Thursday, July 11, 2019

பிக்பாஸ் சீஸன்3 – நாள் 17 – “பார்வையாளர்களைக் கொலை செய்யும் டாஸ்க்”
பிக்பாஸ் வீட்டில் ‘கொலையாளி’ டாஸ்க்கினால் சற்று கலகலப்பு உருவாகியது என்பது நிஜம்தான். ஆனால் இதிலுள்ள சவால்கள் மிக மிக மொக்கையாக இருக்கின்றன. ஷெரீனை முத்தம் கொடுக்க வைக்க வேண்டுமாம். ஒரு ஜோக் நினைவிற்கு வருகிறது. அதாவது…. சரி வேண்டாம்.. கலாசார காவலர்கள் சண்டைக்கு வந்து விடுவார்கள்.

திருடனின் கையிலேயே சாவியைத் தந்து விட்டது போல, ரவுடி ராக்கம்மாவாக அந்தர் செய்து கொண்டிருந்த வனிதாவிடம், கொலையாளி பொறுப்பை ஒப்படைத்து விட்டதால் அவர் இப்போதைக்கு எல்லோரையும் அனுசரித்துப் போகும் நெருக்கடியில் இருக்கிறார். எனவேதான் “கோல்ட் காஃபி சாப்பிடறீங்களா?” என்றெல்லாம் இந்தச் சனியன்களிடம் விசாரித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.

இது மட்டுமல்ல, அவர் தன் இதுவரையான அலப்பறைகளால் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம் காரணமாக, அவர் சொன்னவுடன் இதர போட்டியாளர்கள் சட்டென்று உடன்பட்டு விடுகிறார்கள். இதனால் இந்த ‘டாஸ்க்கில்’ சுவாரசியமான சவால்களா, சம்பவங்களோ ஏதுமில்லை. சம்பிரதாயங்கள் மட்டும் நிகழ்கின்றன.

இப்போதே, சமூகவலைத்தளங்களில் வனிதாவின் திறமைகளைப் புகழ ஆரம்பித்திருக்கிறார்கள். எனில் அவர் மீதான கோபம் தணிந்து அவர் நாமினேஷனில் இருந்து தப்பிக்கவும் வாய்ப்புண்டு.

சரி, 17-ம் நாளில் என்னென்ன நடந்தது என்று பார்ப்போம்.    

**

காலையிலேயே பஞ்சாயத்து ஆரம்பித்து விட்டது. இதுவரை தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த சேரன்.. இன்று வெடிக்கத் துவங்கி விட்டார். இந்த விஷயத்தில் மீரா பக்கம்தான் தவறு இருப்பது போல் தெரிகிறது. ஒரு குழுவில் தன்னுடைய பொறுப்பு என்னவென்று சொல்லப்பட்ட பின்பு தாமே அதை முன் வந்து சரியாகச் செய்து விடுவதுதான் நல்லது. குழுவின் தலைவர் ஒவ்வொரு முறையும் நினைவுப்படுத்துவது என்பது எரிச்சலான செயல். சண்டி மாட்டை வைத்துக் கொண்டு வண்டியோட்டுவது போல.

மற்றவர்களின் வேலையையும் சேர்த்து தான் செய்து விட்டதின் எரிச்சலில் மீராவின் தவறை சேரன் முதலில் மென்மையாகச் சுட்டிக் காட்டினார். ஆனால் அதை மீரா இயல்பாகக் கடக்காமல் அழுது சண்டையிட்டு பெரிதாக்கினார். மட்டுமல்ல, ஏற்கெனவே சொன்னது போல, ஒரு உரையாடலை ஆரம்பித்து விட்டு பிறகு சட்டென்று கத்தரித்து எழுந்து செல்வது எதிர்தரப்பை பயங்கரமாக வெறுப்பேற்றும். சேரனுக்கும் அப்படியே ஆயிற்று.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் லொஸ்லியா வீட்டை சுத்தம் செய்து கொண்டிருப்பதை காட்டினார்கள். “ஆ… இங்க பூசு..  இந்தப் பக்கம் பூசு’’ என்று சந்தனம் தடவுவது போலவே எதையோ செய்து கொண்டிருந்தார். “பார்த்து.. மெல்ல.. மெல்ல.. செவத்துக்கு வலிக்கப் போவுது”.

ஆவிகளை மயானத்திற்கு துரத்தினார் பிக்பாஸ். ‘ஐய்யோ.. வெயில்ல நிக்கணுமா?” என்று சிணுங்கியது சாக்ஷி ஆவி. சாண்டி செய்யும் நக்கல்களால் மோகன் புண்படுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் மனிதரால் மெல்லவும் விழுங்கவும் முடியாமல் அவஸ்தைப்படுகிறார். சேரன், சரவணன் போல தன் இடைவெளியை வைத்திருந்தால் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

சாண்டியின் அலப்பறைகளால் முதலில் கண்கலங்கியவர், பின்பு முகின் வந்து பக்கத்தில் அமர்ந்து கலாய்க்கும் போது சிரித்து விட்டார். சிவாஜி கணேசன் இன்னமும் இறக்கவில்லை. மோகனின் வடிவில் உயிர்வாழ்கிறார் என்று தோன்றுகிறது.

**

அடுத்த கொலையை நிகழ்த்த வேண்டிய நேரம். ஷெரீனை தர்ஷனுக்கு முத்தம் தர வைக்க வேண்டுமாம். கண் சிமிட்டும் நேரத்தில் இந்த விஷயத்தை நடத்தி முடித்து விட்டார் வனிதா.

“எங்களை மதுவும் லொஸ்லியாவும் ஓவராக வெறுப்பேற்றுகிறார்கள். கண்டித்து வையுங்கள்” என்று “ஆவிகளான’ சாக்ஷியும் ஷெரீனும் தலைவியான அபிராமியிடம் புகார் அளித்தார்கள். “அய்யோ.. நான் அந்தப் பக்கமே போகலையே?!” என்று சரோஜாதேவியின் அபிநயத்துடன் மதுமிதா சொன்னார். சாக்ஷி ஏதோ மனப்பிரமையிலேயே வாழ்கிறார் போலிருக்கிறது.

அடுத்த கொலை. ரேஷ்மாவின் மீது முகின் குளிர்ந்த காஃபியை ஊற்ற வேண்டுமாம். கடவுளே.. பிக்பாஸ்.. என்ன ஆயிற்று உங்களுக்கு? இத்தனை மொக்கையாக யோசிக்கிறீர்கள்?

பேய் ஒப்பனையின் போதே ரேஷ்மாவின் முகத்தில் எதையோ கொட்டியது போல்தான் இருந்தார். இப்போது இன்னொன்றா? வனிதாவும் முகினும் இணைந்து தற்செயலாக காஃபி கொட்டுவது போல் செய்தார்கள். அந்தச் சமயத்தில் வனிதாவின் எக்ஸ்பிரஷன்கள்.? ‘உலக நடிப்புடா.. சாமி…”

செத்துப் போன ரேஷ்மா “இதற்கு காரணமானவர்களை வந்து சாவடிக்கிறேன்” என்று சபதம் ஏற்றது நல்ல காமெடி. “ஆரண்ய காண்டம்’ என்கிற திரைப்படத்தில், ஒரு முக்கியமான பொருளைத் தேடி ரவுடி கூட்டம் செல்லும். ஆனால் தேடப்பட்டவன் இறந்து போயிருப்பான். பொருள் கிடைக்காத எரிச்சலில் ரவுடியின் தலைவன் பிணத்தைப் பார்த்து சொல்வான். “நீ மட்டும் உயிரோட இருந்தா உன்னைக் கொலை பண்ணியிருப்பேண்டா”

ஒருவரின் மேல் காஃபி கொட்டுவது தற்செயலானதுதான். ஆனால் தான் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட போது ரேஷ்மாவிற்கு அந்தச் செய்கையின் மீது பிறகாவது சந்தேகம் வந்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு வரவில்லை. ரேஷ்மா மட்டுமல்ல, பிறரும் இப்படித்தான் இருக்கிறார்கள்.

ஆனால் – நமக்கு காட்டப்படாத காட்சிகளில் வேறு சில செய்கைகளும் செய்யப்பட்டு அதனால் குழம்பி விடுகிறார்களா என்று தெரியவில்லை. ‘தொட்டா அவுட்.. பார்த்தா அவுட்’ன்னா என்னய்யா விளையாட்டு இது?! மாறாக மதுவிதாவிற்கு கவின் முத்தம் அளிக்க வேண்டும் என்பதான டாஸ்க்காக இருந்தால் அது எத்தனை கலாட்டாவாக அமையும்?!

“யாரும் யாரையும் கொலை பண்ணலே. பிக்பாஸ் கன்ப்யூஸ் பண்றாரு”  “இல்லை சாண்டிதான் கொலைகாரன். அவனேதான் சொன்னான்” என்று மதுமிதாவும் லொஸ்லியாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். இதுங்க இம்சை வேற. இதுங்களே இப்படி வெள்ளந்தியா இருக்குதுன்னா. இதுங்களைப் போய் சந்தேகப்படும் சாக்ஷி, மோகன் க்ரூப் எத்தனை மொக்கையானதுக?!

**

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ‘மன்னவனே அழலாமா?” என்றொரு டாஸ்க்கை தந்தார் பிக்பாஸ்.  அதன்படி வீட்டின் உறுப்பினர்கள், இறந்து போனவர்களைப் பற்றி உருக்கமாகவும் நகைச்சுவையாகவும் சொல்ல வேண்டுமாம். (சிரித்துக் கொண்டே எப்படிய்யா அழுவுறது?!)

சாண்டி சும்மாவே ஆடுவார். சலங்கையை வேறு கட்டி விட்டார்கள். எனவே பிரித்து மேய்ந்து விட்டார். சேரனின் கோபமான முகம் காலையில் வெளிப்பட்டது போல, இப்போது ஜாலியான முகமும் இப்போது வெளிப்பட்டது. மனிதர் இப்போதுதான் ஜோதியில் ஐக்கியமாகத் துவங்கியிருக்கிறார்.

நகைச்சுவை என்கிற மேற்பூச்சில் பல குண்டூசிகளை இறக்கி விட்டுச் சென்றார் மதுமிதா. ஷெரீனின் முகம் அஷ்டகோணலாக மாறியது. “ஜக்கம்மா சொல்றா.. ஜக்கம்மா சொல்றா” பாணியிலேயே இவரின் பேச்சு இருந்தது.

சரவணன் மெளன அஞ்சலி செலுத்தி பலரின் பாராட்டுக்களைப் பெற்றார். பர்பாமன்ஸ் செய்ய வரலைன்னா இப்படியும் சமாளிக்கலாம் போல.

இந்த டாஸ்க்கின் போது தர்ஷன் ஷெரீனை மிகையாகப் புகழ்ந்தார். பிறகு பார்த்தால் ஷெரீனுடன் அமர்ந்து கடலை போட்டுக் கொண்டிருந்தார். எனில் பயபுள்ள உண்மையாகவே அந்தப் பக்கம் சாய்ந்து விடுவாரோ என்னவோ! இந்தக் கவின் பயல் பெரும்பாலான உருப்படிகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது இவரும் என்னதான் செய்வார்? மிஞ்சுவதைத்தான் கைப்பற்ற முடியும்!

இந்தக் கொலைகார டாஸ்க்கில் இவர்கள் சாகிறார்களோ.. இல்லையோ… நம் உயிரை வாங்குகிறார்கள்.

suresh kannan

5 comments:

Anantho Speaks.... said...

ஒரு திரைப்படத்தில் வெண்நிற ஆடை மூர்த்தி சொல்லுவார்.. "உனக்கு புரிய வைக்குறதுக்கு, பத்து பைத்தியத்துக்கு பல்லு விளக்கி விட்டுறலாம்." அது போலத்தான் மீராவிடம் பேசி, புரிய வைப்பதும்.

சாண்டி, தர்ஷன் சற்று அதிகமாக மோகனை கலாய்க்கிறார்கள். Hotstar Unseenல் பார்த்தால் தெரியும். எந்தவொரு சாரசரி மனிதனுக்கும் கோபம் வரத்தான் செய்யும்.

Unknown said...

இந்த டாஸ்க்க எப்படி முடிக்க போறாங்களோ... டாஸ்க் முடிஞ்ச அப்புறம் , வனிதா தான் கொலக்காரின்னு சொன்ன , தத்தி குரூப் எப்படி ரீயாக்ட் பண்ணும்...ஒரு வேளை பிக்பாஸை எமாற்றி லாஸ்லியா, மது, அபிராமி தான் பொய் சொல்லவச்சு வனிதா மேல பழிபோடறாங்கனு கூட சொல்லுவாங்க...

Lakshmi Chockalingam said...

ஆகாத மருமகள் கை பட்டால் குற்றம் என்பது போலத்தான் உள்ளது , மதுமிதா என்ன சொன்னாலும் சாக்ஷ்சி அணி நடந்து கொள்வது .

rajureva said...

வனிதாவை eviction லிருந்து காப்பாற்றுவதற்காக இந்த கொலை task ஆக இருக்குமோ என்ற எண்ணம் இருக்கிறது. எப்படா முடியப்போகிறது ,ஆசிரியர் எப்படி விமர்சனம் எழுத போகிறாரோ என்று குழம்பி கொண்டிருந்தேன்

aswin said...

Simple anna..இந்த task a செய்ததால் வனிதா nominate ஆக மாட்டார்...இந்த வார பலியாடு மோகன்..