Wednesday, March 09, 2005

அருண் வைத்யநாதனின் சில குறும்பட முயற்சிகள்

நேற்று சென்னை, தேவி ப்ரிவ்யூ தியேட்டரில் சக வலைப்பதிவாளர் அருண் வைத்யநாதன் இயக்கிய சில குறும்படங்களை பார்க்க நேர்ந்தது. அமெரிக்காவில் இருந்து வருகிற தமிழர்களின் பிரத்யேக தோற்றங்களோ, அலட்டல்களோயின்றி இயல்பாக வரவேற்றார் அருண். சென்னையில் ஓடுகிற ராமராஜன் படத்தின் 2வது நாளின் இரவுக்காட்சி போல அந்த சின்ன அரங்கம் காலியாக இருக்க ஒரு கணம் 'திக்'கென்று ஆகிவிட்டது. நம் தமிழ்ச்சினிமாக்களை ரணகளமாக விமர்சனமெழுதும் வலைப்பதிவாளர்களில், சென்னையில் உள்ளவர்கள் அனைவரும், ஒரு சகவலைப்பாதிவாளனின் வித்தியாசமான முயற்சிக்கான அழைப்பை ஏற்று வந்து குவிந்திருப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்த எனக்கு இது ஏமாற்றமாகவே இருந்தது.

நல்லவேளையாக பத்ரி என்னை கைகாட்டி வரவழைத்து ஆசுவாசப்படுத்தினார். எழுத்தாளர் மாலனையும், அருணா சீனிவாசனையும் முதன்முதலாக சந்தித்தேன். படங்கள் திரையிட சற்று தாமதமான அந்த நேரத்தைப் பயன்படுத்தி மாலனிடம் சற்று உரையாட முடிந்தது. சாவி தயாரிப்பில் மாலன் ஆசிரியராக இருந்து வெளியிட்டுக் கொண்டிருந்த திசைகள் அச்சுப்பத்திரிகையின் முக்கியமான பகுதிகளை, இன்றைய தலைமுறையினர் காணும் வகையில் ஒரு தொகுப்பாக கொண்டுவருவது பற்றியும், எழுத்தாளர் பாலகுமாரனின் இன்றைய படைப்புலகம் பற்றியும், சன் நியூஸில் முன்பு வந்து கொண்டிருந்த 'சங்கம்' என்கிற எழுத்தாளர்களை சந்திக்கிற நிகழ்ச்சியை மறுபடியும் தொடர முடியுமா என்பது பற்றியும் அவருடைய இயல்பாக உரையாட முடிந்தது.

()

பின்பு அருண் தம்மை முறையாக அறிமுகப்படுத்திக் கொண்டு அவர் பணியாற்றிய இடங்களைப் பற்றியும், திரையிடப்படப் போகின்ற குறும்படங்களைப்பற்றியும் கூறினார்.

அருண் இந்தப் படங்களை எடுத்த கால வரிசையில் திரையிடப்பட்டதை பார்க்கும் போது குறும்பட அனுபவத்தில் அவரின் பரிணாம வளர்ச்சியை நாம் உணர முடிகிறது. அவரது ஆரம்பப் படங்கள் அனைத்துமே எதிர்பாராத முடிவைக் கொண்ட 'ஓஹென்றி' பாணியைக் கொண்டதாகவே இருக்கிறது. இந்த sudden twist யுக்தியில் அவருக்கு நிறைய பிரேமை உள்ளதாகவே தெரிகிறது. இது எல்லா ஆரம்ப எழுத்தாளனுக்கும் ஏற்படுகிற, வாசகனை எப்படியாவது கவர முயல்கிற அதே யுக்தி. ஆனால் பின்னால் வருகிற படங்களில் மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தும் முதிர்ந்த முயற்சிகளை காண முடிகிறது.

திரையிடப்பட்ட குறும்படங்களில் என்னைக் கவர்ந்தவைப் பற்றி என் நினைவில் உள்ளதை வைத்து உங்களுக்கு விளக்க முயல்கிறேன்.

Forgiven

தன்னிடம் திருட வந்தவன் வலிப்பு நோயால் அவதிப்படுவதைப் பார்த்து அவனுக்கு உதவுகிறாள் ஒரு பெண். சுஜாதாவின் 'வந்தவன்' சிறுகதையை நினைவுபடுத்தும் இந்தப்படம் கறுப்பு வெள்ளையில் மங்கலாக படமாக்கப்பட்டிருக்கிறது.

Noose

தற்கொலை செய்து கொள்ள தயாராகும் ஒருவன் ஏதோ மிகுந்த யோசனையில் இருப்பதும், தொங்கவிடப்பட்டுள்ள தூக்கு கயிற்றை இழுத்து சோதிப்பதும் மிக நிதானமாக காட்டப்படுகிறது. 'ஏன் இவன் தற்கொலை செய்துக் கொள்ளப் போகிறான்' என்று நாம் கவலையுடன் உட்கார்ந்திருக்கும் போதே, உள்ளறைக்கு அவன் செல்லும் போதே பின்னால் செல்லும் காமிரா மூலம் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு இருப்பதை அதிர்ச்சியான பின்னணி இசையுடன் நமக்கு காண்பிக்கிறது. பிறகு அந்த உடலை அவன் இழுத்துவந்து தூக்குகயிற்றுக்கு அருகில் இழுத்துவருவதன் மூலம், அவன் ஒரு கொலைகாரன் என்பதும் கொலையை மறைக்க அவன் மேற்கொண்ட முயற்சிகளே அவை என்பது நமக்கு உறைக்கிறது. நான் ரசித்த குறும்படம் இது.

Int(a)elligent

இதுவும் ஒரு திடுக்கிடும் முடிவைக் கொண்ட funny thriller படம்.
பூட்டப்பட்டிருக்கிற அறைக்குள் நுழைகிற திருடனொருவன் தன் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் போது, யாரோ வருவதை கேட்டு ஒளிந்து கொள்கிறான். உள்ளே நுழையும் பார்வையற்ற அந்த வீட்டின் சொந்தக்காரர், தான் அறியாமலே திருடனின் கையை மிதித்தும், சிகரெட் பற்றவைத்த தீக்குச்சியை அவன் மேல் போடுவதுமாக திருடன் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிற காட்சிகள் மெலிதான நகைச்சுவையுடன் சொல்லப்படுகிறது. திருடன் 'விட்டால் போதும்' என்று அறைக்கு வெளியே ஓடுகிறான். பின்பு மகிழ்ச்சியுடன் நடனமாடும் அந்த பார்வையற்றவர், தன் கருப்பு கண்ணாடியை விலக்குவதன் மூலம் அவர் இத்தனை நேரம் பார்வையற்றவராக நடித்துக் கொண்டிருந்தார் என்பது நமக்கு விளங்குகிறது. திடுக்கிடும் முடிவாக, அவரும் திருட வந்த ஒருவர்தான் என்பது அவர் பொருட்களை எடுப்பதின் மூலம் நமக்கு தெரிகிறது.
திரையிடப்பட்ட குறும்படங்களிலேயே ஒரு முழுமை இருக்கிறது என்று நான் உணர்ந்தேனென்றால் அது இந்தப்படத்தில்தான். மிகவும் ரசித்துப் பார்த்த குறும்படம் இது. ஆனால், பார்வையற்றவராக நடித்தவர் அவ்வாறு அல்ல என்பதையும் அவரும் திருட வந்த ஒருவர்தான் என்பதையும் என்னால் முன்னாலேயே யூகிக்க முடிந்தது. சிறுவயதில் நிறைய டிடெக்டிவ் டைப் நாவல்களை படித்திருந்ததனால் இது சாத்தியமாகி இருக்கலாம். யார் மீது உனக்கு சந்தேகம் வராமல் இருக்கிறதோ, அவன் மீது முதலில் சந்தேகப்படு என்கிற ஆதார விதியின் படி.

As you wish, Stinking Cigar படங்களைப் பற்றி பத்ரி தன் வலைப்பதிவில் ஏற்கெனவே எழுதிவிட்டதால் அதன் கதைச்சுருக்கத்தை தவிர்க்கிறேன்.

As you wish திரைப்படத்தில், நிகழ்காலக் காட்சிகள் கறுப்பு வெள்ளையிலும், இறந்தகால காட்சிகள் வண்ணத்திலும் காட்டப்பட்டன. இதை பின்பு விளக்கின அருண், நான் உணர்ந்திருந்த படியே, அவர்களின் வசந்த இளமைக் காலங்கள் இன்பமயமாக இருந்ததனால் வண்ணத்திலும், நிகழ்காலத்தில் அந்தக் காதலி மரணப்படுக்கையில் இருக்கும் சோகக்காட்சிகள் கருப்பு வெள்ளையிலும் காட்டப்பட்டதாக விளக்கினார்.

இதிலும் அந்த எதிர்பாராத முடிவைத்தரும் உத்தியின் மூலம், காதலியின் வேண்டுகோளின்படி அவன் தலையணையை அழுத்தி அவளை கொலை செய்கிறான். கருணைக் கொலை சரியா, தவறா என்பது எப்போதும் விவாதத்திற்கு உரிய விஷயம். என்றாலும் இந்த sudden twist யுக்தியை முதல் படத்திலிருந்து பார்த்துக் கொண்டு வந்து ஒரு ரெடிமேட் உணர்வில் இருந்த காரணத்தினால், ஒரு காட்சியில் அவன் காதலியின் வேண்டுகோளின் படி புல்லாங்குழலை எடுத்து வாசிக்கும் போது, எங்கே அவள் தலையில் போட்டு கொல்லப் போகிறானோ என்று நான் எதிர்பார்த்தேன்.

()

காகிதத்தில் எழுதப்படும் வரிகளை திரையில் கொண்டு வருவது மிகுந்த சிரமமானது என்பதை நான் ஒரளவு அறிவேன். 'அவன் தன்னிடம் வைத்திருந்த கூரிய கத்தியினால் அவள் முகத்தில் இரக்கமின்றி கோலமிட்டான்' என்று நான் எளிதாக காகிதத்தில் எழுதி விட முடியும். ஆனால் இதையே படமாக கொண்டுவரவேண்டுமென்றால், நடிப்பதற்கு ஒரு ஆணும் பெண்ணும், கத்தியும் ரத்தமும் தேவை. எந்த மாதிரியான காட்சி பின்னணி என்பதிலிருந்து, லைட்டிங் பற்றியும், பின்னணி இசை பற்றியும் யோசிக்க வேண்டும்.
காமிராவை எங்கே வைப்பது? அவன் முதுகிற்கு பின்னாலா? எந்த மாதிரியான கோணம்? குளோசப்பா? மிட் ஷாட்டா? காமிராவை வைப்பது இருக்கட்டும். காமிரா வாடகை கட்டணத்திற்கு, போட்டிருக்கும் தங்கச் செயினை எந்த மார்வாடிக் கடையில் அடகு வைப்பது என்றும் யோசிக்க வேண்டும், பொருளாதாரப் பற்றாக்குறை இருக்கும் பட்சத்தில். உடல், மன ரீதியான சிரமங்கள் மட்டுமன்றி பொருளாதார ரீதியாகவும் செலவு வைக்கக்கூடியது இந்த மாதிரியான முயற்சிகள்.

எனவே, பகோடாவை மென்று கொண்டே இருக்கையில் சாய்ந்து கொண்டு, "இன்னாத்த படம் எடுத்திருக்கான்?" என்று நொட்டு & நொள்ளை சொல்லாமல் இந்த மாதிரியான வித்தியாச முயற்சிகளை பொதுவாக நாம் ஊக்குவிக்க முயல வேண்டும் என்று கருதுகிறேன்.

()

இத்தனை குறும்படங்கள் எடுத்தனின் மூலம் அருண் என்ன மாதிரியான அனுபவத்தை பெற்றிருப்பார் என்று நான் யோசிக்கிறேன். அவர் தனது அடுத்த குறும்படத்தை மிக தைரியமாக அணுகுவார் என்றே எனக்குப் படுகிறது. அவரின் படங்களில் Narration ஆகட்டும், தொழில்நுட்ப விஷயங்களில் ஆகட்டும், ஒரளவிற்கு சிறப்பாகவே இருப்பதாக எனக்குப் படுகிறது, இன்னும் அவர் போக வேண்டிய தூரம் நிறைய இருப்பதை அவர் உணர்ந்திருப்பார் என்றே நான் நம்புகிறேன்.

அருணின் எதிர்கால முயற்சிகளுக்கு என் வாழ்த்துகள்.

டெயில் பீஸ்: இந்த விழாவில் கலந்துகொண்டதின் விளைவாக நண்பர் ரஜினி ராம்கி எழுதிக் கொண்டிருக்கிற ஒரு 'சூப்பர்' புத்தகம் விரைவில் வெளிவரும் என்பதையும் அறிந்து கொண்டேன். அவருக்கும் என் வாழத்துகள்.

19 comments:

Anonymous said...

பதிவிற்கு நன்றி சுரேஷ். பொதுவாகவே உலகெங்கிலும் இது மாதிரியான முயற்சிகள் ஊக்குவிக்கப் பட வேண்டும்.

பாலாஜி.

By: Balaji

Anonymous said...

சுரேஷ் கண்ணன் எனக்கும் குறும்படங்களில் நிறையவே ஆர்வம் இருக்கின்றது. தாங்கள் அருணின் படைப்புக்கள் பற்றி முறையாக விமர்சித்திருக்கின்றீர்கள். அருணின் குறும்படங்களை கனடாவில் இருக்கும் பார்வையாளர்களுக்கு முறைப்படி பார்க்க ஏதாவது வழி இருக்கின்றதா? கனடாவில் இடம்பெற இருக்கும் குறும்படவிழாவிற்கு அருண் தனது படைப்புக்களை அனுப்பி வைக்கலாமே? குறும்படவிழா பற்றிய அறிவித்தல் திண்ணைத் தளத்திலும், பதிவுகள் தளத்திலும் இருக்கின்றன.

கறுப்பி said...

சுரேஷ் கண்ணன் எனக்கும் குறும்படங்களில் நிறையவே ஆர்வம் இருக்கின்றது. தாங்கள் அருணின் படைப்புக்கள் பற்றி முறையாக விமர்சித்திருக்கின்றீர்கள். அருணின் குறும்படங்களை கனடாவில் இருக்கும் பார்வையாளர்களுக்கு முறைப்படி பார்க்க ஏதாவது வழி இருக்கின்றதா? கனடாவில் இடம்பெற இருக்கும் குறும்படவிழாவிற்கு அருண் தனது படைப்புக்களை அனுப்பி வைக்கலாமே? குறும்படவிழா பற்றிய அறிவித்தல் திண்ணைத் தளத்திலும், பதிவுகள் தளத்திலும் இருக்கின்றன.

Anonymous said...

நன்றி சுரேஷ். பாராட்டுகள் அருண்.

Anonymous said...

நண்பர் சுரேசு கண்ணுக்கு
நல்லப் பதிவு. நண்பர் அருணின் குறும்படங்களை நான் இங்குப் பார்த்து ரசித்து இருக்கிறேன். நீங்கள் அதனை விமர்சனம் செய்து இருந்த்து அருமை.
நிறைய எழதுங்கள்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...

Anonymous said...

சுரேஷ் நல்ல பதிவு. நான் இணையத்தின் வழியாக பார்த்த அருணின் ஒரே படம் NOOSE.

கூட்டம் வரலேங்கிறதுக்காக வராதவங்களை கொஞ்சம் ஓவராவே திட்டுறீங்க. யார் யாருக்கு என்ன என்ன கமிட்மெண்டோ...

Anonymous said...

அன்புள்ள சுரேஷ்

நல்ல விமர்சனம். அருணுடைய படங்களைப் பார்க்கத் தூண்டின. அது சரி, அது என்ன அமெரிக்காவில் இருந்து வருபவர்களின் ப்ரத்யோகத் தோற்றங்கள் மற்றும் அலட்டல்கள்? தெரிஞ்கிட்டா ஊருக்கு வரும் பொழுது அது எல்லாம் இல்லாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருப்போம் பாருங்க ;)

அன்புடன்
ச.திருமலை

By: S.Thirumalai

Anonymous said...

அன்புள்ள சுரேஷ்

நல்ல விமர்சனம். அருணுடைய படங்களைப் பார்க்கத் தூண்டின. அது சரி, அது என்ன அமெரிக்காவில் இருந்து வருபவர்களின் ப்ரத்யோகத் தோற்றங்கள் மற்றும் அலட்டல்கள்? தெரிஞ்கிட்டா ஊருக்கு வரும் பொழுது அது எல்லாம் இல்லாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருப்போம் பாருங்க ;)

அன்புடன்
ச.திருமலை

By: S.ThirumalaiBy: S.Thirumalai

Anonymous said...

சுரேஷ்,

அருண் வைத்யநாதன் குறும்படக் காட்சிக்கு வர வேண்டும் என்று நினைத்து, வர இயலாத சூழலில் - இப்போது நான் இழந்திருப்பது படங்களை மட்டுமல்ல; இன்னும் நிறைய என்று உணர்கிறேன். நான் சந்திக்க வேண்டும் என்று எண்ணிய வலைப்பதிவர்கள் பலரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு போச்சே! அடுத்து, மாலன் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்ததைப் பற்றி சொன்ன நீங்கள், இறுதியில் 'சன் நியூஸில் 'சங்கம் தொடருமா?' என்ற கேள்வியை வைத்து, பதிலைச் சொல்லாமல் போய்விட்டீர்கள். தகவல் தெரிந்தால் யாராவது சொல்லவும். என் மண்டை வெடித்தாலும் வெடிக்கும்.

அடுத்து குறும்படங்கள் பற்றிய உங்கள் குறு விமர்சனங்கள் பாராட்டுக்குரியன. வளவளவென வதைக்காமல் தேவையான அளவுக்கு இருந்தது.

ரஜினி ராம்கியின் புத்தகம் 'சந்திரமுகி'யைப் பற்றியதல்லவே!

- சந்திரன்.

Anonymous said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

அன்பு சிவா

///கூட்டம் வரலேங்கிறதுக்காக வராதவங்களை கொஞ்சம் ஓவராவே திட்டுறீங்க. யார் யாருக்கு என்ன என்ன கமிட்மெண்டோ///

நேரம் மற்றும் வசதி இருந்தும் வராதவர்களைப் பற்றின வாசகங்களே இவை.


By: suresh kannan

Anonymous said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

அன்பு சிவா

///கூட்டம் வரலேங்கிறதுக்காக வராதவங்களை கொஞ்சம் ஓவராவே திட்டுறீங்க. யார் யாருக்கு என்ன என்ன கமிட்மெண்டோ///

நேரம் மற்றும் வசதி இருந்தும் வராதவர்களைப் பற்றின வாசகங்களே இவை.


By: suresh kannanBy: suresh kannan

Anonymous said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

அன்பு சிவா

///கூட்டம் வரலேங்கிறதுக்காக வராதவங்களை கொஞ்சம் ஓவராவே திட்டுறீங்க. யார் யாருக்கு என்ன என்ன கமிட்மெண்டோ///

நேரம் மற்றும் வசதி இருந்தும் வராதவர்களைப் பற்றின வாசகங்களே இவை.

Anonymous said...

அன்பு திருமலை

///அது என்ன அமெரிக்காவில் இருந்து வருபவர்களின் ப்ரத்யோகத் தோற்றங்கள் மற்றும் அலட்டல்கள்?///

சில தமிழர்களின் என்று ஜாக்கிரதையாக எழுதியிருக்க வேண்டும். :-) பொதுவாகவே வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்திருக்கும் தமிழர்களை கவனித்துப் பார்த்ததில் அவர்கள் ஏதோ நரகத்திலிருந்து தப்பி சொர்க்கத்திற்கு போனது மாதிரியும் மீண்டும் அந்த நரகத்திற்கு வந்து அவஸ்தைப் படுவது மாதிரியும், "இன்னா ரோடு போட்டிருக்கானுங்க. அங்கல்லாம்....." என்று மூச்சுக்கு மூச்சுக்கு இங்குள்ள நிலைமையை அங்கே உள்ள நிலைமையுடன் ஒப்பிட்டு நம்மை எரிச்சலடைய வைப்பார்கள். இங்கு வந்தும் ஜெர்கினையும், கூலிங்கிளாஸையும் பிறந்ததில் இருந்தே போட்டுக்கொண்டிருப்பது மாதிரி திரிவார்கள்.

Anonymous said...

அன்பு சந்திரன்

///'சன் நியூஸில் 'சங்கம் தொடருமா?' என்ற கேள்வியை வைத்து, பதிலைச் சொல்லாமல் போய்விட்டீர்கள். தகவல் தெரிந்தால் யாராவது சொல்லவும். என் மண்டை வெடித்தாலும் வெடிக்கும். ///

தேர்தல் கால நெருக்கடிகளானால் அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதாகவும், மீண்டும் அது ஒருவேளை தொடரலாம் என்றும் மாலன் தெரிவித்தார்.

Anonymous said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

அன்பு சிவா

///கூட்டம் வரலேங்கிறதுக்காக வராதவங்களை கொஞ்சம் ஓவராவே திட்டுறீங்க. யார் யாருக்கு என்ன என்ன கமிட்மெண்டோ///

நேரம் மற்றும் வசதி இருந்தும் வராதவர்களைப் பற்றின வாசகங்களே இவை.

Joe said...

நல்ல பதிவு, சுரேஷ்.

உங்கள் நண்பர் அருணுக்கு என் வாழ்த்துக்கள்.

dondu(#11168674346665545885) said...

அடடா தெரியாமல் போய்விட்டதே.

பை தி வே, திருடன் உள்ளே வந்து ‘பார்வையற்றவரிடம்’ மாட்டும் படத்தை இதே அருண் வேறு மாதிரியும் எடுத்துள்ளார், அதை நாமும் பார்த்திருக்கிறோம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் (விஜயராகவா ரோடில் உள்ள ப்ரிவ்யூ தியேட்டரில்).

அந்த வெர்ஷனில் பார்வையற்றவர் ஒரு பெண், நிஜமாகவே பார்வையற்றவர். அவர் கடைசியில் வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியேற, திருடனாக நடித்த நம்ம அருண் நன்றாகவே திருட்டுமுழி விழிப்பார். பார்வையற்றவராக நடித்தது அவர் மனைவியே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

குப்பன்.யாஹூ said...

I remember Dubukku has written detAILS ABOUT ARUN VAIDYA FILM in his blog.

dondu(#11168674346665545885) said...

மன்னிக்கவும் சுரேஷ் கண்ணன். உங்களது 2009 பதிவில் உள்ள இதன் லிங்கை க்ளிக் செய்திருக்கிறேன். அதில் போடுவதாக நினைத்து இந்த பழைய பதிவிலியே மேலே உள்ள பின்னூட்டத்தை போட்டுள்ளேன்.

நான் மட்டும் அல்ல, ஜோவும் குப்பன் யாஹுவும் அதே மாதிரி ஏமாந்துள்ளனர் என நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு அரகவன்