Saturday, November 15, 2008

மழையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பு

சந்திப்பு முடிந்து உடனே அலுவலகம் வரவேண்டியிருந்ததால் இந்தப் பதிவை எழுதச் சாத்தியமாயிற்று. இல்லையென்றால் திங்கட்கிழமைதான் எழுத முடிந்திருக்கும். முந்தைய பதிவில் கூறியிருந்தபடி சட்டக்கல்லூரி விவகாரம் குறித்து என்னுடைய புரிதலை இன்னும் விரிவாக்கிக் கொள்ளமென விரும்பியதால் அது குறித்து நடக்கவிருந்த வலைப்பதிவர் சந்திப்பிற்குச் சென்றிருந்தேன். யார் யார் வந்திருந்தார்கள், என்னென்ன சாப்பிட்டோம் என்ற சம்பிரதாயமான விஷயங்களை எழுத விரும்பவில்லை; அவகாசமுமில்லை.

நான் சென்ற போது ஏற்கெனவே குழுமியிருந்தவர்கள் (சுமார் 20 பேர்) இது குறித்து பேசிக் கொண்டிருந்தனர். ரவிஷங்கர் மற்றும் இராம.கி அருகில் அமர்ந்தேன். அப்போதே மழை தூறிக் கொண்டிருந்தது. எனவே எல்லோரும் எழுந்து அருகிலிருந்த மரத்தினடியில் கூடினோம். இது அருகிலிருந்த காவலர் துறையினரின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும். "பிரதான சாலையின் அருகே கும்பலாக நிற்காதீர்கள், கலைந்து செல்லுங்கள், அல்லது மணல்பரப்பிற்கு உள்ளே சென்று பேசுங்கள்" என்று அவர்கள் சொல்வதாக பாலபாரதி சொன்னதையடுத்து எல்லோரும் சற்று உள்ளே சென்றோம். அப்போதும் அங்கு வந்த காவல்துறை ஆய்வாளர் ஒருவர் "ஒன்றும் பிரச்சினையில்லையே?" என்று நட்பாக (?) கேட்டு விட்டுச் சென்றார்.

இந்தக் குழப்பத்தினால் பேச வேண்டிய பிரச்சினை குறித்தான இயல்பான தயக்கம் பொதுவாக எழுந்தது. தெளிவான குரலில் வளர்மதி பேசியதை மாத்திரம் சற்று சொல்ல விரும்புகிறேன். (ஏதேனும் கருத்துப்பிழை இருந்தால் வளர்மதியோ இதர நண்பர்களோ திருத்தலாம்). 1988கள் முதல் சட்டக்கல்லூரியில் அவர் இருந்ததையொட்டியும் அப்பிரச்சினையை அப்போதிலிருந்து தொடர்ச்சியாக அவதானித்தது குறித்ததுமான அனுபவத்தில் அவர் சொன்னது:

()

"தலித் மாணவர்களுக்கும் இதர பிரிவினருக்கும் குறிப்பாக தேவர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் முன்னரே பிரச்சினை இருந்து கொண்டிருந்தது. தேவர் ஜெயந்தி விழா போஸ்டரில் கல்லூரியின் பெயரை குறிப்பிடும் போது திட்டமிட்டே அம்பேத்கர் பெயரை விடுபடச் செய்ததினால் (இதுவே ஒரு தீண்டாமையின் குறியீடு) தலித் மாணவர்கள் கோபமாக இருந்தார்கள். தேர்வு நாளன்று காலை தேர்வு முடிந்தவுடன் வெளியே வந்த சித்திரைச் செல்வன் (?) என்ற தலித் மாணவரை தேவர் இன மாணவர்கள் கத்தியால் தாக்கியதில் அவர் காது அறுந்து போய் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இந்தச் சம்பவம் எந்த மீடியாவிலும் வெளியே வரவில்லை. அவரைச் சந்திக்க எந்த பத்திரிகையாளரும் அனுமதிக்கப்படவில்லை. இதற்கு எதிர்வினையாகத்தான் மாலையன்று தலித் மாணவர்கள் தேவர் இன மாணவர்களை சூழந்து தாக்கினார்கள். எனவே மீடியாக்களிலும் பொதுமக்களாலும் பெரிதும் பேசப்பட்ட இந்த சம்பவம் ஒரு reaction. மூல காரணமான action-ஐ பற்றி யாருக்குமே தெரியாது. எனவே அது குறித்து யாரும் பேசவில்லை. தலித் மாணவர்கள் வன்முறையாளர்கள் என்பதை நிறுவுவதற்காக இந்தச் சம்பவத்தை சில அரசியல் சக்திகள் (குறிப்பாக தேவர் பேரவை, சென்னையிலிருக்கும் தேவர் எம்.எல்.ஏ. ஒருவர்) பயன்படுத்திக் கொள்கின்றன.

பத்திரிகையும், பொதுமக்களும், பெரும்பான்மையான வலைப்பதிவர்களும் இப்பிரச்சினையை ஆழமாக அன்றி மேலோட்டமாக உடனே எதிர்வினையாற்றும் உணர்ச்சிப் பெருக்கோடு எழுதுகின்றனர். இது தவறு. ஒரு பிரச்சினை எழும் போது உடனே எதிர்வினையாற்றாதீர்கள். அது குறித்த பின்னணிகளையும் சற்று கவனித்துப் பாருங்கள்."

()

'கண்ணெதிரே நடந்த வன்முறையை தடுக்காமல் நின்றிருந்த காவல்துறையினரை'ப் பற்றி பதிவர் நர்சிம் கேள்வி எழுப்பினார். ஆனால் காவல்துறையினருக்கும் இருக்கும் சில நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் முன்னர் அனுபவங்களில் சட்டக்கல்லூரி பிரச்சினையில் தலையிட்டு அவர்கள் பிரச்சினையை எதிர்கொண்டதைப் பற்றியும் உரையாடல் தொடர்ந்தது.

"தலித் மாணவர்கள் குறித்து நீங்கள் சொன்ன பின்னணி சரி. ஆனால் அதையெல்லாம் சொல்லி இந்த வன்முறையை நீங்கள் நியாயப்படுத்த விரும்புகிறீர்களா? என்று நான் வளர்மதியிடம் கேள்வியெழுப்பிதற்கு "நிச்சயமாக இல்லை. ஆனால் வன்முறையை வன்முறையால்தான் எதிர்கொள்ள நேரிடுகிறது. இது தவிர்க்கவியலாதது" என்று பதில் சொன்னார்.

இந்தச் சம்பவம் குறித்து எழுதப்பட்ட சில பதிவுகளின் தலைப்புகளில் 'மிருகங்கள்' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டதை ஒரு நண்பர் ஆட்பேசித்தார்.

பின்னர் மழை சற்று பலமாக செய்ததால் வேறு வழியின்றி உரையாடலை தொடர இயலாமல் போயிற்று.

பின்னர் தனித்தனி குழுவாக உரையாடல் சிறிது நேரம் தொடர்ந்தது. காவல்துறையினருக்கு இருக்கும் சில கட்டுப்பாட்டு பயிற்சி குறித்தும் அதனை மீறினால் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் எனவே இவ்விஷயத்தில் பெரும்பாலோர் காவல்துறையினரை குறைகூறுவது சரியாகாது என்று பதிவர் கும்கி கூறினார்.

பின்னர் வளர்மதியிடமும் ஜோவ்ராம் சுந்தரிடமும் இன்ன பிற நண்பர்களிடமும் நிகழ்ந்த சொற்ப நேர உரையாடலோடு நான் விடைபெற்றேன்.

வளர்மதி சொன்ன சம்பவம் குறித்து (சித்திரைச் செல்வன் தேவர் இன மாணவர்களால் தாக்கப்பட்டது) ஏன் எந்த பத்திரிகையோ தலித் அமைப்போ இன்னும் வெளிவரச் செய்யவில்லை என்றும் குழப்பத்தோடும் நான் அலுவலகம் வந்தடைந்து இதனை எழுதிக் கொண்டிருக்கிறேன். இது குறித்து இன்னும் நிறைய உரையாடவும் சிந்திக்கவும் வேண்டியிருக்கிறது என்பது மாத்திரம் புரிந்தது.

இதர வலைப்பதிவு நண்பர்கள் இந்தச் சந்திப்பை இன்னும் விரிவாகவும் சுவாரசியமாகவும் எழுதுவார்கள் என்று நம்புகிறேன். பதிவர் சந்திப்பு இனிமையாக நிறைவுற்றது என்று சம்பிரதாயமாக சொல்லமுடியாமல் மழை தன் கடமையைச் செய்தது.

(அவசரத்தில் எழுதுவதால் முழுமை பெறாத பதிவிது என்று எனக்கே புரிகிறது. என்றாலும் இந்தச் சந்திப்பைப் பற்றி முதலில் எழுதினேன் என்ற அசட்டுப் பெருமையை பெற விரும்பியதால் இதை தவிர்க்க முடியவில்லை. :-)

suresh kannan

19 comments:

குப்பன்.யாஹூ said...

தா பாண்டியன் சொல்வது போல நாங்கள் இந்த வ்யாக்கியானங்களை கேட்க வில்லை.

வன்முறை செய்பவர்களை காவல் துறை ஏன் விலக்க வில்லை (காவல் துறை தண்டிக்க கூட செய்ய வேண்டாம், ). இன்று பதிவர்களிடம் மென்மையாக பேசிய காவலர்கள் சட்ட கல்லூரி வன்முறையாளர்களிடம் மென்மையாகவோ /கடுமையாகவோ பேசி சண்டையை முறியடித்து இருக்கலாம் என்பதே எங்கள் கருத்து.

மழை வந்ததால் தங்கமணியை அழைத்து வர வேண்டிய கடமை இருந்ததால் நான் பாதியில் ஜூட் ஆகிவிட்டேன்.

குப்பன்_யாஹூ

சென்ஷி said...

நிகழ்வின் பின்னணி குறித்த தகவலுக்கு நன்றி..!

எட்வின் said...

Reaction கு காரணமான action ஐ சுட்டிக்காட்டியதற்கு நன்றி

Anonymous said...

காவிரிப் பிரச்சனையத் தீர்த்து வைத்தவரும் எங்கள் கலைஞர்தான், அதற்கு வெற்றி விழாவும் நாங்கள் தான் எடுத்தோம்.
ஈழப் பிரச்சனையையும் அவர்தான் தீர்த்தார்.
சட்டக் கல்லூரிப் பிச்ச்சனையும் தீர்த்து வைக்கிறார். விசாரணைக் கமிஷன் அறிக்கை வந்தவுடன், கலைவாணர் அரங்கில் தலைவர் முத்தமிழ் வித்தவர் கலைஞருக்கு பாராட்டு விழா கொண்டாடப்படும்.

Anonymous said...

சட்டக்கல்லூரி மாணவர்கள் சண்டை பற்றிய தெருவுக்கு இறங்கிச் செய்த மிகச்சிறந்த பதிவர்புரட்சி.

Dr.Rudhran said...

sorry.. since i was already running a high temperature i did not venture into the rain.
by the way though many journalists know about chiraislevan episode, no one is talking about it. this is a sad and dangerous state.

Anonymous said...

இனிமேல் மாணவர்களில் நடக்கும் வன்முறையில் போலிசார் தலையிட முடியும். யாரும் போலிஸ் அராஜகம் என்று சொல்ல மாட்டார்கள்

Anonymous said...

//பத்திரிகையும், பொதுமக்களும், பெரும்பான்மையான வலைப்பதிவர்களும் இப்பிரச்சினையை ஆழமாக அன்றி மேலோட்டமாக உடனே எதிர்வினையாற்றும் உணர்ச்சிப் பெருக்கோடு எழுதுகின்றனர். இது தவறு. ஒரு பிரச்சினை எழும் போது உடனே எதிர்வினையாற்றாதீர்கள். அது குறித்த பின்னணிகளையும் சற்று கவனித்துப் பாருங்கள்."//

சரியான கருத்து. அதுக்கு முன்னாடி என்ன நடந்தது எது தூண்டியது என்பதைப் பார்க்க வேண்டும்.

Sridhar V said...

இதன் பின்னனி நான் ஒருவகையில் அனுமானித்திருந்ததுதான்.

முதல் சம்பவம் ரிப்போர்டிங் ஆகியிருக்க வேண்டும். இரண்டாம் சம்பவம் எல்லா டிவிக்களிலும் மீண்டும் மீண்டும் வெளியிடப்பட்டதற்கு முக்கிய காரணம் அது வீடியோவாக பதியப்பட்டது என்றுதான் நினைக்கிறேன்.

எல்லா செய்திகளிலுமே 'ஒரு தரப்பினர் இன்ன்னொரு தரப்பினரை' தாக்கியதாகத்தான் அந்த காட்சியை ஒளிபரப்பினார்கள். அந்த காட்சியினைப் பார்த்தபோது இன்ன சாதியினர் இன்ன சாதியினரை அடித்ததார்கள் என்றெல்லாம் தோன்றவில்லை. அந்த செயலின் மிருகத்தன்மையினால் ஏற்பட்டது. இதுவே பெரும்பான்மையினரின் வெளிப்பாடாக அமைந்திருந்தது.

முதல் வன்முறை நிகழ்ச்சியும் படம்பிடிக்கப்பட்டு அது மீடியாக்களில் வெளியிடப்படாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்தால் அதுவும் கண்டனத்திற்குரிய செயலே.

இதோடு எழும் ஒரு துணைக் கேள்வி - எப்படி இந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பத்திரிகையாளர்கள் படமெடுக்கிறார்கள்? காமெராவை கீழேப் போட்டுவிட்டு ஓடிப் போய் காப்பாற்றத் தோன்றாதா? :((

பரிசல்காரன் said...

விரிவான பதிவிற்கு வாழ்த்துக்கள்!

Anonymous said...

ரொம்ப சரி,
தலித் மாணவர்களை மிருகங்கள் என்று எழுதியதை ஆட்சேபிப்பவர்கள் பிராமணர்களை வாயில் வந்த மோசமான தரம்தாழ்ந்த வசவுச் சொற்களால் அர்ச்சிப்பதை ஆட்சேபிக்கிறார்களா?

Anonymous said...

டோண்டு ஐயாவின் பதிவில் போடப் பட்ட பின்னூட்டம்.


நேற்றைய ,இன்றைய ,நாளய ஜாதிய மோதல்கள்,அத்துமீறல்கள்,பெரியண்ணத் தனங்கள் இவைகளை ஒழிக்க வேண்டு மென்றால் மாவட்டங்களில்,போக்குவரத்துக் கழகங்களில் பேர்களை எல்லோரும் ஏற்கும் வகையில் எளிய மூறையில் மாற்றியது போல் கடுமையான சட்டங்கள் எதிர் கால அரசியல் லாபம் கருதாமல் செயலாக்கினால் நல்லது.


தென் மாவட்டங்களில் இந்த மோதல் வாடிக்கை யான நிகழ்ச்சி.

அரசியல் தலைவர்களும்,பத்திரிக்கை யாளர்களும் நிகழ்ச்சியில் நடை பெற்ற முழு சம்பவத்தில் தான் சார்ந்த ஜாதியை காப்பாற்றும் முயற்சியே நடை பெற்றுவருவது சரியில்லை


இன்றைய உண்மை நிலவரம் யாரும் பேசத் தயராயில்லை.

ஆங்கிலேயர் நம்மை ஆண்ட காலத்திலும்,அதற்கு முன்னரும் ஜாதிகள் அவர்கள் பார்த்த தொழில் மூலம் ஏற்பட்டதாய் சரித்திரம் சொல்கிறது.

அது சமயம் முற்பட்ட் சமுகத்தினர் பிற ஜாதியினரை கொடுமைகள் செய்ததாகவும் ஒரு சில அரசியல் தலைவர்கள் ( இந்தப் சீரமைப்புப் பணியை தொடங்கி வைத்தது முன்னேறிய வகுப்புத் தலைவர்களும் உண்டு என்பர்)பிரச்சாரம் செய்து இன்றய சிறப்பு நிலைக்கு காரணம் என்பது மறுக்க முடியா உண்மை.

அரசியல் கட்சிகளின் ஜாதிக் கணக்கீட்டு முறையில் தேர்தலை சந்திப்பது,வெற்றி பெற்ற பின்னர் ஜாதி விகிதாச்சார அடிப்படையில் அமைச்சர்களை நியமிப்பது, ஒட்டுக்களை பெறவேண்டும் என தேசியத் தலைவர்களாம் அருள் கடல் பசும்பொன் மு.ராமலிங்கம்,கல்விக் கண் கொடுத்த காமராஜ், விடுதலை விரர் வ.உ.சி,போன்ற பெரியவர்களை ஒரு ஜாதி( அவரவர்) சங்குக்குள் அடைத்து, நவீன அகத்தியானாய் மாற முயற்சிப்பது சரியில்லை

பேர்களில் ஜாதி எனும் வால் இல்லை
தெருக்களில் ஜாதி எனும் கொம்பு இல்லை
மாவட்டங்களில் ஜாதி எனும் முள்கிரீடம்
இல்லைஆனால் மக்கள் மனதில்,உள்ளத்தில்,சிந்தனையில்,எண்ணத்தில்,கருத்தில்,செயலில்,எழுத்தில்,படிப்பில்,படைப்பில்,குருதியில்,நாடியில்,நரம்பில்,அனைத்து செல்களிலும்

ஒய்யாரச் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கும்
ஜாதி எனும் அரக்க சுபாவத்தை முழுமையாய்
அகற்றிடும் நாள் வந்திடவேண்டும் எனும் புனித வேள்வி தொடங்கட்டுமே.

ஒன்றே குலம்
ஒருவனேதேவன்

உண்மையாய் மாறட்டுமே!

ஆட்காட்டி said...

கதை இப்படிப் போகுதா?

ஆட்காட்டி said...

சித்திரை செல்வன் கைது?

அத்திரி said...

சித்திரைச் செல்வனை பற்றிய செய்திகள் வராதது குறித்து எனக்கும் குழப்பம் தான் மிஞ்சியது.

ஆக்சன் ரீயாக்சன் நல்ல வரிகள்.

Unknown said...

:-))
நேரமின்மை..
மன்னிக்கவும்.

வளர்மதி said...

பதிவு செய்தமைக்கு நன்றிகள் சுரேஷ் கண்ணன்.

பிச்சைப்பாத்திரம் said...

//ரொம்ப சரி,
தலித் மாணவர்களை மிருகங்கள் என்று எழுதியதை ஆட்சேபிப்பவர்கள்//

நான் தெளிவுபட எழுதாததால் வந்த குழப்பமிது என்று நினைக்கிறேன்.

"மிருகங்களை மனிதர்களோடு ஒப்பிட்டு மிருகங்களை கேவலப்படுத்தாதீர்கள். அவைகள் இயற்கை நியதிகளோடு வாழ்கின்றன."

இதுதான் அந்த நண்பர் சொன்னதாக நான் புரிந்து கொண்டது.

Unknown said...

புலி பசிக்கு மானை அடித்து தின்னுமே தவிர தன் இனத்தை சார்ந்த இன்னொரு புலியை அடித்து சாப்பிடாது.எனவே மனிதர்களை மிருகங்களோடு ஒப்பிட்டு மிருகங்களை கேவலப்படுத்துவதை ஏற்கமுடியாது.
சொன்னது:அக்னிப்பார்வை