Wednesday, January 19, 2011

நாளைய சினிமா - கருத்தரங்கம் - தமிழ்ச் சங்கமம்


'நாளைய சினிமா' எனும் தலைப்பில் 'தமிழ்ச்சங்கமம்' ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கம் ஒன்று தேவநேய பாவாணர் நூலக கட்டிடத்தில் நடந்தேறியது. தமிழின் ஆகச்சிறந்த இயக்குநர்களுள் இருவரில் ஒருவரான பாலுமகேந்திரா முதல் (இன்னொருவர் மகேந்திரன்) 'தென்மேற்குப் பருவக்காற்று' இயக்கிய சமீபத்திய சீனுராமசாமி வரை உரையாற்றினர். முன்னும் பின்னும் முரணும் புதிருமாக பல கருத்துக்கள் மேடையில் வெளிப்பட்டன. அவைகளிலிருந்து நான் புரிந்து கொண்டது.

'இன்னும் ஆறு அல்லது ஏழு வருடங்களுக்கு (ரவுண்டாக பத்து வருடங்கள் என்று கூட வைத்துக் கொள்ளலாம்) தமிழ் சினிமா உருப்படுவதற்கான அடையாளமோ நம்பிக்கையோ இல்லை'

இது தெரிந்ததுதானே, இதற்காக எதற்கு கருத்தரங்கம்? என்று யாராவது கேட்டால் அது நியாயம்தான். மறுக்க முடியாது. பேசியவர்களில் பெரும்பான்மையானவர்கள், 'நாளைய சினிமா' என்ற தலைப்பிற்குள்ளேயே வரவில்லை. சமகால விஷயங்களையும் நேற்றைய விஷயங்களையும் பற்றி பேசி நாளையைப் பற்றி சங்கடமாக தவிர்த்தார்கள். பேசுவதற்கு அதில் விஷயம் இரு்நதால்தானே?

நான் இந்த நிகழ்ச்சிக்கு சென்றதே, அழைப்பிதழில் இருந்த ருத்ரைய்யா என்ற பெயருக்காகத்தான். அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்றே சென்றேன். வீடு, ச்நதியா ராகம் ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு தமிழில் நான் மிக மதிக்கும் முக்கியமானதொரு திரைப்படம் 'அவள் அப்படித்தான்'. அதில் பாடல்கள் இருப்பதனால்தான் அதை மூன்றாமிடத்தில் வைக்கிறேன். பாத்திரங்களை அதனதன் தனித்தன்மைகளோடு இத்தனை துல்லியமாயும் வலுவாகவும் சித்தரித்த தமிழ்த் திரைப்படத்தை இனிதான் காணப் போகிறேன். துரதிர்ஷ்டமாக ருத்ரைய்யா ஏனோ இந்த நிகழ்விற்கு வரவில்லை. சேரன், வெற்றிமாறன் உள்ளிட்ட சிலரும் வரவில்லை.

தமிழ்ச்சங்கமத்தின் பின்புலத்தில் அரசின் கை இருந்தாலும், இந்த கருத்தரங்கில் பேசியவர்கள் பெரும்பாலும் உணமையாகவும் நேர்மையாகவும் பாசாங்குகளைக் களைந்தும் பேசினார்கள். அதுவே இந்த நிகழ்வை சிறப்புறச் செய்தது. கருத்தரங்க அறை நிரம்பி நின்று கொண்டிருந்த பார்வையாளர்களே நூற்றுக்கும் மேல் இருப்பார்கள். ஆறு மணிக்கு துவங்கின நிகழ்வு முடிவடைய இரவு 10.30 மணி ஆகினாலும் பெரும்பாலான கூட்டம் கலையாமலிருந்தது நல்ல சினிமா மீது ஆர்வமுள்ளவர்களின் ஆரோக்கியமான எண்ணிக்கையைக் காட்டுகிறது.  சிறப்பாகப் பேசியவர்கள் என்று சீனு ராமசாமி, எடிட்டர் லெனின, ஜே.பி. கிருஷ்ணா, ஞானராஜசேகரன் பாலுமகேந்திரா ஆகியோர்களைச் சொல்லலாம். ஆனால் நிகழ்விலேயே ஆகச் சிறப்பாகப் பேசியவர் எஸ்.ராமகிருஷ்ணன்.

தமிழ்ச்சினிமாவில் திருமணச் சடங்கு தொடர்பான காட்சி என்றால் அதில் புரோகிதராக நடிப்பதற்கு ஒருவர் இருப்பார். பழைய படங்கள் முதற்கொண்டு அவரின் இளமைக்காலம் முதல் சமீபத்திய படங்கள் வரை அவரையே புரோகிதர் வேடத்தில் பார்க்கிறேன். ஏதோ ஒரு ரஜினி படத்தில் ரஜினி சிவன் வேடத்தில் வர அவரை வைத்துக் கொண்டு ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டு வருவாரே, அவர்தான். எஸ.ராவும் கிட்டத்தட்ட அந்த புரோகிதர் மாதிரி ஆகிவிட்டார்.

கிண்டலுக்காகச் சொல்லவில்லை. இலக்கிய மேடைகளில் விஷய கனத்தோடும், தலைப்பிலிருந்து விலகாமலும், ஆத்மார்த்தமாகவும், உண்மையான தேடல்களோடும் பேசுவதற்கு தமிழ்ச்சூழலில் எஸ்.ரா போன்ற நபர்கள் அரிதாக உள்ளனர் என்கிற யதார்த்த உண்மையே இதிலிருந்து வெளிப்படுகிறது. பட்டிமன்ற  பேச்சாளர்கள் போல், பலர் நகைச்சுவையாக எதையோ உளறிக் கொட்டி பார்வையாளர்களிடமிருந்து கைத்தட்டல்களை வாங்கிய பிறகு திருப்தியாக அமர்ந்துவிடுவதில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். தாம் பேசவிருக்கும் தலைப்பிற்கும் சூழலுக்கும் தொடர்பிருக்கிறதா என்பதையே பலர் யோசிப்பதில்லை. எனவேதான் எஸ்.ரா போன்றவர்களால்தான் அரிதாக சில மேடைகள் நிறைவு பெறுகின்றன.

எஸ்.ரா பேசினதை குறிப்பிடுவதற்கு முன்னால் இயக்குநர்கள் மிஷ்கினும் லிங்குசாமியும் பேசியதை குறிப்பிட வேண்டும். .

தனது வழக்கமாக 'ந்ந்தலாலா' தோல்வி புராணப் புலம்பலை இன்னும் கைவிடாத மிஷ்கின், 'ஒரு நல்ல சினிமா வெற்றியடைவதற்கு பார்வையாளர்கள் மனது வைத்தால்தான் முடியும். சினிமா எடுப்பது அத்தனை சுலபமான விஷயமல்ல. இதற்காக நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். நான் இன்றைக்கு நடுத்தெருவில் இருக்கிறேன். அதை விமர்சகர்கள் உணர வேண்டும். நெட்டில் எதை வேண்டுமானாலும் உடனே டைப்படித்து விடுகிறார்கள். அதற்காக கவலை கொள்ளவில்லை. மறுபடியும் லேண்ட்மார்க்கில் சேல்ஸ்மேனாக பணியாற்றி பிழைத்துக் கொள்ள முடியும். நல்ல சினிமாவை சக நண்பர்களிடம் வாய் மொழியாக சொல்லிப் பரப்புவதை ஒரு கடமையாகவே அனைவரும் கொள்ள வேண்டும்' என்றார்.

லிங்குசாமி பேசும் போது 'மக்கள் ரசனையைக் குறை சொல்லக்கூடாது. அவர்கள் புத்திசாலிகள்தான். வணிக சினிமாவை செய்து பழகின எனக்கு நல்ல சினிமா எடுப்பதில் ஆர்வம் உள்ளது. எவராவது நல்ல கதை வைத்திரு்நதால் வாருங்கள். அவர்களுக்காக என் அலுவலகம் திறந்தே இருக்கும். வேண்டுமெனில் அவர்களைத் தேடி நானே கூட செல்வேன்' என்று மேடை நாடக பாசாங்குடன் சவடாலாக பேசி விட்டு கிளம்பிச் சென்றார்.

லிங்குசாமி பேசிய முதல் விஷயம் தொடர்பாக நான் கருதுவது, கைத்தட்டல்களுக்காக மேடையில் அநேகர் பேசுகிற விஷயம். அது பொதுமக்களை புத்திசாலிகள் என்று செயற்கையாக புகழ்வது. (இந்த விஷயத்தில் மிஷ்கின் தேவலை. பார்வையாளர்களை நேரடியாகவே குற்றஞ்சாட்டினார்.)  பொதுச் சமூகத்தை பகைத்துக் கொள்ள, அவர்களுடன் நேர்மையுடன் உரையாட, அவர்களின் சுரணையின்மையை நேர்மையாகச் சுட்டிக் காட்ட ஒரு தைரியம் வேண்டும். பெரும்பாலோனோர்க்கு அது இல்லை. மக்களின் ரசனை மாறாமல் அல்லது அதில் உயர்ச்சியடையாமல், நல்ல சினிமா மாத்திரமல்ல, எந்தவொரு தரமான கலைப்படைப்போ, அரசியல் சூழலோ வர வாய்ப்பேயில்லை. பொதுச் சமூகம் இவ்வாறு ஆட்டு மந்தைகளாக அப்படியே இருப்பதில்தான் பலருக்கு விருப்பமும் நோக்கமும் இருக்கிறது. எனவே லிங்குசாமி அப்படி பேசியதில் வியப்பில்லை.

இன்னொன்று, நல்ல கதையை தேடுவதாக அவர் சொன்னது. அப்படி அவர் சொன்ன போது நான் நினைத்துக் கொண்டேன். 'அடப்பாவி! இந்த நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்டிடத்தின் கீழேயே மிகப் பெரிய நூலகம் இருக்கிறது. வால்யூம் வால்யூமாக தமிழ் இலக்கியங்களு்ம கதைகளும் கொட்டிக் கிடக்கின்றன. அதையெல்லாம் வி்ட்டு விட்டு 'நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள்' என்பது அறியாமைத் திமிர்தானே?

எஸ்.ரா பேசும் போது, லிங்குசாமியின் பேச்சுக்கு சரியான பதிலடி தந்தார். "மிகச் சிற்நத திரைப்படங்களாக உருவாக்கக்கூடிய ஐம்பது தமிழ் நாவல்களை என்னால் இந்த மேடையில் சொல்ல முடியும். (ஜெயகாந்தனின் ஒரு மனிதன். ஒரு வீடு, ஒரு உலகம் முதற்கொண்டு சில நாவல்களின் பெயர்களைச் சொல்கிறார்). இதையெல்லாம் விட்டு விட்டு எங்கே கதையைத் தேடுகிறீர்கள்? தமிழ் வரலாற்று ஆளுமைகள் பற்றி எத்தனை திரைப்படங்கள் தமிழில் வந்திருக்கின்றன? கணித மேஜை ராமானுஜம் பற்றி ஒரெ ஒரு ஆவணப்படம்தான் உண்டு. ஏன் அவரைப் பற்றி யாரும் திரைப்படம் எடுக்கவில்லை. சென்னையை முதலில் ஆண்ட ராபர்ட் கிளைவ் பற்றி எந்த திரைப்படத்திலாவது பேசியிருக்கிறோமா? ஊமைத்துரை பற்றி? தமிழகத்தில்தான் காந்தி எளிமையான உடையில் தன் உருவத்தை மாற்றியமைத்தார். இது எந்த திரைப்படத்தில் பதிவாகியிருககிறது?

அடுத்தது மிஷ்கினுக்கு:

'நான் உலகத்தின் மிகச் சிறந்த இயக்குநர்களின் நேர்காணல்களைப் பார்த்திருக்கிறேன். அதில் எவர் ஒருவருமே தான படம் உருவாக்கின போது பட்ட சிரமங்களைப் பற்றி பேசவில்லை. மாறாக படைப்புகளைப் பற்றி மாத்திரமே பேசுகிறார்கள். காசு கொடுத்து படம் பார்க்க வரும் பார்வையாளனுக்கு அதை அதைப் பற்றி கேட்க எல்லாவித உரிமையும் இருக்கிறது. எழுத்தாளனாக என் படைப்புகளை எந்தவொரு வாசகனும் என்னை வழியில் நிறுத்தி விமர்சிக்கலாம். திரைத்துறையில் பல்வேறு துறைகளில் பதினைந்து வருடங்களுக்கு மேலாக இயங்குபவன் என்கிற முறையில் அதன் சிரமங்களை அறிவேன். அதையெல்லாம் மீறித்தான் ஒரு சினிமாவை உருவாக்க வேண்டியிருக்கிறது. லூயி புனுவலின் Viridiana என்கிற திரைப்படம் அரசியல் காரணமாக அதிகார வர்க்கத்தினரால கடுமையாக எதிர்க்கப்பட்டது. அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டது. திரைப்படப்பிரதியை கல்லறையில் புதைத்து விட்டு தப்பியோடினார். பிறகு அது தோண்டி எடுக்கப்பட்டு பல விருதுகளை வென்றது. அவ்வாறான உயிராபத்தை அனுபவித்த இயக்குநர்கள் கூட தம்முடைய சிரமங்கள் குறித்து பொதுவில் புலம்புவதில்லை.

நேரம் கருதி 'நாளைய சினிமா' பற்றி இன்னொரு சமயத்தில் பேசுவோம். ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் கலாசாரம், அடையாளம், கலை, அரசியல் பிரதிபலிக்கக்கூடிய திரைப்படங்களை குறைந்த சமரசங்களுடன் நேர்மையான உருவாக்க முயன்றாலே போதும். அது உலகத்தரத்தில் மதிக்கப்படும் சினிமாவிற்கான முயற்சியாக இருக்கும். அதுதான் நாளைய சினிமாவிற்கான நம் கனவாக இருக்க முடியும். (நாளைய சினிமா பற்றி எஸ்.ரா பேச விரும்பியதை அவரது தளததில் வெளியிடுவார் / வெளியிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.)

பாலுமகேந்திரா, நேற்றைய சினிமா பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொண்ட பிறகு, (இன்றைய சினிமா பற்றி உங்களுக்கே தெரியும், நான் சொல்ல வேண்டியதில்லை) கருத்தரங்கின் தலைப்பான 'நாளைய சினிமா' -விற்கு வந்தார். அதுதான் இந்த நிகழ்வின் ஹைலைட்டாகத் தோன்றுகிறது.

'நாளைய சினிமா' பற்றி நான் எதுவும் பேசப்போவதில்லை. செய்துகாட்டப் போகிறேன். ஒரு படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். ஜூலை மாதத்தில் வெளிவரலாம். அதுவே 'நாளைய சினிமா' பற்றிய எனது செய்தி.

'சினிமா ரசனை' என்னும் விஷயத்தை 11வது,12வது வகுப்பு கல்வித்திட்டத்தில் வாரத்திற்கு ஒர வகுப்பு வருமளவிற்காவது இணைக்கலாம். எவ்வாறு படம் எடுப்பது என்பதை விடவும், ஒரு சினிமாவை எவ்வாறு பார்ப்பது என்பது முக்கியமானது. சினிமா ரசனை வளர்ந்தால்தான் நல்ல சினிமா உருவாகும் சூழல் உருவாகும். இதை சில ஆண்டுகளுக்கு முன்பே திரையுலகம் கலைஞருக்கு எடுத்த பாராட்டு விழாவில் சொன்னேன். இதுவரை செயல்படுத்தப்படவில்லை.

'ஓர் ஓவியமோ, நாடகமோ, நாவலோ, சினிமாவோ.. எந்தவொரு கலைப்படைப்பாக இருந்தாலும், இதற்கு முன்னால் அது ஆயிரம் முறை செய்யப்பட்டிருந்தாலும் சரி, அதற்காக சோர்வடையாமலும் அதற்காக அதிலிருந்து ஒதுங்கிப் போகாமலும். நீ மீண்டும் அதை செய்ய வேண்டும். உன்னால் எப்படி அதை செய்ய முடிகிறது என்பதில்தான் விஷயம் இருக்கிறது.

இன்ஸ்பிரேஷன், காப்பி என்றெல்லாம் சொல்கிறார்கள். நான் சத்யஜித்ரே, அகிரா படங்களை பார்த்து வளர்ந்தவன். அவர்களின் நுட்பம் என் ஜீனிலேயே உள்ளது. என் படைப்பிலும் அது வெளிவரும். அதைத் தவறாக புரிந்து கொள்கிறவர்களைப் பற்றி நான் கவலை கொள்வதில்லை.

நல்ல இலக்கியங்களைத் தேடி வாசியுங்கள். நான் எனது பயிற்சி கல்லூரியில் மாணவர்கள் நவீன இலக்கியத்திலிருந்து தினமும் ஒரு சிறுகதையை வாசிப்பதை கட்டாயமாக்கியுள்ளேன். வாசித்த பின்பு புத்தகததை ஓரமாக வைத்து விட்டு 'உன் மொழியில் அந்தச் சிறுகதையை எழுது' என்பேன்.

உலக சினிமா நிறைய பாருங்கள். ஷாப்பிங் கட்டிடங்களில் காய்கறி வாங்கும் போது கூடவே உலக சினிமா டிவிடியையும் வாங்குமளவிற்கான சூழல் நிலவுகிறது. ரூ.30/-க்கு உலக சினிமா கிடைக்கிறது. அதற்காக நான் பைரசியை ஆதரிப்பதாக இதைத் திரிக்கக்கூடாது. அப்படியே இதற்காக என்னை சிறையில் அடைத்தாலும் எனக்கு கவலையில்லை.

எடிட்டர் லெனின் திரைத்துறையில் அதிகார வர்க்கம் ஏற்படுத்தி வைத்திருக்கும் அபத்தமான விதிகளைப்பற்றி விளாசித்தள்ளினார். "நல்ல சினிமா வருவதற்கு பெரும் தடையாக இருப்பது ஸ்டார் நடிகர்களே. அவங்களை முதல்ல ஒழிக்கணும். மன்றங்களை ஒழிக்கணும். ஒரு படத்துக்கு எட்டு பிரிண்ட் போட்டதான் உள்ளே வர முடியும்னு சொல்றத விட்டு ஒரு பிரிண்ட் போட்டாக்கூட வரணும்னு விதி ஏற்படுத்தணும். சினிமா பற்றி தெரியாதவன்லாம் கமிட்டில ஒக்காந்திருக்கான். அதையெல்லாம் ஒழிச்சுக்கட்டிட்டு சினிமா பத்தி தெரிஞ்சவன போடணும். அப்பத்தான் நாளைய சினிமா உருப்படும.

பாரதி திரைப்படத்தின் இயக்குநர் ஞானராஜசேகரன் பேசியது ரொம்பவும் தர்க்கரீதியாக இருந்தது.

"நன்றாக உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை எல்லாத் தரப்பு மக்களும் பார்த்து அது பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகணும்னு ஏன் எதிர்பார்க்கறீங்க? மேற்கத்திய நாடுகள்ல தன் படத்தோட ஆடியன்ஸ் யாருன்னு அவன் நல்லாப் புரிஞ்சு வெச்சிருக்கான் அவங்க பார்த்தா அவனுக்குப் போதும்.

இன்னொன்னு்: ஸ்கிரிப்ட்டுக்கு எவ்ள பட்ஜெட் தேவைன்றதை அந்த ஸ்கிரிப்ட்தான் தீர்மானிக்கணும். வெஸ்டர்ன்ல அப்படித்தான் செய்யறாங்க. இந்த ஸ்கிரிப்ட்டுக்கு இவ்ளதான் செலவு செய்யணும்னு கறாரா தீர்மானிக்கிறாங்க. ஒரு தயாரிப்பாளர் என் கிட்ட வந்தார். நான் வெச்சிருந்த கதையை சொல்லி 'மூணு கோடி பட்ஜெட்' செலவாகும்ணேன். அவர் ' நான் ஏழு கோடிக்கு குறைஞ்சு படம் புரொடியூஸ் பண்றதில்லை'ன்கிறார். எந்திரன் போன்ற உருப்படியில்லாத திரைப்படங்களுக்கு 200 கோடி செலவு செய்ய தயாரா இருக்காங்க. நான் பெரியார் படம் செஞ்சப்ப மூணு கோடி ரூபாக்காக சிரமப்பட்டேன். அந்தக்காலத்தோட சூழல படத்துல கொண்டு வரணும்னா அந்தந்த பிராப்பர்ட்டிகளை கொண்டு வரணும். அது தயாரிப்பாளர்களுக்கு புரியலை.'.

தென்மேற்கு பருவக்காற்று இயக்குநர் சீனுராமசாமியும் படம் உருவாக்குவதில் தம்முடைய சிரமங்களைப் பற்றி பேசினார். 'சிறு விவசாயிகள் போலத்தான் குறைந்த பட்ஜெட்டில் நல்ல படம் உருவாக்கவறங்க நெலமையும் இருக்கு. தாயை மையப்படுத்தி என் ஸ்கிரிப்ட் இருந்ததால  நெறைய தயாரிப்பாளர்கள் ஒத்துக்கலை. ஸகிரிபட்டை மாத்துங்கன்றாங்க. சில ஏமாற்று வேலைகள் செஞ்சுதான் ஒரு நல்ல சினிமாவை உருவாக்க வேண்டிய துரதிர்ஷ்டமான சூழல் இங்க இருக்கு.70 தியேட்டர்களை கைல வெச்சிருக்கறவங்கதான் இன்னிக்கு சினிமாவோட தலைவிதியை தீர்மானிக்காறங்க'.

ஜேபி கிருஷ்ணா சினிமாவில் ஒளிப்பதிவு என்கிற விஷயம் தொடர்பாக பல சுவாரசியமான விஷயங்களை பொறுமையாக சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அப்போதே நேரமாகியதால் பொறுமையிழந்த பார்வையாளர்கள் தங்களின் அசெளகரியத்தை வெளிப்படுத்த முடித்துக் கொண்டார். இதன் காரணமாகவே சமுத்திரக்கனி, பிரபுசாலமன் போன்றோர் அதிகம் பேசவில்லை. டிராஸ்கி மருது ஒளிப்பதிவாளர்களை முதன்மைப்படுத்தி பேசினார். 'அவர்தான் உருவாகிற சினிமாவை முதலில் பார்க்கிறார்'. (லிங்குசாமி பேசும் போது சினிமாவை முதலில் பார்ப்பது இயக்குநர்தான் என்றார். எஸ்.ரா பேசும் போது ஸ்கிரிப்ட் ரைட்டர்தான் என்றார்). இதுவரை உருவாக்கப்பட்ட தமிழச்சினிமாக்களில் 'தேவர் மகன்'தான் ஆகச்சிறந்த, முழுமயான படம். அதை உருவாக்கின பரதன் ஏன் இங்கு வெற்றி பெற முடியவில்லை?'

()

ஆரமபத்தில் சொன்னதுதான். தமிழ் சினிமா உருப்பட இன்னும் பத்தாண்டுகளுக்கு வழியில்லை. ஏதாவது அதிசய அலை அடித்தால்தான் உண்டு. பாலுமகேந்திரா குறிப்பிட்டதைப் பற்றி மாணவப்பருவத்திலிருந்து சினிமா ரசனையை வளர்த்தெடுக்க வேண்டும். மக்களின் ரசனை மாறினால் அது நல்ல சினிமா உருவாக வழிசெய்யும். தயாரிப்பாளர்கள் எவரும் மோசமான சினிமாவைத்தான் உருவாக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கவில்லை. லாபம்தான் அவனுடைய குறிக்கோள். நல்ல சினிமா மூலம் அது நிகழுமென்றால் அதைததான் அவன் செய்வான். அந்த சூழ்நிலையை பார்வையாளர்களால்தான் உருவாக்க முடியும். மறுமறுபடியும் ஒரே வார்ப்பில் எடுக்கப்படும் லாபநோக்குத் திரைப்படங்களை - சினிமா மீது அடிப்படை ஆர்வமுள்ளவர்களாவது - புறக்கணித்து அவற்றைத் தோற்கடிக்க வேண்டும். ஆரோக்கியமான பொழுதுபோக்குத் திரைப்படங்கள் உருவாகும் அதே வேளையில் இணைக்கோடாக மாற்றுத்திரைப்படங்களு்ம் ஒருபுறம் உருவாகும் சூழல்தான் 'நாளைய சினிமா'விற்கான அடையாளமாக இருக்க முடியும் என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம்.


 suresh kannan

24 comments:

ராம்ஜி_யாஹூ said...

நல்ல பகிர்வு.

கடவுளுக்கு நன்றி, நான் வீணாக அலைந்து நேரத்தை தொலைக்க வில்லை. உருப்படியாக, AIRTEL சூப்பர் சிங்கர் பார்த்து மாலைப் பொழுதை பயனுள்ளதாக கழித்தேன்.

உலக சினிமா ரசிகன் said...

நல்ல கருத்தரங்கிற்க்கு எடிட் செய்யப்பட்ட நேரடி ஒளிபரப்பிற்க்கு நன்றி.

Bharathi said...

//எவ்வாறு படம் எடுப்பது என்பதை விடவும், ஒரு சினிமாவை எவ்வாறு பார்ப்பது என்பது முக்கியமானது. சினிமா ரசனை வளர்ந்தால்தான் நல்ல சினிமா உருவாகும் சூழல் உருவாகும்.//

Very true Sir...
Very well written !!

மயிலாடுதுறை சிவா said...

வழக்கம் போல் நேரில் செல்ல முடியவில்லையே என்ற வருத்தம் மறைய, உங்கள் பதிவை படித்தவுடன் அந்த குறை தீர்ந்தது.

உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன்

மயிலாடுதுறை சிவா...

Vijay Periasamy said...

சுவையான கருத்துரையாடல் !! பகிர்ந்தமைக்கு நன்றி .

Unknown said...

//'தேவர் மகன்'தான் ஆகச்சிறந்த, முழுமயான படம்//
அப்படியா?....

//அதை உருவாக்கின பரதன் ஏன் இங்கு வெற்றி பெற முடியவில்லை...//
இப்படத்தால் இரத்தம் சிந்திய தென்மாவட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் சாபத்தினால் இருக்கலாம்... இவிங்க நல்ல படமெடுக்கவில்லையென்றாலும் ஒன்றும் பாதிப்பில்லை கலவரத்தை தூண்டிவிட்டு மக்களை நாசமாக்காமல் இருந்தா போதும். பரதன் மலையாளத்துல "நாயர் மகன்" "நம்பூதிரி மகன்" எல்லாம் எடுத்திருந்தா நல்ல ஒன்னாந்தர மலையாள "நேட்டிவிட்டி"யோட எடுத்துருக்கலாமே? தமிழ் சினிமாவின் முக்கால்பாகம் இந்த வெத்து மலையாள அலட்டல்தான்.

அப்புறம், பிரபு சாலமன எப்படி நல்ல படம் எடுக்கிறதுன்னு பேச விட்டிருக்கலாம்!.

Prasanna Rajan said...

ஆகா!! தமிழ் சினிமாவை கரைத்து குடித்து கரை கண்ட தீர்க்கதரிசியே. என்ன ஒரு தொலைநோக்கு பார்வை. நாஸ்ட்ராடேம் போல 10 ஆண்டுகள் கழித்த தமிழ் சினிமாவை பற்றிய தங்கள் பார்வை என்னவோ??

Jana said...

ஒரு நல்ல கருத்தரங்கை உங்கள் எழுத்துக்களின் ஊடாக பார்க்க கிடைத்தது. பகிர்வுக்கு நன்றிகள்.

Victor Suresh said...

நல்ல பதிவு. நிகழ்ச்சியின் சாராம்சத்தை தெளிவாக எழுதியிருக்கிறீர்கள் என்றே தோன்றுகிறது. பாலு மகேந்திரா சொன்ன, நீங்கள் பரிந்துரைக்கும் "கல்வித் திட்டத்தில் திரைப்பட ரசனைப் பயிற்சி" நிறைவேறக்கூடிய எதார்த்தமாக தெரியவில்லை. பரந்த ஒரு அறிவியக்கம்தான் எல்லாக் கலைகளையும் உச்சத்திற்கு கொண்டு செல்லும் ஒரு உந்து விசையாக இருக்கும். அந்த பரந்த அறிவியக்கத்தை வளர்ப்பதை நோக்கி கலைஞர்களும், ஆர்வலர்களும் கவனம் செலுத்தினால் போதும் என்று நினைக்கிறேன்.

Baski.. said...

மிஷ்கின் சாரு பத்தி ஏதும் உள்குத்தா பேசினாரா?

திருநெல்வேலி வெங்கட்ராமன் said...

நன்றி நண்பரே நான் தொடகத்தில் இருந்து முடிவு வரை அந்த நிகழ்வை பார்த்தேன் இடையிடையே கவனிக்கமறந்த சில விசயங்களை உங்கள் பதிவில் இருந்து அறிந்து கொண்டேன் எஸ்.பி.ஜனநாதன் பகிர்ந்தவையும் குறிப்பட தகுந்ததே அப்புறம் ஒரு சின்ன திருத்தம் பாலுமகேந்திரா அவர்கள் படப்பிடிப்பை தான் ஜூன் அல்லது ஜூலையில் தொடங்க இருப்பதாய் கூறினார், ஆக அந்த படத்திற்காக இன்னும் ஒரு வருடமாவது குறைந்தது காத்திருக்க வேண்டும் .என்னை பொறுத்தவரையில் நீங்கள் கோடிட்டு காட்டிய நல்ல விசயங்களோடு உரையாடல் மொழிகளுக்கு அப்பால் சப்-டைட்டில் துணை கூட இல்லாமல் எல்லாரும் உணர்ந்து கொள்ளக்கூடிய சமகால மனித வாழ்வியலை வைத்து ஒரு காட்சிபதிவை நாளைய சினிமாவில் படைக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளது. அது நீங்கள் சொன்னபடி ரௌண்டாக 10 வருடங்களுக்கு அப்புறம்தாணு நெனைக்குறேன்.அதற்குள் உங்கள் கணிப்பை யாராவாவது பொய்க்க செய்யட்டும் நல்லது நடந்த சரி தானே. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ............

திருநெல்வேலி வெங்கட்ராமன் said...

நன்றி நண்பரே நான் தொடகத்தில் இருந்து முடிவு வரை அந்த நிகழ்வை பார்த்தேன் இடையிடையே கவனிக்கமறந்த சில விசயங்களை உங்கள் பதிவில் இருந்து அறிந்து கொண்டேன் எஸ்.பி.ஜனநாதன் பகிர்ந்தவையும் குறிப்பட தகுந்ததே அப்புறம் ஒரு சின்ன திருத்தம் பாலுமகேந்திரா அவர்கள் படப்பிடிப்பை தான் ஜூன் அல்லது ஜூலையில் தொடங்க இருப்பதாய் கூறினார், ஆக அந்த படத்திற்காக இன்னும் ஒரு வருடமாவது குறைந்தது காத்திருக்க வேண்டும் .என்னை பொறுத்தவரையில் நீங்கள் கோடிட்டு காட்டிய நல்ல விசயங்களோடு உரையாடல் மொழிகளுக்கு அப்பால் சப்-டைட்டில் துணை கூட இல்லாமல் எல்லாரும் உணர்ந்து கொள்ளக்கூடிய சமகால மனித வாழ்வியலை வைத்து ஒரு காட்சிபதிவை நாளைய சினிமாவில் படைக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளது. அது நீங்கள் சொன்னபடி ரௌண்டாக 10 வருடங்களுக்கு அப்புறம்தாணு நெனைக்குறேன்.அதற்குள் உங்கள் கணிப்பை யாராவாவது பொய்க்க செய்யட்டும் நல்லது நடந்த சரி தானே. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ............

Ashok D said...

நல்ல (கருத்துள்ள?) படங்கள்னா... அது எம்.ஜி.ஆர் படங்கள் தாங்க...
அப்புறம் நம்ம கலைஞர் தாத்தா இளைஞன்னு ஒரு படம் எடுத்துயிருக்கார் பாருங்க.. இன்னும் இருபது வருஷத்துக்கு நின்னு பேசுங்க :))

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

பகிர்வுக்கு நன்றி.

Toto said...

@லிங்குசாமி.. க‌தையே இல்லாம‌ல் பீமா எடுத்து வாங்கிய‌தால்தான் கேட்கிறார்.. க‌தை கொடுங்க‌ள் என்று.

@எஸ்.ரா. ‍ த‌ப்பா எடுத்துக்காதிங்க‌. அவ‌ர் பேசிய‌து ச‌ரி.. ஆனா அவ‌ர் எழுதிய‌தெல்லாம் சிக்கு புக்கு, தாம் தூம், மோதி விளையாடு, பாப்கார்ன், பீமா தானே. க‌ர்ண‌மோட்ச‌ம் த‌விர்த்து வ‌ந்ததெல்லாம் குப்பை தானே. மேலும் அவ‌ர் ச‌ம்ப‌ள‌த்தோடு அவ‌ர் வேலை முடிந்துவிடுகிற‌து. ப‌ட‌ம் வெளிவ‌ர‌லைன்னாலும் அவ‌ருக்கு பாதிப்பிருக்க‌ வாய்ப்பில்லை. இராமானுஜ‌ம், ஊமைத்துரையை அவ‌ரே முய‌ற்சிக்க‌லாமே. இன்னொன்று, இதை ந‌ம்பி ப‌ண‌ம் போட்ட‌வ‌ன் நிலைமைன்னு ஒண்ணு இருக்கே.

@மிஷ்கின்.. என‌க்கு தெரிஞ்சு அவ‌ர் ந‌ந்த‌லாலா வெளிவருவ‌த‌ற்கும் அவ‌ர் ப‌ண‌ ரீதியாக‌ இழ‌ந்திருக்கிறார். இல்லைன்னா அது இன்னொரு சாச‌ன‌ம் ஆகியிருக்கும். அவ‌ருடைய‌ ம‌ற்ற‌ ப‌ட‌ங்க‌ளுக்கு இந்த‌ப் பிர‌ச்னை இருக்காது.. யுத்த‌ம் செய்‍ உட்ப‌ட‌.

தேவ‌ர் ம‌க‌ன் உருவாக்க‌த்தின் பெரும்ப‌ங்கு, த‌யாரிப்பு உட்ப‌ட‌.. க‌ம‌லையே சேரும்.

-Toto
www.pixmonk.com

Dinesh Ramakrishnan said...

So what you are saying is.. Movie should be created only to satisfy your (people like you, those 100 who attendant this function) taste and only those are good movies…Film is not an entertainment?.
Sir, movies are not meant for people who have net connection and torrents links … it’s also for people who give 5 Rs 10 Rs front row seaters. It’s an industry, so profitability cannot be ignored. More over people do not always learn from movies… their life is a biggest of all dramas, it can teach them and they learn from it… You have valid points.. Still the statements like “தமிழ் சினிமா உருப்படுவதற்கான அடையாளமோ நம்பிக்கையோ இல்லை' is too much ….. You care only about good movies right… then why do you bother about its financial success… please form a group who are in line with your thoughts collect money produce good movies… I too can donate…

குரங்குபெடல் said...

"ருத்ரைய்யா ஏனோ இந்த நிகழ்விற்கு வரவில்லை."இயக்குனர்(!?) தமிழச்சி தங்கபாண்டியனெல்லாம்
கலந்துகொள்ளும்போது நமக்கென்ன அங்கு வேலை
என நினைத்திருப்பார்

மாரிமுத்து said...

கால்ஷீட் பிரச்சனை என்றால் அடுத்த நாளே கூடும் இயக்குனர்கள், எட்டு பத்து என்று ஆண்டுகளை தள்ளிப்போடுவது வருத்தமானது. ஆங்கிலப் படங்களைப்போல நான்கைந்து தயாரிப்பாளர்கள் சேர்ந்து தரமான திரைப்படங்களை திறமையான இயக்குனர்களைக்கொண்டு திட்டமிட்டு தயாரிக்கலாம்.(திரைப்பட உருவாக்கப் பிரச்சனைகளை உணரமுடிகிறது என்றாலும்)

Boston Bala said...

நன்றி

Unknown said...

நல்ல பகிர்வு சுரேஷ். நான் ஒருங்கிணைப்பாளராக இருந்ததால் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்தேன். சரியாக நிகழ்ச்சியைப் பார்க்க முடியவில்லை. உங்கள் பதிவு அக்குறையை போக்கிவிட்டது.

நாளை அதே இடத்தில், தமுஎச நண்பர்கள் கூட்டத்தில் எஸ்.ராவின் செக்காவ் பற்றி பேசுகிறார். அழைப்பு வந்திருக்கும் என நினைக்கிறேன். வருகிறீர்களா?

Unknown said...

Even I missed Rudriah. He is one of my all time fave directors and aval appadi thaan....its a time standing film. I like the songs too in that film. Esp Uravugal thodar kathai and panneer pushpangalae....

Unknown said...

அன்பின் உதவி இயக்கம்,

ருத்ரையா அவர்கள் வராததற்கும் கவிஞர் தமிழச்சியையும் ஏன் லிங்க் செய்கிறீர்கள்?

அழைக்கப்பட்டிருந்தவர்கள் அனைவரும் இயக்குனர்கள் அல்ல....எஸ்.ரா, தமிழச்சி, அஜயன் பாலா, மருது போன்றோர்கள் தங்கள் கருத்தினை பதிவு செய்ய அழைக்கப்படிருந்தார்கள். மேலும் விளங்கங்கள் தேவை எனில் தனி மடல் அனுப்புங்கள்...நன்றி

குரங்குபெடல் said...

To Uma Shakti


அழைப்பிதழை கவனிக்கவும் . . . நன்றி

Anonymous said...

தேவர் மகன் பெயர் வைத்தது இளயராஜா. கமல் சொன்னது ‘ந்ம்மவர்,. இதே போல் ‘குணா’ இளையராஜா வைத்த பெயர்.

இது கமல் ஒரு பேட்டியில் சொன்னது.