Tuesday, November 04, 2008

உடைந்த சிறகுகள் (இஸ்ரேல் திரைப்படம்)

இப்ரூ (Hebrew) மொழியிலான இஸ்ரேல் நாட்டுத் திரைப்படம் (Broken Wings) ஒன்றை பார்த்தேன். (படம் வெளியான ஆண்டு 2002)

ஆதியில் தனித்தனியாக திரிந்த மனிதஇனம் காலப்போக்கில் சிலபல காரணங்களுக்காக, வசதிகளுக்காக திருமணம், குடும்பம் போன்ற நிறுவனங்களை ஏற்படுத்திக் கொண்டது. இன்று நாம் பல மூதாதையர்களைக் கொண்ட குடும்ப அமைப்பின் உறுப்பினர்கள்தான் என்றாலும் ஒவ்வொரு மனிதனும் தனித்தனி தீவுகளே. ஒருத்தருடைய தீவில் இன்னொரு நுழைய அல்லது கடக்க முயலும் போது இன்றைய எல்லைப்பிரச்சினைகளைப் போல் போர் வெடிக்கிறது. இவ்வாறான ஒரு குடும்ப உறுப்பினர்களின் அக ரீதியான சிக்கல்களை மிகவும் அழகியலுடனும் யதார்த்ததுடனும் வலுவாக நம் முன் வைக்கிறது இத்திரைப்படம்.

Photobucket

அந்தக் குடும்பத்தின் தலைவர் சமீபத்தில்தான் இறந்து போயிருக்கிறார். விதவையான Dafna-க்கு இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையிலான இயக்கத்தில் இருக்கின்றனர். படத்தின் பிரதான பாத்திரமான Maya ஆரம்பநிலை இசைக்குழுவின் திறமையான பாடகி, பாடலாசிரியை. தன்னுடைய சின்னஞ்சிறு சகோதரனையும், சகோதரியையும் தன் தலையில் கட்டிவிட்டு பணிக்குப் போகும் அம்மாவின் மீதான கோபத்தில் இருப்பவள். அவளுடைய இன்னொரு சகோதரன் பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டு தத்துவ ரீதியான சிந்தனைச் சிக்கலில் இருப்பவன். எல்லோரிடமும் you are not exist. you are dead என்பவன்.

Dafna மருத்துவமனையொன்றில் இரவுப்பணி புரிபவள். வீட்டையும் பணியையும் குழந்தைகளையும் ஒருசேர பார்த்துக் கொள்வதில் சலிப்புற்றிருப்பவள். சிறுவன் Ido-விற்கு உயரமான இடத்திலிருந்து குதித்து அதனை வீடியோ கருவி மூலம் பதிவு செய்து பார்ப்பதில் விருப்பம். Bahr அறியாச்சிறுமி. தான் படுக்கையில் சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் குழப்பத்தில் இருப்பவள். இவ்வாறாக எல்லோருமே மற்றவர்களின் மீது வெறுப்பும் சலிப்புமாக வாழ்கிறார்கள்.

()

இசைக்குழுவில் இருப்பவனின் மீதான ஊடலில் ஏற்படும் மனஅழுத்தம் காரணமாக தன் சக மாணவனைத் தேடிப் போய் உறவு கொள்ள முயல்கிறாள் Maya. இந்த நிகழ்வில் தன்னுடைய சகோதரியை கிண்டர் கார்டனிலிருந்து அழைத்து வரும் பொறுப்பை தவறவிடுகிறாள். அவளுடைய தத்துவச் சகோதரனும் இதே போன்றதொரு சூழ்நிலையில் இருக்கிறான். எனவே சிறுவன் Ido தன்னுடைய தங்கையை அழைத்து வர வேண்டா வெறுப்பாக செல்கிறான். இருவரும் திரும்பி வரும் போது தான் உயரத்திலிருந்து குதிப்பதை வீடியோ எடுக்கச் சொல்கிறான். ஆனால் தவறுதலாக கீழே விழுந்ததில் கோமா நிலைக்குச் சென்று விடுகிறான். இதனால் ஏற்படும் மனக்கசப்பில் தாய்க்கும் மகளுக்குமான உறவு மிக மோசமானதொரு சச்சரவின் மூலம் அறுபடுகிறது. Maya தன்னுடைய வீட்டை விட்டுப் புரிந்து போகிறாள். மருத்துவமனையிலிருக்கும் மகனை அருகிலிருந்து பார்த்துக் கொள்ளும் கடமை, சிறுமியின் பராமரிப்பு, நடுவே வீட்டைப் பிரிந்த 17 வயது மகளை தேடுதல் ஆகியவற்றினிடையே தவிக்கிறாள் Dafna.

Ido பிழைத்துக் கொண்டானா, Maya வீட்டிற்குத் திரும்பினாளா என்கிற உணர்ச்சிகரமான கேள்விகளுக்கு விடையாக திரைப்படத்தைப் பார்த்துக் கொள்ளுதல் நலம்.

()

பளுவைச் சுமக்கும் அந்த பொறுப்புள்ள குடும்பத்தலைவியாக Orly Zibershatz-Banai பிரமாதப்படுத்தியுள்ளார். "அப்பாவிற்கு பதில் நீ செத்துப் போயிருக்கலாம்" என்று வெறுப்பை கக்கும் பெண்ணை அறைவதும் பெண் பதிலுக்கு அறைவதில் உடைந்து போய் பலத்த மெளனத்தை எதிரொலிப்பதுமான அந்தக் காட்சி மிக உணர்ச்சிகரமாக அமைந்துள்ளது.

மாயா மற்றும் அவள் சக மாணவன் உறவு, அவளுடைய சகோதரன் அவனுடைய காதலியுடனான உறவு, கிண்டர் கார்டனில் காத்திருக்கும் சிறுமி, தாயின் கட்டாயத்தில் அவளை அழைத்து வர வெறுப்போது செல்லும் சிறுவன்... என்கிற இந்த நிகழ்வுகள் மிகத் திறமையாக அடுக்கடுக்கான காட்சிகள் மூலம் சொல்லப்படுகின்றன. சிறுவன் வீழ்ந்து கிடப்பதும் அவனுடைய சின்னஞ்சிறு தங்கை என்னவென்று புரியாமல் கொட்டும் மழையில் வீட்டுக்கு ஓடிவருவதும் மனம் பதைக்கும் வகையில் சொல்லப்பட்டிருக்கிறது.

43 வயதாகும் Dafna-வின் மனஅழுத்தமான சூழ்நிலையில் ஆறுதலாக இருக்கும் ஒரு சக மருத்துவருடனான நட்பும் மெலிதான காதலும் subtle-ஆக சொல்லப்பட்டிருக்கிறது. (ஒருவேளை இந்தப்படம் தமிழில் தயாரிக்கப்பட்டால் இந்தப்பகுதிகள் கலாச்சாரத்தின் புனிதம் கருதி நிச்சயம் வெட்டப்படும் என்பதில் சந்தேகமில்லை)

கற்பிதமாக இருந்தாலும் மானுடர்களுக்கிடையே கட்டமைக்கப்பட்டிருக்கும் உறவின் மகத்துவத்தையும் தேவையையும் மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குநர் Nir Bergman.

()

இஸ்ரேல் பிலிம் அகாதமியில் 9 விருதுகளும், பெர்லின் சர்வதேச விழாவில் சிறந்த பார்வையாளர் விருதையும், Toronto திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் தகுதியையும் கொண்ட இந்தப்படம் திரைப்பட பார்வையாளர்களின் மனதில் ஒரு அழுத்தமான தடத்தைப் பதிக்கும்.

suresh kannan

5 comments:

Senthil said...

me the firstu

good post

Senthil said...

please post more movie reviews

விலெகா said...

GOOD

மயிலாடுதுறை சிவா said...

நிச்சயம் இந்த படத்தை பார்க்க முயற்சிக்கிறேன்.

எப்படி படத்தை தேர்ந்தெடுக்கிறீர்கள்?

மயிலாடுதுறை சிவா...

Anonymous said...

என்னங்க இது, பொண்ணு யாரு கூடவோ படுத்துக்கறாங்கறீங்க. அண்ணன் காரனும் அதே மாதிரிங்கறீங்க. அம்மாவும் யாரையோ லவ் பண்றாங்கறீங்க. இந்த மாதிரிப் படம்தான் விருதுப்படமா? கஷ்டம்.