Monday, January 17, 2011

2011 புத்தகக் காட்சி அனுபவம் (2)

முந்தைய பதிவின் தொடர்ச்சி

தேகம் நாவல் குறித்து நான் எழுப்பிய கேள்விக்கு மனுஷ்யபுத்திரன் பதிலளிக்கத் துவங்கினார். (நினைவில் தங்கியிருப்பதைக் கொண்டு கோர்வையாக எழுத முயன்றிருக்கிறேன். இதில் மனுஷ்யபுத்திரன் சொல்லாத அல்லது அவர் சொன்னதிலிருந்து விலகியிருக்கும்  கருத்துப் பிழை ஏதேனும் இருக்குமானால் அது என் பிழையாகத்தான் இருக்கும்).

"ஓர் எழுத்தாளன் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக எழுதி ஒரு தகுதியான இடத்திற்கு வந்து சேர்கிறான். அந்த அனுபவம், அடிப்படையான அறம், தார்மீக உணர்வு, சுயபொறுப்பு  போன்றவற்றை அவனுடைய எழுத்தில் படியச் செய்கிறது. ஒரு பதிப்பாளனாக அந்த எழுத்தாளனின் படைப்பில் தலையிட நான் விரும்புவதில்லை. உதாரணம் சொல்கிறேன். நான் முன்னர் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்த பத்திரிகையில் நாஞ்சில் நாடனின் சிறுகதை ஒன்றை பத்திரிகை உரிமையாளர்கள் பிரசுரிக்க மறுத்தார்கள். உண்மையில் நான் அதை வாசிக்காமலேயே பிரசுரத்திற்கு அனுப்பி விட்டேன். 'ஒரு எடிட்டராக இருந்து கொண்டு எப்படி ஒரு படைப்பை வாசிக்காமல் அனுமதிக்கலாம்?' என்ற கேள்வி என் முன் வைக்கப்பட்டது. இலக்கியப்பரப்பில் நாஞ்சில் நாடனின் இடம் என்ன என்று எனக்குத் தெரியும். அவரும் அதை உணர்ந்து அந்தப் பொறுப்போடுதான் எழுதியிருப்பார். படைப்பாளிகளின் மீது இந்த நம்பிக்கையை வைப்பதும் அவர்களின் எழுத்துச் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பதும்தான் பதிப்பாளனாக நான் செய்ய விரும்புவது. இதே அளவுகோல்தான் சாருவின் படைப்பிற்கும்.

'தேகம்' புதினம் பெரும்பாலும் அது எழுதப்பட்ட விதத்திலிருந்து அதன் எதிர்திசையிலிருந்தே பெரும்பாலோனாரால் புரிந்து கொள்ளப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இன்றைய சூழ்நிலையில் வதை என்பது ஏதோ காவல்நிலையத்தில் குற்றம் சாட்டப்பட்டவனின் உடல் மீது நிகழ்த்தப்படுவது மாத்திரமல்ல. அது எல்லாத்தரப்பு மக்களிடமும் எல்லாச் சமயங்களிலும் வெளிப்படுகிறது. இந்தச் சூழல் பீதியூட்டுகிறது. இதில் வரும் தர்மா கையாளும் வதையின் பின்னணி பலவற்றின் தொடர்ச்சியாக பல தளங்களில் இயங்குகிறது"

நான் குறுக்கிட்டு "ஆனால் நாவலின் சில பக்கங்களில் மாத்திரமே நீங்கள் சொல்லும் வதையின் கட்டங்கள் வருகின்றன. ஆனால் ஒட்டுமொத்த நாவல் இந்த மையத்திலிருந்து விலகி திசைமாறியிருக்கின்றனவே' என்கிறேன்.

மனுஷ்யபுத்திரன் மீண்டும் நாவல் இயங்கும் விதத்தைப் பற்றியும் சமூகத்தில் வதையின் பங்கு பற்றியும் அற்புதமாக விளக்கினார்.

உரையாடலின் இறுதியில் எனக்குத் தோன்றியது இதுதான். "பேசாமல் இந்த நாவலை இவரே எழுதியிருக்கலாம்." நாவலின் பின்னட்டையில் படைப்பின் மையம் (?!) குறித்து மனுஷ்யபுத்திரன் எழுதியிருக்கும் ரத்தினச் சுருக்க வாசகங்களும் இதையே நிருபிக்கிறது.

எங்களின் உரையாடலின் இடையில் நடுத்தர வயதுள்ள உயிர்மை வாசகி ஒருவர் குறுக்கிட்டு ம.பு.விடம் உரையாடினார் "அட்டை டூ அட்டை வாசிச்சிடுவேங்க. சாரு எழுதற திரை விமர்னமெல்லாம் ஏங்க இப்படி இருக்கு? ஒண்ணு, எந்திரனை அப்படியே தாழ்த்தி எழுதறாரு. நந்தலாலாவ அப்படி புகழறாரு".

நான் அந்த பெண்மணியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு அதிகப்பிரசங்கித்தனமாக அதில் நுழைந்தேன். 'சாரு எப்படி எழுதணும்றீங்க" "நடுநிலைமையா எழுதலாமே?" "நடுநிலைமைனு ஒரு விஷயம் கெடையாதுங்க மேடம். எல்லாத் தரப்பு வாசகனுக்கும் செளகரியமா எழுதம்ணு நெனச்சா  வெகுஜன பத்திரிகைள்லதான் எழுதப் போகணும்."

மனுஷ்யபுத்திரன் அந்த பெண்மணிக்கு சமாதானமாக ஏதோ சொல்கிறார். "பாத்துக்கங்க. ரெண்டாவது சில ஓவியம்லாம் வல்கரா இருக்குதுங்க" என்றார் அந்த பெண்மணி. அவர் சென்ற பிறகு மனுஷ்யபுத்திரனிடம் உயிர்மையில் வெளிவந்து ஆரம்பக்கட்ட சிறுகதைகள் ( உதா: ஜே.பி.சாணக்கியா) பாலியல் சார்ந்தே வெளிவந்தனவே?" என்று கேட்கிறேன்.

"இப்பவும் உயிர்மைக்கு எழுதணும்னு விரும்பறவங்க எந்த மாதிரி இருக்கணும்னு கேட்கறாங்க. நான் அப்படியெல்லாம் எந்த வரையறையெல்லாம் கட்டுப்பாடும் வைததுக் கொள்ளவில்லை. எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அது இலக்கியம் என்னும் தகுதியோடு இருந்தால். போதும்."

சுமார் பதினைந்து நிமிடங்கள் நீடித்த எங்களின் இந்த உரையாடலின் இடையில் சில நண்பர்கள் ம.பு.விற்கு முகமன் கூறிச் செல்கின்றனர்; சிலர் நூல்களைப் பற்றி விசாரிக்கின்றனர். அத்தனைக்கும் பதில் சொல்லி விட்டு பொறுமையாக என்னிடம் உரையாடலைத் தொடர்ந்த மனுஷ்யபுத்திரனுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி சொன்னேன். தனது வாசகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த சாருநிவேதிதாவும் எங்களின் அருகே இரண்டொரு முறை வந்து சென்றார். "நான்தான் சாருநிவேதிதா" என்று என்னிடம் அறிமுகம் செய்து கொள்வார் என்று எதிர்பார்த்தேன். வரலாற்றில் இடம்பிடிக்கும் விருப்பம் அவருக்கு இல்லை போலும், அவ்வாறு விசாரிக்கவில்லை.  :-)

திரும்பும் போது அந்த உயிர்மை வாசகி திரை விமர்சனம் பற்றிச் சொன்ன புகாரை நினைவு கூர்ந்தேன். சாருவின் சில மனச்சாய்வுகளின் எதிரொலிகளைத் தவிர சாரு எழுதும் வடிவத்தில் எனக்கு எந்தப் புகாருமில்லை. உண்மையில் அவர் அவ்வாறு எழுதுவது மிகவும் பிடித்திருந்தது. நான் எழுதும் திரைப்பார்வைகளில் கூட அதன் தடயங்களை நீங்கள் காண முடியும்.

ஒரு சினிமா பற்றிய விமர்சனக் கட்டுரையில் அதை எழுதினவனின் தனித்தன்மை துல்லியமாக வெளிப்பட வேண்டும் என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம். உலகத்தில் வேறு எவராலும் அந்தக் கட்டுரை எழுத சாத்தியப்பட்டிருக்கக்கூடாது. அந்தளவிற்கு எழுதினவனின் ஆன்மாவும் பிரத்யேக நுண்ணுணர்வகளும்  அந்தக் கட்டுரையோடு கலந்திருக்க வேண்டும். எல்லா வாசகர்களின் மனநிலையையும் பிரதிபலிப்பது போல் கூலிக்கு மாரடிக்கும் விமர்சனங்களை வணிகப் பத்திரிகைகளில்தான் எதிர்பார்க்க வேண்டும்.

அதே போல் மனுஷ்யபுத்திரன் சொன்னதையும் நினைவு கூர்ந்தேன். எழுத்தாளனின் சுதந்திரத்தில் பதிப்பாளன் தலையிடாமல் இருப்பது ஒருவகையில் சரிதான். (ஆனால் தேகம் நாவலிலியே பதிப்பாளன் எழுத்தாளனுக்கு ஆலோசனை கூறுவது போல் ஒரு இடம் வருகிறது). அதே சமயத்தில் பதிப்பாளனின் கடமையையும் சரிவர நிறைவேற்ற வேண்டும். எப்படி ஓர் எழுத்தாளன் தொடர்ச்சியான தரமான படைப்புகளின் மூலம் வாசகர்களிடம் ஒரு தகுதியான இடத்தை அடைகிறானோ, அவ்வாறே பதிப்பகங்களும் தரமான படைப்புகளை மாத்திரம் வெளியிடுவதன் மூலம் ஓர் இடத்தை அடைகின்றன. அரைகுறையான, தரமற்ற படைப்புகளை வெளியிடுவதன் மூலம் ஒரு பதிப்பகமும் அதன் நம்பகத்தன்மையை இழக்கிறது. நான் சமயங்களில் அறிமுகமமில்லாத எழுத்தாளர் என்றாலும் வெளியிட்ட பதிப்பகத்தின் மீது நம்பிக்கை கொண்டு வாங்குகிறேன். இன்னொன்று. மேற்கத்திய நாடுகளில் பெரும்பாலான படைப்புகளின் இறுதி வடிவத்தை அதன் எடிட்டரே தீர்மானிக்கிறார். எழுத்தாளர்களுக்கு இணையான புகழுடன் உள்ள எடிட்டர்கள் உள்ளனர். இதன் மூலம் அந்தப் படைப்பு இன்னும் மெருகேருகிறது. ஒரு வார்த்தையை நீக்கினாலும் சிணுங்கும் இங்குள்ள மனோபாவம் அங்கில்லை. நல்ல எடிட்டர்களை எழுத்தாளர்களே தேடி தம் படைப்புகளை தருகின்றனர். தேவையற்ற பகுதிகளை நீக்குவதால் படைப்பு இன்னும் மேன்மையடைகிறது என்பதை எழுததாளர்கள் புரிந்து வைத்துள்ளனர்.

(வரும்) 
suresh kannan

5 comments:

ஜோதிஜி said...

நீங்கள் கொடுத்துள்ள கடைசி பத்தி புத்தக வேலையின் போது நான் என்னையே உணர்ந்து கொள்ள உதவியது. அதை உங்கள் எழுத்துக்களில் படிக்கும் போது மகிழ்ச்சியே. பதிப்பக மக்களும் இதே வார்த்தையைத்தான் சொன்னார்கள்.

R. Gopi said...

மனுஷ்ய புத்திரன் ஏற்கனவே ஒருமுறை உயிர்மையில் தெளிவாக எழுதி இருக்கிறார், உயிர்மை இதழைத் தான் தன் நண்பர்களுக்காக நடத்துவதாக. அதே கருத்தை அவர் பதிப்பிக்கும் புத்தகங்களுக்கும் நான் extend செய்துகொள்கிறேன். அதனால் எனக்கு அவர் பதிப்பிக்கும் புத்தகங்கள் குறித்தோ, உயிர்மை இதழ் குறித்தோ எந்தக் கேள்விகளும் எப்போதும் வந்ததில்லை.

மற்றபடி எடிட்டரும், எழுத்தாளரும் சேர்ந்து ஒரு அணியாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை நான் ஒப்புக் கொள்கிறேன்.

ஒரு புத்தகத்தினால் வரும் வெகுமதிகள், கஷ்டங்கள் அந்தப் பதிப்பாளர், எழுத்தாளர் இருவருக்கும் போய்ச சேருகிறது. அவர்கள் நிச்சயம் சேர்ந்து ஒரு அணியாக செயல்பட வேண்டும்.

Boston Bala said...

//எழுத்தாளனின் சுதந்திரத்தில் பதிப்பாளன் தலையிடாமல் இருப்பது ஒருவகையில் சரிதான். //

&

//தேவையற்ற பகுதிகளை நீக்குவதால் படைப்பு இன்னும் மேன்மையடைகிறது என்பதை எழுததாளர்கள் புரிந்து வைத்துள்ளனர்.//

இரண்டும் சரி. ஆனால், இரண்டாவதை தமிழில் உள்ள புகழ்பெற்ற புனைவு எழுத்தாளர்கள் (குறிப்பாக எஸ்ரா, ஜெமோ, சாநி) ஒத்துக் கொள்ளாதது வாசகனின் நேரக்கேடு.

குரங்குபெடல் said...

"நான்தான் சாருநிவேதிதா" என்று என்னிடம் அறிமுகம் செய்து கொள்வார் என்று எதிர்பார்த்தேன். வரலாற்றில் இடம்பிடிக்கும் விருப்பம் அவருக்கு இல்லை போலும், அவ்வாறு விசாரிக்கவில்லை. :-)
அருமையான நகைச்சுவை . . .
நல்ல பதிவு . . . நன்றி . . .

Jegadeesh Kumar said...

சுந்தர ராமசாமி கடைசிவரை தன் படைப்புகளை அது காலச்சுவடாகவே இருந்தாலும் சரி, ஆசிரியர்குழு படித்து, தகுதியுடையதாக இருந்தால்தான் வெளியிடவேண்டும் என்ற கொள்கையைக் கடைபிடித்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.