Saturday, July 13, 2019

பிக்பாஸ் சீஸன்3 – நாள் 18 – “யானைக்கு.. ஸாரி… பூனைக்கு மணி கட்டிய தர்ஷன்”




கொலையாளி டாஸ்க் முடியும் வரை சற்று அடக்கி வாசித்த வனிதா, மறுபடியும் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தத் துவங்கி விட்டார். எனக்கு ஒரு சந்தேகம். ஒவ்வொரு சீஸனுக்கும் ஒரு ‘ரவுடி ராக்கமாவை’ பிக்பாஸ் அப்பாயிண்ட் செய்து விடுகிறாரோ என்று தோன்றுகிறது. காயத்ரி, மும்தாஜ் என்றொரு வரிசையை நான் காண்கிறேன். “இந்த சீஸன் முழுக்க உனக்கு என்னவெல்லாம் தோணுதோ.. அதையெல்லாம் பண்ணும்மா.. அடிச்சு ஆடு.. நாங்க பார்த்துக்கறோம்” என்று டிஆர்பிக்காக இந்தத் தீவிரவாதிகளிடம் சொல்லி விடுகிறார்களோ.. என்னமோ..

யோசித்துப் பாருங்கள்.. வனிதா இல்லையென்றால் சீசன் 3-ன் பார்வையாளர் சதவீதம் பாதியாகக் குறைந்திருக்கும்.. இல்லையா? “நான் கத்துவேன்.. ஊர் கேட்கக்கூடாது… ஊர் கத்தக்கூடாது.. நான் கேட்பேன்” என்கிற ‘ரத்தம் vs தக்காளி சட்னி’ மோடில் ரணகளமாக பயணித்துக் கொண்டிருக்கிறார் வனிதா.

பிக்பாஸ் வீட்டின் பெரும்பாலோனோர் வனிதாவின் ராவடிகளைக் கண்டு அஞ்சியும் அடங்கியும் சென்று கொண்டிருக்க, அந்தப் பூனைக்கு துணிச்சலாக இன்று மணியைக் கட்டினார் தர்ஷன். அவர் பேசிய ஒவ்வொரு ஆவேச வசனமும் பார்வையாளர்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக இருந்தது. “சூப்பர்… மச்சி.. சபாஷூ...அப்படிக் கேளு..”

வனிதாவின் பல முகபாவங்கள் மீம்ஸ் க்ரியேட்டர்களுக்கு தீனி போடுவது போல் அமையும் என்பது மட்டும் நிச்சயம்.

**

18-ம் நாள் நிகழ்வுகள் தொடர்ந்தன. “ஏண்டா.. ஆம்பளைத் தடியன்களா.. ஒருத்தராவது எனக்கு சாட்சி சொன்னீங்களாடா?” என்று சரவணன் விளாசிக் கொண்டிருந்த காட்சி தொடர்ந்தது. அந்தக் காட்சிக்கு தொடர்பேயில்லாமல் மதுமிதா ஏதோவொரு தகவலைச் சொன்னார். (அல்லது உரையாடலின் தொடர்ச்சியில் ஏதாவது இருந்திருக்கலாம். எடிட்டிங்கில் போயிருக்கும்). ‘கவினும் லொஸ்லியாவும் இணைந்து சாப்பிட்டதைக் கண்டு சாக்ஷி கோபித்துக் கொண்டார் என்று மீரா  சொன்னார்’ என்பது மதுமிதாவின் சாட்சியம். இதற்கு தன் பலத்த ஆட்சேபத்தை தெரிவித்தார் மீரா.

“கட்டிங் இருக்கும்ல பார்த்துப்போம்” என்று திரும்பத் திரும்ப கூறினார் சரவணன். ‘அப்ப சைட் டிஷ் ஷூக்கு என்னா பண்றது தல..?” என்று கேட்கத் தோன்றியது. ‘என்ன இங்க சண்ட?” என்று கோவை சரளா பாணியில் வம்பு கேட்கும் ஆவலுடன் ரேஷ்மா வர.. “அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா… நீ போ” என்று அவரை சரவணன் துரத்தியது அத்தனை அழகு. ஆண்கள் பொதுவாக வம்புகளை ஊதிப் பெருக்காதவர்களாக இருப்பதைக் கவனிக்கலாம்.

சிறையில் புகும் போது ‘வலது காலை எடுத்து வெச்சு வாங்க” என்று சேரனிடம் சொன்னார் கவின்.  சங்கடமான சூழலையும் இலகுவாக்குவதில் ஆண்கள் வல்லவர்கள். 'ஜெயில்வாழ்க்கையை ஜாலியா கழிப்போம்' என்கிற மூடிற்கு வந்து விட்டார் கவின். “ஐய்யா..  ஜாலி...வெஸ்டர்ன் டாய்லெட் இருக்குது”

“இந்த ஸ்டேஷன்லதான் கொசுத் தொல்லையே இல்ல” என்று சத்யராஜ் பெருமிதமாகச் சொல்லும் காமெடிதான் நினைவிற்கு வந்தது.

சிறைக்கம்பிகளின் பின்னால் சோகத்துடன் வந்து நின்ற லொஸ்லியாவிற்கு இவர் ஆறுதல் சொன்ன விதம், ‘தோழியா. இல்லை காதலியா.. யாரடி நீ பெண்ணே’ பாணியில் இருந்தது. நட்பிற்கும் காதலிற்கும் இடையில் இந்த உறவு ஊசலாடிக் கொண்டிருக்கிறது போல. லொஸ்லியாவின் முகபாவங்கள் காவியச் சோகத்துடன் இருந்தன. (அவன் கிட்ட விழுந்திராத புள்ள!).

**

“என்னைப் பத்தி ஏதாவது சொல்லேன்” என்று சாண்டியிடம் கேட்டு வம்படியாக மாட்டிக் கொண்டார் மீரா. “நீ bold –ஆன பொண்ணு.. ஆனா கொஞ்சம் old ஆன பொண்ணு” என்று அவர் கலாய்க்க, சுற்றியிருந்த ஆண்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இந்த விளையாட்டின் நடுவில் மீராவை ‘பச்சோந்தி.. அழகான பச்சோந்தி’ என்று தர்ஷன் கமெண்ட் அடித்து விட அதற்கு தனியானதொரு பஞ்சாயத்து வைத்தார் மீரா.

அப்போது, நட்பு பற்றி தர்ஷன் சொன்ன விளக்கம் அத்தனையும் அருமை. “பத்து வருஷ ப்ரெண்ட் தவறு செஞ்சா அவங்களை கட் பண்ணிடுவேன்… நாலு நாள் பிரெண்டு நல்லதா தெரிஞ்சா அவங்களை ஏத்துக்கிடுவேன்” என்று நீ சொல்வதில் லாஜிக்கே இல்லை. நாலு நாளில் எப்படி ஒரு பிரண்ட் உருவாக முடியும். பிரெண்டுன்னா தவறும் செய்வான்” என்றார் தர்ஷன்.

“அப்படியில்லை. அது எத்தனை நாள் நட்பாக இருந்தாலும் உண்மையாக இருக்க வேண்டும்” என்று மீரா சொல்வது ஒருவகையில் சரி என்றாலும் குற்றமே இழைக்காத நண்பர் என்று எவருமில்லை. அதைக் கண்டித்தும் திருத்தியும் தாண்டி வருவதுதான் நட்பு. சுருக்கமாகச் சொன்னால் “குற்றம் பார்க்கின் சுற்றமில்லை” என்பதுதான் மீரா உணர வேண்டிய நீதி.

**

19-ம் நாள் விடிந்தது. ஜனகராஜ் போல் கண்ணை ஒருமாதிரியாக மூடிக் கொண்டு லொஸ்லியா நடனமாடும் விதம் சலிப்பை மட்டுமல்ல, சமயங்களில் எரிச்சலையும் வரவழைக்கிறது. (மாத்தி ஆடும்மா..!). ‘பட்டாம்பூச்சி பிடிப்பது எப்படி?” என்று லொஸ்லியா சொல்லித்தர வேண்டுமாம். இதெல்லாம் ஒரு டாஸ்க்காடா? அதை ஒரு அழகான பட்டாம்பூச்சியிடமே கேட்டால் எப்படி?

சேரனும் கவினும் காலையிலேயே சிறையிலிருந்து ரிலீஸ் செய்யப்பட்டார்கள். (யப்பா.. இதுக்காடா இத்தனை அமர்க்களம் பண்ணீங்க?) குழந்தையிடம் பிஸ்கெட்டை பிடுங்கிச் சாப்பிடுவது போல, தன் வயதைக் காட்டி ‘சிறந்த டாஸ்க்காளர்’ என்ற விருதைப் பிடுங்கிக் கொண்ட மோகன் வைத்யாவை கலாய்த்துக் கொண்டிருந்தார்கள்.

அடுத்த தலைவருக்கான போட்டி நடந்தது. ஒருவரையொருவர் துரத்தி என்ன கருமத்தையோ ஒட்ட வேண்டுமாம். இந்த உடம்பைத் தூக்கிக் கொண்டு வீடு முழுவதும் ஓடி ஜெயிக்க முடியாது என்பது வனிதாவிற்கு அப்போதே தெரிந்து விட்டது. எனவே ‘ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் மட்டுமே ஓடும்படி விதியை மாற்றலாம். நீச்சல் குளத்திற்கு ஒருவர் சென்றால் பிடிக்கவே முடியாது’ என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தார். “நான் ஒலிம்பிக்ஸ்லயே ஓடியவன்.. இதெல்லாம்  எனக்கு ஜூஜூபி” என்பது போல் மோகன் மறுத்துக் கொண்டிருக்கும் போதே டாஸ்க் பஸ்ஸர் ஒலித்து விட்டது.

எனவே அவரைத் துரத்திய வனிதா, ஸ்டிக்கரை ஒட்டி விட்டுச் சென்றார். இதைக் கூட மோகனால் அறிய முடியவில்லை. மற்றவர்கள் சொல்லித்தான் தெரிந்தது. அவர் ஸ்டிக்கரைத்  தூக்கிக் கொண்டு வனிதாவைத் துரத்த.. ‘மவனே.. ஓட முடியும்னு சொன்னவன் நீதானே..இருக்குடி மாப்ளே கச்சேரி’’ என்றபடி நீச்சல் குளத்தின் அருகே சென்று நின்று கொண்டார் வனிதா. கூடவே சாக்ஷி.

மோகனால் அவர்களைத் துரத்திப் பிடிக்க முடியவில்லை. பயங்கரமாக மூச்சு வாங்கவே அப்படியே அமர்ந்து விட்டார். “எப்படியும் ஓடலாம்” என்று அவர் சொன்னதை வைத்து மற்றவர்கள் கிண்டல் அடித்தது வேறு அவரைக் கடுப்பேற்றியிருந்தது. “என்கரேஜ் பண்ண மாட்டேன்றாங்க” என்று புலம்பினார். இத்தனைக்கும் சாண்டியும் கவினும் அவருக்கு உதவி செய்தார்கள்.

அடுத்து வனிதாவிற்கும் சாக்ஷிற்கும் இடையேதான் போட்டி. இப்போது மோகனின் நிலைமை வனிதாவிற்கு வந்தது. சாக்ஷியை துரத்திப் பிடிக்க முடியாது என்று  அவருக்குத் தெரிந்து விட்டது. தாங்கள் ஆட்டத்தில் தோற்கப் போகிறோம் என்று தெரிந்து விட்டால் சிலர் ஆட்டத்தைக் கலைத்து விட்டுச்  சென்று விடுவார்கள். அழுகிணி ஆட்டம் இது. வனிதா செய்ததும் அதுவே.

“இந்த கேம்மோட ரூல்ஸே சரியில்லை. நான் ஏசியன் கப் கோப்பை விளையாட்டிற்காக கலந்து கொண்ட போது இப்படியெல்லாம் ரூல்ஸ் இல்லை” என்கிற பந்தாவுடன் விளையாட்டைத் தொடர மறுத்தார். இதை துவக்கத்திலேயே கறாராக செய்திருந்தால் குறைந்தபட்சம் சரியாக இருந்திருக்கும்.

வனிதா கோபமாக புலம்பிக் கொண்டிருந்த போது, அந்தப் பக்கமாக கடந்து சென்ற தர்ஷனுக்கு ஏழரை ஆரம்பித்திருக்க வேண்டும். தெரியாத்தனமாக ஒரு கமெண்ட்டை சொல்லி விட்டார். தர்ஷன் என்றல்ல வீட்டில் உள்ள பலருக்குமே வனிதாவின் அலப்பறைகள் குறித்த மெளன கோபங்கள் இருக்கின்றன. இன்றைக்கு அது தர்ஷன் மூலமாக வெடித்தது. அவ்வளவே.

“உங்களுக்கு ஏத்தா மாதிரி ரூல்ஸை மாத்திப்பீங்களா?” என்று தர்ஷன் சொல்லியதுதான் தாமதம், வனிதா சாமியாடத் துவங்கி விட்டார்.. “ஏ அறிவாளி.. இங்க வா” என்று அதட்டலாக கூப்பிடத் துவங்கியது முதல்.. “தமிழ்நாட்ல ஒரு பொம்பளை கிட்ட எப்படி பேசணும்னு தெரிஞ்சுக்கோ’ ‘அதெல்லாம் உங்க அப்பா அம்மா விளையாடுவாங்க” “நேத்து முளைச்சவன் நீ’ என்றெல்லாம் ஏக வசனத்தில் வசைபாடத் துவங்கி விட்டார்.

“பிக்பாஸ் வீட்டில் எனக்கு எதிராக ஒரு எதிர்ப்புக்குரலா?” என்கிற அதிர்ச்சியே அவரிடம் கோபமாக வெளிப்பட்டது போல. அவரது வசைகளில் பல சாமர்த்திய அரசியல்கள் இருந்தன. ‘பொம்பளை.. ‘தமிழ்நாடு..” போன்ற விஷயங்களைக் கவனிக்கவும்.

தர்ஷனும் பதிலுக்கு பதில் சரியாக கொடுத்தார். ஆனால் மரியாதையின் எல்லையைத் தாண்டவில்லை. இளம் தலைமுறையினர் பெரும்பாலும் தர்ஷனுக்கு ஆதரவு தந்தனர். “நீ சரியாத்தான் பேசினே மச்சி” என்று. ‘நன்றாக கதைத்தாய்” என்று லொஸ்லியா கூட பிறகு வந்து கைகொடுத்தது. (இது போதும்டா.. உனக்கு!).

 “இந்தம்மா மட்டும் மத்தவங்க விஷயத்துல கருத்து சொல்வாங்களாம். ஆனா இவங்க விஷயத்துல யாரும் எதுவும் சொல்லக்கூடாதாம். இவங்க கத்தினா மத்தவங்க அடங்கிப் போயிடணுமா?” என்றெல்லாம் தர்ஷன் ஆத்திரத்துடன் புலம்பியது மிகச்சரியானது.

வனிதாவின் கோபம் பிறகு அபிராமியின் மீதும் பாய்ந்தது. “என்னாத்த தலைவரு நீ.. வேஸ்ட்டு.. நீதானே இதில் தலையிட்டிருக்கணும்” என்று கத்த பலியாடு போல நின்றார் அபிராமி. “நீ ஓடிப்பாரு அப்பத் தெரியும்” என்றெல்லாம் சிலரிடம் வனிதா கத்திக் கொண்டிருந்தது காமெடி. அவரால் இயலவில்லை என்பதுதான் விஷயம். அதை மறைக்க எத்தனை ஆங்காரம்?

“என்னால மட்டும் எப்படி அவங்க முதுகுல ஒட்ட முடிஞ்சது. அதைப் போலத்தானே அவங்களும் செய்யணும்? மத்தவங்களை மட்டும் காண்ட்டிராக்ட்ல சைன் போட்டுதானே வந்திருக்கீங்க?”-ன்னு நேத்து சொன்னாங்களே’ என்று சாக்ஷி வெளியில் ஷெரீனுடன் பேசிக் கொண்டிருந்தது மிகச் சரியானது.

வனிதாவிற்கு எதிரான எந்தவொரு குரலும் தேனாக இனிக்கிறது. அம்மணி அப்படியொரு ஆட்டத்தை இன்று ஆடினார்.

“பாரேன்.. இந்த சப்ஜெக்ட் கிட்ட ஏதோ அசைவு தெரியுது” என்பது மாதிரி “தர்ஷனுக்கும் கோபம் வருமா.. ரணகளத்துல உனக்கு கிளுகிளுப்பு கேட்குதா?. ஐ லைக் இட்’ என்று தர்ஷனுக்கு ‘ரொமாண்ட்டிக்” ஆதரவு தந்து கொண்டிருந்தார் ஷெரீன். இவரும் தன் பங்கிற்கு வனிதாவிடம் நியாயம் கேட்கப் போக ‘பிரெண்டுக்கு சப்போர்ட் பண்ணி யாராவது வந்தா அவங்களை சப்போட்டா பழம் மாதிரி பிழிஞ்சுடுவேன்” என்று வனிதா எகிற தயங்கி பின்வாங்கினார் ஷெரீன்.

“டேய் பிக்பாஸூ.. இங்க வாடா சனியனே.. நீ முடிவு சொல்லாம நான் இங்க இருந்து நகர மாட்டேன் மைக்கைப் போட மாட்டேன்” என்று கல்லுப் பிள்ளையாராக அமர்ந்தார் வனிதா.

“எனக்கு ஒரு நியாயம்.. இந்தம்மாவிற்கு ஒரு நியாயமா?” என்று மோகன் துவங்கி வைக்க எல்லோரும் இணைந்து வனிதாவை வெளியே காய்ந்து கொண்டிருந்தார்கள். தன்னை விட்டு விட்டு பெரும்பாலோனோர் வெளியே சென்று விட்டதால் ஜெர்க் ஆன வனிதா “பால் கெட்டுப் போயிடுச்சான்னு பாரு” என்றபடியே நைசாக நகர்ந்து சென்று மைக்கை மாட்டிக் கொண்டது படுகேவலம். தன்னிடம் மீண்டும் அடிமையாக இணைந்த மதுமிதாவிடம் ‘மம்மின்னு டம்மின்னு.. இங்கு கூப்பிடறதெல்லாம் சும்மா” என்று வம்பு பேச ஆரம்பித்து விட்டார்.

தன்னிடம் இருந்து மற்றவர்கள் விலகுவது குறித்து உள்ளுக்குள் அதிர்ச்சியடைந்தாரோ என்னவோ.. தர்ஷனை தேடிச் சென்று பஞ்சாயத்து பேச ஆரம்பித்தார் வனிதா. அது சமாதான உடன்படிக்கையாக அல்லாமல் கட்டப்பஞ்சாயத்தாகவே அமைந்தது. வனிதாவின் வழக்கமான அலட்டல் அங்கும் வெளிப்பட்டது. தர்ஷனுக்கு இன்னமும் கோபம் தணியவில்லை. எனவே சூடு குறையாமல் தன் தரப்பு நியாயங்களை சொல்ல முயன்றார். ஆனால் வனிதா பேசவே விடவில்லை.

தமிழ் சினிமாவின் போலீஸ்காரர்கள் கடைசி சீனில் நுழைவது போல, சண்டையின் உச்சக்கட்டத்தில் பஞ்சாயத்து பேச வரும் சேரன் இப்போதும் அப்படியே வந்தார். ஆனால் அவர் சொல்லியது ஒவ்வொன்றும் வனிதாவின் மீதான மறைமுக சாடல். இந்தக் குத்தல் வனிதாவிற்கு புரிந்திருக்க வேண்டும். ஆனால் புரிந்தது போல் தெரியவில்லை. சேரன் தனக்கு ஆதரவாக பேசுவதாக கருதிக் கொண்டாரோ என்னமோ.

“இங்க பாரு.. தர்ஷன். நீ பேசினது எதுவுமே தவறு இல்ல. ஆனா கொஞ்சம் சத்தமா பேசிட்டே. நம்ம பேருதான் இதனால கெடும். நாம இறங்கிப் போறதால தாழ்ந்து போயிட மாட்டோம்” என்றெல்லாம் சேரன் சொன்ன சமாதானங்கள் பெரும்பாலானவற்றில் வனிதாவிற்கான மறைமுக குண்டூசிகள் இருந்தன. “சரி.. அப்ப பிரெண்ட்ஸ்.. சரியா?” என்று அதையும் அதட்டலாகவே கேட்டு தர்ஷனிடம் கை கொடுத்தார் வனிதா.

இன்று பஞ்சாய்த்து நாள். வனிதாவை வெளியே அனுப்ப மாட்டார்கள் என்று நமக்குத் தெளிவாக தெரிந்து விட்ட நிலையில், “ஆண்டவர்’ சற்று தன் பாணியில் வனிதாவிடம் விசாரணையை மேற்கொள்ளலாம். குறைந்தபட்சம் இதையாவது செய்யலாம். ‘குறும்படமும்’ வெளியிடப்பட்டால் கூடுதல் சுவாரசியமாக இருக்கும். பார்க்கலாம்.



suresh kannan

4 comments:

Saran said...

இந்த கேம்மோட ரூல்ஸே சரியில்லை. நான் ஏசியன் கப் கோப்பை விளையாட்டிற்காக கலந்து கொண்ட போது இப்படியெல்லாம் ரூல்ஸ் இல்லை” என்கிற பந்தாவுடன் விளையாட்டைத் தொடர மறுத்தார் super Anna

malar said...

காயத்ரி மும்தாஜ்லாம் வனிதா கிட்ட நெருங்கவே முடியாது இவங்க அதுக்கும் மேலே !!
எதுக்கும் கவனமுடன் இருக்கவும் அம்மணி வெளியில் வந்ததும் முதல் ஆராய்ச்சி கண்ணுக்கு தெரியாத எதிரிகள் தானாம் .தலைப்பை தைரியமா போட்டுட்டீங்க .
லொஸ்லியா புள்ளக்கி நீங்கல்லாம் புலம்பினாலும் வேஸ்ட் .அது விழுந்திடுச்சி

வனிதா முகத்தில் கலவரம் ஒரு செகண்ட் வந்து போனதை யாரெல்லாம் கவனித்தீர்கள்
ஆனால் வனிதாதான் ஆட்டத்தின் இறுதிவரை கொண்டுசெல்லப்படுவார் என்று பட்ஷி சொல்கிறது

Lakshmi Chockalingam said...

If Vanitha talks as Tamilnadu and lady , no one is questioning. Vanith sis little taken back today . She got to know that everyone is opposing her

Thangavel said...

Out of 19 reviews, you said losliya dancing same way 5 times. Ignore it pls