Tuesday, January 25, 2011

உறங்கும் துயரம்


  இன்று காலையில் மின்ரயிலில் வந்து கொண்டிருந்த போது அந்தக் குழந்தையைப் பார்த்தேன். அமர இடமில்லாமல் நின்று கொண்டிருந்த அந்த வடஇந்திய தம்பதியரின் முகங்கள், செளகார்பேட்டையில் சகஜமாய் தெரியுமென்றாலும் தமிழக முகங்களுக்கு இடையில் வித்தியாசமாய் தெரிந்தன.
தகப்பனின் (என்றுதான் நினைக்கிறேன்) தோளில் சாய்ந்து நிம்மதியாய் தூங்கிக் கொண்டிருந்தது அந்தக் குழந்தை. நிச்சயம் பெண்தான். ஒன்றரை வயது இருக்கலாம். சலவைத்துணி மாதிரி புத்தம்புதிதாய் சிவப்பாக அழகான தங்க விக்கிரகம் போலிருந்தது. தூக்கத்தின் இடையே அவ்வப்போது தனது ரத்தநிற சிவப்பு உதடுகளை லேசாக சுழித்துக் கொண்டது, அத்தனை பேரழகாய் இருந்தது. எதற்காகவோ புன்னகைத்துக் கொண்டும், சிணுங்கிக் கொண்டும் ஆழ்ந்த தூக்கம். (ஒழுகும் சளியுடன் கருப்பு நிறக் குழந்தையை இத்தனை நேரம் ரசித்திருப்பேனா என்று பின்னர் கேட்டது அகம்)
அது தன்னை முழுமையான நம்பிக்கையுடன் தன்னைச் சுமந்திருக்கும் தகப்பனிடம் ஒப்புவித்தது போல் இருந்தது. எங்கே போகிறோம், எத்தனை மணிக்கு சென்று அடைவோம், அங்கு உணவு கிடைக்குமா, அங்கு நண்பர்கள் இருப்பார்களா, எதிரிகளா, எப்போது திரும்புவோம், .. இப்படி எந்தக்கவலைகளும் அதற்கு இல்லாதது போல் தோன்றியது. துயரம் என்கிற ஒன்றை அந்தக் குழுந்தை அதுவரை உணர்ந்திருக்குமா? விவிலியமும் இதையே சொல்கிறது. கடவுளிடம் முழு நம்பிக்கையுடன் தன்னைக் ஒப்புக்கொடுத்தவர்களை எந்தத் துயரமும் அணுகுவதில்லை.
ஆனால் வளர்ந்த பிறகு எத்தனை மாறிப் போகிறோம்? போயிருக்கிறேன்? எத்தனை நெருக்கமான நட்பாக, உறவாக இருந்தாலும் ஒரு துளி பகையாவது, துரோகமாகவது, வன்மமாவது, வெறுப்பாவது, சங்கடமாவது, அவநம்பிக்கையாவது இல்லாமலில்லை. யாரிடமாவது நம்மை  என்னை முழு நம்பிக்கையுடன் ஒப்புவித்துக் கொள்கிறோமா னா? ஒரு துளி ரகசியத்தையாவது நம்முடைய  என்னுடைய அந்தரங்கத்தின் ஆழத்தில் வெளிப்படுத்த முடியாமல்/விரும்பாமல் பத்திரப்படுத்திதானே வைக்கிறோம்? வைக்கிறேன்? நம்மால்  என்னால் அந்தக் குழந்தையின் துயரற்ற மனநிலையை மீண்டும் பெறவே முடியாது என்றுதான் தோன்றுகிறது.  * சிலவற்றை பொதுமைப்படுத்தி எழுதும் போது அது பலரைச் சங்கடப்படுத்துவதாக பின்னூட்டங்களின் மூலம் உணர்வதால் பிறகு தன்னிலை சார்ந்து மாற்றியிருக்கிறேன்.  
suresh kannan

Friday, January 21, 2011

மசாலா (MIRCH) சினிமா

உலகத்தின் பெரும்பாலான ஆண்மக்களுக்கு தங்கள் மனைவியின் கற்பு குறித்து ஒரு துளி ஐயமாவது இருக்கும்.(உடை சுத்தம் செய்யும் தொழிலாளியின் வம்பு பேச்சைக் கேட்டு ராமன் சீதையை தீக்குளிக்கச் சொன்னதாக புராணக் கதை சொன்னாலும் ராமனுக்கே உள்ளூற அந்தச் சந்தேகம் இருந்திருக்கும்). உள்ளார்ந்த நெருப்பு போல் இருக்கும் இந்த அவநம்பிக்கையை சமயங்களில் விளையாட்டாகவும் சண்டைகளின் போது எதிராளியைத் தாக்கும் ஆயுதமாகவும் சிலர் இதை தீவிரமாக நம்பி எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கும் சந்தர்ப்பங்கள் அநேகம். மனித குலத்தின் ஏதோ ஒரு பரிணாமக்கட்டத்தில் அமைக்கப்பட்ட இந்த கற்பு எனும் கற்பிதம் கணவன்-மனைவி சச்சரவுகளுக்கு (இரு சார்பிலும்) ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து காரணமாக இருந்து வருகிறது. 'ஒரு குழந்தையின் தகப்பனை அதன் தாயால்தான் சொல்ல முடியும்' என்பதை விருப்பமில்லாவிட்டாலும் நாம் நம்புகிறோம். ஆனால் அவ்வாறு தாயால் கூட சொல்ல முடியாத சூழலும் ஏற்படலாம். இதை மறுக்க விருக்க விரும்பவர்கள், தாராளமாக தங்களின் பாசாங்கைத் தொடர்வதில் எனக்கொன்றும் ஆட்சேபமில்லை.

நான் என் மனைவியிடம் விளையாட்டுத்தனமாக ஒரு முறை  'யார் குழந்தைக்கோ நான் எதுக்கு ஸ்கூல் ஃபீஸ்' கட்டணும்' என்றேன். 'இப்படில்லாம் சந்தேகப்படுவீங்கன்னுதான் ரெண்டுமே உங்களையே உரிச்சு பொறந்திருக்கு' என்றாள் பொய்க் கோபத்துடன். 'யாருக்குத் தெரியும்? என் அண்ணன் கூட என்னை மாதிரித்தான் இருக்கான்" என்றேன் சீண்டலாக. 'சீ.. உங்க ஆம்பளைப் புத்தியில தீய வெக்க' என்றாள் சீற்றத்துடன். 'என்ன பேசணும்னு வெவஸ்தையே கிடையாதா?'. நல்ல வேளையாக அது விளையாட்டாகவே முடிந்து விட்டது.

ஒரு பெண் கற்பு எனும் மாய வளையத்தை தாண்ட முடிவு செய்து விட்டால், எந்த ஆணாலும் அவளைத் தடுத்து நிறுத்தி விட முடியாது. மிகத்தந்திரமாக அவள் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும். தமக்கு போதிக்கப்பட்ட  ஒரு தர்மத்திற்குக் கட்டுப்பட்டுத்தான் பல பெண்கள் இதைத் தாண்டாமல் இருக்கிறார்கள். ஆனால் ஆணோ தான் மந்திரித்துக் கட்டின ஒரு கயிற்றினால்தான் அவள் தன்னிடமே இருக்கிறாள் என்று அசட்டுத்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறான். 
                                       

 MIRCH (2010) என்கிற இந்தி திரைப்படம், இந்த உளவியல் உண்மையை நகைச்சுவையாக முன் வைக்கிறது. 'அது எப்படி பெண்களைக் கொச்சைப்படுத்தலாம்?' என்று பெண்ணியவாதிகள் கோபமும், 'இவளும் இப்படி இருப்பாளோ?' என்று ஆணியவாதிகள் மேலதிக சந்தேகமும் கொள்ளக்கூடிய சாத்தியங்களை இந்தப்படம் ஏற்படுத்துகிறது. கணவனின் கண்முன்னேயே உறவு கொண்டு அவனை தந்திரமாக ஏமாற்றுவதை அடிப்படையாகக் கொண்டு நான்கு குறும்படங்களினால் இத்திரைப்படம் கட்டப்பட்டிருக்கிறது.

நல்லதொரு சினிமாக்கதையை வைத்துக் கொண்டு பலவருடங்களாக வாய்ப்புக்காக போராடி வரும் ஒர் இளைஞன், அது தொடர்ந்து நிராகரிக்கப்படுவதினால் நொந்து போகிறான். திரைத்துறையில் எடிட்டராக பணிபுரியும் அவனுடைய தோழி அவ்வப்போது இவனைத் தேற்றி வருகிறாள். தனது செல்வாக்கினைக் கொண்டு ஒரு தயாரிப்பாளரிடம் அழைத்துச் செல்கிறாள். இவனுடைய கதை நன்றாக இருந்தாலும், அது விற்பனைக்கு உகந்ததாக இல்லாததால் மழுப்பலாக நிராகரிக்கிறார் தயாரிப்பாளர். வெறுப்புறும் இவன், திடீரென தீர்மானித்து காமத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புராதனக் கதையை சொல்கிறான். ஈர்ப்புறும் தயாரிப்பாளர், இன்னும் விவரிக்கச் சொல்கிறார். பஞ்சதந்திரக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட புராதனச் சூழலில் இரண்டு கதைகளையும் சமகால நாகரிக உலகத்தில் இரண்டு கதைகளையும் இயக்குநன் விவரிப்பதாக படம் நீள்கிறது. நான்கு கதைகளும்.

இந்த நான்கு கதைகளுக்கும் இயக்குநருக்கும் அவனுடைய தோழிக்கும் தயாரிப்பாளருக்கும் ஒரு முடிச்சை இட்டு படத்தை நிறைவு செய்திருக்கிறார் இயக்குநர் வினய் சுக்லா. சிறப்பான திரைப்படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் சுவாரசியமான திரைப்படம் என்பதை நிச்சயமாக சொல்ல முடியும். பஞ்சதந்திரக் கதைகளின் அடிப்படையில் அமைந்த படத்துண்டுகள், இயற்கையான பின்னணியில் அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளன. சமகால கதைகளில், கணவன் வேடமிட்டு வரும் கதையின் நகைச்சுவையான முடிவு எனக்குப் பிடித்திருந்தது. கொன்கனா சென் சர்மாவும் ரெய்மா சென்னும் தலா இரு குறும்படங்களில் நடித்திருக்கிறார்கள். ரெய்மா சென் சில பிரேம்களில் தேவதை போன்ற பேரழகுடன் பிரமிக்க வைத்திருக்கிறார்.

பெண்களின் புத்திசாலித்தனமும் ஆண்களின் அசட்டுத்தனமும் மீண்டுமொரு முறை இத்திரைப்படத்தினால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்புள்ள பதிவு:


 
suresh kannan

Wednesday, January 19, 2011

நாளைய சினிமா - கருத்தரங்கம் - தமிழ்ச் சங்கமம்


'நாளைய சினிமா' எனும் தலைப்பில் 'தமிழ்ச்சங்கமம்' ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கம் ஒன்று தேவநேய பாவாணர் நூலக கட்டிடத்தில் நடந்தேறியது. தமிழின் ஆகச்சிறந்த இயக்குநர்களுள் இருவரில் ஒருவரான பாலுமகேந்திரா முதல் (இன்னொருவர் மகேந்திரன்) 'தென்மேற்குப் பருவக்காற்று' இயக்கிய சமீபத்திய சீனுராமசாமி வரை உரையாற்றினர். முன்னும் பின்னும் முரணும் புதிருமாக பல கருத்துக்கள் மேடையில் வெளிப்பட்டன. அவைகளிலிருந்து நான் புரிந்து கொண்டது.

'இன்னும் ஆறு அல்லது ஏழு வருடங்களுக்கு (ரவுண்டாக பத்து வருடங்கள் என்று கூட வைத்துக் கொள்ளலாம்) தமிழ் சினிமா உருப்படுவதற்கான அடையாளமோ நம்பிக்கையோ இல்லை'

இது தெரிந்ததுதானே, இதற்காக எதற்கு கருத்தரங்கம்? என்று யாராவது கேட்டால் அது நியாயம்தான். மறுக்க முடியாது. பேசியவர்களில் பெரும்பான்மையானவர்கள், 'நாளைய சினிமா' என்ற தலைப்பிற்குள்ளேயே வரவில்லை. சமகால விஷயங்களையும் நேற்றைய விஷயங்களையும் பற்றி பேசி நாளையைப் பற்றி சங்கடமாக தவிர்த்தார்கள். பேசுவதற்கு அதில் விஷயம் இரு்நதால்தானே?

நான் இந்த நிகழ்ச்சிக்கு சென்றதே, அழைப்பிதழில் இருந்த ருத்ரைய்யா என்ற பெயருக்காகத்தான். அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்றே சென்றேன். வீடு, ச்நதியா ராகம் ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு தமிழில் நான் மிக மதிக்கும் முக்கியமானதொரு திரைப்படம் 'அவள் அப்படித்தான்'. அதில் பாடல்கள் இருப்பதனால்தான் அதை மூன்றாமிடத்தில் வைக்கிறேன். பாத்திரங்களை அதனதன் தனித்தன்மைகளோடு இத்தனை துல்லியமாயும் வலுவாகவும் சித்தரித்த தமிழ்த் திரைப்படத்தை இனிதான் காணப் போகிறேன். துரதிர்ஷ்டமாக ருத்ரைய்யா ஏனோ இந்த நிகழ்விற்கு வரவில்லை. சேரன், வெற்றிமாறன் உள்ளிட்ட சிலரும் வரவில்லை.

தமிழ்ச்சங்கமத்தின் பின்புலத்தில் அரசின் கை இருந்தாலும், இந்த கருத்தரங்கில் பேசியவர்கள் பெரும்பாலும் உணமையாகவும் நேர்மையாகவும் பாசாங்குகளைக் களைந்தும் பேசினார்கள். அதுவே இந்த நிகழ்வை சிறப்புறச் செய்தது. கருத்தரங்க அறை நிரம்பி நின்று கொண்டிருந்த பார்வையாளர்களே நூற்றுக்கும் மேல் இருப்பார்கள். ஆறு மணிக்கு துவங்கின நிகழ்வு முடிவடைய இரவு 10.30 மணி ஆகினாலும் பெரும்பாலான கூட்டம் கலையாமலிருந்தது நல்ல சினிமா மீது ஆர்வமுள்ளவர்களின் ஆரோக்கியமான எண்ணிக்கையைக் காட்டுகிறது.  சிறப்பாகப் பேசியவர்கள் என்று சீனு ராமசாமி, எடிட்டர் லெனின, ஜே.பி. கிருஷ்ணா, ஞானராஜசேகரன் பாலுமகேந்திரா ஆகியோர்களைச் சொல்லலாம். ஆனால் நிகழ்விலேயே ஆகச் சிறப்பாகப் பேசியவர் எஸ்.ராமகிருஷ்ணன்.

தமிழ்ச்சினிமாவில் திருமணச் சடங்கு தொடர்பான காட்சி என்றால் அதில் புரோகிதராக நடிப்பதற்கு ஒருவர் இருப்பார். பழைய படங்கள் முதற்கொண்டு அவரின் இளமைக்காலம் முதல் சமீபத்திய படங்கள் வரை அவரையே புரோகிதர் வேடத்தில் பார்க்கிறேன். ஏதோ ஒரு ரஜினி படத்தில் ரஜினி சிவன் வேடத்தில் வர அவரை வைத்துக் கொண்டு ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டு வருவாரே, அவர்தான். எஸ.ராவும் கிட்டத்தட்ட அந்த புரோகிதர் மாதிரி ஆகிவிட்டார்.

கிண்டலுக்காகச் சொல்லவில்லை. இலக்கிய மேடைகளில் விஷய கனத்தோடும், தலைப்பிலிருந்து விலகாமலும், ஆத்மார்த்தமாகவும், உண்மையான தேடல்களோடும் பேசுவதற்கு தமிழ்ச்சூழலில் எஸ்.ரா போன்ற நபர்கள் அரிதாக உள்ளனர் என்கிற யதார்த்த உண்மையே இதிலிருந்து வெளிப்படுகிறது. பட்டிமன்ற  பேச்சாளர்கள் போல், பலர் நகைச்சுவையாக எதையோ உளறிக் கொட்டி பார்வையாளர்களிடமிருந்து கைத்தட்டல்களை வாங்கிய பிறகு திருப்தியாக அமர்ந்துவிடுவதில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். தாம் பேசவிருக்கும் தலைப்பிற்கும் சூழலுக்கும் தொடர்பிருக்கிறதா என்பதையே பலர் யோசிப்பதில்லை. எனவேதான் எஸ்.ரா போன்றவர்களால்தான் அரிதாக சில மேடைகள் நிறைவு பெறுகின்றன.

எஸ்.ரா பேசினதை குறிப்பிடுவதற்கு முன்னால் இயக்குநர்கள் மிஷ்கினும் லிங்குசாமியும் பேசியதை குறிப்பிட வேண்டும். .

தனது வழக்கமாக 'ந்ந்தலாலா' தோல்வி புராணப் புலம்பலை இன்னும் கைவிடாத மிஷ்கின், 'ஒரு நல்ல சினிமா வெற்றியடைவதற்கு பார்வையாளர்கள் மனது வைத்தால்தான் முடியும். சினிமா எடுப்பது அத்தனை சுலபமான விஷயமல்ல. இதற்காக நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். நான் இன்றைக்கு நடுத்தெருவில் இருக்கிறேன். அதை விமர்சகர்கள் உணர வேண்டும். நெட்டில் எதை வேண்டுமானாலும் உடனே டைப்படித்து விடுகிறார்கள். அதற்காக கவலை கொள்ளவில்லை. மறுபடியும் லேண்ட்மார்க்கில் சேல்ஸ்மேனாக பணியாற்றி பிழைத்துக் கொள்ள முடியும். நல்ல சினிமாவை சக நண்பர்களிடம் வாய் மொழியாக சொல்லிப் பரப்புவதை ஒரு கடமையாகவே அனைவரும் கொள்ள வேண்டும்' என்றார்.

லிங்குசாமி பேசும் போது 'மக்கள் ரசனையைக் குறை சொல்லக்கூடாது. அவர்கள் புத்திசாலிகள்தான். வணிக சினிமாவை செய்து பழகின எனக்கு நல்ல சினிமா எடுப்பதில் ஆர்வம் உள்ளது. எவராவது நல்ல கதை வைத்திரு்நதால் வாருங்கள். அவர்களுக்காக என் அலுவலகம் திறந்தே இருக்கும். வேண்டுமெனில் அவர்களைத் தேடி நானே கூட செல்வேன்' என்று மேடை நாடக பாசாங்குடன் சவடாலாக பேசி விட்டு கிளம்பிச் சென்றார்.

லிங்குசாமி பேசிய முதல் விஷயம் தொடர்பாக நான் கருதுவது, கைத்தட்டல்களுக்காக மேடையில் அநேகர் பேசுகிற விஷயம். அது பொதுமக்களை புத்திசாலிகள் என்று செயற்கையாக புகழ்வது. (இந்த விஷயத்தில் மிஷ்கின் தேவலை. பார்வையாளர்களை நேரடியாகவே குற்றஞ்சாட்டினார்.)  பொதுச் சமூகத்தை பகைத்துக் கொள்ள, அவர்களுடன் நேர்மையுடன் உரையாட, அவர்களின் சுரணையின்மையை நேர்மையாகச் சுட்டிக் காட்ட ஒரு தைரியம் வேண்டும். பெரும்பாலோனோர்க்கு அது இல்லை. மக்களின் ரசனை மாறாமல் அல்லது அதில் உயர்ச்சியடையாமல், நல்ல சினிமா மாத்திரமல்ல, எந்தவொரு தரமான கலைப்படைப்போ, அரசியல் சூழலோ வர வாய்ப்பேயில்லை. பொதுச் சமூகம் இவ்வாறு ஆட்டு மந்தைகளாக அப்படியே இருப்பதில்தான் பலருக்கு விருப்பமும் நோக்கமும் இருக்கிறது. எனவே லிங்குசாமி அப்படி பேசியதில் வியப்பில்லை.

இன்னொன்று, நல்ல கதையை தேடுவதாக அவர் சொன்னது. அப்படி அவர் சொன்ன போது நான் நினைத்துக் கொண்டேன். 'அடப்பாவி! இந்த நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்டிடத்தின் கீழேயே மிகப் பெரிய நூலகம் இருக்கிறது. வால்யூம் வால்யூமாக தமிழ் இலக்கியங்களு்ம கதைகளும் கொட்டிக் கிடக்கின்றன. அதையெல்லாம் வி்ட்டு விட்டு 'நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள்' என்பது அறியாமைத் திமிர்தானே?

எஸ்.ரா பேசும் போது, லிங்குசாமியின் பேச்சுக்கு சரியான பதிலடி தந்தார். "மிகச் சிற்நத திரைப்படங்களாக உருவாக்கக்கூடிய ஐம்பது தமிழ் நாவல்களை என்னால் இந்த மேடையில் சொல்ல முடியும். (ஜெயகாந்தனின் ஒரு மனிதன். ஒரு வீடு, ஒரு உலகம் முதற்கொண்டு சில நாவல்களின் பெயர்களைச் சொல்கிறார்). இதையெல்லாம் விட்டு விட்டு எங்கே கதையைத் தேடுகிறீர்கள்? தமிழ் வரலாற்று ஆளுமைகள் பற்றி எத்தனை திரைப்படங்கள் தமிழில் வந்திருக்கின்றன? கணித மேஜை ராமானுஜம் பற்றி ஒரெ ஒரு ஆவணப்படம்தான் உண்டு. ஏன் அவரைப் பற்றி யாரும் திரைப்படம் எடுக்கவில்லை. சென்னையை முதலில் ஆண்ட ராபர்ட் கிளைவ் பற்றி எந்த திரைப்படத்திலாவது பேசியிருக்கிறோமா? ஊமைத்துரை பற்றி? தமிழகத்தில்தான் காந்தி எளிமையான உடையில் தன் உருவத்தை மாற்றியமைத்தார். இது எந்த திரைப்படத்தில் பதிவாகியிருககிறது?

அடுத்தது மிஷ்கினுக்கு:

'நான் உலகத்தின் மிகச் சிறந்த இயக்குநர்களின் நேர்காணல்களைப் பார்த்திருக்கிறேன். அதில் எவர் ஒருவருமே தான படம் உருவாக்கின போது பட்ட சிரமங்களைப் பற்றி பேசவில்லை. மாறாக படைப்புகளைப் பற்றி மாத்திரமே பேசுகிறார்கள். காசு கொடுத்து படம் பார்க்க வரும் பார்வையாளனுக்கு அதை அதைப் பற்றி கேட்க எல்லாவித உரிமையும் இருக்கிறது. எழுத்தாளனாக என் படைப்புகளை எந்தவொரு வாசகனும் என்னை வழியில் நிறுத்தி விமர்சிக்கலாம். திரைத்துறையில் பல்வேறு துறைகளில் பதினைந்து வருடங்களுக்கு மேலாக இயங்குபவன் என்கிற முறையில் அதன் சிரமங்களை அறிவேன். அதையெல்லாம் மீறித்தான் ஒரு சினிமாவை உருவாக்க வேண்டியிருக்கிறது. லூயி புனுவலின் Viridiana என்கிற திரைப்படம் அரசியல் காரணமாக அதிகார வர்க்கத்தினரால கடுமையாக எதிர்க்கப்பட்டது. அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டது. திரைப்படப்பிரதியை கல்லறையில் புதைத்து விட்டு தப்பியோடினார். பிறகு அது தோண்டி எடுக்கப்பட்டு பல விருதுகளை வென்றது. அவ்வாறான உயிராபத்தை அனுபவித்த இயக்குநர்கள் கூட தம்முடைய சிரமங்கள் குறித்து பொதுவில் புலம்புவதில்லை.

நேரம் கருதி 'நாளைய சினிமா' பற்றி இன்னொரு சமயத்தில் பேசுவோம். ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் கலாசாரம், அடையாளம், கலை, அரசியல் பிரதிபலிக்கக்கூடிய திரைப்படங்களை குறைந்த சமரசங்களுடன் நேர்மையான உருவாக்க முயன்றாலே போதும். அது உலகத்தரத்தில் மதிக்கப்படும் சினிமாவிற்கான முயற்சியாக இருக்கும். அதுதான் நாளைய சினிமாவிற்கான நம் கனவாக இருக்க முடியும். (நாளைய சினிமா பற்றி எஸ்.ரா பேச விரும்பியதை அவரது தளததில் வெளியிடுவார் / வெளியிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.)

பாலுமகேந்திரா, நேற்றைய சினிமா பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொண்ட பிறகு, (இன்றைய சினிமா பற்றி உங்களுக்கே தெரியும், நான் சொல்ல வேண்டியதில்லை) கருத்தரங்கின் தலைப்பான 'நாளைய சினிமா' -விற்கு வந்தார். அதுதான் இந்த நிகழ்வின் ஹைலைட்டாகத் தோன்றுகிறது.

'நாளைய சினிமா' பற்றி நான் எதுவும் பேசப்போவதில்லை. செய்துகாட்டப் போகிறேன். ஒரு படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். ஜூலை மாதத்தில் வெளிவரலாம். அதுவே 'நாளைய சினிமா' பற்றிய எனது செய்தி.

'சினிமா ரசனை' என்னும் விஷயத்தை 11வது,12வது வகுப்பு கல்வித்திட்டத்தில் வாரத்திற்கு ஒர வகுப்பு வருமளவிற்காவது இணைக்கலாம். எவ்வாறு படம் எடுப்பது என்பதை விடவும், ஒரு சினிமாவை எவ்வாறு பார்ப்பது என்பது முக்கியமானது. சினிமா ரசனை வளர்ந்தால்தான் நல்ல சினிமா உருவாகும் சூழல் உருவாகும். இதை சில ஆண்டுகளுக்கு முன்பே திரையுலகம் கலைஞருக்கு எடுத்த பாராட்டு விழாவில் சொன்னேன். இதுவரை செயல்படுத்தப்படவில்லை.

'ஓர் ஓவியமோ, நாடகமோ, நாவலோ, சினிமாவோ.. எந்தவொரு கலைப்படைப்பாக இருந்தாலும், இதற்கு முன்னால் அது ஆயிரம் முறை செய்யப்பட்டிருந்தாலும் சரி, அதற்காக சோர்வடையாமலும் அதற்காக அதிலிருந்து ஒதுங்கிப் போகாமலும். நீ மீண்டும் அதை செய்ய வேண்டும். உன்னால் எப்படி அதை செய்ய முடிகிறது என்பதில்தான் விஷயம் இருக்கிறது.

இன்ஸ்பிரேஷன், காப்பி என்றெல்லாம் சொல்கிறார்கள். நான் சத்யஜித்ரே, அகிரா படங்களை பார்த்து வளர்ந்தவன். அவர்களின் நுட்பம் என் ஜீனிலேயே உள்ளது. என் படைப்பிலும் அது வெளிவரும். அதைத் தவறாக புரிந்து கொள்கிறவர்களைப் பற்றி நான் கவலை கொள்வதில்லை.

நல்ல இலக்கியங்களைத் தேடி வாசியுங்கள். நான் எனது பயிற்சி கல்லூரியில் மாணவர்கள் நவீன இலக்கியத்திலிருந்து தினமும் ஒரு சிறுகதையை வாசிப்பதை கட்டாயமாக்கியுள்ளேன். வாசித்த பின்பு புத்தகததை ஓரமாக வைத்து விட்டு 'உன் மொழியில் அந்தச் சிறுகதையை எழுது' என்பேன்.

உலக சினிமா நிறைய பாருங்கள். ஷாப்பிங் கட்டிடங்களில் காய்கறி வாங்கும் போது கூடவே உலக சினிமா டிவிடியையும் வாங்குமளவிற்கான சூழல் நிலவுகிறது. ரூ.30/-க்கு உலக சினிமா கிடைக்கிறது. அதற்காக நான் பைரசியை ஆதரிப்பதாக இதைத் திரிக்கக்கூடாது. அப்படியே இதற்காக என்னை சிறையில் அடைத்தாலும் எனக்கு கவலையில்லை.

எடிட்டர் லெனின் திரைத்துறையில் அதிகார வர்க்கம் ஏற்படுத்தி வைத்திருக்கும் அபத்தமான விதிகளைப்பற்றி விளாசித்தள்ளினார். "நல்ல சினிமா வருவதற்கு பெரும் தடையாக இருப்பது ஸ்டார் நடிகர்களே. அவங்களை முதல்ல ஒழிக்கணும். மன்றங்களை ஒழிக்கணும். ஒரு படத்துக்கு எட்டு பிரிண்ட் போட்டதான் உள்ளே வர முடியும்னு சொல்றத விட்டு ஒரு பிரிண்ட் போட்டாக்கூட வரணும்னு விதி ஏற்படுத்தணும். சினிமா பற்றி தெரியாதவன்லாம் கமிட்டில ஒக்காந்திருக்கான். அதையெல்லாம் ஒழிச்சுக்கட்டிட்டு சினிமா பத்தி தெரிஞ்சவன போடணும். அப்பத்தான் நாளைய சினிமா உருப்படும.

பாரதி திரைப்படத்தின் இயக்குநர் ஞானராஜசேகரன் பேசியது ரொம்பவும் தர்க்கரீதியாக இருந்தது.

"நன்றாக உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை எல்லாத் தரப்பு மக்களும் பார்த்து அது பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகணும்னு ஏன் எதிர்பார்க்கறீங்க? மேற்கத்திய நாடுகள்ல தன் படத்தோட ஆடியன்ஸ் யாருன்னு அவன் நல்லாப் புரிஞ்சு வெச்சிருக்கான் அவங்க பார்த்தா அவனுக்குப் போதும்.

இன்னொன்னு்: ஸ்கிரிப்ட்டுக்கு எவ்ள பட்ஜெட் தேவைன்றதை அந்த ஸ்கிரிப்ட்தான் தீர்மானிக்கணும். வெஸ்டர்ன்ல அப்படித்தான் செய்யறாங்க. இந்த ஸ்கிரிப்ட்டுக்கு இவ்ளதான் செலவு செய்யணும்னு கறாரா தீர்மானிக்கிறாங்க. ஒரு தயாரிப்பாளர் என் கிட்ட வந்தார். நான் வெச்சிருந்த கதையை சொல்லி 'மூணு கோடி பட்ஜெட்' செலவாகும்ணேன். அவர் ' நான் ஏழு கோடிக்கு குறைஞ்சு படம் புரொடியூஸ் பண்றதில்லை'ன்கிறார். எந்திரன் போன்ற உருப்படியில்லாத திரைப்படங்களுக்கு 200 கோடி செலவு செய்ய தயாரா இருக்காங்க. நான் பெரியார் படம் செஞ்சப்ப மூணு கோடி ரூபாக்காக சிரமப்பட்டேன். அந்தக்காலத்தோட சூழல படத்துல கொண்டு வரணும்னா அந்தந்த பிராப்பர்ட்டிகளை கொண்டு வரணும். அது தயாரிப்பாளர்களுக்கு புரியலை.'.

தென்மேற்கு பருவக்காற்று இயக்குநர் சீனுராமசாமியும் படம் உருவாக்குவதில் தம்முடைய சிரமங்களைப் பற்றி பேசினார். 'சிறு விவசாயிகள் போலத்தான் குறைந்த பட்ஜெட்டில் நல்ல படம் உருவாக்கவறங்க நெலமையும் இருக்கு. தாயை மையப்படுத்தி என் ஸ்கிரிப்ட் இருந்ததால  நெறைய தயாரிப்பாளர்கள் ஒத்துக்கலை. ஸகிரிபட்டை மாத்துங்கன்றாங்க. சில ஏமாற்று வேலைகள் செஞ்சுதான் ஒரு நல்ல சினிமாவை உருவாக்க வேண்டிய துரதிர்ஷ்டமான சூழல் இங்க இருக்கு.70 தியேட்டர்களை கைல வெச்சிருக்கறவங்கதான் இன்னிக்கு சினிமாவோட தலைவிதியை தீர்மானிக்காறங்க'.

ஜேபி கிருஷ்ணா சினிமாவில் ஒளிப்பதிவு என்கிற விஷயம் தொடர்பாக பல சுவாரசியமான விஷயங்களை பொறுமையாக சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அப்போதே நேரமாகியதால் பொறுமையிழந்த பார்வையாளர்கள் தங்களின் அசெளகரியத்தை வெளிப்படுத்த முடித்துக் கொண்டார். இதன் காரணமாகவே சமுத்திரக்கனி, பிரபுசாலமன் போன்றோர் அதிகம் பேசவில்லை. டிராஸ்கி மருது ஒளிப்பதிவாளர்களை முதன்மைப்படுத்தி பேசினார். 'அவர்தான் உருவாகிற சினிமாவை முதலில் பார்க்கிறார்'. (லிங்குசாமி பேசும் போது சினிமாவை முதலில் பார்ப்பது இயக்குநர்தான் என்றார். எஸ்.ரா பேசும் போது ஸ்கிரிப்ட் ரைட்டர்தான் என்றார்). இதுவரை உருவாக்கப்பட்ட தமிழச்சினிமாக்களில் 'தேவர் மகன்'தான் ஆகச்சிறந்த, முழுமயான படம். அதை உருவாக்கின பரதன் ஏன் இங்கு வெற்றி பெற முடியவில்லை?'

()

ஆரமபத்தில் சொன்னதுதான். தமிழ் சினிமா உருப்பட இன்னும் பத்தாண்டுகளுக்கு வழியில்லை. ஏதாவது அதிசய அலை அடித்தால்தான் உண்டு. பாலுமகேந்திரா குறிப்பிட்டதைப் பற்றி மாணவப்பருவத்திலிருந்து சினிமா ரசனையை வளர்த்தெடுக்க வேண்டும். மக்களின் ரசனை மாறினால் அது நல்ல சினிமா உருவாக வழிசெய்யும். தயாரிப்பாளர்கள் எவரும் மோசமான சினிமாவைத்தான் உருவாக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கவில்லை. லாபம்தான் அவனுடைய குறிக்கோள். நல்ல சினிமா மூலம் அது நிகழுமென்றால் அதைததான் அவன் செய்வான். அந்த சூழ்நிலையை பார்வையாளர்களால்தான் உருவாக்க முடியும். மறுமறுபடியும் ஒரே வார்ப்பில் எடுக்கப்படும் லாபநோக்குத் திரைப்படங்களை - சினிமா மீது அடிப்படை ஆர்வமுள்ளவர்களாவது - புறக்கணித்து அவற்றைத் தோற்கடிக்க வேண்டும். ஆரோக்கியமான பொழுதுபோக்குத் திரைப்படங்கள் உருவாகும் அதே வேளையில் இணைக்கோடாக மாற்றுத்திரைப்படங்களு்ம் ஒருபுறம் உருவாகும் சூழல்தான் 'நாளைய சினிமா'விற்கான அடையாளமாக இருக்க முடியும் என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம்.


 suresh kannan

Monday, January 17, 2011

2011 புத்தகக் காட்சி அனுபவம் (2)

முந்தைய பதிவின் தொடர்ச்சி

தேகம் நாவல் குறித்து நான் எழுப்பிய கேள்விக்கு மனுஷ்யபுத்திரன் பதிலளிக்கத் துவங்கினார். (நினைவில் தங்கியிருப்பதைக் கொண்டு கோர்வையாக எழுத முயன்றிருக்கிறேன். இதில் மனுஷ்யபுத்திரன் சொல்லாத அல்லது அவர் சொன்னதிலிருந்து விலகியிருக்கும்  கருத்துப் பிழை ஏதேனும் இருக்குமானால் அது என் பிழையாகத்தான் இருக்கும்).

"ஓர் எழுத்தாளன் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக எழுதி ஒரு தகுதியான இடத்திற்கு வந்து சேர்கிறான். அந்த அனுபவம், அடிப்படையான அறம், தார்மீக உணர்வு, சுயபொறுப்பு  போன்றவற்றை அவனுடைய எழுத்தில் படியச் செய்கிறது. ஒரு பதிப்பாளனாக அந்த எழுத்தாளனின் படைப்பில் தலையிட நான் விரும்புவதில்லை. உதாரணம் சொல்கிறேன். நான் முன்னர் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்த பத்திரிகையில் நாஞ்சில் நாடனின் சிறுகதை ஒன்றை பத்திரிகை உரிமையாளர்கள் பிரசுரிக்க மறுத்தார்கள். உண்மையில் நான் அதை வாசிக்காமலேயே பிரசுரத்திற்கு அனுப்பி விட்டேன். 'ஒரு எடிட்டராக இருந்து கொண்டு எப்படி ஒரு படைப்பை வாசிக்காமல் அனுமதிக்கலாம்?' என்ற கேள்வி என் முன் வைக்கப்பட்டது. இலக்கியப்பரப்பில் நாஞ்சில் நாடனின் இடம் என்ன என்று எனக்குத் தெரியும். அவரும் அதை உணர்ந்து அந்தப் பொறுப்போடுதான் எழுதியிருப்பார். படைப்பாளிகளின் மீது இந்த நம்பிக்கையை வைப்பதும் அவர்களின் எழுத்துச் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பதும்தான் பதிப்பாளனாக நான் செய்ய விரும்புவது. இதே அளவுகோல்தான் சாருவின் படைப்பிற்கும்.

'தேகம்' புதினம் பெரும்பாலும் அது எழுதப்பட்ட விதத்திலிருந்து அதன் எதிர்திசையிலிருந்தே பெரும்பாலோனாரால் புரிந்து கொள்ளப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இன்றைய சூழ்நிலையில் வதை என்பது ஏதோ காவல்நிலையத்தில் குற்றம் சாட்டப்பட்டவனின் உடல் மீது நிகழ்த்தப்படுவது மாத்திரமல்ல. அது எல்லாத்தரப்பு மக்களிடமும் எல்லாச் சமயங்களிலும் வெளிப்படுகிறது. இந்தச் சூழல் பீதியூட்டுகிறது. இதில் வரும் தர்மா கையாளும் வதையின் பின்னணி பலவற்றின் தொடர்ச்சியாக பல தளங்களில் இயங்குகிறது"

நான் குறுக்கிட்டு "ஆனால் நாவலின் சில பக்கங்களில் மாத்திரமே நீங்கள் சொல்லும் வதையின் கட்டங்கள் வருகின்றன. ஆனால் ஒட்டுமொத்த நாவல் இந்த மையத்திலிருந்து விலகி திசைமாறியிருக்கின்றனவே' என்கிறேன்.

மனுஷ்யபுத்திரன் மீண்டும் நாவல் இயங்கும் விதத்தைப் பற்றியும் சமூகத்தில் வதையின் பங்கு பற்றியும் அற்புதமாக விளக்கினார்.

உரையாடலின் இறுதியில் எனக்குத் தோன்றியது இதுதான். "பேசாமல் இந்த நாவலை இவரே எழுதியிருக்கலாம்." நாவலின் பின்னட்டையில் படைப்பின் மையம் (?!) குறித்து மனுஷ்யபுத்திரன் எழுதியிருக்கும் ரத்தினச் சுருக்க வாசகங்களும் இதையே நிருபிக்கிறது.

எங்களின் உரையாடலின் இடையில் நடுத்தர வயதுள்ள உயிர்மை வாசகி ஒருவர் குறுக்கிட்டு ம.பு.விடம் உரையாடினார் "அட்டை டூ அட்டை வாசிச்சிடுவேங்க. சாரு எழுதற திரை விமர்னமெல்லாம் ஏங்க இப்படி இருக்கு? ஒண்ணு, எந்திரனை அப்படியே தாழ்த்தி எழுதறாரு. நந்தலாலாவ அப்படி புகழறாரு".

நான் அந்த பெண்மணியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு அதிகப்பிரசங்கித்தனமாக அதில் நுழைந்தேன். 'சாரு எப்படி எழுதணும்றீங்க" "நடுநிலைமையா எழுதலாமே?" "நடுநிலைமைனு ஒரு விஷயம் கெடையாதுங்க மேடம். எல்லாத் தரப்பு வாசகனுக்கும் செளகரியமா எழுதம்ணு நெனச்சா  வெகுஜன பத்திரிகைள்லதான் எழுதப் போகணும்."

மனுஷ்யபுத்திரன் அந்த பெண்மணிக்கு சமாதானமாக ஏதோ சொல்கிறார். "பாத்துக்கங்க. ரெண்டாவது சில ஓவியம்லாம் வல்கரா இருக்குதுங்க" என்றார் அந்த பெண்மணி. அவர் சென்ற பிறகு மனுஷ்யபுத்திரனிடம் உயிர்மையில் வெளிவந்து ஆரம்பக்கட்ட சிறுகதைகள் ( உதா: ஜே.பி.சாணக்கியா) பாலியல் சார்ந்தே வெளிவந்தனவே?" என்று கேட்கிறேன்.

"இப்பவும் உயிர்மைக்கு எழுதணும்னு விரும்பறவங்க எந்த மாதிரி இருக்கணும்னு கேட்கறாங்க. நான் அப்படியெல்லாம் எந்த வரையறையெல்லாம் கட்டுப்பாடும் வைததுக் கொள்ளவில்லை. எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அது இலக்கியம் என்னும் தகுதியோடு இருந்தால். போதும்."

சுமார் பதினைந்து நிமிடங்கள் நீடித்த எங்களின் இந்த உரையாடலின் இடையில் சில நண்பர்கள் ம.பு.விற்கு முகமன் கூறிச் செல்கின்றனர்; சிலர் நூல்களைப் பற்றி விசாரிக்கின்றனர். அத்தனைக்கும் பதில் சொல்லி விட்டு பொறுமையாக என்னிடம் உரையாடலைத் தொடர்ந்த மனுஷ்யபுத்திரனுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி சொன்னேன். தனது வாசகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த சாருநிவேதிதாவும் எங்களின் அருகே இரண்டொரு முறை வந்து சென்றார். "நான்தான் சாருநிவேதிதா" என்று என்னிடம் அறிமுகம் செய்து கொள்வார் என்று எதிர்பார்த்தேன். வரலாற்றில் இடம்பிடிக்கும் விருப்பம் அவருக்கு இல்லை போலும், அவ்வாறு விசாரிக்கவில்லை.  :-)

திரும்பும் போது அந்த உயிர்மை வாசகி திரை விமர்சனம் பற்றிச் சொன்ன புகாரை நினைவு கூர்ந்தேன். சாருவின் சில மனச்சாய்வுகளின் எதிரொலிகளைத் தவிர சாரு எழுதும் வடிவத்தில் எனக்கு எந்தப் புகாருமில்லை. உண்மையில் அவர் அவ்வாறு எழுதுவது மிகவும் பிடித்திருந்தது. நான் எழுதும் திரைப்பார்வைகளில் கூட அதன் தடயங்களை நீங்கள் காண முடியும்.

ஒரு சினிமா பற்றிய விமர்சனக் கட்டுரையில் அதை எழுதினவனின் தனித்தன்மை துல்லியமாக வெளிப்பட வேண்டும் என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம். உலகத்தில் வேறு எவராலும் அந்தக் கட்டுரை எழுத சாத்தியப்பட்டிருக்கக்கூடாது. அந்தளவிற்கு எழுதினவனின் ஆன்மாவும் பிரத்யேக நுண்ணுணர்வகளும்  அந்தக் கட்டுரையோடு கலந்திருக்க வேண்டும். எல்லா வாசகர்களின் மனநிலையையும் பிரதிபலிப்பது போல் கூலிக்கு மாரடிக்கும் விமர்சனங்களை வணிகப் பத்திரிகைகளில்தான் எதிர்பார்க்க வேண்டும்.

அதே போல் மனுஷ்யபுத்திரன் சொன்னதையும் நினைவு கூர்ந்தேன். எழுத்தாளனின் சுதந்திரத்தில் பதிப்பாளன் தலையிடாமல் இருப்பது ஒருவகையில் சரிதான். (ஆனால் தேகம் நாவலிலியே பதிப்பாளன் எழுத்தாளனுக்கு ஆலோசனை கூறுவது போல் ஒரு இடம் வருகிறது). அதே சமயத்தில் பதிப்பாளனின் கடமையையும் சரிவர நிறைவேற்ற வேண்டும். எப்படி ஓர் எழுத்தாளன் தொடர்ச்சியான தரமான படைப்புகளின் மூலம் வாசகர்களிடம் ஒரு தகுதியான இடத்தை அடைகிறானோ, அவ்வாறே பதிப்பகங்களும் தரமான படைப்புகளை மாத்திரம் வெளியிடுவதன் மூலம் ஓர் இடத்தை அடைகின்றன. அரைகுறையான, தரமற்ற படைப்புகளை வெளியிடுவதன் மூலம் ஒரு பதிப்பகமும் அதன் நம்பகத்தன்மையை இழக்கிறது. நான் சமயங்களில் அறிமுகமமில்லாத எழுத்தாளர் என்றாலும் வெளியிட்ட பதிப்பகத்தின் மீது நம்பிக்கை கொண்டு வாங்குகிறேன். இன்னொன்று. மேற்கத்திய நாடுகளில் பெரும்பாலான படைப்புகளின் இறுதி வடிவத்தை அதன் எடிட்டரே தீர்மானிக்கிறார். எழுத்தாளர்களுக்கு இணையான புகழுடன் உள்ள எடிட்டர்கள் உள்ளனர். இதன் மூலம் அந்தப் படைப்பு இன்னும் மெருகேருகிறது. ஒரு வார்த்தையை நீக்கினாலும் சிணுங்கும் இங்குள்ள மனோபாவம் அங்கில்லை. நல்ல எடிட்டர்களை எழுத்தாளர்களே தேடி தம் படைப்புகளை தருகின்றனர். தேவையற்ற பகுதிகளை நீக்குவதால் படைப்பு இன்னும் மேன்மையடைகிறது என்பதை எழுததாளர்கள் புரிந்து வைத்துள்ளனர்.

(வரும்) 
suresh kannan

விஜய் டிவியில் 'ஒரே கடல்' மாலை 04.00 மணிக்கு

முன்பு 'அக்ரஹாரத்தில் கழுதை'  என்கிற ஜான் ஆபிரகாமின் திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்போவதை அறிந்த போது மிகுந்த பரவசத்துடன் அதை இங்கு பகிர்ந்து கொண்டேன். ஆனால் கழுதை மிகப் பலமாக என்னை உதைத்ததில் ஜெயமோகன் ஆபிதின் உட்பட பலர் மகிழ்ச்சியடைந்தார்கள். இந்த முறை அது நடக்காது. ஏனெனில் முந்தைய படத்தை நான் பார்க்காமலிருந்ததால் அந்த விபத்து நிகழ்ந்தது.


விஜய் டிவியில் இன்று (17.01.2011) மாலை 04.00 மணிக்கு (இந்திய நேரப்படி) ஷ்யாம் பிரசாத் இயக்கத்தில் 'ஒரே கடல்' (2007) என்னும் மலையாளத் திரைப்படம் (தமிழ் டப்பிங்கில்) ஒளிபரப்பாகிறது. மம்முட்டி, மீரா ஜாஸ்மின், நரேன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். லோக் சபா தொலைக்காட்சியில் இதை முதன் முறையாக பார்த்த போது இந்தியத் திரைப்படங்களில் இப்படிக்கூட முதிர்ச்சியான படைப்புகள் உருவாக சாத்தியமுள்ளதா என அதிசயத்துப் போனேன். சுவாரசியம் கருதி இந்தப் படத்தைப் பற்றி எதையும் எழுத மாட்டேன். பாலியல் சார்ந்த உறவை காட்சி ஊடகத்தில் இத்தனை நுட்பமாக, முதிர்ச்சியாக  வெளிப்படுத்த முடியுமா என்று இன்னும் பிரமிப்பாகவே உள்ளது. மம்முட்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதில் ஆச்சரியமொன்றுமில்லையென்றாலும் மீரா ஜாஸ்மினும் அதற்கு ஈடுகொடுத்திருப்பதுதான் ஆச்சரியம்.

கலாசார காவலர்களும் கற்பு போன்ற கற்பிதங்கள் குறித்து இன்னும் ஒட்டடை படிந்த சிந்தனைகளை சுமந்திருக்கும் பழமைவாதிகளும் இந்தப் படத்தை தவிர்ப்பது நன்று. இது முதிர்ச்சியான பார்வையாளர்களுக்கானது என்பதை அடிக்கோடிட்டு சொல்ல விரும்புகிறேன்.

இதுவரை இத்திரைப்படத்தை பார்க்காதவர்கள், இதை தவறவிடாமல் பார்க்க வேண்டுகிறேன். திரைப்படங்களில் ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களிடமும் இதை பகிரவும் பிறகு பின்னுட்டத்தில் உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவும் வேண்டுகிறேன்.

(தொலைக்காட்சி ஒளிபரப்பு நேரத்தை சரிபார்த்துக் கொள்ளவும்).
http://app.indya.com/epg/asp/displaySchedules.asp?ddChannelName=starvijay

suresh kannan

Thursday, January 13, 2011

2011 புத்தகக் காட்சி அனுபவம் (1)


எனது இந்த வலைப்பதிவு குறித்து நானே பெருமையாயும் ஆச்சரியமாயும் நினைக்குமளவிற்கு புத்தகக்காட்சியில் சில சம்பவங்கள் நடந்தேறின.(?!) 'நீங்கள் புத்தகக்காட்சி அனுபவம் குறித்து ஏன் இன்னும் எழுதவில்லை' என்றும்,  என் பெயரையும் வலைப்பதிவின் பெயரையும் சொன்ன மாத்திரமே "ஓ... நீங்கள்தானா அது? தொடர்ந்து வாசிக்கிறேன்" என்றும் அங்கு சுமார் 2000000 அல்லது 3000000 நபர்கள் விசாரி்த்தனர். (கபில் சிபிலின் ஸ்பெக்ட்ரம் தர்க்கத்தின் படி பூஜ்ஜியத்திற்கு மதிப்பில்லை என்பதால் தாராளமாக போட்டிருக்கிறேன். ஏறத்தாழ கூட்டி கழித்துக் கொண்டு வாசிக்கவும்).

ஒவ்வொரு வருடமும் ஏற்படுவது போல் இம்முறையும் புத்தகக்காட்சிக்கு செல்வதற்கு சில மனத்தடைகள் இருந்தன. நான் எப்போதுமே மந்தையிலிருந்து விலகி ஓட விரும்பும் ஆடு. இப்போது புத்தகக்காட்சிக்கு செல்வதென்பது, கடுமையான விதிகள் பல நீர்த்துப் போனதொரு சமகால சபரிமலை பயணம் போல் ஒரு பேஷனாகி விட்டதோ எனத் தோன்றுகிறது. ஆன்மீகத்திற்கு ஆன்மீகமும் ஆயிற்று, சுற்றுலாவிற்கு சுற்றுலாவும் ஆயிற்று, தான் ஒரு பக்திமான என்று சமூகத்திற்கு நிருபித்தது போலவும் ஆயிற்று என்பது போல் தன்னை வாசிப்பாளனாகவும் காட்டிக் கொண்டு சமையல், ஜோதிடம், போலி ஆன்மீக புத்தகங்களை வாங்கிக் கொண்டு கேண்டீனில் புத்தக பட்ஜெட்டுக்கு அதிகமான செலவில் ஒரு வெட்டு வெட்டி விட்டுத் திரும்பினால் முடிந்தது ஒரு சமூகக் கடமை. சமையலும் ஜோதிடமும் மாத்திரம் புத்தகங்களில்லையா என்ற கேள்வி வாசிப்பவருக்கு எழக்கூடும்.  தவறில்லை. ஆனால் நம்முடைய லெளதீகத் லெளகீகத் தேவைகளை பூர்த்தி செய்யும் விஷயங்கள் தொடர்பான எல்லையோடு நின்றுவிடும் அந்த மேலோட்டமான தேடல்தான் சலிப்பூட்டுகிறது. அதையும் தாண்டி பரந்து கிடக்கிற பல விஷயங்களை தாண்டிச் செல்லும் அந்த அலட்சியமும். இந்தக் கூட்டத்தோடு நாமும் சேர வேண்டுமா என்று உள்ளுக்குள் ஈகோ அதிகபட்ச டிகிரியில் அலறியது.  (இப்படியெல்லாம் இந்தப் பதிவில் எழுதாவிடில் வாசிக்கவரும் பல்ர் ஏமாந்து விடுகிறார்கள் என்பதால் இதை எழுத வேண்டியிருக்கிறது).

கட்டாயம் செல்ல வேண்டும் என்கிற மனஉந்துதல் இல்லாததாலும் ஏற்கெனவே வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களே 99.9% இன்னும் வாசிக்கப்படாமல் இருப்பதாலும் (வாங்கின புதிதில் புரட்டிப் பார்த்ததால் ஒரு 0.1சதவீதத்தை கழித்து விட்டேன்) முந்தைய வருடங்களைப் போல் எதை வாங்க வேண்டும் என்கிற கறாரான திட்டம் எதுவும் பெரிய அளவில் இல்லாமல் ஒர் அனுபவமாக இருக்கட்டுமே என்று கிளம்பினேன்.

()

புத்தகக்காட்சியின் வெளியே குறைந்த விலையில் இலக்கியச் சேவை செய்து கொண்டிருந்த விளிம்புநிலைக் கடைகளை (நடைபாதைமுனையில் கடைகள்) முதலில் பார்த்தேன். எது எடுத்தாலும் ரூ.20,30,50 என்று காப்பிரைட், ராயல்டி பிரச்சினையில்லாமல் கச்சாமுச்சாவென்று பல புத்தகங்கள். கீழ்கண்ட புத்தகங்களை  வாங்கினேன். 'பத்து பர்சென்ட் டிஸ்கவுண்ட் இருக்குன்னு சொன்னாங்களே' என்று கடைக்காரரை கலாய்க்க முயன்றால் 'தோ...டா' என்றார் அருமையான சென்னை வழக்கில்.

1) STARLIGHT STARBRIGHT - THE EARLY TAMIL CINEMA - RANDOR GUY
2) கநாசு 90 -  தொகுப்பு சா.கந்தசாமி
3) சென்னைச் சிறுகதைகள்


உயிரைக் கூட பொருட்படுத்தாமல் அபாயமாக சாலையைக் கடந்து புத்தகக் காடசிக்கு சென்று கொண்டிருந்த மக்களின் புத்தகார்வத்தை பார்க்க கண்ணீர் மல்கியது. 'எங்கடா தம்பி வந்த?" என்று பிளெக்சில் இருந்து எழுத்தாள பெருந்தகைகள் பெரிய சைஸில் வாசலிலேயே மிரட்டுகிறார்கள். உம்மாச்சியை வேண்டிக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு  ஓடிச் சென்று அனுமதிச்சீட்டை வாங்கினேன். (அஞ்சு ரூபா சில்லறையா கொடுங்க' என்று பத்து பேரை நிறுத்தி வைத்திருந்தார்கள்).

இங்கிபிங்கிபாங்கி போட்டு இடது பக்கத்தை தேர்வு செய்து (நான் எப்போதுமே இடது சார்பாக்கும்) சென்றேன் துவக்கத்திலேயே தினத்தந்தி அரங்கம். தினத்தந்தி நாளிதழை வழக்கமாக இடது கையால் புரட்டிப் படிக்கும் நான் பா.ராகவனின் அழுத்தமான பரிந்துரை காரணமாக எந்த யோசிப்புமில்லாமல் 'வரலாற்றுச் சுவடுகள்' நூலை வாங்கினேன். பிரித்துப் பார்க்க முடியாதபடி 'சரோஜாதேவி புக்' பேக்கிங்.

என்னுடைய இரண்டு வயதில் பக்கத்து வீட்டிலிருந்த வெள்ளிக் கரண்டியை எடுத்து விழுங்கி விட்டேனாம். Born with neighbour's silver spoon. இந்த முக்கியமான வரலாற்றுத்தகவல் மாத்திரம் இந்த  நூலில் இல்லாவிட்டால் பாராவிடம்  சண்டை போட்டாவது ரூ.270/- ஐ திரும்ப வாங்க உத்தேசம். பெயர், முகவரி எல்லாம் வாங்கிக் கொண்டு புத்தகத்தை கொடுத்தார்கள். அதிர்ஷ்டமிருந்தால் அடுத்த பதிப்பில் என் வீட்டு முகவரியும் வரக்கூடும் போலிருக்கிறது. ஆனால் இந்தப் புத்தகத்தை வாங்கத் திட்டமிடுபவர்கள் இதை கடைசியாக வைத்துக் கொள்வது உததமம். ஜீன்ஸ் பட காலத்து ஐஸ்வர்யாவை முதுகில் சுமந்துச் செல்வது போல் புத்தகத்தின் எடை இன்பச் சங்கடமாக இருக்கிறது. முன்பெல்லாம் அமெரிக்க நூலகத்தில் இருந்து இப்படிப்பட்ட தடிமனான புத்தகமாக தேடி எல்லோருக்கும் தெரியும்படி பேருந்தில் பெருமையாகச் செல்வேன். கைக்குழந்தை போல் இதைத் தூக்கிக் கொண்டே மற்ற அரங்குப் புத்தகங்களை பார்க்க இம்சை. வில்லன் பொன்னம்பலம் சைஸில் உதவியாள் அழைத்துச் செல்வது இன்னும் உத்தமம்.

ஆனால் வீட்டிற்கு வந்தவுடன் புரட்டிப் பார்த்தது முதலில் இதைத்தான். (மூடி வைத்திருந்தாலே அதீத ஆர்வம் வருவது இயற்கைதானே). அருமையான பைண்டிங்கில் வழவழ மேப்லித்தோ பேப்பரில் 864 பக்கங்களும் வண்ணமயம். இரண்டாம் உலகப் போரில் துவங்கி ரகுமான் இரண்டு ஆஸ்கர் வாங்கினது வரை தேதி வாரியாக. புரட்ட புரட்ட டைம் மெஷினில் பயணம் செய்யும் பரவச அனுபவம். ரூ.270/-க்கு விலை கொள்ளை மலிவு. இதுவே ஆங்கிலப் பதிப்பகங்களாக இருந்தால் ஆயிரத்திற்கு குறையாமல் விலை நிர்ணயித்திருப்பார்கள். இந்த நூலை மிக அழுத்தமாக பரிந்துரை செய்கிறேன். தவறாமல் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

உயிர்மை ஸ்டாலை கண்டவுடன் சந்தாவை புதுப்பித்துக் கொண்டேன். மனுஷ்யபுத்திரன் ஒரு வாசகரிடம் உற்சாகமாக உரையாடிக் கொண்டிருந்தார். இயல்பிலேயே கூச்ச சுபாவமுடைய நான் (நம்புங்க) சுயஅறிமுகம் செய்து கொண்டு உரையாட விரும்பும் எழுத்தாளர்கள் மிகக் குறைவு. அவர்கள் என்னை ஆத்மார்த்தமாக ஈர்த்திருந்தால் ஒழிய அதைச் செய்ய மாட்டேன். கவிதை எனும் வடிவத்தை காலால் நடக்க ஆரம்பித்த பருவத்திலிருந்தே என்னால் விரும்பமுடியவில்லை என்றாலும் மனுஷயபுத்திரன் உரைநடை எனும் சமாச்சாரத்தை கையாளும் லாவகத்திற்கு ரசிகன் நான். உயிர்மையில் முதலில் நான் வாசிப்பது தலையங்கமே. வாக்கியங்களை அத்தனை கச்சிதமான சொற்களுட்ன் அவர் அமைப்பதை பல முறை வியந்திருக்கிறேன். பொதுவாக கவிஞர்களுக்கு கைவராத சமாச்சாரம் இது. உதாரணமாக வைரமுத்து எழுதும் உரைநடையைப் பார்த்தால் கவிதைக்கும் உரைநடைக்கும் நடந்த திருட்டுக் கல்யாணம் போலிருக்கும். எனவே மனுஷ்யபுத்திரனை அணுகி உரையாடுவதில் எனக்கு பெரிதளவில் தயக்கம் ஏற்படவில்லை. " சார் வணக்கம். நான்... இந்த பெயரில் எழுதுகிறேன்.."  "வாசிச்சிருக்கேன்" என்றார். "உங்க நூல் விழா பற்றியெல்லாம் திட்டி எழுதியிருக்கேங்க" " இருக்கட்டும் அப்படியும் இருந்தால்தானே ஒரு சுவாரசியமிருக்கும்".

முதலில் நான் அவரிடம் வியந்த உரைநடை அம்சம் பற்றியே கேட்டேன். பாரதி, லா.ச.ரா., சு.ரா., சுஜாதா ஆகியோர்களை ஆதர்சமாகக் கொண்டிருப்பதால் இது அமைந்திருக்கலாம் என்றார். "திரும்பத் திரும்ப எடிட் செய்வீர்களா?" என்றேன். " ஒரு விஷயம் உங்களை அதிகஅளவில் பாதித்தால் அதனை எழுதுகிற வடிவம் முழுதும் ஏறத்தாழ மனதிலேயே உருவாகி விடுகிறது. எனவே முதன் முறையிலேயே அதை எழுதி விடுவேன். பெரும்பாலும் மீண்டும் வாசித்து திருத்துவதில்லை" என்கிற ரீதியில் சொன்னார்.

அடுத்த வில்லங்கமான கேள்வியை கேட்டேன். "ஒரு பதிப்பாளராக சாருவின் தேகம் நாவல் உங்களுக்கு திருப்தியை அளித்ததா?. கண்காட்சிக்கு கொண்டு வரவேண்டுமென்றே அவசர கதியில் அரையும் குறையுமாக உருவாக்கப்பட்ட பிரதியென்று நான் கருதுகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

(வரும்)

image courtesy: original uploader

suresh kannan

Friday, January 07, 2011

நாஞ்சில் நாடன் பாராட்டு விழா (3)

பகுதி 1   |   பகுதி 2  பத்ரியின் வீடியோ பதிவு 

எழுத்தாளர் ராஜேந்திர சோழன்
அதுவரை இறுக்கமாக இருக்கும் அரங்கு சில பேச்சாளர்கள் ஆரம்பித்தவுடன் இறுக்கம் தளர ஆரம்பிக்கும் அல்லவா? எழுத்தாளர் ராஜேந்திர சோழனின் பேச்சு அவ்வாறாக இருந்தது. பேச்சின் இறுதியில் மக்கள் போராளியான மருத்துவர் பினாயக் சென்னுக்கு விதிக்கப்பட்டிருக்கும் ஆயுள் தண்டனை மீதான கண்டனத்தை பதிவு செய்தது முக்கியமானது. 'எழுத்தாளர்கள் சமகால அரசியலில் இருந்து விலகி இருக்கக்கூடாது' என்கிற ஞாநியின் கருத்தை இவரும் எதிரொலித்தார்.

ராஜேந்திர சோழன் பேச்சின் ஒரு பகுதி குறித்து யோசித்தேன். 'தமிழகத்தில் பகுத்தறிவு இயக்கம் என்பதின் செயல்பாடுகள் அதீதமாகி (பகுத்தறிவு வேண்டாமென்று சொல்லவில்லை) எல்லாவற்றையும் மூடநம்பிக்கை என்கிற பெயரில் மறுத்து தம்முடைய தொன்மங்களிலிருந்தும் பழங் கலாசாரங்களிடமிடமிருந்தும் தமிழன் துண்டிக்கப்பட்டு கிடக்கிறான்' என்பது இவர் பேசியது. வீடு திரும்பும் வழியில் இது பற்றி சிவராமனிடம் இதுபற்றி பேசிக் கொண்டிருந்தேன். ராஜேந்திர சோழனின் தமிழ் தேசியப் பின்னணி ஆர்வம் குறித்து சிவராமன் விளக்கினார். (இது பற்றி மாத்திரமல்லாமல் வலைப்பதிவில் தொடர்ந்து எழுதச் சொல்லி அவரைக் கேட்டுக் கொண்டேன். செய்வார் என நம்புகிறேன்). 

எழுத்தாளர் கண்மணி குணசேகரன்
விழாவின் இறுதியில் ஜெயமோகன் உட்பட பார்க்கிறவர்களிடமெல்லாம் கண்மணி குணசேகரனின் பேச்சை வியந்தேன். தானே இயற்றிய பாடலொன்றை கணீரென பாடிய குணசேகரன் தென் ஆற்காட்டின அசலான வட்டார மொழியில் கிராமத்து வெகுளித்தனத்துடன் உரையாடியது மிகவும் ரசிக்கும் படி இருந்தது. அவரின் பேச்சு, எழுத்தாளன் என்கிற நிலையைத் தாண்டி ஒரு சம்சாரியின் பேச்சு என்பதாகத்தான் கொள்ள வேண்டும். வெளியில் தரப்படும் விருதுகளை விட வீட்டில் (மனைவியிடம்) வாங்கும் விருது பிரதானமானது என்றதோடு பரிசு குறித்த அவரது எதிர்பார்ப்புகளும் பொருளாதாரம் சார்ந்த எளிய வேண்டுகோள்களாக இருந்தன. 'நாஞ்சில் நாடனுக்கு ஏன் எங்கும் பேருந்தில் பயணம் செய்யக்கூடிய சலுகையை வழங்கக்கூடாது' என்றார். (குணசேகரன் போக்குவரத்து கழகத்தில் பணிமனை ஊழியராக பணிபுரிவது குறிப்பிடத்தக்கது). சாகித்ய அரசு விருதின் பரிசுத் தொகை குறைவாக இருப்பதையும் குறிப்பிட்டார்.

'ஏதோ பாக்கறதுக்கு முன்சொட்டை விழுந்து சாதாரணமா இருக்கறேன்னு நெனச்சுடாதீங்க. நானும் விஷயம் உள்ளவன்தான். மூணு கவிதத் தொகுதி, நாலு புதினம், ஒரு அகராதின்னு... அடிச்சுன்னு போயிட்டே இருப்பேன். நிக்காது. என்கிற போது அவரின் அசாத்திய தன்னம்பிக்கை இயல்பாக வெளிப்பட்டதும் ரசிக்கும் படி இருந்தது. விழா முடிந்தவுடன் வெளியில் நண்பர்களுடன் நின்று கொண்டிருந்த அவரிடம் சென்று சுயஅறிமுகம் செய்து கொண்டு 'பட்டாசு மாதிரி வெடிச்சுட்டீங்களே' என்றேன். "ஆமாம். கலக்கிட்டேன்ல' என்று அவரும் இணைந்து யாரையோ பாராட்டுவது போல மகிழ்ந்து சிரித்தார். சில ஆண்டுகளுக்கு முன் வாசித்திருந்த அவரின் 'கோரை' நாவல் பற்றிய சிறு அறிமுகத்தை இங்கு சேமித்திருக்கிறேன்.

எழுத்தாளர் ஜெயமோகன்
ஜெயமோகன் தனது உரையில் நாஞ்சில் நாடனின் படைப்புலகம் பற்றியும்  குறிப்பாக நாஞ்சில் நாடனின் உணவின் மீதிருக்கும் காதலைப் பற்றியும் பேசினார். 'உப்புமா சாப்பிட்டேன்னு சொல்ல மாட்டார். உளுத்தம்பருப்பு தாளிச்சு கருவேப்பிலை போட்ட உப்புமா சாப்பிட்டேன்னுதான் சொல்வார்".

எழுத்தாளர் நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன் ஏற்புரை.

 'இந்த வெளிச்சம் கூச்சமா இருக்கு' என்று ஆரம்பித்து பேசி்க் கொண்டிருந்தவரிடம் எந்த நேரத்தில் கும்பமுனி உள்ளே புகுந்தாரோ தெரியாது. சாகித்ய அகாதமி மீது காட்டமான விமர்சனம் வைத்தார். ஏற்கெனவே அவரின் கட்டுரைகளில் எழுதியவைதான். அவர் கண்மணி குணசேகரனின் பேச்சை ரொம்பவும் ரசித்தார் என்பதை கவனித்தேன். விழா முடிவில் மாப்பிள்ளை விநாயகர் போன்று அமர்ந்திருந்த அவரிடம் 'உங்களுக்கு விருது கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம் சார்' என்று உள்ளபடியே என்னிடமிருந்த மகிழ்ச்சியை அவரிடம் வெளிப்படுத்தினேன். 'விருதை விட வாசகர்களின் இத்தனை அன்பும் ஆதரவுமே தம்மை நெகிழ்ச்சியடைய வைப்பதாக' சொன்னார்.

சுல்தானுக்கு நினைவுப்பரிசு
விழாவில் நாஞ்சில் நாடனின் இணையத்தளத்தை நடத்தும் சுல்தானை நினைவுப்பரிசளித்து கெளரவப்படுத்தினார்கள். ஓர் எழுத்தாளரின் எழுத்துக்களை இத்தனை ஆர்வமாக தேடிச் சேர்க்கும் இவர் நிச்சயம் இளைஞராகத்தான் இருப்பார் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு நடுத்தர வயது மனிதரைக் காண ஆச்சரியமாக இருந்தது. அதனால் என்ன, மனதால் இளமையானவர் போலும். அவரை தேடிச் சென்று அவரின் உழைப்பையும் ஆர்வத்தையும் பாராட்டினேன்.

தனது பிரத்யேக டிரேட் மார்க் புன்னகையோடு வந்த பத்ரியிடமும் கண்மணி குணசேகரனின் பேச்சை வியந்தேன். 2 மணி நேர வீடியோ எடுத்திருப்பதாக சொன்னார். இயன்றால் அன்றிரவே வலையேற்ற முயலுமாறு கேட்டுக் கொண்டேன்.'பல்வேறு தலைப்புகளில் 'கிழக்கு' பதிப்பகத்தின் புயல் வேக வெளியீடுகளை கவனிக்கும் போது 'மூன்றாம் உலகப் போர்' பற்றிய புத்தகம் கூட டிராஃப்டில் இருக்கும் போலிருக்கிறதே?" என்றேன். மனிதர் ரசித்து வெடித்துச் சிரித்தார்.

பாலுமகேந்திராவை பத்திரமாக அழைத்துச் சென்று கொண்டிருந்த சுகா என்கிற சுரேஷ் கண்ணனிடம் அவசர ரகசியமாக 'படம் எப்ப வருது?" என்றேன். 'வர்ற பிப்ரவரில வரும். சொல்றேன்' என்றார். பாலுவிடம் உதவி இயக்குநராக இருந்த இவர் 'படித்துறை' என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். 'வேணுவனம்' என்கிற வலைப்பதிவில் திருநெல்வேலி நகைச்சுவை கமழும் இவரது கட்டுரைகளை வாசித்து ரசிக்கலாம். அப்படியே சொல்வனத்தில் இவரது அருமையான இசைக்கட்டுரைகளையும். (இவரது திரைப்படம் அனைத்துப் பணிகளும் முடிந்து திரையரங்கு கிடைக்காமல் காத்திருப்பதை இன்னொருவரிடம் அறிய நேரும் போது வருத்தமாக இருந்தது. எத்தனை படைப்பாளிகளின் திரைக்குழந்தைகள் இப்படி கருவறையிலேயே மூச்சு திணறிக் கொண்டிருக்கிறதோ?).

தனது அட்டகாசமான 'பைப்' இல்லாத காரணத்தினால் குறிப்பிட்ட சதவீத கவர்ச்சியை இழந்திருந்த பாரதி மணியிடம் சில நிமிடங்கள். அவரின் மிகச் சுருக்கமான உரையைப் பற்றி விசாரிப்பு. "இத்தனை நிமிஷத்துக்குள்ள பேசிடணும்னு சொல்லிட்டாலே எனக்கு மண்டைக்குள்ள மணியடிக்க ஆரம்பிச்சுடும். அதனால 'நாஞ்சில் நாடனை மற்றவர்கள் பாராட்டுவதை ரசிக்கவே வந்திருக்கிறேன்' என்று சொல்லி அமர்ந்து விட்டேன்" என்றார். "ஆனா நெறைய பேசணும்னு வந்தேன்" என்றவரிடம் "அதனால என்ன, எல்லாத்தையும் எழுதுங்க சார்" என்றேன். தான் ஒரு எழுத்தாளர் என்பதை அழிச்சாட்டியமாக ஏற்க மறுக்கிறார். 'நாடக நடிகர்' என்கிற அடையாளமே போதுமாம். எழுத்துக் கூட்டி எழுத தெரிந்து விட்டாலே தம்மை எழுத்தாளன் என்று எண்ணிக் கொள்ளும் நபர்களுக்கு இடையில் 'சுஜாதா' பாராட்டிய இவர் இப்படி.

இசை விமர்சகர் ஷாஜியிடம் அவரின் மலேசியா வாசுதேவன், மற்றும் ஸ்வாணலதா கட்டுரைகள் பற்றியும் அதன் மொழிபெயர்ப்பு பற்றியும் சில நிமிடங்கள் பேச்சு. 'இணையததில் உங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களை வாசிக்கிறீர்களா?' என்றேன். "ஆம். நெறைய பேரு லிங்க் அனுப்பி வைக்கிறாங்க. அதெல்லாம் ரொம்ப பெரிசா எடுத்துக்கறதில்ல" என்றார்.

நண்பர்கள் சிலரை சில ஆண்டுகள் கழித்து சந்திக்கிறேன். அவர்களிடம் ஒரிரு வார்த்தைகள் பேச முடிந்தது. அவ்வாறு சந்தித்த எழுத்தாளர் கம் வலைப்பதிவர்களின் பட்டியல் ஒரு ஞாபக சேமிப்பிற்காக.

விழியன் (photography), ஜ்யோவ்ராம் சுந்தர், உருப்படாதது நாராயணன், சங்கர், நிர்மலா, மதுமிதா, ராமச்சந்திரன் உஷா, சிறில் அலெக்ஸ், அரவிந்த், அண்ணா கண்ணன, கே.ஆர்.அதியமான், உண்மைத் தமிழன், அதிஷா. குறிப்பாக 'கலையாளுமை' அரங்கசாமி எனக்காக சில நிமிடங்கள் ஒதுக்கியது என் வாழ்வின் பெரும் பேறு.

விழாவில் 'நாஞ்சில் நாடனின்' சமீபத்திய சிறுகதைகளின் தொகுதியான 'கான்சாகிப்' என்கிற நூலும் வெளியிடப்பட்டது. பாலுமகேந்திரா வெளியிட பாரதிமணி பெற்றுக் கொண்டார்.  முன்பே குறிப்பிட்டது போல் இந்த விழா எனக்கு பெரும் மனவெழுச்சியை அளித்தது. 'எழுத்தாளன் என்பவன் ஒரு சாதாரண அங்கீகாரத்திற்காக தன் இறுதிக்காலம் வரை (அதுவும் அதிர்ஷ்டமிருந்தால்தான்) காத்திருக்க வேண்டிய தமிழக சூழல் எரிச்சலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தங்களின் பணியை செய்து கொண்டிருக்கும் படைப்பாளிகளின் உழைப்பும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

பரவலாக கவனிக்கப்படாமலும் தகுதிக்குரிய அங்கீகாரம் பெறாமலும் ஒதுங்கியிருக்கும் சிறந்த தமிழ் எழுத்தாளர்களை தேடிச் சென்று 'விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்' கெளரவிக்க வேண்டும் என்பதை ஒரு வேண்டுகோளாக இங்கு முன்வைக்கிறேன்.

image courtesy: http://picasaweb.google.com/vishnupuram.vattam

suresh kannan

நாஞ்சில் நாடன் பாராட்டு விழா (2)


விழா நிகழ்வு உரையாடல்களைப் பற்றின குறிப்புகள் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் நினைவில் இருப்பதை வைத்துக் கொண்டு பிற்பாடு எழுதுவது சற்று சிக்கலான வேலை. பேச்சாளர்கள் சொல்லாத ஒன்றை அல்லது அவர்கள் சொன்ன கான்டெக்ஸ்டை சரியாகப் புரிந்து கொள்ளாமல் வேறொரு அர்த்தம் வரும் வகையில் எழுதி விடுவோமோ என்ற நெருடல் எனக்கு இருந்துக் கொண்டேயிருக்கும். அதற்காகத்தான் ஜாக்கிரதையாக disclaimer எல்லாம் போட்டுக் கொள்வது. :)

குறிப்புகள் எடுத்துக் கொள்ளாமலிருப்பதில் இன்னொரு செளகரியமும் இருக்கிறது. கட்டிங் அடித்து விட்டுப் படுத்தாலும் கூட தேவையற்ற செய்திகள் மூளையிலேயே வடிகட்டப்பட்டு நாம் அவசியமானவை என்று நினைப்பதுவே மறுநாள் மீதியாக தங்கும். அதுவே போதும்.

இந்த மாதிரியான சங்கடங்கள் எதுவும் தேவையில்லாமல் விழா பற்றிய வீடியோ தொகுப்பை நண்பர் பத்ரி அவரது தளத்தில் வலையேற்றியிருக்கிறார். கேமிராக் கோணம் ஹீரோ அறிமுகக் காட்சி போல் லோ ஆங்கிளில் இருந்தாலும் ஒலியும் ஒளியும் தரமாக உள்ளது. ஆகவே என்னுடைய இடையூறின்றி நீங்களே நேரடியாக அதைக் காணலாம். அவருக்கு நன்றி.

எனவே பேச்சாளர்களின் உரையைத் தவிர்த்து விட்டு விழா பற்றிய என்னுடைய அவதானிப்புகளையும் இன்னபிற விஷயங்களையும் பற்றி எழுத உத்தேசம்.

* விழா நிகழ்ந்த ருஷ்ய கலாச்சார மையத்திற்கு நான் வருவது இதுவே முதன்முறை. இங்கு நிகழும் திரைப்பட வெளியீடுகள் பற்றின அறிவிப்பை அவ்வப்போது பத்திரிகைகளில் கண்டாலும் நானிருக்கும் வடசென்னையிலிருந்து இந்த இடத்திற்கு வருவது குறித்த அடையாள குழப்பங்களால் தயங்கி நின்று விடுவேன். இதற்குக் கூட நண்பர் சிவராமனின் உதவியோடுதான் வர முடிந்தது. சிறிய அரங்கு என்றாலும் எங்கிருந்து பார்த்தாலும் மேடை தெளிவாக தெரியுமளவிற்கு இருக்கை அமைப்பு இருந்தது. திரைப்படம் பார்ப்பதற்கு கச்சிதமான இடம்.

விழா ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அரங்கம் நிரம்பி பார்வையாளர்கள் நிற்க வேண்டியிருந்தது. மணிரத்னம் வந்திருந்து பின்வரிசையில் தயக்கமாக நின்றிருந்தார். விழா அமைப்பாளர்கள் அலறியடித்து முன்வரிசையில் அமர வைத்தனர். மணிரத்னம் வந்ததை புளகாங்கிதமாக சொல்லவரவில்லை. நிகழ்ச்சி நிரலில் தம்முடைய பெயர் இல்லாவிட்டாலும் முன்னணி இயக்குநர்கள் இலக்கிய விழாக்களுக்கு வருவது ஆரோக்கியமான அடையாளமாக தெரிகிறது. தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ் சினிமாவிற்கும் உள்ள ஸ்பெக்ட்ரம் ஊழல் அளவிற்கான இடைவெளி குறித்து பல ஆண்டுகளாக பேசிக் கொண்டிருக்கிறோம்.

புதுமைப்பித்தன் ஒரு ஆரம்பமாக தமிழ் சினிமாவிற்குச் சென்றார். அவர் அதை புரட்டிப் போடும் ஆவேசத்துடன் செல்லவில்லை. அதன் மூலம் தம்மை அரித்துக் கொண்டிருந்த வறுமையிலிருந்தும் காசநோயிலிருந்தும் தப்பிக்க முயன்றார். ஆனால் அதன் ஆரம்பத் துளியை சுவைப்பதற்குள் செத்துப் போனார். ஜெயகாந்தனால் குறிப்பிடத்தக்க சில முயற்சிகளை செய்ய முடிந்தது. ஆனால் நுண்ணுணர்வு மிக்கவர்கள் அங்கு தாக்குப்பிடிக்க முடியாது போலிருக்கிறது. "போங்கடா" என்று வந்து விட்டார். இதற்குப் பிறகு சுஜாதா, பாலகுமாரன் போன்ற வெகுஜன எழுத்தாளர்களைத் தவிர சிற்றிதழ் சார்ந்த வேறு எவரும் பெரிய அளவில் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்ததாகத் தெரியவில்லை. ஆனால் தற்போது மறுபடியும் அதற்கான ஆரோக்கியமான அடையாளங்களைப் பார்க்க முடிகிறது. எஸ்.ரா., ஜெயமோகன் போன்றோர் சினிமாவில் நுழைந்திருக்கிறார்கள். 'காவல்கோட்டம்' நாவலை வசந்தபாலன் திரைப்படமாக உருவாக்குகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் இலக்கிய, நூல் வெளியீட்டு விழாக்களில் பங்கேற்கிறார்கள்.

நிற்க. கூட்டு முயற்சியால் உருவாக்கப்படும் சினிமாவில் இம்மாதிரியான சொற்ப நம்பிக்கைகளால் தமிழ் சினிமாவே ஏதோ 80-களின் கேரளம், வங்கம் போல ஆகிவிடும் என்று நான் சொல்ல வரவில்லை. அப்படி நம்புவதும் அபத்தம். அதற்கு ஒட்டுமொத்த தமிழக ரசனையும் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும்  மாறவேண்டும். அதுவொர் ஆகாயக் கனவு. ஆனால் அம்மாதிரியான நம்பிக்கைகள் தொடர்ந்து கொண்டிருப்பது ஆசுவாசத்தைத் தருகிறது.

பேச்சாளர்களின் உரையை வீடியோவில் நீங்களே காண முடியுமென்றாலும் அதிலிருக்கும் சில விஷயங்களை அடிக்கோட்டிட்டு குறிப்பிட விரும்புகிறேன்.

ஞாநி பேசியதில் முக்கியமானதொன்றை குறிப்பிட மறந்து விட்டேன். தி.ஜானகிராமன் உத்தியோக காரணங்களுக்காக பல ஆண்டுகள் டெல்லியில் வசித்தாலும் அவரது படைப்புகளில் டெல்லியின் வாசமோ தடயமோ இருந்ததிலலை. அதிலிரு்நதது முழுக்க முழுக்க தஞ்சையின் மணமும் கலாச்சாரமுமே. ஆனால் நாஞ்சில் நாடனின் படைப்புகள் அப்படியல்ல. அதில் நாஞ்சிலின் கலாச்சாரத்தோடு அவரது புலம்பெயர் பிரதேசமாக இருந்த மும்பையின் சூழல்களையும் காணமுடியும்.

ஒரு படைப்பாளிக்கு இது முக்கியமான விஷயமென்று நான் நினைக்கிறேன். தமிழ் இணையப் பதிவர்களில் பலர் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வசித்தாலும் அவர்களது பதிவுகளும் அவதானிப்புகளும்  பெரும்பாலும் தமிழ் சினிமா, அரசியல், வம்பு, கிசுகிசு போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டே அமைகின்றன. கணினி வழியாக அவர்களது மனம் தமிழகத்தையே சுற்றி வருகிறது. இதன் மூலம் தங்களின் 'ஹோம் ஸிக்னெஸ்ஸை' போக்கிக் கொள்ள முயல்கிறார்கள் என நினைக்கிறேன். மாறாக தாங்கள் வசிக்கும் பிரதேசத்தின் கலாச்சாரம், கலை, உணவு, வாழ்க்கை முறை போன்ற விஷயங்களையும் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

(மேலும்)

image courtesy: http://picasaweb.google.com/vishnupuram.vattam/NanjilFunctionChennai#

suresh kannan

Tuesday, January 04, 2011

நாஞ்சில் நாடன் பாராட்டு விழா (1)



2010-ன் சாகித்ய அகாதமி விருதிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள நாஞ்சில் நாடனை பாராட்டும் விதமாக விழா ஒன்று சென்னை, ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ('சூடிய பூ சூடற்க' என்னும் சிறுகதைத் தொகுப்பிற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது). விழா அமைப்பாளர்களில் ஒருவரான அரங்கசாமி இதற்காக மின்னஞ்சலில் என்னை அழைத்த போது 'நான் அழைக்கப்படாவிட்டால் கூட இந்த விழாவிற்கு வருவேன். அது நாஞ்சில் நாடன் என்கிற படைப்பாளிக்காக' என்று பதில் அனுப்பியிருந்தேன்.

நாஞ்சில் நாடனுக்கு விருது கிடைத்த செய்தியை முதன்முதலாக செல்வேந்திரனின் டிவிட்டர் செய்தியின் மூலம் அறிந்த போது ஏதோ எனக்கே விருது கிடைத்ததைப் போன்று அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்தளவிற்கு என் மனதிற்கு நெருக்கமான படைப்பாளி அவர். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பழைய புத்தகக்கடையில் யதேச்சையாக கிடைத்த மேலட்டை பாதி கிழிந்து போன 'என்பிலதனை வெயில்காயும்' என்கிற புதினத்தோடு எனக்கு நாஞ்சில் நாடனின் அறிமுகம் ஆகியது. அப்போது அவரின் பெயரைக் கூட நான் அறிந்திருக்கவில்லை. அன்னம் பதிப்பகம் தரமான எழுத்தாளர்களின் நூற்களைத்தான் வெளியிடும் என்கிற தன்னுணர்வின் உந்துதலால்தான் அந்த நூலை வாங்கினேன். நாஞ்சில் நாட்டின் வட்டார வழக்குச் சொற்கள் முதலில் என்னை தடுமாற வைத்தாலும் நூலின் இயல்புத்தன்மையும் சுவாரசியமும் மொழியின் சிக்கல்களைக் கடந்து தரிசனம் தருகிற படைப்பாளியின் ஆன்மாவும் பின்பு என்னை வழிநடத்திச் சென்றன. பின்பு அவரது சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள் என்று பலவற்றையும் தேடித் தேடி வாசித்தேன்.

அவரது புதினங்களுள் முதன்மையானது 'சதுரங்கக் குதிரை' என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம். திருமணமாகாத ஒரு முதிர்இளைஞனின் புலம்பெயர் தனிமையை இத்தனை நுட்பத்துடன் சொன்ன வேறெந்த புதினத்தையும் இதுவரை நான் வாசிக்கவில்லை. அவரது அபுனைவுகளில் தென்படும் சமூகக் கோபங்களும் நையாண்டிகளும் நக்கல்களும் அவைகளை மீறி நிற்கும் ஆழமான விமர்சனங்களும் உணர்ந்து வாசிக்கத்தக்கவை. இவரது படைப்புகளைப் பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் உரையாடுவோம்.

இனி விழா பற்றி.

தனிப்பட்ட வகையில் இந்த விழா எனக்கு பெருத்த மனவெழுச்சியை தந்தது. ஒட்டுமொத்த விழாவுமே மிக திருப்திகரமாகவும் ஆத்மார்த்தமாகவும் அமைந்திருந்ததை குறிப்பிட வேண்டும். எனக்கு மிகவும் பிடித்த படைப்பாளி குறித்த பாராட்டு விழா என்கிற காரணத்தைத் தாண்டி 'தரம் வாய்ந்த படைப்பாளன் இச்சமூகத்தால் கொண்டாடப்பட வேண்டியவன்' என்கிற செய்தி மீண்டுமொரு முறை நிறுவப்பட்டது. எந்தவொரு நிறுவன அமைப்பு பின்னணியல்லாமல் அரசியல் நுழையாமல் வாசகர்களால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பே இதை தாமாகவே முன்னெடுத்துச் சென்றது மிகச் சிறந்த முன்னுதாரணம்.  

விழாவின் ஆகச் சிறந்த பேச்சு கண்மணி குணசேகரனுடையது என்பதில் பலருக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இதைத் தவற விட்டவர்கள் அபாக்கியவான்கள் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. (பத்ரி இந்த விழாவின் வீடியோவை வலையேற்றுவதாகச் சொல்லியிருக்கிறார். கண்டிப்பாக அதைக் காணத் தவறாதீர்கள்). குணசேகரனின் பேச்சைப் பற்றி பின்வரும் பத்திகளில் எழுதுகிறேன்.

விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் அமைப்பு இளைஞர்கள் இந்த விழாவை சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். நாஞ்சில் நாடன், ஜெயமோகன் உட்பட இந்த அமைப்பைச் சார்ந்தவர்களும் பெரும்பாலும் வேட்டி, சட்டையில் வந்திருந்தது, குடும்ப விழா ஒன்றினுள் அமாந்திருக்கும் உணர்வை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு முன் சென்னை வந்திருந்த அரங்கசாமி என்னைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கும் போது அவரிடம் இந்த அமைப்பின் பெயர் குறித்த சங்கடத்தை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். 'ராஜாதி ராஜா ரஜினி ரசிகர் மன்றம் மாதிரி .. என்னங்க இப்படி ஒரு பேரு'.

இதே அமைப்பு இதற்கு முன்னதாக எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு விருது வழங்கின நிகழ்ச்சி குறித்து இணையத்தில் ஒரு சர்ச்சை எழுந்தது. 'ஜெயமோகனின் நூலின் பெயரால் அமைந்த ஒரு விருதை ஓரு மூத்த படைப்பாளிக்குத் தருவது அவரை அவமானப்படுத்துவதற்கு ஒப்பானது' என்கிற ரீதியில் அது அமைந்திருந்தது. 'அலைபாயுதே' மாதவனைத்தவிர வேறு எவரையும் அறிந்திராத குளுவான்கள் கூட இது குறித்த தங்களின் பொன்னான கருத்துக்களை போகிற போக்கில் வீசிச் சென்றனர். இப்படி ஒரு விருது அறிவிக்கப்படும் வரைக்கும் இப்படியொரு எழுத்தாளர் இருப்பதே பல பேருக்குத் தெரிந்திருக்காது. மாத்திரமல்ல, ஆ.மாதவனுக்கு இதுவரை எந்தவொரு நூல் வெளியீடோ, பாராட்டு விழாவோ இதுவரை நடந்திருக்கவில்லை.

பிருஷ்டங்களை அசைக்காத சோம்பேறித்தனத்துடன் தானும் எந்தவோர் ஆக்கப்பூர்வமான முயற்சிகளை செய்யாமலிருப்பது ; அப்படிச் செய்யப்படும் பணிகளையும் அதே பிருஷ்டங்களை அசைக்காமல் டீக்கடை பெஞ்சில் அமர்ந்து வம்பு பேசும் மனோபாவத்துடன் நக்கலடிப்பது தமிழனின் பிரத்யேக குணங்களுள் ஒன்று.

என்னையே உதாரணமாகக் கொள்கிறேன். நாஞ்சில் நாடனின் படைப்புகளை பல வருடமாக வாசித்து வந்திருந்தாலும் அவரைப் பாராட்டி இதுவரை ஒரு கடிதம் கூட அவருக்கு போட்டதில்லை. சாருவின் நூல் வெளியீட்டு விழாவில் மூத்திரப்புரையின் முனையில் அவரை நேரில் சந்தித்த போது கூட 'சொல்ல மறந்த கதை' படமாக்கப்பட்ட விதத்தில் உங்களுக்கு திருப்தியுண்டா' என்கிற அபத்தமான கேள்வியோடு திரும்பி விட்டேன். என் பதிவிலியே கூட அவரின் படைப்புகளைப் பற்றி அதிகம் எழுதினதில்லை. 'எழுத்தாளனைக் கொண்டாடாத சமூகம் நடைப்பிணத்திற்குச் சமமானது' என்பதில் அழுத்தமான நம்பிக்கைக் கொண்டிருக்கிற நானே இப்படி வாளாவிருக்கிற போது, அதைச் செய்கிறவர்களை - அதுவும் இளைஞர்களை - அவர்களது அமைப்பின் பெயரைக் காரணம் காட்டி குறை சொல்வது போன்றதோர் அநியாயம் எதுவும் இருக்க முடியாது.

இந்நிலையில் இந்த விழாவை ஏற்பாடு செய்த இந்த அமைப்பை மனப்பூர்வமாக பாராட்டுவதோடு, அரங்கசாமியிடம் முன்னர் தெரிவித்திருந்த என் கிண்டலையும் இதன் மூலம் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.

நாஞ்சில் நாடனின் இந்த பாராட்டு விழாவில் உரையாடியவர்களின் மையக் கருத்தாக இரண்டைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

1) வழக்கமாக எந்தவொரு விருது அறிவிக்கப்படும் போதும் அதன் கூடவே அது குறித்தான சர்ச்சைகளும் விவாதங்களும் தொடர்ந்து வரும். ஆனால் இம்முறை எந்தவொரு முணுமுணுப்புக் குரல் கூட கேட்கவில்லை. எனில் தகுதி வாய்ந்த ஒருவருக்கு இவ்விருது வழங்கப்பட்டிருப்பது குறித்து அனைவருக்கும் திருப்தியாகவே உள்ளது.

2) இம்மாதிரியான விருதுகள் ஓய்வு பெறும் வயதில் அல்லாமல் உரிய காலத்திலேயே அந்தப் படைப்பாளியை ஊக்குவிக்கும் விதமாக அவன் அதிக படைப்பூக்கத்துடன் இயங்கும் தருணத்திலேயே வழங்கப்பட வேண்டும். மேலும் விருதுகளின் பின்னால் உள்ள அரசியல் காரணமாக தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்டும் மூத்த படைப்பாளிகள் கூட இன்னும் புறக்கணிக்கப்பட்டும் இருக்கிற அபத்தமான நிலை மாற வேண்டும்.

(இனி விழா உரையாடல் பற்றி சுருக்கமாக, நினைவிலிருந்து)

நாஞ்சிலின் படைப்புகளைப் பற்றி இலக்கிய வட்டத்தைச் சார்ந்த வாசகர் ராஜகோபாலன் பேசினார். இம்மாதிரியான மேடைகளை பொதுவாக எழுத்தாளர்களும் விஐபி என்கிற அந்தஸ்தில் எழுத்துக்குச் சம்பந்தமில்லாதவர்களுமே அடைத்துக் கொள்ளும் வழக்கமான காட்சிகளிலிருந்து விலகி எழுத்தாளன் அல்லாத வாசகனின் குரலும் மேடையில் ஒலிப்பது ஆரோக்கியமான முன்னுதாரணம்.

ஒரு மூத்த படைப்பாளிக்கு அளிக்க வேண்டிய மரியாதையோடும் அடக்கத்தோடும் எஸ்.ராமகிருஷ்ண்ன் சுருக்கமாக தன் உரையை முன்வைத்தார்.

"நாஞ்சில் நாடன் எங்கு சென்றாலும் அவரது நாஞ்சில் கலாச்சாரத்தை சுமந்துச் செல்வார். கோணங்கி ஒரு முறை மும்பையில் சென்று அவரை சந்தித்த போது  'அது மும்பையில் வசிக்கும் ஒருவருடான சந்திப்பாக இல்லாமல் நாகர்கோவிலில் வசிக்கும் ஒருவரின் வீட்டிற்குச் சென்ற அனுபவத்தைத் தந்தது' என்று என்னிடம் கூறினார். அமெரிக்காவிற்குச் செல்லும் ஒரு ஆர்மெனியன் தன் நாட்டின் கலாச்சார குறியீடான மாதுளம்பழத்தையும் தன்னோடு எடுத்துச் செல்வான். ஆனால் அது விமானநிலையத்தில் மறுக்கப்படும். எனவே அதை அங்கேயே தின்று தன் உடம்போடு எடுத்துச் செல்வான். ஒரு திரைப்படத்தின் காட்சியிது. அதைப் போலவேதான் நாஞ்சில் நாடனும். மரபிலக்கியம் குறித்தான அவரது பண்பட்ட அறிவு வியப்பேற்படுத்துவது."

இயக்குநர் பாலுமகேந்திரா.

"ஓர் இலக்கிய உபாசகன்' என்கிற வகையில்தான் இந்த மேடையில் நிறகிறேன். சினிமா எனது மொழி. எந்தவொரு இலக்கியப்படைப்பையும் சினிமா மொழியில் மாற்றும் போது அதன் உள்ளடக்கம் மற்றும் வடிவத்தைத்தான் பிரதானமாக கணக்கில் எடுத்துக் கொள்வேன். நான் தொலைக்காடசியில் 'கதை நேரம்' இயக்கிய போது "ஏன் நீங்கள் நாஞ்சில் நாடன் உள்ளிட்ட பல இலக்கியவாதிகளின் படைப்புகளை கையாளவில்லை?' என்று சிலர் அப்போது கேட்டார்கள். எத்தனை முயன்றாலும் சில படைப்புகளின் ஆன்மாவை திரையில் கொண்டு வர முடியாது. அதை தூர நின்று வணங்கவே விரும்புகிறேன். நாஞ்சில் நாடனின் படைப்புகளும் அவ்வாறானவை."

பத்திரிகையாளர் ஞாநி:

"நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்த நிகழ்வையும் தாண்டி சிலவற்றைப் பேச வேண்டியிருக்கிறது. அவருக்கு விருது கிடைத்ததை முன்னிட்டே இங்கு கூடியிருக்கிறோம். மரியாதை செய்கிறோம். எனில் விருதிற்கு முந்தைய நாஞ்சில் நாடன் பாராட்டப்படத் தேவையில்லாதவரா அல்லது மரியாதை செய்யப்படத் தேவையில்லாதவரா, விருதிற்கு தரப்படும் மரியாதையை விட படைப்பாளியே அதிகம் கொண்டாடப்பட வேண்டியவன். தனியார் அமைப்புகள் தரும் விருதுகளை விட அரசு அமைப்பு தரும் விருதுகள் அதிகம் கவனிக்கப்படுகின்றன. சாகித்ய அகாதமி அமைப்பை ஜவஹர்லால் நேருவும் அந்த நோக்கிலேயே  துவங்கினார். ஆனால் இந்த அகாதமியின் தென்னிந்திய மண்டல அலுவலகம் முன்பு சென்னையில் இருந்த போது  அரசியல் காரணமாக பெங்களூருக்கு துரத்தியடிக்கப்பட்டது. இப்போதிருக்கும் கிளை அலுவலமும்  துரத்தியடிக்கப்படும் நிலையில்தான் சமகால் அரசியல் சூழல் நிலவுகிறது.எந்தவொரு எழுத்தாளனும் தன் சமகாலத்தின் அரசியல் குறித்த விமர்சனங்களைப் பற்றி எதுவும் உரையாடமலிருப்பது முறையற்றது.

மக்கள் அதிகம் புழங்கின இடங்களுக்கென்று தன்னிச்சையாக ஒரு மணமும் குணமும் ஏற்பட்டு விடும். சென்னையின் பல பகுதிகளில் வாழ்ந்திருக்கிறேன். திருவல்லிக்கேணி போன்ற பகுதிகள் அதன் பிரத்யேக கலாச்சாரத்தின் வாசனை கொண்டது. ஆனால் தற்போது நான் வாழும் புறநகர் அவ்வாறான எதுவுமில்லாமல் வெறுமையாக இருக்கும். நாஞ்சிலின் படைப்புகள் இதைப் போன்றே அவரது கலாச்சாரத்தின் பிரத்யேக மணத்தையும் பின்னணிகளையும் கொண்டது"

(மேலும்)

தொடர்புடைய பதிவு:

நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது

suresh kannan