பார்க்கிறவர்களிடமெல்லாம் கண்மணி குணசேகரனின் பேச்சை வியந்தேன். தானே இயற்றிய பாடலொன்றை கணீரென பாடிய குணசேகரன் தென் ஆற்காட்டின அசலான வட்டார மொழியில் கிராமத்து வெகுளித்தனத்துடன் உரையாடியது மிகவும் ரசிக்கும் படி இருந்தது. அவரின் பேச்சு, எழுத்தாளன் என்கிற நிலையைத் தாண்டி ஒரு சம்சாரியின் பேச்சு என்பதாகத்தான் கொள்ள வேண்டும். வெளியில் தரப்படும் விருதுகளை விட வீட்டில் (மனைவியிடம்) வாங்கும் விருது பிரதானமானது என்றதோடு பரிசு குறித்த அவரது எதிர்பார்ப்புகளும் பொருளாதாரம் சார்ந்த எளிய வேண்டுகோள்களாக இருந்தன. 'நாஞ்சில் நாடனுக்கு ஏன் எங்கும் பேருந்தில் பயணம் செய்யக்கூடிய சலுகையை வழங்கக்கூடாது' என்றார். (குணசேகரன் போக்குவரத்து கழகத்தில் பணிமனை ஊழியராக பணிபுரிவது குறிப்பிடத்தக்கது). சாகித்ய அரசு விருதின் பரிசுத் தொகை குறைவாக இருப்பதையும் குறிப்பிட்டார்.

'ஏதோ பாக்கறதுக்கு முன்சொட்டை விழுந்து சாதாரணமா இருக்கறேன்னு நெனச்சுடாதீங்க. நானும் விஷயம் உள்ளவன்தான். மூணு கவிதத் தொகுதி, நாலு புதினம், ஒரு அகராதின்னு... அடிச்சுன்னு போயிட்டே இருப்பேன். நிக்காது. என்கிற போது அவரின் அசாத்திய தன்னம்பிக்கை இயல்பாக வெளிப்பட்டதும் ரசிக்கும் படி இருந்தது. விழா முடிந்தவுடன் வெளியில் நண்பர்களுடன் நின்று கொண்டிருந்த அவரிடம் சென்று சுயஅறிமுகம் செய்து கொண்டு 'பட்டாசு மாதிரி வெடிச்சுட்டீங்களே' என்றேன். "ஆமாம். கலக்கிட்டேன்ல' என்று அவரும் இணைந்து யாரையோ பாராட்டுவது போல மகிழ்ந்து சிரித்தார். சில ஆண்டுகளுக்கு முன் வாசித்திருந்த அவரின் 'கோரை' நாவல் பற்றிய சிறு அறிமுகத்தை இங்கு சேமித்திருக்கிறேன்.

எழுத்தாளர் ஜெயமோகன்
ஜெயமோகன் தனது உரையில் நாஞ்சில் நாடனின் படைப்புலகம் பற்றியும்  குறிப்பாக நாஞ்சில் நாடனின் உணவின் மீதிருக்கும் காதலைப் பற்றியும் பேசினார். 'உப்புமா சாப்பிட்டேன்னு சொல்ல மாட்டார். உளுத்தம்பருப்பு தாளிச்சு கருவேப்பிலை போட்ட உப்புமா சாப்பிட்டேன்னுதான் சொல்வார்".

எழுத்தாளர் நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன் ஏற்புரை.

 'இந்த வெளிச்சம் கூச்சமா இருக்கு' என்று ஆரம்பித்து பேசி்க் கொண்டிருந்தவரிடம் எந்த நேரத்தில் கும்பமுனி உள்ளே புகுந்தாரோ தெரியாது. சாகித்ய அகாதமி மீது காட்டமான விமர்சனம் வைத்தார். ஏற்கெனவே அவரின் கட்டுரைகளில் எழுதியவைதான். அவர் கண்மணி குணசேகரனின் பேச்சை ரொம்பவும் ரசித்தார் என்பதை கவனித்தேன். விழா முடிவில் மாப்பிள்ளை விநாயகர் போன்று அமர்ந்திருந்த அவரிடம் 'உங்களுக்கு விருது கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம் சார்' என்று உள்ளபடியே என்னிடமிருந்த மகிழ்ச்சியை அவரிடம் வெளிப்படுத்தினேன். 'விருதை விட வாசகர்களின் இத்தனை அன்பும் ஆதரவுமே தம்மை நெகிழ்ச்சியடைய வைப்பதாக' சொன்னார்.

சுல்தானுக்கு நினைவுப்பரிசு
விழாவில் நாஞ்சில் நாடனின் இணையத்தளத்தை நடத்தும் சுல்தானை நினைவுப்பரிசளித்து கெளரவப்படுத்தினார்கள். ஓர் எழுத்தாளரின் எழுத்துக்களை இத்தனை ஆர்வமாக தேடிச் சேர்க்கும் இவர் நிச்சயம் இளைஞராகத்தான் இருப்பார் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு நடுத்தர வயது மனிதரைக் காண ஆச்சரியமாக இருந்தது. அதனால் என்ன, மனதால் இளமையானவர் போலும். அவரை தேடிச் சென்று அவரின் உழைப்பையும் ஆர்வத்தையும் பாராட்டினேன்.

தனது பிரத்யேக டிரேட் மார்க் புன்னகையோடு வந்த பத்ரியிடமும் கண்மணி குணசேகரனின் பேச்சை வியந்தேன். 2 மணி நேர வீடியோ எடுத்திருப்பதாக சொன்னார். இயன்றால் அன்றிரவே வலையேற்ற முயலுமாறு கேட்டுக் கொண்டேன்.'பல்வேறு தலைப்புகளில் 'கிழக்கு' பதிப்பகத்தின் புயல் வேக வெளியீடுகளை கவனிக்கும் போது 'மூன்றாம் உலகப் போர்' பற்றிய புத்தகம் கூட டிராஃப்டில் இருக்கும் போலிருக்கிறதே?" என்றேன். மனிதர் ரசித்து வெடித்துச் சிரித்தார்.

பாலுமகேந்திராவை பத்திரமாக அழைத்துச் சென்று கொண்டிருந்த சுகா என்கிற சுரேஷ் கண்ணனிடம் அவசர ரகசியமாக 'படம் எப்ப வருது?" என்றேன். 'வர்ற பிப்ரவரில வரும். சொல்றேன்' என்றார். பாலுவிடம் உதவி இயக்குநராக இருந்த இவர் 'படித்துறை' என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். 'வேணுவனம்' என்கிற வலைப்பதிவில் திருநெல்வேலி நகைச்சுவை கமழும் இவரது கட்டுரைகளை வாசித்து ரசிக்கலாம். அப்படியே சொல்வனத்தில் இவரது அருமையான இசைக்கட்டுரைகளையும். (இவரது திரைப்படம் அனைத்துப் பணிகளும் முடிந்து திரையரங்கு கிடைக்காமல் காத்திருப்பதை இன்னொருவரிடம் அறிய நேரும் போது வருத்தமாக இருந்தது. எத்தனை படைப்பாளிகளின் திரைக்குழந்தைகள் இப்படி கருவறையிலேயே மூச்சு திணறிக் கொண்டிருக்கிறதோ?).

தனது அட்டகாசமான 'பைப்' இல்லாத காரணத்தினால் குறிப்பிட்ட சதவீத கவர்ச்சியை இழந்திருந்த பாரதி மணியிடம் சில நிமிடங்கள். அவரின் மிகச் சுருக்கமான உரையைப் பற்றி விசாரிப்பு. "இத்தனை நிமிஷத்துக்குள்ள பேசிடணும்னு சொல்லிட்டாலே எனக்கு மண்டைக்குள்ள மணியடிக்க ஆரம்பிச்சுடும். அதனால 'நாஞ்சில் நாடனை மற்றவர்கள் பாராட்டுவதை ரசிக்கவே வந்திருக்கிறேன்' என்று சொல்லி அமர்ந்து விட்டேன்" என்றார். "ஆனா நெறைய பேசணும்னு வந்தேன்" என்றவரிடம் "அதனால என்ன, எல்லாத்தையும் எழுதுங்க சார்" என்றேன். தான் ஒரு எழுத்தாளர் என்பதை அழிச்சாட்டியமாக ஏற்க மறுக்கிறார். 'நாடக நடிகர்' என்கிற அடையாளமே போதுமாம். எழுத்துக் கூட்டி எழுத தெரிந்து விட்டாலே தம்மை எழுத்தாளன் என்று எண்ணிக் கொள்ளும் நபர்களுக்கு இடையில் 'சுஜாதா' பாராட்டிய இவர் இப்படி.

இசை விமர்சகர் ஷாஜியிடம் அவரின் மலேசியா வாசுதேவன், மற்றும் ஸ்வாணலதா கட்டுரைகள் பற்றியும் அதன் மொழிபெயர்ப்பு பற்றியும் சில நிமிடங்கள் பேச்சு. 'இணையததில் உங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களை வாசிக்கிறீர்களா?' என்றேன். "ஆம். நெறைய பேரு லிங்க் அனுப்பி வைக்கிறாங்க. அதெல்லாம் ரொம்ப பெரிசா எடுத்துக்கறதில்ல" என்றார்.

நண்பர்கள் சிலரை சில ஆண்டுகள் கழித்து சந்திக்கிறேன். அவர்களிடம் ஒரிரு வார்த்தைகள் பேச முடிந்தது. அவ்வாறு சந்தித்த எழுத்தாளர் கம் வலைப்பதிவர்களின் பட்டியல் ஒரு ஞாபக சேமிப்பிற்காக.

விழியன் (photography), ஜ்யோவ்ராம் சுந்தர், உருப்படாதது நாராயணன், சங்கர், நிர்மலா, மதுமிதா, ராமச்சந்திரன் உஷா, சிறில் அலெக்ஸ், அரவிந்த், அண்ணா கண்ணன, கே.ஆர்.அதியமான், உண்மைத் தமிழன், அதிஷா. குறிப்பாக 'கலையாளுமை' அரங்கசாமி எனக்காக சில நிமிடங்கள் ஒதுக்கியது என் வாழ்வின் பெரும் பேறு.

விழாவில் 'நாஞ்சில் நாடனின்' சமீபத்திய சிறுகதைகளின் தொகுதியான 'கான்சாகிப்' என்கிற நூலும் வெளியிடப்பட்டது. பாலுமகேந்திரா வெளியிட பாரதிமணி பெற்றுக் கொண்டார்.  முன்பே குறிப்பிட்டது போல் இந்த விழா எனக்கு பெரும் மனவெழுச்சியை அளித்தது. 'எழுத்தாளன் என்பவன் ஒரு சாதாரண அங்கீகாரத்திற்காக தன் இறுதிக்காலம் வரை (அதுவும் அதிர்ஷ்டமிருந்தால்தான்) காத்திருக்க வேண்டிய தமிழக சூழல் எரிச்சலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தங்களின் பணியை செய்து கொண்டிருக்கும் படைப்பாளிகளின் உழைப்பும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

பரவலாக கவனிக்கப்படாமலும் தகுதிக்குரிய அங்கீகாரம் பெறாமலும் ஒதுங்கியிருக்கும் சிறந்த தமிழ் எழுத்தாளர்களை தேடிச் சென்று 'விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்' கெளரவிக்க வேண்டும் என்பதை ஒரு வேண்டுகோளாக இங்கு முன்வைக்கிறேன்.

image courtesy: http://picasaweb.google.com/vishnupuram.vattam

suresh kannan

16 comments:

எம்.ஏ.சுசீலா said...

நன்றி சுரேஷ் கண்ணன்.என்னதான் யூடியூபில் பேச்சுக்களைக் கேட்டாலும் நேரடியாகக் கலந்து கொண்ட முழு நிறைவை உங்கள் 3 பதிவுகளும் அளித்தன.
//பரவலாக கவனிக்கப்படாமலும் தகுதிக்குரிய அங்கீகாரம் பெறாமலும் ஒதுங்கியிருக்கும் சிறந்த தமிழ் எழுத்தாளர்களை தேடிச் சென்று 'விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்' கெளரவிக்க வேண்டும் என்பதை ஒரு வேண்டுகோளாக இங்கு முன்வைக்கிறேன்//
ஆ.மாதவனை எங்கள் விஷ்ணுபுரவட்டம் அண்மையில்கௌரவித்து விருது வழங்கியதை அறிந்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்.ஒவ்வோர் ஆண்டுமே அது தொடரப்போகிறது.

ஜோ/Joe said...

சுகா வலைப்பதிவு அறிமுகத்துக்கு நன்றி!

Anonymous said...

பகிர்ந்தமைக்கு நன்றி, உங்கள் நண்பர் சுகாவின் தாயார் சன்னதி’

என்ற நூலை சொல்வனம் பதிப்பகம் மூலம் இந்த புத்தக கண்காட்சில் வெளியாகவிருக்கின்றனவமே

http://solvanam.com/?p=12214


அருண்

தமிழ்நதி said...

"பாலுமகேந்திராவை பத்திரமாக அழைத்துச் சென்று கொண்டிருந்த சுகா என்கிற சுரேஷ் கண்ணனிடம் அவசர ரகசியமாக 'படம் எப்ப வருது?" என்றேன். 'வர்ற பிப்ரவரில வரும். சொல்றேன்' என்றார். "

இந்தப் பதிவை எழுதியதும் சுரேஷ் கண்ணன்தானே...? கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.
விழாவுக்கு நானும் வந்திருந்தேன். அண்மையில் கலந்துகொண்ட இலக்கிய நிகழ்ச்சிகளில் நிறைவைத் தந்த நிகழ்வு என்று சொல்லும்படி சிறப்பாக இருந்தது.

ரமேஷ்ராமன் said...

என்ன ஷாஜி இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தாரா? நான் கவனிக்கவில்லையே! சே... எப்படி இருந்த ஆள்! முந்தியெல்லாம் சம்பந்தம் இல்லைன்னாலும் சும்மாவாவது அவர ஸ்டேஜ்ல ஏத்தி இலக்கியம் பத்தியெல்லாம் பேச வைப்பாங்க. இப்போ பாருங்க... அவர் ‘பெருசா எடுத்துக்காத’ விமர்சனங்களை மத்தவங்க எடுத்துக்கிட்டாங்க போல... ஆளு இருக்கற எடமே தெரியாம போச்சே! அதுவும் ஜெமோ முன்னாடி நின்னு நடத்தின நிகழ்ச்சில. நீங்களாவது ஆறுதலா நாலு வார்த்த பேசினீங்களா சுரேஷ்?

Aranga said...

//குறிப்பாக 'கலையாளுமை' அரங்கசாமி எனக்காக சில நிமிடங்கள் ஒதுக்கியது என் வாழ்வின் பெரும் பேறு.//

//சுரேஷ் கண்ணன் கவர் வாங்குவார்ணு இப்பத்தான் தெரியும். :))

“இவுகளப் பாத்தா தில்லானா மோகனம்பாள் சிவாஜியும் பத்மினியும் மாதிரியே இருக்குதுல்ல?” //

- ஒரு நண்பர் எனக்கு அனுப்பிய மெய்ல்.

சரவணபவனில் நீங்க வாங்கித்தந்த மினிடிபனை சாப்பிட்டதும் , உங்க பதிவுகளுக்கு கமண்ட் போட்டதும் தவிர எந்த தப்புமே பண்ணலையே ? ஏன்ணே இப்படி ?

Aranga said...

சு.க , கோவையில் ஜெயமோகனுடன் ஒரு சந்திப்பில் கூடிச்சிரித்த,நெகிழ்ந்த நண்பர்கள் “எதாச்சும் செய்யணுமுங்க” என்ற மனநிலையில் சேர்ந்தவர்கள்தான் விஷ்ணுபுரம் நண்பர்கள் ,

இதுவரை நாங்கள் நடத்திய நிகழ்ச்சிகள் கலாப்பிரியா 60 விழா , ஆ.மாதவன் விருது விழா , நாஞ்சிலுக்கு பாராட்டுவிழா .

எந்த நிகழ்ச்சியிலுமே ஜெயமோகனை அல்லது அவரது படைப்புகளை நாங்கள் முன்னிருத்தியதோ , பேசியதோ இல்லை , இது நிஜமாகவே ”இல்க்கியவட்டம்தான்” . ரசிகர்மன்றம் அல்ல.

ஆனால் எங்களை இணைக்கும் புள்ளி ஜெயமோகன்தான். இலக்கிய விழுமியங்களுக்காக உழைக்கும் அவருடன் நாங்களும் சேர்ந்து எங்களால் ஆனதை செய்கிறோம் .

தமிழ் சூழலில் எழுத்தாளனுக்கு எந்தவிதமான மரியாதையும் கிடையாது .வாசகர்கள் தரும் பாராட்டை தவிர . அதையாவது தர முயல்கிறோம் , அவ்வளவே.

ramachandranusha(உஷா) said...

சுரேஷ் கண்ணன், எழுத்தாளர் ராசேந்திரசோழன் என்ற பெயரை அன்றுதான் கேள்விபட்டேன். நேற்றைய புத்தகவிழாவில் அவரின் குறுநாவல் தொகுப்பு வாங்கியுள்ளேன். அஸ்வகோஷ் என்ற
பெயரில் எழுதியிருக்கிறார் என்கிறது அப்புத்தகம். இந்த பெயர் நினைவிருக்கிறது. மேலும் மேலாதிக்க
தகவல்கள் இருந்தால் எழுதுங்களேன். அவ்விழாவில் எனக்கு பிடித்த பேச்சு அவருடையதுதான்.

கே.வி. அரங்கசாமி! விழா மிக அழகாய் நடந்தது.விஷ்ணுபுரம் இலக்கியவட்ட உறுப்பினர்களுக்கு பாராட்டுக்கள்

தமிழ்நதி, வெளியே வரும்பொழுது, நீங்களாய் இருக்குமோ என்று ஒரு பெண்ணை பார்த்தேன்.
இன்னொருவருடன் பேசிக் கொண்டு இருந்ததால், சந்தேகமாய் கேட்க தயக்கமாய் இருந்தது.

Aranga said...

உஷா மேடம் , நன்றி,

ராஜேந்திர சோழன் சிறந்த சிறுகதையாளர் ,அஸ்வகோஷ் என்ற பெயரிலும் எழுதுபவர் .

பண்மொழி என்ற இதழை நடத்துகிறார் , மார்ஸிய அறிஞர் , தமிழ் தேசியவாதி. பெண்ணியம் குறித்து நிறைய எழுதியிருக்கிறார்.

தமிழினி பதிப்பகத்தில் அவரது சிறுகதை , குறுநாவல் தொகுப்புக்கள் உள்ளன. அவசியம் படிக்கப்பட வேண்டிய எழுத்தாளர்களில் ஒருவர்.

http://www.jeyamohan.in/?p=214

http://yalisai.blogspot.com/2010/04/blog-post.html

Ashok D said...

பகுதி 2 கொஞ்சம் ஏமாற்றினாலும் பகுதி 3 நிறைவாய் இருந்ததது... பின்னூட்டங்களும்தான்(ஏகப்பட்ட லிங்குகளையும் சேர்த்துதான்)

விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தினருக்கு special வாழ்த்துக்கள் :)

பிச்சைப்பாத்திரம் said...

நன்றி. சுசீலா மேடம். ஜோ. அசோக். உஷா. ரமேஷ்ராமன்.

அருண்: மகிழ்சசிகரமான விஷயம். பகிர்ந்தமைக்கு நன்றி.

தமிழ்நதி: இந்த பெயர்க்குழப்பம் காரணமாகத்தான் அவர் தன் பெயரை சுகா என்று மாற்றிக் கொண்டார் என நினைக்கிறேன். அவர் வேறு. நெல்லை கண்ணனின் மகன். திரைப்பட இயக்குநர்.

////சுரேஷ் கண்ணன் கவர் வாங்குவார்ணு இப்பத்தான் தெரியும். :))//

அரங்கசாமி: இப்படி ஒரு மேட்டர் இருக்குதா? தெரியாமப் போச்சே. தெரிஞ்சிருந்தா 'மானே' தேனே' எல்லாம் போட்டு அரங்கசாமி காவியம் பாடியிருப்பேனே? :)

Unknown said...

அருமையான பதிவு சுரேஷ். கண்மணி குணசேகரன் பேச்சை மிஸ் செய்துவிட்டோமே என வருந்தினேன். பகிர்வுக்கு நன்றி.....

//பரவலாக கவனிக்கப்படாமலும் தகுதிக்குரிய அங்கீகாரம் பெறாமலும் ஒதுங்கியிருக்கும் சிறந்த தமிழ் எழுத்தாளர்களை தேடிச் சென்று 'விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்' கெளரவிக்க வேண்டும் என்பதை ஒரு வேண்டுகோளாக இங்கு முன்வைக்கிறேன்.//

குரங்குபெடல் said...

நல்ல பகிர்வு . . . நன்றி . . .

அப்புறம் . . . புத்தக கண்காட்சி குறித்த
உங்கள் பாணி பகடி கட்டுரை எப்போ ?

ஜெயமோகன் said...

அன்புள்ள சுரேஷ் கண்ணன்

நன்றி. பல மூத்த எழுத்தாளர்களின் ஆக்கங்களைப்பற்றி கருத்தரங்குகள் அவர்களை கௌரவிக்கும் அரங்குகள் நிகழ்த்தும் எண்ணம் உள்ளது. நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறோம்.

கண்மணி முக்கியமான ஒரு தமிழ் எழுத்தாளன். அவனுடைய மேலோட்டமான வெகுளித்தனத்துக்கு உள்ளே வாழ்க்கையின் இரக்கமின்மையை தரிசிக்கும் கண் ஒன்று அவனுக்கு உண்டு. அவன் சமகாலத்தின் தமிழ் இலக்கிய ஆளுமைகளில் ஒருவன்

ஜெ

ரிஷபன்Meena said...

//'பட்டாசு மாதிரி வெடிச்சுட்டீங்களே' என்றேன். "ஆமாம். கலக்கிட்டேன்ல' என்று அவரும் இணைந்து யாரையோ பாராட்டுவது போல மகிழ்ந்து சிரித்தார்.//

இது போன்ற வெளிப்படையாய் இருப்பவர்கள் ரசிக்கத் தக்கவர்கள் ஆனால் இது போன்றோர் நம்மில் குறைவு. தகுதியான பாராட்டு வரும் போது அதை சுவீகரித்துக் கொள்வது தான் அழகு

சே!! சே!! நான் என்ன பெரிசா பேசிட்டேன் என்று போலியாய் சொன்னாலும் ஆமாம் கலக்கிட்டேன்ல என்று சொன்னாலும் ஒன்று தானே

பாண்டியன் said...
This comment has been removed by the author.