Monday, December 21, 2009

தமிழில் ஒரு ஹாலிவுட் சினிமா

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் தலைப்பு சினிமா போஸ்டர்களிலும் பூஜைகளிலும் வெறும் சம்பிதாயத்திற்காக உபயோகப்படுத்தப்படும் வாக்கியமாக இருந்தாலும் நான் அந்த நோக்கில் அல்லாமல் அதன் மதிப்பை உணர்ந்தே குறிப்பிட்டிருக்கிறேன். சு.ரா. பாணியில் I mean, what i said.

இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனின் திரைப்படமான 'கண்டு கொண்டேன்(2)-ல் ஒரு காட்சி வரும். படத்தின் நாயகன் அமெரிக்காவில் படித்துவிட்டு தமிழ்த் திரையுலகில் தன்னுடைய இயக்குநர் வாய்ப்புக்காக போராடுவான். ஹாலிவுட் தரத்தில் நல்லதொரு ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் இங்கு தரவேண்டும் என்பது அவனுடைய நோக்கமாக இருக்கும். ஆனால் கதாநாயகனின் ஹீரோயிச நிழலில் ஒளிந்து கொண்டும் அபத்தமான சம்பிரதாயங்களில் அமிழ்ந்து கொண்டுமிருக்கிற தமிழ் சினிமாவின் போக்கு அவனைத் திண்டாட வைக்கும். அவனுடைய அப்பா "ஏண்டா இப்படி இங்கிலீஷ்காரன் மாதிரி படமெடுக்கணும்ணு கெட்டுப் போறே. அவனுக்கு ஒரு ரொட்டியும் சிக்கன் துண்டும் வெச்சா திருப்தியாயிடுவான். இங்க அப்படியா, சாம்பார், குழம்பு, ரசம், அப்பளம், ஊறுகான்னு... ஒரு புல் மீல்ஸ்' சாப்பிட்டாதான் திருப்தியாவாங்க" என்பார். (இப்படி கலோரி கணக்கில்லாமல் உட்கொள்கிற காரணத்தில்தான் பெரும்பாலான தமிழர்களைப் போலவே அவர்களின் சினிமாவும் வீங்கின வடிவத்தோடும் சர்வதேச தரத்திற்கு ஏற முடியாமல் மூச்சு வாங்கியபடியும் உருண்டு நடக்கிறது.) பிறகு அவன் நொந்து போய் ஒரு தெலுங்கு அதிரடி நாயகியை வைத்து எல்லா சமரசங்களுடன் 'ஒரு வணிக வெற்றிப்படத்தை' தருவான். இப்படியாக தமிழ்ச்சினிமாவின் சூழல் அவனை 'காயடித்துவிடும்'.

நண்பர் அருண் வைத்தியநாதன் நல்லவேளையாக தன்னுடைய முதல் திரைப்படமான 'அச்சமுண்டு அச்சமுண்டு'-வை அமெரிக்கச் சூழலிலேயே எடுத்து முடித்துவிட்டார். தப்பித்தவறி அவர் தமிழ்நாட்டிற்கு வந்திருந்தால் மேற்சொன்ன நாயகனைப் போல அவரும் காயடிக்கப்பட்டிருப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த, தமிழகச் சூழலில் கண்டு கொள்ளப்படாமலேயே போன இந்தத் திரைப்படத்தைப் பற்றி இப்போது பேச என்ன அவசியம் வந்தது என்றால், இது சர்வதேச திரைப்படச் சூழலில் தொடர்ந்த கவனத்தைப் பெற்று வந்துக் கொண்டிருக்கிறது. ஷாங்காய், யு.எஸ்., ஜப்பான், கெய்ரோ போன்ற நகரங்களில் திரைப்பட விழாக்களில் திரையிடும் தகுதியைப் பெற்றதோடு அண்மையில் கோவாவில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட இரண்டே தமிழ்த் திரைப்படங்களில் இதுவும் ஒன்று (இன்னொன்று பாண்டிராஜின் 'பசங்க). தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வதேச திரைப்பட நிகழ்விலும் திரையிடத் தேர்வு பெற்றிருக்கிறது. அது மாத்திரமல்ல. சர்ச்சைக்குரிய விஷயங்களிலிருந்து கவனமாக தள்ளி நிற்கிற ஆச்சாரமான தமிழ்த் திரையுலகம் இதுவரை தொடாத 'குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை' என்கிற சமாச்சாரத்தைப் பற்றி இத் திரைப்படம் உறுத்தாமல் உரையாடுகிறது. (கமலின் 'மகாநதி'யின் சில காட்சிகளை மட்டும் இதனோடு தொடர்புப்படுத்திக் காணலாம்).Psychological thriller வகையைச் சேர்ந்த இத்திரைப்படம் ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான திரைக்கதை, எளிமையான நடிகர்கள், திரில்லர் என்பதற்காக அபத்தமாக பயமுறுத்தாத காட்சிகள் என்று பொதுவான தமிழ்த் திரைப்படங்களுக்கு சம்பந்தமேயில்லான தளத்தில் இயங்குகிறது. அதனாலேயே இதை ஹாலிவுட் கிளாசிக் திரைப்படங்களுடன் ஒப்பிடத் தோன்றுகிறது.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் ஊடகங்கள் 'குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை' என்கிற பிரச்சினையைப் பற்றி தொடர்ச்சியாக உரையாடுகின்றன. பெண்களில் 15-25%, ஆண்களில் 5-15% பேரும் தங்களின் இளமைக்காலத்தில் பாலியல் வன்புணர்ச்சியால் ஆளாகிக் கொண்டிருப்பதாக ஒரு தோராயமான புள்ளிவிபரம் கூறுகிறது. அந்தப் பாதிப்பு 30% நெருங்கிய உறவினர்களாலும் 60% நண்பர்கள் மற்றும் பணியாளர்களாலும் 10% அந்நியர்களாலும் நிகழ்த்தப்படுவதாகவும் அது கூறுகிறது. Gregg Araki-ன் அமெரிக்கத் திரைப்படமான Mysterious Skin (2004), அறியாச் சிறுவர்களின் மீது பிரயோகிக்கப்படும் வன்புணர்ச்சி எவ்வாறு அவர்களின் எதிர்காலத்தை உளவியல் ரீதியாக பாதிக்கிறது என்பதை அதிர்ச்சி கலந்த காட்சிகளுடன் விவரிக்கிறது. இந்தச் சூழ்நிலையில் நம் தமிழ்ச் சூழலோ கலாசாரத்தின் மீதான மிகை மயக்கம் காரணமாக இதை தன்னுள்ளேயே புதைத்துக் கொள்கிறது. சரி. இப்போது அருணின் திரைப்படத்தை கவனிப்போம்.

()

படம் துவங்குகின்ற முதல் காட்சியிலேயே தன்னை பகடி செய்துக் கொள்கிறது. நாயகன் பயணிக்கும் வாகனத்தில் ஒலிக்கும் பாடல் 'அச்சம் என்பது மடமையடா'. படத்தின் தலைப்போ 'அச்சமுண்டு, அச்சமுண்டு'.

இத்திரைப்படத்தின் பாத்திரங்கள், நடுத்தர வர்க்கத்தின் குணாதிசயங்களை மிக நெருக்கமாக அடையாளப்படுத்திக் கொள்ளுமளவிற்கு மிகுந்த நுண்ணுணர்வுடன் படைக்கப்பட்டிருக்கின்றன; இயங்குகின்றன. பொருளீட்டுவதற்காக புலம்பெயர வேண்டியிருக்கிற குடும்பம் சந்திக்க நேர்கிற கலாசார முரண்கள், அதன் காரணமாக குடும்ப நபர்களிடையே எழும் மோதல்கள், அடிமனதில் உறங்கிக் கொண்டிருக்கும் தாய்நாட்டு ஏக்கம்.. போன்ற அகவயமான உரசல்கள் மிகுந்த திறமையுடன் பாத்திரங்களின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. காட்சிகளை கையாள்வதில் இயக்குநர் கூர்மையான யதார்த்தத்துடனும் நுட்பமாகவும் வெளிப்பட்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

உதாரணமாக இந்த விஷயங்களைச் சொல்லலாம். தாங்க்ஸ் அங்கிள்' என்று சொல்லு" என்று தாய் சொல்லிக் கொடுக்க அமெரிக்க கலாசாரத்தில் வளர்ந்த அந்தச் சிறுமி மிக இயல்பாக "தாங்க்ஸ் ராபின்சன்" என்கிறாள். இந்தியர்களுக்கு 'கீரின் கார்டு' மேலிருக்கும் மோகத்தை ஒரு 'திறந்த மார்புக்காரி' மூலம் கிண்டலடிக்கிறார் அருண்.

இன்னொரு உதாரணம். பொதுவாக தமிழ்த் திரைப்படங்களில் அயல்நாட்டவர்களை காட்சிக்குள் உரையாடுபவர்களாக சித்தரிக்கும் போது (அயல் நாட்டவர்கள் என்றாலே அது ஆங்கிலம் பேசும் வெள்ளைக்காரர்கள்தான்; வேறு எவரையும் தெரியாது) அவர்கள் பேசும் வசனத்தை ஒரு கோவிந்தசாமி "அவர் என்ன சொல்றாருன்னா.." என்று மெனக்கெட்டு மொழிபெயர்ப்பார் அல்லது கீழே தமிழ் வரிகள் ஓடும். தமிழ் ரசிகர்களுக்கு புரிய வேண்டுமாம். இதில் அவ்வாறான விபத்துக்கள் தவிர்க்கப்பட்டு அயல் மொழியை இயல்பாக பேசிக் கொள்கிறார்கள் மொழி புரியாதவர்களுக்கு கூட பாத்திரங்களின் உடல்மொழியின் இயக்கம் மூலம் காட்சிகளை தடையின்றி புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். நிறத்தேர்வுக் கார்டுகளின் மீது சிறுமி விரல்களை நகர்த்தி விளையாட அதைப் பின்தொடரும் ராபின்சனின் விரல்கள் சம்பந்தப்பட்ட காட்சியைச் சொல்லலாம்.

காட்சிகள் (ஒளிப்பதிவு கிரிஸ் பிரெய்லிச்) அழகுணர்ச்சியுடனும் காட்சிக் கோணங்கள் பொருத்தமாகவும் கையாளப்பட்டிருக்கின்றன. தம் வீட்டைச் சுற்றி நிகழும் பூடகமான சம்பவங்களைக் கண்டு நடுஇரவில் பிரசன்னா யோசிக்கும் காட்சி போதுமான இருளும் மெலிதான ஒளியுமாக... நல்லதொரு கலவை. தம்முடைய வீட்டுப் பாதுகாப்பு குறித்து பிரசன்னா ஒருவருடன் உரையாடும் லாங் ஷாட்டில் வசனம் மிக மெலிதாக, முணுமுணுப்பாக கேட்ட போது நான் பிரமித்துப் போனேன்.

பாடல்களைப் பொறுத்தவரை இளையராஜாவின் வாரிசுகளில் ராஜாவின் இசைக் கோர்வைகளை மிகச் சரியாக உள்வாங்கிக் கொண்டவர் என்று கார்த்திக் ராஜாவைச் சொல்வேன். 'டும்டும்டும்" திரைப்படத்தின் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டால் நான் சொல்வது புரியும். யுவனை விட அதிக உயரத்தில் கார்த்திக்கை நான் வைப்பேன். இன்னும் அதிர்ஷ்டம் கைகூடவில்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. இத்திரைப்படத்தில் அவரின் ஒரு பாடல் (கண்ணில் தாகம் தீருமோ) கேட்ட மாத்திரத்திலேயே சங்கடத்தை ஏற்படுத்தி வயிற்றைப் பிசைய வைக்கும் ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. படத்தைப் பா¡க்கும் முன்னரே இது எனக்கு ஏற்பட்டது என்பதுதான் ஆச்சரியம். (இது என்ன ராகம் என்பதை யாராவது தெளிவுப்படுத்துங்கள்). ஆனால் கார்த்திக்கின் பின்னணி இசை பல இடங்களில் எரிச்சலை ஏற்படுத்துகிறது என்பதைச் சொல்லியே தீர வேண்டும். (சிறிய உதாரணம்: துவக்கத்தின் லிப்ட் காட்சி).

()

பிரசன்னா மிக இயல்பாக நடித்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகவும் குறைவான வார்த்தை. (ஐம்பது வயதைத் தாண்டியும் தங்களுடைய நாயக அந்தஸ்தை விட்டுக் கொடுக்காமல் மரத்தைச் சுற்றி வந்து ஆடும் ஹீரோக்கள் மத்தியில் 'அஞ்சாதே'வில் இவரது துணிச்சலைக் கண்டு பாராட்டவே தோன்றியது). இவருக்கும் சிநேகாவுக்குமான வேதியியல் (?!) நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. வழக்கமாக எனக்கு சிநேகாவைப் பார்க்கவே பிடிக்காது, குறிப்பாக அவர் சிரிக்கும் காட்சிகளில். ஆனால் இதில் அவர் அழகாகத் தோன்றியிருப்பதற்கு காரணம் ஒளிப்பதிவாளரின் திறமையோ, என்னவோ.

விளம்பரப் படங்களில் தோன்றும் கொழு கொழு குழந்தையாக அல்லாமலும் "குழந்தைகள்லாம் எப்படி பொறக்குது?" என்பது போன்ற அதிகப்பிரசங்கித்தனமான வசனம் பேசாமலும் திராவிடக்களையுடன் இயல்பாக நடித்திருக்கிறாள் அந்தச் சிறுமி. (அக்ஷயா தினேஷ்).

Emmy award நடிகரான ஜான்ஷே பிரமாதப்படுத்தியிருக்கிறார். சிறுவ/சிறுமிகள் மீது தமக்கெழும் இச்சையை பார்வையினாலேயே உணர்த்துகிறார். சிறுமியின் கட்டிலில் படுத்து தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்வது, உணர்ச்சிமிகு நேரங்களில் கடுமையான உடற்பயிற்சிகளின் மூலம் அதைக் கடந்துவருவது போன்ற காட்சிகளில் இவரது நடிப்பு மிக அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது. எந்தக் காட்சியிலும் இவர் நடிக்கிறார் என்கிற உணர்வே வரவில்லை.

()

இந்தியாவில்தான் அதிக அளவில் குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்ச்சி நிகழ்கிறது எனும் போது (அந்தப் புள்ளி விபரங்கள் இந்தப் படத்தின் இறுதிலேயே காட்டப்படுகின்றன) ஏன் இத்திரைப்படம் இந்தியாவில் அல்லாமல் அமெரிக்காவில் எடுக்கப்பட்டது? என்றொரு கேள்வியை ஒரு விமர்சனத்தில் சந்தித்தேன். இம்மாதிரியான சர்ச்சையான சமாச்சாரம், தமிழகச் சூழலில் நிகழ்வது போல் இத்திரைப்படம் சித்தரிக்கப்பட்டிருந்தால் கலாசார காவலர்களும் போலி முற்போக்குவாதிகளும் அதன் அடிப்படையை புரிந்து கொள்ள விரும்பாமல் கூப்பாடு போட்டிருப்பார்கள். மேலும் இவ்வாறு நிகழ்வது வேறு எங்கோ ஒரு பிரதேசத்தில் நிகழ்வது" என்கிற உணர்வை பார்வையாளன் கிடைக்கப் பெற்றால்தான் அவனால் சங்கடப்படாமல் படத்தை ரசிக்க முடியும் என்று இயக்குநர் நினைத்திருக்கலாம்.

இத்திரைப்படத்தில் குறைகளும் இல்லாமலில்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டியது சற்றே தொய்வான திரைக்கதை. பாத்திரங்களின் அறிமுகங்கள், பிரச்சினையின் உள்நுழைவு மற்றும் அது நகரும் விதம், பிரச்சினை தீர்க்கப்படுதல். என்கிற திரில்லர் படங்களின் பொருத்தமான மூன்றடுக்கு திரைக்கதை அமைப்பை இயக்குநர் தேர்ந்தெடுத்திருந்தாலும் ஒரே மாதிரியான சூழ்நிலை, அதே பாத்திரங்கள் திரும்பத்திரும்ப காட்டப்படும் போது சலிப்பு ஏற்படுகிறது. தொடர்ந்து குழந்தைகள் கொல்லப்படுவதால் அந்த நகரத்திலும் காவல்துறையினரிடமும் ஏற்படும் பரபரப்பையும், pedophile பாத்திரம் சிறுமியை அடைய முயற்சிப்பதை இன்னும் அதிக பதைபதைப்பான காட்சிகளுடன் நகர்த்திச் சென்றிருக்கலாம். மேலும் கிளைமாக்ஸ் காட்சி போதுமான அவகாசமின்றி திடீரென்று தீர்மானித்தது போல் நிகழ்கிறது.

முன்னரே குறிப்பிட்டது போல் தமிழ்ச் சினிமா இதுவரை சித்தரிக்காத ஒரு சமூகப் பிரச்சினையை பற்றி மேலோட்டமாகவேனும் உரையாடினதற்காகவும் அதன் வழக்கமான சம்பிதாயங்களிலிருந்து விலகி நேர்த்தியான ஒரு திரைக்கதை அமைப்பைக் கொண்டிருந்ததற்காகவும் என்னைப் பொறுத்த வரை இது ஒரு முக்கியப் படைப்பாகிறது.

தொடர்புடைய பதிவுகள்:

அருண் வைத்தியநாதனின் திரைப்படத்துக்கு விருது

அருண் வைத்யநாதனின் சில குறும்பட முயற்சிகள்
suresh kannan

5 comments:

ராஷா said...

//சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த, தமிழகச் சூழலில் கண்டு கொள்ளப்படாமலேயே போன இந்தத் திரைப்படத்தைப் பற்றி//

இதற்க்கு என்ன சார் காரணம் சரியான விளம்பரம் இல்லைனு சொல்லலாமா..
ஒரு பெரிய நிறுவனம் ஒன்னுத்துக்கும் லாயக்கில்லாத படத்த எடுத்துட்டாக் கூட “வெற்றி நடைபோடுகிறது” அப்படீனு டிவி ல ஒரு நாலைக்கு 50 தடவ விளம்பர படுத்துராங்க குறைந்தது 40 நாளாவது ஓட்டிடுராங்க....
இந்தியாவில் ஒரு மாநிலத்துல நடந்து நம்ம மாநிலத்துல ( இருக்குதோ இல்லையோ) இதுபோனற விளிப்புனற்சி படங்களுக்கு தமிழ் டிவி மீடியாக்கள் விளம்பர ரீதியா ஆதரவு தந்தா வெற்றி பெறும்னு நம்புறேன்.

//விளம்பரப் படங்களில் தோன்றும் கொழு கொழு குழந்தையாக அல்லாமலும் "குழந்தைகள்லாம் எப்படி பொறக்குது?" என்பது போன்ற அதிகப்பிரசங்கித்தனமான வசனம் பேசாமலும் திராவிடக்களையுடன் இயல்பாக நடித்திருக்கிறாள் அந்தச் சிறுமி.//
இயக்குனர்க்கு வாழ்த்துக்கள்.

Unknown said...

//தொடர்ந்து குழந்தைகள் கொல்லப்படுவதால் அந்த நகரத்திலும் காவல்துறையினரிடமும் ஏற்படும் பரபரப்பையும், pedophile பாத்திரம் சிறுமியை அடைய முயற்சிப்பதை இன்னும் அதிக பதைபதைப்பான காட்சிகளுடன் நகர்த்திச் சென்றிருக்கலாம். மேலும் கிளைமாக்ஸ் காட்சி போதுமான அவகாசமின்றி திடீரென்று தீர்மானித்தது போல் நிகழ்கிறது.//

இந்த இரண்டுமே எனக்கும் படம் பார்க்கும்போது தோன்றியது. படம் சரியா ஓடாததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

தர்ஷன் said...

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் அதனால் ஏற்படும் மனபிறழ்வு தொடர்பில் செல்வராகவனின் காதல் கொண்டேனும் சொல்லியிருக்கிறது.

ஷாகுல் said...

இது வரை யாரும் தொடாதா கதை தான் ஆணால் பார்க்கும் போது ஒருவித அலுப்பு தட்டுவது உண்மை.

தமிழக சூழலில் எடுத்திருந்தால் உயிர் படத்திற்க்கு கிடைத்த வரவேற்ப்புதான் கிடைத்திருக்கும்.

பிச்சைப்பாத்திரம் said...

நண்பர் சரவணகுமரன் இட்ட பின்னூட்டத்தை தவறுதலாக reject செய்துவிட்டேன். மன்னிக்கவும்.

//சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த, தமிழகச் சூழலில் கண்டு கொள்ளப்படாமலேயே போன //

சார், இப்ப இந்த படத்தை எங்க பார்த்தீங்க?

சரவணகுமரன்: உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அரங்கில் பார்க்க முயற்சிப்பதற்குள் ஓடியே போய்விட்டது. பிறகு குறுந்தகட்டில்தான் பார்க்க வேண்டியிருந்தது.