Tuesday, July 02, 2019

பிக்பாஸ் சீஸன்3 – நாள் 9 – “நீ ரசத்த ஊத்து” – கவினின் ரொமாண்டிக் அலப்பறைகள்”



பிக்பாஸ் வீட்டில், காயத்ரிக்கு ஒரு ஜூலி இருந்தது போல, வனிதாவிற்கு ஒரு வலதுகையாக தன் பயணத்தைத் துவக்கினார் மதுமிதா. ஆனால் காலம் செய்த கோலம் அவர்களை எப்படியோ பகைவர்களாக்கி விட்டது. இரண்டு ஆடுகளும் மந்தையிலிருந்து பிரிந்து விட்டன.

மதுமிதாவிற்கு சுயமுன்னேற்றத்தைப் பற்றி பிரசங்கம் செய்யச் சொல்லி காலையிலேயே தன் கலகத்தை துவக்கி வைத்தார் பிக்பாஸ். அது சரியாகவே வேலை செய்தது. அதுவரை மைண்ட் வாய்ஸை உரத்த குரலில் புலம்பிக் கொண்டிருந்த மதுமிதாவிற்கு வெளிப்படையாக கொட்டித் தீர்க்க ஒரு நல்ல  வாய்ப்பு.

‘நான் ஒரு தமிழ்ப்பொண்ணு’ என்பதையே வேறு மோடில் கதையாக சொல்லத் துவங்கினார் மதுமிதா. ‘நான் வாய்ப்பு கேட்டு யாரிடமும் போனதில்லை. (“சதிலீலாவதி பார்ட் -2 உங்க கூட நடிக்கணும் கமல் சார்”) பார்ட்டிக்கு போனதில்லை. ஆடியோ லாஞ்ச் போனதில்லை. ஒரு பொண்ணைக் கூட கட்டிப்பிடிச்சதில்லை. எங்களுக்கு இதெல்லாம் தெரியாது” என்றெல்லாம் நீட்டி முழக்க.. “விஷயத்துக்கு வா” அவரைக் கட் செய்தார் வனிதா. மதுமிதாவின் பேச்சு சிலரை எரிச்சலூட்டியது. ‘அவங்க பேசி முடிக்கட்டும்’ என்று வேறு சிலர் ஒப்புக்கு சமாதானம் செய்தனர்.

“என்னவோ இவ மட்டுமே ஒழுங்கு. மத்தவங்கள்லாம் தப்பு’-ன்ற மாதிரியே பேசறாளே” என்று வனிதா உள்ளிட்ட சிலர் புகார் சொன்ன வகையில்தான் மதுமிதாவின் உரையாடல் திசை அமைந்திருந்தது. “என்னை முடிக்கவே விடலையே?” என்ற மதுமிதாவின் ஆதங்கத்தில் ஒருவேளை உண்மையிருக்கலாம். ஆனால் அவர் உரையாடலை எடுத்துச் சென்ற விதம்..”நான்லாம் ஒழுங்குப்பா” என்ற வகையிலேயே நீண்ட நேரம் சென்று கொண்டிருந்தது. இதுவே மற்றவர்களை எரிச்சல் அடையச் செய்திருக்க வேண்டும்.

மாறாக அவர் என்ன செய்திருக்கலாம்… “சினிமாவில் அட்ஜட்ஸ் செய்தால்தான் வாய்ப்பு என்பது போல வெளியில் ஒரு பேச்சு அடிபடுகிறது. மக்களும் அதை நம்புகிறார்கள். அது உண்மையா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. திறமை மட்டுமே இருந்தால் போதும். வெற்றி பெறலாம். அதற்கு நானே உதாரணம்” என்பது போல் சொல்லியிருந்தால் உண்மையிலேயே அது சுயமுன்னேற்ற பேச்சாக அமைந்திருக்கக்கூடும்.

என்றாலும் மதுமிதாவை பேச விடாமல் வனிதா தொடர்ந்து இடையூறு அளித்துக் கொண்டிருந்தது, சற்று எரிச்சலை அடையச் செய்தது.

தொடர்ந்து இது குறித்து வனிதாவும் மதுமிதாவும் பிறகு காரசாரமாக பேசிக் கொண்டேயிருந்தார்கள். இனியும் தனியே புலம்பிக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என்று களத்தில் இறங்கி அடித்து ஆடினார் மதுமிதா. ‘ஜாங்ரி.. பூங்க்ரி…” இப்படி “ஆங்க்ரி பேர்ட்” ஆக மாறி விட்டது.

“நீங்க ஷட்அப் பண்ணுங்க” என்பது பிக்பாஸ் வீட்டின் குல வழக்கமோ என்னமோ. அதையே சொல்லி இருவரும் சண்டையிட்டுக் கொண்டார்கள்.

**

பிக்பாஸ் வீட்டில் என்ன கலவரம் நடந்தாலும் சரி, தன்னுடைய சிலபஸை கறாராக பின்பற்றுவதில் கண்ணுங்கருத்துமாக இருக்கிறார் கவின். “நீ ரசத்த ஊத்து.. அதுல பூனை இருக்குதா… பார்க்கலாம்” என்கிற காமெடி மாதிரி ஒரு பக்கம் வீடே பற்றி எரிந்தாலும், பெண்களைச் சுற்றி வந்து தன் ரோமியோத்தனத்தைப் பின்பற்றுவதில் குறியாக இருக்கிறார். ‘லாஸ்லியா.. என்னைப் பாக்குறியா..” என்பது மாதிரி இவர் பாடியதை லொஸ்லியா ரசித்து சிரித்தது மாதிரிதான் தெரிகிறது. ‘பயபுள்ள கரெக்ட் பண்ணிடுவான்னோ’ என்கிற பீதி அடிக்கடி வந்து போகிறது. லாஸ்லியா ஆர்மியும் பல்லைக் கடித்து டென்ஷன் ஆகியிருப்பார்கள். கவினுக்கு டஃப் பைட் தர வேண்டிய முகின் பயல்  வேறு எங்கோ தலைமறைவாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

**

ரோபோ சங்கர் மாதிரியான ஒரு புஷ்டியான ஆளை வண்டியில் வைத்து சில நிமிடங்களுக்கு நிமிர்த்தி பிடிக்க வேண்டுமாம். இது வனிதாவிற்கு தரப்பட்ட டாஸ்க். சபாஷ், சரியான போட்டி. வந்திருந்த பீம்பாய், வனிதாவின் மூத்த சகோதரன் சைஸில் இருந்தார். முதலில் சிரமப்பட்ட வனிதா பின்பு எப்படியோ சமாளித்து வெற்றி பெற்று பத்து டஜன் வாழைப்பழங்களை பரிசாகப் பெற்றார். கிராமத்து ஆள் ஸ்டைலில் அதை அழகாக தூக்கிச் சென்றார் சேரன்.

துண்டு துண்டாக தரப்பட்டிருக்கும் கமல்ஹாசனின் படத்தை தர்ஷனும் சாக்ஷியும் இணைந்து ஒட்ட வேண்டும். இதற்கான டாஸ்க் லெட்டரை படிக்க மீராவை அனுப்பியிருந்தார்கள். அம்மணி இவர்களை உற்சாகப்படுத்தியதெல்லாம் சரிதான். ஆனால் அது ஓவர் டோஸாக போய் விட்டது. “டேய் கீழ முதலை இருக்குடா… பாத்து வா..இங்க இல்லடா.. அங்கடா..”என்று ஆற்றைக் கடக்கும் வடிவேலுவிடம் ஒருவர் கத்துவார். “நீ கத்தறதை முதல்ல நிப்பாட்டுடா. அதுதான் பீதியா இருக்கு” என்று பதிலுக்கு பதறுவார் வடிவேலு. மீராவின் உற்சாகப்படுத்துதல் இந்தக் காமெடியாகத்தான் இருந்தது.

இதைக் கவின் சுட்டிக் காட்ட மீராவிற்கும் கவினிற்கும் முட்டிக் கொண்டது. பயபுள்ள தனது டோக்கன் லிஸ்ட்டில் மீராவை மட்டும் ஏன் தவிர்க்கிறார் என்று தெரியவில்லை. இது சார்ந்த வாக்குவாதத்தில் எரிச்சலான மீரா.. ‘கொஞ்சம் நேரம் சும்மா இருங்க” என்று பொதுவாக கத்தி விட, அதனால் டென்ஷன் ஆனார் மோகன் வைத்யா. (பின்னே.. புது தலைவர் இல்லையா? கெத்து காட்ட வேண்டாமா?!) ‘வயசுக்கு கூட மரியாதை தர்ற மாட்டேன்ற. சும்மா இரு” என்று கத்த அமைதியானார் மீரா. ஆனால் அது அழுகைப் புயலுக்கு முன்னால் இருந்த அமைதி.

“நீங்க இன்னொரு மோகன் வைத்யாவை இந்த வீட்ல பார்ப்பீங்க” என்று நிகழ்ச்சியின் துவக்க நாளன்று சொன்னார் அவரது சகோதரர் ராஜேஷ் வைத்யா. இந்தக் கோபக்கார முகம்தான் அது போலிருக்கிறது. பிறகு தன்னிடம் சமாதானம் பேச வந்த மீராவின் கன்னத்தில் முத்தமிட்டு பிரச்சினையை முடித்து வைத்தார் மோகன். (ஒருவேளை இதுதான் அந்த வித்தியாச முகமா?!)

**

“என்னை சில பேர் இங்க பிளான் பண்ணி டார்கெட் பண்றாங்க” என்று மீரா தொடர்ந்து புலம்பியது எரிச்சல். மதுமிதாவின் இடத்தை இப்போது இவர் எடுத்துக் கொண்டார். அழகிப் போட்டிகளில் வென்ற, அதை பலருக்கும் பயிற்றுவித்த ஒரு சாதனையாளர் எத்தனை கம்பீரமாகவும் சமயோசிதமாகவும் இருக்க வேண்டும்?! மாறாக “என்னிடம் இப்படி யாரும் கத்திப் பேசியதில்லை” என்றெல்லாம் சொல்லியது வேடிக்கை. பிக்பாஸ் வீட்டை விடவும் வெளியுலகம் இன்னமும் கர்ண கடூரமாகத்தானே உள்ளது?! அல்லது மீராவிற்கு மட்டும் அமைதிப்பூங்காவாக இருக்கிறதா என்று தெரியவில்லை.

தன்னிடம் புலம்பிக் கொண்டிருந்த மீராவிடம் லாஸ்லியா செய்த உபதேசத்தில் இருந்த முதிர்ச்சி சிறப்பானது. “இங்க யாரும் யாருக்கும் க்ளோஸ் இல்ல. இங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரிதான் இருப்பாங்க. இது ஒரு கேம் ஷோ” என்றெல்லாம் சொன்னதில் உள்ள யதார்த்தம் மீராவிற்கு புரியவில்லை. ‘அப்ப நான் நடிக்கணுமா..கோப்பால்” என்றே பாவனை செய்து கொண்டிருந்தார்.

தன்னுடைய நண்பர்கள் பட்டியல் சுருங்கிக் கொண்டேயிருப்பதால் மீரா பாதுகாப்பற்ற உணர்ச்சியை அடைந்திருக்க வேண்டும். எனவே முகின் ராவை கூப்பிட்டு வம்படியாக சமாதானம் பேசினார். “இருக்கிற இடம் தெரியாம சூதானமா இருக்கணும்” என்கிற பாலிசியை சிறப்பாக கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் முகின் மீராவின் அழைப்பில் சற்று ‘ஜெர்க்’ ஆனாலும் பின்பு உரையாட வந்தார்.

இவர்களின் உரையாடலை சாக்ஷியின் வழியாக மோப்பம் பிடித்த வனிதா அண்ட் கோ “பாருடி.. கதை கேளேன்” என்று தங்களின் வம்பை சிறப்பாக துவக்கினார்கள். சம்பந்தமேயில்லாமல் அபிராமியும் எதற்கோ டென்ஷன் ஆனார்.

தன்னிடம் சமாதானம் பேச வந்த கவினிடம், “நீ எதுக்கு இந்த மாதிரியெல்லாம் பண்றேன்னு எனக்குத் தெரியும்” என்று மீரா சொன்னது சிறப்பு. அவர் மற்ற எதையெல்லாம் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறாரோ, இல்லையோ, கவினின் ரோமியோத்தனத்தை புரிந்து கொண்டிருப்பதில் வெற்றி பெறுகிறார்.

suresh kannan

2 comments:

Anantho Speaks.... said...

கவின் - இந்த சீஸனின் மஹத்....

rajureva said...

yes தொடருங்கள் உங்கள் விமர்சனத்தை , அருமையான வார்த்தைகள்