Thursday, November 06, 2008

எம்.ஜி.ஆரால் அடி வாங்கினேன்

தங்கநகை போல் பழைய படங்களையும் பாலீஷ் செய்து மறுவெளியீடு செய்வது தற்போதைய பேஷன். Mughal-e-Azam வண்ணத்தில் வெளிவந்த போது அந்தப்படத்தின் ரசிகர்கள் அகமகிழந்து போனார்கள். அதே போல் எம்.ஜி.ஆரின் மன்னாதி மன்னன், அடிமைப் பெண் என்று ஆரம்பித்து சமீபத்திய 'உலகம் சுற்றும் வாலிபன்' வரையான மறுவெளியீடுகளும் வணிக ரீதியான வெற்றியைப் பெறுவதை கவனிக்கும் போது நாம் இன்னும் பழமையைப் போற்றுவதில் உள்ள குணம் தெளிவாகிறது.

வடசென்னையில் உள்ள நடராஜ் தியேட்டரை கடக்கும் சந்தர்ப்பம் நேரும் போதெல்லாம் அப்போது வெளியிடப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆரின் பழைய படங்களுக்குக்கூட நட்சத்திர அட்டைகளும், காகித மாலைகளும் அணிவிக்கப்பட்டிருப்பதை ஆச்சரியத்துடன் கவனித்திருக்கிறேன். எம்.ஜி.ஆரின் கடைசிப்படமான 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' வெளிவந்தது 1978-ல் என்று நினைக்கிறேன். ஒருவர் நடிப்பதை நிறுத்தி 30 ஆண்டுகள் கழித்தும் கூட அவரது ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படுகிறார் என்பது வியப்புக்குரியது. பின்னர் அவர் அரசியலில் ஈடுபட்டு முதல்வரானது கூட இதற்கொரு துணைக்காரணமாக இருக்கலாம். 'எம்.ஜி.ஆர் இறந்து போய் பல வருடங்களாகிறது' என்று சொன்னதை நம்ப மறுத்து அவ்வாறு சொன்னவரை அடிக்கப்போன ஒரு குக்கிராமத்து மூதாட்டியைப் பற்றி எதிலோ படித்த நினைவு. இது பத்திரிகைகள் கட்டிவிட்ட கதையாக இருக்கலாம் என்றாலும் யோசித்துப் பார்க்கும் போது அது உண்மையாகக் கூட இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

எம்.ஜி.ஆரின் தீவிரமான ரசிகர்கள் பலரைக் கண்டிருக்கிறேன். பதின்ம வயதுகளில் நண்பன் ஒருவருடன் 'ஏதாவதொரு திரைப்படத்திற்கு செல்லும்' திட்டத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது நண்பனின் நண்பன் (எனக்கு அறிமுகமில்லாதவன்) அங்கு வந்து கலந்து கொண்டான். அப்போது மறுவெளியீடாக வந்திருந்த எம்.ஜி.ஆர் படத்திற்கு செல்லலாமா என்று பேச்சு எழுந்தது. உலகத்திலேயே எனக்கு பிடிக்காதவைகளின் பட்டியலில் எம்.ஜி.ஆரின் படங்களுக்கு பிரதான இடமுண்டு. இன்று வரை கூட எந்தவொரு எம்.ஜி.ஆரின் படத்தையும் முழுமையாக நான் பார்த்ததில்லை. அதன் அபத்தம் தாங்காமல் சில நிமிடங்களிலேயே எழுந்து சென்று விடுவேன். வேறுவழியில்லாத ஒரு சூழ்நிலையில் 'உலகம் சுற்றும் வாலிபனை' பார்க்க திரையரங்கத்திற்குச் சென்று தாங்க முடியாமல் இடைவேளையில் அலறியடித்து வெளிவந்த ஒரே ஒருவன் நான். மேலும் சிவாஜியின் படங்கள் மீது எனக்கு அப்போது பிரியமான அபிமானமுண்டு. எம்.ஜி.ஆர் vs சிவாஜி ரசிகர்கள் மோதிக் கொண்ட கலாச்சாரத்தின் அடுத்தகட்டம் ரஜினி vs கமலாக வளர்ந்திருந்த காலகட்டமது.

எம்.ஜி.ஆர் படங்கள் எனக்கு பிடிக்காது என்று தெரிந்திருந்தும் நண்பன் கேட்கிறானே என்ற எரிச்சலில் ''அந்த கிழபாடு படத்தையெல்லாம் எவன் பாப்பான்?" என்று எகத்தாளமாக கூறினேன். அடுத்த கணமே பலத்த சப்தம் ஒன்று கேட்டதும் என் கண்களில் பொறி பறந்து சற்று இருட்டானதும் ஒருசேர நிகழ்ந்தது. புதிதாக வந்தவன் என் கன்னத்தில் ஓங்கி அறைந்திருக்கிறான் என்று உணர்ந்து கொள்ள சில கணங்கள் பிடித்தது.

இன்றைக்கு Brand image பற்றி பேசுபவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆரிடம் பாடம் கற்க வேண்டும். அந்தளவிற்கு ஆரம்பம் முதலே மிகக் கவனமாக தனது பொது ஆளுமையை வளர்த்துக் கொண்டவர். தனக்குப் பிடிக்காதவர்களை அடிப்பார், பழிவாங்குவார் போன்ற முணுமுணுப்புகளெல்லாம் மக்களின் பிரியத்திற்கு முன்னால் அடிபட்டுப் போனது. நடிகர் எம்.ஜி.ஆரை விட அரசியல்வாதி எம்.ஜி.ஆரே எனக்கு பிடித்தமானவர். அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் தரும் அவருடைய போக்கு விதிவிலக்கான ஒன்று.

சினிமாவில் கூட அவரது கவனம் அடித்தட்டு மக்களிடம் சென்று சேரவேண்டும் என்பதாகவே இருக்கும். எம்.ஜி.ஆரின் திரைப்படப் பாடலொன்றிற்கு இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன், அதற்கு ஒப்புதல் வாங்க வேண்டி எம்.ஜி.ஆருக்கு ஒலிப்பதிவுக் கூடத்தில் போட்டுக் காட்டினாராம். (திரைப்பட உருவாக்கத்தில் இயக்குநர்களை மீறி கதாநாயகர்களின் தலையீட்டை ஆரம்பித்து வைத்தது எம்.ஜி.ஆராக இருக்கலாம்). உயர்ந்த தொழில்நுட்பங்களுடன் காரணமாக எல்லா இசைக்கருவிகளின் ஒலியும் மிகத்துல்லியமாக கேட்பதற்கு பிரம்மாண்டமாய் இருந்ததாம். ஆனால் இதை ஏற்க மறுத்த எம்.ஜி.ஆர், "இந்தப்பாடல் ஒரு சாதாரண ரேடியோவில் ஒலித்தால் எப்படியிருக்குமோ, அப்படியாக அமைத்து காட்டுங்கள். அப்போதும் நன்றாக இருந்தால்தான் இதை ஏற்பேன்" என்றிருக்கிறார்.

()

பொதுவாக நான் பண்டிகைகளையும் பிறந்த நாட்கள் போன்றவைகளை கொண்டாடும் மனநிலையை எப்போதே இழந்து விட்டேன். முற்போக்கானதொரு பாவனையை நிகழ்த்துவதற்காக அல்ல. இயல்பாகவே இது நேர்ந்துவிட்டது. பண்டிகைகளின் போது சம்பிதாயத்திற்காகவும் பாசாங்காகவும் வாழ்த்துக்களை சொல்வதற்கோ பெறுவதற்கோ எரிச்சலாக இருக்கிறது. என்றாலும் மற்றவர்களை வருத்தப்பட வைக்கவோ, சங்கடத்திற்கு உள்ளாக்குவதோ நிகழக்கூடாது என்கிற காரணத்திற்காக முழுமையாக இதை பின்பற்ற இயல்வதில்லை. நம்முடைய கொண்டாட்ட மனநிலையை நாம்தான் தீர்மானிக்க வேண்டும் என்கிற போக்குடையவன். ஏதோ ஒரு நாளை குறித்துக் கொண்டு அதற்காக காத்திருந்து செயற்கையாக கொண்டாடுவது என்னைப் பொறுத்தவரை அபத்தமானதொன்றாக இருக்கிறது. இயந்திரத்தனமாக மாறிவிட்ட வாழ்க்கைச் சூழலில் இறுகிப் போன நம் மனநிலையை தளர்த்தும் விதமாக ஏற்படுத்தப்பட்டிருக்கிற பண்டிகைகளை மறுப்பது சரியா என்ற மாதிரியான கேள்விகளை எதிர்கொள்ளும் போது "நாம் கழிக்கும் ஒவ்வொரு நொடியையும் இயன்ற வரை கொண்ட முயல்வதுதான்" சிறந்த வாழ்க்கை முறையாக இருக்கும்" என்பதுதான் நான் அளிக்கும் பதிலாக இருக்கும். நடைமுறையில் இதை சாத்தியப்படுத்துவது சிரமமானதொன்றுதான் என்றாலும் இந்த மனநிலையை பின்பற்ற முயன்றால் நம் சந்ததிகளுக்கு அது இயல்பானதொன்றாக மாறிவிடும் என்று நம்புகிறேன்.

சில சமயங்களில் வீட்டிற்கு இனிப்பு வாங்கிச் செல்லும் போது "இன்றைக்கு என்ன விசேஷம்?" என்பார் மனைவி. "இனிப்பு சாப்பிடுவதற்கு என்ன விசேஷம் வேண்டியிருக்கிறது. சாப்பிட வேண்டும் போல் இருந்தது, அவ்வளவுதான்." குழந்தைகள் அந்தக் கேள்வியை கேட்பதில்லை. சந்தோஷமாக வாங்கிச் சாப்பிடுவார்கள். பல விஷயங்களை குழந்தைகளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. மழை பெய்தாலோ, மின்தடை ஏற்பட்டாலோ நம்மைப் போல் அவர்கள் எரிச்சலடைவதில்லை; அதையும் கொண்டாடுகிறார்கள்.

Photobucket

கெளதமின் 'வாரணம் ஆயிரம்' திரைப்படத்தினைப் பற்றினதோர் செய்தியைப் படிக்கும் போது எனக்கு ஓம்புரி நடித்த The King of Bollywood (2004) என்கிற இந்தி திரைப்படத்தின் ஞாபகம் வந்தது. World Movies சானலில் இந்தப் படத்தைப் பார்த்தேன். இப்பவும் எப்பவாவது போடுவார்கள்.

கரண் குமார் (சுருக்கமாக KK) என்ற கதாநாயக பாத்திரத்தில், திரையிலும் பின்னாலும் வணிகப்பட நாயகர்கள் செய்யும் அபத்தங்களையும் அலட்டல்களையும் முழுப்படத்திலும் மிகச்சிறப்பாக பகடி செய்திருப்பார் ஓம்புரி. அதில் வரும் ஒரு காட்சி என்னால் மறக்கவியலாதது. இழந்து போன தனது வணிகபிம்பத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஓம்புரி ஒரு புதிய திரைப்படம் ஒன்றை உருவாக்கும் பொருட்டு கதை விவாதத்தில் ஈடுபடுவார். தந்தை, மகன் என்று இருவேடங்களில் நடிக்கும் கதை அவருக்கு மிகவும் பிடித்துவிடும். வெளிநாட்டிலிருந்து டாக்குமெண்டரி எடுக்க வந்து பின்னால் நடிகருக்கு நண்பராகிவிடும் ஒருத்தி, அந்தக்கதையை இன்னும் விரிவு செய்து ஒரு பேரன் கதாபாத்திரத்தையும் கொண்டு வருவார். பேரனாக நடிக்கப் போவது யார்? என்று அவள் அப்பாவித்தனமான ஒரு கேள்வியை கேட்டவுடன் ஓம்பரி உட்பட அந்த அறையில் உள்ளவர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். ஓம்புரி இருக்கும் போது அந்தப் பாத்திரத்தையும் வேறு யார் நடிக்க முடியும்? என்பதை உணர்த்துவதாக இருக்கும் அந்தச் சிரிப்பு.

வாரணம் ஆயிரம் செய்தியும் அதையேதான் சொல்கிறது. இதில் வழக்கமான சூர்யா வயது பாத்திரத்தை தவிர தந்தை பாத்திரத்தைப் பற்றி கெளதம் சொன்ன போது உடனே சூர்யா சொன்னாராம்: "அதையும் நானே பண்றேனே". பதின்ம வயதான பாத்திரத்தைப் பற்றி இயக்குநர் சொன்ன போதும் உடனே சூர்யா சொன்னாராம்."அதையும் நானே பண்றேனே". bullshit. கமலுக்கு முற்றியிருக்கும் வியாதி சூர்யாவிற்கு பரவியிருக்கிறது போலிருக்கிறது. ஒரு நடிகனின் இவ்வளவு தீவிரமான ஆர்வத்தையும் உழைப்பையும் பாராட்ட வேண்டியதுதான். ஆனால் பாத்திரத்தின் இயல்பிற்கும் தனக்கும் அது பொருந்துமா என்பதையும் யோசிக்க வேண்டும். "தேவர் மகன்" திரைப்படத்தில் சிவாஜி நடித்திருந்த பாத்திரத்தையும் கமலின் வழக்கமான இயல்புப்படி அவரே ஏற்று நடித்திருந்தால் அவ்வளவு சிறப்பாக அந்தப்படம் உருவாகியிருக்குமா என்று யோசித்துப் பாருங்கள்.

இதே ரேஞ்சில் போய் எல்லா வணிகப்படநாயகர்கள் துணை நடிகர்களின் வேடங்களையும் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டால் நடிகர் சங்கத்தில் பத்து பதினைந்து பேர்தான் இருப்பார்கள். உண்ணாவிரதத்திற்கு ஆள் போதாது.

suresh kannan

15 comments:

நையாண்டி நைனா said...

/*இதே ரேஞ்சில் போய் எல்லா வணிகப்படநாயகர்கள் துணை நடிகர்களின் வேடங்களையும் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டால் நடிகர் சங்கத்தில் பத்து பதினைந்து பேர்தான் இருப்பார்கள். உண்ணாவிரதத்திற்கு ஆள் போதாது. */

குழாயடிச் சண்டையாவது குறையுமே....

ஆனா என்ன?
நமக்கு நாம தேர்ந்தெடுக்க, நம்ம முதல்வர்களுக்கான சாய்சும் குறையும்

Raj said...

அந்த தந்தை பாத்திரத்திற்கு, கௌதம் முதலில் நானா படேகர் அல்லது மோகன் லாலை அணுகுவதாக இருந்தாராம், அவர்கள் இருவரை விடவா சூர்யா சிறப்பாக செய்து விட முடியும்.

Raj said...

//அடுத்த கணமே பலத்த சப்தம் ஒன்று கேட்டதும் என் கண்களில் பொறி பறந்து சற்று இருட்டானதும் ஒருசேர நிகழ்ந்தது. புதிதாக வந்தவன் என் கன்னத்தில் ஓங்கி அறைந்திருக்கிறான் என்று உணர்ந்து கொள்ள சில கணங்கள் பிடித்தது//

நண்பர் செய்ததில் தவறில்லை.

Anonymous said...

I second what Raj said above

rapp said...

ஹா ஹா ஹா நான் அந்தப் படத்தை பாத்திருக்கேன். அது வாராத இந்தியத் திரையுலகப் பிரபலங்களேக் கிடையாது:):):)

வாரணம் ஆயிரம் விஷயத்தில் நீங்க சொல்வது ரொம்ப சரியாக இருக்கு.

விலெகா said...

எம்.ஜி.ஆர் vs சிவாஜி ரசிகர்கள் மோதிக் கொண்ட கலாச்சாரத்தின் அடுத்தகட்டம் ரஜினி vs கமலாக வளர்ந்திருந்த காலகட்டமது.

இப்போ அஜித்-விஜய் இன்னும் யார் யாரெல்லாம் மோதப்போகிறாற்களொ!1

விலெகா said...

தேவர் மகன்" திரைப்படத்தில் சிவாஜி நடித்திருந்த பாத்திரத்தையும் கமலின் வழக்கமான இயல்புப்படி அவரே ஏற்று நடித்திருந்தால் அவ்வளவு சிறப்பாக அந்தப்படம் உருவாகியிருக்குமா என்று யோசித்துப் பாருங்கள்.

உண்மையான கருத்து!!

thamizhparavai said...

கொண்டாட்டங்கள் பற்றிய தங்கள் கருத்துக்கள் அனைத்தும் எனக்கும் பொருந்தும்.
நாம் சந்தோஷமாக இருப்பதைக் கொண்டாடினாலே போதும்.
நான் பெரிய திருவிழா நேரங்களில் ஊருக்குப் போவதை விட,அதற்கடுத்த நாட்கள்தான் போவேன். ரயில், பஸ்களில் கூட்டமாவது கம்மியாயிருக்கும். என்னைப் பார்ப்பது என் பெற்றோருக்கும், அவர்களைப் பார்ப்பது எனக்கும்தான் தீபாவளி, பொங்கல் என நான் நினைக்கிறேன்.

Rex said...

மழை பெய்தாலோ, மின்தடை ஏற்பட்டாலோ நம்மைப் போல் அவர்கள் எரிச்சலடைவதில்லை; அதையும் கொண்டாடுகிறார்கள் - யதார்த்தமான வரிகள்...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஹே ராம் படத்தை திரும்ப எடுக்க போவதாகவும் அதில் அனைத்து முக்கிய பாத்திரங்களையும் கம்லே ஏற்று நடிக்க போவ்வதாகவும் ஒரூ செய்தி உலவுகிறதே.......

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சகலகலா வல்லவன், முரட்டுக்காளை போன்ற படங்களைத் திரையிட்டால் என்ன நடக்கும்?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எம்.ஜி.ஆர் போல் நல்ல கருத்துக்களை படத்தில் திணிக்க, பாடலாக கொண்டு வர, அதை மக்களை முணுமுணுக்க வைக்கும் சக்தி யாருக்காவது உண்டா?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உயர்ந்த தொழில்நுட்பங்களுடன் காரணமாக எல்லா இசைக்கருவிகளின் ஒலியும் மிகத்துல்லியமாக கேட்பதற்கு பிரம்மாண்டமாய் இருந்ததாம். ஆனால் இதை ஏற்க மறுத்த எம்.ஜி.ஆர், "இந்தப்பாடல் ஒரு சாதாரண ரேடியோவில் ஒலித்தால் எப்படியிருக்குமோ, அப்படியாக அமைத்து காட்டுங்கள். அப்போதும் நன்றாக இருந்தால்தான் இதை ஏற்பேன்" என்றிருக்கிறார்.//

ஜெண்டில் மேன் கால சூப்பர் ஹிட் பாடல்கள் இன்றய கிராம விஷேசங்களில் ஒலிப்பதில்லை.

லக்கிலுக் said...

சினிமா எம்.ஜி.ஆரை புடிக்காதா? உங்க கூட கா...

Anandkrish said...

sir ungaluku pandigai pidikathu, cinema pudikathu solringa apparam ungaluku vaalkaiyai virakthiya parpatharku than pidikuma.you are living your life with negative thought.
mgr pudikaathu sivaji pidikum ingringa. sivaji sirantha nadigarthan anal avarum thoppayoda ambika kooda duet padinavarthanye.

mgr naditha padngalil samuha akkarai irukkum. mgr avargal thannai paarthu entha rasiganum keda koodathu nu drinks and cigar kodipathilai.