Friday, July 05, 2019

பிக்பாஸ் சீஸன்3 – நாள் 11 – “சட்டை கூட கிழியாம என்னத்த சண்டை இது”



நேற்று நிகழ்ந்த சண்டைகளின் சூட்டிலிருந்து இன்று நம்மை மீட்டது ‘அவ்வை சண்முகி’ டாஸ்க்தான். ஆண் போட்டியாளர்கள் போட்டிருந்த பெண் வேடங்கள் சிரிக்க வைத்தன. வனிதாவை நகலெடுத்த தர்ஷன் ஓவர்ஆக்ட் செய்தாலும் கலக்கல் ரகம். சாண்டி ஏற்கெனவே பயங்கர குறும்பு செய்வார். இப்போது மீராவைப் போல சேஷ்டைகள் செய்து சிரிக்க வைத்தார். ‘முகின் போட்டிருப்பது அபிராமி வேடம்’ என்று யாரோ சொல்லித்தான் தெரிந்தது.

கவின் போட்டிருந்த டிரஸ் ஷெரீனுக்கே கேவலமாகத்தான் இருக்கும். கவினுக்கு இன்னமும் மோசமாக இருந்தது. சென்சார் செய்யப்பட வேண்டிய ரகம். பெண்களை சிரிக்க வைப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார் போல. சரவணனின் ஒப்பனை போதுமான அளவு இல்லையென்றாலும் பாத்திமா பாபுவை இமிடேட் செய்தார். சேரன் பிக்பாஸிடம் ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி விட்டாரோ, என்னமோ.. இதில் கலந்து கொள்ளவில்லை. அப்படியே அவர் பெண் வேடமிட்டிருந்தாலும் நம்மால்தான் பார்த்திருக்க முடியாது.

‘ஒரு ஆண் நடிகர், பெண் வேடமிட்டு நடிக்கும் போது ஏன் திருநங்கைகளை மலினமாக இமிடேட் செய்ய முயல்கிறார்கள்? பெண்ணைப் போலத்தானே நடிக்க வேண்டும்? – இது ஒரு திருநங்கையால் கேட்கப்பட்ட கேள்வி. எத்தனை முக்கியமானது என்று யோசித்துப் பாருங்கள்.

இதற்கு முன் என்னவெல்லாம் நிகழ்ந்தன? பார்ப்போம்.

**

சேரனுக்கும் வனிதாவிற்குமான உரசல்கள் மெல்ல சூடு பிடிக்கத் துவங்கியிருக்கின்றன. மறைமுகமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த விஷயம் என்று வெடிக்குமோ என்று தெரியவில்லை. வனிதா ஒருவரையும் பாக்கி வைக்க மாட்டார் போலிருக்கிறது.

“ஏன்யா மிக்சர் சாப்பிட்டுட்டு உக்கார்ந்திருக்கீரு?” என்று வெளியே பேசிக் கொள்வது மோகன் வைத்யாவின் காதில் கேட்டு விட்டதோ, என்னமோ. சபையை அழைத்து, முகத்தை டெரராக வைத்துக் கொண்டு ‘நான்தான் கேப்டன். நான் சொல்றதைக் கேட்கணும்” என்று சொன்னாலும் யாரும் சீரியஸாக எடுத்துக் கொண்டது போல் தெரியவில்லை. அதிலும் வனிதா ‘போய்யா டுபுக்கு’ என்று மனதில் நினைத்திருக்கக்கூடும்.

கவின் லாஸ்லியா மற்றும் சாக்ஷியிடம் அமர்ந்து கடலை போட்டுக் கொண்டிருந்தார். அவர் என்னதான் பிராக்கெட் போட்டாலும் அதிலிருந்து அநாயசமாக எஸ்கேப் ஆகிக் கொண்டிருந்தார் லாஸ்லியா. (ஹே.. ஹே.. என் ஸ்வப்னா புத்திசாலிடா.. அவளை யாரும் ஏமாத்த முடியாது!).

**

11-ம் நாள் விடிந்தது. லாஸ்லியாவின் நடனம் ஏறத்தாழ ஒரே மாதிரி இருக்கிறது. கண்ணைச் சிமிட்டும் பாவனையில் ஒரே மாதிரியான உடல்மொழி. இதே ஓவியாக இருந்திருந்தால் பாடலுக்கேற்ப விதம் விதமாக நடனமாடியிருப்பார் என்பதை நினைவுகூராமல் இருக்க முடியவில்லை.

சாக்ஷியின் ஆடையை முகின் பாராட்டினாராம். இதனால் கவின் அப்செட் ஆயிட்டாராம். பொஸஸிவ்னஸ்ஸாம். சாக்ஷியும் ஷெரீனும் அமர்ந்து குசுகுசுத்துக் கொண்டிருந்தார்கள். ‘அபிராமி கிட்ட சொல்லிடு’ என்பது போல் ஷெரீன் உபதேசம் செய்து கொண்டிருந்தார். மேட்டர் என்னவென்று சரியாகப் புரியவில்லை. சாக்ஷி கவின் பக்கம் விழுகிறாரா?

வனிதாவை வாக்குமூல அறைக்கு கூப்பிட்டார் பிக்பாஸ். இந்த விஷயம் ஏற்கெனவே ஊடகங்களில் பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருந்ததுதான். வனிதாவின் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக போலீஸ் அவரிடம் விசாரணை செய்ய வந்தது என்கிறார்கள். ஆனால் இது பிக்பாஸிற்கான விளம்பரம் என்றும் பேசப்பட்டது. இது தொடர்பான காட்சிகளை இணைத்து பரபரப்பு ஏற்படுத்தி பிக்பாஸ் டீம் பயன்படுத்திக் கொள்ளும் என்று நானும் எதிர்பார்த்தேன். வணிகவெற்றிக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்றாகி விட்ட காலமாயிற்றே! கன்னட பிக்பாஸில் இப்படி நிகழ்ந்ததாக கூறுகிறார்கள். நல்லவேளை, இதில் அப்படி நடக்கவில்லை. தமிழ் கலாசாரம் காப்பாற்றப்பட்டது.

இந்த சம்பிரதாயத்தை முடித்து விட்ட வந்த வனிதாவிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை. வழக்கம் போலவே ‘ரவுடி பேபி’யாக சுற்றிக் கொண்டிருந்தார். (பேபி என்று சொன்னதற்கு ஸாரி). ஒரு சராசரி நபராக இருந்தால் போலீஸ் விசாரணை அது இது என்றால் சற்று அப்செட் ஆகியிருப்பார்கள். அம்மணி இதற்கெல்லாம் அசரவில்லை.

‘பாத்திரம் கழுவும் அணியில் கவினும் சாக்ஷியும் மட்டுமே அதிக நேரம் வேலை செய்கிறார்களே’ என்பது போல் பாத்திமாவும் சேரனும் விசாரித்திருக்கிறார்கள் போலிருக்கிறது. அங்கு வேலை செய்யாமல் டபாய்த்துக் கொண்டிருந்த வனிதாவிற்கு இதனால் கோபம் வந்து விட்டது. “நான் இந்த டீமோட லீடர். எதுவாக இருந்தாலும் என் கிட்டதான் பேசணும்” என்று சாமியாடிக் கொண்டிருந்தார். எம்.எல்.ஏ போஸ்ட்டில் இருந்து கீழிறங்கி கவுன்சிலர் ஆனாலும் ‘சி.எம்’மிற்கான கெத்து குறையாமல் பார்த்துக் கொள்கிறார் வனிதா.

**

‘என்னத்த சண்டை இது. அடிதடி நடந்துருக்கும்னு எதிர்பார்த்தேன். ஒரு சின்ன ரத்த காயம் கூட இல்ல” என்று சாண்டி நேற்றைய சண்டையை கலாய்த்துக் கொண்டிருந்தார். (‘என் இனமடா நீ!” என்று பிக்பாஸ் மகிழ்ந்திருப்பார்). மீராவை நோக்கி எய்யப்பட்ட ஆயுதத்தில் எப்படி வீம்பாக மதுமிதா வந்து மாட்டிக் கொண்டார் என்பதை அவர் நகைச்சுவையாக விவரித்தது சுவாரஸ்யம். ஒரு தீவிரமான சண்டையை நகைச்சுவையின் மூலம் எத்தனை அற்பமானதாக மாற்றி விட முடியும் என்பதற்கு சாண்டியின் பேச்சு உதாரணம்.

‘அன்னப்பறவைகள்’ டீமிற்கான டாஸ்க் வந்தது. மீராவும் சாண்டியும் அதற்கு கிளம்பினார்கள்.. ‘மீரா ஏற்கெனவே சென்றிருக்கிறாரே’ என்று வனிதா ஆட்சேபித்தார். அதனால் மீரா அமர்ந்து விட மதுமிதாவும் சாண்டியும் சென்றார்கள். அங்கு சென்று பார்த்தால் சாணியில் நாணயங்களைத் தேடும் டாஸ்க். இதனால் மீரா பயங்கர எஸ்கேப். எதிரிகள் கூட தன்னையும் அறியாமல் நமக்கு நன்மை செய்து விடுவார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

அபிராமி அண்ட் கோ பேசிக் கொண்டிருக்கும் போது லாஸ்லியா அங்கிருந்து சட்டென்று விலகி விட்டாராம். இது குறித்த பஞ்சாயத்து ரொம்ப நேரமாக ஓடிக் கொண்டிருந்தது. பேசாமல் பெண்கள் பாத்ரூம் அருகே கவினுக்கு ஒரு நாற்காலியைப் போட்டு வைத்து விடலாம். மனிதர் பெரும்பாலும் அந்த இடத்தில்தான் உலவிக் கொண்டிருக்கிறார்.

அப்புறம் பார்த்தால் அபிராமி அண்ட் கோவின் இந்த விஷயம் உண்மையில்லையாம். தம்முடைய ரகசியங்கள் எவ்வாறு வெளியே போகின்றன என்பதைக் கண்டுபிடிப்பதற்காக நடந்த நாடகமாம். பெரிய அணுகுண்டு ரகசியம்.. போங்கய்யா… 

அபிராமி அண்ட் கோ பேசும் வம்புகள் லாஸ்லியாவின் வழியாக எதிர் டீமிற்கு செல்கிறதோ என்று சந்தேகப்படுகிறார்கள் போலிருக்கிறது. கவினின் வழிசலால் இவர்களின் மொக்கையான யுத்தி ‘பணால்’ ஆகி விட்டது. சமாதானம் பேசுகிறேன் என்கிற பெயரில் இடையில் புகுந்து ஆட்டத்தைக் கலைத்து விட்டார் கவின்.

இரவு. ‘வெண்ணிலவே.. வெண்ணிலவே.. விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற பாடலுக்கு சாண்டியின் வழிகாட்டுதலில் நடனம் ஆடிக் கொண்டிருந்தார்கள். ‘விளையாட ஜோடி தேவை’ என்ற பாடலுக்கு ஜோடியில்லாமல் தனியாக ஆடிக் கொண்டிருந்தார் மீரா.
suresh kannan

1 comment:

malar said...

சாண்டியை பிடித்துபோகிறது இப்போதெல்லாம் .அந்த ரணகளத்தில் ஒரே ஒரு ஆறுதல் இவர்தான் .
ஒரு மிக்ஸர் தட்டு மட்டுமில்லை ரெண்டு மிக்ஸர் தட்டு அங்கிருக்கு ஒன்று இவ்வார தலைவர் இன்னொன்று சும்மாவானும் ஒப்புக்குச்சப்பாவாக இருக்கும் லொஸ்லியா .
இவர் இன்னொரு பிந்துவாக கடைசி வரையில் இருப்பார் என்று நினைக்கின்றேன் சரவணன் சிலவேளை கமலிடம் குட்டு வாங்கக்கூடும் . அந்த முக்கியமான காட்சியை விட்டுட்டீங்க மது மோகன் வைத்யாவை இமிடேட் செய்தது .